என் கடல் தேடும் நதியும் நீ…!
என் விழி தேடும் பிம்பம் நீ…!
என் இருள் தேடும் வெளிச்சம் நீ…!
என் வலி தேடும் மருந்தும் நீ…!
என் மனம் தேடும் காதலும் நீ…!
என் உயிர் தேடும் சுவாசம் நீ…!
என் கூடல் தேடும் ஊடல் நீ…!
என் தேடல் என்றும் நீ…!
வலியை சூடிய காதலே -19
“சார்… நாங்க வந்துட்டோம் சார்” என்று கத்தியபடி அவர்கள் உள்ளே நுழையப் பார்த்தனர், தீரண் ரத்தத்தைத் துடைத்தபடி விகாரமாகச் சிரித்தான்,
“மூச்சு விடாம வீர வசனம் பேசுவியே, இப்போ பேசுடா, இன்னைக்கு என் நிஷா முன்னாடியே உன் உயிரை எடுக்கப் போறேன்” என்ற தீரணின் வார்த்தைக்கு ஆரியன் துளியும் அஞ்சவில்லை,
அவன் நிஷாவைப் பார்த்தான். அவள் கண்களில் இப்போது பயம் இல்லை; தன் கணவன் மீது அசைக்க முடியாத நம்பிக்கை இருந்தது.
அதுவே அவனுக்கு ஆயிரம் யானை பலத்தைத் தந்தது, முதலாவதாக உள்ளே பாய்ந்த அடியாள் ஒருவன் அரிவாளை ஓங்க, ஆரியன் அவன் அடிவயிற்றில் ஒரு உதையிட்டான்,
அவன் பின்னால் இருந்தவர்கள் மீது போய் விழுந்தான். ஆரியன் ஒரு கம்பைப் பற்றிக் கொண்டு, சுற்றி நின்ற அடியாட்களை நோக்கிச் சுழற்றினான்.
தன் ஒவ்வொரு அடியையும் மிகத் துல்லியமாக வைத்தான், அரிவாலும் இரும்புத் தடியும் வைத்திருப்பவர்களின் முன்னால் சாதாரண சிறு கம்பைச் சுற்ற அவர்களோ ஆரியைப் பார்த்து ஏளனமாகச் சிரித்தனர்,
சாதாரண கம்பை ஒருவனின் கழுத்துப் பகுதியில் பலமாகத் தாக்க அவன் அங்கேயே மயங்கிச் சரிந்தான், அதைக் கண்ட மற்றவர்களின் சிரிப்பு சட்டென நின்றது.
இன்னொருவனின் அரிவாலோடு ஓடி வர, அதே கம்பை வைத்து கை மூட்டையை உடைத்து அவனைச் செயலற்றவன் ஆக்கினான்.
மீதமிருந்த ஆட்கள் ஒன்றாகச் சூழ்ந்தும் ஆரியனை அவர்களால் நெருங்க முடியவில்லை, சிங்கத்தின் குகைக்குள் புகுந்த வேட்டைக்காரர்களைப் போல அடியாட்கள் சிதறி ஓடினர்,
ஆரியனின் ஒவ்வொரு அடியிலும் வேகம், விவேகம் மற்றும் தன்னவளை மீட்கும் துடிப்பும், தந்தைக்கான நியாயத்தை நிலைநாட்டுவதில் இருந்தது, கடைசியாக நின்ற அடியாள் ஒருவன் நிஷாவை நோக்கி ஓட,
ஆரியன் கையில் இருந்த கம்பை முழங்காலுக்கு இடையில் வீச அவன் கால் இடறி கிழே விழுந்தான், அவன் தரையில் முகங்குப்புற விழ, ஆரியன் அவன் முதுகில் ஒரு மிதி மிதித்துத் தீரணின் முன்னால் வந்து நின்றான்,
முற்றிலும் பலவீனப்பட்டுப் போய் நின்ற தீரணைப் பார்த்து ஆரியன் சொன்னான்,
“ஒரு பெண்ணை வற்புறுத்தி அடைய நினைக்கிறது ஆம்பளைத்தனம் இல்லை, மிருகத்தனம், உன் உசிர் உன்னை விட்டு போறதுக்கு முன்னாடி,
நீ பண்ண ஒவ்வொரு தப்புக்கும் என் நிஷா கிட்ட மன்னிப்பு கேட்கனும்” என்ற ஆரியன், தீரணை மண்டியிட வைத்து அங்கேயே கட்டியும் போட்டான்,
நிஷாவின் கட்டுகளை மெல்ல அவிழ்த்தான், கட்டுகள் அவிழ்ந்ததும் நிஷா ஓடி வந்து ஆரியனை இறுகக் கட்டிக் கொண்டாள், அவளது கண்ணீரும், நடுக்கமும் ஆரியனின் தோள்களில் கரைந்தது,
”கண்ணைத் துடைச்சுக்க, நீ எப்பவும் பயப்படக் கூடாது நிஷா, நான் தான் வந்துட்டேன் இல்ல, இனி யாரும் உன் நிழலைக் கூட தொட முடியாது” என்று அவளது நெற்றியில் முத்தமிட்டு அரவணைத்துக் கொண்டான் ஆரியன்,
அவனது ஸ்பரிசம் நிஷாவின் உடலில் இருந்த அத்தனை பயத்தையும் போக்கி, நடுக்கத்தை நீக்கியது.
நிஷா மெல்ல அவன் மார்பில் இருந்து விலகி, அவனது ரத்தம் படிந்த கைகளைப் பார்த்தாள்.
“ஆரி உனக்கு அடி எதுவும் படலையே, உனக்கு வலிக்குதா?” என்று தன் வலியை மறந்து அவனுக்காக வருந்தினாள்.
ஆரியன் அவளது கன்னத்தில் இருந்த அந்தச் சிவப்புத் தழும்பைத் தடவினான்,
“எனக்கு வலிக்கல, நிஷா. உனக்கு வந்த வலிதான் என்னைக் கொல்லுது. இனி யாராவது உன்னைத் தொடுறதுக்கு முன்னாடி, அவங்க உசிரு போயிரும்,” என்று அவன் சொல்லிக் கொண்டிருக்கும்.
போது,
தூரத்தில் போலீஸ் சைரன் சத்தம் கேட்டது, தீரண் தான் நிஷாவை கடத்தி வந்துள்ளான் என்று தெரிந்த உடனேயே காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்து விட்டான்,
அவர்களும் அங்கே வந்து சேர்ந்தனர், ரத்த வெள்ளத்தில் கிடந்த தீரணையும் அவனது ஆட்களையும் பார்த்து அதிர்ந்து போயினர்.
”தனி ஒரு நபரா சட்டத்தை நீங்களே கைல எடுத்தது ரொம்ப பெரிய தப்பு, இதுக்கு உங்க மேல கேஸ் போட்டு, உள்ள தூக்கி வைக்கனும், ஆனா நீங்க இவங்கள அடிக்கலைன்னா,
இந்த பொண்ணோட மானத்துக்கும் உயிருக்கும் ஆபத்து வந்திருக்கும். அந்த ஒரே காரணத்துக்காக உங்கள மன்னிச்சு விடுறேன். முதல்ல இந்த பொண்ணை கூட்டிட்டு இந்த இடத்தை விட்டு கிளம்புங்க.
மத்ததை நாங்க பார்த்துக்கிறோம். நாளைக்கு காலையில ஸ்டேஷன் வந்து ப்ராப்பரா ஒரு கம்ளைன்ட ரிஜிஸ்டர் பண்ணிடுங்க. நீங்க போகலாம்,” என்று கூறி போலீஸ் இன்ஸ்பெக்டர் அனுப்பி வைக்க ஆரியன் அமைதியாக நிஷாவின் கையைப் பிடித்துக் கொண்டு நடந்தான்.
தன் ஜீப்பில் ஏற்றி அந்த இருண்ட காட்டிலிருந்து பாதுகாப்பாக வெளியே அழைத்துச் சென்றான்.
காட்டில் நடந்த பயங்கரமான நிகழ்வுகளில் களைத்து போயிருந்த நிஷாவைத் தனது வீட்டிற்கு அழைத்து வந்தான் ஆரி.
நிஷா இன்னும் அந்த அதிர்ச்சியிலிருந்து மீளாமல் இருப்பதை அவள் முகமே காட்டிக் கொடுக்க, அவளது கைகளை மென்மையாகப் பற்றிக் கொண்டான் ஆரி.
”நிஷா எல்லாம் முடிஞ்சிடுச்சு. இப்போ நாம நம்ம வீட்ல இருக்கோம், பயப்படாத” என்று அவன் மெல்லிய குரலில் சொல்ல, நிஷா நிமிர்ந்து அவனைப் பார்த்தாள்,
அந்தப் பார்வையில் அத்தனை பயமும் கலக்கமும் தெரிந்தது. வீட்டிற்குள் நுழைந்ததும், நிலவொளி முற்றத்தின் வழியாகத் தரைவிரிப்பில் கோலம் போட்டிருந்தது.
ஆரி அவளை அங்கேயே அமர வைத்துவிட்டு, ஒரு கிளாஸ் தண்ணீர் கொடுத்தான். நிஷா மெல்லப் பருகிவிட்டு, அவன் கையைப் பிடித்தாள்.
”எனக்கு எதாவது ஆனாக் கூட எனக்கு பயம் இல்லை ஆரி, ஆனா இன்னைக்கு தீரணால உனக்கு ஏதாவது ஆயிடுமோன்னு தான் ரொம்ப பயமா இருந்துச்சு” என்று அவள் தழுதழுக்க,
”நீ கூட இருக்கும் போது எனக்கு எதுவுமே ஆகாது நிஷா, நடந்ததை மாற்ற முடியாது, ஆனா மறக்க முடியும், நடந்தது ஏதோ கெட்ட கனவுன்னு நினைச்சு மறந்துட்டு நல்லா தூங்கி ரெஸ்ட் எடு” என்றவன்,
அவளை அவள் அறைக்கு அழைத்துச் சென்றான். அவளது கன்னத்தில் தீரண் அறைந்த தழும்பு இன்னும் சிவந்து இருப்பதைப் பார்த்ததும் ஆரியின் மனம் கணத்தது.
மெல்லத் தன் கைவிரல்களால் அந்த இடத்தைத் தடவிக் கொடுத்தான்,
”வலிக்குதா நிஷா” என்று பரிவாக கேட்டான்,
”இந்த வலி எனக்கு பெருசா தெரியல ஆரி, தீரண் இனி அடுத்து என்ன பண்ணுவான்னு நினைச்சா தான் ரொம்ப பயமா இருக்கு” என்றாள் நிஷா,
ஆரி மெல்ல அவளது நெற்றியில் தன் இதழ்களைப் பதித்தான், அது வெறும் முத்தமல்ல, அவளது காயங்களுக்கு அவன் தரும் மருந்து, அந்த நெருக்கத்தில் நிஷா அவனது சட்டையைப் பற்றிக் கொண்டாள்,
”நீ என் கூடவே இரு ஆரி, என்னை தனியா விட்டுட்டு எங்கயும் போயிடாத” என்று சிணுங்கினாள் நிஷா,
ஆரி அவளது கூந்தலை மெல்லக் காதுகளுக்குப் பின்னால் ஒதுக்கிவிட,
நிஷா அவனது கழுத்தைக் கட்டிக் கொண்டு அவன் தோளில் முகம் புதைத்தாள், ஆரி அவளது முகத்தை ஏந்தி, கனிவோடு அவள் கண்களைப் பார்த்தான்,
மெல்ல அவளது இதழ்களில் தன் இதழ்களைப் பதித்து, அந்த நீண்ட நேரப் பிரிவின் வலியையும், பயத்தையும் ஒரு முத்தத்தில் கரைத்தான்.
அதில் இரு இதயங்களும் ஒன்றோடொன்று கலந்து, காதலென்னும் பிரவாகம் பொங்கிப் பெருக்கெடுத்து ஓடியது.
காலைப் பொழுது விடிந்து நல்லதொரு விடியலை உலகிற்கு பரிசளிக்க, தன்னவன் அணைப்பின் கதகதப்பு காணாமல் உறக்கம் கலைந்து எழுந்தாள் நிஷா.
கண் விழித்ததும் இரவு தன்னோடு உறங்கியவனை தேடினாள், அவனைக் காணவில்லை, உடனே அவனைத் தேடிச் சென்றாள்,
இவளுக்கு முன்பாக எழுந்த ஆரி குளித்து முடித்து அவனின் அறையில் உடைமாற்றி தாயாராகிக் கொண்டிருந்தான். அவனிடம் வந்தாள்,
“குட்மார்னிங் ஆரி” என்று பின்னிருந்து கட்டிக் கொண்டாள்.
“குட்மார்னிங் நிஷா,” என்று பதிலுக்கு கூறி பின்னிருந்தவளை முன்னிழுத்து அணைத்தான், அவனின் நெஞ்சோடு ஒட்டிக் கொண்டாள்.
“என்னை தனியா விட்டுட்டு நீ மட்டும் எங்க கிளம்பிவிட்ட ஆரி?” என்று கேட்டாள்.
“நான் மட்டும் இல்ல, நீயும் ரெடியாகு. நாம வெளிய போறோம்,” என்றான்.
“அப்படியா? இரண்டு பேரும் வெளிய போறீங்களா? அப்போ நான் போய் ரெடியாயிட்டு வந்திடுறேன். வெயிட் பண்ணு ஆரி,” என்று உற்சாகமாக கூறியவள், பட்டாம்பூச்சியாக பறந்தோடிச் சென்றாள்.
ஆரியனும் நிஷாலினியும் இருவரும் ராஜதுரையைப் பார்க்க சிட்டி ஹாஸ்பிடலுக்கு வந்தார்கள். ராஜதுரை அவசர சிகிச்சைப் பிரிவின் வாசலில் இருந்தார், மொத்த குடும்பமும் கூடியிருந்தது.
ரஞ்சிதம் தலையில் கட்டுப் போட்டபடி அமர்ந்திருந்தாள். தாயின் தலையில் காயத்தைப் பார்த்ததும் நொந்து போனான் ஆரி.
அனைவரும் அவனைத் திரும்பிப் பார்த்தனர்; ஆரியுடன் நிஷா இருந்ததைக் கண்டதும் தான் அனைவருக்கும் நிம்மதி பிறந்தது.
நிஷாவை அனைவரும் நலம் விசாரித்தனர். அந்த கூட்டத்தை விட்டு விலகி டாக்டரைக் காணச் சென்றான் ஆரி. பூவிதழினியின் விழிகள் மட்டும் ஆரி சென்ற பாதையிலேயே இருந்தது.
“இங்க ரஞ்சிதம் யாரும்மா? அவங்கள பேஷண்ட் உள்ள கூப்பிடுறார். கொஞ்சம் வரீங்களா?” என்று நர்ஸ் சொல்ல,
செல்லதுரைக்கும் பாண்டிதுரைக்கும் அதிர்ச்சியாக இருந்தது, மற்றவர்களுக்கு ஆச்சர்யமாக இருந்தது, ரஞ்சிதம் தயங்கி நின்றாள்.
டாக்டரிடம் ராஜதுரையின் நலன்களை ஒரு டாக்டராக விசாரித்து விட்டு வந்த ஆரி, தயக்கத்துடன் கலங்கிக் கொண்டிருந்த தாயின் அருகில் வந்தான்.
“வீம்பும் வீராப்பும் செலுத்த இது நேரமில்லை, மூளைக்கு போற நரம்பில் ரத்த கசிவு இருக்கு, அவர் இப்ப சீரியஸ் கண்டிஷனில் இருக்கிறார்,
“ஆப்ரேஷன் பண்ணினாதான் காப்பாத்தவே முடியும். எந்த நேரத்துல வேணாலும் கோமாவுக்குப் போயிடுவார். அப்புறம் எந்த டாக்டர் வந்தாலும் எதுவும் பண்ண முடியாது” என்று ஆரி சொல்ல, மேலும் கலங்கினாள் ரஞ்சிதம்.
செல்லதுரைக்கு தன் மகனின் நிலை முழுதாக புரிந்தது.
“டேய் இவனே அதான் எம்பட மவன் கூப்புடுறானல்ல, போய் என்ன ஏதுன்னு கேக்கச் சொல்லு,” என்று கணீரென கூறியவர், நிமிர்ந்து பாராமல் அவ்விடத்தை விட்டு நகர்ந்தார்.
மாமனாரின் வார்த்தைகள் ரஞ்சிதத்திற்கு மகிழ்ச்சியைக் கொடுத்தது, கண்களை சேலைத் தலைப்பில் துடைத்து விட்டு கணவனைக் காண விரைந்தாள்.
தன் குடும்பம் கொஞ்சம் கொஞ்சமாக இணைவதைக் கண்டு நெகிழ்ந்தான் ஆரி, அவன் முகத்தில் படரும் சிறு புன்னகையைக் கண்டாள் பூவிதழினி.
ஆரியிடம் தோற்ற தீரணின் அடுத்த தாக்குதல் எவ்வாறு இருக்கும்?
பூவிதழியின் காதலுக்கு முடிவுதான் தான் என்ன?
தீரணின் சதியில் விஸ்வநாதனின் பங்கு என்ன?
தொடர்ந்து வாசிப்போம் வாங்க.
