வலியை சூடிய காதலே – 31

காதலே நீ புதிதாக பிறப்பது இல்லை, இனி பிறக்கப் போவதும் இல்லை…!

பேரண்டம் தோன்றும் முன்னமே தோன்றிய காதலே பிறப்பும் இல்லை உனக்கு இறப்பும் இல்லை…! 

காலம் கரைந்து காதலர்கள் மாண்டு மடிந்து காற்றோடு கலந்தாலும் என்றும் நீ அழிவில்லா காதல் தான்…! 

வலியை சூடிய காதலே – 31

“இவன் பேசுறதை கேட்டுட்டு நிற்கனும்னு எனக்கு தலையெழுத்து இல்ல, ஒரு சின்னப் பைய பேச்சைக் கேட்டு பஞ்சாயத்துன்னு கூப்பிட்டாங்க வந்தோம், 

இங்க இவன் பேச்சு சரியில்ல, இவன் தோரணையும் சரியில்ல, என்னவோ பண்ணித் தொலையட்டும் டேய் மவனே இங்க நின்னு என்னத்த பாக்குற வாடா நாம போலாம்” என்றார் செல்லத்துரை,

ஆணி அடித்தாற் போல் நின்றார் ராஜதுரை, மகனை கோபமாக பார்த்த செல்லத்துரை தன் மகனின் கையைப் பிடித்து வீராப்பாக இழுக்க, 

ஆரி மின்னல் வேகத்தில் வந்து தாத்தாவின் மணிக்கட்டை இறுகப் பற்றினான், அவனது விரல்களின் பிடி தாத்தாவின் பிடியில் இருந்த கையை விடுவிக்க போராடினான், 

​”விடுங்க, விடுங்கன்னு சொல்றேன் இல்ல இத்தனை வருஷமா ஒரு பொம்மை மாதிரி உங்க கைக்குள்ள வச்சு ஆட்டி படைச்சதெல்லாம் போதும், இனி அவர் எங்கேயும் வர மாட்டார்” என் ஆரி ராஜதுரைக்கு வக்காலத்து வாங்க, 

“டேய் அவன் என் மவன்டா, என் பேச்சை மீறி மாட்டா, நீ யாருடா எனக்கு என் மவனுக்கு நடுவுல வந்துட்டு, முதல்ல நீ என் கையை விடுடா” என்று சீறினார் செல்லத்துரை, 

“இங்க நான் பேசலாமா இல்லையான்னு கூட தெரியல ஆனாலும் பேச வேண்டிய கட்டாயத்துல இருக்கேன், நான் இங்க வந்து கொஞ்ச நாள் தான் ஆச்சு,

எனக்கே அவங்க இரண்டு பேரும் பிரிஞ்சு இருக்கிறது மனசுக்கு அவ்ளோ கஷ்டமா இருக்கு, ஆனா இதுக்கெல்லாம் காரணமான என் அப்பா எதை பத்தியும் கவலைப்படாம ஜாலி இருக்கார்,

அவருக்கு மகளா பொறந்த ஒரே காரணத்துக்காக, அவர் பண்ண எல்லா தப்புக்கும் நான் மன்னிப்பு கேட்குறேன், உங்களுக்கு கோபம் இருந்தா என்னை தண்டியுங்க,

ஆனா அவங்களை விட்டிருங்க, அத்தை ரொம்ப பாவம் மாமா இல்லாம அவங்க சாப்பிடாம தூங்காம அவர் நினைப்பாவே இருக்காங்க,

அவங்க இரண்டு பேரையும் பிர்ச்சுடாதீங்க, ப்ளீஸ் சேர்த்து வையுங்க, உங்க பொண்ணுக்காக தானே பழிவாங்க நினைக்கறீங்க, இந்நேரம் அவங்க உங்க முன்னாடி நின்னுருந்தா,

என்ன கேட்டிருப்பாங்களோ அதே கேள்வியை தான் உங்ககிட்ட கேட்குறேன், ஏன் இவ்ளோ பிடிவாதம், கொஞ்சம் மனசு இறங்கி வரக்கூடாதா, அவங்க இரண்டு பேரும் வாழ்ந்துட்டு தான் போகட்டுமே விட்டிருங்க ப்ளீஸ்” என்று நிஷா கேட்க, 

பட்டென மகனின் கையை விட்டு விட்டார் செல்லத்துரை, ஆரிக்கே சற்று ஆச்சர்யம் தான்,

“நீ யாரு தெரியுமா என் மக வயித்து மவ, நீயாச்சும் என்னை மாதிரி இருப்பேன்னு நினைச்சேன், ஆனா நீயும் சக்கிரவர்த்தி வீட்டோட வாரிசுன்னு நிரூப்பிச்சுட்ட இல்ல” என்று கோபமாக நிஷாவைப் பார்த்துக் கேட்க, அவளுக்கு உள்ளே உதறல் எடுத்தது,

“நீங்க பண்ற தப்பை தட்டி கேட்டா உடனே சக்கிரவர்த்தி குடும்பத்து ரத்தம், அவங்க வீட்டு வாரிசுன்னு முத்திரை குத்தி ஓரமா நிற்க வச்சிடுவீங்களோ, 

என் அம்மாவும் அப்பாவும் சேர்ந்து வாழ்றதுல உங்களுக்கு என்ன பிரச்சனை, பிடிச்சா சேர்த்துக்கோங்க இல்லையா பிடிக்கிற வரைக்கும் தனியா விடுங்க, அதை விட்டுட்டு தேவையில்லாம பிரச்சனை பண்ணாதீங்க” என்று மல்லுக்கு நின்றான் ஆரி,

“அப்படி எல்லாம் என் மவனை விட்டுட்டு போக முடியாதுடா” என்றார் செல்லத்துரை,

“இப்ப முடிவா என்ன தான் சொல்ல வர்றீங்க” என்று விஷயத்திற்கு வந்தான் ஆரி,

“முடிவா என்னடா சொல்றது, எங்க குடும்பத்துக்கும் சக்கிரவர்த்தி குடும்பத்துக்கும் எந்த ஒட்டும் இல்ல உறவும் இல்ல, முடிஞ்சது முடிஞ்சது தான்” என்று வெட்டிப் பேசி விட்டு நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு நின்றார்,

“அவர் சொல்றதை சொல்லிட்டாரு, இப்ப நான் சொல்றேன், இங்க பாருங்க, உங்களுக்கு அம்மாவும் நானும் வேணும்னு தோணுச்சுன்னா அம்மா பக்கத்துல போய் நில்லுங்க, 

இல்ல என் அப்பா பேச்சு தான் வேதவாக்குன்னு நினைச்சீங்கன்னா இப்பவுமே நாங்க உங்களுக்காக வேண்டாம்ன்னு  சொல்லி தலை முழுகிட்டுங்க, 

நாளைக்கு அம்மாவுக்கோ எனக்கோ ஏதாவது ஆனாக் கூட நீங்க உரிமை உறவுன்னு வரக்கூடாது, அதே மாதிரி உங்களுக்கு ஏதாவது ஆனா மகன்கிற முறையில நான் வரமாட்டேன்,

எனக்கான எந்த கடமையையும் செய்ய மாட்டேன், இதுக்கு சம்மதம்ன்னா நீங்க உங்க அப்பா கூட போகலாம்” என்று கூறி அவர்களை விட்டு தள்ளி வந்து நின்றான் ஆரி,

தந்தைக்கு மகனாக இருப்பதா, அல்லது மகனுக்கு தந்தையாக இருப்பதா என்ற பெரும் போர் அவருள்ளே எழுந்து மாறி மாறி யுத்தம் செய்ததில் இறுதியில் மகனுக்கு தந்தையாக இருப்பதே சிறந்தது என முடிவெடுத்தார்,

ராஜதுரை மெல்லத் திரும்பி ரஞ்சிதத்தைப் பார்த்தார், அவளோ அழுது சிவந்த விழிகளோடு அவரையே பார்க்க, பூமுகம் வாடி வதங்கியதை ஏற்க முடியாமல் மெல்ல அவளை நோக்கி ஒரு அடி எடுத்து வைத்தார்,

​”ராஜதுரை, அங்கேயே நில்லு, நீ அவ பக்கம் போனா, இன்னைக்கோட எனக்கும் உனக்கும் இருக்குற பந்தம் முடிஞ்சுது, நான் செத்துட்டேன்னு நினைச்சுக்கோ” என்று செல்லத்துரை தன் கடைசி ஆயுதமான மிரட்டலைப் பிரயோகித்தார்,

​ராஜதுரை ஒரு நிமிடம் நின்றார். பின் மென்மையாகச் சொன்னார், 

“நான் ஏற்கனவே செத்து பல காலமாச்சுங்கய்யா, இம்புட்டு வருஷ காலமா என் கூடு மட்டுந்தான் நடமாடிட்டு இருக்கு, இருக்கிற கொஞ்ச காலமாவது அவகூடயும் என் மவன் கூடயும் இருந்துக்கிறேனே” என்று கேட்க,

மகனின் வார்த்தைகளைக் கேட்டு எதிர் வாதம் செய்யாமல் துண்டை உதறி தோளில் போட்டுக் கொண்டு, அங்கிருந்து சென்றார்,

தகப்பனின் கோபம் நிச்சயமாக ஒருநாள் தணியும் என்ற நம்பிக்கையோடு அவர் நேராகச் சென்று ரஞ்சிதத்தின் கரங்களை ஊர் அறியப் பற்றிக்கொண்டார், 

அந்தத் தொடுதலில் இருபத்தி நான்கு வருடப் பிரிவின் பாரம் அப்படியே கரைந்து போனது. ரஞ்சிதம் விம்மி அழுதுகொண்டே அவர் தோளில் சாய்ந்தாள்,

​ஊர் பெரியவர்கள் ஒருமித்த குரலில், 

“ராஜதுரை… சரியான முடிவுப்பா!” என்று பாராட்ட, ​ஆரி நிஷாவைப் பார்த்தான், அவள் கண்களில் வழிந்த ஆனந்தக் கண்ணீரை துடைத்து விட்டான், 

பஞ்சாயத்து நன்றாக முடிந்தது என்ற திருப்தியில் அனைவரும் எழுந்து நிற்க, ஊர் பெரியவர்கள் பஞ்சாயத்தார்கள் என அனைவரு‌ம் பொதுமக்களை நோக்கி கை கூப்பி பஞ்சாயத்தைக் கலைத்த அந்நேரம்,

சரசரவென கார்கள் வந்து அங்கே நிற்க, ஊர்க்காரர்கள் அனைவரும் அங்கு வந்து நின்ற காரையே பார்த்துக் கொண்டிருக்க அதில் இருந்து இறங்கினான் தீரண், 

நிஷா தீரணைக் கண்ட மாத்திரத்தில் ஆரியிடம் ஓட்டிக் கொண்டு நின்றாள், அவனை அடையாளம் கண்ட ராஜதுரையும் ரஞ்சிதமும் கோபத்தில் கொதித்தனர்,

கார்களில் இருந்து இறங்கிய அடியாட்கள் ஒருபுறம் நிற்க, கூடவே பக்கத்து கிராமத்தின் மத்தியஸ்தர்கள் சிலபேரும் அவனுடன் வந்திருந்தனர், தீரண் தன் கண்களில் மின்னிய அதே வஞ்சகத்தோடு கூட்டத்தைப் பார்த்தான்,

நிஷாவின் நடுக்கத்தை உணர்ந்த ஆரி அவளை தன் கையைப் பிடித்து தட்டிக் கொடுத்து தைரியம் சொன்னான்,

“நீ.. நீ அன்னிக்கி நீதான எங்களை அடச்சு போட்டுப்புட்டு என் மருமகளை தூக்கிட்டு போனவ நீதான” என்று ரஞ்சிதம் நடுமாற்றத்துடன் கேட்க,

“இதுல என்ன சந்தேகம் அது இவனே தான், உன்னை அன்னிக்கே வெட்டிக் கூறு போட்டிருந்தா இன்னைக்கி தெனாவெட்டாக இங்க வந்து நின்னிருப்பியாடா” என்று ராஜதுரை பாய,

“ஐயா மன்னிச்சிருங்க, அன்னிக்கி ஏதோ தெரியாம பண்ணிட்டேன் அதுக்காக உங்ககிட்ட எல்லாம் மன்னிப்பு கேட்க தான் திரும்பி வந்தேன், மத்தபடி கத்தி சண்டை போட்டு கலாட்டா பண்ண வரலைங்க” என்று பவ்வியமாக சொன்னான் தீரண்,

“ஊரே கூடி நிற்கிற சபையில, ஒருத்தன் வந்து கை கட்டி நின்னா அவனை அடிக்கப் பாயுறது நம்ம வீரத்துக்கு பெருமையில்ல, எதுவா இருந்தாலும் பேசித் தீத்துக்கலாம்னு தான் தம்பி எங்கள இங்கண கூட்டியாந்துச்சு, 

நாங்களும் தம்பி பக்க நியாத்தைச் சொல்லி சமாதானம் பேசிட்டு அப்படியே நம்ம அங்காளி பங்காளி மாமன் மச்சின்னு எல்லாரையும் ஒரு எட்டு பார்த்துட்டு போலாம்னு தான் வந்திருக்கோம்” என்று ஒரு வயதானவர் சொல்ல,

அவரை ஏற்கனவே தெரிந்திருந்த ஊர் பெரியவர்கள் மரியாதையுடன் வரவேற்று மீண்டும் பஞ்சாயத்தை தொடங்கினர்,

இந்த இடத்துல இப்படியே விட்டுட்டு காட்டுக்குள்ள போலீஸ் அர்ரெஸ்ட் பண்ண தீரண், இப்போ எப்படி திடீர்ன்னு பஞ்சாயத்துக்கு வந்தான்னு வாங்க ஒரு எட்டு போய் பார்த்து தெரிஞ்சுட்டு வந்திரலாமுங்கோவ்,

“சாரி சார் நீங்க யாரு என்னன்னு தெரியாம அர்ரெஸ்ட் பண்ணிட்டேன், லேடீஸ் விஷயம்ங்கிறதால தான் என்னால சரியா விசாரிக்க முடியாம உடனே ஆக்சன் எடுத்துட்டேன்” என்று போலீஸ் இன்ஸ்பெக்டர் தீபக் சொல்ல,

“இட்ஸ் ஓகே இன்ஸ்பெக்டர், ஆனா உன்னால எனக்கு ஒரு காரியம் ஆகனுமே” என்று கேட்டான் தீரண்,

“எதுவா இருந்தாலும் சொல்லுங்க சார்” என்றார் இன்ஸ்பெக்டர்,

“அது ஒன்னு இல்ல, எனக்கு என் நிஷா வேணும், அவ மட்டும் தான் வேணும் நீ என்ன பண்ணுவியோ ஏது பண்ணுவியோ அவளை கொண்டு வந்து எங்கிட்ட குடு” என்று பல்லை வெறுகிக் கொண்டே சொன்னான் தீரண்,

“சார் அது நீங்க நினைக்கிற மாதிரி அது அவ்ளோ ஈசி இல்ல, ஏதோ உங்க லக் உங்கள காப்பாத்தி இருக்கு, அந்த ஊருக்குள்ள போய் பொண்ணை தொட்டதுக்கே உங்கள உயிரோட விட்டதே பெரிய விஷயம்,

இப்படியே அந்த பொண்ணை தேடி போனீங்கன்னா நிச்சயமா வெட்டி பொதைச்சிடுவாங்க நீங்க நினைக்கிற மாதிரி இது சிட்டி இல்ல சார் கிராமம், ஒரு சின்ன பிரச்சனைன்னா எல்லாரும் ஒன்னு கூடிருவாங்க,

அந்த டாக்டரு படிச்ச பையங்கிறதால தான் உங்கள சட்டபடி எங்ககிட்ட ஒப்படைச்சான், இதே வேற ஒருத்தனா இருந்தா நீங்க வந்த தடம் கூட இல்லாம பண்ணிடுவாங்க சார்” என்று இன்ஸ்பெக்டர் எடுத்துச் சொல்ல,

“என்ன ரொம்ப பில்டப் பண்ற, எனக்கு என் நிஷா வேணும் அதுக்கு என்ன பண்றது” என்று தீரண் கேட்க,

“அதுக்கு கத்தியோட போக கூடாது சார், புத்தியோட தான் போகனும்” என்றார் தீபக்,

“எதா இருந்தாலும் கொஞ்சம் புரியற மாதிரி சொல்லு” என்று தீரண் கேட்க,

“அந்த ஊர்ல ஒரு பிரச்சனைன்னா போலீஸ் ஸ்டேஷனுக்கு கோர்ட்டுக்கோ போக மாட்டாங்க, அதே ஊர்ல இருக்கிற பெருசுகளை வச்சு பஞ்சாயத்து பண்ணி பிரச்சனைய தீர்த்துக்குவாங்க” என்று இன்ஸ்பெக்டர் சொல்ல, இடையில் புகுந்தான் தீரண்,

“இப்ப என்ன நானும் போய் பஞ்சாயத்துல கைகட்டி ஐயா சாமின்னு நிற்கனுமா” என்று தீரண் கடுப்பானான்,

“நீங்க கற்பூரம் சார் எப்படி கப்புன்னு புடிச்சீங்க, அந்த ஊர்ல நீங்க கத்தியைத் தூக்கினா அவங்க அரிவாளைத் தூக்குவாங்க, அதே நியாயம்னு சொல்லி நாலு பெரிய மனுஷங்களைக் கூட்டிட்டுப் போய் நின்னா, 

அவங்க ஊர் கௌரவத்துக்காகக் கட்டுப்படுவாங்க, அங்க வச்சு பேசுற விதத்துல பேசினா கண்டிப்பா நீங்க நினைச்சது நடக்கும்” என்று இன்ஸ்பெக்டர் சொல்ல,

“அப்போ சரி இப்ப உடனே போனா சரி வராது, முதல்ல அங்க என்ன நிலவரம்னு தெரிஞ்சுக்கிட்டு சரியான நேரத்துல களத்துல இறங்கனும், 

எனக்கு அந்த ஊர்லயே ஒரு ஆள் கிடைச்சா அங்க என்ன நடக்குதுன்னு தெரிஞ்சுக்கலாம்” என்றான் தீரண்,

“அந்த ஊருக்குள்ள ஆள் வச்சா நாளை பின்ன அவன் நமக்கு எதிராவே திரும்ப வாய்பிருக்கு சார்,அதனால வெளில இருந்து ஒரு ஆளை போட்டு வாட்ச் பண்ண சொல்லலாம்” என்று தீபக் சொல்ல,

நல்ல யோசனை என்று நினைத்தவன், ஆரியனின் அசைவுகளை கண்காணித்தபடியே, தன் நரித்திட்டத்தை நிறைவேற்றும் நாளுக்காக காத்திருந்தான், அவனுடைய நேரமும் வந்தது, இதோ அவனும் வந்து விட்டான்,

அவனின் திட்டம் என்னவாக இருக்கும்?

நிஷாவின் நிலை என்னவாகும்?

ஆரி தீரணின் தாக்குதலை எப்படி தகர்த்தெரிவான்?

இவர்களின் மத்தியில் பூவிதழினி என்ன செய்வாள்?

தொடர்ந்து வாசிப்போம் வாங்க

❤️ Loading reactions...
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page