வலியை சூடிய காதலே – 25

முடிவறியா பாதையில்  நாம்

வெறும் வழிப்போக்கர்கள் தான் பாதைகள் முடிந்தாலும் பயணங்கள் முடிவதில்லை, 

காலம் நம்ணை ஏதோ ஒன்றை நோக்கி நம்மை நகர்த்திக் கொண்டே இருக்கும்…!

வலியை சூடிய காதலே – 25

“நீ சொல்றதெல்லாம் என் கனவுல கூட நடக்காது ஆரி, என் அப்பாவை பத்தி உனக்கு சரியா தெரியல, இந்த வீட்டு வாசற்படியை கூட என்னால தாண்டி வர முடியாது இதுல உன் கூட நான் எப்படி வர முடியும்” என்று நம்பிக்கையற்ற நிலையில் கேட்டாள் நிஷா,

“எனக்கு நான் கேட்டதுக்கு மட்டும் பதில் சொல்லு, என்னை முழுசா நம்பி வருவியா? மாட்டியா?” என்று கேட்டான் ஆரி,

“இந்த நிமிஷம் இந்த உலகத்துல நான் நம்புற ஒரே ஆள் நீதான் நீ மட்டும் தான் ஆரி, நீ சொல்ற மாதிரி நீ எங்க கூட்டிட்டு போனாலும் எனக்கு கவலையில்ல, நான் வர தயாரா இருக்கேன்,

ஆனா அது தான் நடக்காதே, எனக்கு மட்டும் தான் என் அப்பாவைப் பத்தி தெரியும், அவர் ஒரு விஷயம் நடக்கனும்னா எந்த எல்லைக்கு வேணாலும் போவார், உன் உயிருக்கே கூட ஆபத்து வரலாம்” என்று அழுதாள்,

“என் உயிர் இல்ல, என் முடியை கூட அவரால அசைக்க முடியாது, நீ உன் அப்பா விஸ்வநாதனை தானே பார்த்திருக்க, அவரோட இன்னொரு முகத்தை எனக்கு நல்லா தெரியும்,

இப்ப அது தேவையில்ல, நீ எங்கூட வர ஒத்துக்கிட்டே இல்ல, எனக்கு அதுபோதும் நிஷா, இனி நான் சொல்றதை மட்டும் செய்” என்றான் ஆரி, 

“நீ ஏதேதோ சொல்ற, ஆனாலும் என் அப்பாவை எதிர்த்து நீ எதுவும் பண்ண முடியாது, என்னை இப்படியே விட்டுட்டு போய் நீயாவது நல்லா இரு ஆரி, எனக்கு அது போதும், 

என் விதியில இப்படி தான் கஷ்டப்படனும்னு இருக்கு, என்ன பண்றது, எனக்காக ரிஸ்க் எடுத்து உன் உயிரை விட்டுறாத ஆரி, இப்ப என் லைஃப்ப விட உன் உயிர் தான் முக்கியம்” என்று கூறி அவனை விட்டு விலகிச் சென்றாள் நிஷா,

தந்தை மீதான அதீத பயத்தில் அவள் ஆரியிடம் நம்பிக்கை கொள்ள முடியாமல் தவிர்க்கிறாள், தன் வாழ்க்கைக்காக அவனை பலியிடக் கூடாது என்பதில்  உறுதியாக இருந்தாள், 

அவனோ என்ன நடந்தாலும் அவளை விட்டுச் செல்லக் கூடாது, விஸ்வநாதனின் கர்வத்தையும் ஆணவத்தையும் அழித்து அவளை மீட்டுக் கொண்டு தான் ஊர் திரும்ப வேண்டும் என்பதில் ஆணித்தனமான உறுதியோடு இருந்தான்,

அடுத்து வந்த இரண்டு நாட்களும், அவன் அவளிடம் போரிட்டுக் கொண்டிருந்தான், அவன் என்ன சொன்னாலும் அவளிடம் நம்பிக்கை என்பதே துளியும் இல்லை, 

பிரமாண்டமான மண்டபத்தில் திருமண ஏற்பாடுகள் தடபுடலாக அரங்கேறியது, மணப்பெண்ணாக ஆட்கள் வந்து அலங்கரிக்க ஒவ்வொரு நொடியும் நெருப்பிலிட்டு வாட்டிய புழுவாய் துடித்துக் கொண்டிருந்தாள்,

அவள் துடிப்பும் வலியும் அவன் முழுதாய் அறிந்தும், எதையும் செய்ய முடியாமல் தவித்தான், முகூர்த்த நேரத்திற்கு சில நிமிடங்களுக்கு முன்பு,

கடைசியாக ஒருமுறை அவளிடம் பேசிப் பார்க்கலாம், ஒத்துக்கிட்ட கூட்டிட்டு போலாம், இல்ல முடியாதுன்னு சொன்னா,  அவளை கடத்திச் போறதைத் தவிர வேறு வழியில்லை என்ற முடிவோடு, 

தன்னிடம் மறைத்து வைத்திருந்த மயக்க ஊசியை ஒருமுறை தொட்டு பார்த்து விட்டு நிஷாவின் அறைக்குள் நுழைந்தான் ஆரியன்,

“நீ இன்னும் ரெடியாகலையா, நேரம் ஆச்சு நிஷா” என்றான் ஆரி,

​”எனக்கு ரொம்ப பயமா இருக்கு ஆரி, டேடி என்ன பண்ணுவாருன்னு தெரியல, அவரை மீறி என்னால எதுவுமே பண்ண முடியாது” என்ற நிஷாலினியின் குரல் நடுங்கியது, ​ஆரியன் அவளுக்கு அருகில் வந்து நின்றான், 

“நான் இருக்கேன் நிஷா உனக்குப் பிடிக்காத எதையும் நடக்க விடமாட்டேன், என்னை மீறி உன்னை யாரும் ஒன்னும் பண்ண முடியாது” என்றான்,

அப்போது தான் தீரண் அங்கு வந்து நிஷாவிடம் சீண்டலும், ஆரியிடம் எச்சரிக்கையும் செய்து விட்டுச் சென்றான், அவனின் செயலை அறவே வெறுத்த நிஷா, இனியும் பொறுத்து போக முடியாது என்று,

“ஆரி என்னால முடியல ஆரி தீரண் என்கிட்ட வரும் போது எல்லாம் அருவருப்பா இருக்கு, என்னால இவன் கூட வாழப்போறதை நினைச்சாலே அப்படியே  செத்துடலாம் போல இருக்கு, 

இந்த உலகத்துல எனக்கு தெரிஞ்ச இரண்டே பேர்ன்னா அது ஒன்னு என் டேடி இன்னொன்னு நீ மட்டும் தான் ஆரி, அதனால தான் உங்கிட்ட கேட்குறேன்,

ப்ளீஸ் ஆரி ஏதாவது பண்ணி என்னை காப்பாத்து ஆரி, நீதான் நீ மட்டும் தான் என்னை காப்பாத்த முடியும், ப்ளீஸ் ஆரி” என்று அவன் காலைப் பற்றி விம்மினாள்,

“தயவு செஞ்சு என் முன்னாடி நீ அழாத நிஷா, நான் சொல்றதை மட்டும் செய் மத்ததெல்லாம் நான் பார்த்துக்கறேன், உன்னை இங்க இருந்து பத்திரமா கூட்டிட்டு போக வேண்டியது என்னோட பொறுப்பு போதுமா, அழாம தைரியமா இரு” என்று கூறியவன், 

தேடிச் சென்றது தீரணை, அவன் மணமகன் அறை வாசலில் நின்று போனில் பேசிக் கொண்டிருந்தான், ஆரி சுற்றும் முற்றும் பார்க்க அங்கே ஆட்களின் நடமாட்டம் குறைவாக இருந்தது,

நிஷாவை கடத்திக் கொண்டு போக எடுத்து வந்த மயக்க ஊசியை தீரண் எதிர்பாராத நேரத்தில் போட்டு விட, அடுத்த சில நொடிகளில் மயங்கி விழுந்தான் தீரண்,

அவனை மணமகன் அறைக்கு எதிரே இருந்த ஒரு அறையின் உள்ளே படுக்க வைத்து விட்டு அந்த அறையை வெளிப்புறமாக தாளிட்டு விட்டு வந்தான்,

ஆனால் அவன் தீரணை சமாளித்து வருவதற்குள் நிஷாவை மணமேடைக்கு அழைத்துச் சென்றிருந்தனர், அடுத்து என்ன செய்யலாம் என்று அவன் யோசித்துக் கொண்டு நிற்க,

அதற்குள் அங்கே விஸ்வநாதன் கோபத்தில் கொதித்தெழவும், வீரராகவன் தன் இளைய மகனா கௌரவை நிஷாவிற்கு திருமணம் முடிக்க விஸ்வநாதனிடம் பேசி சமாதானப் படுத்திக் கொண்டிருக்க, 

தீரணை மறைத்து வைத்தால் திருமணம் நின்று விடும், யாரும் கவனிக்காத நேரத்தில் நிஷாலினியை இங்கு இருந்து அழைத்துச் சென்று விடலாம், என்ற அவனின் திட்டம் தவிடு பொடியானது,

தீரண் தெரிந்த பேய் என்றால் அவன் தம்பி கௌரவ் தெரியாத பிசாசு, நிஷாவை பார்த்தான் அவளோ நடப்பதை ஏற்க முடியாமல் தவித்துக் கொண்டிருந்தாள், அடுத்து என்ன செய்வது என்று யோசித்தவன், 

இதற்கு  ஒரு கட்ட வேண்டும் என்று, தானே மணமகனாக தன்னை தயார்படுத்திக் கொண்டு, தன்னிடம் இத்தனை ஆண்டு காலம் பத்திரப்படுத்தி இருந்த, தன் தாயை கழற்றி எரிந்த தாலி இருந்தது,

அதை எடுத்தவன் ஒரு புதுமஞ்சள் கயிற்றில் கோர்த்து எடுத்துக் கொண்டு போனான், விஸ்வநாதனின் கண்ணெதிரே நிஷாலினியின் கழுத்தில் தாலியைக் கட்டி தன்னுடையவளாக்கிக் கொண்டு அவளை தன்னுடன் அழைத்து வந்தான்,

நடந்தவற்றை எல்லாம் அவன் கூறி முடித்து விட்டு பூவிதழினியைப் பார்த்தான், அவள் உலகம் சுழல்வதை நிறுத்திக் கொண்டு வெகு நேரமாகியிருந்தது, 

“நிஷாவை அந்த கொடூர கூட்டத்துக்கிட்ட இருந்து காப்பாத்த வேற வழி தெரியல இதழு, அதான்” என்று 

அவன் முடிக்கும் முன்பே அவள் கை நீட்டி அவன் பேச்சைத் தடுத்தாள், ஒரு வார்த்தை கூட அவள் வாயிலிருந்து வரவில்லை, சட்டென எழுந்தாள் வேகமாக அங்கிருந்து ஓடினாள் அவள் பின்னே அவனும் சென்றான்,

விபரம் தெரிந்த நாளிலிருந்து தொடரும் நேசமல்லவா அதை எப்படி இவனாலும் மறக்க முடியும், கண்ணுக்கு எதிராக ஒருத்தி நரகட் குழியில் சிக்கி விடக் கூடாது என்பதற்காக அவளை மணமுடித்தான், 

ஆயினும் அவன் மனதிலும் காதல் வலியை வடுவாக ஏற்றுக் கொண்டு நடந்ததை கடந்து போக முடியாமல் தவித்து நிற்கிறான், அவளோ தன் உயிரினும் மேலாக வளர்த்த காதல் கானல் நீராய் கரைந்து போனதை நம்பவும் முடியவில்லை, ஏற்கவும் முடியவில்லை,

தன் உயிரை வதைக்கும் உண்மையை எவ்வளவு கண்ணீரைக் கொண்டு அழித்தாலும் அழியாதல்லவா, இருந்தும் தன் அழுகையை அடக்க முடியாமல் அழுது அழுது ஓய்ந்தாள்,

கோவிலில் இருந்து நேராக மருத்துவமனைக்கு வந்தவள் தன் தகப்பனாரிடம் வந்தாள்,

“அப்பா என்னை வீட்டுக்கு கூட்டிட்டு போறீகளா?” என்று கேட்டாள்,

“ஏத்தா ஒரு மாதிரியா இருக்க, உடம்புக்கு முடியலையா, நாம வேணா இங்கண இருக்கிற டாக்டரை போய் பாத்துட்டு அப்புறமா வீட்டுக்கு போவமா” என்று தந்தை கேட்க,

“அதெல்லாம் ஒன்னுமில்லப்பா, என்னைய வீட்ல கொண்டு போய் விடுங்க” என்று சொல்ல மகளின் பேச்சை தட்ட முடியாமல் அவர் அழைத்துக் கொண்டு போனார், எதிரே வந்த ஆரியை நிமிர்ந்து கூட பாராமல் அங்கிருந்து வெளியேறினாள், 

அவன் அவள் போன வழியையே பார்த்துக் கொண்டு நிற்க, அவன் முதுகில் ஒரு அழுத்தம், திரும்பி பார்த்தான் அவனின் தோளில் முகம் புதைத்து நின்றாள் நிஷா,

“இவ்ளோ நேரமா நீ எங்க போன ஆரி, நீ இல்லாம நான் எப்படி தவிச்சு போயிட்டேன் தெரியுமா” என்றாள் தவிப்போடு,

“நான் எங்கேயும் போகல நிஷா, இங்க தான் இருந்தேன், உன்னை தனியா விட்டுட்டு நான் எப்படி போக முடியும்” என்றான், 

மனதில் ஆயிரம் வலிகள் நெருஞ்சி முள்ளாய் குத்திக் கிழித்தாலும் அவளிடம் தன் வலிகளை பகிர அவன் ஒருபோதும் தயாரில்லை, அவள் ஒரு பூப்போல மென்மையானவள், அவளை நோக விடாமல் தாங்கும் சேவகனான்,

நாட்கள் மெல்ல  நகர்ந்தது, ராஜதுரைக்கு அறுவை சிகிச்சை நல்ல முறையில் நடந்து, அவர் உடல் நலனும் தேறினார், ரஞ்சிதம் ராஜதுரையை விட்டு விலகவே இல்லை, 

கணவனை கண்ணுக்குள் பொத்தி வைத்து பார்த்துக் கொண்டாள், ராஜதுரைக்கும் ரஞ்சிதத்தை ஒரு நொடி கூட பிரியக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தார்,

ஆழ்ந்த உறக்கத்தில் கூட “ரஞ்சி ரஞ்சி என்னை விட்டு போயிறாதடி” என்று புலம்புவார் அதைக் கேட்டு பூரித்துப் போவாள் ரஞ்சிதம், 

ஆரி தாயிடமும் தந்தையிடமும் நன்றாக பேசினான், தந்தைக்கு தேவையான மருந்து மாத்திரைகளை தானே பார்த்து கொடுத்தான், 

பூவிதழினியிடம் தன் மனபாரத்தை இறக்கி வைத்த பின்பு தான் அவனுக்கு சற்று ஆறுதலாக இருந்தது, அவளின் மனநிலையில் அவனுக்கு கவலை இருந்தாலும், எதையும் மறைக்காமல் உண்மையை சொன்ன திருப்தி இருந்தது,

நிஷா சுற்றி இருந்த சொந்த பந்தத்திடம் மெல்ல மெல்ல பழக ஆரம்பித்தாள், அத்தையிடம் மொத்தமாக தஞ்சம் கொண்டாள், ராஜதுரையிடம் கூட பயத்தை கடந்து  சிரித்து பேசுகிறாள்,

சக்கிரவர்த்தி குடும்பத்து ஆட்களும் எந்தவித சங்கடமும் இன்றி ராஜதுரையின் நலனை விசாரித்து ஓரிரு வார்த்தைகள் பேசிச் செல்கின்றனர், அவர்களிடம் எந்த முக சுருக்கமும் இன்றி ராஜதுரையும் பேசுகிறார்,

ஆனால் ஆரியின் தாத்தா செல்லதுரைக்கு தான் இந்த பாசம் பற்று இல்லாமல் நீர்மேல் எண்ணெய் போல் யாருடனும் பேசாமல் வீராப்பாக நெஞ்சை நிமிர்த்தி மீசையை முறுக்கிக் கொண்டு வீராப்பாக இருக்கிறார்,

மருமகள் ரஞ்சிதத்திடம் முகம் கொடுத்து பேசுவதில்லை, ராஜதுரையிடம் மட்டும் பேசுவார், பாண்டிதுரையும் அப்படி தான் தந்தை முன்னே சென்றாள் அவர் பின்னே செல்கிறார்,

செல்லதுரையின் குடும்பத்தில் இருக்கும் மற்ற உறுப்பினர்களை அவர் ராஜதுரையை பார்க்க அனுமதிக்கவில்லை, இவரும் பாண்டிதுரையும் மட்டும் பார்த்து விட்டு வந்து சேதி சொல்வதோடு சரி,

ராஜதுரையின் தாயார் கனகம்மாளுக்கு ராஜதுரையை பார்க்க வேண்டும் என்று துடிக்கிறது, ஆனாலும் கணவனை மீறி செல்ல பயம், அந்த பயத்திலேயே மகனை நினைத்து மருகியதில் உடல் நலன் குன்றி முடங்கி விட்டாள்,

இவ்வளவு பிடிவாதமும் வறட்டு கௌரவமும் கொண்ட தாத்தாவை ஆரி எப்படித் திருத்துவான்…!

தொடர்ந்து வாசிப்போம் வாங்க

❤️ Loading reactions...
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page