வலியை சூடிய காதலே – 34

உனக்காக விழியோரம் கசியும் கடைசி துளியோடு முற்று பெறுகிறேன்,

என் முதலும் முடிவும் நீயே

என் வலியை சூடிய காதலே…!

வலியை சூடிய காதலே  –  34

இளஞ்சிவப்பு வர்ணத்தைப் பூசிக்கொண்டு சூரியன் மெல்ல எட்டிப் பார்த்து தன் வரவை அறிவிக்க, ஊரெங்கும் விழித்துக் கொண்டு தன் அன்றாட பணிகளை தொடங்கியது,

“ஏத்தா சிவகாமி விடிஞ்சு இம்புட்டு நேரமாவது இந்தப்புள்ள இதழு வரலையே இன்னுமா தூங்குறா அவளை உசுப்பி விடுத்தா” என்று ஜகதாம்பாள் பாட்டி சொல்ல,

“ஏத்தே சின்னஞ் சிறுசுங்க ஏதோ அசதியில உறங்குதுக, இப்ப எதுக்கு உசப்ப சொல்ற, இன்னு சித்த நேரத்துல அவளா எழுந்து வருவா இல்ல” என்று தங்கமணி சொல்ல,

“ஆமாத்தே, அவளே எழுந்து வரட்டு இப்ப நாம போய் உசுப்புனா புதுசா வந்திருக்கிறவரு நம்மள பத்தி என்ன நினைப்பாரு” என்று சிவகாமி மாமியாரிடம் சொல்ல, அதுவும் சரிதானென எல்லாரும் அவரவர் வேலையைப் பார்த்தனர்,

காலை உணவு நேரம் முடிந்தும் பூவிதழினி அறைக்கதவு திறக்கப்படவில்லை என்றதும் பாட்டி மறுபடியும் அவளை உசுப்பு என்று ஆரம்பித்த பின்பு தான் சிவகாமி தன் மகளின் அறைக்கதவைத் தட்டினாள்,

சிவகாமி தட்டியும் கதவு திறக்கவில்லை, கதவு தட்டும் சத்தமும் சிவகாமியின் அழைப்பும் கேட்டு வீட்டார் மொத்தமாக அங்கே கூடிவிட்டனர்,

ராமநாதன் தங்கமணி பாட்டி என அனைவரின் குரலும் பதற்றமாக கேட்க, அந்நேரமாக ஆரியும் நிஷாவும் அங்கு வந்து சேர்ந்தனர்,

“என்னாச்சு ஏன் எல்லாரும் இங்க நின்னு சத்தம் போடுறீங்க” என்று ஆரி கேட்க,

“நேத்து ராத்திரி உள்ள போன இதழும் அவரும் இப்ப வரைக்கும் கதவைத் திறக்கல, எங்களுக்கெல்லாம் பயமா இருக்கு தம்பி” என்று சிவகாமி அழ, ஆரி கதவின் அருகே சென்றான்,

“இதழு இதழு நான் மச்சா வந்திருக்க இதழு கதவைத் திற, இதழு கதவைத் திற இதழு” என்று ஆரி தட்டியதும் தான் கதவு திறக்கப்பட்டது, உள்ளே பூவிதழினி நின்றிருந்தாள்,

ஆரி கதவு திறந்தது அவளைப் பார்த்ததும் தான் நிம்மதியானான், அங்கிருந்த மற்றவர்களுக்கும் மூச்சே வந்தது, 

“இம்புட்டு நேரமா கதவை தட்டுறோம் திறக்காம என்னடி பண்ண, நாங்கெல்லாம் எம்புட்டு பயந்து போயிட்டோம் தெரியுமா” என்று சிவகாமி அதற்ற, எதுவும் பேசாமல் தலைகுனிந்து கதவைப் பிடித்தபடியே அமைதியாக நின்றாள்,

“அதான் கதவை திறந்துட்டா இல்ல அப்புறமும் ஏன் திட்டுறீங்க” என்ற ஆரி ஒரு அடி முன்னே எடுத்து வைத்தான், அதுவரை கதவின் பிடிமானத்தில் நின்றவள் பிடி நழுவி ஆரியின் மேல் சாய்ந்தாள்,

திடீரென நின்றிருந்தவள் சாய்ந்ததும் அவளைத் தாங்கியவன் அவளைப் பார்க்க அரைமயக்க நிலையில் இருந்தாள் பூவிதழினி,

“இதழு, என்னாச்சு இதழு, உனக்கு என்ன பண்ணுது” என்றுகேட்டவன் பதற்றமாக அவளை தூக்கி அவள் அறையில் இருந்த ஷோபாவில் படுக்க வைத்தான்,

நிஷா ஓடிப் போய் தண்ணி கொண்டு வந்து தெளித்தாள், ஆரி அவளின் மணிக்கட்டைப் பிடித்து நாடித் துடிப்பை சரி பார்த்தான், துடிப்பு மிகவும் குறைவாக இருந்தது,

பூவிதழினியின் கன்னத்தை தட்டிப் பார்த்தான் அரைகுறையாக சுயநினைவு இருந்தது, 

“இதழு நான் பேசுறது கேக்குதா இதழு, என்னைப் பாரு இதழு” என்று அவள் முகத்தை கைகளால் தாங்கி அசைத்தான், அப்போது திடீரென ஒரு அலறல் சத்தம்,

தங்கமணி போட்ட கூச்சலில் அனைவரும் திரும்பி பார்க்க அங்கே கட்டிலின் கீழே தரையில் முகமெங்கும் ரத்தம் தொய்ந்த நிலையில் கிடந்தான் தீரண், 

ஆரி வேகமாக அவனருகே வந்து நாடியைப் பிடித்து பார்த்தான் அதிர்ந்தான்,

 

நேற்று இரவு :

உன்னை மாதிரி ஒரு பொண்ணை என் லைஃப்ல நான் பார்த்ததே இல்ல டார்லிங், யூ ஆர் மோஸ்ட் வொண்டர் ஃபுல் கேர்ள்” என்று அவன் சொல்ல,

“இனிமே பாக்கவும் முடியாது, அதான் இப்பவே பாத்துட்டீங்களே” என்றாள் பூவிதழினி,

“உன்னை மாதிரி உன் பேச்சும் ரொம்ப ஸ்வீட்டா இருக்கு டார்லிங், இவ்ளோ அழகான பொண்ணை அதுவும் இவ்ளோ பக்கத்துல வச்சுட்டு பேசி டைம் வேஸ்ட் பண்ண விரும்பல சோ” என்றவன் 

அவளை மெத்தையில் தள்ளி தானும் விழுந்து அவள் மேல் படர்ந்தான், அப்போதே கண்கள் சரியாக பார்க்க முடியாமல் தலை பாரமாக, தலையை சிலுப்பிக் கொண்டு முத்தமிட அவளின் இதழைத் தேடினான்,

கண்கள் இருட்டியது அவளை விடுத்து மெல்ல எழுந்து அமர்ந்தான், அவனுக்கு வியர்த்து கொட்டியது, இதயத்துடிப்பு எக்குத் தப்பாக எகிறியது, பூவிதழினி எதுவும் பேசாமல் அதே சிரித்த முகத்தோடு படுத்திருந்தாள்,

“டார்லிங் எனக்கு என்னமோ பண்ணுது, உடம்பெல்லாம் ஒரு மாதிரியா இருக்கு டார்லிங்” என்றான் தீரண்

“என்ன பண்ணுது தலை சுத்துமே, ஆமா நீ குடிச்சியே பாலு ரொம்ப ருசியா இருந்துதா” என்று அவள் கேட்க, தீரண் அதிர்ச்சியுடன் அவளைப் பார்த்தான்,

​”ஏய்… நீ… பால்ல… என்னடி கலந்து குடுத்த, கொலைகாரி கொலைகாரி சொல்லுடி” என்று அவன் நாக்கு குளறிக் கேட்க, பூவிதழினி மெல்ல எழுந்து நின்றாள். அவள் முகத்தில் இருந்த புன்னகை மறைந்து கோபத்தில் கண்கள் சிவந்தது,

​”நீ செஞ்ச ஒவ்வொரு பாவத்துக்கும் இன்னைக்கு தண்டனை கிடைச்சிருச்சு, நான் தனியா தான் சாகலாம்னு இருந்தே, கடைசியா என் மச்சானை ஒருவாட்டி பாக்க வந்தனா,

அப்போ தான் நீயா வந்து மாட்டுன, சரி நான் மட்டும் தனியா போகாம உன்னையும் கூட கூட்டுட்டு போன பூமிக்கு பாரமாவது குறையுமேன்னு தான், உன்னை கட்டிக்கவே சம்மதிச்ச,

உன் விதிய பாத்தியா உன் சாவை தேடி நீயே வந்திருக்க, சரி விடு என்ன பண்றது உன் சாவு என் கையிலன்னு இருந்திருக்கு” என்று அவள் சொல்லிக் கொண்டிருக்கும் போதே அவன் வாய் கண் காது மூக்கு என ரத்தம் ஒழுக ஆரம்பித்தது,

அவள் எதைப் பற்றியும் கவலைப்படாமல் ஜன்னல் ஓரம் சென்று நின்று கொண்டாள்,

தீரண் மூச்சு விட முடியாமல் திணறினான், உயிர் பிரியும் அவஸ்தையில் ​அவன் தரையில் விழுந்து புரண்டான், கத்த முடியவில்லை, எழுந்து நடக்க முடியவில்லை, 

கொஞ்சம் கொஞ்சமாக வலியில் துடித்தான், விடியற்காலை வரையிலுமே ரத்தம் வழிய வழிய ரணரணமாய் சித்ரவதை அனுபவித்தவன் சூரிய உதயத்திற்கு முன்பாகவே, 

அவன் உயிர் உடலைப் பிரிந்து சென்றது, விடியும் வரை அவன் துடிப்பதை அமைதியாகப் பார்த்துக் கொண்டிருந்தாள், கூடவே அவளுக்கான நிமிடத்திற்காக காத்திருந்தாள்,

அவளுக்கும் ரத்தம் வழிய ஆரம்பித்தது, அதை துடைத்துக் கொண்டு கண்கள் இருள எழக்கூட முடியாமல் கிடந்தவள் காதுகளில் அவளின் அவன் குரல் கேட்டது,

அக்கணமே பாதி உயிரோடு மெல்ல தத்தித் தடவி எழுந்து வந்து கதவைத் திறந்தவள் ஓரிரு நிமிடங்களுக்கு மேல் நிற்க முடியாமல் கால்கள் துவண்டு போக அவன் மீதே சரிந்தாள்,

ஆரி தீரணின் நாடியைப் பிடித்துப் பார்த்த அந்த நொடி, அவன் கண்கள் விரிந்தன, ரத்தம் உறைந்து போயிருந்த அந்த முகத்தைப் பார்த்த ஆரிக்கு, ஒரு நிமிடம் மூச்சே நின்று விட்டது,

​”இதழு… என்ன பண்ணி வச்சிருக்க?” என்று அவன் திகைப்புடன் கேட்க, 

சோபாவில் அரைமயக்கத்தில் இருந்த பூவிதழினி மெல்லக் கண்களைத் திறந்தாள்,

அவளது பார்வையில் இப்போது ஒரு கடமையை முடித்த திருப்தி இருந்தது, சைகையால் அவனை அழைத்தாள், அவனும் வேகமாக வந்து அவள் கையைப் பற்றிக் கொண்டான்,

“நான் இந்த உலகத்த விட்டு போறேன் மச்சா, ஆனா உன்னை விட்டு எப்பவுமே போக மாட்ட, நீ சிரிச்சா நான் சிரிப்ப நீ அழுதா நானு அழுவ, அதனால நீ எப்பவும் சிரிச்சுட்டே இருக்கனு மச்சா,

உம்மேல எனக்கு கோபம் எல்லாம் இல்ல மச்சா வருத்தந்தான் இருந்துச்சு, இப்ப அதுவும் இல்ல, என்னை நினைச்சுட்டு உன் வாழ்க்கைய கெடுத்துக்காத, 

நீ நல்லா வாழனு மச்சா, அதை உன் பக்கத்துல இருந்து நான் பார்ப்பேன், மச்சா பேச மு…டிய..ல ம..ச்சா… ம..ச்…சா” என்ற வார்த்தைகள் முடிய,

முடிந்தது வார்த்தைகள் மட்டுமல்ல அவளின் பயணமும் தான், மூச்சு நின்றது, கைகள் தளர்ந்தது, இதயம் அதன் துடிப்பை நிறுத்தியது கண்கள் தன்னவன் மீதே நிலைகுத்தியது, 

பூவிதழினியின் கைகள் தன் கைகளுக்குள் தளர்வதைக் கண்ட ஆரிக்கு, உலகம் ஒரு நொடி ஸ்தம்பித்தது. அவனது இதயம் சுக்குநூறாக உடைந்து சிதறியது, சுற்றியிருந்தவர்களின் அலறல் சத்தம் அவன் காதுகளில் விழவே இல்லை,

​”இதழு… இதழு கண்ணைத் திறடி… மச்சான் இருக்கேன்ல… என்னை விட்டுட்டு போயிடாதடி…” என்று அவன் கதறினான்,

அவளது நெற்றியில் தன் முகத்தைப் புதைத்து அவன் அழுத அழுகை, அந்த அறையிலிருந்த சுவர்களையும் கரையச் செய்திருக்கும்,

​நிஷா திகைத்துப்போய் சிலையாக நின்றிருந்தாள், தன் வாழ்க்கையைக் காப்பாற்றப் போய், ஒரு உன்னதமான காதல் இப்படி ரத்தமும் கண்ணீருமாக முடிந்துவிட்டதே, என்ற குற்ற உணர்வு அவளை ஆட்டிப் படைத்தது,

​பூவிதழினியின் முகத்தில் இருந்த அந்தப் புன்னகை மாறவே இல்லை, அவளின் கண்களில் சுரந்து வழிந்த கடைசிச் சொட்டுக் கண்ணீரும் ஆரியின் கைகளிலேயே விழுந்து மறைந்தது,

தான் நேசித்தவனுக்கு தீங்கு செய்ய வந்தவனை அழித்து, தன் கற்பையும் காதலையும் புனிதமாகவே வைத்துக் கொண்டு அவள் விடைபெற்று விட்டாள்,

பூவிதழியின் முடிவு சோகமானதாக இருந்தாலும் கூட அவளின் கள்ளங்கபடமில்லா காதல் இங்கே மாபெரும் காவியமாக உருவானது, 

அந்த அறைக்குள் மரணம் இரண்டு விதமாக நிகழ்ந்திருந்தது, ஒன்று, செய்த பாவங்களுக்குத் தண்டனையாக ரத்தம் கக்கித் துடிதுடித்த தீரணின் மரணம், 

மற்றொன்று, தன் காதலைக் காக்கத் தன்னையே பலியாக்கிக் கொண்ட ஒரு தேவதையின் தியாக மரணம் என இரண்டையும் நிகழ்த்தியவளின் ஆன்மா அவளின் அவனிடமே சரணடைந்தது,

பூவிதழினியின் முடிவு முட்டாள்தனமானதாக தெரியலாம், ஆனால் அவள் காதலின் ஆணி வேரும் அதன் ஆழமும் அவளுக்கு மட்டுமே தெரியும், 

பூவிதழினி சொன்னது போலவே, அவள் இனி அவனது ஒவ்வொரு துளியிலும், ஒவ்வொரு மூச்சிலும் ‘வலியைச் சூடிய காதலாக’ வாழ்ந்து கொண்டே இருப்பாள்,

தொடர்ந்து வாசிப்போம் வாங்க

❤️ Loading reactions...
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page