”காலத்தின் சுழற்சியில் காயம் பட்டு நின்ற போது,
கரம் தந்து மீட்டது அந்த காதல்…!
விதி செய்த சதிகளை மதியால் வென்று,
இன்று நிதியாய் கிடைத்தது
உன் காதல்…!
வலியைக் கூட சுகமாய் சூடும் காதல்…!
வலியை சூடிய காதலே – 2
என்னங்க இது அதிர்ச்சியா இருக்கு? சிட்டி கமிஷனர்ல இருந்து மினிஸ்டர் வரைக்கும் எல்லாரும் வந்துட்டாங்க, ஆனா மெயின் ஆளான மாப்பிள்ளையைக் காணோம்னு சொல்றாங்க, பிசினஸ் டைக்கூன் வீட்டு கல்யாணத்துல இப்படி ஒரு சீன் நடக்கும்னு யாருமே எதிர்பார்க்கல,
அந்தப் பொண்ணு நிலைமைய நினைச்சா தான் கஷ்டமா இருக்கு, எல்லார் முன்னாடியும் இப்படி ஒரு அவமானம் நடந்திருக்க கூடாது,
லட்சக் கணக்குல செலவு பண்ணி என்ன பிரயோஜனம், ராயல் வெட்டிங்னு ஊரே பேசணுமாம், இப்போ ஊரே சிரிக்குது, பொண்ணு என்னவோ தேவதை மாதிரி தான் இருக்கா, ஆனா கட்டிக்கப் போறவனுக்கு இந்தக் கல்யாணத்துல இஷ்டம் இல்லை போல என்னத்தை சொல்ல,
பெரிய இடத்துச் சதி எல்லாம் நமக்கெதுக்கு, தேவையில்லாம பேசுறதை விட்டுட்டு, நடக்கிறதை மட்டும் வேடிக்கை பார்ப்போம்,
என்ன அந்தப் பொண்ணு தான் மேடைல தனியா நிக்கறதைப் பாக்க மனசுக்கு கொஞ்சம் கஷ்டமா இருக்கு,
இவ்வளவு பெரிய இடத்துல இப்படி ஒரு ஆக்வர்ட் சிச்சுவேஷனா, என்று ஆளாளுக்கு காதுக்கு வந்த சேதியை வாய்க்கு வந்தபடியே மென்று கொண்டிருந்தனர்,
“மாப்பிள்ளையைக் காணவில்லை” என்ற செய்தி காட்டுத்தீயாய் பரவ, முகூர்த்த மேடையில் அமர்ந்திருந்த நிஷாலினியின் நெஞ்சு படபடவென அடித்துக் கொண்டது, உடனே அவள் கண்கள் மட்டும் கூட்டத்தில் யாரையோ தேடியது,
அவளின் தேடலுக்கு சொந்தமானவனோ அவ்விடம் எங்கும் இல்லை, அவனை காணாமல் பேதைப் பெண்ணவளுக்கோ குழப்பத்தை ஏற்படுத்த, தகப்பனாரின் சொல்லும் செயலும் வேறு தனி அச்சத்தை உண்டு பண்ணியது,
அவளின் பார்வையில் மறைந்து அங்கே தூணின் பின்னால் நிழலாய் நின்றிருந்த ஆரியனின் முகத்தில் இப்போது அந்தப் பழைய அமைதி இல்லை, மாறாக ஒருவிதமான வெற்றிப் புன்னகை அவன் இதழ்களில் விளையாடியது,
மாப்பிள்ளையைக் காணவில்லை என்ற செய்தி விஸ்வநாதனின் காதுகளுக்குச் சென்ற அந்த நொடி மண்டபத்தின் ஆரவாரம் அப்படியே உறைந்து போனது,
அவர் கையில் இருந்த பழச்சாறு நிறைந்த கோப்பை தரையில் விழுந்து சிதறிய சத்தம், ஒரு வெடிகுண்டு வெடித்ததைப் போல அவ்விடத்தின் சூழலை கிழித்தது,
வீரராகவனின் புறம் மெல்லத் திரும்பிய விஸ்வநாதனின் கண்கள் சிவந்து ரத்தக் காடாக மாறியிருந்தது, அவர் வீரராகவனைப் பார்த்த அந்தப் பார்வை, “என் கௌரவத்தைச் சிதைச்சிட்டியேடா” என்று கேட்பது போல் இருந்தது,
வீரராகவனின் தலை மெல்லக் குனிந்து, சிதறிக் கிடந்த கண்ணாடித் துண்டுகளை மிதித்தபடி முன்னேறினார், அவர் காலணிகள் எழுப்பிய அந்த நறநறவென்ற சத்தம், அங்கே நின்றிருந்தவர்களின் இதயத் துடிப்பை எகிற வைத்தது,
”விஸ்வநாதன் நிச்சயித்த கல்யாணம் இது, இங்கே மணமேடை ஏற வேண்டிய மாப்பிள்ள செத்து சுடுகாட்டுக்குப் போயிருக்கலாமே, தவிர என் அனுமதியில்லாம இந்த மண்டபத்தை விட்டு வெளியே போயிருக்க கூடாது” என்று அவர் கர்ஜித்தபோது, அங்கிருந்த ஏசி காற்றும் ஒரு நிமிடம் ஸ்தம்பித்தது, அந்த மண்டபமே ஒரு கணம் உறைந்தும் போனது.
”என்ன வீரராகவா விளையாடுறியா? முகூர்த்த நேரத்துல பையனைக் காணோம்னு சொன்னா, விஸ்வநாதன் யாருன்னு உனக்குத் தெரியாமப் போச்சா, இல்ல என்னை மீறிப் போனா என்ன ஆகும்ன்னு மறந்து போச்சா” விஸ்வநாதனின் குரல் இடி என முழங்கியது, அவர் கண்கள் சிவந்து, கழுத்து நரம்புகள் புடைத்தன,
”இல்ல விஸ்வா, அவன் எங்கேயும் போயிருக்க மாட்டான், இதோ வந்துடுவான்” என வீரராகவன் திக்கித் திணற,
”இன்னும் பத்து நிமிஷம், பத்தே நிமிஷம் என் பொண்ணு கழுத்துல தாலி ஏறல, அப்புறம் உன் பையன் உயிரோட இருப்பானான்னு எனக்கே தெரியாது” என்று விஸ்வநாதன் கத்திய சத்தம் வீரராகவனுக்கு மட்டுமல்ல அங்கிருந்த அனைவருக்குமே அதிர்ச்சியையும் நடுக்கத்தையும் கொடுத்தது,
நேரம் கடந்ததே தவிர மாப்பிள்ளையான தீரண் மட்டும் வரவே இல்லை, வீரராகவனின் ஆட்கள், விஸ்வநாதனோட ஆள்கள் என இரு பிரிவினரும் தேடலில் தொடங்கி ஏமாற்றத்தோடு தலையை தொங்கப் போட்டபடியே திரும்பி வந்தனர்,
அங்கே விஸ்வநாதன் தன் கௌரவம் பறிபோன ஆத்திரத்தில் அருகில் இருந்த தட்டைத் தூக்கி எறிந்து கொண்டிருந்தார்,
“இந்த கல்யாணம் நின்னு போச்சு, தி க்ரேட் பிஸினஸ் மேக்னெட் விஸ்வநாதனோட ஒரே பொண்ணு நிஷாலினியோட கல்யாணம் நின்னு போச்சு” என்று உரக்கக் கத்தினார் விஸ்வநாதன்,
“டேய் வீராராகவா, திட்டம் போட்டு என்னை பழிவாங்கிட்டே இல்ல, இனிமே தான்டா நான் யாருன்னு நீ பார்ப்ப, இன்னைக்கி இந்த மண்டபத்தை விட்டு உன் பையன் ஓடிப் போயிருக்கலாம், ஆனா என்கிட்ட இருந்து அவன் தப்பவே முடியாதுடா,
என் பொண்ணை உன் பையனுக்கு கட்டி வச்சு உன் வீட்டுக்கு மருமகளா அனுப்பலாம்ன்னு நினைச்சேன், இனி உன் பையனை கொன்னு அவனோட உடம்பை எந்த சேதாரமும் இல்லாம அனுப்பி வைக்கிற,
சத்தமே இல்லாம அடக்கம் பண்ணிட்டு தவசத்தையும் குடுத்திரு” என்ற ஆவேசமாக கூறியவர் திரும்பி தன் மகளைப் பார்த்தார், அவளோ கண்கள் கசிய தலைகுனிந்து அமர்ந்திருந்தாள்,
திருமணம் நின்றதால் சிறு நிம்மதி தான் என்றாலும், தகப்பனாரின் அடுத்த அடி என்னவாக இருக்குமோ என்ற பயம் நெஞ்சைக் கவ்விக் கொண்டிருக்க நடுக்கத்தில் கண்களில் ஆறாய் கண்ணீர் பெருக்கிடுத்து ஓடிக் கொண்டிருந்தது,
“ஹேய் இப்ப என்ன நடந்திருச்சுன்னு இப்படி அழுதுட்டு உட்காந்திருக்க, அதான் உன் அப்பன் இன்னும் கல்லுமாதிரி நிற்கிறேனே அப்புறம் என்ன, ஊர்ல உலகத்துல இவன் தான் மாப்பிள்ளையா,
இவனை விட்டா வேற மாப்பிள்ளையா இல்ல, என் கௌரவத்துக்கு ஏத்தவனா பார்த்து யாருன்னு கண்டுபிடிச்சி அடுத்த முகூர்த்ததுலயே கட்டி வைக்கிறேன், இப்ப எழுந்திருச்சு வா போகலாம்” என்று
மணமேடையில் அமர்ந்திருந்த நிஷாலினியைப் பார்த்து அதிகாரத் தோரணையில் அழைத்தார் விஸ்வநாதன், அப்போது வீரராகவன் விஸ்வநாதனின் அருகில் வந்தார்,
“முதல்ல நடந்ததுக்கு மன்னிப்பு கேட்டுக்கறேன் சம்பந்தி, நான் பெத்த பையனே என் கழுத்த அறுப்பான்னு சத்தியமா நான் நினைக்கல, இந்த கல்யாணம் நின்னா அது உங்க கௌரவத்துக்கு பெரிய கலங்கம் ஆகிடும்,
அந்த மாதிரி நடக்க ஒருநாளும் விடமாட்டேன் சம்பந்தி, என் பெரிய பையன் இல்லன்னா என்ன, என்னோட இளைய பையன் கௌரவ் இருக்கானே, அவனுக்கும் உங்க பொண்ணுக்கும் இதே மேடையில கல்யாணம் பண்ணிடலாம்,
உங்களுக்கு ஓகேன்னா ம்ம் ன்னு ஒரு வார்த்தை சொல்லுங்க, உடனே எம்பையனை தாலிய கட்ட சொல்றேன், நீங்க சொன்னயே மாதிரி இவனை வீட்டோட மாப்பிள்ளையா வச்சுக்கோங்க” என்று வீரராகவன் சொல்ல
விஸ்வநாதன் வீரராகவன் பேச்சைக் கேட்டு யோசித்தார், அவர் யோசனையை தூண்டும் விதமாக வீரராகவன் பேசிக் கொண்டிருக்கும் போது அங்கு வந்து சேர்ந்தான் ஆரியன்,
”போதும் நிறுத்துங்க,” என்று கேட்ட ஆரியனின் குரல் ஒட்டுமொத்த மண்டபத்தைம் திரும்பிப் பார்க்க வைத்தது,
“ஒரு கம்பெனி சரியில்லன்னா இன்னொரு கம்பெனிய மாத்துறதுக்கு இது என்ன பிஸினஸ் டீலா” என்று ஆரியன் கேட்க விஸ்வநாதன் ஆத்திரத்தோடு பார்த்தார், பட்டு வேஷ்டி சட்டையில் மாப்பிள்ளைக்கே உரிய தோரணையோடு வந்தான் ஆரியன்,
“நீ யாருடா இதைச் சொல்ல, எங்கிருந்தோ வந்த அநாதை நாயி, என்கிட்டயே எதிர்த்து பேசுறியா” என்றே விஸ்வநாதன் கத்த அதை எல்லாம் பொருட்டாக மதிக்காமல் நிதானமாக மேடை ஏறினான்,
“நீங்க சொல்ற மாதிரி நான் அநாதையா இருக்கலாம், அதுக்கும் காரணம் நீங்க தான், அதை சரி செய்ய இப்ப உங்க பொண்ணோட கழுத்துல நான் தாலியை கட்டி உங்க பொண்ண எனக்கு பொண்டாட்டி ஆக்கிட்டா, அப்புறம் நீங்க எனக்கு மாமனார்,
விஸ்வநாத சக்ரவர்த்தியோட ஒரே மருமகன்” என்று கூறிக் கொண்டே அவன் சட்டைப் பையில் மறைத்து வைத்திருந்த தாலியை எடுத்தான்,
“ஏய் என்னடா ஏதேதோ உளறிட்டு இருக்க, என்னை மீறி என் பொண்ணு கழுத்துல தாலி கட்டிருவியா” என்று விஸ்வநாதன் சொல்லிக் கொண்டிருக்கும் போதே ஆரியன் கையில் இருந்த தாலியை நிஷாலினியின் கழுத்தில் கட்டிக் கொண்டிருந்தான்,
”என் சரிபாதியாக என்னுள் கலந்த உன்னுடைய மகிழ்ச்சிக்கும் சந்தோஷத்திற்கும் நானே பொறுப்பு அதுக்கு முதல் முடிச்சு,
நாம இருவரும் சேர்ந்து நம்ம இல்லறத்தை நல்லறமாக்கி நல்லபடியா வாழ இரண்டாவது முடிச்சு,
அடுத்து மூணாவது முடிச்சு இதுதான் ரொம்ப ரொம்ப முக்கியமான முடிச்சு அது என்னன்னா இந்த உலகமே நமக்கெதிரா நின்னாலும், அதிலும் குறிப்பா உன் அப்பா தி கிரேட் பிஸினஸ் மேக்னெட் விஸ்வநாத சக்ரவர்த்தி,
அவரே நம்மள பிரிக்க நினைச்சாலும் ஒன்னு பு..ங்க முடியாதுன்னு அதுக்காக நான் போடுற மூணாவது முடிச்சு, ஹப்பாடா இப்ப தான் வேலையே முடிஞ்சுது” என்று கூறி தாலியை கட்டி விட்டு நிமிர்ந்து நின்று நெட்டி முறித்தான் ஆரியன்,
நிஷாலினிக்கு ஒன்றுமே புரியவில்லை அவளால் சற்றும் நம்ப முடியாமல் தன் கழுத்தில் ஏறிய புதுத்தாலியை பிரம்மை பிடித்தாற் போல் பார்த்துக் கொண்டிருந்தாள்,
விஸ்வநாதனே விக்கித்துப் போய் பார்த்தார், அவருடைய மூளையே வேலை நிறுத்தம் செய்தது போல் இருந்தது, தனக்கு எதிராக நிமிர்ந்து முகம் பார்த்து பேசவே நடுங்கும் கூட்டத்திற்கு மத்தியில் தனக்கெதிராக தன் கௌரவமென இருந்த ஒரே மகளின் கழுத்தில் தாலியே கட்டி விட்டானே என்பது கூட அவரின் எண்ணமில்லை,
அவரின் பெயரை அவன் சக்கரவர்த்தி என்று அழைத்ததே அவரின் திகைப்பிற்கு காரணம், தன்னுடைய முழுப் பெயரையும் தெரிந்து வைத்திருக்கிறான் என்றால் இவன் நிச்சயம் அந்தக் குடும்பத்தைச் சேர்ந்தவனாக தான் இருக்க வேண்டும், என்று சிந்தனையில் இருந்தவரின் முகத்திற்கு நேராக மிக அருகில் முகம் பார்த்து நின்றான் ஆரியன்,
“என்ன மாமா இந்நேரத்துக்கு நான் யாருன்னு உனக்கு தெரிஞ்சிருக்கனுமே, இன்னுமா தெரியல” என்றே நக்கலாக கேட்டான் ஆரியன்,
“டேய் உனக்கு எவ்ளோ தைரியம் இருந்தா, என் வீட்டுக்குள்ளேயே வந்து கூடவே இருந்து என்னையே பழிவாங்கி இருப்பே, இங்க இருந்து உன்னை உயிரோட போக விடமாட்டேன்டா” என்று கத்தியவாறு அவன் சட்டையை எட்டிப் பிடித்தார் விஸ்வநாதன்,
“ச்சீ கைய எடு நீ என்னை தொட்டு பேசவே தகுதி இல்லாத ஆளு, நீயெல்லாம் ஒரு பெரிய மனுஷனா, கௌரவப்பேய் உன்னை மாதிரி ஒரு கேவலமான பிறவிய நான் பார்த்தே இல்ல,
உன் பொண்ணை வச்சு தானே இவ்வளவு வருஷமா என் குடும்பத்தை ஆட்டிப் படைச்ச, இப்ப அதே பொண்ண வச்சு இனி என்னோட ஆட்டத்தைப் பாரு மாமா” என்று கூறி விஸ்வநாதனின் கையை தட்டிவிட்டான் ஆரியன்,
அதைக் கண்டதும் விஸ்வநாதனின் பாதுகாப்பிற்காக இருந்த ஆட்கள் ஆரியனை அடிக்க ஆயுதங்களுடன் ஓடிவர, வந்த ஒவ்வொரு ஆட்களையும் ஒற்றைக் கையால் பந்தாடி துவம்சம் செய்தான் ஆரியன்,
உரமேறிய உறுதியான உடற்கட்டை அசைத்துக் கூட பார்க்க முடியாமல் வந்த அடியாட்கள் எல்லாம் அடிபட்டே சுருண்டு வீழ்ந்தனர், ஆயுதம் ஏதும் இல்லாமல் முறுக்கேறிய வெறும் கையால் அடித்ததற்கே பலர் எழ முடியாமல் கீழே விழுந்து கதறிக் கொண்டிருக்க, வாங்கிய அடியில் ரத்த காயங்களுடன் சிலர் விட்டால் போதுமென மண்டபத்தை விட்டே தெறித்து ஓடினர்,
நிகழ்ந்ததையெல்லாம் ஏதோ திரையில் ஓடும் ஆக்ஷன் சினிமா பார்ப்பது போல், சுற்றிலும் நின்றிருந்தவர்கள் வாயடைத்து நின்றனர். என்ன நடக்கிறது என்று உணராத நிஷாலினி, சிலையென சமைந்திருந்தாள்,
அவளின் அருகே வந்தவன் சட்டென தளிர்கரத்தை இறுகப் பற்றி இழுத்துச் சென்றான், அந்த பிடியில் இருந்த வீரியத்தின் அளவு அவளுக்கு வலியை கொடுக்க அவனிடம் சிக்குண்ட கரத்தை விடுவிக்க முடியாமல் திணறியவாறு அவனுடன் சென்றாள், அந்த பூம்பாவை நிஷாலினி,
தன் கண் முன் இத்தனை ஆண்டுகள் கட்டிக் காத்த கௌரவம் எதிராளியின் வசம் சென்றதை நம்பவும் முடியாமல், ஏற்கவும் முடியாமல் நெஞ்சைப் பற்றிக் கொண்டு தரையில் சரிந்தார் விஸ்வநாத சக்கரவர்த்தி,
இவ்வளவு அட்டகாசம் செய்யும் இவன் யாராக இருக்கும்?
எது எப்படியோ ஆரியன் – நிஷாலினி ஆகிய இருவருக்கும் திருமணம் முடிந்தது, இருவருக்கும் ஒரு வாழ்த்துகள் சொல்லாமே…!
இதோ எனது வாழ்த்து மடல்:
“இணைந்தே துடிக்கட்டும் உங்கள் இதயங்கள்,
இறுதி வரை நிலைக்கட்டும் இந்த சொந்தங்கள்!
மரணத்தின் வாசலிலும் உங்கள் சந்தங்கள்
ஒன்றாகவே முடியட்டும் என்றே
என் வாழ்த்துகள்”
தொடர்ந்து வாசிப்போம் வாங்க
