உயிரைத் துளைக்கும் வலிகளைக் கொடுப்பது நீயென்றால் அதைக்கூட பேரின்ப சுகமென ஏற்பேன் காதலே…!
வலியை சூடிய காதலே – 14
இதழு சென்ற திசையையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்த ஆரியன், ஒரு நீண்ட பெருமூச்சை வெளிப்படுத்தினான். அவனது இதயம் பாரமாக இருந்தது,
மெல்லத் திரும்பி நிஷாலினியின் அறைக்கதவை நெருங்கினான். அவன் உள்ளே நுழைய முற்படும்போது, கதவு தானாகத் திறந்தது,
அங்கே நிஷாலினி விழித்திருந்தாள் தூக்கம் கலைந்த கண்களுடன், அவன் வரவையே பார்த்துக் கொண்டிருந்தவளின் முகம், ஆரியனைக் கண்டதும் ஒரு நொடியில் மலர்ந்தது,
ஆனால் ஆரியனின் முகத்தில் இருந்த வாட்டத்தைக் கண்டதும் அவளது புன்னகை மெல்ல குறைந்தது,
”ஆரி…” என்று மெல்ல அழைத்தாள்,
ஆரியன் அவளை ஏறிட்டுப் பார்த்தான்
“நிஷா நீ எப்போ எழுந்த இன்னும் கொஞ்ச நேரம் தூங்கியிருக்கலாமே” என்றான்
நிஷாலினி அவனை அருகே அழைத்தாள், அவன் வரவும் கைளைப் பற்றிக் கொண்டாள்,
“நீ போனதுமே எனக்குத் தூக்கம் போயிடுச்சு ஆரி, நீ வர்ற வரைக்கும் மனசுக்குள்ள ஏதோ ஒரு மாதிரியா இருந்துச்சு, அது என்னன்னு சொல்ல தெரியல,
அதான் நீ எப்போ வருவேன்னு கதவையே பார்த்துட்டு இருந்தேன நீ வந்துட்ட” என்றாள் மிக மென்மையாக,
ஆரியன் அந்தத் தேக்கு மரக் கட்டிலில் அமந்து சாய்ந்து கொண்டான்,
அவனது மௌனம் ஏதோ ஒரு பெரிய வலியைச் சுமந்து கொண்டிருப்பதை நிஷாலினி உணர்ந்தாள், அவள் தயக்கத்துடன் அவனது கையை அழுத்தினாள் அவளது விரல்களின் தீண்டல் ஆரியனுக்கு ஒரு மெல்லிய இதத்தைத் தந்தது,
”நீ ஏன் ஒரு மாதிரி இருக்க ஆரி, யாராவது ஏதுவாது சொல்லிட்டாங்களா, யாரோ அழற மாதிரி சத்தம் எனக்குக் கேட்டுச்சு, என் மேல ஏதாவது கோபமா, எங்கூட பேச மாட்டியா” என்று நிஷா கவலையோடு கேள்விகளை அடுக்காக கேட்டாள்,
ஆரியன் அவளது முகத்தைப் பார்த்தான், அந்த முகத்தில் எந்த வஞ்சகமும் இல்லை, ஒரு பச்சிளம் குழந்தையின் அறியாமை மட்டுமே இருந்தது,
“இல்ல நிஷா, நீ அதைப் பத்தி யோசிக்காதே, நீ நல்லா இருக்கியா, உனக்கு ஏதாவது வேணுமா” என்று தன் வலிகளை மறைத்து அவளை கவனித்தான்,
நிஷாலினி அவனது மார்பில் மெல்லத் தலைசாய்த்தாள்,
“நீ பக்கத்துல இருக்கும்போது எனக்கு வேற எதுவும் வேணாம் ஆரி, நேத்து நைட் நீ என் பக்கத்துல படுத்திருந்தப்போ எனக்குள்ள இருந்த எல்லா பயமும் காணாமப் போயிடுச்சு,
எனக்குத் தெரிஞ்சதெல்லாம் உன் சுவாசமும், உன் இதயத் துடிப்பும் தான், அதுதான் எனக்குப் பாதுகாப்புனு தோணுச்சு” என்று கூற ஆரியன் அவளது கூந்தலை ஆதரவாகக் கோதி விட்டான்,
“நிஷா இந்த உலகம் ரொம்பப் பெருசு, ஆனா ரொம்பக் கொடூரமானது, இங்க அன்பு காட்டுறவங்களை விட, அதைச் சிதைக்கிறவங்க தான் அதிகம்,
நான் உனக்காக எதையும் செய்ய தயார், ஆனா நீ என்னை விட்டுப் போயிடக் கூடாது, யார் என்ன சொன்னாலும் நீ என்னை விட்டு போக்கூடாது” என்றான் ஒருவித உணர்ச்சிப் பெருக்கோடு,
நிஷாலினி நிமிர்ந்து அவன் கண்களைப் பார்த்தாள்,
“உன்னை விட்டுப் போறதா சாவே வந்தா கூட அது நம்ம ரெண்டு பேரையும் பிரிக்க முடியாது ஆரி, நீ தான் என் உயிர், என் சுவாசம் எல்லாமே, யார் என்ன சொன்னாலும் சரி, இந்த நிஷா எப்பவுமே உன்னோட கூ மட்டும் தான் இருப்பா,” என்று சொல்ல,
அவனது கைகளைத் தன் கன்னத்தில் வைத்துக் கொண்டாள்,
அந்த அதிகாலை நேரத்து அமைதியில், இதழு ஏற்படுத்திய காயங்களுக்கு நிஷாலினியின் இந்த நிபந்தனையற்ற அன்பு ஒரு மருந்தாக அமைந்தது, ஆரியன் அவளை இறுக அணைத்துக் கொண்டான்,
வெளியே உலகம் அவர்களைப் பற்றி என்ன பேசினாலும் சரி, அந்த நொடியில் அவர்கள் இருவருக்கும் இடையே இருந்தது அந்தத் தூய்மையான அன்பு மட்டுமே,
காலை உணவை தயார் செய்த ரஞ்சிதம் பரிமாற காத்திருக்க, அங்கே சாப்பிட தான் ஆட்கள் வரவில்லை, அது அவளின் மனதில் பாரத்தை ஏற்படுத்தியது,
கட்டியவன் கடைக்கண் பார்வை கூட அவள் இருக்கும் திசையை பார்க்க வில்லை, பெற்றெடுத்த பிள்ளையோ எட்ட நின்றே பார்த்துச் செல்கிறான், அவள் நேசிக்கும் மருமகளோ அவளை கண்டாலே பயந்து விலகிச் செல்கிறாள்,
இந்த உலகமே தன்னை ஒதுக்கி வைப்பது போல அழுகை வந்தது, கண்களின் ஓரம் வழிந்த கண்ணீரைக் கூட துடைக்க முற்படாமல் சுவற்றில் சாய்ந்து அமர்ந்திருந்தாள்,
தன் அறையில் இருந்து வெளியே வந்த ஆரி எதார்த்தமாக அதை கவனித்தான், அவனுக்கும் எல்லாம் புரிந்தது, இருந்தாலும் பல வருட காயம் ஒரேநாளில் குணமாகாது, சிறிது நாட்களுக்கும் என்று தன்னைத் தானே தேற்றிக் கொண்டு நிஷாவைத் தேடிச் சென்றான்,
வீட்டினுள் அவள் இல்லாததால் பின் கட்டுக்குச் சென்றான், அங்கே அவன் கண்ட காட்சி சிரிப்பை வரவழைத்தது, நிஷா தலை முதல் கால் வரை உடல் முழுவதும் சேறாக இருக்க அதைப் பார்த்து வாய் விட்டு சிரித்தான்,
“ஹேய் என்னது இது, என்னாச்சு” என்று முழுதாக கேட்பதற்குள் அடக்க மாட்டாமல் சிரித்தான், நிஷா முகத்தை திரும்பி வைத்துக் கொண்டாள்,
“சரி சரி ரிலாக்ஸ் ஆரி” என்று தன்னையே அடக்கிக் கொண்டு அவளருகே சென்றான்,
“என்னாச்சு நிஷா, எல்லாரும் தண்ணில குளிச்சா, நீ என்னடான்னா சேத்துல குளிச்சிருக்க” என்று ஆரி கிண்டலடிக்க, நிஷாலினி உதட்டைக் பிதுக்கிக்கொண்டு, கையை நீட்டி பட்டாம் பூச்சியைக் காட்டினாள்,
“அது அங்க இருந்த அந்த அழகான பட்டாம்பூச்சிய தொடப் போனேன் ஆரி, கால் வழுக்கி அப்படியே அந்தச் சேத்துல விழுந்துட்டேன், நீ என்னடான்னா என்னைப் பார்த்துச் சிரிக்கிற” என்று செல்லமாகக் கோபித்துக் கொண்டாள்,
ஆரியன் அவளைப் பார்த்து மௌனமாகச் சிரித்தான், தன் துண்டை எடுத்து அவள் முகத்தில் ஒட்டியிருந்த சேற்றைத் துடைத்தான்,
“அச்சச்சோ இந்த பட்டாம்பூச்சி அழகா இருக்குன்னு அதுகிட்டப் போனா, அது உன்னைத் தள்ளிவிட்டு வேடிக்கை பார்க்குது பார்த்தியா பேட் பட்டாம்பூச்சி, சரி விடு நல்லா பட்டாம்பூச்சியா நான் உனக்கு புடிச்சு தர்றேன்” என்று
சமாதானப்படுத்தும் விதமாக பேசினான், ஆனால் அவனால் சிரிப்பை மட்டும் அடக்கவே முடியவில்லை,
”போ ஆரி, நீயும் அந்தச் பட்டாம்பூச்சியும் ஒண்ணுதான். ரெண்டு பேரும் என்னைக் கிண்டல் பண்றீங்க” என்று அவள் முகத்தைத் திருப்பிக் கொள்ள,
ஆரியன் அவளது கையைப் பிடித்து மெல்லத் தன் பக்கம் திருப்பினான்,
”சரி சரி, கோபப்படாதே, இப்போ போய் குளிச்சிட்டு வா, இல்லன்னா ஜலதோஷம் பிடிச்சுக்கப் போகுது, அப்புறம் நான் தான் உனக்கு வைத்தியம் பார்க்கணும்” என்றான் ஆரியன் அக்கறையுடன்,
நிஷாலினி அப்படியே நின்றாள், அவள் உடையெல்லாம் சேறாக இருப்பதைப் பார்த்து அவளுக்கே சிரிப்பு வந்தது,
“ஆரிஆனா எனக்கு ஒரு பயம்” என இழுத்தாள்,
”இதுல பயப்பட என்ன இருக்கு போ போய் குளிச்சிட்டு வா”
”இப்போ நான் இந்த உருவத்தோட உள்ள போனா, யாராவது என்னைத் திட்டுவாங்களோ” என்று தயக்கத்தோடு கேட்டாள்,
“இங்க யார் இருக்க, உள்ள உன் அத்த தானே இருக்காங்க, அவங்க எதுவும் சொல்ல மாட்டாங்க நிஷா, நீ தைரியமா போ, உனக்கு ஏதாவது வேணும்னா என்கிட்ட கேளு, நான் பார்த்துக்கிறேன்” என்றான்,
நிஷா மெல்லத் தலையசைத்து விட்டு உள்ளே செல்ல முற்பட்டபோது, ஆரியன் அவளை அழைத்தான்,
“நிஷா ஒரு நிமிஷம்” என்றான்,
”என்ன ஆரி” என்றாள்,
”அவங்க உன்னோட அத்தை, உன்மேல ரொம்ப பாசம் வச்சிருக்காங்க, அவங்கள பார்த்து பயப்படாம பேசு, என்ன வேணுமோ கேளு கொஞ்சம் சகஜமா பேசி பழகு ஓகேவா” என்றான் ஆரி,
தன் தாய்க்காகப் பரிந்து பேசுவது அவனுக்கே ஆச்சரியமாக இருந்தாலும், அந்த வீட்டின் மௌனம் அவனையும் வாட்டியது, நிஷாலினி அவன் கண்களை உற்றுப் பார்த்தாள்,
”நிச்சயமா ஆரி, நான் அவங்ககிட்டப் பேசுறேன், ஆனா எனக்கு ஒன்னு புரியல, நீ தைரியமாவன் தான, யாராச்சும் அடிக்க வந்தா அவங்களை அடிச்சு ஓடவிடுற தான, அப்புறம் ஏன் நீயே அவங்கள பார்த்து பயப்படுற” என்று கேட்டாள்,
“நான் எப்போ அவங்கள பார்த்து பயந்தேன்” என்று புரியாமல் கேட்டான் ஆரி,
“ஆமா நீ பயப்படுற நான் பார்த்த, நீ ஒருதடவ கூட அவங்க முகத்தை பார்த்து பேசினதே இல்ல, அவங்கள பார்த்தாலே நீ ஒதுக்கி தான போற, அப்போ பயந்துட்டேன்னு தானே அர்த்தம்,
தைரியமான நீயே அவங்கள பார்த்து பயப்படும் போது, நான் எப்படி பயப்படாம பேச முடியும்” என்று கேட்டு விட்டு அவள் உள்ளே சென்றாள்,
நிஷா உள்ளே செல்வதையே பார்த்துக் கொண்டிருந்த ஆரியன், அவனுக்கு இப்போது தான் உரைத்தது, ஊருக்கு மாவீரனாய் இருந்தாலுவ் தாயின் முன் கோழையாகவே இருக்கிறோம் என்று,
நிஷாலினி ஒவ்வொரு அடியாக எடுத்து வைத்துத் தாழ்வாரத்தைக் கடந்தாள், அவள் காலடி வைத்த இடங்களில் எல்லாம் செந்நிறச் சேறு வட்டமிட்டது, ரஞ்சிதம் இன்னும் அந்தச் சுவற்றில் சாய்ந்தபடிதான் அமர்ந்திருந்தாள்,
தன் உலகம் இருண்டுவிட்டதாக நினைத்து மூடியிருந்த அவளது கண்களுக்கு முன்னே, நிஷாவின் நிழல் வந்து விழுந்தது,
மெல்லக் கண்களைத் திறந்த ரஞ்சிதம் அதிர்ந்து போனாள்,
எதிரே நின்றிருந்த உருவம் அவளுக்கு ஒரு நொடி அடையாளம் தெரியவில்லை, தலை முதல் கால் வரை சேறு சொட்டச் சொட்ட நின்று கொண்டிருந்த நிஷாவைப் பார்த்ததும்,
”யாரது” என்று கத்தியபடி ரஞ்சிதம் இருக்கையை விட்டு எழுந்தாள்,
நிஷா அப்படியே நின்ற இடத்திலேயே உறைந்து போனாள், அவளின் சத்தத்தில் இருந்த அதிர்ச்சி அவளை இன்னும் பயமுறுத்தியது,
“அ… அது அது…” என்று திக்கினாள்.
ரஞ்சிதம் அவளருகே விரைந்து வந்தாள், அவள் கைகள் நடுங்கின,
“அம்மாடி ஏன் இப்படி, எங்கே விழுந்த, உடம்பெல்லாம் சேறா இருக்கே கால் வழுக்கிடுச்சாம்மா, அடி எதுவும் பலமா பட்டுடுச்சா” என்று கேட்டபடி நிஷாவைத் தொட்டுச் சரிபார்த்தாள்,
ரஞ்சிதத்தின் கைகளில் நிஷாவின் உடலில் இருந்த சேறு ஒட்டியது, ஆனால், ரஞ்சிதம் அதை ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை,
நிஷா மெல்ல நிமிர்ந்து ரஞ்சிதத்தை மிரட்சியோடு பார்த்தாள்,
“இல்ல, அங்க பட்டாம்பூச்சி.. அதைத் தொடப் போனேன்.. அப்புறம் அப்படியே வழுக்கி… வழுக்கி” என்று சொல்லும்போதே நிஷாவின் கண்கள் கலங்கின,
தன்னைத் திட்டப் போகிறார்கள் என்ற பயம் அவளை ஆட்கொண்டது,
ரஞ்சிதம் நிஷாவின் முகத்தைப் பார்த்தாள், அந்தப் பயம் அவளைச் சுட்டது,
‘இந்த வீடே என்னை வெறுக்குது, இந்தப் பெண்ணும் என்னைப் பார்த்து இப்படிப் பயப்படுகிறாளே, நான் என்ன அவ்வளவு கொடூரமானவளா’ என்ற எண்ணம் ரஞ்சிதத்தின் உள்ளத்தை உருக்கியது,
தன் சேலை முந்தானையை மெல்லத் தூக்கினாள் ரஞ்சிதம், ஒரு கணம் தயங்கினாலும், அடுத்த நொடி நிஷாவின் கன்னத்தில் அப்பியிருந்த ஈரச் சேற்றை தன் சேலை முந்தானையால் துடைக்க ஆரம்பித்தாள்,
”அச்சோ… சேலை பாழாயிடுச்சே…” என்று நிஷா பதறினாள்,
”இருக்கட்டுமா… சேலை போனா போயிட்டுப் போவுது, உனக்கு ஏதாவது ஆகியிருந்தா நான் என்ன பண்ணுவேன், இந்த நேரத்துல எதுக்கு அங்கன போன” என்று ரஞ்சிதத்தின் குரல் கனிவில் கசிந்தது,
அவளது விரல்கள் நிஷாவின் நெற்றியில் இருந்த முடியை ஒதுக்கிவிட்டு, அங்கே ஏதேனும் வீக்கம் இருக்கிறதா என்று பார்த்தாள்,
ரஞ்சிதத்தின் இந்தக் கனிவு நிஷாவிற்குப் புதியதாக இருந்தது, ஆரியன் சொன்னது போல, உண்மையில் அன்பானவள் தான் என்பதை அந்த நொடியில் அவள் உணர்ந்தாள், தரை முழுவதும் சேறு படிந்திருப்பதை ரஞ்சிதம் கவனித்தாள்,
“சரி சரி, அப்படியே நில்லு எங்கிட்டும் நகரக்கூடாது, இங்கனயே நின்னுக்கிட்டிரு, நான் வெந்தண்ணி எடுத்துட்டு வாரேன், ஒரு அடியாவது எடுத்து வச்சே, வழுக்கி மறுபடியும் விழுந்துடுவ,” என்று மிரட்டுவது போலச் சொல்லிவிட்டு ரஞ்சிதம் உள்ளே விரைந்தாள்,
நிஷா அத்தையையே பார்த்துக் கொண்டிருந்தாள், அந்தச் சில நிமிடங்களில், ரஞ்சிதத்தின் உள்ளே இருந்த ஒரு தாய் உயிர்த்தெழுந்ததை அவளால் உணர முடிந்தது,
நிஷா ரஞ்சிதத்திடம் ஒட்டிக் கொள்வாளா?
தொடர்ந்து வாசிப்போம் வாங்க,
