வலியை சூடிய காதலே – 12

வானம் என்பது ஒன்றே அதில் சூரியன் வந்தால் விடியும்,

மறைந்தால் இருள் சூழும், அதுபோல 

வாழ்க்கை என்பதும் ஒன்றே

அதில் சிலர் வரலாம் 

பின்பு மறையலாம் 

இதுவும் கடந்து போகும்…!

வலியை சூடிய காதலே – 12

ஆரியனின் ஜீப் தென்றலூர் வீட்டு வாசலில் வந்து நின்றபோது, இரவு வெகுநேரமாகி இருந்தது, தென்னை மரங்களின் சலசலப்பும், தூரத்துத் தவளைகளின் சத்தமும் கேட்டுக் கொண்டே இருக்க,

ஜீப்பிலேயே தூங்கி வழிந்த நிஷாவை கைத்தாங்கலாக கூட்டி வந்து அவளின் அறைக்குள் படுக்க வைத்தான் ஆரி, 

​”இன்னைக்கு ரொம்ப டயர்ட் ஆகிட்டியா நிஷா” என்று ஆரியன் கேட்க, நிஷாலினி மெல்லத் தலையசைத்தாள், அவளுக்கு போர்வையை போர்த்தி விட்டு திரும்பினான் ஆரி,

அப்படி திரும்பியவன் கையைப் பிடித்து தடுத்தாள் நிஷா, அவன் திரும்பி பார்க்க, 

“என்னை தனியா விட மாட்டேன்னு சொன்னே இல்ல, இப்ப எங்க போற ஆரி” என்று கேட்டாள் நிஷா,

“எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு நான் முடிச்சுட்டு வரேன், நாம காலையில மீட் பண்ணலாம், நீ இப்ப தூங்கு நிஷா” என்றான் ஆரி

“எந்த வேலையா இருந்தாலும் காலையில பாத்துக்கலாம், இப்ப நீயும் வந்து தூங்கு ஆரி” என்றாள் நிஷா,

“சரி நான் என் வேலைய காலையில பாத்துக்கறேன், இப்ப நான் போய் தூங்கறேன் சரியா” என்று ஆரி கேட்க,

“தூங்க தான போற, அத இங்கயே தூங்கலாமே, நான் தனியா தான இருக்கேன்” என்றாள்,

“அது வந்து இல்ல நிஷா அது சரிப்பட்டு வராது, யாராவது பார்த்தா தப்பாயிடும், நான் என் ரூமுக்கு போறேன், நீ இங்கயே தூங்கு” என்று ஆரி சொல்ல,

“ஓ அப்படியா, நீ உன் ரூமுக்கு போறியா, அப்ப சரி நானும் உங்கூட உன் ரூமுக்கே வரேன், அப்ப யாரும் தப்பா பேச மாட்டாங்க இல்ல” என்று வெகுளியாக கேட்டாள், இவளை எப்படி சமாளிப்பது என்று தெரியாமல் விழி பிதுங்கி நின்றான் ஆரி,

“நீ அங்க வந்தாலும் தப்பு தான் நிஷா” என்று சொல்ல,

” போ ஆரி உன்னை பார்த்தா சிரிப்பா இருக்கு, யாராவது அடிக்க வந்தாலே அவங்கள டிஸ்யூம் டிஸ்யூம் ன்னு அடிச்சு துவம்சம் பண்ற நீ, யாரோ ஒருத்தர் பேசுறதுக்கு பயப்படுவியா கேக்கவே நல்லா இல்ல” என்றாள் நிஷா,

“அது என்னவோ சரி தான் அடிக்க வர்றவங்க கூடக் கூட சண்டை போட்டிடலாம், இவளுக்கு பதில் சொல்றது தான் கஷ்டம்” என்று தனக்குள் முனுமுனுத்துக் கொண்டவன், 

இப்ப என்ன நான் உங்கூட இங்க தூங்கனும் அவ்வளவு தானே, சரி கைய விடு” என்று அவன் கையை இழுக்க, அதை விடமாட்டேன் என பிடிவாதமாக இருந்தாள் நிஷா,

“ப்ளீஸ் ஆரி, என்னால நீ இல்லாம தூங்க முடியாது” என்றவளின் குரலில் சோர்வாக இருக்க, 

சரியென அவள் அருகே அமர்ந்தான், உடனே தாவி அவன் மடியில் முகம் புதைத்தாள், அவளின் பேச்சும் செயலும் தாயைத் தேடும் பச்சிளம் குழந்தை போல் இருக்க அவளின் கேசத்தை ஆதரவாக தடவிக் கொடுத்தான்,

“ஆர் யூ ஓகே நிஷா, நீ நல்லா இருக்கியா, இல்ல வேற ஏதாவது பிரச்சனை இருக்கா” என்று கேட்டான் ஆரி,

“சொல்லிக்கிற அளவுக்கு என்னோட பிரச்சனை ஒன்னா இரண்டா அதை எல்லாம் நினைச்சு கவலை இல்ல ஆரி, ஆனா இப்ப மனசுக்கு ஒரே நிம்மதியா இருக்கு, 

ஏன்னா இனிமே யாரும் என்னை பைத்தியம்னு சொல்ல முடியாதுல்ல” என்ற அவளின் வார்த்தையில் அவள் எவ்வளவு வலிகளை தனக்குள் சுமக்கிறாள் என்று புரிந்தது,

பிறந்த அந்த நொடி தொட்டு அவள் பட்ட வேதனைகளுக்கும் காயங்களுக்கும் தன்னைத் தான் வடிகாலாக நினைக்கிறாள் என்று எண்ணும் போதே மனதளவில் கலங்கினான் ஆரி,

கலக்கத்தோடு அவளைப் பார்த்தான் தாயின் கருவறையில் பாதுகாப்பாக உறங்கும் சிசுவைப் போல கைகால்களைக் குறுக்கி அவனோடு ஒன்றி அயர்ந்து உறங்கிப் போனாள், 

அவளை விட்டுச் செல்ல மனமில்லாததால் அவனும் அவளுடனேயே படுத்துக் கொண்டான், அவன் புரண்டு படுக்கும் போதெல்லாம் அவனை இறுக்கி பிடித்துக் கொண்டாள், 

அவளின் ஒரே தவம் அவன் அவளின் அருகே இருக்க வேண்டும் என்பது மட்டுமே, ஒரு நொடி விலகலைக் கூட அவளால் ஏற்க முடியாது, 

தன்னையே உயிராய் நேசிக்கும் ஒருத்தி ஒருபுறம், தன்னையே உயிராக சுவாசிக்கும் ஒருத்தி மறுபுறம் இருக்க இருவரையும் மறுக்கவும் முடியாமல் மறக்கவும் முடியாமல் இருதலைக் கொள்ளி எறும்பென தவிக்கிறான்,

காலைக் கதிரவன் தன் கதிர்களை பூமிக்கு அனுப்பி விடியலை அறிவித்த காலை வேளையில்,

பாவாடை தாவணியில் பக்குவமாக சமைந்த பூவாய் வந்தாள் பூவிதழினி, அவளின் அழகில் சொக்கி கதிரவனே கிறங்கித்தான் போனார்,

“என்னடி இதழு காலங்காத்தாலயே இங்கண வந்துட்ட, ஏன் உன் அம்மைக்கும் உனக்கும் ஏதும் வாக்குவாதமாகிப் போச்சா, இல்ல அப்பத்தா கிளவி கூட ஏதும் வம்ப வளத்துட்டு வந்துட்டியா”  என்று வாசலில் கோலமிட்டுக் கொண்டிருந்த ரஞ்சிதம் பூவிதழினி வரவைப் பார்த்ததும் கேட்க,

“அவககூட எனக்கென்ன வம்பு, அப்போ நா இங்க வரனுமுன்னா  சண்ட போட்டுட்டு தான் வரனுமா, ஏன் அத்தே சும்மா வந்தா வாசலோட அனுப்பிருவியா என் அத்த, மச்சான எல்லாம் பாக்க வரக்கூடாதா” என்றாள் இதழு,

“நான் ஏதோ சும்மா சொன்னேடி ஆத்தா, இது உன் மச்சா வீடு நீ எப்ப வேணாலும் வரலா, போலா உன்ன தடுக்க இங்கண யாருக்கு உரிம இருக்கு” எனக் கூறி உக்கிரமாக இருந்தவளை சாந்தப் படுத்தினாள் ரஞ்சிதம்,

“சரி சரி மசமசன்னு வாசல்ல நின்னு பேசாம உள்ளாற வந்து எனக்கு காபி போட்டு குடு அத்தே, உன் கையால காபி குடிச்சாத்தான் எனக்கு பொழுதே விடியும்” என்று கூறிக் கொண்டே உள்ளே சென்றாள் பூவிதழினி,

“இந்த காபிக்கா காலங்காத்தால கொட்டுற பனியில வந்தே, அது சரி உங்கிட்ட ஒரு கேளுவி கேட்டா, ஒன்னுக்கு பாத்தா எடக்கு மொடக்கு கேளுவி கேப்பா, நமக்கெதுக்கு அவகூட வம்பு” என்று புலம்பியவாறு பாலைக் காய்ச்சி காபி போட்டுக் கொண்டிருந்தாள் ரஞ்சிதம்,

ஆரியை தேடிச் சென்றவளுக்கு ஆரியின் அறை வெறுமையான அறையே வரவேற்ப்பு கொடுக்க, யோசனையுடன் வீட்டையும் பின்கட்டையும் ஆராய்ந்து பார்த்தவள், தன்னவனைக் காணாமல் போக திரும்பி அடுக்களைக்கு வந்தாள்,

“இந்தாடியம்மா நீ கேட்ட காபி” என்று  ரஞ்சிதம் கொடுத்த காபியை வாங்கிப் பருகியவள்,

“ஆமாத்தே அவக எங்க?” என்று கேட்டாள்,

“யாரு உன் மச்சானா?” என்று ரஞ்சிதம் கேட்க,

“இல்லத்தே, அது தான் நம்ம வீட்டுக்கு புதுசா வந்தாகளே, மச்சா கூட நானாச்சுன்னு சொல்லி கூட்டியாந்தாரே அவகள கேட்டேன்” என்றாள் பூவிதழினி,

“அது என்னடி அவக இவகன்னு சொல்ற, முறைப்படி பெரியய்யா மவ, உனக்கு அக்கா முறை வேணும், அக்கான்னு உரிமையா சொல்லு” என்று ரஞ்சிதம் சொல்ல,

“ம்ம்க்கும் அந்த ஒன்னு தான் இங்கண குறையா கெடக்கு, நானே காலங்காத்தால மச்சான பாக்கலாமுன்னு வந்த, அவகள காணல” என்று தான் வந்த காரியத்தை உளறினாள் பூவிதழினி,

“அப்படிச் சொல்லுடி என் அருமை மருமவளே, நான் கூட என்னடா எலி அம்மணமா போகுதேன்னு பாத்தே, ம்ஹூம் இது தான் சேதியா, அதுகுள்ள என் கையில காபித் தண்ணி குடிச்சா தான் இந்தம்மாவுக்கு பொழுது விடியுமுன்னு சொல்லி என்னயே ஒரு நிமிஷம் மயக்கிட்டா” என்று கூறி காதைத் திருகினாள், 

“அய்யோ அத்தே வலிக்கிது அத்தே” என்று கத்தினாள், அந்த சத்தத்தில் திண்ணையில் தூங்கிக் கொண்டிருந்த ராஜதுரை தூக்கம் கலைந்து எழுந்தார், 

“அய்யய்யோ இது என்ன வீடா இல்ல, கடைத்தெருவா காலங்காத்தால ஒரு மனுஷ நிம்மதிய கண்ண மூடி முடியுதா” என்றபடி எழுந்தார், 

குளிர்கால காலை நேரம் என்பதால் உடலை கவ்வும் குளிரிடம் இருந்து காக்க கம்பளியை இழுத்து போர்த்தி உடலை மூடினார் ராஜதுரை, அடிக்கிற குளிருக்கு ஒரு காபி குடிச்சால் தேவலாம் போல் இருந்தது,

ஆனால் அதை வாய் விட்டு கேட்க முடியாமல், கௌரவம் தடுக்க நடுங்கியவாறு தொண்டையை செருமிக் கொண்டு அமர்ந்திருந்தார், 

கணவன் செருமிய சத்தம் அடுப்பாங்கரையில் இருந்த ரஞ்சிதத்திற்கு கேட்க, இரவு முழுவதும் பனியில் படுத்துறங்கிய மனுஷனுக்கு காலையில குளிர் அதிகமாகிடுச்சிருச்சோ என்று நினைத்தவள், 

“ஆத்தா இதழு என்க்கொரு ஒத்தாசை செய்வியாத்தா” என்று ரஞ்சிதம் கேட்க,

“மாட்டேன்னு சொன்னா விடாவா போற, சொல்லுத்தே செய்யறே” என்றாள் பூவிதழினி,

“இதழு, என் கண்ணுல்ல, என் கண்ணத்தங்கமல்ல, என் ராசாத்தி” என்று ரஞ்சிதம் கொஞ்ச,

“போது நிப்பாட்டு, என்னத்தே காரியம் பெருசா இருக்கு போலயே ஒரே கொஞ்சல் குலாவலா இருக்கு” என்று சட்டென கேட்டு விட்டாள், நெளிந்து கொண்டே ரஞ்சிதம் ஒரு காபி டம்ளரை அவளிடம் நீட்ட,

“அது தான் நான் காபி குடிச்சிட்டனே, அப்புற எனக்கு எதுக்கு காபி குடுக்கிறத்தே” என சந்தேகத்தோடு கேட்டாள்,

“இல்லடி, வெளிய பனி வேற அம்புட்டு கொட்டுது, அந்த மனுஷன் வேற விடிய விடிய திண்ணையில கெடந்தாரு, அதான் சூடா ஒரு காபி குடிச்சா நல்லா இருக்குமுன்னு ” என்று இழுத்தாள் ரஞ்சிதம்,

“ஓ ஹோ அப்படியா சங்கதி, அம்புட்டு அக்கற இருந்தா, நீயே போயி குடுக்க வேண்டியது தான” என்றாள்,

“அந்த மனுஷ மூஞ்சில முழிக்கவே புடிக்கலடி, அதான் உன்ன கொண்டு போயி குடுக்க சொல்றே” என்றாள்,

“அதுக்கு அந்த மீசைக்கரர்கிட்ட என்னை மாட்டி விடுறியா, ஆத்தாடி அந்தாளு மீசையும், எனக்கு பாத்தாலே பயமா இருக்குத்தே என்னால போவ முடியாது” என்றவளைக் கெஞ்சி கொஞ்சி ஒருவழியாக சம்மதிக்க வைத்தாள், ரஞ்சிதம், 

அத்தை கொடுத்த காபியை வாங்கிக் கொண்டு வாசல் வரை வந்தவள் படி தாண்டிச் செல்லவே பயமாக இருந்தது, திரும்பி பார்த்தாள் அடுக்களைக்குள் இருந்த ரஞ்சிதம் போய் குடு என்று ஜாடை செய்து கொண்டிருக்க, 

“நான் பாட்டுக்கு செவனேன்னு வீட்டுலயே இருந்திருக்கலாம், மச்சா மாச்சான்னு மச்சான பாக்கலாமுன்னு இங்க வந்தா மச்சானக் காணல, இந்த அத்தே வேற மீசைகாரர்கிட்ட நம்மள வசமா மாட்டி விடப் பாக்குது, 

இன்னைக்கு இன்னும் என்னால்லாம் பாக்கனுமோ அய்யா சங்கலிக் கருப்பா என்னை நீதாய்யா காப்பாத்தனும்” என்று வேண்டிக் கொண்டே ராஜதுரையிடம் வந்தாள், கையில் இருந்த காபியை அவரிடம் நீட்ட, 

ராஜதுரை தன் முகத்துக்கு நேராக வந்த காபி டம்ளரை பார்த்தவர், அப்படியே திரும்பி பூவிதழினியைப் பார்த்தார், அவளுக்கு கைகள் நடுக்கமெடுத்தது, 

 

ராஜதுரை காபியை வாங்கி சமரசத்திற்கு வருவாரா?

நிஷாலினி அறையில் ஆரியன் உறங்குவதை அறிதாள் பூவிதழினி என்ன ஆவாள்?

தொடர்ந்து வாசிப்போம் வாங்க

 

❤️ Loading reactions...
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page