நம் வாழ்க்கை எனும் நாவலின் எழுதி முடிக்கப்படாத பக்கங்களில் தான், இன்னும் அதிகமாய் வாழ்கிறது நம் காதல்…!
வலியை சூடிய காதலே – 24
“அப்புறம் ஆரி, உங்கள பத்தி நீங்க எதுவும் சொல்லலையே, உங்க ஊரு, அம்மா அப்பா பத்தி சொன்னா நாங்களும் தெரிஞ்சுப்போம்” என்றார் வீரராகவன்,
“ஆமாம் நான் கூட கேட்கனும்னு நினைச்சேன், சொல்லுப்பா உங்கப்பா என்ன பிஸ்னஸ் பண்றார்” என்று விஸ்வநாதன் கேட்க,
அவர் குரலைக் கேட்டாலே எரிச்சலானான் ஆரி, இருந்தும் அதை வெளிக்காட்டாமல், தனக்குள்ளேயே மறைத்துக் கொண்டு,
“எனக்கு அம்மா அப்பா சொந்தம்ன்னு யாருமே இல்லங்க, நான் வளர்ந்தது படிச்சது எல்லாமே ஒரு ஹோம்ல தான், இப்ப ஒரு வீடு ரெண்டுக்கு எடுத்து தனியா தான் தங்கி இருக்கேன், மத்தபடி எனக்கு யாரும் இல்ல, என்னை பத்தி சொல்ல ஒன்னும் இல்ல” என்று தன் அடையாளத்தை மறைத்தான் ஆரி,
“என்ன தம்பி இப்படி சொல்லிட்டீங்க, அதான் நாங்க இருக்கோமே, உங்கள பார்த்ததும் எனக்கு ரொம்ப பிடிச்சுப் போச்சு, அதுவும் இல்லாம என் சம்பந்தி உயிரையே காப்பாத்தி இருக்கீங்க,
இதை விட வேற என்ன வேணும், நீங்களும் எங்க வீட்ல ஒரு ஆள் மாதிரி தான், நம்ம தீரணுக்கும் நிஷாவுக்கு இன்னும் இரண்டு நாள்ல கல்யாணம், நீங்க இருந்து கல்யாணத்துல கலந்துக்கனும்” என்றார் வீரராகவன்,
ஆரிக்கு தூக்கிவாரிப் போட்டது, இன்னும் இரண்டு நாள்ல கல்யாணமா? என்ற அதிர்ச்சியில் உறைந்து போனான்,
“அட நீங்க என்ன ராகவன், வீட்ல ஒரு ஆளுன்னு சொல்லிட்டு, கல்யாணத்துல கலந்துக்கனும்னு மூணாவது மனுஷன் மாதிரி பிரிச்சு பேசுறீங்க,
இங்க பாருப்பா ஆரி நிஷா கல்யாணம் முடிஞ்சு மறுநாள் நாங்க அப்ராட் போற வரைக்கும் எங்கூட இருந்து எல்லாமே நீ தான் பார்த்துக்கனும் ஆரி இது என்னோட ஆடர்” என்றார் விஸ்வநாதன்
அதற்கு சிரித்தவாறு தலையாட்டினான் ஆரி, அவனால் எதுவும் பேச முடியவில்லை, இத்தனை வருடம் கழித்து சிக்கியவன் இன்னும் மூன்று நாளில் இங்கிருந்து தப்பித்து விட்டால்,
மீண்டும் இவனை பிடிப்பதென்பது குதிரைக் கொம்பாகி விடும் என்ன செய்வது, என்று யோசனையில் ஆழ்ந்தான் ஆரி,
“என்ன தம்பி நாங்க தான் பேசிட்டு இருக்கோம், உங்க வாய்ல இருந்து ஒரு வார்த்தை வர மாட்டேங்குதே, அப்படி என்ன யோசனையில இருக்கீங்க, ஒருவேளை உங்க மனச கஷ்டப்படுத்துற மாதிரி ஏதகவது சொல்லீட்டோமா” என்று கேட்டார் வீரராகவன்,
“அய்யோ அப்படி எல்லாம் இல்ல, தேடும் போது கிடைக்காதது, எதேச்சையா கிடைச்சிருக்கு அதை எப்படி தக்க வச்சுக்கிறதுன்னு தான் யோசிச்சுட்டு இருந்தேன்” என்றான் ஆரி,
“நீங்க பேசுறது ஒன்னும் புரியலையே, எதா இருந்தாலும் புரியற மாதிரி தெளிவா சொல்லுங்க தம்பி” என்றார் வீரராகவன், விஸ்வநாதன் சந்தேகக் கண்ணை ஆரியின் மேல் படரவிட,
“அது ஒன்னும் இல்ல, எனக்கும் சொந்த பந்தம்ன்னு யாராவது இருக்க மாட்டாங்களான்னு நிறைய நாள் ஏங்கிருக்கேன், இப்ப பாருங்க எதேர்ச்சையா இவ்ளோ பேர் கிடைச்சிருக்கீங்க, உங்க அன்புக்கு நான் என்ன நன்றி கடன் செய்யப்போறேன்னே தெரியல, இதை நினைச்சு தான் பேச்சே வரல” என்று சமாளித்தான் ஆரி,
“அட இதுக்கா இவ்ளோ பீல் பண்றீங்க, ப்ரீயா விடுங்க தம்பி” என்று சிரித்தார் வீரராகவன்,
அவர் பேச்சிலும் செயலிலும் விஸ்வநாதனை தன் கைக்குள் போட்டுக் கொள்ள வேண்டும் என்ற காரியத்தன்மை மட்டுமே இருந்தது,
விஸ்வநாதனின் உயிரை காப்பாற்றியவனை உயர்த்தி பேசினால் விஸ்வநாதன் விழுந்து விடுவார் என்ற எதிர்பார்ப்பில் தான் கதை கதையாக அளந்து விடுகிறான் என்று ஆரி கணித்தான்,
“சரி நீங்க பேமிலியா பேசுறீங்க ஏதாவது முக்கியமான விஷயம் பேசுவீங்க, நான் அப்படியே உள்ள போறேனே, நீங்க பேசுங்க” என்று கூறிய ஆரி விறுவிறுவென மேலே சென்றான்,
தீரண் தனக்கு நிறைய வேலைகள் இருப்பதாக சொல்லி விட்டு அவனும் தன் காரை எடுத்துக் கொண்டு சென்றான்,
விஸ்வநாதன் வீரராகவன் இருவரும் பேசிக் கொண்டிருக்க, மேலே சென்ற ஆரி நேராக நிஷாவின் அறைக்குச் சென்றான், அறைக் கதவில் கை வைத்தான் அது தானாக திறந்து கொள்ள,
உள்ளே சென்றவன் நிஷாவைத் தேடினான், பாத்ரூமில் தண்ணீர் சிதறும் சத்தமும் அவளின் அழுகையின் சத்தமும் சேர்ந்து கேட்க, கதவைத் தட்டினான் ஆரி,
“நிஷா நிஷா கதவை திற நிஷா, நான் ஆரி வந்திருக்கேன் கதவைத் திற” என்று கூறி கதவைத் தட்டினான், அவள் திறப்பதாக இல்லை, கதவை உடைக்கலாமா என்று கூட யோசித்தான்,
அந்த சத்தம் கீழே உள்ளவர்களுக்கு கேட்டு விட்டால் விபரீதம் ஆகக்கூடும் என்று தோன்ற, வேறு வழியில்லை அவளே கதவைத் திறந்தால் தான் உண்டு என்ற முடிவுக்கு வந்தான்,
“இங்க பாரு நிஷா, இப்ப மட்டும் நீ கதவைத் திறக்கலைன்னா, நான் போய் உன் அப்பா விஸ்வநாதனை கூட்டுட்டு வந்திடுவேன்” என்று அவன் கூறி முடிக்கும் முன்பே கதவு திறக்கப்பட்டது,
பேதைப் பெண்ணவளுக்கு, பெற்று வளர்த்த தந்தை மீதே அவ்வளவு பயம், கதவு திறந்ததும் அவளின் நிலை என்னவோ என்று அவன் சற்று தயங்கித் தயங்கி உள்ளே வந்தான்,
கலையாத ஆடையுடன் நனைந்தபடியே அவனை விட்டு தள்ளிப் போய் நின்றவள், கண்கள் சிவந்து முகம் வீங்கி அங்கோலமாக இருந்தவளைக் கண்டு அவனுக்கு பரிதாபமாகத் தெரிந்தது,
“உன்னை என்னால புரிஞ்சுக்க முடியுது நிஷா, ஆனா நான் கேட்கிற கேள்விக்கு மட்டும் பதில் சொல்லு, கல்யாணம் பண்ணிக்க பிடிக்கலையா? இல்ல தீரண் மாப்பிள்ளையா இருக்கிறது பிடிக்கலையா?” என்று கேட்டான் ஆரி,
“இரண்டுமே பிடிக்கல ஆரி” என்று கூறி சுவற்றோடு சுவராக ஒன்றிக் கொண்டாள்,
“அப்போ இதை உன் அப்பாகிட்ட சொல்லி கல்யாணத்தை கேன்சல் பண்ண வேண்டியது தான, அதுக்கு ஏன் நீயே உன்ன தண்டிச்சுக்கிற நிஷா” என்று ஆரி கேட்டான்,
“என் அப்பாவை பத்தி உனக்கு தெரியாது ஆரி, அவரை எதிர்த்து பேசினா என்ன நடக்கும்னு எனக்கு தான் தெரியும்” என்றவள் அதீத பயத்துடன் இருந்தாள்,
“சரி அப்போ உன் அப்பா விருப்பப் படி தீரணையே கல்யாணம் பண்ணிக்க” என்று ஆரி சொன்னதும்,
“தீ…. தீரணையா…. அவன்.., எனக்கு வேண்டாம் ப்ளீஸ் ஆரி, அவன் எங்கிட்ட…” என்று திக்கித் திணறி அவன் அத்துமீறி நடந்த விஷயத்தை சொல்லி அழுதாள் நிஷா,
தீரணின் நடவடிக்கையை ஏற்கனவே கணித்திருந்தவனுக்கு அதிர்ச்சியும் ஆச்சரியமும் இல்லை, அவளை தேற்றவே துடித்தான், சற்று நேரம் முன்பு தான் ஒருவனின் அத்து மீறலில் கலங்கி நிற்கிறாள்,
இந்த நேரத்தில் இப்போ அவளை ஆறுதல் படுத்த அவளருகே சென்றாள், அதையும் தவறாக எடுத்துக் கொள்வாளோ என்ற எண்ணத்தில் எட்ட நின்று இருகரம் நீட்டினான்,
அதைப் பார்த்த நிஷாவின் அழுகை ஒரு நிமிடம் நின்றது, அடுத்த சில நொடிகளில் அவன் நெஞ்சுக் கூட்டுக்குள் தன்னை புதைத்துக் கொண்டாள்,
ஆரிக்கு அவளின் அழுகையும் துடிப்பும் தாங்க முடியாத பாரமாகவும் அதற்கு காரணமாவன் மீது அடக்க மாட்டாத கோபமும் வீறு கொண்டு எழுந்தது,
“ஆரி எனக்காக ஒன்னே ஒன்னு மட்டும் செய்வியா” என்று கேட்டாள் நிஷா,
“என்ன செய்யனும்னு சொல்லு நிஷா, உனக்காக நான் எது வேணாலும் செய்யுறேன், ஆனா நீ மட்டும் அழாதே” என்று கூறி சிறுபிள்ளை போல் அழும் அவள் விழிநீரைத் துடைத்து விட்டான்,
“எனக்கு உயிரோட வாழவே பிடிக்கல, நான் சாகனும் ஆனா அதுக்கும் பயமா இருக்கு, நான் சாக மட்டும் ஹெல்ப் பண்ணு ஆரி” என்றாள் நிஷா, ஆரிக்கு தூக்கிவாரிப் போட்டது,
“என்ன சொல்ற நிஷா, யோசிச்சு தான் பேசுறியா, அப்படி எல்லாம் பண்ணக் கூடாது, நமக்கு கிடைச்சிருக்கிறது ஒரு லைஃப் தான் அதை ஏன் முடிச்சுக்கனும்னு நினைக்கிற” என்று கேட்டான் ஆரி,
“வேற என்ன பண்ண சொல்ற ஆரி, அந்த தீரணை கல்யாணம் பண்ணிட்டு வாழவும் முடியாம சாகவும் முடியாம வேதனைப் பட சொல்றியா,
பிறந்ததுல இருந்து என் அப்பாவோட கட்டுப்பாட்டுல அவரோட ஆசைப்படி என்க்கு பிடிக்காத லைஃப்ல வளர்ந்துட்டேன், இனி அந்த தீரண் அவன் பேர் சொல்லவே பிடிக்கல,
அவன் கூட லைஃப் லாங் அவன் கூட வாழனும்னா அது நான் செத்தே போகலாம்” என்று விம்மி வெடித்தாள் நிஷா,
“நான் இருக்கும் போது, நீ ஏன் சாகனும், உனக்காக நான் இருக்கேன், உனக்கு எதுவும் ஆக விடமாட்டேன்” என்று அவளை தன்னோடு இறுக்கி அணைத்துக் கொண்டான்,
முதல் முறையாக தனக்காக ஒரு ஜீவன் பேசுகிறதே என்று உள்ளம் உவர்ந்தாள் நிஷாலினி,
“எனக்காக நீ பேசுறதைக் கேட்கும் போது ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கு ஆரி, ஆனா கூடவே என்னால உனக்கு ஏதாவது ஆகிட்டா அதை என்னால தாங்க முடியாது,
எனக்கு யாருமே வேண்டாம் ஆரி, எனக்கு நீ ஹெல்ப் பண்ணா அது உனக்கு தான் ஆபத்து, என்னால உன் லைஃப்ல பிரச்சனை வேண்டாம்,
நானெல்லாம் பொறந்திருக்கவே கூடாது, இதுக்கு மேல எனக்கு வாழவே பிடிக்கல ஆரி, ப்ளீஸ் நான் சாகனும் அதுக்கு மட்டும் ஹெல்ப் பண்ணு” என்று கூறி அழுதவளை,
கண் கொண்டு காண முடியாமல் தவித்துப் போனான் ஆரி, அவளை இன்னும் இன்னும் தன்னுள் பதுக்கிக் கொண்டான்,
“இங்க பாரு, என்னை பாரு” என்று அவள் முகத்தை தன் முகம் நோக்கி திருப்பினான்,
“நான் இருக்கிற வரைக்கும் உன்னைய சாகவும் விடமாட்டேன், அந்த தீரண் கையில உன்ன சிக்கவும் விடமாட்டேன், நடக்கப் போற கல்யாணத்தை நான் நிறுத்தறேன், எனக்காக நீ ஒன்னே ஒன்னு மட்டும் பண்ணு” என்றான் ஆரி,
“நீ இல்ல என்னை படைச்ச கடவுளே வந்தாலும் இந்த கல்யாணத்தை நிறுத்தவும் முடியாது, நடக்கிறதை தடுக்கவும் முடியாது, எனக்காக ஏதாவது பண்ணப் போய் நீ கஷ்டப்படாத ஆரி” என்று நம்பிக்கை இல்லாமல் பேசினாள் நிஷாலினி,
“ப்ளீஸ் என்னை நம்பு, என்னால கல்யாணத்தை நிறுத்தவும் முடியும், உன் அப்பாவை எப்படி சமாளிக்கனும்னு தெரியும், எனக்காக நீ பண்ண வேண்டியது எல்லாம்,
நீ எங்கூட வரனும், எங்கே? ஏன்? எதுக்கு? ன்னு எந்த கேள்வியும் கேட்காம எங்கூட என்னை முழுசா நம்பி வரனும் அவ்வளவு தான்” என்றான் ஆரி,
அவனையே புரியாத புதிராக பார்த்தாள் நிஷாலினி,
தொடர்ந்து வாசிப்போம் வாங்க
