சாவியைக் கொண்டு
திறக்கும் பூட்டைப் போல
ஒரு இதமான விடியலில்
மெல்லத் திறந்தது இதயம், காலமெல்லாம் சுமந்த
மௌனத்தின் பிம்பம் நீங்கி,
புரியாத பாதையில்
புதிதாக ஓர் வெளிச்சம்…!
வலியைச் சூடிய காதலே – 9
தென்றலூரின் விடியல் அந்தப் பழைய ஓட்டு வீட்டிற்கு ஒரு புதிய பொலிவைத் தந்திருந்தது, அதிகாலைப் பனி மெல்ல விலக, தென்னை மரங்களின் இடுக்கில் புகுந்து வந்த சூரியக் கதிர்கள் பனித்துளிகளின் மேல் பட்டு தங்கம் போல மின்னியது,
தூரத்தில் எங்கோ கோயில் மணியோசையும், ஆடு மாடுகள் எழுப்பும் மணியோசையும் அந்த அதிகாலை அமைதிக்குத் தாளம் போட்டன,
முற்றத்தின் நடுவே இருந்த துளசி மாடத்திற்கு அருகே நின்று, அண்ணாந்து வானத்தைப் பார்த்துக் கொண்டிருந்தாள் நிஷாலினி, தூக்கக் கலக்கத்திலும் அவளது முகத்தில் ஒரு புத்துணர்ச்சி தெரிந்தது,
நகரத்தின் ஏசி சத்தமும், வாகன இரைச்சலும் இல்லாத இந்த விடியல் அவளுக்கு ஒரு அமைதியான அழகான உலகத்தைப் போலிருந்தது,
அப்போது, கொல்லைப் பக்கத்திலிருந்து வேஷ்டி சட்டையில், தோளில் ஒரு துண்டுடன் உள்ளே நுழைந்தான் ஆரியன், அவனது கேசம் ஈரமாய் இருக்க, அதைத் துடைத்தவாறு வந்தான்,
முற்றத்தில் நின்றிருந்த நிஷாலினியைக் கண்டதும் அவனது நடை ஒரு நிமிடம் தளர்ந்தது,
”என்ன நிஷா சீக்கிரம் எழுந்திருச்சுட்ட போல, எங்க கிராமத்து விடியல் உன் தூக்கத்தைக் கலைச்சு எழுப்பிடுச்சோ” என்று புன்னகையோடு கேட்டான் ஆரியன்,
நிஷாலினி திரும்பி அவனைப் பார்த்தாள், அந்த அதிகாலை வெளிச்சத்தில் ஆரியன் இன்னும் கம்பீரமாகத் தெரிந்தான்,
“இல்ல ஆரி, தூக்கம் வரல, நானா தான் எழுந்தேன், இந்த அமைதி எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு, தனியா நாலு செவத்துக்குள்ள எழுந்து பழகுன எனக்கு, இப்படி முற்றம் வழியா வானத்தைப் பார்த்தபடி விடியுறது, இது ஏதோ கனவுல இருக்கிற மாதிரி இருக்கு” என்றாள் மெல்லிய குரலில்,
ஆரியன் அவளுக்கு அருகில் வந்து நின்றான்,
“இது கனவு இல்ல நிஜம் தான், அங்க மாதிரி உனக்குக் காபி போட்டுக் கொடுக்க இந்த வீட்ல ஆள் யாரும் இருக்க மாட்டாங்க பரவாயில்லையா” என்று என்றான், நிஷாலினி லேசாகச் சிரித்தாள்,
“பரவாயில்ல ஆரி, நீயே சொன்ன மாதிரி என் வேலைகளை நானே செஞ்சுக்க பழகுறேன், ஆனா எனக்கு ஒரு சின்ன உதவி” என்று தயங்கினாள்,
”நீ இங்க இருக்க சூழலுக்கு அடாப்ட் ஆகுற வரைக்கும், வேலைக்கு ஆள் போடனுமா” என்று கேட்டான்
”அதெல்லாம் இல்ல ஆரி, நானே சமாளிச்சுப்பேன், எனக்குக் காபி போடத் தெரியாதுல்ல, அதனால நீ போட்டுத் தருவியா” என்று அவள் கேட்டு விட்டு அவனது முகத்தைப் பார்த்தாள், ஆரியன் வாய்விட்டுச் சிரித்தான்,
“இது தான் முதல் வேலையே சரி, இன்னைக்கு நானே போட்டுத் தர்றேன், போகப் போக நீயே கத்துக்குவ” என்றான்,
”நிச்சயமா ஆரி, எனக்கு ஒரு சந்தேகம் இருக்கு, அது என்னன்னா நேத்து மாதிரி இன்னைக்கும் யாராவது வந்து சண்டை போடுவாங்களோன்னு பயமா இருக்கு ஆரி” என்று அவள் இழுக்க, ஆரியன் அவளது தோளை மென்மையாகத் தட்டினான்,
“இனிமே பிரச்சனையே வராதுன்னு பொய் சொல்ல மாட்டேன், ஆனா எது வந்தாலும் நீ தைரியமா இருக்கனும், உனக்காக நான் இருக்கிற வரைக்கும் எதைப்பத்தியும் நீ கவலைப்பட வேண்டாம், இப்போ போயி முகம் கழுவிட்டு வா, என் கையால உனக்கு ஒரு ஸ்பெஷல் இஞ்சி டீ ரெடி பண்றேன்” என்றான்,
அந்த வார்த்தைகள் நிஷாலினிக்கு ஒரு பெரும் மகிழ்ச்சியை அள்ளித் தர உற்சகாமானாள்,
“தேங்க்ஸ் ஆரி, விஷ் யூ எ வெரி குட் மார்னிங்” என்று அவள் மகிழ்ச்சியோடு சொல்ல, ஆரியனும்,
“குட் மார்னிங் நிஷா” என்று பதில் சொன்னான், அவர்களின் இந்தப் பேச்சுவார்த்தையை, பின்கட்டு வாசலில் நின்று பார்த்துக் கொண்டிருந்த ரஞ்சிதத்தின் முகத்தில் ஒரு மெல்லிய புன்னகை பூத்தது,
‘இந்த மகிழ்ச்சி நீடித்தால் போதும்’ என்று அந்தத் தாய் மனதுக்குள் வேண்டிக் கொண்டாள்,
ஆரியன் காபி போடச் சமையலறைக்குள் நுழைய,
நிஷாலினி முற்றத்தில் நின்று அந்த நிலக்கரி வண்ண ஆத்தாங்குடி கற்களின் குளிர்ச்சியைத் தன் பாதங்களால் ரசித்துக் கொண்டிருந்தாள்,
அப்போது ரஞ்சிதம் ஒரு பித்தளைச் செம்பில் பாலை எடுத்துக் கொண்டு உள்ளே வந்தாள், நிஷாலினியைக் கண்டதும் அவர் முகம் மலர்ந்தது.,
“என்னம்மா விடியலே எழும்பிட்டியா, இந்த ஊருப் பனி உன் உடலுக்கு ஒத்துக்காதும்மா காய்ச்சல் கீச்சல் வந்திடப் போகுது, இங்க நிற்காத உள்ளாற போம்மா” என்று அந்தத் தாய்க்கே உரிய அக்கறையுடன் ரஞ்சிதம் சொல்ல,
ரஞ்சிதத்தைக் கண்டதும் ஏதோ வேற்றுகிரக வாசியைப் பார்த்தது போல மிரண்டு போய் பின் வாங்கினாள், அதைக் கண்ட ரஞ்சிதம்,
“நீ பயப்படுற அளவுக்கு நான் ஒன்னும் சொல்லலையேம்மா, நீ ஏன் எதுக்கெடுத்தாலும் பயப்படுற, நான் உன் அத்த தான்மா, உன் அப்பா விஸ்வநாதனோட தங்கச்சி, கூடப்பொறந்த தங்கச்சி” என்று கூறும் போதே ரஞ்சிதத்திற்கு வேம்பை உண்டது போல கசந்தது,
சரியாக அந்த நேரம் இரண்டு டம்ளர்களில் ஆவி பறக்கும் இஞ்சிக் டீயுடன் ஆரியன் வெளியே வந்து
“ஆரியனோட ஸ்பெஷல் இஞ்சி டீ ரெடி, டேஸ்ட் பண்ணி பார்த்துட்டு ரிவ்யூ சொல்லு” என்று சிரித்துக் கொண்டே ஒரு டம்ளரை நிஷாவிடம் நீட்டினான்,
இஞ்சிடீயின் மணம் அந்த முற்றத்தையே நிறைத்தது, முதல் மிடறு பருகியதும் நிஷாலினியின் கண்கள் விரிந்தன,
“வாவ், ஆரி இது ரொம்ப சூப்பரா இருக்கு, இவ்வளவு டேஸ்டா நான் இதுவரைக்கும் டீ குடிச்சதே இல்ல” என்று அவள் பாராட்ட, ஆரியனின் முகத்தில் ஒரு திருப்தியான புன்னகை,
”சரி டீ குடிச்சு முடிச்சிட்டு அப்படியே பின்னாடி தோட்டத்துக்கு வர்றியா, மார்னிங் வாக் போன மாதிரியும் ஆச்சு நீ ரிலாக்ஸ் பண்ண மாதிரியும் இருக்கும்” என்றான் ஆரியன்.
”நிஜமாவா இதோ வந்திட்டேன்” என்று உற்சாகமானாள் நிஷா,
ஆரியன் அவளை வீட்டின் பின்புறம் இருந்த சிறு தென்னந்தோப்பிற்கு அழைத்துச் சென்றான், அங்கு தென்னை மரங்களின் நீண்ட நிழல்கள் தரையில் ஓவியம் வரைந்து கொண்டிருந்தன,
தோட்டத்தின் ஒரு மூலையில் மாட்டுக் கொட்டகை இருக்க அதில் அழகிய கன்றுக்குட்டி ஒன்று துள்ளிக் குதித்துக் கொண்டிருந்தது, அதைப் பார்த்ததும் நிஷாலினிக்கு மகிழ்ச்சி தாளவில்லை,
”ஆரி அது எவ்வளவு கியூட்டா இருக்கு பாரு, நானும அதுகூட விளையாட போறேன்” என்று ஓடிச் சென்று அதைத் தொட்டுப் பிடிக்க முயன்றாள்,
”மெதுவா நிஷா அது உன்னை விட ரொம்ப பயப்படும்” என்று ஆரியன் அவளுக்கு அருகில் வந்து நின்றான்,
அந்தப் பசுமையான சூழலில், ஆரியனின் அருகாமை நிஷாலினிக்கு ஒரு புதிய தைரியத்தைத் தந்தது,
”உனக்கு ஒன்னு தெரியுமா ஆரி, இவ்வளவு காலமா நான் ஒரு ஜடம் மாதிரி வாழ்ந்திருக்கேன்னு நீ வந்த அப்புறமா தான் புரிஞ்சுது,
நீ மட்டும் தான் என்னை ஒரு மனுஷியா, ஒரு பொண்ணா பார்த்த, எனக்கு உங்கூட இருக்கிறது ரொம்ப பிடிச்சிருக்கு ஆரி, எனக்கு நீ தான் வேணும் நீ மட்டும் தான் வேணும்னு தோணுது ஆரி,
உங்கூட இருக்கிற இந்த நிமிஷத்துக்காக நான் எதை வேணும்னாலும் இழக்கலாம்னு கூட நினைக்க தோணுது” என்று உறுதியான குரலில் கூற,
ஆரியன் அவளை ஏறிட்டுப் பார்த்தான், அவளது கண்களில் தெரிந்த அதீத அன்பு அவனுக்கு ஒரு வடுவை உண்டு பண்ணியது,
“இழக்கறது பத்தி பேசாத நிஷா நீ எதை அடையணும்னு விதி இருக்கோ, அது உன்னைத் தேடி வரும், இந்த வாழ்க்கையும், இந்த மண்ணும் இனி உனக்கும் சொந்தம் தான்” என்றான் ஒரு ஆழமான அர்த்தத்துடன்,
இருவரும் அந்தத் தோப்பின் அமைதியில் ஒருவரை ஒருவர் பார்த்தபடி நின்றிருக்க, தூரத்தில் தென்னங்கீற்றுகளின் சலசலப்பு மட்டும் கேட்டுக் கொண்டிருந்தது,
நேரம் கடக்க தென்னை மரங்களின் நடுவே நின்று நிஷாலினி ஆரியன் இருவரும் பேசிக் கொண்டு இருக்க, அதைப் பார்த்த ரஞ்சிதத்தின் முகத்தில் ஒரு தென்றல் வீசியது போன்றதொரு நிம்மதி,
“ஆரி, இந்த நிமிஷம் அப்படியே உறைஞ்சு போயிடக் கூடாதா” என்று அவள் கேட்டபோது, ஆரியன் அவளைப் பார்த்து மென்மையாகப் புன்னகைத்தான்,
”காலம் ஓடிக்கிட்டே தான் இருக்கும் நிஷா, ஆனா அதுல நாம சேர்த்து வைக்கிற இந்த மாதிரி அழகான ஞாபகங்கள் மட்டும் தான் நிலைச்சிருக்கும்” என்று அவன் முடிக்கும் முன்பே,
வீட்டின் முன்பக்கத்திலிருந்து வேலனின் குரல் கேட்டது,
”டாக்டர் தம்பி, டாக்டர் தம்பி சீக்கிரம் வாப்பா வாசல்ல யாரோ ஒருத்தர் வந்திருக்காரு” என்றதும் நிஷாலினியின் கை ஆரியனின் கையை எட்டிப் பலமாகப் பற்றிக் கொண்டது,
“ஆரி யாரா இருக்கும், ஒருவேள டாடி தான் வந்திட்டாரா, எனக்கு பயமா இருக்கு ஆரி, என்னை அவர் கூட அனுப்பிடாத ஆரி” என்ற அவளது குரலில் மீண்டும் அந்தப் பழைய நடுக்கம் தொற்றிக்கொண்டது, அழும் நிலைக்கே வந்தாள்,
”பயப்படாத நிஷா, நான் இருக்கேன்ல, வா யாரு என்னன்னு பார்ப்போம்” என்று அவளைத் தன்னுடனே அழைத்துக்கொண்டு வீட்டின் முன்பகுதிக்கு வந்தான் ஆரியன்,
முற்றத்திற்கு வந்த போது அங்கே சூழல் பதற்றமாக இருந்தது, வாசலில் இரண்டு கருப்பு நிற எஸ்.யூ.வி (SUV) கார்கள் நின்றிருக்க, அதிலிருந்து இறங்கியவர் விறைப்பாக நின்றிருந்தார், அவருடன் சில ஆட்களும் வந்திருக்க,
வந்தவர் யாரென தெரிந்து கொண்டான் ஆரி, விஸ்வநாதனின் பி ஏ தான் ஆட்களுடன் வந்திருந்தான்,
அவனைக் கண்டதும் கைகால்களை உதறலெடுக்க பயத்தில் ஆரியனின் முதுகுக்கு பின்னால் பதுங்கினாள் நிஷாலினி, ஆரி தன் புஜத்தைப் பற்றி இருந்த அவள் கரத்தை தட்டிக் கொடுத்து விட்டு அவனைப் பார்த்தான்,
வந்தவர்களில் ஒருவன் முன்னே வந்து, ஒரு பெரிய கவரை நீட்டினான்,
“விஸ்வநாதன் சார் தான் இத உங்கிட்ட கொடுக்கச் சொன்னார்” என்று கூறி கொடுக்க அதை வாங்கினா ஆரி அந்த நோட்டீஸை ஒருமுறை பார்த்தான், அவனது இதழ்களில் ஒரு குறுஞ் சிரிப்பு படர, அதைப் பார்த்த பி ஏ,
“இது என்ன நோட்டீஸ் தெரியுமா?
நிஷா மேடத்துக்கான லீகல் நோட்டீஸ், முறைப்படி பொண்ணை சார்கிட்ட ஒப்படைக்கலன்னா, அப்புறம் போலீஸ் போர்ஸோட வந்து இந்த ஊரையே சூறயாட வேண்டியிருக்கும்னு சார் சொல்லிட்டு வரச் சொன்னாரு” என்று பி ஏ திமிராகக் கூறினான்,
நிஷாலினி ஆரியனின் பின்னால் மறைந்து நின்று அவர்களைப் பார்த்தாள், அவளது தந்தை இவ்வளவு சீக்கிரம் சட்ட ரீதியான நடவடிக்கையைத் தொடங்குவார் என்று அவளே எதிர்பார்க்கவில்லை,
விஸ்வநாதனின் அடிகளுக்கு அடிபணிவானா ஆரியன்?
தன் கௌரவமாக இருந்த மகளை மீட்க விஸ்வநாதனின் அடுத்தடுத்த நகர்வுகள் என்னவாக இருக்கும்?
தொடர்ந்து வாசிப்போம் வாங்க
