பிரிவெனும் தீயில் வெந்தபோதும் உன் நினைவெனும் தென்றலில் உயிர் வாழ்கிறேன்…!
வலியை சூடிய காதலே – 6
“எப்பா ஏய் இங்க எல்லாரும் கூடி இருக்கிறது பிரச்சனையா சரி பண்றதுக்கு தானே ஒழிய உங்க இரண்டு குடும்பமும் சண்டை போட்டு அடிச்சிக்கிறத வேடிக்கை பாக்க இல்ல, முதல்ல அமைதியா இருங்கப்பா,
எப்பா பாண்டி என்ன இருந்தாலும் நீ ஒரு பொள்பளைய இப்படி தரக்குறைவா பேசக்கூடாதுப்பா, இந்த தென்றலூர் பஞ்சாயத்துக்கு முன்னாடி ஆம்பள பொம்பளன்னு பிரிச்சு பாக்க கூடாதுங்கறது கட்டுப்பாடு,
இந்த சபையில சின்னவ பெரியவ இளவட்டம் எல்லாத்துக்குமே உரிமை இருக்குப்பா அதை நினைப்புல வச்சுட்டு பேசுங்கப்ப” என்று ஊர் பெரியாள் சொல்லி களேபரத்தை கட்டுப்பத்தினார்,
“இதுக்கு மேல இங்க பேச ஒன்னும் இல்ல, என் மவ வயித்து மவ தான் அந்தப் பொண்ணை, அவளை எங்ககிட்டயே ஒப்படைக்கச் சொல்லுங்க, எங்க குடும்பத்து வாரிச ஒப்பு கொண்டுட்டு எந்த பிரச்சனையும் பண்ணாம அமைதியா போயிடறோம் அவ்வளவு தான்” என்றார் செல்லதுரை,
“துரையய்யா கேக்க வேண்டியதை கேட்டுட்டாவ நீங்க என்ன சொல்றீங்க” என்று ராமநாதனைப் பார்த்து ஊர் பெரியாள் கேட்க,
“அவகளுக்கு மவ வயித்து மவன்னா, எங்க இரத்துல வந்த குலசாமி, நாங்க எப்படி எங்க வீட்டு மகாலச்சுமிய மாமன் மச்சானுக்கு தூக்கி குடுக்க முடியும்” என்றார் ராமநாதன்,
“அவக சொல்றதுலயும் நியாய இருக்க தானே செய்யுது, என்ன இருந்தாலும் அந்த புள்ள அவங்க வீட்டு புள்ள இல்லையா,
எய்யா துரை நீங்க என்ன தான் உங்க மவ வயித்து மவன்னு உரிமையா சொன்னாலும், உங்க மவளை கட்டி குடுத்துட்டீங்களோ அப்போ உங்க மவ அவங்க வீட்டுப் மருமவளாயிட்டா,
அதனால அவ வயித்து மவளும் சக்கரவர்த்தி குடும்பத்து வாரிசு தான், அதையும் மீறி உங்களுக்கு அந்த புள்ள வேணும்னா, எய்யா ராஜதுரை அதான் உம்மவன் டாக்டரு இருக்கானே,
அவனுக்கு கட்டி வச்சு உம்மருமவளா வேணா கூட்டியாந்துக்க, அவனுக்கு அந்த புள்ள முறைப்புள்ள தானப்பா, அதை உட்டுப்புட்டு தேவையில்லாம பிரச்சனை பண்ணிட்டு இருக்காத” என்று ஊர் பெரியாள் கூற,
“நம்ப பெரியாளு அருமையான யோசனைய சொல்லிருக்காரு நீங்க என்ன சொல்றீங்க ராஜதுரை” என்று பஞ்சாயத்தார் கேட்க,
ஊர் பெரியவர் சொன்ன அந்த யோசனை, எரியும் நெருப்பில் எண்ணெயை ஊற்றியது போலானது, ராஜதுரையும் பாண்டிதுரையும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர், அவர்களின் முகத்தில் பஞ்சாயத்தாரின் சொல்லில் இணக்குவதை விட ஆத்திரமே மேலோங்கி நின்றது,
பாண்டிதுரை சட்டென எழுந்து நின்றார்,
“பெரியாளு சொன்னது அருமையான யோசனைதான், ஆனா அது மத்தவங்களுக்கு, எங்க குடும்பத்தை பொறுத்தவரைக்கும் இது ஒரு கௌரவப் பிரச்சனை, அந்தப் பொண்ணு சக்ரவர்த்தி வீட்டோட வாரிசு மட்டும் இல்ல,
எங்க வீட்டு புண்ணியவதி பெத்தெடுத்த மகராசி அவளை எங்க வீட்டுக்குக் கூட்டிட்டுப் போறதுல எங்களுக்கு எந்த உரிமையும் இல்லியா,
அதனால இந்த ஊர் பஞ்சாயத்து முன்னாடி இந்த சக்ரவர்த்தியோட குடும்பம் அவ மேல வச்சிருக்கிற உரிமையை விட்டுக்கொடுக்கணும்” என்று கத்தினான்,
ராஜதுரை தன் அண்ணனுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்தான்,
“ஆமாம் பெரியாளு ஊர் முறைப்படி பார்த்தா, என் தங்கச்சி வயித்துல பிறந்த பொண்ணு எனக்கு மருமவ தான், அவளை என் வீட்டுக்குக் கூட்டிட்டுப் போறதுக்கு எனக்கு முழு அதிகாரம் இருக்கு,
இதுல இந்த டாக்டர் பயல இழுக்க வேண்டிய அவசியமே இல்ல” என்று கூறியராஜதுரையின் கண்கள் மகனைத் தீயாய் முறைத்தது,
“பாண்டி, ராஜதுரை ரெண்டு பேரும் என்ன பேசுறீங்கன்னு தெரிஞ்சுதான் பேசுறீங்களா, இத்தனை வருஷம் அந்தப் பொண்ணு எங்க இருக்குன்னு கூட தெரியாம இருந்துட்டு,
இன்னைக்கு வந்தவுடனே உரிமை கொண்டாடுறது எந்த விதத்துல நியாயம்” என்று நியாயமே அறியா ஆட்களிடம் நியாயம் கேட்டார் ராமநாதன்
பாண்டிதுரை மேடையை நோக்கி முன்னேறினான்,
“நியாயத்தைப் பத்தி நீ பேசாத ராமநாதா, கௌரவம் முக்கியமா, நியாயம் முக்கியமான்னு பார்த்தா எங்களுக்கு கௌரவம் தான் முக்கியம்,
இந்த ஊர்ல துரையய்யா குடும்பத்தோட கௌரவத்தை நிலைநாட்ட நாங்க எதையும் செய்வோம், அந்தப் பொண்ணு எங்க கூடத் தான் வரணும்,
இதுல எந்த மாற்றமும் இல்லை” என்று பஞ்சாயத்தாரின் வார்த்தைகளையும் மீறி அதிகாரத் தோரணையில் முழங்கினான்,
இங்க பாருங்க பஞ்சாயத்துகாரங்களா, நியாயமா கேட்குறப்பவே அந்தப் பொண்ணை விடச் சொல்லு, நாங்க எங்க வீட்டுக்குக் கூட்டிட்டுப் போறோம்,
இல்ல முடியாதுன்னு முரண்டு புடிச்சா, இந்த பஞ்சாயத்துக்கு முன்னாடி கை கட்டி நிக்க நாங்க ஒன்னும் சொம்பைங்க கிடையாது, எதை வேணாலும் செய்வோம்” என்றார் செல்லதுரை,
“துரையய்யா என்ன பேச்சு பேசிட்டு இருக்காங்க, இந்த ஊர்ல உங்க குடும்பத்துக்குன்னு ஒரு மரியாதை இருக்கு தேவையில்லாம பேசி அதை கெடுத்துக்காதீங்க” என்றார் பெரியாள்,
பாண்டிதுரையும் ராஜதுரையும் அதிகாரத் தோரணையில் கத்திக் கொண்டிருக்க, அந்த சத்தங்களும், அங்கிருந்த ஆண்களின் ஆவேசமான முகங்களும் நிஷாலினிக்கு தன் தந்தை விஸ்வநாதனின் பிடிவாதத்தையே நினைவூட்டியது,
ஒரு நொடி கூட அங்கே நிற்க பிடிக்காமல் தப்பித்து ஓடிவிட வேண்டும் போல அவளுக்கு தோன்ற, தன்னைச் சுற்றியிருந்த பெண்களின் கூட்டத்தையும், ரஞ்சிதத்தின் பிடியையும் மீறி, அவள் கண்கள் வெறித்தனமாக அங்கிருந்த கூட்டத்தில் ஆரியனைத் தேடின,
அவன் மட்டும் தான் தன்னைக் காக்க முடியும் என்று அவள் ஆழ்மனம் உரக்கச் சொன்னது, அலைபாய்ந்த கண்கள் ஒருகட்டத்தில் ஆரியனின் உருவத்தை கண்டுபிடிக்க அந்த கணமே அவள் உயிர் கூடு திரும்பியது போல் ஆனது,
உடனே ரஞ்சிதத்தின் கையை உதறிவிட்டு ஆரியனை நோக்கி ஓடினாள், கூடி நின்ற ஊர் மக்களும், சண்டையிட்டுக் கொண்டிருந்த உறவுகளும் மற்ற அனைவரும் திகைத்துப் போய் பார்க்க,
கலங்கிய கோலத்தில் இருந்த நிஷாலினி, பஞ்சாயத்து மேடைக்கு எதிரே நின்றிருந்த ஆரியனின் பின்னால் சென்று ஒளிந்து கொண்டாள், அவனது சட்டையைத் தன் பிஞ்சுக்கரங்களால் இறுகப் பற்றிக்கொண்டு, அவனது தோள்களுக்குப் பின்னால் முகம் புதைத்து விம்மி அழுதாள்,
”ஆரி ப்ளீஸ் என்னை.. என்னை எங்கயாவது கூட்டிட்டுப் போயிடு, எனக்கு இங்க இருக்கவே பிடிக்கல ஆரி ப்ளீஸ் ஆரி” என்று அவள் கதறிய சத்தம், அந்தப் பஞ்சாயத்து மேடையையே ஒரு நிமிடம் ஸ்தம்பிக்க வைத்தது,
ஆரியனின் உடல் ஒரு நிமிடம் சிலிர்த்தது, தன் பின்னால் தஞ்சம் புகுந்திருக்கும் அந்தப் பேதையின் நடுக்கம் அவன் முதுகின் வழியே அவன் இதயத்தைத் தொட்டது, அதுவரை அமைதியாக இருந்த ஆரியனின் முகத்தில் இப்போது ஒரு சிங்கம் போன்ற வீரம் வந்து அமர்ந்தது,
தன் பின்னால் நடுங்கிக் கொண்டிருக்கும் நிஷாலினியின் கைகளைப் பற்றி, அவளைத் தன் முன்னே இழுத்து நிறுத்தினான், அவளது கலங்கிய கண்களைத் துடைத்து விட்டவன், தலை நிமிர்ந்து தன் தந்தை ராஜதுரையையும், பெரியப்பா பாண்டிதுரையையும் தீர்க்கமாகப் பார்த்தான்,
”இங்க பாருங்க இதுவரைக்கும் நீங்க ஆசைப்பட்ட மாதிரி எல்லாரும் பேசிட்டீங்க. இப்போ நான் கொஞ்சம் பேசலாமா” என்ற அவனது குரல் அங்கிருந்த அனைவரையும் கட்டிப் போட்டது, அனைவரும் அமைதியாக இருக்க,
“இந்தப் பொண்ணு மேல உரிமை கொண்டாட இங்க யாருக்கும் எந்தத் தகுதி இல்லை, ஏன்னா” என்று இடைவெளி விட்டான்,
அனைவரும் என்ன சொல்லப் போகிறான் என்ற எதிர்பார்ப்பில் அவனையே பார்த்து நின்றனர்,
“ஏன்னா இவளை உரிமை கொண்டாடத் துடிக்கிற நீங்க யாருமே இவளுக்கு உண்மையிலேயே என்ன வேணும்னு கேட்கல, இவ உங்க வம்சத்து வாரிசுன்னு மாத்தி மாத்தி மார் தட்டிக்கிறீங்களே,
ஆனா இத்தனை வருஷமா இவ எங்க எப்படி இருந்தா, என்ன பண்ணிட்டு இருந்தான்னு இங்க இருக்கிற எந்தச் சக்கரவர்த்தி பரம்பரைக்கும் தெரியாது, துரையய்யா பரம்பரைக்கும் தெரியாது,
அப்படி இருக்கும் போது இவளை யாருமே சொந்தம் கொண்டாடவோ அதிகரமா உரிமை வேணும்னு கேட்கவோ முடியாது, ஆளாளுக்கு பஞ்சாயத்தைக் கூட்டி சலம்பிட்டு இருக்காம போயி அவரவர் பொலப்புத் தனத்தை பாருங்க,
விஸ்வநாத சர்க்கரவர்த்திகிட்ட போராடி அவளை கூட்டிட்டு வரத் தெரிஞ்ச எனக்கு அவ எங்க இருக்கனும் எப்படி இருக்கனும்னு தெரியுமா” என்றான் ஆரியன்
ஆரியனின் குரல் ஊர் முழுக்க எதிரொலித்தது, பாண்டிதுரை எகிறிக் கொண்டு வந்தான்,
“டேய் சின்னப்பய நீ பெரியவங்க பஞ்சாயத்துல என்னடா பேச்சு வேண்டிக் கிடக்கு, நீ சொல்லிட்டா எல்லாம் சரியாப் போச்சா, என்ன இருந்தாலும் அவ எங்க வீட்டுப் பொண்ணு,
நாங்க அவளைக் கூட்டிட்டுப் போவோம், அதுக்கு நடுவுல நீ யாருடா தடுக்க” என்று கேட்க
ஆரியன் நக்கலாகச் சிரித்தான்,
“தடுக்க எனக்குப் முழு உரிமை இருக்கு பெரியப்பா ஏன்னா, விஸ்வநாதன் கிட்ட இருந்து இவளை முறைப்படி மீட்டுட்டு வந்தவன் நான், என்னை நம்பி வந்த பொண்ணை பாதுக்காக்குற பொறுப்பு எனக்கு நிறையவே இருக்கு” என்றான் ஆரியன்,
“டேய் குடும்பத்துக்கு அடங்காதவனே நீயெல்லாம் எங்க முன்னாடி குரலை உசத்தி பேசுறளவுக்கு ஆகிடுச்சு, டவுனுக்கு போய் நாலு எழுத்து படிச்சா நீ டாக்டரு வேணா ஆவலா எங்களுக்கு நீதிபதி ஆயிட முடியாது,
நீதான கூட்டியாந்த அப்போ ஒழுங்கா மரியாதையா பொழுது சாயறதுக்குள்ள புள்ளைய வீட்டுக்கு கூட்டியாந்து விடுற வழியப் பாரு” என்று ராஜதுரை கோபத்தில் சொல்ல,
“அப்படி எல்லாம் கூட்டிட்டு வர முடியாது, உங்க எல்லாருக்கும் கௌரவம் தான் பெருசு, அப்படிப் பட்ட ஆளுங்க கூட அவ இருக்கிறது சரியா வராது,
இந்த நிமிஷத்துல இருந்து அவ யாரோட கட்டுப்பாட்டுலயும் இருக்க மாட்டா, சட்டப் படி அவ ஒரு மேஜர், அவ யாரு கூட இருக்கணும்னு அவதான் முடிவு பண்ணுவா,
அவ விருப்பத்தை தான் நான் செய்வேன், அதை மீறி இவளை யாராவது தொட்டுப் பாருங்க, அப்புறம் இந்த டாக்டர் யாருன்னு பார்ப்பீங்க” என்ற ஆரியனின் மிரட்டலில் அனைவரும் வாயடைத்துப் போயினர்,
நிஷாலினி ஆரியனின் கைகளைப் பலமாகப் பற்றிக்கொண்டாள், ராஜதுரையும் பாண்டிதுரையும் ஆரியனின் வாதத்தைக் கேட்டு இன்னும் ஆவேசமடைந்தனர்,
“டேய், படிச்ச திமிருல சட்டம் அது இதுன்னு சொல்லி எங்களையே பேசுறிய எதிர்த்துப் பேசுறியா, உன்னை மீறி அவளை கூட்டிட்டு பேவேன்டா நீ என்ன பண்றேன்னு நானும் பாக்கறேன்” என்று ராஜதுரை கத்த,
பஞ்சாயத்து மேடையே அதிரத் தொடங்கியது, ஆரியனுக்கு ஆதரவாக ராமநாதன் கலத்தில் இறங்க இரு குடும்பத்து ஆட்களும் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொள்ளும் நிலைக்குச் செல்ல,
நிஷாலினி யாருடன் இருப்பது சரி நீங்க கமெண்டுல சொல்லிட்டுப் போங்க, நானும் படிச்சு தெரிஞ்சுக்கறேன்,
தொடர்ந்து வாசிப்போம் வாங்க
