நான் கொண்ட வலிகளெல்லாம் உன் ஒற்றை முத்தத்தில் கரைந்து போனதின் மாயம் தான் என்னவோ காதலே…!
வலியை சூடிய காதலே – 29
இரண்டு குடும்பத்துல இருக்கிற எல்லார் மேலேயும் கோபப்பட்ட விஸ்வநாதன் பரிமளா அத்தையை சித்திரவதை செய்ய ஆரம்பிச்சாரு, அத்தைகிட்ட உன் வீட்ல போய் பணம் வாங்கிட்டு வந்து குடுடீன்னு அடிச்சு மிரட்டினாரு,
அவரோட டார்ச்சர் தாங்க முடியாத பரிமளா அத்தை பொறந்த வீட்டுக்கே திரும்பி போயிட்டாங்க, என் மகளே வாழா வெட்டியா வந்துட்டா, அதே மாதிரி நீயும் உன் வீட்டுக்கு வாழ வெட்டியா போயிருன்னு,
என் அம்மாவை தாத்தா திருப்பி அனுப்பிட்டாரு, வேற வழியில்லாம நான் குழந்தையா இருக்கும் போது வீட்டை விட்டு அப்போ வந்த அம்மா தான் இன்னைய வரைக்கும் திரும்பி போகவே இல்ல,
என் அப்பாவும் அம்மாவை தேடி வரவே இல்ல, இப்படியே கொஞ்ச நாள் போச்சு, விடாபிடியா நின்னு சொத்தை பிரிச்ச விஸ்வநாதன், மொத்தத்தையும் வித்து பணமா மாத்தினாரு,
அப்புறமா நயவஞ்சகமா பேசி பரிமளா அத்தையை வரவச்சு நிறைமாசமா இருந்த அவளங்களை பணயம் வச்சு பேரம் பேசி, பணம் குடுத்தா தான் உன் பொண்ணை உயிரோட விடுவேன்,
இல்லைன்னா கழுத்தை அறுத்து போட்டுட்டு போயிடுவேன்னு மிரட்டி, செல்லத்துரை தாத்தாகிட்டயும் பணத்தை வாங்கிட்டு, எல்லாரையும் ஏமாத்திட்டு ஒரு நாள் யாருக்குமே சொல்லாம ஊரை விட்டு ஓடிட்டாரு,
அவர் போகும் போது பரிமளா அத்தையையும் வலுக்கட்டாயமா கூடவே கடத்திட்டு போயிட்டாரு, அப்போ நீ உன் அம்மா வயித்துல எட்டு மாச குழந்தையா இருந்த,
இரண்டு குடும்பமும் அந்த ஆளை தேடினாங்க, பல வருஷமா எங்க தேடியும் விஸ்வநாதன் உங்க இரண்டு பேரையும் எங்க கூட்டிட்டு போனாருன்னே தெரியல,
நீ யாரு ஆணா பொண்ணான்னு கூட தெரியாம உனக்காக இங்க அத்தனை பேரும் சாமிக்கிட்ட நீ நல்லா இருக்கனும் சீக்கிரமா திரும்ப கிடைக்கனும்னு வேண்டிப்பாங்க,
இதுல அதிகமா பாதிக்கப்பட்டது நான்தான் இரண்டு வீட்டு சண்டைக்கும் பஞ்சாயத்து பண்ணி அம்மா கூடவும் இல்லாம அப்பா கூடவும் இல்லாம தன்னந்தனியாக இந்த வீட்லயே விட்டுட்டாங்க,
நான் சின்ன வயசில இருந்து இந்த வீட்ல தான் தனியா வளர்ந்த, எல்லாரும் இருந்தும் யாருமே இல்லாத மாதிரி அநாதையா இருந்த,
என்னை பார்த்துக்க ஆள் வச்சிருந்தாங்க, ஆனா பெத்தவங்க மாதிரி மத்தவங்களால பாத்துக்க முடியாதுல்ல, அதான் கொஞ்சம் வளர்ந்ததும் யாருமே வேண்டாம்ன்னு தனியாவே இருக்க ஆரம்பிச்சே,
என் தனிமைய போக்க படிச்ச வெறித்தனமா படிச்ச, என்னை படிக்கவே கூடாதுன்னு தடுத்தாங்க, விஸ்வநாதன் படிச்சதால தான் திமிர் பிடிச்சு ஓடிட்டான், நீயும் அதே மாதிரி தான் பண்ணுவேன்னு,
சொல்லி படிக்க விடாம செஞ்சாங்க, எல்லாரையும் எதிர்த்து நின்னு படிச்சேன், நல்லா படிச்சதால ஸ்காலர்ஷிப் கிடைச்சது, அதை வச்சு மெடிக்கல் காலேஜ்ல படிக்க போயிட்டேன்,
அங்கேயும் விடாம படிச்சு ஒரு டாக்டரான பின்னாடி தான் திரும்பி வந்தேன், படிச்சா ஊரை விட்டு ஓடிருவான்னு சொன்னவங்க முன்னாடி இதே ஊர்ல இருந்து வாழ்ந்து காட்டனும் முடிவு பண்ணேன்,
இங்கயே ஒரு டாக்டரா மக்களுக்கு மருத்துவம் பார்த்துட்டு இருக்கேன், அதே மாதிரி இன்னைக்கி வரைக்கும் யாரோட தயவும் தனியாளாவே வாழ்ந்துட்டேன்,
அதனாலா தான் எப்படியாவது பிரிஞ்ச குடும்பத்தை ஒன்னா சேர்க்கனும்னு எவ்வளவோ போராடின, எதுவுமே பலனில்லாம போச்சு,
அந்த நேரத்துல தான் எதேர்ச்சையா உன்னையும், உன் அப்பா விஸ்வநாதனையும் பார்க்க நேர்ந்துச்சு, ஆனா முதல் தடவை பார்க்கும் போது நீதான் என் அத்தை பரிமளத்தோட பொண்ணுன்னு சத்தியமா தெரியாது,
உன் வீட்டுக்கு வந்தப்போ தான் உன் அப்பா விஸ்வநாதன் தான், என் லைஃப்போட வில்லன்னு தெரிஞ்சுது, அவரை பலிவாங்கனும்னு வெறி மனசுல கொழுந்து விட்டப்போ தான்,
உனக்கும் தீரணுக்கும் கல்யாண ஏற்பாடு நடந்துச்சு, அதுல உனக்கு விருப்பம் இல்லன்னு தெரிஞ்சதும் விஸ்வநாதனை பலிவாங்குறதை விட, உன்னை அவர்கிட்ட இருந்து காப்பாத்துறது தான் முக்கியம்னு தோனுச்சு,
அதான் தீரணுக்கு மயக்க ஊசி போட்டு மறைச்சு வச்சுட்டு, மாப்பிள்ளையா மாறி உன் கழுத்துல தாலி கட்டுனேன், எந்த குடும்பம் விஸ்வநாதனால சிதைஞ்சதோ அதே குடும்பத்தை உன்னை வச்சு சரி பண்ணனும்னு நினைச்சேன்,
அதுல நான் பண்ண ஒரே தப்பு உன்னோட சம்மதம் இல்லாம தாலி கட்டினது மட்டும் தான், அதுகூட விஸ்வநாதன்கிட்ட இருந்து உன்னை கூட்டிட்டு வரத்தானே தவிர , என்னோட சுயநலத்துக்காக இல்ல,
இப்ப சொல்லு நிஷா நான் பண்ணது தப்பா” என்று கேட்டவனை கண்ணீரோடு பார்த்தாள் நிஷா,
“சாரி சாரி ஆரி, உன் வலியை என்னால புரிஞ்சுக்க முடியுது, என் அப்பா கோபக்காரர் பிடிவாதக்காரர்ன்னு தெரியும் ஆனா இந்த அளவுக்கு மோசமான அரக்கன்னு இப்ப தான் புரிந்து, அவரால இங்க எல்லாரும் கஷ்டப்பட்டிருக்காங்க,
இவ்ளோ நாளும் நீ பட்ட கஷ்டத்தை என்னால கற்பனை கூட பண்ணி பார்க்க முடியல ஆரி, நீ எனக்கு தாலி கட்டினதுல எனக்கு சந்தோஷம் தான், உன்னை பார்த்ததும் எனக்கு உன்னை பிடிச்சுப் போச்சு,
ஆனா அதை சொல்ல தைரியம் தான் இல்லாம தடுமாறினேன், நீ வந்து தாலி கட்டும் போது எனக்கு அப்போ புரியல, கொஞ்ச நேரம் கழிச்சு என்ன நடந்ததுன்னு புரிஞ்சுக்கவே முடிஞ்சுது,
அப்போ தான் ரொம்ப ஹேப்பியா இருந்துச்சு, என் அப்பாகிட்ட இருந்து விடுதலையும், எனக்கு பிடிச்ச உங்கூட வாழப் போறேன்னு நினைக்க நினைக்க அவ்ளோ சந்தோஷமா இருந்துச்சு ” என்று அவன் தோளில் தலை சாய்த்தாள் நிஷா,
“நீ என் கழுத்துல தாலி கட்டுன அந்த நிமிஷமே என் வாழ்க்கை உன்னோடதுன்னு முடிவாகிடுச்சு. ஆனா எனக்காக எவ்வளவோ இழந்திருக்க,
அதுக்காக நான் உனக்கு என்ன செய்யப் போறேன் தெரியல என் அப்பா செஞ்ச பாவத்துக்கு நான் என்ன செஞ்சா ஈடாகும் ஆரி” என்று அழ ஆரம்பித்தாள் நிஷா ஆரி அவளது கைகளைத் தன் கைகளுக்குள் பொதிந்து கொண்டான்,
”உன் அப்பா செஞ்ச பாவத்துக்கு நீ எதுக்கு நிஷா பொறுப்பேற்கணும், பெத்தவங்க செய்ற வினையை பிள்ளைகள் அறுக்கணும்னு சொல்லுவாங்க, ஆனா உன் விஷயத்துல நான் அதை விரும்பல.
உன்னை அங்க இருந்து கூட்டிட்டு வரும் போது, எனக்குள்ள ஒரு பழிவாங்குற வெறி இருந்தது நிஜம் தான், ஆனா, உன் கழுத்துல அந்தத் தாலியை கட்டுன அந்த நிமிஷம்,
அந்த அக்னி சாட்சியா எனக்குள்ள இருந்த ஆரி செத்துட்டான் நிஷா, இப்போ இருக்கிறவன் உனக்காக மட்டும் வாழ நினைக்கிற உன் ஆரி” என்றான் நெகிழ்வுடன்.
நிஷா மெல்லத் தலைநிமிர்ந்து அவன் கண்களைப் பார்த்தாள்,
“எங்க அப்பா உனக்கும் நம்ம குடும்பத்துக்கும் செஞ்சது மன்னிக்க முடியாத துரோகம், ஒரு டாக்டராகி நீ இப்போ இந்த ஊர்ல இவ்வளவோ பேருக்கு நல்லது செய்ற,
ஆனா உனக்குக் கிடைக்க வேண்டிய எல்லாத்தையும் எங்க அப்பா தானே தட்டிப் பறிச்சாரு, அவரை எனக்கு அப்பாவா நினைச்சாலே எனக்கே அசிங்கமா இருக்கு ஆரி” என்று பல்லைக் கடித்தாள் நிஷா,
ஆரி மென்மையாகச் சிரித்தான்,
“நிஷா, அந்த விஸ்வநாதன் எனக்குப் பல வழிகளைக் கொடுத்திருக்கலாம், ஆனா அவர் எனக்குக் கொடுத்த மிகச் சிறந்த பரிசு… அது ‘நீ’, நீ என் கூட இருந்தா போதும் நிஷா,
இழந்த எல்லா சந்தோஷத்தையும் நான் உன்கிட்ட இருந்தே மீட்டுப்பேன், நீ எங்கூட இருந்தாலே போதும் நிஷா, எனக்கு வேற எதுவுமே வேணாம்” என்றான் ஆரி,
”நிஜமாவா ஆரி, உனக்கு என் மேல கோபமே இல்லையா, நான் அந்த அரக்கனோட பொண்ணுன்னு ஒரு நிமிஷம் கூட உனக்குத் தோணலையா” என்று ஆவல் பொங்கக் கேட்டாள் நிஷா,
ஆரி அவளது நெற்றியில் மெல்ல முத்தமிட்டான்,
“வலியைச் சுமந்தவன் நான் நிஷா, அந்த வலி இன்னொருத்தருக்குக் கிடைக்கக் கூடாதுன்னு நினைக்கிறவன், நீ அவர் பொண்ணா இருக்கலாம், ஆனா இப்போ நீ என் பாதி,
விஸ்வநாதன் செஞ்சது தப்புன்னு உனக்குத் புரியுது பாரு, அந்த மனசு போதும் எனக்கு, இனிமே நாம ரெண்டு பேரும் சேர்ந்து சிதைஞ்ச இந்த ரெண்டு குடும்பத்தையும் ஒண்ணா சேர்க்கணும். அதுதான் நீ எனக்குச் செய்ற கைம்மாறு” என்று ஆரி சொல்ல,
”கண்டிப்பா ஆரி நம்ம அத்தைக்கும் மாமாவுக்கும் இடையில இருக்கிற இந்தப் பிரிவை முதல்ல சரி பண்ணணும், அவங்க ரெண்டு பேரும் சேரணும், அதுக்கு அப்புறம் எங்க அப்பா எங்க இருந்தாலும் அவரைத் தேடிப் பிடிச்சு,
அவர் செஞ்ச தப்புக்கெல்லாம் இந்த ஊர் முன்னாடி நம்ம குடும்பத்துக்கிட்ட மன்னிப்பு கேட்க வைக்கணும், அதுவரைக்கும் நான் உனக்குத் துணையா இருப்பேன்” என்று அவன் கைகளை அழுத்திப் பிடித்தாள் நிஷா,
அவளின் மாற்றத்தையும் தைரியத்தையும் உணர்ந்தவன் உருகினான், மெல்ல அவளை இழுத்து தன்னோடு சேர்த்து அணைத்து தன் காயங்களுக்கு மருந்தாக முத்தத்தை பகிர்ந்தான் ஆரி,
தன்னவனின் இதழ் தேடிய ஆறுதலை தங்கு தடையின்றி கொடுத்து தேற்றினாள் நிஷா, இரு காயப்பட்ட இதயங்களும் காதலால் தங்களை ஆற்றிக் கொண்டது,
இரவின் போர்வை போல படர்ந்த இருளில் அவர்கள் இருவரும் ஒருவரில் மற்றொருவர் புதைந்து கட்டித் தழுவிக் கொண்டு மெத்தையில் சாய்ந்து கொள்ள சற்று நேரத்திற்கெல்லாம் உறக்கம் அவர்களின் கண்களில் படர்ந்து உறங்கியே போயினர்,
மறுநாள் காலை, ஜன்னல் வழியே எட்டிப்பார்த்த சூரியனின் கரங்கள் நிஷாவின் முகத்தில் வருட, மெல்லக் கண் விழித்தாள்,
தன் இடுப்பைச் சுற்றி வலுவாகப் படர்ந்திருந்த ஆரியின் கைகளும், அவன் நெஞ்சின் சீரான படபடப்பும் அவளுக்குள் ஏதேதோ ரசாயன மாற்றத்தை உண்டு பண்ண,
அதை தடுக்க மெல்ல அவனிடமிருந்து விலகி எழ முயன்றவளை, உறக்கத்திலேயே இன்னும் இழுத்து அணைத்துக் கொண்டான் ஆரி,
”ஆரி… விடு ஆரி, விடிஞ்சிடுச்சு, எப்பவுமே நீதான முதல்ல எழுந்திரிப்ப, இன்னைக்கி என்ன நானே எழுந்தும் நீ தூங்கிட்டு இருக்க” என்று நிஷா கேட்க,
“இன்னும் கொஞ்ச நேரம் தூங்கினா ஒன்னும் ஆகாது, நீ வா நான் தூங்கனும்” என்று
கண்ணைத் திறக்காமலே அவன் அவளை இழுத்து தன்மேல் போட்டுக் கொள்ள, நிஷா சிரித்துக் கொண்டே அவன் கன்னத்தைக் கிள்ளினாள்,
”நீ தூங்கு ஆரி, என்னை விடு நான் போறேன்” என்றாள் நிஷா,
“நீ போன அப்புறம் நான் யாரை கட்டிபிடிச்சு தூங்குறது” என்றான் ஆரி,
“நீ தலையணைய கட்டி பிடிச்சு தூங்கு, நான் போய் குளிச்சுட்டு வர்றேன்” என்று நிஷா சொல்ல,
“நீ தான் என்னோட தலையணை, அதான் கட்டிபிடிச்சு தூங்கறேன்” என்று அவன் இன்னும் அவளை நெருக்கமாக இறுக்கிக் கொள்ள,
“அது சரி, நான் அப்போ பண்ணதெல்லாம் நியாபகம் வச்சு, இப்போ அதை நீ பண்றியா, இது உன்னோட டர்ன்னா” என்று கேட்டாள்,
”ஆமா, இது என்னோட டர்ன் தான், இத்தனை நாளா நீ என்னைப் படுத்தின பாட்டுக்கு, இப்போ நான் பண்றது எல்லாம் ரொம்பக் கம்மிதான்,” என்று சொல்லி அவளது மூக்கோடு தன் மூக்கை உரசி செல்லமாக இடித்தான் ஆரி,
நிஷா அவனது பிடியிலிருந்து தப்ப முயன்றபடியே,
“அப்போ நீ தூங்கலையா, எல்லாம் தெரிஞ்சுதான் இப்படித் தூங்குற மாதிரி நடிச்சியா, நிஜமாவே நீ ரொம்ப நார்ட்டி ஆரி” என்று செல்லமாகக் கோபித்துக் கொண்டாள்,
”நானாவது நடிச்சேன் ஆனா நீ தூக்கத்துல கூட என்னை விடாம கட்டி பிடிச்சுக்கிட்டு, ஆரி என்னை விட்டுப் போயிடாதேன்னு புலம்பினியே அதுக்கு என்ன சொல்லப் போற?” என்று அவன் மடக்க, நிஷா வெட்கத்தில் சிவந்து போனாள்.
”நானா நான் எப்போ அப்படிச் சொன்னேன், ஏதோ தூக்கத்துல உளறி இருப்ப, அதை எல்லாம் பெருசா எடுத்துக்க கூடாது” என்றாள்,
“சரி விடு, இன்னைக்கு ராத்திரி நீ யாரை கட்டிபிடிச்சு தூங்க போறேன்னு நானும்பாக்குறேன், நைட் ஆனதும் மேடத்துக்கு பக்கத்துல தூங்க நான் வேணும்,
விடிஞ்சதும் ஒன்னு தெரியாத மாதிரி பேசுறது, இனிமே நான் என் ரூம்ல தூங்கறேன், நீ உன் ரூமுக்கு போய் தூங்கு” என்று அவன் சொல்ல,
“என்ன ஆரி, நீ இல்லாம தூங்க முடியாதுன்னு சவால் விடுறியா, அதுவும் எங்கிட்டயே” என்று வீராப்பாய் அவள் கேட்க, ஆமாம் என்பது போல் அவன் தலையசைக்க,
“அப்படி ஒரு முடிவுக்கு வந்துடாத, நீ இல்லாம என்னால தூங்க முடியாதுடா” என்றவாறு
அவள் அவன் மார்பில் முகம் புதைத்தாள்,
அதைப் பார்த்த அவனுக்கு சிரிப்பு தான் வந்தது, கூடவே அவள் ஒருமையில் பேசியது இன்னும் இதமாய் இருக்க, அதை ரசித்தவாறு அவளை தன்னுள் சிறை வைத்துக் கொண்டான்.
தொடர்ந்து வாசிப்போம் வாங்க
