அத்தியாயம் 4
அது ரதி தேவி இல்ல மச்சான்… ரதிதியா, நம்ப காலேஜ் பியூட்டி…
அந்த கல்லூரியில் இருந்த மாணவ மாணவி முதல், பேராசிரியர்கள் வரை அந்த பெரிய கட்டிடத்தின் முன் கூடி இருக்க, அந்த இடம் முழுக்க ஒரே கூச்சமும் குழப்புமாக இருந்தது.
“டேய் எங்க கேண்டீலே யாரையும் காணோம்? எல்லாம் எங்க போனாங்க?” என்று கேட்டவாறே தன் நண்பர் பட்டாளத்துடன் கேண்டீனுள் நுழைந்தான் விக்ரம்.
“அதான் மச்சான் எனக்கும் தெரியல” என்ற விக்ரமின் நண்பன் அருண் கூற, அப்போது மூச்சிறைக்க ஓடிவந்த ஒருவன்.
“டேய்… இந்த லூசு கௌதம் அங்க மெயின் பிளாக் மேலே ஏறி நின்னுட்டு கீழே குதிச்சிடுவேன்னு சொல்லிட்டு இருக்கான், மொத்த காலேஜும் அங்க தான் இருக்குது” என்றவன் கேட்க, உடனே விக்ரமை அழைத்து கொண்டு அருண் அங்கு சென்றான்.
ஃபேஷன் டிசைனிங் கல்லூரியின் மெயின் பிளாக்கின் மொட்டை மாடியில் நின்றிருந்தான் கௌதம். அவன் கண்களில் வெறி, உடலில் நடுக்கம்.
“தியா! இப்போவே இங்க வந்தாகணும்… அவ மட்டும் எனக்கு ஓகே சொல்லலன்னா, அடுத்த செகண்ட் என் பொணம் தான் கீழே கிடக்கும்!” என்றவன் கூற, அவன் குரல் காற்றுடன் கலந்து அந்த கல்லூரி முழுக்க எதிரொலித்தது.
கீழே நூற்றுக்கணக்கான மாணவர்கள் கூடி நிற்க, பேராசிரியர்கள் அவனைச் சமாதானப்படுத்த முயன்று தோற்றுப் போய்க் கொண்டிருந்தனர்.
“இவனுக்கு என்ன பைத்தியமா டா? ஒரு பொண்ணு லவ் அக்சப்ட் பண்ணிக்கலைன்னா இப்படி தான் பண்ணுவாங்களா?” என்று கூல்ரிங்ஸ் குடித்தவாறு கூலாக விக்ரம் கேட்க, அவனை ஒரு பார்வை பார்த்த அருண்.
“எல்லாரும் விக்ரம் ஆகிட முடியாதுல விக்ரம்…” என்றவன் நக்கலாக கூற
“அதுவென உண்மை தான் மச்சான், என்னை மாதிரி இந்த உலகத்துல நான் மட்டும் தான்” என்றான்.
விக்ரம் அந்தக் கல்லூரியின் சாக்லேட் பாய், லவ்வர் பாய், ஹீரோ என்று இப்படி இன்னும் சொல்லி கொண்டே போகலாம். காரணம் அவனது வசீகரமான புன்னகைக்கும், துள்ளலான நடைக்கும் அடிமையாகாத பெண்களே அந்த கல்லூரியில் இல்லை. ஒரு நாளைக்குக் குறைந்தது இரண்டு இல்ல மூன்று ப்ரோபோசலாவது வந்து விடும். ஆனால் விக்ரம், அவர்களை யாரையும் ஏற்றுக்கொள்ள மாட்டான். மாறாக, அவர்களை பேசி வம்பிழுத்துக் கலாய்த்து, அழ வைத்து ரசிப்பான். அப்படி அந்த பெண்கள் அழும் போது அவனுக்குள் ஒரு பேரானந்தம். ஒரு ‘சேடிஸ்ட்’ என்றும் கூட கூறலாம்.
“இப்போ அப்படி எந்த ரதி தேவிக்காக இவன் மேல நின்னு சீன் போட்டுட்டு இருக்கான்?” என்று விக்ரம் எரிச்சலோடு கேட்டான்.
“அது ரதி தேவி இல்ல மச்சான்,… ரதிதியா, நம்ப காலேஜ் பியூட்டி… நம்ம பசங்க மொத்தமா அவ பின்னாடி தான் பைத்தியம் பிடிச்சு சுத்துறாங்க, ஏன் நான் கூட…” என்றவன் சிறு வெட்கத்தோடு கூற, ஸ்லோமோஷனில் திரும்பி தன் நண்பனை பார்த்த விக்ரம்.
“ரதிதியாவா யாருடா அவ? அவ என்ன அவ்வளவு அழகா?” என்று விக்ரம் நக்கலாக கேட்டான்.
“பேருல மட்டும் ரதி இல்ல மச்சான், அவ நேரிலையும் ரதி தான்… இவன் ரதிதியாவுக்காகத் தான் இப்படிப் பண்றான். அவளைப் பத்தி உனக்குத் தெரியாதுல்ல? அவளும் உன்னைப் போலத்தான், யாரையும் மதிக்க மாட்டா. ஆனா உங்க ரெண்டு பேருக்கும் நடுவுல ஒரு சின்ன வித்தியாசம் அது என்னன்னா, நீ உன்கிட்ட ப்ரொபோஸ் பண்ற பொண்ணுங்களை கிண்டல் பண்ணி கலாய்ப்ப, அவ கண்டுக்கவே மாட்டா. சரியான திமிர் பிடிச்சவ!” என்று அருண் தியாவை பற்றி கூற, அதை கேட்டு விக்ரமின் புருவம் சற்று உயர்ந்தது.
அப்போது சரியாக அந்த கூட்டத்தின் இரைச்சலுக்கு நடுவே, ஒரு அமைதிப் புயலென வந்தாள் ரதிதியா. வெண்புறா போல் வெள்ளை நிறச் சுடிதாரில், முகத்தில் துளியும் பதற்றமில்லாமல் அவள் நடந்து வந்த விதம், அங்கிருந்த அனைவரையும் ஒரு நிமிடம் திகைக்க வைத்தது.
“கௌதம் என்ன பண்றீங்க? நான் தான் உங்களை காதலிக்கலன்னு தெளிவா சொல்லிட்டானே! அப்புறமும் எதுக்கு இப்படி மேல ஏறி நின்னு சீன் கிரியேட் பண்றீங்க?” என்று கடுப்போடு தியா கேட்டாள்.
“தியா நீ மட்டும் இப்போ என்னோட லவ்வை அக்ஸப்ட் பண்ணிக்கல, சத்தியமா சொல்றேன் இங்க இருந்து குதிச்சு செத்துருவேன். என்னால நீ இல்லாத ஒரு வாழ்க்கையை நினைச்சு கூட பார்க்க முடியாது… ப்ளீஸ் என்னோட லவ்வ அக்சப்ட் பண்ணிக்கோ தியா” என்றவன் மேலே நின்று கெஞ்சி கொண்டிருக்க, கீழே இருந்தவர்கள் அனைவரும் அவனைக் குதிக்க வேண்டாம் என்று கூறி கத்தி கூச்சலிட்டு கொண்டு இருந்தனர்.
தியா வந்துவிட்டாள் என்று தெரிந்ததும் விக்ரமின் இதயம் அவளைப் பார்க்கத் துடித்தது. ஆனால், தன் கெத்து குறைந்துவிடக் கூடாது என்பதற்காக, மிகவும் அலட்சியமாகத் தன் முகத்தைத் திருப்பிக் கொண்டு, தன் கையில் இருந்த கூல்ரிங்க்ஸை குடித்தவன், ஏளனமாகச் சிரித்தான்
.
“என்னமோ பெருசா ரம்பை, ஊர்வசி ரேஞ்சுக்கு பில்டப் கொடுத்தீங்க… பார்த்தா அப்படி ஒன்னும் ஸ்பெஷலா தெரியலையே!” என்று விக்ரம் வேண்டுமென்றே சத்தமாகக் கூறினான்.
“மச்சான்… நீ இன்னும் அவளை சரியா பார்க்கல, அதான் இப்படிப் பேசுற. ஒருவேளை அவளை நீ நேர்ல பார்த்திருந்தா… இந்நேரம் நீயும் அவ பின்னாடி சுத்துற ஆட்களே ஒருத்தனா இருந்து இருப்பே!” என்று அவன் நண்பன் ரகு கிண்டலாகச் சொன்னான்.
“நானா? அதுவும் ஒரு பொண்ணு பின்னாடியா? சான்ஸே இல்லை மச்சான். அப்படியே அந்தப் பொண்ணு அவ்வளவு பெரிய அழகியா இருந்தாலும் சரி, நான் கண்டுக்க மாட்டேன். நீங்க சொல்ற அந்தத் திமிர் பிடிச்சவளே வேணா என் பின்னாடி சுத்த வைப்பேனே தவிர, அவ பின்னாடி சுத்தமாட்டேன்… அதுதான் இந்த விக்ரம்!” என்று சவால் விட்டான்.
“அப்படியா மகனே? அப்போ, இப்போ அவளைப் பார்த்துட்டுச் சொல்லு…” என்ற அருண், விக்ரமின் முகத்தைத் தியா இருக்கும் திசையை பக்கமாக திருப்பினான்.
அங்கே தியா… அந்தப் பரபரப்பான சூழலுக்கும் தனக்கும் எந்தவொரு சம்பந்தமும் இல்லை என்பது போல், மார்புக்குக் குறுக்கே கைகளைக் கட்டிக்கொண்டு தன் ஒற்றை புருவம் உயர்த்தி, மேலே நின்று தற்கொலை செய்து கொள்வதாக பயமுறுத்திக் கொண்டிருந்த கௌதமை, ஏளனமாக ஒரு பார்வை பார்த்தவள்.
“இப்போ என்ன? நான் உங்களை லவ் பண்றேன்னு சொல்லலைன்னா அங்க இருந்து குதிச்சு செத்துடுவீங்க, அப்படித்தானே?” என்று சற்று தன் குரலை உயர்த்தி கேட்க,
“ம்… ஆமா, தியா நீ என்னோட லவ்வ அக்ஸப்ட் பண்ணிக்கலைன்னா நான் இங்க இருந்து குதிச்சு செத்துருவேன்” என்றவன் ஒரு அடி முன்னால் எடுத்து வைக்க, அவனை கண்கள் சுருங்க ஒரு பார்வை பார்த்த தியா.
“அப்போ சரி குதிச்சு செத்துடு…” என்றவள் கூற, அதைக் கேட்டு அங்கிருந்து அனைவரும் ஒரு நொடி அதிர்ந்து தான் போயினர்.
“ஏய் தியா… என்ன பேசுறேன்னு தெரிஞ்சு தான் பேசுறீயா? அவன் மேல இருந்து விழுந்து செத்துட்டா பழி உன்னோட மேல தான் விழுகும்” என்று அவள் தோழி பதட்டத்தோடும் பயத்தோடும் கூற, தியாவோ சிறிதும் பயம் கொள்ளாமல்.
“அவன் மேல இருந்து விழுந்து செத்தா எதுக்கு என் மேல பழி விழுகும்? கேவலம் ஒரு பொண்ணு லவ் பண்ணலன்னு சொன்னதுக்காக மேல இருந்து விழுந்து செத்துடுவேன் சொல்றான். அவனுக்கே அவன் உயிர் மேல அக்கறை இல்ல, நீங்க எல்லாரும் ஏன் கவலைப்படுறீங்க? அவன் விழுந்து செத்தா சாகட்டும் எனக்கென்ன? போங்க போய் படிக்கிற வேலையை பாருங்க” என்றவள் மேலே நிமிர்ந்து அவன் நின்று இருந்தால் இடத்தை ஒரு பார்வை பார்த்துவிட்டு தனக்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை என்பது போல் அங்கிருந்து போக,
“தியா!… கடைசியா கேட்குறேன், என்னோட லவ்வை ஏத்துக்குவீயா மாட்டியா?” என்று கேட்டவன் கண்கள் கோபத்தில் சிவந்தது.
“நீங்க இன்னும் எத்தனை தடவை கேட்டாலும் என்னோட பதில் ஒன்னு தான்… முடியாது…” என்றவள் அங்கிருந்து போக,
“தியா… தியா…” என்றவன் கத்தி கூச்சலிட்டு கொண்டிருந்தான்.
தியாவின் இந்த செயல் விக்ரமை ஒரே நொடியில் மொத்தமாக அவள் பக்கமாக சாய்த்தது. விக்ரமின் கண்கள் தியாவை விட்டு நகர மறுத்தன. அவள் மீது விழுந்த அந்தப் பொன் நிறச் சூரிய ஒளி, அவளை ஒரு தேவதையாகக் காட்டினாலும், அவளது கண்களில் இருந்த அலட்சியம் அவளுள் இருந்த ராட்சசியை அவனுக்கு காட்டியது. இருந்தாலும் பெண்ணவளின் அந்த அலட்சியமான பார்வையால் தான் அன்றில் இருந்து இன்று வரை அவளையே சுற்ற வைக்கிறது.
“எக்ஸ்கியூஸ் மீ… ஒரு நிமிஷம்” என்று தியாவின் முன் வந்து விக்ரம் வழி மறித்து நிற்க, என்ன என்பது போல் அவள் ஒற்றைப் புருவம் உயர்த்து பார்த்தவளின் அந்த ஒற்றை பார்வையில் முற்றிலுமாக அவளிடம் தொலைந்து போனான் என்று தான் சொல்ல வேண்டும். இருந்தாலும் தனக்குள் இருக்கும் உணர்வுகளை அவளிடம் வெளிக்காட்டாத விக்ரம்.
“நீங்க ஏன் அந்தப் பையனோ லவ்வை அக்சப்ட் பண்ணிக்கலைன்னு நான் தெரிஞ்சுக்கலாமா?” என்று விக்ரம் கேட்க,
“ இன்னைக்கு நான் லவ் பண்ணலன்னு சொன்னதை கூட தாங்கிக்க முடியாமல் மேலே இருந்து விழுந்து குதித்து செத்துடுவேன்னு பயமுறுத்துறவன். நாளைக்கு வேற என்ன வேணாலும் பண்ணுவான், இவனை மாதிரி ஆளுங்க எல்லாம் சும்மா இந்த மாதிரி பிளாக்மெயில் பண்றதுக்கு மட்டும் தான் லாயிக்கு, மத்தபடி வேற ஒன்னும் பண்ண மாட்டாங்க, பார்க்குற வரைக்கும் பார்த்துட்டு ஒரு அஞ்சு இல்ல பத்து நிமிஷத்துல யாராவது காப்பாத்த வரங்களான்னு பார்ப்பான். அப்படி யாரும் வரலைன்னு தெரிஞ்சது பெரிய உத்தம மாதிரி கீழ இறங்கி வந்துடுவான். அவனுக்காக போய் இவங்க என்ன தேவையில்லாம கத்தி கூச்சலிட்டு இருக்காங்க, இடியட்ஸ்!” என்று திட்டியவள் அங்கிருந்து சென்றுவிட, போகும் தியாவின் உருவத்தையே கண்ணிமைக்காமல் பார்த்த விக்ரமின் உதடுகள்
“க்ரேஸி கேர்ள்” என்று முணுமுணுத்த விக்ரமின் இதழ் புன்னகையில் மலர்ந்தது. அதன் பின் வந்த நாட்களில் விக்ரமிற்கும் தியாவிற்கும் இடையே அடிக்கடி சந்திப்பை ஏற்பட்டுத்தியது என்பதை விட ஏற்படுத்தி கொண்டான் விக்ரம்.
அனைவரையும் மறுத்த தியா விக்ரமை மட்டும் எப்படி கல்யாணம் செய்து கொள்ள ஒப்புக்கொண்டான்? ஆதவனை பற்றி விக்ரமுக்கு தெரியுமா தெரியாதா? இல்லை தெரிந்தும் கூட தன் பிடிவாதத்தால் தியாவை அடைய நினைக்கிறானா? இந்த கேள்விகளுக்கான விடையங்களை தெரிந்துக்கொள்ள தொடர்ந்து படியுங்கள்…
உன் விழி தேடும் என் பிம்பம்…
வணக்கம் என் புதிய வாசக நண்பர்களே… என்னை உங்களுக்குத் தெரியுமா என்று எனக்குத் தெரியவில்லை… ஒருவேளை என்னுடைய கதையைத் தொடர்ந்து படிக்கும் என் அன்பு வாசகர்கள் என் எழுத்தையும் என் கதையையும் கண்டறிந்தால் எனக்கு மிகவும் சந்தோசம் தான், ஆனா கண்டுபிடித்தால் இந்தப் போட்டி முடியும் வரை ரகசியம் காக்கவும்…
என்னுடைய இந்தக் கதையைப் படிக்கும் வாசகர்களாகிய நீங்கக் கொடுக்கும் ஊக்கம் மட்டுமே என்னை அடுத்ததா படிக்குக் கொண்டு செல்லும்… ஆதலால் கதையைப் படிக்கும் அனைவரும் என் கதையைப் பற்றி உங்கள் மனதில் தோன்றும் கருத்துக்களை கருத்து பெட்டியில் பதிவு செய்யுங்கள். அது நிறையாக இருந்தாலும் சரி குறையாக இருந்தாலும் சரி… உங்கள் கருத்து ஒவ்வொன்றும் எனக்கு மிக முக்கியம் என்பதை மறந்து விடாதீர்கள் நண்பர்களே!….
