பேசாத வார்த்தைகள் மௌனத்தில் உறைந்து…!
பிடிவாதப் பிரிவுகள் கண்ணீரில் கரைந்து…!
உடல் கலந்த உயிர் காதலாக இணைத்தது…!
வலியை சூடிய காதலே – 20
அவசர சிகிச்சை அறையின் கதவைத் தள்ளிக் கொண்டு உள்ளே நுழைந்த ரஞ்சிதத்தின் கால்கள் தள்ளாடியது, இத்தனை வருடங்களாக எந்த மனிதனைப் பார்க்கக்கூடாது என்று வைராக்கியம் கொண்டாளோ,
அதே மனிதன் இன்று இயந்திரங்களின் துணையோடு மூச்சு விட்டுக் கொண்டிருப்பதைப் பார்த்ததும் அவள் இதயம் சுருங்கியது,
அவள் அருகில் சென்றதும், ராஜதுரை மெல்லக் கண்களைத் திறந்தார். ஆக்சிஜன் முகமூடியின் வழியாகத் தெரிந்த அவரது கண்கள் ரஞ்சிதத்தைப் பார்த்ததும் கலங்கியது, நடுங்கும் கையை நீட்டி அவளது கைவிரல்களைப் பற்ற முயன்றார்,
ரஞ்சிதம் ஒரு நொடி கூட யோசிக்காமல் பட்டென்று அவர் கையைப் பற்றிக் கொண்டாள், அவள் கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது,
ராஜதுரை மெல்ல முகமூடியை நீக்க முயல, ரஞ்சிதம் தடுத்தாள், ஆனால் அவர் விடாப்பிடியாக அதைச் சற்று விலக்கி,
“ம… மன்னிச்சிடு ரஞ்சிதம்… உன் வாழ்க்கைய நானே கெடுத்துப்புட்டேன், யார் மேலயோ இருந்த ரோஷத்துல உன்னை புரிஞ்சுக்காம எனக்கென்னன்னு போயிட்டே” என்று தழுதழுத்தார்,
”இப்ப அதைப் பேசி என்னய்யா ஆகப்போவுது, சித்த பேசாம இருங்க” என்றாள் ரஞ்சிதம், கண்களில் வழிந்த நீரைத் துடைத்தபடி,
”இல்ல ரஞ்சி… ஒருசமயம் நா பொழைக்காம போய் சேந்துட்டா குத்தம் பண்ணிட்டனோன்னு என் மனசு நோவுமில்ல” என்று அவர் கேட்க, ரஞ்சிதம் அவர் வாயை கைகளால் மூடினாள்,
”என்ன வார்த்த சொல்லிட்டீக, உங்களுக்கு ஆயுசு கெட்டின்னு எனக்கு தெரியும், இன்னொரு தரம் என் மனசு நோவுற மாறி பேசாதீக, என்னால தாங்க முடியாது” என்றவள் கன்னத்தை கையால் ஏந்திக் கொண்டார் ராஜதுரை,
“இங்க பாரு புள்ள, இந்த மாமன் மேல இம்புட்டு ஆசை வச்சுட்டு, என்னத்துக்கு ஆளைக் கண்டாலே முறைச்சுட்டு போனவ” என்று ரஞ்சிதத்தைப் பார்த்து ராஜதுரை கிண்டலாக கேட்க,
“ம்ம்க்கும் அங்க மட்டும் என்னவாம், என்னையப் பாத்தாலே வண்டிய முறுக்கிட்டு போவீங்களே, போறவு நான் மட்டும் இவகள பாத்து ஈன்னு பல்லைக் காட்டனுமோ” என்றாள் ரஞ்சிதம்,
“அதுசரி, இம்புட்டு ரோஷம் இருக்கிறவ, எனக்கு அடிபட்டதும் ஓடியாந்து அழுதியே அப்ப மட்டும் இந்த ரோஷம் எங்கன போச்சு” என்று கேட்டார்,
“என்ன தான் அடிச்சாலும் புடிச்சாலும் என் கண்ணு முன்னாடி நீங்க அடிபட்டுக் கெடந்தா வேடிக்க பாத்துட்டு நிக்க என் மனசொன்னும் கல்லில்ல, இனியொரு தரம் உங்கள அப்பிடி பாக்க உன் மனசுலயும் உடம்புலயும் தெம்பில்ல மச்சா” என்று கூறி அவர் மார்பில் சாய்ந்து தேம்பினாள்,
தன் நெஞ்சில் தன்னவளின் கண்ணீரை ஏற்ற ராஜதுரையின் கண்களும் கசிந்து நீரை உதிர்ந்தது,
பல வருடப் பிரிவின் வலி, அவர்களின் அணைப்பில் கரைந்து போனது, காதலுக்கு மரணத்தை விடவும் வலிமை அதிகம் என்பதை அவர்களின் கண்ணீர் மௌனமாகச் சாட்சி சொன்னது,
ஐ.சி.யு அறையின் கண்ணாடி ஜன்னல் வழியாக உள்ளே நடப்பதைப் பார்த்துக் கொண்டிருந்த ஆரியனின் கண்கள் பனித்தது,
தன் தந்தை ராஜதுரை, ஒரு கற்சிலை போல இத்தனை ஆண்டுகள் காட்டிய வைராக்கியம், இன்று தன் தாயின் ஒற்றைக் கண்ணீரில் கரைந்து போவதைக் கண்டான்,
ஆரியனுக்குள் பல உணர்வுகள் மோதின, சிறு வயதில் தந்தையும் தாயும் வெறுத்த ஒதுங்கிப் பிரிந்த போது ஏற்பட்ட வலி ஒருபுறம்,
தன்னை இருவரும் தனிமையில் தவிக்க விட்டனரே என்ற வலி மறுபுறம், ஆனால், இப்போது அவர்கள் ஒருவரையொருவர் அன்பால் இணைந்து பற்றிக் கொண்டிருப்பதைப் பார்த்த போது, அதைவிட வேறெதுவும் பெரிதாக தோன்றவில்லை,
ஆயிரம் எண்ண அலைகளில் மூழ்கி நனைந்து கொண்டிருந்த அவன் தோளில் ஒரு மென்மையான கரம் படிந்தது, திரும்பினான், நிஷா நின்றிருந்தாள், அவள் கண்களில் ஒரு மெல்லிய புன்னகை,
”ஆரி என்னாச்சு, ஏன் கண் கலங்குற” என்று நிஷா மெல்லக் கேட்க, ஆரியன் ஒரு நீண்ட பெருமூச்சை விட்டுச் சொன்னான்,
“நான் என்ன செஞ்சா உடைஞ்ச குடும்பத்தை ஒட்ட வைக்க முடியும்ன்னு பல வழியில முயற்சி பண்ணி இருக்கேன், எல்லா முயற்சியும் தோல்வியில தான் முடிஞ்சிருக்கு, முதல் முறையா ஒரு கெட்டதுல நல்லது நடந்த மாதிரி,
இப்ப அவங்க இரண்டு பேரும் ஒன்னா இருக்கிறதைப் பார்க்கும் போது என்னையும் அறியாம கண்ணு கலங்குது நிஷா, இதுக்கெல்லாம் நீதான் காரணம், நீ மட்டும் இங்க வரலைன்னா, இதெல்லாம் சாத்தியமே இல்ல” என்று கலங்கினான் ஆரி
நிஷா அவனை இன்னும் நெருங்கி அணைத்துக் கொண்டாள், அவளின் அந்த அணைப்பு அவனுக்கு தேவைப்பட்ட ஒன்றாக இருக்க அவளுள் அடக்கினான் ஆரி,
ஆரியன் கண்ணாடி வழியாகத் தன் தந்தையைப் பார்த்தான், ராஜதுரையின் கண்கள் யாரையோ தேடுவதைப் போல அலைபாய்ந்தன, ஆரிக்கு தன்னைத் தான் தேடுகிறாரோ என்ற எண்ணமும் கூடவே ஒரு தயக்கமும் தடுக்க அங்கேயே நின்றான்,
“என்ன மச்சா, சின்னப்பிள்ளையாட்டம் வாசல்ல நின்னு பாக்குற, உள்ளாற போய் பாத்து ஆறுதலா ரெண்டு வார்த்தை பேசு மச்சா, அப்ப தான் அவகளுக்கு தெம்பா இருக்கும்” என்றாள் பூவிதழினி,
“இல்ல இதழு, நான் போனா எப்படி ரியாக்ட் பண்ணுவாருன்னு தெரியல, அதான் யோசனையா இருக்கு, அவர் இப்ப இருக்கிற கண்டிஷன்ல டென்சன் ஆகக்கூடாது,
அப்படி ஆனா ப்ளட் பிரசர் அதிகமாகி சர்ஜரி பண்ண முடியாம போயிடும், அதனால தான் இங்க இருந்தே பார்த்துட்டு இருக்கேன்” என்றான் ஆரி,
“டாக்டரா உன் யோசனை சரிதான்னாலும், உள்ளாற படுத்திருக்கிறவகளுக்கு மவனா கொஞ்ச யோசி மச்சா, நீ பாக்க கூட வருலையேன்னு அவக மனசு நோகுமில்ல, போ மச்சா எதுவா இருந்தாலும் பொறவு பாத்துக்களாம்” என்று தைரியம் சொல்லி அனுப்பி வைத்தாள் பூவிதழினி,
அவளின் வார்த்தைகள் அவனை உந்தித்தள்ள, தந்தையைக் காண உள்ளே வந்தான் ஆரி, மகனைக் கண்டதும் ரஞ்சிதம் விலகி மகனுக்கு வழிவிட, ராஜதுரை தன் மகனை ஒரு குற்ற உணர்வோடு ஏறிட்டுப் பார்த்தார்,
அவர் அருகில் சென்ற அவரது நடுங்கும் மற்றொரு கையைத் தன் இரு கைகளாலும் இறுகப் பற்றிக் கொண்டான், அந்தப் பற்றுதலில் ‘மன்னிப்பு’ என்ற வார்த்தை இல்லையென்றாலும்,
‘நானும் உங்களை ஏற்றுக்கொண்டேன்’ என்ற அங்கீகாரம் இருந்தது,
ராஜதுரையின் இதழ்கள் நடுங்கின,
“எய்யா என் சாமி துரை” என்று அவர் அழைத்த போது, ஆரியன் அவர் கையை எடுத்து தன் கண்ணில் ஒற்றிக் கொண்டான்,
“ஐய்யா துரை இந்த அய்யன் என்ன குத்தம் பண்ணிருந்தாலும் மனசுல வச்சுக்காம, நான் செத்தா நீதாம்ப்பா மவனா நின்னு என் காரியத்த எடுத்து நடத்தி குடம் உடைச்சு கொல்லி போடனும்” என்று கலங்கினார் ராஜதுரை
ராஜதுரையின் வார்த்தைகள் ஆரியனின் நெஞ்சில் ஈட்டியாய் குத்திக் கிழித்தது, அவனின் பிடி அவர் கைகளில் இன்னும் இறுகி கண்கள் சிவந்து, ஆவேசமும் அழுகையும் கலந்தே வந்தது,
”இன்னொரு தரம் இந்த வார்த்தையைச் சொன்னீங்கன்னா, நான் இங்கிருந்து வெளிய போய்டுவேன்” என்றான் ஆரியன்,
இத்தனை காலம் தான் கட்டிக் காத்த வீம்பும் கௌரவமும், தன் மகனின் பாசத்திற்கு முன்னால் எவ்வளவு அற்பமானது என்பதை அவர் உணர்ந்த தருணம் அது, ரஞ்சிதம் ஒருபுறம் விம்மி அழுது கொண்டிருக்க, ஆரியன் மெல்ல அவர் நெற்றியில் கை வைத்தான்,
”உங்களுக்கு ஒன்னும் ஆகாது, இதோ உங்க பக்கத்துல அம்மா இருக்காங்க, வெளிய உங்களுக்காக தான் எல்லாரும் காத்துக்கிட்டு இருக்காங்க, நீங்க சீக்கிரம் குணமாகி வீட்டுக்கு வரணும்,
மீசையை முறுக்கி விட்டுடு உங்க புல்லட்டுல நீங்க கம்பீரமா போகிறதை பார்க்கணும்னு எனக்கு ஆசையா இருக்கு” என்று ஆரி சொல்ல,
ராஜதுரையின் கண்களிலிருந்து கண்ணீர் பெருகி காதோரம் வழிந்தது,
அவர் மெல்ல ரஞ்சிதத்தின் பக்கம் திரும்பி,
“பாத்தியா ரஞ்சி நம்ம மவன் எப்படி பேசுறான்னு, படிச்ச திமிருல தான் பெத்தவனை மதிக்காம திரியுறான்னு நினைச்சே, ஆனா பாரு நான் வண்டி ஓட்டுனதைக் கூட எம்புட்டு கவனிச்சிருக்கான்னு” என்று தழுதழுத்தார் ராஜதுரை,
கணவனின் வார்த்தைகளைக் கேட்ட ரஞ்சிதம், தன் புடவைத் தலைப்பால் கண்களைத் துடைத்துக் கொண்டே,
“பெரியவக பெத்த மனசு பித்துன்னு சொல்வாக, ஆனா நாம என்னடான்னா வைராக்கியத்தை மனசுல வச்சுக்கிட்டு புள்ளையையும் பிரிஞ்சு, இத்தன காலமும் கல்லா இருந்து,,
புள்ளைய தவிக்க விட்டுப் புட்டோம், இனி அந்த தப்பை ஒருக்காலும் செய்யக் கூடாது, இனிமே அவன் காலுக்கு செருப்பா வாழ்ந்து செத்தா தான் என் கட்டையே வேகும்” என்றாள் மெல்லிய கேலியும் அழுகையும் கலந்த குரலில்,
ராஜதுரை ஆரியனின் கையை விடாமல் அப்படியே பற்றிக்கொண்டு,
“நிஜந்தான் ரஞ்சி, நம்ம மவனுக்கு செருப்பா இருக்க கூட எனக்கு தகுதி இல்ல” என்றார் குற்ல உணர்ச்சியுடன்,
ஆரியன் மெல்ல அவர் கையைத் தட்டிக் கொடுத்து,
“இப்ப எதுக்குப்பா இரண்டும் தேவையில்லாம பேசிட்டு, நீங்க முதல்ல குணமாய் வெளிய வந்து, நீங்களும் அம்மாவும் ஒன்னா என் கூடவே இருங்க எனக்கு அதுபோதும்” என்ற ஆரி தன் அழுகையை தனக்குள் மறைத்தான்,
ராஜதுரை லேசாகச் சிரித்தார், அந்தச் சிரிப்பில் வலி இருந்தாலும், ஆத்மார்த்தமான நிம்மதி தெரிந்தது,
“நீயே தொறத்தினாலும் நானும் உன் ஆத்தாளும் சாகுற வரைக்கும் உன்னைய விட்டு போவமாட்டோம்” என்று ராஜதுரை சொல்லும் போது
ரஞ்சிதம் குறுக்கிட்டாள்,
“என் மருமவளை கொஞ்சம் கூட்டிட்டு வாய்யா, அவ வந்த நேரந்தான், திக்காலுக்கு ஒன்ன கிடந்த நம இப்ப குடும்பமா சேந்திருக்கோம்” என்று சொல்ல,
கதவுக்கு வெளியே சுவற்றோடு சுவராக ஒட்டிக் கிடந்தவள அழைத்தான் ஆரி, நிஷா உள்ளே நுழையத் தயங்க, ஆரியன் அவளைக் கையைப் பிடித்து அழைத்து வந்தான்,
“அம்மாடி என் ராசாத்தி உனக்கு ஒன்னும் இல்லையே, நல்லா இருக்கே இல்ல, என் மருமவ பாக்க அப்படியே என் தங்கச்சி மாதிரியே இருக்கா இல்ல ரஞ்சி” என்று ராஜதுரை கேட்க, அவரை பயத்துடன் பார்த்தாள் நிஷா,
“பயப்படாத்தா அவரு உனக்கு மாமா தான், உன் அம்மா பரிமளத்தோட அண்ணன்” என்று ரஞ்சிதம் சொல்ல,
“என்னது என் அம்மா பேரு பரிமளமா, அவங்க இப்ப எங்க இருக்காங்க ஆரி, நான் அவங்கள இதுவரைக்கும் பார்த்ததே இல்ல, எனக்கு அவங்கள பாக்கனும் போல இருக்கு கூட்டிட்டு போறியா” என்று கேட்டாள் நிஷாலினி,
அவளின் கேள்வி அங்கிருந்த அனைவரையும் ஆச்சர்யத்திலும் அதிர்ச்சியிலும் ஆழ்த்தியது,
“ஹேய் விளையாடாத நிஷா, உன் அம்மாவை நீ பார்த்ததே இல்லையா” என்று ஆரியே திகைப்போடு கேட்க, இல்லை என்பது போல் தலையசைத்தாள் நிஷா, அவளை வேதனையோடு பார்த்தனர்,
விஸ்வநாதன் நிஷாவிற்கு தன் தாயைப் பற்றி கூட கூறாமல் வளர்ந்தது ஏன்?
நிஷாவின் தாய் பரிமளம் எங்கே?
தொடர்ந்து வாசிப்போம் வாங்க
