வலியை சூடிய காதலே – 30

என் வார்த்தைகள் மௌனமாகும் தருணங்களில், என் மௌனத்தின் அர்த்தத்தை அறிவாயா காதலே…!

வலியை சூடிய காதலே – 30

“ஊர் பஞ்சாயத்தை கூட்டி எல்லாரையும் வரவச்சுட்டு இப்படி ஆளாளுக்கு எதுவும் பேசாம இருந்த என்ன அர்த்தம், யாராவது ஏதாவது சொல்லுங்க” என்று ஊரில் ஒரு பெரிய மனிதர் கேட்க, 

“அதான எப்பா டாக்டரு நீதான பிராது குடுத்த அப்போ என்ன ஏதுன்னு நீயே சொல்லுப்பா” என்றார் ஊர் பெரியாள், தனக்கு எதிரே நிற்கும் தாத்தாவையே பார்த்துக் கொண்டிருந்த ஆரி,

“நான் சொன்னதுக்காக மறுத்து பேசாம பஞ்சாயத்தை கூட்டின, ஊர் பெரியவங்க எல்லாருக்கும் ரொம்ப நன்றி, நான் எதுக்காக பஞ்சாயத்தை கூட்டிருக்கேன்னா யாரோ ஒருத்தர் பண்ண தப்புக்கு,

எந்த தப்பும் பண்ணாத இன்னொருத்தங்க எதுக்காக தண்டனை அனுபவிக்கனும், கடந்த இருபத்திநாலு வருஷமா என் அம்மாவும் அப்பாவும் பிரிஞ்சு இருக்காங்க, 

அதுக்கு காரணம் எங்க தாத்தா செல்லத்துரை, அவருக்கு அவரோட பொண்ணு வாழ்க்கை மேல இருந்த அக்கறையா இல்ல என் அம்மா ரஞ்சிதத்து மேல இருந்த வெறுப்பான்னு தெரியல,

ஆனா எந்த காரணமா இருந்தாலும் அவர் பண்ணது பெரிய தப்பு, அதை அவர் ஏத்துக்கிட்டாலும் சரி இல்லைன்னாலும் சரி இது தான் உண்மை, அவரோட வார்த்தைக்கு கட்டப்பட்டு தான் என் அப்பா என் அம்மாவை பிரிஞ்சு இருக்கார்,

எனக்கு என் அம்மா அப்பா இரண்டு பேரும் ஒன்னா இருக்கனும், இந்த ஊர்க்கே நல்லது கெட்டது பிரிச்சு பார்த்து சொல்ற பெரியவங்க உங்க எல்லாகிட்டயும் அவங்க இரண்டு பேரை சேர்த்து வைக்க சொல்லி கேட்டுக்கிறேன்” என்று ஆரி சொல்ல,

அணலைக் கக்க காத்திருக்கும் எரிமலை போல தன் பேரனைப் பார்த்தார் செல்லத்துரை, அவரின் பின்னால் ராஜதுரை நின்று தன் மனைவியைப் பார்த்தார், கண்களில் வழிந்த நீரை முந்தானையால் துடைத்தபடியே நின்றிருந்தாள் ரஞ்சிதம்,

அவளுக்கு ஆதரவாக அவளருகே நிஷா நின்றிருந்தாள், அதுமட்டுமல்லாமல் ஜகதாம்பாள் பாட்டி, ராமநாதன், தங்கமணி என ரஞ்சிதம் சார்ந்த அனைவரும் இருக்க, அவர்களின் கடைசியில் பூவிதழினி நின்றிருந்தாள்,

“மண்ணையும் பொண்ணையும் சாமியா நினைச்சு தானய்யா கலங்காலமா இந்த மண்ணுல வாழ்த்துட்டு இருக்கோம், நம்ம பாட்டன் முப்பாட்டன் பூட்டன் ஓட்டன் காலத்துல இருந்து,

ஒரு பொண்ணு கண்ணீரோட நின்னு அழுதா இறங்காத சாமி கூட மலையிறங்குமுன்னு ஆயிரம் அருமை பெருமை நிறைஞ்ச நம்ம மண்ணுல ஒரு பொண்ணு மனசொடைஞ்சு கண்ணீரோட நின்னா,

நாளைப் பின்ன மழை தண்ணி தான் பெய்யுமா, இல்ல பூமி தான் முப்போகமும் வெளையுமா, ஒரு பொண்ணு பெத்தவங்க வீட்ல இருக்குற வரைக்கும் தான் அவங்க வீட்டுப் புள்ள, 

ஒருத்தன் கைப்பிடிச்சு தாலி கட்டிக் குடுத்துட்டா, அதுக்கப்புறம் அவ கட்டுனவனுக்கு பொண்டாட்டி மட்டும் இல்ல கட்டுனவன் வீட்டோட கௌரவம்” என்று ஊர் பெரியவர் குரலை உயர்த்தினார்,

​அவர் பேசி முடிக்கும் முன்பே செல்லத்துரை ஆவேசமாக முன்னே வந்தார்,

​”நிறுத்துங்க, கௌரவத்தைப் பத்தி நீங்க யாரும் எனக்குச் சொல்லிக் கொடுக்க வேண்டிய அவசியமில்ல, என் பொண்ணு பரிமளத்தோட சேர்த்து என் கௌரவமும்  போயிடுச்சு

போன கௌரவத்தை யாராவது மீட்டு குடுக்க முடியுமா, இதெல்லாம் யாரால வந்துச்சு, அந்த சக்கிரவர்த்தி குடும்பத்தால தான அப்போ அங்க இருக்கிறவங்க தண்டனை அனுபவிக்கிறதுல என்ன தப்பு” என்று அதட்டி கேட்டார்,

ஆரி சட்டென குறுக்கிட்டான்,

“பெரிய தப்பு தாத்தா, ஒருத்தன் பண்ண தப்புக்கு ஒட்டுமொத்த குடும்பத்தையும் பழிவாங்குறது தப்பு தான், இதுக்கெல்லாம் உங்க பிடிவாதம் மட்டும் தான் காரணம். 

உங்க கோபத்தால வாழ வேண்டிய வயசுல வாழ்க்கையை தொலைச்சுட்டு இப்ப வரைக்கும் என் அம்மா அப்பா இரண்டு பேரும் பிரிஞ்சு திசைக்கு ஒருத்தரா இருக்காங்க, 

இனி அப்படி இருக்கக் கூடாது மீதி இருக்கிற காலத்துலயாவது அவங்க ஒன்னா சேர்ந்து வாழனும், அதுக்காக தான் பஞ்சாயத்தை கூட்டிருக்கேன்” என்று அடித்துப் பேசினான் ஆரி,

​ரஞ்சிதம் விம்மி விம்மி அழத் தொடங்க, நிஷா அவள் கையை இறுகப் பற்றினாள், 

ராஜதுரைக்கு கலக்கமாக இருந்தது, அன்பு மனைவி ஒருபுறம் அரசனாக தந்தை ஒருபுறம் என இருவருக்குமிடையே சிக்கித் தவித்தார்,

“படிச்ச பைய அதான் பாயிண்டா பேசுறான்ய்யா, டாக்டரு தம்பி சொல்றதுல என்ன தப்பு இருக்கு, ராஜதுரைக்கும் ரஞ்சிதத்துக்கும் விருப்பம் இருந்தா சேர்ந்து வாழ்ந்துட்டு போகட்டுமே, இதுல என்ன குத்தம்,

அம்மாடி ரஞ்சிதம் உனக்கு உன் புருஷன் ராஜதுரை கூட சேர்ந்து வாழ சம்மதமா, நீ பயப்படாம தைரியமா சொல்லுத்தா, உங்கூட இந்த ஊரே துணையா நிக்கும், 

போதாததுக்கு உன் மவன் டாக்டரு இருக்காருல்ல சொல்லுத்தா ராஜதுரை கூட சேர்ந்து வாழ்றியா இல்லியா” என்று ஊர் பெரியாள் கேட்க,

“அதான் கேக்குறாங்க இல்ல, ஓகேன்னு சொல்லுங்க அத்தை, மாமா கூட வாழ ஓகே சொல்லுங்க” என்றாள் நிஷா, ரஞ்சிதம் எதுவும் சொல்லாமல் அழுது கொண்டிருக்க

“இங்க பாருத்தா நீ சொல்ற பதில்ல தான் நாங்க தீர்ப்பு சொல்ல முடியும், இம்புட்டு வருஷமும் உனக்கு புருஷன் கூட சேர்ந்து வாழ புடிக்காம தான் பிரிஞ்சு இருக்கேன்னு நினைச்சுட்டு இருக்கோம்,

யாரைக் கண்டும் பயக்காம பட்டுன்னு ஒரு பதிலச் சொல்லுத்தா, இப்பவே உன் புருஷங்கூட சேர்ந்து வைக்கிறோம்” என்று பஞ்சாயத்தாரே கேட்க, 

கண்களில் வழிந்த நீரை உதறிவிட்டு நிமிர்ந்து ஒருதரம் கணவனை நேருக்கு நேராக பார்த்தவள்,

“எங்களுக்கு கல்யாணமாகி இம்புட்டு வருஷத்துல ஒரு நாள் ஒரு பொழுது கூட என் புருஷன் கூட வாழ மாட்டேன்னு நான் சொல்லவே இல்ல, 

தனிக்கட்டயாவே நின்னு காலத்தை கழிச்சுட்ட, இன்னும் எத்தனை காலம் உயிரோட நடமாடப் போறேனோ தெரியல, அதுவரைக்குமாச்சு என் புருஷன் மறைப்புல கஞ்சி குடிக்க,

குடுப்பனை இருந்தா போதும்னு நினைக்கிறே, அவரு மனசுல என்ன இருக்கோ தெரியல, அவரோட விருப்பம் எப்படியோ என் பொழப்பு அப்படியே போகட்டும்” என்று

ரஞ்சிதம் சொல்லி முடித்ததும் ஊரே ராஜதுரையைப் பார்க்க, அவர் ஒரு நிமிடம் தன் தந்தை செல்லத்துரையின் முகத்தைப் பார்த்தார், அங்கே இன்னும் அதே கனல் குறையாமல் இருந்தது. ஆனால்,

 தன் மனைவியின் இத்தனை காலக் கண்ணீரும், மகன் ஆரியின் நேர்மையான கோபமும் அவர் மனசாட்சியைத் தட்டியது,

​பஞ்சாயத்து பெரியவர் ராஜதுரையை நோக்கித் திரும்பினார்,

“என்ன ராஜதுரை… ரஞ்சிதம் மனசைப் பட்டுன்னு சொல்லிட்டா, அவளுக்கு உன் கூட வாழ ஆசை இருக்கு, ஆனா உன் மனசுல என்ன இருக்கு, 

இம்புட்டு வருஷம் ஒரு பொண்ணோட பொழப்பை வீணடிச்சது போதும்ய்யா போய் கூட சேர்ந்து வாழ்ற வழியப் பாருய்யா” என்றார் பெரியாள்,

“இரண்டு குடும்பமும் ஊர்ல பெரிய தலைக்கட்டு, உங்களுக்குள்ள நீங்களே மனஸ்தாபத்தை வளர்த்துக்கிட்டு இருந்தா அது உங்களுக்கும் நல்லதில்ல ஊருக்கும் நல்லதில்ல, 

நீங்க எல்லா ஒத்துமையா இருந்தா தான ஊர் ஒன்னுபடும்” என்று ஆதங்கமாக ஒரு வயாதன பெரியவர் சொல்ல, 

ராஜதுரை அமைதியாக தகப்பனின் பின்னால் நின்றார், அதனால் அங்கே பெரும் சலசலப்பே ஏற்பட்டது, செல்லத்துரை மகனைத் திரும்பி பார்த்தார்,

“டேய் மவனே, அவளும் வேண்டா அவ கூட பொழைக்கிற பொழப்பும் வேண்டாம்ன்னு சொல்லிட்டு துண்டை உதறி தோள்ல போட்டுட்டு வாடா போலாம்” என்றார், ஆரிக்கு கோபம் வந்தது,

“ஓ அப்படியா, எங்க உங்க மகன் அந்த வார்த்தையை சொல்ல சொல்லுங்க பாக்கலாம், சொல்லிட்டு போயிடுவீங்களோ, உங்க உடம்புல ஓடுற அதே ரத்தம் தான் என் உடம்புலயும் ஓடுது,

அப்படி மட்டும் சொல்லிப் பாருங்க, அப்புறம் நான் யாருன்னு பார்ப்பீங்க, பெரியவர்களை மதிச்சு மரியாதையா பேசனும்னு நினைக்கிற, அதை நீங்களே கெடுத்துக்காதீங்க” என்று தாத்தாவிடம் எகிறியவன், தந்தையின் முன் வந்து நின்றான்,

“இன்னும் ஊமையா இருந்து என்ன சாதிக்க போறீங்களா, இங்க சில விஷயத்தை உடைச்சு பேசினா தான் எல்லாமே கிடைக்கும், நான் பொறந்த இத்தனை வருஷத்துல என்னிக்காவது,

ஒருநாள் ஒரு நல்ல அப்பாவா இருந்திருக்கீங்களா, இல்ல தாலி கட்டுன மனைவிக்கு தான் ஒரு சரியான கணவனா இருந்திருக்கீங்களா, இரண்டுமே இல்ல,

நீங்க எப்பவுமே உங்க அப்பாவுக்கு மகனா மட்டும் தான் இருந்திருக்கீங்க, ஆனா நீங்களும் ஒரு மகனோட அப்பாங்கிறதை மறந்துட்டீங்க இல்ல, எங்கே உங்க நெஞ்சுல கையை வச்சு,

அம்மா முகத்தை நேருக்கு நேரா பார்த்து அவங்க மேல பாசமே இல்ல, உன் கூட வாழ பிடிக்கலைன்னு சொல்லுங்க, சொல்லி பாருக்கப்பா, 

சத்தியமா சொல்றேன் உங்களால சொல்ல முடியாது, நீங்க சொல்லவும் மாட்டீங்க ஏன்னா உங்களுக்கு அவங்கள அவ்ளோ பிடிக்கும், உங்க அப்பாவோட வீண் பிடிவாதத்துக்கும், 

வறட்டு கௌரவத்துக்கும் தேவையே இல்லாம பலியானது நீங்க தான், அவர் சொன்ன வார்த்தைக்காக உங்க பொண்டாட்டிய வேணான்னு விட்டுட்டீங்களே, என்னிக்காச்சும் ஒரு நாள் முழுசா ஒரு நாளாவது,

உங்க அம்மாவும் அப்பாவும் பிரிஞ்சு போய் பார்த்திருக்கீங்களா, அவங்களுக்குள்ள ஆயிரம் சண்டைகள் வரும், கொஞ்ச நேரத்துல சரியாகி பேசிடுவாங்க,

அவரோட வயசுக்கே அவர் இவ்ளோ நல்ல புருஷனா இருந்திருக்கார்ன்னா அவரோட பையன் உங்களுக்கு ஏன் உங்க பொண்டாட்டி நியாபகமே இல்லாம போச்சு” என்று மகனின் கேட்ட கேள்விகள் சாட்டையில் அடித்தது போல் வலித்தது,

“என்னடா ஏதேதோ பேசி மயக்கி என் மவன் மனச கலைக்க பாக்குறியா, என்ன சொன்ன உன் உடம்புல ஓடுறது எங்க ரத்தமா, ஆனா அதுல அந்த சக்கிரவர்த்தி குடும்பத்தோட ரத்தமும் சேர்ந்தே இல்ல ஓடுது,

அதான் நீ இப்படி ஊர் முன்னாடி பஞ்சாயத்தை கூட்டி என் மானம் மரியாதை கௌரவம் எல்லாத்தையும் முச்சந்தியில நிக்க வச்சிருக்க, உன் மகுடிக்கு என் மவன் மசிய மாட்டான்டா,

உனக்கு வேணா நடந்தது எதுவும் தெரியாம இருக்கலாம், ஆனா பச்சை மரத்துல ஆணியடிச்ச மாதிரி அந்த குடும்பத்தால நான் பட்ட கஷ்டம் மறையாதுடா” என்று செல்லத்துரை சொல்லவும்,

“என்ன பெரிய கஷ்டம் இல்ல தெரியாம தான் கேக்குறேன் இன்னும் எத்தனை நாளைக்கு முடிஞ்சு போன விஷயத்தையே சொல்லி சொல்லி எல்லாரோட வாழ்க்கையையும் கெடுப்பீங்க,

நீங்களா முடிவு பண்ணி தானா இரண்டு பேருக்கும் கல்யாணம் பண்ணி வச்சீங்க, நீங்க சொன்னா உடனே இரண்டு பேரும் தாலிய கட்டி ஒன்னா கூட வாழனும், 

உங்களுக்கு பிடிக்கல வேண்டாம்ன்னா என்ன ஏதுன்னு கேள்வி கேட்காம பிரிஞ்சு போயிடனுமா, எல்லா முடிவையும் நீங்களே எடுத்தா அதுல வர்ற கஷ்டம் யாருக்குன்னு ஒருவாட்டியாவது யோசிச்சு இருப்பீங்களா,

உங்க பேச்சை கேட்டு வாழ்ந்து பிரிஞ்சு போனது உங்க மகனும் மருமகளும் தான, இதுல இடையில நான் யாருக்கு என்ன பாவம் பண்ணேன், என்னை எதுக்காக தண்டிச்சீங்க,

கண்ணு முன்னாடியே அம்மா அப்பா இரண்டு பேர் இருந்தும் நான் ஏன் அநாதையா வளர்ந்தேன், நான் பிறந்ததுல இருந்து என்னையே எல்லாருமே சேர்ந்து ஒதுக்கி வச்சீங்க, 

உங்க எல்லாரோட கௌரவம் மரியாதை அது இதுன்னு சொல்லி என்னை ஏன் கஷ்டப்படுத்துனீங்க” என்றவன் கண்களில் இருந்து முதல் சொட்டுக் கண்ணீர் வழிந்து கன்னத்தில் இறங்க அதைக் கண்டு துடித்தாள் நிஷா,

அத்தனை ஆட்கள் நிறைந்த சபையில் ஆரியின் கேள்விகளுக்கு யாரிடமும் பதிலில்லை, நிஷா ஆரியிடம் வந்து அவன் கண்ணீரைக் காண்கையில் உள்ளமே உடைந்து போனாள்,

அவன் இதுவரை கலங்கி அவள் கண்டதில்லை, எல்லா இடத்திலுமே ஆறுதலாகவும் தைரியமாகவும் பேசுபவன் குரல் உடைந்து கண்ணீரே வர, அதை அவளால் தாங்கிக் கொள்ள முடியவில்லை,

​”ஆரி… ப்ளீஸ் அழாத ஆரி” என்று அவன் கையைப் பற்றினாள் நிஷா, அப்போது தான் நிமிர்ந்து பார்த்த ராஜதுரை,

தன் மகனின் கண்ணில் இருந்து வந்த ஒரு துளி கண்ணீர் அவர் இதயத்தில் ஈட்டியாகப் பாய்ந்தது,

தொடர்ந்து வாசிப்போம் வாங்க

❤️ Loading reactions...
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page