அத்தியாயம்-2
“நான் அவனுக்கு பொண்டாட்டியாவே வாழ்ந்துட்டேன்..” என சபை முன்னிலையில் கூறிய மஞ்சுவை பளாரென அறைந்திருந்தார் வசுந்தரா.. அந்த நிகழ்வை யாருமே எதிர்பார்த்திருக்கவில்லை.. பெண் பார்க்க வந்திருந்தவர்கள் முன்னிலையில் தன் மானத்தை தானே வாங்கி கொள்வாள் என்று எதிர்பார்த்திராத வசுந்தராவால் அந்த சூழ்நிலையை ஏற்றுக்கொள்ள முடியவில்லை..
அனைவரும் திகைத்து போயிருக்க, “அப்பா இல்லாத உன்னை கண்ணும் கருத்துமா வளர்த்ததுக்கு கூட்டத்துல வச்சு கழுத்தறுத்துட்ட.. உள்ள போடி..” தாய் கோபத்தில் அதட்டிட, “அதுக்கு தான் சொல்றேன்.. அப்பா மாதிரி பாத்துக்குற அவனுக்கே கட்டி வையின்னு.. கேட்டா தானே..” என்ற மஞ்சு அலட்சியமாய் எல்லாரையும் பார்த்து விட்டு உள்ளே சென்றாள்..
கண்களில் நீர் கோர்த்துக்கொள்ள சங்கடத்துடன் சபையில் கையெடுத்து கும்பிட்டபடி, “வந்தவங்க எல்லாருக்கும் ரொம்ப நன்றி..” என்றிட வந்தவர்கள் பாவமாய் பார்த்துவிட்டு வெளியேறினர்.. “உங்களுக்கு நடந்த அவமானத்துக்கு நான் பொறுப்பேத்துக்குறேன்.. உங்க மதிப்புக்கும் மரியாதைக்கும் ஏத்த மாதிரி நான் மகளை வளர்த்தேன்ற தைரியத்துல உங்கள வர வச்சிட்டேன்.. அதுக்காக என்னை மன்னிக்கணும்..” என காலில் விழ சென்றவரை தாங்கி பிடித்தான் பெண் பார்க்க வந்திருந்த மாப்பிள்ளை..
படித்ததின் பக்குவம் அவன் முகத்தில் தெரிய, தாயின் கண்ணியமான வளர்ப்பு அவன் செயலில் தெரிந்தது.. “என் அம்மா வயசுல இருக்குற உங்கள என் கால்ல விழ விட்டேன்னா அந்த பாவம் என் ஏழேழு ஜென்மத்துக்கும் துரத்தும்.. வேண்டாம் ம்மா..” என்று அமர வைத்தான்.. அடுத்த ஐந்து நிமிடங்களுக்கு அங்கே அமைதி மட்டுமே நிலவியது..
தொண்டையை செருமிக்கொண்ட மாப்பிள்ளையின் அப்பா, “எங்களுக்கு என்ன சொல்றதுன்னே தெரியலைம்மா.. எங்களை அவமானப்படுத்திட்டதா நினைச்சு உங்களை நீங்களே தாழ்த்திக்காதீங்க.. பொண்ணு கிட்ட நிதானமா பேசுங்க.. உங்களுக்குள்ள இருக்குற குழப்பத்தை தீர்த்துட்டு அடுத்த விஷயத்தை ஆரம்பிங்க.. நல்லதே நடக்கும்.. நாங்க வரட்டுங்களா??” என்று விடைபெற்றுக்கொள்ள, “என்ன இருந்தாலும் தோளுக்கு மேல வளர்ந்த புள்ளைய மூணாவது மனுஷங்க முன்னாடி கை நீட்டுறது சரி கிடையாது.. யோசிச்சிக்கோங்க..” தன் பங்குக்கு மாப்பிள்ளையின் அம்மாவும் கூறிவிட்டு கடந்தார்..
“ம்ம்.. வாங்க..” என்று வழியனுப்பி விட்டு வந்த வசுந்தரா, “ஏண்டி.. என்னை சங்கடப்படுத்தி பார்க்கணும்னே பிறவி எடுத்து வந்தியா?? முடிஞ்சது முடிஞ்சிட்டு.. அடுத்த வாழ்க்கைய பார்த்துட்டு போகுறதுக்கு இல்லாம என்னை ஏன் உயிரோட கொல்ற.. இந்த சம்பந்தத்துக்கு என்னடி குறை.. அந்த மானங்கெட்ட வாழ்க்கைக்காக நாலு பேர் முன்னாடி உன்ன நீயே அசிங்கப்படுத்திக்குற.. ச்சே..” என்று ஆத்திரமாய் கேட்க, “நான் நிஜத்தை தான் சொன்னேன்.. நடந்த உண்மையை உங்களால ஏத்துக்க முடியலைன்னா அதுக்கு நான் எதுவும் பண்ண முடியாது..” தோள்களை குலுக்கியபடி அலங்காரத்தை கலைத்துக் கொண்டிருந்த மஞ்சு மனமிரங்கியதாய் தெரியவில்லை..
“நிஜமாவே உனக்கு மனசாட்சி இருக்குதாடி.. பெத்த தாயை மனசொடிஞ்சு அழ வச்சு பாக்குற..” என கேட்டிட, “நான் கேட்டேனா?? எனக்கு அடுத்து மாப்பிள்ளை பாருங்கன்னு.. நீங்களாவே ஒரு முடிவு பண்ணி எல்லாத்தையும் பண்ணுனா அதுக்கு நான் பொறுப்பா?? ஆஸ்துமாவை வச்சுட்டு இப்படி ஏங்கி ஏங்கி அழுதா மட்டும் நான் மனசு மாறிடுவேன்னு நினைக்காதீங்க.. நீங்க எத்தனை மாப்பிள்ளையை கொண்டு வந்து நிறுத்தினாலும் இந்த ஜென்மத்துல நான் அவனுக்கு தான் பொண்டாட்டி..” மஞ்சுவின் வார்த்தையில் உறுதி தெரிந்தது..
“நீ திருந்த மாட்ட.. ஒருநாள் அவன் உன்னை நடுரோட்ல நிறுத்திட்டு போக போறான்.. அன்னைக்கு உன்கூட இருக்குறதுக்கு இந்த வயசானவளுக்கு பலத்தை குடுன்னு கடவுள் கிட்ட வேண்டிக்கோ..” தன் இயலாமையை என்று தன் இயலாமையை கசப்பாகக் காட்டிவிட்டு திரும்பினாள்.
வந்திருந்த மாப்பிள்ளை வாசலில் நின்றிருந்தான்.
“ஸாரி, போனை மறந்து வச்சுட்டு போயிட்டேன்..” என்கவும் “எடுத்துக்கோங்க..” என்று அனுமதி கொடுத்தார் வசுந்தரா.. போனை எடுத்துச் சென்றவன், வாசற்படிகட்டைக் கடக்கும் போது வலியை மறைத்து வலிய புன்னகை செய்த வசுந்தராவின் முகம் கண்ணுக்குள் நிலைத்திருக்க, திரும்பி வந்தான்.
“உங்களுக்குள்ள நடந்த சண்டையை கேக்கனும்னு கேக்கலை.. ஆக்சிடேண்டலா கேக்குற மாதிரி ஆயிடுச்சு.. உங்களுக்கு ப்ராப்ளம் இல்லைன்னா ஒன்னு கேக்கலாமா??” என்று கேட்க, அவனை எதிர்பார்க்காத வசுந்தரா, வேகமாக வழிந்த கண்ணீரைத் துடைத்துக்கொண்டு, “உக்காருங்க…” என்று சொன்னார்.
எவ்வாறு தொடங்குவதென தெரியாமல் சரியான வார்த்தைகளை தேர்ந்தெடுத்துக் கொண்டிருக்க, “எல்லார் முன்னாடியும் அவ சொன்னதுல எந்த அர்த்தமும் இல்ல தம்பி..” அந்நிலையிலும் மற்றவரிடம் மகளை விட்டுக்கொடுக்காத தாயின் மனதை புரிந்துக் கொள்ள முடிந்தது அவனால்..
“அவங்க பேசுனது உண்மையோ பொய்யோ.. எனக்கு தெரியல.. அதை தெரிஞ்சிக்கவும் முயற்சி பண்ணல.. பொதுவாவே பொண்ணுங்க யாரோ ஒருத்தர் அவங்களோட நடத்தைய தப்பா பேசுனாலே பொறுத்துக்க மாட்டாங்க.. ஆனா இத்தனை பேர் முன்னால இப்படி ஒரு விஷயத்தை சொல்றாங்கன்னா அவங்களோட மனநிலையையும் நாம புரிஞ்சிக்கணும் தானேம்மா.. புடிச்சவங்களோட வாழ்றதை தாண்டி இந்த உலகத்துல வேற என்ன சந்தோசம் இருந்துட போகுது.. என்னோட கருத்தை திணிக்குறேன்ன்னு நினைக்காதீங்க.. தினமும் என் ஆபீஸ்ல நிறைய பேரை பாக்குறேன்.. குடும்பத்துக்காக காதலை புதைச்சுட்டு இன்னொருத்தரை கல்யாணம் பண்ற முக்கால்வாசி பேர் விவாகரத்துன்னு வந்து நிக்குறாங்க.. காதலிச்சவங்கள மறக்கவும் முடியாம கல்யாணம் பண்ணுனவங்கள ஏத்துக்கவும் முடியாம அவங்க அனுபவிக்குற வலி.. அது நமக்கெல்லாம் புரியாது.. அதுக்கு அவங்க சேர்த்து வச்சிடலாமே..” என்றவன் குடும்ப நல கோர்ட்டில் வக்கீலாக இருக்கிறான்..
“தம்பி, வார்த்தைக்கு வார்த்தை அம்மான்னு சொல்றதுனால விவரத்தை சொல்றேன்.. நானும் வீட்டை எதிர்த்து காதல் கல்யாணம் பண்ணிக்கிட்டவ தான்.. காதலுக்கு எதிரி எல்லாம் இல்ல.. காதலுக்கு தகுதியோ தராதரமோ கிடையாதுன்னு சொல்றவ.. ஆனா கல்யாணத்துக்கு வயசுன்னு ஒன்னு இருக்குல்ல.. ஒரு வயசு சின்ன பையன் அவன்.. வாழ்க்கைய பத்தின எந்த புரிதலும் ரெண்டு பேருக்கும் இல்ல.. செட் ஆகமாட்டான்னு எவ்ளோ சொன்னாலும் கேக்காம அவன் தான் வேணும்னு ஒத்த கால்ல நின்னா.. என்ன பண்றது?? அவங்க அப்பா அம்மா கால்லையா விழ முடியும்.. அதுக்கும் நான் தயாரா தான் தம்பி இருக்குறேன்.. ஆனா அவன் இவளை வேண்டாம்னு சொல்லி மூணு மாசம் ஆகுது.. போன் கூட பண்ணல.. இருந்தாலும் அவனையே நினைச்சுட்டு வர்ற போற சம்பந்தத்தை எல்லாம் கெடுத்துக்குறா.. இன்னைக்கு எவ்ளோ பெரிய வார்த்தையை பேசிட்டா.. இப்ப நினைச்சாலும் நெஞ்சு அடைக்குது.. அடிப்படையிலே என் பொண்ணு நல்ல பொண்ணு தான்னு யாருக்கு புரிய வச்சு இவளை கரை சேர்க்குறதுன்னு தெரியலையே..” அங்கலாய்த்தார் வசுந்தரா..
“சட்டம் பேசுறேன்னு நினைக்காதீங்க ம்மா பொண்ணை விட பையன் வயசு அதிகமா இருக்கணும்னு எந்த இந்திய சட்டமும் எழுதப்படலை.. அந்த காலத்துல பொறுப்பு, பக்குவம், ஆரோக்கியம்னு யோசிச்சு பெரியவங்க வகுத்தது தான் இந்த வயசு வித்தியாசம் எல்லாம்.. ஆனா அந்த காலத்துலயும் மூத்த பொண்ணுங்கள கல்யாணம் பண்ணியிருக்க தானே செய்யுறாங்க.. எல்லாம் நம்ம மனசு தான்.. எதையும் யோசிக்காம அந்த பையனை கூப்பிட்டு பேசுங்க.. சேர்த்து வைங்க.. சந்தோசமா வாழுவாங்க..” என்றான்.
சிறிது நிமிடங்களுக்கு விழிகள் அலைபாய தனக்குள்ளே சிந்தனை செய்து கொண்டவர் மூச்சை இழுத்துவிட்டு, “சரி தம்பி, ஆரம்பத்துல இருந்து இப்ப வரைக்கும் எனக்கு இதுல சம்மதமில்லை.. ஆனா அவளுக்கு அது தான் விருப்பம்னா அப்படியே பண்ணட்டும்… குறுக்க நிக்க மாட்டேன்..” என்று கூறினார்
மொட்டை மாடியின் உயரம் குறைந்த சுவற்றில் அமர்ந்து
வானத்தை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தாள்…
பார்ப்பது வானமா, இல்ல வாழ்க்கையா? அவளுக்கே தெரியவில்லை.
“மஞ்சு…” அந்த குரலில் திடுக்கிட்டு திரும்பிப் பார்த்தாள்.
அழுதழுது சிவந்த கண்கள். அந்த சிவப்பில் கண்ணீர் இல்லை.
கோபம்.
காயம்.
கொஞ்சம் பயம்.
அவனை அங்கே கண்டதும் “இங்கே என்ன செய்கிறாய்??” என்பது போல பார்வையில் கடுமையை காட்டினாள்.. தொடர்ந்து “நீங்க இங்க என்ன பண்றீங்க..” வார்த்தைகளும் வேகமாய் வந்து விழுந்தது..
“உங்க கிட்ட கொஞ்சம் பேசலாமா??” மெதுவான குரலில் கேட்க, “என்ன இருக்கு பேச?? பேசி மனசை மாத்தி கல்யாணம் பண்ணிக்கோங்கன்னு எங்க அம்மா சொல்லி அனுப்பிச்சாங்களா??” பேச்சில் அலட்சியம் தெறித்தது..
“உக்காரலாமா?”
“நின்னே சொல்லுங்க.”
கைகளை மார்பில் கட்டிக்கொண்டாள்.
“மனசு முழுக்க ஒருத்தரை வச்சிருக்க பொண்ணை வலுக்கட்டாயமா கல்யாணம் பண்ணிக்குற அளவுக்கு எனக்கு தைரியம் இல்லைங்க..” என்றபடியே சுவற்றில் சாய்ந்து அமர்ந்தவன், “உங்க அம்மா சொல்லி தான் பேச வந்தேன்.. என்னை கல்யாணம் பண்ணிக்க சொல்லி இல்லை..” என்கவும் புரியாமல் பார்த்தாள்..
“உங்க அம்மா ஒத்துக்கிட்டாங்க..” அந்த ஒரு வாக்கியம் மஞ்சுவின் கண்களில் இருந்த விரக்தியை, கண்ணீராய் சொரிய செய்ய “என்ன…?” குரல் தானாகவே உடைந்தது.
“அவங்களுக்கு விருப்பமில்ல.. ஆனா பொண்ணுக்காக ஒத்துக்கிட்டாங்க..”
மஞ்சு பேசவில்லை. தரையை பார்த்துக் கொண்டே நின்றாள். “அவளுக்கு அது தான் வாழ்க்கைன்னா, நான் குறுக்க நிக்க மாட்டேன்’னு சொன்னாங்க.”
மஞ்சுவின் கண்கள் குளமாகியது.. மறந்தும் கண்ணீர் விழ விடவில்லை.
“ஏங்க.. அதிர்ச்சியில சிலையா மாறிட்டீங்களா?? இவ்ளோ பெரிய சந்தோசமான விஷயத்தை சொல்றேன்.. சின்ன ஸ்மைல் கூட இல்லை..” என்று கேட்டவனை நிமிர்ந்து பார்த்தவள், “பொண்ணு பார்க்க தானே வந்தீங்க.. எதுக்காக இந்த சமூக அக்கறை எல்லாம்.. ஏன் இதெல்லாம் பண்றீங்க??” என்று கேட்டாள்..
அவனிடம் விரக்தியான புன்னகை சிந்தியது..
“ஒரு மூணு வருஷத்துக்கு முன்னாடி வர்ஷினியும் உங்களை மாதிரி ரொம்ப உறுதியா அவளோட காதலுக்காக போராடியிருந்தா நான் உங்களை பொண்ணு பார்க்கவே வந்திருக்க மாட்டேன்..”
“வர்ஷினி யாரு??”
“என் முன்னால் காதலி.. அதெல்லாம் இருக்கட்டும்.. உங்க ஆளுக்கு போன் பண்ணி ஓகே சொல்லிட்டாங்கன்னு சொல்லுங்க.. மூணு மாசமா போன் கான்டாக்ட் இல்லைன்னு உங்க அம்மா சொல்லிட்டு இருந்தாங்க.. உண்மையா??” என்று வினவிட, “கொஞ்ச நாளுக்கு முன்ன வீட்டு முன்னாடி வந்து நின்னுட்டான்.. கொஞ்சம் பிரச்சனை ஆயிடுச்சு.. அதுக்கு அப்புறமா கோபத்துல பேசிக்கல.. கேரியர்ல போக்கஸ் பண்றதா கேள்விப்பட்டேன்..” என்றாள்..
“ஒரு நல்ல வேலைக்கு போயிட்டா தைரியமா வந்து பொண்ணு கேக்கலாம்னு நினைச்சிருக்கலாம்.. பசங்களுக்கு நிலையான வருமானம் இருந்துட்டா வேற எந்த தராதரமும் பாக்க மாட்டாங்கன்றது தானே இந்த சமுதாயத்தோட சட்டம்..”
மஞ்சு மெதுவாக மொபைலை எடுத்து திரையில் அவன் பெயரை அழுத்தினாள்.. நெஞ்சம் படபடப்பானது.. விரல்கள் நடுங்கியது.. “மஞ்சு, நான் வேணும்னா இப்ப இந்த நிமிஷமே என்கூட கிளம்பி வா.. நான் உன்ன பாத்துக்குறேன்.. இன்னைக்கு மட்டும் நீ வரலைன்னா நான் என்னைக்கும் உனக்கு கிடையாது..” கடைசியாய் கோபத்தின் உச்சியில் அவன் கத்தியது நினைவிற்கு வந்தது..
“இன்னும் கோபமா இருந்தான்னா??” என்ற கேள்வி தொக்கி நிற்க, “அந்த கோபமெல்லாம் இந்த சம்மதத்திற்கு முன் காணமல் போய் விடும்..” ஒரு நீண்ட மூச்சு இழுத்து விட்டபடி, கால் பட்டனை அழுத்தினாள்.
ரிங் சென்றது..
ஒரு முறை.
இரண்டு.
மூன்று.
கட் ஆனது..
பல நாள் கழித்து காதலர்கள் போனில் பேசும் போது பேசுவதற்கு ஆயிரம் ஏக்கங்கள் இருக்கும்.. அவ்விடத்தில் நிற்பதில் நாகரீகம் இல்லையென உணர்ந்தவன், “சரி.. நீங்க பேசுங்க.. கல்யாணத்துக்கு கண்டிப்பா கூப்பிடுங்க..” என்றவனிடம், “எங்க காதலோட வெற்றிக்கு காரணமான நீங்க இல்லாம என் கல்யாணம் நடக்காது..” என்றதும் நிறைவான புன்னகையொன்றை சிந்திவிட்டு கிளம்பினான்..
படிக்கட்டுக்களில் இறங்க சென்றவனை, “உங்க பேர் என்னன்னு சொல்லவே இல்லையே..” என்ற மஞ்சுவின் கேள்வி இடைமறிக்க, “பொறக்க போற குழந்தைக்கு வைக்க போறேன்னு மட்டும் சொல்லிடாதீங்க..” குறும்போடு கூறியவன், “முகிலரசன்..” என்றான்..
அந்த பெயர் கேட்டதும்
மஞ்சுவின் முகத்தில் அதிர்ச்சி அலைபாய்ந்தது.
