வலியை சூடிய காதலே – 17

காலங்கள் கரைந்து போனாலும்,

​உன் தோள் சாய வேண்டும்,

​மழலையாய் உன் மடியில் நான் தஞ்சம் கொள்ள,

பிறவிகள் பல வேண்டும் காதலே…!

​வலியை சூடிய காதலே – 17

“ஆரி… ஆரி…” என்று கத்தியபடி தரையில் விழுந்து கிடந்தாள். ரஞ்சிதம் அவளைத் தூக்க ஓடி வந்தாள், 

ஆரியனை ஏற்றிச் சென்ற போலீஸ் ஜீப் புழுதியைக் கிளப்பிக்கொண்டு பார்வையை விட்டு மறைந்த சில நிமிடங்கள் ஆகியிருந்ததும். நிஷா இன்னும் அழுது கொண்டே இருந்தாள்,

அவள் மனதை சுக்குநூறாக உடைக்க நான்கு கருப்பு நிறக் கார்கள் சீறிப்பாய்ந்து வந்து வாசலில் நின்றன, டயர்கள் தரையைத் தேய்க்கும் சத்தமே அவளை கேள்விக்குறியாக்கியது,

​காரில் இருந்து தீரண் இறங்கினான், 

அவனது கண்களில் ஒரு வெறி இருந்தது. அவனோடு வந்த சில அடியாட்கள் கைகளில் இரும்புத் தண்டுகளுடனும், ஆயுதங்களுடனும் இறங்கினர்,

சிறிது நாட்கள் கடந்து தீரணை நேருக்கு நேராக பார்க்கிறாள், அதுவும் தன்னை பாதுகாக்கும் காவலன் இல்லா நேரத்தில், அவள் இதயம் தாறுமாறாக துடித்தது, அன்பாய் பார்த்தாலே அலறி அடித்து ஓடுவாள், 

இவனோ அவளை மென்று துப்புவதுபோல் வெறியோடு பார்த்தால் அது இன்னும் அவளுக்கு பயத்தைக் கொடுக்க ரஞ்சிதத்தின் தோளைகளை இறுகப் பற்றிக் கொண்டாள்,

“அவளைத் தூக்குங்கடா” என்று தீரண் அதிகாரமாகக் கைகாட்டினான்,

​தரையில் விழுந்து கிடந்த நிஷாவை கையைப் பிடித்து ஒரு அடியாள் இழுக்க, அவள் அலறினாள்,

“என்னை விடுங்க, ப்ளீஸ் என்னை விடுங்க அத்தை அத்தை காப்பாத்துங்க” என்று கத்திக் கதறி அழுதாள், ​ரஞ்சிதம் பதறியடித்துக்கொண்டு அந்த அடியாளைத் தடுத்தாள்,

“யார்டா நீங்க, என் மருமவளை எங்கணடா கூட்டிட்டுப் போறீங்க, கையை விடுங்கடா” என்று சத்தமிட்டவளை, தீரண் ஒரு ஏளனப் பார்வை பார்த்தான்,

​”ஏய் கிளவி தள்ளிப் போ, இல்ல உன்னை இங்கயே வெட்டி வீசிடுவேன்” என்று ஒரு அடியாள் ரஞ்சிதத்தை பலமாக உதைக்க, 

அவர் அப்படியே பின்னால் இருந்த தூணில் மோதித் தரையில் விழுந்தார், நெற்றியில் இருந்து ரத்தம் கசியத் தொடங்கியது,

​”அத்தை காப்பாத்துங்க, என்னை காப்பாத்துங்க” என்று நிஷா கதறினாள்,

​அப்போது அங்கு தன் புல்லட்டில்,   ராஜதுரை இருந்து வேட்டியை மடித்துக் கட்டியபடி ஆவேசமாக ஓடி வந்தார், தன் மனைவியின் ரத்தத்தையும், தன் வீட்டு குலவிளக்கை ஒருவன் இழுத்துச் செல்வதைக்  கண்டதும், அவரின் ரத்தம் கொதித்தது.

​”ஏய்! எவன்டா அது என் வீட்டுக்கு வந்து என் வீட்டு பொம்பளங்க மேல கை வைக்கிறது, நெஞ்சுல உரமிருந்தா ஒத்தக்கொத்த வாங்கடா பாக்கலா” என்று கர்ஜித்தபடி ஓடி வந்த ராஜதுரை, 

நிஷாவைப் பிடித்திருந்தவனின் தாடையில் ஒரு இடி போன்ற குத்தை இறக்கினார், அந்த அடியாள் நிலைதடுமாறிப் பல் தெறிக்க விழுந்தான்,

​அடுத்த வினாடி மூன்று பேர் ராஜதுரையைச் சூழ்ந்தனர், அறுபது வயதைத் தாண்டினாலும், ராஜதுரையின் கைகளில் இன்னும் பழைய வீரம் இருந்தது, ஒருவனின் கையில் இருந்த இரும்புத் தடியைப் பிடுங்கி, 

அவனது விலா எலும்பிலேயே அடித்தார், ‘மடேர்’ என்று எலும்பு முறியும் சத்தம் கேட்டது, இன்னொருவனைத் தூக்கி அப்படியே தரையில் அடித்தார்,

​ஆனால் தீரண் சிரித்தான், 

“கெழவன் இன்னும் முறுக்காத்தான் இருக்கான், எல்லாரும் ஒண்ணா போங்கடா” என்றான்.

​தீரணின் ஆட்கள் கூட்டம் கூட்டமாக ராஜதுரையின் மேல் பாய்ந்தனர், அதற்கெல்லாம் அசராது அடித்து பறக்க விட்டார், மூன்று பேர் சேர்ந்து அமுக்கி பிடிக்க முன்னால் இருந்து கத்தியுடன் ஒடிவந்த இருவரையும் இரு காலால் எட்டி நெஞ்சில் மிதிக்க அவர்கள் கத்தியை நழுவ விட்டு நெஞ்சைப் பிடித்துக் கொண்டனர்,

அந்நேரமாக ஒருவன் பின்னால் இருந்து பலமாக ராஜதுரையின் தலையில் கம்பியால் தாக்கினான், ரத்தம் பீறிட்டது, கண்கள் இருண்டாலும், அவர் விடவில்லை, தன் மனைவியையும் மருமகளையும் காக்க சிங்கமென தன் இறுதி வரை போராடினார்,

மொத்த பேரும் சேர்ந்து அவரைத் தரையில் தள்ளி, சரமாரியாக அடித்தனர், ராஜதுரையின் வெள்ளை வேட்டியும் சட்டையும் ரத்தத்தால் நனைந்தது,

​”அய்யோ அவர் பாவம் விட்டிடுங்க” என்று நிஷா கதறிக்கொண்டு ஓடி வர, தீரண் அவளது கூந்தலைப் பற்றி இழுத்து நிறுத்தியவன்,

​,அவளைத் தூக்கிக் கொண்டு காரை நோக்கி நடந்தான், நிஷா கால்களால் உதைத்துத் திமிறினாள், ஆனால் தீரண் அவளைக் காருக்குள் திணித்தான்,

​ரஞ்சிதம் ரத்தக் காயங்களுடன் தவழ்ந்து வந்து தீரணின் காலைப் பற்றினாள்,

“எம்மருமவள விட்டுடுப்பா அவ குழந்தைடா, எங்க உசிரே அவதாம்ப்பா, எம்புள்ளை வந்து கேட்டா நான் என்ன பதில் சொல்லுவேன்” என்று கெஞ்சினார்,

​தீரண் அவரை ஒரு உதறு உதறினான்,

“உன் புள்ளை வந்து கேட்பான்னு கவலைப்படாத கிழவி, அவன் திரும்பி வர மாட்டான், இந்நேரத்துக்கு அவனை ஜெயில்ல புடிச்சு போட்டிருப்பாங்க, 

உள்ள உட்காந்து கம்பி எண்ணிட்டு இருப்பான், அப்படியே இல்லன்னாலும் நான் அவன களிதிங்க வைப்பேன்” என்று சொல்லி விட்டு காரில் ஏறினான்,

​கார்கள் புழுதியைக் கிளப்பிக் கொண்டு வெளியேறின, தரையில் ரத்த வெள்ளத்தில் ராஜதுரை அசைவற்றுக் கிடக்க, ரஞ்சிதம் 

“ஐயோ, யாராவது வாங்க, என் புருஷனைக் கொன்னுட்டாங்க, எங்குழந்தைய தூக்கிட்டு போயிட்டாங்களே நான் என்ன பண்ணுவே” என்று கதறிய அந்தச் சத்தம் காற்றில் கரைந்தது,

​அந்த வீட்டின் வாசலில், நிஷா பிடிக்கப் போன அதே பட்டாம்பூச்சி, இப்போது அந்த ரத்தத்தின் மேல் அமர்ந்திருந்தது,

புழுதியைக் கிளப்பிக்கொண்டு தீரணின் கார்கள் மறைந்த அந்த நொடி, அந்தப் பெரிய வீடே சுடுகாடாய் மாறியிருந்தது. 

ரஞ்சிதம் தன் நெற்றியில் வழிந்த ரத்தத்தைத் துடைக்கக் கூடத் தோன்றாமல், தரையில் அசைவற்றுக் கிடந்த தன் கணவனை நோக்கிக் கதறியபடி தவழ்ந்து சென்றார்,

​”ஏங்க… ஏங்க கண்ணைத் தொறங்க, அய்யோ சிங்க கணக்காக ராசா மாதிரி இருந்த மனுஷன இப்படி பாவிப்பயலுக அடிச்சு போட்டுட்டு போயிட்டானுவளே எய்யா என் சாமி கண்ணத் தொறந்து பாருங்க” என்று அலறியபடி, 

ராஜதுரையின் ரத்தம் படிந்த தலையைத் தன் மடியில் ஏந்திக் கொண்டாள், ​வெள்ளை வேட்டியும் சட்டையும் செந்நிறமாக மாறியிருக்க, ராஜதுரையின் மூச்சு திணறிக் கொண்டிருந்தது,

ஒரு காலத்தில் சிங்கம் போல கர்ஜித்த அந்த முரட்டு மனிதன், இன்று தன் குடும்பத்தைக் காக்கப் போராடிச் சிதைந்து போயிருந்தார், ரஞ்சிதத்தின் கண்ணீர் அவரது ரத்தம் படிந்த கன்னங்களில் விழுந்து ரத்தத்தைக் கலந்தது,

​ராஜதுரை மெல்லக் கண்களைத் திறந்தார், அவரது பார்வை மங்கலாக இருந்தது, எதிரே தன் மனைவி கதறுவதைப் பார்த்ததும் அவரது இதயம் கனத்தது, நடுக்கத்துடன் தன் கரத்தைத் தூக்கி, ரஞ்சிதத்தின் முகத்தைத் தொட முயன்றார்,

​”ரஞ்சி…. ரஞ்சிதம்….” என்று அவரது குரல் மிக மெல்லிய முணுமுணுப்பாய் வெளிவந்தது,

​”எய்யா சாமி பேசிட்டீகளா உங்களுக்கு ஒன்னும் ஆவாது, நம்ம பைய வந்திருவா, அவன் வந்து உங்கள காப்பாத்துவா சித்தநேரம் மூச்சை புடிச்சு வை சாமி” என்று ரஞ்சிதம் விக்கித்து அழ, ராஜதுரை ஒரு வேதனையான புன்னகையை உதிர்த்தார்,

​”இம்புட்டு வருஷ காலமா உன்ன மருக வச்சதுக்கு அந்த ஆத்தா மகமாயி குடுத்த தண்டனையா நினைச்சிக்கறேன், ரஞ்சிதம் என்னை மன்னிச்சுடு ரஞ்சிதம்,

நான் கட்டுனவளுக்கு புருஷனாவும் இல்ல, நான் பெத்தவனுக்கு அப்பனாவும் இல்ல, என் கௌரவம்தான் பெருசுன்னு நினைச்சேன் ஆனா கடைசியில என் கண்ணு முன்னாடியே, 

என் வீட்டுப் பொண்ண தூக்கிட்டு போறானுவ அத தடுக்க வக்கத்து போயிட்டனே” என்று சொல்லும்போதே அவரது கண்கள் கலங்கின, வலி தாளாமல் அவர் முகம் சுருங்கியது,

​”அப்படிச் சொல்லாதீக நீங்கதான் எங்க பெலமே, கலங்காதீக” என்று ரஞ்சிதம் அழ, ராஜதுரையின் கைகள் மெல்லத் தளர்ந்து ரஞ்சிதத்தின் மடியிலேயே விழுந்தன,

​”என்னைய தனியா விட்டுட்டு போயிராத ரஞ்சிதம்” என்று கடைசியாக முணுமுணுத்துவிட்டு, ராஜதுரையின் கண்கள் சொருகின, அவர் அப்படியே மயக்க நிலைக்குச் சென்றார், அந்த இடமே ரத்தக் காடாகிப் போனது,

​சில மணிநேரங்களுக்குப் பிறகு, ஒரு ஆட்டோவில் ஆரியன் வந்து இறங்கினான் ஆரி, மருத்துவமனையில் இருந்து அவன் வந்த வேகம், வீட்டின் வாசலைப் பார்த்ததுமே அப்படியே உறைந்த நின்றான்,

​வாசலில் சிதறிக் கிடந்த கண்ணாடித் துண்டுகள், தரையில் இழுத்துச் செல்லப்பட்ட தடையங்கள் ஆரியனின் இதயம் தாறுமாறாகத் துடித்தது, அவன் ஓடி உள்ளே வந்தான்,

​அங்கே அவன் கண்ட காட்சி, அவனது நரம்புகளைத் தீயாய் எரியச் செய்தது, தன் தந்தை ரத்த வெள்ளத்தில் தன் தாயின் மடியில் அசைவற்றுக் கிடக்க, தன் தாய் பித்து பிடித்தவர் போல அழுது கொண்டிருப்பதைப் பார்த்ததும் ஆரியனின் உலகம் ஒரு நிமிடம் சுழன்றது,

​”அப்பா” என்று கத்தியபடி அவன் ஓடிச் சென்றான், ​ரஞ்சிதம் ஆரியனைப் பார்த்ததும் இன்னும் சத்தமாக அழுதார், 

“எய்யா சாமி அந்தப் பாவிங்க வந்து உன் அய்யனை அடிச்சுப் போட்டுட்டு,  எம்மருமவளை  தூக்கிட்டுப் போயிட்டாங்கடா, என் கண்ணு முன்னாடியே அவளை இழுத்துட்டுப் போயிட்டானுக” என்று தலையில் அடித்துக் கொண்டு அழுதாள்,

​ஆரியன் தன் தந்தையின் நாடியைப் பிடித்துப் பார்த்தான், உயிர் இன்னும் ஊசலாடிக்கொண்டிருந்தது, தீரணின் சிரிப்பிற்கு பின்னால் இருந்த அர்த்தம் இப்போது விளங்கியது,

ஆரியன் தன் ஆத்திரத்தை ஒரு நொடி அடக்கினான், அவனுக்குத் தெரியும், இப்போது அவன் நிஷாலினையை காப்பாற்ற வெளியே ஓடினால், உள்ளே இருக்கும் தன் தந்தையின் உயிர் பிரிந்துவிடும் என்று ,

ஒரு மகனாகவும், அதைவிட ஒரு மருத்துவனாகவும் அந்தச் சூழலை அவன் கையிலெடுத்தான்,

​”கொஞ்சம் நகருங்க” என்று ரஞ்சிதத்தை தள்ளி நிறுத்தி விட்டு சட்டெனத் தரையில் மண்டியிட்டுத் தன் தந்தையின் கழுத்து நரம்பைப் பரிசோதித்தான்,

​துடிப்பு மிக மிகக் குறைவாக இருந்தது, தலையில் பலமான அடி, ரத்தம் நிற்காமல் வழிந்து கொண்டிருந்தது, ரஞ்சிதம் முதலுதவிற்காக அவள் சேலையைக் கிழித்து தலையில் இறுகக் கட்டி இருந்தாள், இருந்தும் ரத்தம் நிற்காமல் அதையும் மீறி வழிந்து கொண்டிருந்தது,

​”அம்மா, அழாதீங்க, நான் சொல்றதைச் செய்யுங்க, அந்தப் பெட்டியைக் கொண்டு வாங்க” என்று அவன் சொல்ல, ரஞ்சிதம் தடுமாற்றத்துடன் ஓடிச் சென்று ஆரியனின் மருத்துவப் பெட்டியை எடுத்து வந்தார்,

​ஆரியன் நடுக்கமின்றி, ஆனால் மின்னல் வேகத்தில் செயல்பட்டான், அவனது கைகள் ரத்தத்தில் நனைந்திருந்தாலும், 

ஊசியைச் செலுத்தும் போது ஒரு இம்மிகூட அசையவில்லை, இதயத் துடிப்பை அதிகப்படுத்தும் மருந்தைத் தன் தந்தையின் நரம்பில் ஏற்றினான்,

​”அப்பா கண்ணைத் திறங்க, என்னைப் பாருங்க” என்று அவர் கன்னத்தைத் தட்டியபடி, அவருக்குச் செயற்கை சுவாசம் (CPR) கொடுக்கத் தொடங்கினான், ஒவ்வொரு முறை அவர் நெஞ்சில் அழுத்தும்போதும், ஆரியனின் ஆவேசம் கண்ணீராக வெளியேறத் துடித்தது,

​சுமார் ஐந்து நிமிடப் போராட்டத்திற்குப் பிறகு, ராஜதுரையின் உடல் ஒருமுறை அதிர்ந்து, நீண்ட பெருமூச்சை இழுத்து விட்டார், அவர் கண்கள் லேசாகத் துடித்தன,

​”பல்ஸ் வந்துடுச்சு, அம்மா… உடனே ஆம்புலன்ஸ்க்கு கால் பண்றேன், இவரை இப்போவே சிட்டியில இருக்குற பெரிய ஹாஸ்பிடலுக்கு மாத்தணும், அங்கதான் அவருக்குத் தேவையான சர்ஜரி பண்ண முடியும்” என்று சொல்லிவிட்டு,

தன் நண்பன் டாக்டர் ஒருவனுக்குப் போன் செய்து நிலையை விளக்கினான், அவன் மூலமாக ஆம்புலன்ஸை வரவழைத்தான் ஆரியன்,

ஆம்புலன்ஸ் வந்து ராஜதுரையை ஏற்றி விட்டு, அவருக்குத் துணையாக ரஞ்சிதத்தையும் ஆம்புலன்ஸில் ஏற்றி விட்டு, 

“அம்மா அப்பாவை நீங்க பார்த்துக்கோங்க, அவர் உயிருக்கு இனி எந்த ஆபத்து இல்ல, நான் நான் நிஷாவை அழைச்சிட்டு வர்றேன்” என்றான், ​ரஞ்சிதம் அவன் கையைப் பற்றிக் கொண்டாள், 

“பார்த்துப்பா சூதானமா இருப்பா, அந்தப் பாவிக ரொம்ப மோசமானவனுக,” என்று சொல்ல, ஆரியன் பதில் சொல்லவில்லை,

​ஆம்புலன்ஸ் மறைந்ததும்,

ஆரியன் மெல்லத் திரும்பி அந்த ரத்தக் கறைகள் படிந்த தரையைப் பார்த்தான், தன் தந்தையை ஆபத்துக் கட்டத்தில் இருந்து மீட்ட நிம்மதியை விட, தன்னவள் ஒரு மிருகத்திடம் சிக்கியிருக்கும் வலி அவனை வாட்டியது,

​அவன் தன் ஜீப்பை நோக்கி நடந்தான், அவன் கைகளில் இருந்த தந்தையின் ரத்தம் இன்னும் காயவில்லை, அந்த ரத்தமே அவனுக்கு இப்போது ஒரு சபதமாக மாறியது,

​”டாக்டரா உன் உசிரைக் காப்பாத்தவும் தெரியும், தேவையில்லன்னா உசிரை எடுக்கவும் தெரியும்” என்று எண்ணி கர்விக் கொண்டு ஜீப்பில் சீறிப்பாய்ந்தான் ஆரி, 

ஆரியின் நிஷா மீட்கப்படுவாளா?

தொடர்ந்து  வாசிப்போம்  வாங்க 

 

❤️ Loading reactions...
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page