விழி 😍 பிம்பம்🪞- 5

அத்தியாயம் 5 

 

ஐ லவ் யூ தியா! வில் யூ மேரி மீ?

 

விக்ரமுக்குத் தியாவைப் பார்த்த முதல் நொடியே ஒரு ஈர்ப்பு இருந்தது உண்மைதான். அதற்காக அவன் ஒன்றும் அவளைத் துரத்தித் துரத்தி எல்லாம் காதலிக்கவில்லை. மாறாக, அவளுக்குத் தெரியாமலே அவளை பின்தொடர்ந்து அவளைப் பற்றி சின்ன சின்ன விஷயங்களை கூட தெரிந்து கொள்ள ஆரம்பித்தான். அவள் எங்கே சென்றாலும் அங்கே எதேச்சையாக வருவது போல் வந்து அவளிடம் பேசுவான். தியாவும் அவனை ஒரு சீனியராகவும், மனதுக்குப் பிடித்த நண்பனாகவுமே பார்த்தாள். 

மற்றவர்கள் காதலைச் சொல்லி அவளை நெருங்கிய போது, விக்ரம் மட்டும் ஒரு தோழனாக அவளை நெருங்கினான். சொல்ல போனால் அவனின் அந்த ‘நட்பு’ என்னும் கவசமே தியாவை அவனிடம் நெருங்க வைத்தது. அவனுடன் பேசும்போதும், சிரிக்கும்போதும் தியா தன்னை மிகவும் பாதுகாப்பாக உணர்ந்தாள். ஆனால், விக்ரமின் மனதிற்குள் இருந்தது வெறும் நட்பு அல்லவே.

விக்ரம் தியாவை காதலிப்பது ஒட்டுமொத்த காலேஜிக்கும் தெரிந்த ரகசியம் தான், ஆனால் தியாவுக்கு மட்டும் அது தெரியாது என்பதை விட தெரியாமல் பார்த்து கொண்டான் என்பது தான் உண்மை.

விக்ரம் அவ்வளவு எளிதில் கோவப்படமாட்டான், யாரிடமும் சண்டைக்கும் செல்லும் ஆளும் இல்ல, அவனை பொறுத்தவரை ஜாலியா சந்தோஷமா இருக்கனும். இருக்குறது ஒரு லைஃப் அதை நமக்கு பிடிச்ச மாதிரி என்ஜாய் பண்ணி சந்தோஷமா வாழனும் என்ற கொள்கையுடன் வாழ்பவன். ஆனால் அதுவே தியா என்று வந்துவிட்டால் அவன் ஒரு பிடிவாதக்காரன். யாருக்காகவும் எதுவும் அவளை விட்டு கொடுக்க மாட்டான். அவளை யாராவது தொந்தரவு செய்தாலோ அல்லது தவறான பார்வையில் நெருங்கினாலோ விக்ரமின் ‘நல்லவன்’ முகம் மறைந்துவிடும்.

 அவளுக்குத் தெரியாமலேயே அவளைச் சுற்றி ஒரு பாதுகாப்பு வளையத்தை அவன் உருவாக்கி வைத்திருந்தான். அவளைத் பின் தொடர்ந்த ஓரிரு மாணவர்களைத் தனியாக அழைத்து, அவன் பாணியில் கவனித்தவன்.

“அவ என் உயிர்… அவ பின்னாடி இனி உங்க யாரையாவது நான் பார்த்தேன். அப்புறம் இதுவரைக்கும் நீங்க பார்க்காத ஒரு விக்ரமை பார்ப்பீங்க” என்று எச்சரித்து அனுப்ப, இதுவரை கூலான விக்ரமை பார்த்து பழகியவர்களுக்கு அவனின் இந்த வில்லத்தனம் மிகவும் பயத்தை கொடுக்க, அதான் பின் யாரும் தியாவின் பின் சுற்றவில்லை.

நாட்கள் உருண்டோடின. விக்ரமின் கல்லூரிப் படிப்பின் இறுதி நாள்… அன்று கல்லூரியின் ஃபேர்வெல் பார்ட்டி (Farewell Party), ஒட்டுமொத்த மாணவ மாணவிகள் அனைவரும் அங்கு தான் கூடி இருந்தனர். வண்ண விளக்குகளுக்கு நடுவே, dj – வின் கைவண்ணத்தில் அந்த இடமெங்கும் பாட்டு சத்தம் எதிரொலித்து கொண்டிருக்க, தியாவோ இதை அனைத்தையும் ஓரமாக நின்று வேடிக்கை பார்த்து சிரித்து கொண்டிருந்தாள். 

அப்போது திடீரென அந்த இடமே அமைதியாக, கலர்கலராக ஒளிந்து கொண்டிருந்த லைட்ஸ் எல்லாம் ஆஃப் ஆகி இடம் மொத்தம் இருளில் மூழ்க, தியாவோ குழப்பத்தோடு என்ன நடக்கிறது என்று புரியாமல் சற்று குழப்பத்தோடு பார்த்து கொண்டிருக்க, அப்போது சரியாக அவள் மேல் ஸ்பாட் லைட் பட, அதே போல் மற்றொரு முனையில் நின்றிருந்த விக்ரமின் மீதும் பட்டது.

“விக்ரம்…” என்று பெண்ணவளின் உதடுகள் முணுமுணுக்க, தியாவை பார்த்து வசீகரிக்கும் ஒரு புன்னகை சிந்திய விக்ரம். கையில் ஒரு ரோஜா பொக்கேயுடன் தியாவை நெருங்கியவன். 

“தியா… எத்தனையோ பொண்ணுங்க என்கிட்ட காதலைச் சொல்லும் போது, நான் அவங்களைக் கிண்டல் பண்ணிச் சிரிச்சிருக்கேன். ஏன், சிலரை அழக் கூட வச்சிருக்கேன். ஆனா என்னன்னு தெரியல… உன்னைப் பார்த்தப்போ மட்டும், நான் செஞ்சதெல்லாம் தப்புன்னு தோணுச்சு. உன்கிட்ட இருக்குற அந்தத் தனித்துவம், அந்தத் திமிர்… அதுதான் இந்த விக்ரமை மொத்தமா மாத்திடுச்சு.”

தியா என்ன சொல்வதென்று தெரியாமல் திகைத்து நிற்க, விக்ரம் தொடர்ந்தான்.

“இந்த ரெண்டு வருஷத்துல நாம நல்ல பிரண்ட்ஸா இருந்திருக்கோம். நிறையப் பேசிச் சிரிச்சிருக்கோம். என் வாழ்க்கையிலேயே இந்த ரெண்டு வருஷம் தான் ‘பெஸ்ட் மெமரீஸ்’. ஆனா, இது வெறும் மெமரீஸ்ஸா மட்டும் நின்னுடக்கூடாது தியா… இது என் வாழ்க்கையாவே மாறணும்னு ஆசைப்படுறேன். நம்ம நட்பு காதலா மாறினா அழகா இருக்கும்… அதுவே கல்யாணமா மாறி நாம கணவன் மனைவியா வாழ்ந்தா இன்னும் இன்னும் அழகா இருக்கும்னு தோணுது!” என்ற விக்ரம், சட்டென்று அனைவர் முன்னிலையிலும் மண்டியிட்டு, கையில் இருந்த ரோஜாக்களை அவளிடம் நீட்டினான்.

“ஐ லவ் யூ தியா! வில் யூ மேரி மீ?” (Will you marry me?) என்றவனின் குரலில் அத்தனை உருக்கம், கண்கள் முழுக்க காதல் நிறைந்திருந்தது.

அதை கண்ட அங்கிருந்த அனைவரும் “அக்ஸப்ட் பண்ணிக்கோ அக்ஸப்ட் பண்ணிக்கோ” என்று கைதட்டி ஆரவாரம் செய்ய, தியா மட்டும் அதிர்ச்சியில் உறைந்து போனாள். அவளது முகம் கோபத்தில் சிவந்தது. 

“விக்ரம்! என்ன விளையாடுறீங்க? நான் உங்களை ஒரு நல்ல பிரண்டா மட்டும் தான் நினைச்சேன். நீங்க என்னடான்னா இப்படி லவ் ப்ரோபோஸ் பண்றீங்க?” என்று  தியா எரிச்சலோடும் கோபத்தோடும் கேட்டாள்.

“தியா, பிரென்ஷிப்பும் லவ்வும் வேற வேற இல்லையே… ரெண்டும் ஒன்னு தான், உன்னைத் நல்லாப் புரிஞ்சுகிட்ட ஒருத்தன் உனக்கு ஹஸ்பெண்டா வர்றதுல என்ன தப்பு இருக்கு? ஏன்… நண்பர்கள் காதலராக மாறக்கூடாதா என்ன?” என்று  விக்ரம் மிகவும் நிதானமாகவே கேட்டான்.

“மாறலாம்… ஆனா நம்ம விஷயத்துல அதுக்கு வாய்ப்பே இல்லை!” – தியா வெடுக்கென்று பதிலளித்தாள்.

“ஏன்? அதுக்கு என்ன காரணம்?” என்று விக்ரம் விடாமல் கேட்க, தியாவுக்குக் கோபம் உச்சத்துக்கே போனது.

“காரணம் உங்ககிட்ட சொல்லணும்னு எனக்கு எந்த அவசியமும் இல்லை. இப்போவே… இந்த நிமிஷத்தோடயே இந்த நினைப்பை விட்டுடுங்க. இன்னொரு தடவை என்கிட்ட இதைப் பேசினா, அப்புறம் நான் வேற மாதிரி நடந்துப்பேன்!”  என்றவள் அந்த ரோஜாக்களை வெடுக்கென்று பிடுங்கி கீழே எறிந்துவிட்டு,

 “இனிமே என் முன்னாடி வந்து நிக்காதீங்க!” என்று எச்சரித்துவிட்டுச் சென்ற அந்த நிமிடம், விக்ரமோ இன்னும் மண்டியிட்ட நிலையிலேயே சிலையாக நின்றிருந்தான்.

DJ-வின் இசை நின்றுவிட்டிருந்தது. மைதானத்தின் அந்த நிசப்தத்தை உடைக்கும் விதமாக, கூட்டத்தில் இருந்து ஒரு மெல்லிய சிரிப்பொலி கேட்டது. அது மெல்ல மெல்ல ஒரு கேலிப் பேச்சாக உருவெடுத்தது.

“என்னடா விக்ரம்… அவ உன்னோட ஆளுன்னு சொல்லி ரொம்ப சீன் போட்ட? கடைசியில என்னடான்னா உன்னை எல்லார் முன்னாடியும் வெச்சு நல்ல அசிங்கப்படுத்திட்டு போய்ட்டா!” என்று விக்ரமால் அவமானப்படுத்தப்பட்ட ஒரு மாணவன் கூட்டத்தில் இருந்து கத்தினான்.

“டேய்… இவன் மத்தவங்களை அழ வைப்பான்ல? இப்போ பாரு… இவனையே ஒருத்தி அழ வெச்சிட்டு போய்ட்டா!” என்று மற்றொருவன்  நக்கலோடு சிரிக்க, சுற்றி இருந்தவர்களும் சிரிக்க ஆரம்பித்தனர்.

“இவன் பின்னாடி நம்ப சுத்துனப்போ இவன் நம்பள கண்டுக்கல, அதான் இப்போ அந்தத் தியா இவனை கண்டுக்காமல் போயிட்டா!” என்று சில பெண்களும் அவன் காதுபடவே பேசிச் சிரித்தார்கள்.

எப்போதும் விக்ரமின் புகழைப் பாடும் அவனது நண்பர்கள் கூட, என்ன சொல்வதென்று தெரியாமல் தலைகுனிந்து நின்றனர். விக்ரமின் காதுகளில் அந்தச் சிரிப்பொலிகள் ஈயத்தைக் காய்ச்சி ஊற்றுவது போல இருந்தது. அவனது கண்கள் கீழே கிடந்த அந்தச் சிதறிய ரோஜாக்களைப் பார்த்தன, சட்டென்று எழுந்த விக்ரம், தன் ஆடையைத் தட்டிவிட்டுக் கொண்டான். அவனது முகத்தில் இருந்த அந்த காதல் மறைந்து, ஒருவிதமான வெறி குடியேறியது.

“மச்சான்… விடுடா… இவ இல்லன்னா என்ன, உனக்கு இன்னொருத்தி கிடைக்காமலா போயிடுவா?” என்று அருண் ஆறுதலாக அவன் தோளைத் தொட வந்தான். சட்டென்று விக்ரம் அவன் கையைத் தட்டிவிட்டவன். தியா சென்ற திசையையே வெறித்துப் பார்த்தான்.

“கிடைப்பாடா… ஆனா இன்னொருத்தி இல்ல, இதே ரதிதியாவே எனக்குக் கிடைப்பா! இந்த விக்ரமை எல்லார் முன்னாடியும் தலைகுனிய வெச்சவளே என் முன்னாடி தலைகுனிஞ்சு நான் கற்ற தாலியை வாங்குவா…  அன்னைக்கு இப்போ சிரிக்கிற எவனும் சிரிக்க மாட்டானுங்க!” என்ற விக்ரம் அந்த இடத்திலிருந்து விறுவிறுவென வெளியேறினான். 

அவனது காதுகளில் விழுந்த அந்தக் கேலிப் பேச்சுகள், அவனது காதலை ஒரு பிடிவாதமாக மாற்றியிருந்தது. அவனது சாக்லேட் பாய் பிம்பம் உடைந்து ஒரு தீவிரமான காதலன் அன்றுதான் பிறந்தான்.

அதன்பின் நாளில் பெண்ணவளின் காதலை பெற அவன் செய்த ஒவ்வொரு முயற்சியும் தியாவிற்குத் தொல்லையாகத் தெரிய ஆரம்பித்தது. கொஞ்சம் கொஞ்சமாக அவனிடம் இருந்து விலகிச் செல்ல ஆரம்பித்தாள். அப்போதும் அவன் அவளை விடாமல் காதல் தொல்லை செய்ய கடைசியில் இருவருக்கும் இடையே இருந்தா அந்த அழகான நட்பின் பாலம் முற்றிலும் உடைந்து சிதறியது.

இப்படியே வருடங்கள் மெல்ல நகர, தியாவும் தன் படிப்பை முடித்துவிட்டு கேம்பஸ் இன்டர்வியூவில்  விஆர் கல்ச்சர் என்ற ஒரு ஃபேஷன் டிசைனிங் கம்பெனியில் அசிஸ்டன்ட் டிசைனாராக வேலை கிடைத்தது. தனக்கு வேலை கிடைத்த சந்தோஷத்தில் அவள் முதல் நாள் வேலைக்கு செல்ல, அப்பொழுதுதான் அது விக்ரமின் கம்பெனி என்று தியாவிற்கு தெரிய வந்தது.

அவன் மேல் இருந்த கோபத்தில் முதலில் இந்த வேலையை வேண்டாம் என்று நினைத்தவள். அதன்பின்பே இது தனக்கும் தன் திறமைக்கும் கிடைத்த வேலை இதை ஏன் தான் விட வேண்டும் என்று நினைத்தவள், அதே கம்பெனியில் வேலை செய்ய ஆரம்பித்தால்.

 நாட்கள் மெல்ல நகர நகர விக்ரமின் காதல் தொல்லை மட்டும் தீர்ந்ததாக இல்லை தியாவும் பொறுமையாக சொல்லிப் பார்த்தால் கோபமாக திட்டியும் பார்த்து விட்டால். ஆனால், எப்படி சொல்லியும் அவன் தொல்லை நிற்கவேயில்லை… இதற்கு இடையில் ஒரு பெரிய ஃபேஷன் டிசைனிங் காம்படிஷனில் தியா செய்த டிசைனிங் ஒர்க் மிகவும் பிரபலமானது. அதனால் விஆர் கல்ச்சர் கம்பெனி ஒரு தனித்துவம் மிக்க டிசைன்களை அறிமுகப்படுத்தி மார்க்கெட்டில் நம்பர் 1 ஆக வந்து நின்றது. இதற்கெல்லாம் காரணம் தியாவும் அவரது தனித்துவமான  டிசைன்களும் என்பதனால் சிவராமன் அதாவது விக்ரமின் அப்பா அவளுக்கு ப்ரோமோஷன் கொடுத்தார். இப்படியே தியா தன் திறமையினால் கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து வந்தால். 

காலம் தியாவின் திறமைக்கு மகுடம் சூட்டியது. ஒரு வருடத்திற்கு முன்பு ஹைதராபாத்தில் நடந்த அந்தப் பிரம்மாண்டமான ‘நேஷனல் ஃபேஷன் ஷோ’ தியாவின் வாழ்க்கையையே மொத்தமாக மாற்றியது. அவள் வடிவமைத்த ஆடைகள் மேடையில் மின்னியபோது, இந்திய ஃபேஷன் உலகமே வியந்து பார்த்தது. அதன் விளைவாக, ‘வி.ஆர். கல்ச்சர்’ நிறுவனம் இந்தியாவிலேயே நம்பர் ஒன் இடத்தைப் பிடித்தது.

தன் நிறுவனத்தின் இந்த அசுர வளர்ச்சிக்குக் காரணமான தியாவை சிவராமன் மிகவும் பாராட்டினார். பாராட்டோடு மட்டுமில்லாமல்  அவளுக்குச் சி.டி.ஓ யாக (Chief Creative Officer) ப்ரோமோஷன் கொடுத்து அவளை கௌரவித்தார். இப்போது அந்த நிறுவனத்தின் ஒவ்வொரு நூலும், வண்ணமும் தியாவின் முடிவு தான்.

தியாவின் உழைப்பைக் கண்டு வியந்த சிவராமனும், அவரது மனைவி காயத்ரி தேவியும், அவளைத் தங்கள் வீட்டு மருமகளாக்க ஆசைப்பட்டனர். விக்ரம் தியா மேல் வைத்திருக்கும் தீராத காதலைப் பற்றி அறிந்திருந்த அவர்கள், முறைப்படி அவளைப் பெண் கேட்கத் தியாவின் வீட்டிற்கே சென்றனர்.

பெரிய செல்வாக்கான குடும்பத்தில் இருந்து தன் மகளை பெண் கேட்டு வந்து இருக்கிறார்கள் என்றதும் மதியழகி இன்ப அதிர்ச்சியில் உறைந்து போனார். ஆனால், தியாவின் தந்தை மனோகரன் மட்டும் அமைதியாக இருந்தார். அவருக்குத் தான் தியாவின் மனதின் ஆழத்தில் புதைந்து கிடக்கும் அந்த ஆதவன் பற்றித் தெரியுமே.

“மனோகரன்… எங்க விக்ரமுக்குத் தியாவை ரொம்பப் பிடிச்சிருக்கு. சொல்ல போன எங்களுக்கும் தான், எங்களுக்கு இவன் ஒரே மகன். உங்களுக்கும் சம்மதம்னா நாம இந்த உறவை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு போகலாம்,” என்று சிவராமன் நேரடியாக விஷயத்திற்கு வந்தார்.

மதியழகி ஆவலோடு தன் கணவனைப் பார்க்க, மனோகரனோ நிதானமாகப் பேசினார்.

 “இதுல நாங்க முடிவெடுக்க எதுவும் இல்லை சார். தியா இப்போ பெரிய பதவியில இருக்கா, அவளுக்குன்னு நிறைய ஆசைகளும் கனவுகளும் இருக்கு. எதா இருந்தாலும் அவளோட முடிவுதான் எங்க முடிவும்.”

“என்னங்க பேசுறீங்க? இவ்வளவு பெரிய குடும்பத்துல இருந்து தேடி வந்து கேக்குறாங்க… நீங்க என்னடான்னா இப்படிச் சொல்றீங்க?” என்று மதியழகி பதற்றத்துடன் குறுக்கிட, மனோகரன் தன் பார்வையாலேயே அவரை அடக்கிவர்.

“சாரி சார்… தப்பா எடுத்துக்காதீங்க. என் பொண்ணு மனசுல என்ன இருக்குன்னு தெரியாம என்னால வாக்கு கொடுக்க முடியாது,” என்று மனோகரன் உறுதியாகக் கூற, சிவராமன் சிரித்துக் கொண்டே, 

“அதனால என்ன மனோகரன்? தியாவை இப்போவே கூப்பிடுங்க… அவகிட்டயே பேசிடலாம்,” என்றார்.

அறைக்குள் அமர்ந்து அனைத்தையும் கேட்டுக் கொண்டிருந்த தியா, மெல்ல வெளியே வந்தாள். அவளது முகம் ஒரு தெளிவான நீரோடை போல அமைதியாக இருந்தது. விக்ரமின் பெற்றோர் அவளை ஒரு எதிர்பார்ப்போடு பார்க்க, மதியழகியின் கண்கள்

“சம்மதமுன்னு  சொல்லிவிடு தியா” என்று கெஞ்சின.

“தியா… உனக்கு என் பையன் விக்ரமை…” என்று சிவராமன் தன் வார்த்தைகளை முடிக்கும் முன்பே, தியா தன் பதிலைச் சொன்னாள்.

“என்னை மன்னிச்சிடுங்க அங்கிள்… எனக்கு இந்த கல்யாணத்துல துளியும் விருப்பம் இல்லை!”

அவளின் அந்த ஒற்றை வாக்கியம் அந்த இடத்தையே உறைய வைத்தது. மதியழகி அதிர்ச்சியில் தன் தலையில் கை வைத்து அமர்ந்துவிட, சிவராமனும் காயத்ரியும் ஒருவரை ஒருவர் திகைப்புடன் பார்த்துக் கொண்டனர். மனோகரன் மட்டும் ஒரு வேதனையான புன்னகையுடன் தன் மகளைப் பார்த்தார். தியாவின் மறுப்புக்கு பின்னால் இருக்கும் வலி அவருக்கு மட்டுமே புரிந்தது.

 

விக்ரமின் பிடிவாதமான காதலை தியா ஏற்றுக் கொண்டாளா? விக்ரமின் காதலை தியா மறுக்க ஆதவன் மட்டும் தான் காரணமா? இல்லை வேறு ஏதேனும் காரணம் இருக்கிறதா? விக்ரமிற்கு தியா ஆதவன் மேல் வைத்திருக்கும் காதலை பற்றி தெரிந்தால் என்ன நடக்கும்? இந்த கேள்விகளுக்கான விடயங்களை தெரிந்து கொள்ள இந்த தொடர்ந்து படியுங்கள்…

 உன் விழி தேடும் என் பிம்பம்…

 

வணக்கம் என் புதிய வாசக நண்பர்களே… என்னை உங்களுக்குத் தெரியுமா என்று எனக்குத் தெரியவில்லை… ஒருவேளை என்னுடைய கதையைத் தொடர்ந்து படிக்கும் என் அன்பு வாசகர்கள் என் எழுத்தையும் என் கதையையும் கண்டறிந்தால் எனக்கு மிகவும் சந்தோசம் தான், ஆனா கண்டுபிடித்தால் இந்தப் போட்டி முடியும் வரை ரகசியம் காக்கவும்… 

 

என்னுடைய இந்தக் கதையைப் படிக்கும் வாசகர்களாகிய நீங்கக் கொடுக்கும் ஊக்கம் மட்டுமே என்னை அடுத்ததா படிக்குக் கொண்டு செல்லும்… ஆதலால் கதையைப் படிக்கும் அனைவரும் என் கதையைப் பற்றி உங்கள் மனதில் தோன்றும் கருத்துக்களை கருத்து பெட்டியில் பதிவு செய்யுங்கள்.  அது நிறையாக இருந்தாலும் சரி குறையாக இருந்தாலும் சரி… உங்கள் கருத்து ஒவ்வொன்றும் எனக்கு மிக முக்கியம் என்பதை மறந்து விடாதீர்கள் நண்பர்களே!.…

 

❤️ Loading reactions...
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page