அத்தியாயம்-3
“சொன்னா கேளுடி, நான் கோயிலுக்குள்ள வரக்கூடாது..” என மறுத்தவனிடம் முரண்டு பிடித்துக்கொண்டிருந்தாள் நடுரோடு என்றும் பாராமல்..
“கணக்குப்படி பாத்தா நானெல்லாம் வெளியவே வரக்கூடாது.. ப்ரோபஸர்க்கிட்ட முக்கியமான ப்ராபளம் பத்தி டிஸ்கஸ் பண்ணனும்னு இஷ்டத்துக்கு பொய் அளந்து விட்டு வரலையா.. அந்த மாதிரி தான் இதுவும்.. வா அறிவு..” கண்ணை சுருக்கி கொஞ்சமாய் கொஞ்சி நியாயம் பேசிக் கொண்டிருந்த அவள் மேகமேகா..
பெருநகரத்தில் பிறந்து வளர்ந்தவள் ஒரு மாற்றத்திற்காக இங்கே பக்கத்து ஊரில் உள்ள காலேஜில் பிஎட் படித்துக் கொண்டிருக்கிறாள்.. ஹிட்லர் போன்ற ஹாஸ்டல் வார்டனை வைத்துக்கொண்டு வாரா வாரம் வெளியே சென்று வரும் சூட்சமம் தெரிந்துக் கொண்டவள் அதனையே வாடிக்கையாகி கொள்ள, அப்படி வரும் போதெல்லாம் இவனை கூட்டாளியாக்கி கொள்வாள்..
பெரிதாய் அறிமுகம் இல்லையென்றாலும் சீக்கிரமாக பழகி விடும் இவளின் குணத்தில், விழுந்தவன் நிறுத்தாமல் பேசும் இந்த வாயாடிக்கு ரசிகன் ஆனதெல்லாம் வேறு கதை..
எப்படி சந்தித்தார்கள் என்று கேட்டால் திருதிருவென விழித்து கொட்டும் மேகாவின் தலையிலேயே கொட்டி, “காபி ஷாப்ல தானே பர்ஸ்ட் பாத்தோம்.. ப்ளூ கலர் குர்தி போட்டு ப்ரீ ஹேர்ல ஒரு இடத்துல உக்காராம அங்கயும் இங்கேயுமா ஆடிட்டு இருந்தியே..” என்று சிறுசிறு அசைவுகளை கூட சரியாய் கூறிடுவான்..
“ஏ லூசு.. தாத்தா செத்து முப்பதாவது நாள் காரியம் கூட முடியலை.. என்னை போய் உள்ள கூப்பிடுற.. வீட்ல யாராவது இறந்தா ஒரு வருஷத்துக்கு கோவில் பக்கமே எட்டிப் பாக்க கூடாதுன்னு சொல்லுவாங்க.. தெரியுமா??” என்று கேட்டவன், “உனக்கு எங்க தெரிய போகுது.. உலகம் தெரியாத புள்ளையா வளர்த்து வச்சிருக்காரு உங்க அப்பா..” என தலையில் இடிக்க,
“தலையில அடிக்காத அறிவே..” மெல்ல சிணுங்கி கொண்ட மேகா, “எல்லாரும் செத்தா சாமிக்கிட்ட போறதா தான சொல்லுவாங்க.. அப்புறம் ஏன் இறந்தவங்க வீட்ல இருந்து யாரும் கோயிலுக்கு போக கூடாதுன்னு ஒரு வருஷம் தடா போடுறாங்க.. எனக்கு தெரிஞ்சு எவனோ ஒருத்தன் ரொம்ப பிடிச்சவங்க இறந்ததுக்காக சாமிக்கிட்ட செமையா சண்டை போட்டு ஒரு பேசாம இருந்துருப்பான்னு நினைக்குறேன்.. ஒரு வருஷம் கழிச்சு சாமி வந்து மண்டையிலேயே போட்டு உன் இஷ்டத்துக்கு மனுஷங்க உயிரை எடுக்கணும்னா அப்போ நான் எதுக்குடா இருக்கேன்னு கேட்ருப்பாரு.. உடனே இவனும் திருந்தி கோவில் குளம்னு போக ஆரம்பிச்சிருப்பான்.. நாள் போக்குல அதையே பழக்க வழக்கம்னு பேரை வச்சிட்டாங்க..” என வரலாறு வகுப்பு எடுத்துக்கொண்டிருக்க, ஒரு மாதிரியாக அவளை பார்த்து வைத்தான்..
“அது சரி.. நீ ஏன் வரமாட்ற??.. உனக்கு தான் உங்க தாத்தாவோட ஆகாதே.. அப்புறம் எதுக்கு அவருக்காக விரதம் பிடிச்சிக்கிட்டு.. வா போலாம்.. ஒருவேளை, கோயிலுக்கு வந்தா சாமிக்கு பக்கத்துல நின்னு சாமிக்கிட்ட கம்ப்ளைன்ட் பண்ணிடுவாருன்னு பயப்படுறியா??..” அதிதீவிரமாய் சந்தேகம் கேட்டவளை, “மண்டையில ஒன்னு போட்டேன்னா தெரியும்..” என்று வாயடைக்க முயற்சிக்க, மூக்கு முட்ட கோபம் வந்து விட்டது அவளுக்கும்..
இரண்டு நிமிடங்களுக்கு போக்குவரத்து சத்தம் மட்டும் கேட்க, மூன்று சாலை சேரும் சந்திப்பில் சிக்னல் கம்பம் போல ஆளுக்கொரு திசையாக முறுக்கிக்கொண்டு நின்றனர்.. தன் முடிவில் இருந்து மாறுவாள் என அவன் காலத்தை கடத்திக் கொண்டிருக்க,
“இந்த கடையில பஜ்ஜிக்கு தேங்கா சட்னி மட்டும் தான் தர்றாங்க.. அந்த கடையில தக்காளி சட்னியும் சேர்த்து ஊத்துறாங்க.. பட் இந்த கடையில தான் பஜ்ஜி மொறுமொறுன்னு இருக்கும்.. டீக்கும் சுகர் கரெக்டா போடுவாங்க.. இருந்தாலும் அந்த கடையில குடுக்குற சுக்குக்காபி மாதிரி டேஸ்ட் இங்க கிடைக்காது.. இந்த கடையில பஜ்ஜியை வாங்கி அங்க போய் சட்னி தொட்டுப்போம்.. அப்படியே அங்க சுக்கு காபி வாங்கிட்டு வந்து இங்க சுகர் போட்டு ஆத்தி கேப்போம்.. ஹான்.. நல்ல ஐடியா..” என மனக்கணக்கு போட்டுவிட்டு பஜ்ஜியை நோக்கி ஒடினாள்..
கொஞ்சம் கூட இரக்கம் காட்டாமல், இறக்கையை விரித்து பறக்க சென்ற பட்டாம்பூச்சியின் பேக்கை பிடித்து கொத்தாக தூக்கினான்.. “எங்க போற??” என கேட்கவும் மனதிற்குள் யோசித்ததை கடகடவென சொல்லி முடித்தவளை எண்ணி எங்காவது சென்று முட்டிக்கொள்ளலாம் போலிருந்தது..
“ஏண்டி, நீ கூப்பிட்டன்னு அங்க முப்பதாவது நாள் காரியத்தை விட்டுட்டு புது ட்ரெஸ் எல்லாம் போட்டுட்டு வந்து நின்னா பஜ்ஜி திங்க பறக்குற..”
“அதான் காலையிலேயே புதுசு போட்ருக்கன்னு பாத்துட்டேனே..” என்றவளின் கவனம் வாவென அழைத்த பஜ்ஜியின் மீதே குறியாய் இருந்தது.. கொண்டிருந்தது..
“சொன்னியாடி எருமை.. ஷேர்ட் எப்படி இருக்குதுன்னு..” தோள்களை இழுத்து விட்டு கொண்டவனை முழுதாய் பார்ப்பதற்கு வசதியாக இரண்டடி தள்ளி நின்று முகத்தை சுளித்து கைகளை கேமிரா போல வைத்துக் கொண்டவள், “ஒரு மாதிரி ஓகே தான்..” சலிப்பாய் கூறினாள்.
“உனக்கு பொறாமை.. என்னோட அழகை பார்த்து.. நல்லா இருக்கு அத்தான்னு சொல்லிட்டா உன் சொத்துல பாதி குறைஞ்சிடும் பாரு..” என்றவன் கன்னத்தை இடிக்க, “அத்தான்னுலாம் சொல்ல மாட்டேன் ப்பே..” என அசட்டையாய் உதட்டை சுழித்தாள்.
“நீ ஒன்னும் சொல்லி கிழிக்க வேணாம்.. நாளைக்கு என் பொண்டாட்டி வந்து வாங்கத்தான் போங்கத்தான்னு கொஞ்சும் போது வயிறு எரிஞ்சி சாகப் போற பாரு..” வம்பிழுத்து பார்க்க, “ரொம்ப காத்து கிடக்காதீங்க சார்.. நாம தப்பிச்சோம்டா சாமின்னு சந்தோசப்பட்டுப்பேன்.. இப்ப கோவிலுக்கு வருவியா மாட்டியா?? இப்ப மட்டும் நீ வரலைன்னா நீ இனி எங்க கூப்பிட்டாலும் நானும் வர மாட்டேன்..” கிறுக்குப்பிடியாக கழுத்தை பிடித்தாள்.
“சரி.. சரி.. வரேன்.. வந்து தொலையுறேன்.. முகத்தை அப்படி பாவமா வைக்காத.. அப்புறம் ரோட்ல போறவங்க எல்லாரும் புருசன பொண்டாட்டி சண்டைய ரோட்ல போடுறோம்னு நினைப்பாங்க..” என்றவனின் முதல் வார்த்தையை மட்டும் காதில் ஏற்றிக்கொண்டு பறந்தாள்..
அவளை பொறுத்தவரை அவன் பேசியதெல்லாம் சாதாரணமாய் கிண்டலுக்கு பேசுவது தான்.. அதற்கு பின்னால் இருக்கும் உணர்வுகளை வெளிப்படுத்துவதற்கு வாய்ப்பை அவள் ஒருபோதும் தருவதில்லை.. அவளை தெரிந்த நாளிலிருந்து மறைமுகமாகவும் வெளிப்படையுமாய் பலவாறாய் கூற முயற்சித்து விட்டான்.. அனைத்தும் தோல்வியே.. அதற்கு இந்த சிறுஉரையாடலே உதாரணம்..
கோவிலின் பிரகார வாசலில் செருப்பில்லாமல் முதல் எட்டு வைத்த அந்த நொடியில், கல்லின் குளிர்ச்சி பாதத்திலிருந்து நேராக மூளைக்குள் பாய்ந்தது. ஒரு கணம் திடுக்கிட்டு நின்றாள். நகரத்து வெப்பத்துக்கும், மனிதர் கூட்டத்தின் சத்தத்துக்கும் பழகிய உடல், அந்த குளிர்ச்சியை எதிர்பார்க்கவே இல்லை. அதே நேரம், கோவிலுக்குள் மட்டுமே வீசும் அந்த விசித்திரமான மலைக்காற்று இதமான நினைவலைகளை தட்டி எழுப்புவது போல அவள் முகத்தை வருடிச் சென்றது.
அந்த காற்றில் ஏதோ இருந்தது. சத்தமில்லாத அமைதி. விளக்குகளின் வாசனை. கல்லில் ஊறிய காலத்தின் நிசப்தம். எல்லாமே சேர்ந்து அவளை ஒரு கணத்தில் குஷியடையச் செய்தன.
உள்ளங்கைகள் ஜில்லென்று குளிர, தன்னிச்சையாக அவன் கைகளைப் பிடித்துக் கொண்டாள். யோசிக்கவில்லை. அனுமதி கேட்கவில்லை. அந்த சூட்டில் தஞ்சம் கொள்ள வேண்டும் என்ற உந்துதலினால் மட்டும் பற்றினாள்…
ஆனால் அவனோ அந்த ஒரு நொடியிலேயே உறைந்து நின்றான்.. அவன் உள்ளங்கையில் உரசிய அவளின் விரல்கள் பற்றிக்கொண்ட விதம்.. அவளுக்குள் எந்த மாற்றமும் தென்படவில்லை.. ஆனால் அந்தத் தொடுதல். இதுவரை வார்த்தைகளால் மட்டுமே ஏற்பட்ட பழக்கம், ஒரே கணத்தில் தொடுதலாக மாறியதும் வித்தியாசமாக உணர்ந்தான்..
கையை விடவில்லை.. இருகரங்களில் உருவான வெப்பம் மார்புக்குள் இறங்கி, மூச்சை சற்றே கனமாக்கியது. இதுதான் அவனுடைய பிரச்சனை. அவள் சாதாரணமாக நிகழ்த்துவது எல்லாம் அவனுக்குள் வேறொரு அர்த்தத்தை உருவாக்கி விடுகிறது.
இப்படி கையைப் பிடித்து நடப்பாள் என்று தெரிந்திருந்தால்…
ஒரு கணம் மனம் ஓடியது. மூன்று மாதங்கள். காபி ஷாப்புகள். சாலையோர உரையாடல்கள். அவற்றில் எதுவும் இவ்வளவு ஆழமாக அவனை கலங்கடிக்கவில்லை.
“அவள் தலை நிமிர்ந்து பார்த்தாள். கண்களில் அந்தக் குழந்தைத்தனமான ஆர்வம். எதுவும் தெரியாதது போல, எல்லாவற்றையும் புதிதாகப் பார்க்கும் பார்வை. அவனுக்குள் தோன்றிய உணர்வுகளை அடக்கிக்கொள்ள ஒரு வழியாகினான். இங்கே தான் நிற்க வேண்டும். இது தான் எல்லை என்று கடிவாளமிட்டு கொண்டான்..
“சரி.. வா.. ஒவ்வொன்னா சுத்திக்காட்டுறேன்.. ஆனா சாமி கும்பிடுன்னு கட்டாயப்படுத்த கூடாது.. சரியா??” ஏனோ அவள் கூறி எதையும் மறுக்க முடிவதில்லை..
“ம்ம்ம்…” கிடுகிடுவென தலையாட்டியபடியே அவன் அருகே நடந்தாள் மேகா. நெய் விளக்கு, எலுமிச்சை விளக்கு என்று அடுக்கி வைக்கப்பட்டிருந்த வகை வகையான விளக்குகளை குழந்தை மாதிரி பார்த்துக்கொண்டே சென்றாள். அந்த மங்கலமான வெளிச்சத்தில் அவள் முகத்தில் தெரிந்த ஆச்சரியம்,, அவ்விடம் அவளுக்கே புரியாத ஒரு நம்பிக்கையை வெளிப்படுத்தியது.
“இங்க வெள்ளிக்கிழமை வெள்ளிக்கிழமை விளக்கு போட்டா கல்யாணம் நடக்குமாமே… உண்மையா?” சிறு சந்தேகத்திற்குள் பெரிய ஆவலை கண்களுக்குள் கண்டான்…
“இதெல்லாம் உனக்கு யார் சொல்றது??”
“கஸ்தூரி அக்கா ஹாஸ்டல்ல சொல்லிட்டு இருந்தாங்க… அவங்களுக்கு அப்படிதான் ஆச்சாம்..” இதே மேகா தான்
சில நிமிடங்களுக்கு முன், சாமி கண்ணை குத்திடுமா? என்று சீரியஸாக கேட்டவள்.
“அப்படித்தான் சொல்லுவாங்க… ஆனா எந்த அளவுக்கு உண்மைன்னு தெரியாது.. அவங்க அவங்க நம்பிக்கை தான்..” என்றவன் “நீ விளக்கு வைக்கப் போறியா?”
“ம்ம்.. வைக்கலாம்னு தோணுது..”
அவள் வாக்கியத்தை நிறைவு செய்யும் முன்னே, “இது உனக்கெல்லாம் தேவையே இல்ல… ம்ம்னு சொல்லு… அத்தான் இப்பவே தாலிய கட்டி பெண்டாட்டி ஆக்கிடுறேன்..”
“ஹேஹ்ஹே… ஆசை தான்..” என்று அழகு கான்பித்தவள், “நான் கேட்டது அனு அக்காவுக்கு.. ரொம்ப நாள் தேடிட்டு இருக்குறாங்க போல.. அமையவே மாட்டுதுன்னு பீல் பண்ணிட்டு இருந்தாங்க.. அவங்களால வாராவாரம் வந்துட்டு போக முடியாதுல்ல.. அதான் நான் பண்ண போறேன்..” என்றவளின் நம்பிக்கையை கெடுக்க விரும்பாமல், “வந்தன்னா சொல்லு.. நானே கூட்டிட்டு வர்றேன்…” என்றான்..
“கோவிலுக்கு வர கூடாதுன்னு சொன்ன..”
“குட்டி சாத்தான் நீ இழுத்துட்டு வந்துட்டியே..”
“ஹிஹி..”
பேசியபடியே கோவிலின் கருவறை முன் நின்றனர்.. அவளுக்கு கும்பிட தெரியாது.. அவனுக்கு கும்பிட முடியாது.
கருவறையை நோக்கி நின்று, அவள் மனதுக்குள் எதையோ வேண்டிக்கொண்டாள். அவன், வெறுமனே பார்த்துக்கொண்டிருந்தான்.. வாழ்வில் நடந்த சில விஷயங்களை நம்ப முடியாதவனுக்கு கடவுளிடம் என்ன கேட்பதென்றே தெரியாமல் போயிருந்தது.. கோவிலை சுற்றி வரும் போது, ஒரு இடத்தில் திடீரென நின்றவள், முன்னேறி சென்றவனை அழைத்து
“ஹே… இங்க பாரு… இந்த குங்குமம் கலர் வித்தியாசமா இருக்குல்ல…” என்று காண்பித்தாள்..
“ரொம்ப டார்க்கா இருக்கோ…” என்று அவன் யோசிக்க, “ஆமா..” என்றவள் அதை ஆராய்ந்து கொண்டிருக்க, “நீ வேணா வச்சுப் பாரேன்.” என்றுபேச்சுப் பழக்கத்தில், யோசிக்காமல், அவன் விரல்கள் அவள் நெற்றி வகிட்டில் குங்குமத்தை பதித்திருந்தது..
அந்த நொடி உறைந்து நின்றாள் மேகா.. அவன் உலுக்கியபோதும் அவள் கண்கள் அசையவில்லை. “இப்ப… நீ என்ன பண்ணுன?” அந்தக் கேள்வியில் கோபம் இல்லை. கண்களில் ஒருவித பயம் கலந்திருந்தது..
“குங்குமம் வச்சு விட்டேன்..” அவளை போலவே சாதாரணமாய் பதில் சொன்ன விதம் முதல் முதலாய் அவளை கலங்கடித்தது..
“அதான் எங்க வச்சுருக்க?? கோவில்ல வச்சு வயசு பையன் ஒரு பொண்ணுக்கு பூ குடுத்தாலே கல்யாணம் ஆகும்னு சொல்லுவாங்க.. நீ குங்குமம் வச்சுட்டு அசால்ட்டா பேசுற..”
“ஏ, லூசு.. நீ கிறிஸ்டியன் தானே.. இதெல்லாம் நம்பிட்டு இருக்குற..” லேசாய் சிரிக்க முயன்றான்..
“நாம நிக்குறது ஒரு கோவில்.. இங்க இருக்குறதும் கடவுள் தான்.. எல்லாரும் சொல்ற மாதிரி ஆய்டுச்சுன்னா என்ன பண்றது??” ஏகத்திற்கும் பயந்திருந்தாள்..
“எல்லாரும் சொல்றதை பத்தி நீ ஏன் யோசிக்குற.. உண்மையை சொல்லு உனக்கு பயமா இருக்குதா??”
“பயத்துல பேசுறேன்னு புரியலையா??”
“பைத்தியம்.. ஏன் பயப்படுற.. புதுசா இன்னொருத்தன் முளைச்சு வந்தா தானே யோசிக்கணும்?? அப்படி பார்த்தாலும் நான் தானடி கல்யாணம் பண்ணிக்க போறேன்.. தேவையில்லாம பயந்துக்கிட்டு..” குரலில் கிண்டல் இருந்தாலும் கண்களில் ஒருவித உரிமை தெரிந்தது..
