வானில் மறைக்கும்
மேகமும் மெல்ல நகரும் போது நிலவு ஒளிர்வதைப் போல,
மனதை மறைக்கும்
திரை விலகும் போது
மனதின் ஆழத்தில் மறைந்த
முடிச்சுகள் மெல்ல அவிழும்…!
வலியை சூடிய காதலே – 13
ராஜதுரை திரும்பி பூவிதழினியைப் பார்த்தார், அவளுக்கு கைகள் நடுக்க மெடுத்தது, குளிருக்கு இதமாக ஒரு டம்ளர் காபி கிடைச்சதே அதை வாங்கலாமா வேண்டாமா என மனதிற்குள் பட்டிமன்றமே நடத்தினார்,
“பகையாளி வீட்ல பச்சத் தண்ணி குடிச்சாக் கூட அது துரையய்யா வம்சத்துக்கே அவமானம்டா” என்று தன்மானம் ஒருபுறம் தடுத்தது, “ஆபத்துக்கு பாவமில்ல ஒருதடவ தான கொஞ்சமா வாங்கி குடிச்சுக்கலாம்” என்று மறுபுறம் நடுங்கும் குளிர் சிந்திக்க வைத்தது,
இப்படியாக இருவேறு எண்ணங்கள் தோன்ற இறுதியில் குளிரே வென்றது, உடலைச் சுற்றி இருந்த கம்பளியை சற்று விலக்கி டம்ளரை வாங்கப் போகும் அந்நேரம் ராஜதுரைக்கு தும்மல் வர,
அச்சென தும்மினார் திடீரென கேட்ட தும்மல் சத்தத்தில் ஏற்கெனவே நடுக்கிக் கொண்டிருந்த பூவிதழினியின் கை பயத்தில் டம்ளரை நழுவ விட காபி மொத்தமும் தரையில் சிந்தியது,
“ஏய் இந்தா புள்ள, குளுருல நடுங்கிட்டு இருந்தவன் மூஞ்சிக்கு நேரா காபிய கொண்டாந்து நீட்டிபுட்டு அதை குடிக்க விடாம இப்படி தரையில கொட்டிட்டியே,
நான் உங்கிட்ட வந்து காபி தண்ணி குடுன்னு, கேட்டனா, கேக்குறேனில்ல பதிலச் சொல்லு, நீயா கொண்டாந்து கீழ கொட்டிட்டு கேள்வி கேட்டா மரங்கணக்கா நிக்கிற” என்று ராஜதுரை அதற்ற,
“நீங்க குளிர்ல கஷ்டப்படுறீங்கன்னு தான் கொண்டாந்த, அது.. அது.. தெரியாம கீழ கொட்டிடுச்சு, கோபப்படாதீக நான் வேனா சூடா வேற காபி போட்டு எடுத்தாறே” என்று கூறிவிட்டு வீட்டுக்குள் ஓடினாள்,
“பாக்க பதுசான புள்ளையா தான் தெரியுது, ஆனா என்ன அதோட கெரகம் அந்த சக்கரவர்த்தி குடும்பத்துல மவளா பொறந்து தொலச்சிடுச்சு” என்றவாறு காபி வருமா வராதா என வீட்டுவாசற்படியையே பார்த்துக் கொண்டிருந்தார் ராஜதுரை,
“என்னடி ஆச்சு, அந்த மனுஷன் கோபத்துல காபிய தட்டி விட்டுட்டானா, இதுக்கு தான் இந்த துரையய்யா குடும்பத்து சவகாசமே வேணாமுங்கிறது,
ஏதோ குளுருல நடுங்கிறானேன்னு பாவம் பார்த்தா என்ன நெஞ்சேத்தமிருந்தா கேட்காம கொண்டு போய் குடுத்த காபிய தட்டி விடுவான், இருந்தாலும் இந்த மனுஷனுக்கு இத்தன ரோஷம் ஆகாதுடி” என்று கட்டிய கணவன் என்றும் பாராமல் வசை பாடினாள் ரஞ்சிதம்,
“அய்யோ அத்தே நடந்தது தெரியாம ஏதேதோ பொலம்பிட்டு இருக்க, அவரு ஒன்னும் தட்டி விடல, நான் தான் தெரியாம கீழ போட்டுட்டேன், திரும்ப காபி போடத்தான் வந்தே, இன்னொரு காபி சூடா போட்டு குடுத்தே” என்றாள் பூவிதழினி,
“அடக்கழுதை இதையே மொதல்ல சொல்லிருக்கலாமில்ல நான் வேற இது தெரியாம அந்த மனுஷன வயிக்கு வந்தபடி பேசிட்டே” என்ற ரஞ்சிதம், அடுத்த நொடியே,
“ஊருக்குள்ள தான் துரையய்யா குடும்பம், பெரிய தலக்கட்டு, மசிரு போனா உசிரு போச்சுன்னு வீராப்பு பேசிக்கிட்டு திரியுவாங்க, ஆனா பாரு ஒரு காபிக்கே ஆளு தாங்கல, வெக்கங்கெட்ட வெறும் பயனுக” என்று இப்படியும் திட்டினாள் ரஞ்சிதம்,
“ஏன் அத்தே அவரு பாட்டுக்கு செவனேன்னு வாசல்ல இருந்தாரு, உங்கிட்ட காபி கேட்டாரா இல்லல்ல நீயா காபிய குடுத்துட்டு, வாங்கலைனாலும் திட்டுற, வாங்கினாலும் திட்டுற, இப்ப இந்த காபிய அவரு குடிக்கனுமா வேண்டாமா” என்று பூவிதழினி கேட்டு முறைக்க, அவள் கையில் காபி டம்ளாரைக் கொடுத்து,
“கோவிச்சுக்காதடி, என் வாய் வேற சும்மா இருக்க மாட்டேன்னுது என் பட்டு ரோசா இல்ல, கொண்டு போய் குடுதாயி” என்று செல்லங் கொஞ்சினாள் ரஞ்சிதம், ரஞ்சிதத்திடம் காபியை வாங்கி கொண்டு பூவிதழினி போக,
பின்கட்டில் கன்றுக் குட்டி பசியால் கத்த, கூடவே பசுமாடும் சேர்ந்து கத்தியது,
“அடடா பொழுது கெளம்பி இம்புட்டு நேரமாகியும், கன்னுகுட்டிய ஊட்ட விடல, பாலும் கறக்கல போல அதுதான் தாயும் மகளும் கத்துறாளுகன்னு நினைக்கேன்” என்று தனக்குத் தானே கூறியபடி சென்றாள் ரஞ்சிதம்,
விடிந்து நெடுநேரம் கழித்து தான் கண் விழித்தான் ஆரி, உடற் சோர்வினால் அயர்ந்து உறங்கி விட்டான், தினமும் அதிகாலை எழுந்து சிறிது நேரம் உடற்பயிற்சி செய்து முடித்து குளிந்த கிணற்று நீரில் குளித்து விட்டு துளசி மாடத்தை வணங்கிய பின்பு,
பசு மாட்டில் பால் கறந்து கொண்டுவது இஞ்சி ஏலக்காய் சேர்த்து தட்டிப் போட்டு நன்கு காய்ச்சி குடிப்பது வழக்கம், பொழுது விடியும் முன்னரே தன் கடமைகளை முடிப்பவன் தான் ஆனால் இன்று காலை உணவு உண்ணும் நேரத்தில் தான் எழுந்திரித்துள்ளான்,
கண்களை திறந்து பார்த்தவனுக்கு ஏதோ வித்யாசமாக தென்பட, என்னவாக இருக்கும் என்று திரும்பினான், திரும்ப முடியவில்லை யாரோ அவனை கட்டிப் போட்டது போல தோன்ற,
கண்களை நன்கு கசக்கி பார்த்தான் அப்படியே அதிர்ந்தான், ஒரு போர்வைக்குள் அவளும் அவனும், சட்டென சுதாரித்தவன் அவளிடம் இருந்து விலகி எழ, கூடவே அவளும் எழுந்து கொண்டாள்,
களைந்த கேசமும் கலையாத தூக்கமும் அவளின் அழகை கூடுதல் மெருகேற்ற,
“வா ஆரி எனக்கு தூக்கம் தூக்கமா வருது, வா தூங்கலாம்” என்று அவளோ அவனை தூங்குவதற்காக இழுக்க,
“விடிஞ்சு ரொம்ப நேரமாச்சு போல நிஷா, நான் போயாகனும் நீ வேணா தூங்கு” என்று சொல்லி அரைத்துக்கத்தில் இருந்த அவளை படுக்கையில் படுக்க வைத்து, போர்வை போர்த்தி விட்டு தட்டிக் கொடுக்க அதில் சுகமாக உறகிப் போனாள் நிஷாலினி,
அவள் உறங்கும் அழகை கண்டு சிரித்தவன் கன்னத்தை வலிக்காதவாறு தட்டிக் கொடுத்து விட்டு காலடிச் சத்தம் கூட அவளின் உறக்கத்தை கலைக்கக் கூடாது என்று சத்தமில்லாமல் வெளியே வந்து கதவை மூடி விட்டு திரும்பி நடந்தான்,
நடந்த ஆரியன் நான்கு எட்டு வைத்தவன் ஐந்தாம் எட்டில் கால்கள் அசைய மறுத்து நின்றது, அவன் எதிரில் சில அடி தொலைவில் ஒருத்தி காளியைப் போல் நின்றிருந்தாள்,
அவன் பதுங்கி வரும் அழகைக் கண்ட இதழுவின் முகம் ஏகத்திற்கும் சிவந்து போயிருந்தது, அவள் கையில் ஒரு காபி டம்ளர் கீழே விழுந்தது, அவள் நேராக ஆரியனின் முன்னால் வந்து நின்றாள்,
அவளது பார்வையில் இருந்த தீட்சண்யம் ஆரியனை ஒரு நொடி நிலைகுலையச் செய்தது,
“மச்சா” என்ற பூவிதழினியின் ஒற்றைச் சொல்லில் ஆயிரம் கேள்விகளும், ஆறாத வலியும் நிரம்பி இருக்க அது ஆரியின் இதயத்தில் கூர்வாளை இறக்கியது போல வலியை உணர்ந்தான்,
”இதழு நீ எப்போ வந்த, இங்க ஏன் இப்படி நிக்கிற” என்று பதற்றத்தையும் வலியையும் தன்னுள் மறைத்துக் கொண்டு ஆரியன் கேட்க,
இதழு மெல்ல அவனை நோக்கி இன்னும் அருகில் வந்தாள், அவளது காலடிகள் சிதறிக் கிடந்த காபியின் மேல் பட்டன,
“நான் எப்போ வந்தேன்னு உனக்கு எப்படி தெரியு மச்சா, ஏன்னா நீதான் உலகத்தையே மறந்து அந்த ரூமுக்குள்ள இருந்திருக்க இல்ல” என்று கேட்டாள்,
”இதழு நீ நினைக்கிற மாதிரி இல்ல, நிஷா ரொம்பப் பயந்து போயிருந்தா, அவளைத் தூங்க வைக்கிறதுக்காகத் தான் நான்” என்று அவன் முடிக்கும் முன்பே, சீறிக் கொண்டு வந்தாள்,
”தூங்க வைக்கிறதுக்கா, அவ என்ன சின்னக் குழந்தையா மச்சா, இல்ல, நீ என்ன அவளுக்குத் தாயா, சின்ன வயசுல இருந்து நான் தூக்கம் வராமத் தவிச்சப்போ எல்லாம், இதழு நீ ஒரு தைரியமான பொண்ணு,
தானாத் தூங்கப் பழகுன்னு எனக்கு வேதாந்தம் பேசுனியே மச்சா இன்னைக்கு எங்க போச்சு உன் வேதாந்தம்” என்றாள் சீற்றம் குறையாமல்
ஆரியன் அவளுக்கு அருகில் வந்து, அவளது தோளைத் தொட முயன்றான், அவன் கையை அருவருப்பாக தட்டி விட்டாள்,
“இதழு ப்ளீஸ் புரிஞ்சுக்கோ”
”தொடாத மச்சா” என்று சொல்லி பின்வாங்கினாள்,
“விடிய விடிய இன்னொருத்திக்குத் தலையணையா இருந்த அதே கையால என்னைத் தொடாத, இந்த இதழு உனக்கு யாரு மச்சா உன் அத்தை மவளா, உனக்கு வாக்கப்படப் போறவளா, இல்ல, உனக்குத் தேவைப்படும்போது மட்டும் வந்து போறவளா” என்று கேட்க
அவளது ஒவ்வொரு வார்த்தையும் உண்மையாக இருந்தது, தாய்யும் தந்தையையும் மட்டுமல்ல குடூப்பத்தில் யாருடனும் ஒட்டாமல் சிறு வயதிலேயே தனியாக வந்து விட்டான் ஆரி,
ஜகதாம்பாள் பாட்டியின் தம்பியான ராசய்யா தான் ஆரிக்கு அடைக்கலம் கொடுத்து வளர்த்தார், அவன் வளர வளர ராசய்யாவும் நோய்வாய்ப்பட்டு இறந்து விட,
யாருமற்ற நிலையில் இருந்தவனுக்கு ஆதரவாகவும் ஆறுதலாகவும் ஓடி ஓடி வந்தவள் தான் பூவிதழினி,
ஏறத்தாழ இருவருக்கும் ஒரே வயது தான், இரவும் பகலும் அவன் நிழலாக மச்சா மச்சா என்றே திரிந்தவள், உலகமே அவனென வாழ்ந்தவள்,
பங்கு போட வந்தவள் சகோதரியாகவே இருந்தாலும் அவனை விட்டுக் கொடுப்பாளா, அவளைப் பொருத்த மட்டிலும் அவனுக்கு பிறகு தான் அவளுக்கு மற்றதெல்லாம்,
”அந்தப் பொண்ணு வந்த அன்னைக்கே என் மச்சானை என்கிட்ட இருந்து பிரிச்சிட்டான்னு நான் நினைச்சேன், ஆனா நீயே அவகிட்ட உன்னை இழந்துட்டு எம்முன்னால நிப்பேன்னு நான் நினைக்கல,
ஊர் பஞ்சாயத்துல அவ உன்னைக் கட்டிப் பிடிச்சப்போ, எனக்கு உசிரெல்லாம் வெந்துச்சு மச்சா, ஆனா அது ஏதோ பயத்துல செஞ்சதுன்னு எனக்கு நானே சமாதான சொல்லி தேத்திக்கிட்டே,
ஆனா இப்போ அவ ரூம்ல இருந்து நீ திருட்டுத்தனமா வெளிய வர்றதை நான் எப்படி மச்சா எடுத்துக்கிறது, நீயே சொல்லு விடிய விடிய ஒருத்தி கூட ஒன்னா நாலு செவுத்சுக்குள்ள இருந்துட்டு வந்தா நானென்ன நினைக்கிறது அதுக்கு பதில் சொல்லு மச்சா” என்று கத்த ஆரம்பித்தாள்,
”இதழு, தயவுசெஞ்சு கத்தாதே யாராவது பார்த்தா தப்பாப் பேசிடுவாங்க” என்றான் ஆரி அதற்கு இதழு ஏளனமாகச் சிரித்தாள், அவளது சிரிப்பில் கண்ணீரு கலந்தே இருந்தது,
“யாரு தப்பாப் பேசுவாங்க, ஊர்ல இருக்குறவங்களா, எனக்கு ஊரைப் பத்திக் கவலை இல்ல மச்சா, என் மனசுக்குள்ள உன்னை வைச்சு ஒரு கோயில் கட்டியிருந்தேனே அந்தத் தெய்வமே இப்போ கல்லா மாறிடுச்சு,
நான் கொண்டாந்த காபி தரையில கொட்டி யாருக்கு உபயோகமில்லா போன மாதிரி, என் காதலும் இப்போ வீணாப்போச்சு” என்று கதறியவளின் கையைப் பலமாகப் பற்றினான் ஆரி,
“இதழு என் நிலைமையைப் புரிஞ்சுக்கோ, இப்போதைக்கு நிஷாவுக்கு நான் தான் உலகம், அவளுக்கு வேற யாரும் இல்ல இதழு” என்று தன்னிலை விளக்கம் சொன்னான், தன் கையைச் சட்டென்று உதறி விடுவித்துக் கொண்டாள்,
“அவளுக்கு நீ உலகம்னா அப்போ எனக்கு நீ யாரு, அவ அநாதைன்னு சொல்றியே, இப்போ உன் முன்னாடி நின்னுட்டு இருக்குற நானும் தான் அநாதையா நிக்கிறேன், நீ இல்லாம நான் வெறும் பிணம் மச்சா” என்றவள் ஆவேசமாகி பின்னோக்கி நடந்தாள்,
“இனிமே இந்த வீட்டுப் பக்கம் நான் வரமாட்டேன், உன்ன யாரோ ஒருத்தி கூட சேர்த்து வச்சு கல்யாணக் கோலத்துல பார்க்குறதுக்கு எனக்குத் தெம்பு இல்லை,
உன் ஆசைப்படியே அவ கூடவே இரு ஆனா ஒன்னு ஞாபகம் வைச்சுக்கோ, நீ அவளைக் கட்டி அணைக்கும் போது எல்லாம், அதுல இந்த இதழுவோட நினைப்பு மட்டுந்தான் இருக்கும்” என்று சொல்லி விட்டுத் திரும்பிக் கூடப் பார்க்காமல் ஓடினாள் இதழு,
(பின்குறிப்பு)
ராஜதுரையை கணோம் என்று தேடுபவர்களுக்கு, இரண்டாவது முறையும் காபி தரையில் உருண்டதும் உள்ளே எட்டிப் பார்த்து விட்டு இனியும் காபிக்காக காத்திருந்தால், குளிரில் நடுங்கியே சொக்கலோகம் போய் விடுவோமோ என்ற பீதியில், உயிர் பிழைக்க டீக்கடையைத் தேடி அப்போதே ஓடிவிட்டார்,
முக்கியச் செய்தி:
“சக்கரவர்த்தி குடும்பம் தனக்கு காபி கொடுப்பதாக சொல்லி கொடுக்காமல் ஏமாற்றி கொலை முயற்சி செய்கிறார்கள்” என்று புலம்பிக் கொண்டிருப்பதாக தகவல் கிடைத்துள்ளது,
(கடைசி வரைக்கும் ஒரு காபி தண்ணி கொடுக்காம நம்மள நல்லா நம்ப வச்சு ஏமாத்திபுட்டாங்க மச்சா)
மீண்டும் நாளை சந்திப்போமா
தொடர்ந்து வாசிப்போம் வாங்க
