சுட்டு விடும் என்று தெரிந்தே
தீயைத் துணைக்கு அழைக்கும்
விட்டில் பூச்சியாய்…
வலியை சூடிய காதலே – 3
காலத்தின் சுவடுகள் படாத அந்த மண்ணில், தென்னைமரங்களின் சலசலப்பும் பறவைகளின் ஓசையும் இயற்கையோடு ஒன்றியே இன்னிசையாய் இசைக்க,
பச்சைப் பசுமை போர்த்திய வயல்வெளிகளும், நகரத்தின் இரைச்சல் அறியாத அமைதி தவழும் உயிர்ப்புள்ள ஓவியம் தான்
‘தென்றலூர் கிரமம்’,
நவநாகரீக மாளிகையில் கூண்டுக் கிளியைப் போல் சகல வசதிகளுடனும் சிறைவாசத்தில் வளர்க்கப் பட்டவள், இந்த கிராமத்தின் இயற்கை அரண் சூழ்ந்த காட்சி அவளின் கண்களுக்கு கவர்ச்சியையும் மனதிற்கும் குளிர்ச்சியையும் வாரிவழங்க வெளியுலக அழகை ரசித்தவாறு எழிலோவியமென இருந்தாள் நிஷாலினி,
அவளின் அருகே கம்பீரத்தின் மொத்த உருவமாய் அமர்ந்திருந்தவன் உள்ளமோ பலதரப்பட்ட குழப்பங்கள் சூழ அமைதியாக அமர்ந்திருந்தான் ஆரியன்,
மண்டபத்திலிருந்து கிளம்பிய நேரத்தில் இருந்து இந்த நொடி வரை இருவருமே பெரிதாக ஒன்றும் பேசிக் கொள்ளவில்லை, அவ்வப்போது வரும் போன்கால் அழைப்பிற்கு மட்டும் தவறாது பதிலளித்துக் கொண்டிருந்தான்,
ஆனாலும் அவளுக்கு தேவையான அனைத்து பணிவிடைகளையும் பார்த்து பார்த்து கவனித்துக் கொண்டான், பலமணிநேர பிரயாணத்திற்குப் பிறகு தன் சொந்த கிராமமான தென்றலூரின் எல்லைக்குள் நுழையும் போதே ஒருவித இனம் புரியாத மனநிலையுடன் இருந்த ஆரியன் நிஷாலினியின் புறம் திரும்பி பார்த்தான்,
அவளோ அன்றவிழ்ந்த புத்தம் புது மலரென விளைந்த அழகோவியம் போல் கண்கள் விரிய பசுமை நிறைந்த வளங்களின் செழுமையில் மதி மயங்கி வெறிக்க வெறிக்க வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள்,
அந்நேரம் அதுவரை சீறிப் பாய்ந்து சென்று கொண்டிருந்த காரின் வேகத்தை சற்றே நிதானப் படுத்தினான், இயற்கை அரண் எய்திய அடர்ந்த தென்னை மரத்தோப்பின் மத்தியில் இருந்த பெரிய வீட்டின் வாசலுக்குள்ளே கார் நுழையும் பொழுதே அங்கு மக்களின் கூட்டம் தென்பட்டது,
வாசலின் அருகே வந்ததும் வண்டியை நிறுத்தியவன் கரை விட்டு இறங்கி வந்து அவள் இறங்க கதவைத் திறந்து விட்டான், மறுப்பேதும் சொல்லாமல் கீழே இறங்கயவளைச் சுற்றிலும் அந்த கூட்டம் மொய்க்க ஆரம்பிக்க,
அதுவரை அமைதியாக வந்த நிஷாலினிக்கு பயமும் பதற்றமும் ஒருசேர வந்தது, புது மனிதர்களும் புது சூழலும் அவளுக்கு அச்சத்தை அளிக்க, அருகே நின்றவனின் பின்னால் மறைந்து கொண்டாள், அதைப் பார்த்த ஆரி, என்ன என்பது போல் கண்ஜாடையில் கேட்க,
“எனக்கு கொஞ்சம் பயமா இருக்கு ஆரி” என்றாள் மெல்லிய குரலில்,
” இவங்க எல்லாரும் உன்னை பார்க்க தான் வந்திருக்காங்க நீ பயப்பட தேவையில்ல நிஷா” என்று அவன் சொல்லிக் கொண்டிருக்கும் போதே,
“இந்தாம்மா மருமகளே எங்கள எல்லாம் பாத்து பயப்பட நாங்க என்ன சிங்கமா, புலியா, நாங்களும் உன்ன மாதிரி மனுஷங்கதாம்மா” என்றாள் தங்கமணி ஆரியனின் பெரியம்மா,
“என்னக்கா புள்ள வந்தும் வராததுமா இப்படி பயமுறுத்துற மாதிரி பேசுற, என்ன இருந்தாலும் நம்ம எல்லாரையும் இப்ப தானே மொதமுறயா பார்க்குறா,
அப்போ கொஞ்சம் பயப்படதானே செய்வா, போகப் போக எல்லா சரியாகி சகஜமா பேசுவா, இல்ல கண்ணு” என்று பரிவாக கேட்டாள் ஆரியனின் தாய் ரஞ்சிதம்,
“பொறந்த வீட்டுக்கு இம்புட்டு வருஷ கழிச்சு வீட்டுக்கு வந்த புள்ளைய வாசல்ல நிக்க வச்சு ஆளாளுக்கு பேசிட்டு இருக்கீங்களே, மொதல்ல உள்ள கூட்டிட்டு போங்க” என்றார் ராமநாதன்
ஆரியனின் இளைய தாய்மாமன், அவர் சொல்லிக் கொண்டிருக்கும் போதே கூட்டத்தை விலக்கிக் கொண்டு தள்ளாடியபடியே வந்தாள் ஆரியனின் தாய் வழிப் பாட்டி ஜகதாம்பாள்,
“யாத்தே என்னப் பெத்த ஆத்தா, இந்த வீட்டோட குலசாமி, உன் முகத்த ஒருவாட்டி பாத்துட மாட்டமான்னு தான் ஆத்தா இத்தன வருஷமா உசிர கைல புடிச்சுட்டு இருந்தேன்,
என் சாமி என் தங்கம் உன்னை பாத்துட்டன்டி என்ன பெத்தவளே, அந்த சாமி எனக்கு முகமுழிச்சிருச்சு என் பேத்தி வந்துட்டா” என்று பெருங்குரலில் ஓலமிட்ட ஜகதாம்பாள் பாட்டி,
நிஷாலினியின் கன்னங்களை வருடி, நெட்டி முறித்து தன் நெற்றியில் சொடுக்கிக் கொண்டாள், நிஷாலினிக்கு இந்த அதீத அன்பு புதுமையாகவும், ஒருவித திகைப்பாகவும் இருந்தது,
”ஏத்தா இத்தன பொம்பளைங்க இருந்தும் எதுவும் பண்ணாம இப்படி கல்லு கணக்கா நின்னுட்டா எப்பிடி, வீட்டு வாசலுக்கு வந்த என் குலசாமிக்கு ஆளாத்தி எடுங்கடி,
இதை எல்லாம் நான் புதுசா சொல்லனுமாக்கும்,ஏலா ரஞ்சதா உன் மருகவளுக்கு நீயே உன் கையால ஆளாத்தி எடுத்து உள்ளாறகூட்டிட்டுப் போ” என்று அதட்டல் தோணியில் சொல்ல, ரஞ்சிதம் சிட்டாகப் பறந்தாள்,
இது உன் வீடு ஆத்தா. இத்தனை வருசமா இந்த உசிரு இதோ வருவா, அதோ வருவான்னு தவம் கெடந்துச்சு. இன்னக்கி என் கண்ணு முன்னாடி மகராசி வந்து நிக்கிறியே” என்று பாட்டி விம்மினாள்,
உள்ளே போன வேகத்தில் வந்த ரஞ்சிதம் ஒரு தட்டில் சுண்ணாம்பும் மஞ்சளும் கலந்த நீரை எடுத்து வந்து, நிஷாலினிக்கு திருஷ்டி கழித்து ஆரத்தி எடுத்தார்,
”வாம்மா வலது காலை எடுத்து வச்சு உள்ள வா” என்று ரஞ்சிதம் கனிவோடு சொல்ல, தயக்கத்தோடும் பயத்தோடும் ஆரியனைப் பார்த்தாள், அதைக் கவனித்த அருகில் நின்ற தங்கமணி,
“நீ என்னம்மா நாங்க எது சொன்னாலும் அவனையே பாக்குற, மச்சா சொன்னா தான் உள்ள வருவியோ, எப்பா ஆரி இந்த புள்ளை நாங்க சொன்னா கேட்காது போல நீயே உள்ளாற கூட்டிட்டுப் போ” என்றாள்,
ஆரியன் நிஷாவை கண்களால் பேசி உள்ளே போகச் சொல்ல, எதும் பேசாமல் நிஷாலினி மெல்ல அடி எடுத்து வைத்தாள், ஆரியன் வீட்டினுள் வராமல் வாசலிலேயே நின்று கொண்டான்,
“இந்த பாருங்கடி கூத்த, நாம சொல்லி கேட்காதவ, அவன் சும்மா பாத்ததுக்கே உடனே உள்ள போறா” என கிராமத்து பாணியில் கிண்டலடித்து சிரித்தாள் தங்கமணி,
நிஷா உள்ளே நுழைந்ததும் அங்கிருந்த பெரிய ஹால் போன்ற அமைப்புடன் கூடிய முற்றமும் கலைநயமிக்க வேலைபாடுகளையும் கண்டு வியந்தாள்,
பழமையான கம்பீரமான தோற்றத்தில் உள்ள பெரிய வீடு வீடு என்பதை விட பெரிய பங்களா என்றே சொல்லலாம்,
நிஷாலினியை கண்ட வீட்டார்களுக்கு கையும் ஓடவில்லை காலும் ஓடவில்லை, அளவு கடந்த பாசத்தின் கண்களில் பூத்த நீரை துடைத்துக் கொண்டே நின்றிருந்தனர்,
“எம்மா ஏய் என்ன எல்லாரும் அப்பிடியே நிக்கிறீங்க, ரொம்ப தூரத்துல இருந்து பிரயாணப் பட்டு வந்த புள்ளைக்கு பசிக்குமில்ல, மொதல்ல குடிக்க ஏதாவது குடுங்க சிட்டில இருந்து வேற வந்திருக்கா,
அவளுக்கு நம்மூரு சாப்பாடு ஒத்துக்குமா இல்லையான்னு தெரியல, அந்த புள்ளைக்கு என்ன வேணும் ஏது வேணும்னு கேட்டு பார்த்து பண்ணி குடுங்க,
அவ இந்த வீட்டோட மகாலட்சுமி அவளுக்கு ஒரு குறையும் இருக்கக் கூடாது” என்று வீட்டுப் பெண்களைப் பார்த்துச் சொன்னார்,
“சரிங்க மாமா இனிமே அவ என்ன கேக்குறாளோ அதுதான் நம்ம வீட்டு சமையல் போதுமா” என்று கணவனுக்கு பதில் சொன்ன சிவகாமி, நிஷாவிடம் வந்தாள்
“அம்மாடி நான் யார் தெரியுமா, நான்தான் உன்னோட சித்தி,
எங்க யாரையும் உனக்கு தெரிஞ்சிருக்க வாய்பில்லம்மா, ஆனா உன்னை எங்க எல்லாருக்குமே தெரியும்,
இத்தனை வருஷமா நீ எப்படி இருப்ப கருப்பா சிவப்பா அவ்வளவு ஏன் நீ ஆணா பொண்ணானு கூட தெரியாம இருந்துட்டோம்” என்று கூறும் போதே கண்களில் கண்ணீர் பெருக்கெடுக்க அதை சேலைத் தலைப்பில் துடைத்துக் கொண்டு,
“போனது போகட்டும் இனிமே என் ராசாத்திய தாங்குறது தான் என்னோட முழுநேர ஜோலியே, உனக்கு என்ன புடிக்குமோ அதை எல்லாம் செஞ்சு குடுத்து கவனிக்கிறதை விட எனக்கு எந்த ஜோலியும் இல்லத்தா” என்று தன் பாசத்தைக் கொட்டினாள்,
வீட்டிலும் அக்கம் பக்கத்திலும் உள்ள உறவுக்காரர்கள் முதல் ஊர்க்காரர்கள் வரை அனைவரும் நிஷாவிடம் வந்து தங்களின் அன்பையும் பாசத்தையும் கொட்டித் தீர்க்க அதை எல்லாம் நம்பவும் முடியாமல் ஏற்கவும் முடியாமல் திணறிப் போனாள் நிஷா,
“இந்தாடியாத்தா இனிமே இந்த பாட்டி இருக்கேன், உனக்கு வேண்டியதைச் செஞ்சு தரேன், குடிக்க இளநி வேணுமா, இல்ல பசும்பால் கறந்து எடுத்துட்டு வரச் சொல்லவா” என்று பாட்டி ஒருபுறம் பாசமழையில் நனைக்க,
“ஏலா மாரி, தோட்டத்துல இருக்கிற வேலனுக்கிட்ட சொல்லி, ஊருக்கே சேதி சொல்லச் சொல்லு, நம்ம வீட்டுப் பொண்ணு வந்தாச்சுன்னு, இன்னக்கி ராத்திரி ஊருக்கே விருந்து வைக்கனும்,
என் மருமக வந்ததை திருவிழாவா கொண்டாடனும், ஒருத்தி வீட்ல கூட ஒல வைக்கக் கூடாது, எல்லாருக்குமே இங்க தான் விருந்து” என்று ரஞ்சிதம் சொன்னதும் மாரி வேலனுக்கு தகவல் சொல்ல ஓடினாள்,
ஒருபுறம் உற்றத்தாரும் சுற்றத்தாரும் நிஷாலினியை புடைசூழ்ந்து கொண்டு அன்பையும் கனிவையும் மாறி மாறி காட்டிக் கொண்டிருக்க, மறுபுறம் கேட்பாரற்று வாசலில் நின்ற ஆரியனை இருமீன்விழிகள் தூண்டில் பார்வையை அவன் மேல் பதித்திருந்தது,
தன் மேல் விழும் பார்வையை அவன் கண்டும் காணாதது போல் இருக்க, மீன்விழிகளின் சொந்தக்காரியான பூவிதழினிக்கு பெருத்த ஏமாற்றமே மிஞ்சியது,
பலநாட்களாக பிரிவின் பிடியில் சிக்கி, இன்று தான் மீண்டிருக்கிறாள், தன் நேசத்திற்கு சொந்தக்காரனைக் கண்டதும் துள்ளிக் குதித்து வந்தவளுக்கு அவனால் ஏற்பட்ட புறக்கணிப்பு பெரும் அவஸ்த்தையையே தந்தது,
மூச்சுக்கு முன்னூறு தரம் இதழு இதழு என அழைக்கும் அவன் அழைப்பை கேட்க ஆவலாக வந்தவளிடம் சிறு புன்னகையோ சிறு பார்வை பரிமாற்றமோ செய்யாமல் போனிலேயே பேச்சு வார்த்தைகளை நடத்தியவாறு நின்றிருந்தான்,
மருந்துக்குக் கூட அவள் இருக்கும் திசைப் பக்கம் திரும்பி பார்க்கவில்லை, அதில் மேலும் ஏமாற்றமடைந்து நொந்து போனாள் பூவிதழினி,
இதைவிட அவள் மனமுடைய காரணம், நிஷா அங்கு வந்தது முதலே நிஷா அவனையே பார்த்துக் கொண்டிருப்பதும், ஆரி நிஷாவிடம் பார்வையால் தைரியமூட்டுவதையும் பார்த்து கலங்கினாள்,
பலநாள் பிரிவின் முடிவில் தன்னவன் தன்னைத் தேடி வந்து கட்டி பிடித்து ஏக்கத்தை தனிப்பான் என்றிருந்தவளுக்கு அவனின் ஒதுக்கல் தாங்க முடியாத ஒன்றானது, வீட்டாருக்கு மத்தியில் அவனை நெருங்கவும் முடியவில்லை,
கண்களில் நீர் கோர்த்து நிற்க, இனியும் தாங்க முடியாது என்றான நிலையில் வேகமாக தன்னறைக்கு ஓடினாள், அவள் ஓடுவதை பார்த்து காரணமறிந்த ஆரி உள்ளளவில் உடைந்தான்,
தன் கண் முன்னே தன் காதல் கரைந்து போனதை அவனாலும் ஏற்கத்தான் முடியவில்லை, என்ன செய்ய விதியின் சதியில் நடந்த விபத்தால் நிஷாவின் கழுத்தில் மூன்று முடிச்சிட வேண்டிய சூழ்நிலைக் கைதியானான் ஆரியன்,
நேசித்தவளின் வலியை அறியா பேதையல்ல அவன், ஆயினும் நடந்ததை மாற்றும் சக்தியற்று நிற்கிறான்,
அவனின் இந்த முடிவுக்குப் பின்னால் ஏதேனும் வலுவான காரணம் இருக்கக்கூடுமோ?
தொடர்ந்து வாசிப்போம் வாங்க
