கௌரவச் சிறையில் அடைபட்டது நிழலல்ல, நிஜமாய் துடித்த ஒரு ஜீவன்…!
வலியைச் சூடியது காதல் மட்டுமல்ல, அதைக் சுமந்து நிற்கும் காலமும் தான்…!
வலியை சூடிய காதலே – 26
இன்று தான் மருத்துவமனையின் வெள்ளை நிறச் சுவர்களுக்கு விடை கொடுக்க நாள் ராஜதுரை டிஸ்சார்ஜ் ஆகும் நாள்,
அந்த அறையே பரபரப்பு இருக்க இருந்தது, ராஜதுரையின் இதயம் மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்துக் கொண்டுருந்தது, இவ்வளவு காலம் பிரிந்த மனைவியோடு இனி தன் வாழ்நாள் முழுவதும்,
இணைந்து இணையிரியாமல் வாழப்போகிறோம் என்று நினைத்து ரஞ்சிதத்தை வைத்த கண் அகலாமல் பார்த்து ரசித்தார் ராஜதுரை, அதற்கு ஒரு முற்றுப் புள்ளி வைக்க அங்கு வந்து சேர்ந்தார் செல்லதுரை,
“என்னய்யா இப்ப உடம்புக்கு எப்படி இருக்கு, டாக்டர் என்ன சொல்றாரு” என்று கணத்த குரலில் கேட்டார்,
“இப்ப பரவால்லமா இருக்குங்கய்யா, வீட்டுக்கு போகச் சொல்லிட்டாங்கய்யா” என்றராஜதுரை மெல்லக் கட்டிலில் இருந்து எழுந்து அமர்ந்தார்,
அறுவை சிகிச்சை முடிந்து உடல் தேறியிருந்தாலும், இன்னும் மருந்துகளின் வீரியத்தால் அசதியும் களைப்பும் இருந்தது,
அருகில் நின்றிருந்த ரஞ்சிதம், அவரது சட்டையைச் சரி செய்துவிட்டு, மருந்துப் பெட்டிகளை அடுக்கிக் கொண்டிருந்தாள், அவளது கைகள் நடுங்குவதை ராஜதுரை கவனித்தார்,
பல வருடப் போராட்டத்திற்குப் பிறகு, தன் கணவனைத் தன் உலகிற்கு அழைத்துச் செல்லப்போகிறோம் என்ற மகிழ்ச்சி அவளிடம் இருந்தாலும், அறையின் ஒரு மூலையில் சிலையென நின்றிருக்கும் அந்த மனிதரைப் பார்க்கும்போது அவளுக்குள் பயம் கவ்விக்கொண்டது,
அங்கே நின்றிருந்தது சாதாரண மனிதர் அல்லவே, ராஜதுரையின் தந்தை செல்லதுரை ஆயிற்றே, அவர் கையில் இருந்த வெள்ளிப் பூண் போட்ட கைத்தடி தரையில் படும் போதெல்லாம், ரஞ்சிதத்தின் இதயம் ஒரு கணம் நின்று துடித்தது,
ஆரி தனது தந்தையின் டிஸ்சார்ஜ் காகிதங்களைச் சரிபார்த்து விட்டு, அவருக்கு தேவையான மருந்து மாத்திரைகளை வாங்கிக் கொண்டு உள்ளே நுழைந்தான்,
“எல்லாம் முடிஞ்சுதா? கிளம்பலாமா?” என்றார் செல்லதுரை,
“பில் எல்லாம் செட்டில் பண்ணியாச்சு, இனி வீட்டுக்கு கிளம்பலாம், நான் காரை வாசல்ல எடுத்துட்டு வரச் சொல்லிருக்கேன், நீங்க நடந்து வர்றீங்களா இல்ல வீல்சேர் கொண்டு வரச் சொல்லட்டுமா” என்றான் கேட்டான் ஆரி,
“வீல்சேர்ல வர்ற அளவுக்கு என் மவன் ஒன்னும் சீக்காளி இல்ல, அவன் உடம்பு வைரம் பாய்ஞ்ச கட்டை மாதிரி, ஏதோ ஒரு சின்ன அடி அம்புட்டு தான் அதுக்கே அவனை ஏதோ நோக்காடு வந்தவன் கணக்கா சொல்ற,
அதெல்லாம் வீடு வரைக்கு வேணாலும் நடந்தே வருவான், நீ போய் உன் டாக்டர் சோலியைப் பாரு, என் மவனை எப்படி கூட்டிட்டு போறதுன்னு எனக்கு தெரியும்” என்று பேரனை அடக்கிய செல்லதுரை,
“டேய் மவனே, நீ எழுந்து வாடா நம்ம வீட்டுக்கு போவோம், பாண்டி வாசல்ல தான் காரோட நிற்கிறான், நீ இல்லாம உன் ஆத்தாகாரி வேற மூலையில முடங்கி கிடக்குறா, உன்ன பாத்தா தான் எழுந்தே உக்காருவா போல வா” என்று செல்லதுரை சொல்ல,
ரஞ்சிதத்தின் கையில் இருந்த மருந்துச் சீட்டுகள் நழுவித் தரையில் விழுந்தன,
அவள் கண்கள் கலங்கி, ராஜதுரையைப் பார்த்தாள், ராஜதுரையோ தன் தந்தையின் கண்களைக் கூடப் பார்க்கத் துணிவில்லாமல் தலைகுனிந்தார்,
”என்ன தாத்தா சொல்றீங்க, அப்பா இப்ப கொஞ்ச நாளா எங்க கூட தானே இருந்தார், இனி மேலும் எங்க கூட தான் இருப்பார், அவருக்கு இப்ப தான் ஆப்ரேஷன் முடிஞ்சிருக்கு, அவரை ஒரு குழந்தை மாதிரி பாத்துக்கனும்” என்றான் ஆரி,
“அவன் குழந்தையா இருக்கும் போதிருந்தே நன் தான்டா பாத்துட்டு இருக்கேன், அவனை எப்படி பாத்துகனும்னு நீ எனக்கு சொல்லி தர்றியா, காகிதத்துல நாலெழுத்து படிச்சு டாக்டரு ஆயிட்டா உனக்கு உலகமே தெரியுமா,
அவன் என் மவன், என் ரத்தம், அவனைப் பொத்திப் பொத்தி வளர்த்தது நான்தான் உன் உபதேசத்தை நீயே வச்சுக்க, முதல்ல பெரியவங்களுக்கு மரியாதை குடுத்து பேசு, ஏதாவது சொன்னா மதிச்சு நடந்துக்க, வந்துட்டா பெருசா பேசுறதுக்கு” என்றார் செல்லதுரை,
”தாத்தா, என்னை என்ன வேணாலும் சொல்லுங்க, திட்டுங்க அதுக்கு உங்களுக்கு முழு உரிமையும் இருக்கு, ஆனா அப்பாவை எங்ககூட கூட்டிட்டு போக விடுங்க, அவருக்கு உடம்பு சரியானதும் அவரே வருவார்” என்றான் ஆரி
”டேய் என் கோபத்தை கிளறாம அமைதியா போயிரு, அப்புறம் நடக்கிறதே வேற, என் முன்னாடியே எதிர்த்து பேசுறியா, அந்த அளவுக்கு நீ வளரந்துட்டியா” என்று செல்லதுரை கத்தினார்,
“உங்கள எதிர்த்து பேசனும்னு நினைக்கல தாத்தா, அம்மாவும் அப்பாவும் ரொம்ப வருஷம் கழிச்சு ஒன்னா சேர்ந்திருக்காங்க அவங்கள இப்ப மறுபடியும் பிரிக்கனுமா அதான்” என்று அவன் முடிக்கும் முன்பே பொங்கி எழுந்தார் தாத்தா,
“என் மவனுக்கு பொஞ்சாதியே இல்லைங்கிறே, என் மகன் மட்டும் என் கூட வருவான், மத்தவங்க யாரா இருந்தாலும் எனக்குக் கவலை இல்லை,” என்று ரஞ்சிதத்தைப் பாராமல் சொன்னார், சட்டென ரஞ்சிதம் அழுதாள்,
“நீங்க எதை மனசுல வச்சுட்டு பேசுறீங்கன்னு எனக்கு நல்லா தெரியும் தாத்தா, யாரோ பண்ண தப்புக்கு இவ்வளவு காலம் என் அம்மாவும் அப்பாவும் பிரிஞ்சு இருந்து தண்டனை அனுபவிச்சது போதும்,
இனியாவது அவங்களை ஒன்னா சேர்ந்து சந்தோஷமா வாழ விடுங்க, உங்க கௌரவத்துக்காக மறுபடியும் அவங்கள பிரிக்காதீங்க” என்று தாத்தாவிடம் வாதிட்டான் ஆரி,
”யாரோ பண்ண தப்பால தான ஆசையா பெத்து ராசாத்தி மாதிரி வளர்த்த மவ எங்கயோ கண்ணு காணத சீமைக்கு போனா, இதோ இங்க நிற்கிறாளே என் பேத்தி அவளை கூட சொந்தங் கொண்டாட முடியாம,
தள்ளி வச்சது யாரு, உன் ஆத்தாகாரி குடும்பம் தான, என் குடும்பத்தையே அசிங்கப்படுத்தி ஊர் முன்னாடி அவமானப்படுத்துனது யாரு இவ குடும்பம் தான” என்று ரஞ்சிதத்தை சாடினார் செல்லதுரை,
“ஒரே ஒருத்தர் பண்ண தப்புக்கு ஒரு குடும்பத்தையே குத்தம் சொல்றது ரொம்ப ரொம்ப தப்பு தாத்தா, அந்த ஒருத்தரால பாதிக்கப்பட்டது நீங்க மட்டும் இல்ல, அந்த குடும்பமும் தான்,
நீங்க சொன்ன அசிங்கம் அவமானம் அவங்களுக்கும் தான, அது ஏன் உங்களுக்கு புரிய மாட்டேங்குது, தயவு செஞ்சு நடந்ததை மறந்துட்டு இனியாவது எல்லாரையும் நல்லா இருக்க விடுங்க தாத்தா” என்று கத்தினான் ஆரி
“ஓ இப்ப புரிஞ்சு போச்சுடா புரிஞ்து போச்சு, உன் நாடகம் என்னன்னு புரிஞ்சு போச்சு, இப்ப என் மவனை எங்கிட்ட இருந்து பிரிக்கனும், அவனை வச்சு என் மீதி சொத்தையும் புடுங்கனும் இது தான் உன் ஆத்தாகாரி போட்ட திட்டம் இதுக்கு தான நீயும் இந்த ஆட்டம் போடுறியா,
ஏன் சக்கரவர்த்தி குடும்பத்துக்கு எங்கிட்ட புடுங்கி தின்னது பத்தலையா, இப்போ புதுசா கூட்டு சேர்ந்து எனக்கெதிரா சதி பண்றீங்களா, டேய் நீ துரையய்யா வம்சமடா உனக்கு ஏன்டா அந்த சதிகாரனுக புத்தி வருது” என்று பேரனை பார்த்து கேட்டார் செல்லதுரை,
“ஆமா இப்ப சதி பண்ணி சொத்தை புடுங்கி தான் அதுல நாங்க வாழனுமா, என்ன பேச்சு பேசுறீங்க தாத்தா, இங்க யாரும் உங்க சொத்துக்கு ஆசைப்படல, நீங்களே குடுத்தாலும் எங்களுக்கு வேணாம்” என்றான் ஆரி,
“சரிப்பா நீ சொல்றதே சரின்னு வச்சுப்போம், இத்தனை வருஷமா இல்லாம இப்ப என்ன திடீர்ன்னு என்னாத்துக்கு என் மவனை எங்கிட்ட இருந்து பிரிக்க பாக்கனும்” என்று கேட்டார் செல்லதுரை
“யாரும் யாரையும் பிரிக்க நினைக்கல நீங்க தான் அப்படி நினைச்சுக்கறீங்க, அப்பாவை கூட்டிட்டு போங்க வேண்டாமுன்னு சொல்லல, கூடவே என் அம்மாவும் வருவாங்க, அவங்களையும் சேர்த்து கூட்டுட்டு போங்க” என்று ஆரி சொல்லவும் கோபமானார் செல்லதுரை,
“என்னது இவளையும் கூட்டிட்டுப் போகணுமா, அது என்ன சத்திரமா சாவடியா தெருவுல போறதெல்லாம் வந்து போறதுக்கு, தெரியாம ஒரு தடவ இவ வீட்டு வாசற்படியை மிதிச்சதுக்கே அந்த வீடே தீட்டாயிடுச்சுன்னு நான் இன்னும் வருத்தப்பட்டுட்டு இருக்கேன்,
இந்த லட்சணத்துல மறுபடியும் அவளை அங்க கூட்டிட்டு போகச் சொல்றியா, அது ஒருநாளும் நடக்காது, என் மகனை மட்டும் தான் நான் கூட்டிட்டுப் போவேன், இவ வேணும்னா அவ பிறந்த வீட்டுக்கே போகட்டும்,” என்று ரஞ்சிதத்தை ஒரு துச்சமாகப் பார்த்துச் சொன்னார்,
ரஞ்சிதத்தின் இதயம் சுக்குநூறாக உடைந்தது, தன் கணவன் உயிர்பிழைத்த மகிழ்ச்சியை விட, அவரை மீண்டும் பிரியப் போகிறோம் என்ற பயம் அவளை நிலை குலையச் செய்தது, கண்களில் நீர் ஊற்றெடுக்க நின்றவளைக் கண்டு உள்ளம் வாடிய ராஜதுரை,
“போதும்ப்பா துரை, அய்யாகிட்ட எதிர்த்து பேசாத, நான்.. நான் அவரோடவே போறேன், நீ உன் ஆத்தாள பத்திரமா பாத்துக்க” என்றார் ராஜதுரை,
அந்த வார்த்தைகள் ரஞ்சிதத்தின் இதயத்தில் இடியாக இறங்கின,
ராஜதுரை அவளது கரங்களைப் பற்றி மென்மையாக அழுத்தினார், அவர் கண்களில் கசிந்த ஒருதுளி நீர் பல கதைகளைச் சொன்னது,
“ரஞ்சி… நீ துரை கூட வீட்டுக்குப் போ, நான் சீக்கிரம் வரேன்” என்று சொல்லிவிட்டு, மகனைப் பார்க்க முடியாமல் தள்ளி நின்ற தந்தையின் அருகில் சென்றார்,
செல்லதுரையின் முகத்தில் இப்போது ஒரு வெற்றிப் புன்னகை,
“பார்த்தியாடா, இதுதான் என் வளர்ப்பு, நீயும் இருக்கியே, அவன் என் மவன்டா, என்னைத் தாண்டி அவனால ஒரு அடி கூட எடுத்து வைக்க முடியாது, உன்ன பெத்தவனை பாத்து மரியாதைய கத்துக்கடா” என்று ஆரியைப் பார்த்து நக்கலாக சொன்னார் செல்லதுரை,
”அப்பா நீங்க பண்றது தப்பு, ஒரு நிமிஷம் யோசிங்க,” என்று அவன் சொல்ல செல்லதுரை அதை கேட்க பிடிக்காமல் வெளியே நடந்தார்,
ராஜதுரை தன் தந்தையின் பின்னால் ஒரு நிழலாய் நடக்கத் தொடங்கினார், ரஞ்சிதம் அப்படியே தரையில் அமர்ந்து விம்மி விம்மி அழுதாள்,
கட்டிய கணவன் கண்முன்னே பிரிய, கண்ணீர் துளிகளாய் கரைந்தது ஒரு வாழ்க்கை…!
நிஷா அவளை அணைத்துக் கொண்டு ஆறுதல் சொல்ல முயன்றாள், ஆனால் அவள் கண்களிலும் நீர் தாரை தாரையாய் வழிந்தது,
தன் கண் முன்னால் ஒரு காதல் தோற்பதை அவளால் ஜீரணிக்க முடியவில்லை, வாசலில் நின்றிருந்த கார் கிளம்பியது. ராஜதுரை ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்தார்,
அவரின் உடல் மட்டும் காரில் பயணிக்க, உயிர் தன்னவளிடமே தஞ்சம் போனது, வெறுக்கூடு மட்டும் தந்தையின் சொல்லிற்கு கட்டுப்பட்டது,
காதல் யாரை எப்போது எங்கு வாட்டும் என்றெல்லாம் அதன் கணக்கில் இல்லை, ஒருமுறை வந்து விட்டால் அதன் பின்பு மறுக்கவும் முடியாது, மறக்கவும் முடியாது,
தந்தையின் வார்த்தைக்காக மனைவியை விடுத்துச் சென்ற ராஜதுரையின் நிலை என்ன?
கணவனை பிரிந்த ரஞ்சிதத்தின் நிலை என்ன?
இருவரும் இணையும் காலம் தான் எப்போது?
தொடர்ந்து வாசிப்போம் வாங்க
