வீழ்ந்தேனடி உன் விழியில்

காலை நேரம் 5 மணி

    அனைவரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்க வீடெங்கும் புகை மண்டலமாக காட்சி அளித்தது. புகையின் நறுமணத்தில் கண் விழித்த நிலாவிற்கு முதலில் ஒன்றும் புரியவில்லை. பிறகு அது ஊதுவத்தியின் நறுமணம் என்று உணர்ந்தவர்க்கு கோவம் எல்லையை கடந்தது. அருகில் உறங்கி கொண்டிருந்த தன் கணவனை எழுப்பினார்.

   ” ஏங்க, எழுந்துரிங்க. உங்க அருமை பொண்ணு பண்ற வேலைய பாருங்க. இப்படி பண்ணாதனு எத்தனை தடவை சொல்லி இருக்கேன். கேக்கவே மாட்டேங்குறா. இப்ப நீங்க வந்து அவளை என்னனு கேளுங்க. ” என்று அவரை எழுப்பி விட்டார்.

தூங்க விடாமல் எழுப்பிய கடுப்பில், ” உனக்கு என் பொண்ண குறை சொல்லலனா நிம்மதியாவே இருக்காதா. வேலை செஞ்சாலும் திட்ற. செய்யலனாலும் திட்ற. ” என்று கூறி கொண்டே எழுந்து அறையை விட்டு வெளியே வந்தார் கதிரவன்.

” உங்க பொண்ணு எதுக்கு இப்டி பண்றனு தெரியாதா. ஒழுங்கா அவளை சத்தம் போடறீங்க இல்லை நான் என்ன பண்ணுவேன்னு எனக்கே தெரியாது. ” மிரட்டி கொண்டே அவரும் கணவர் பின்னால் வெளியே வந்தார்.

வெளியே அவர்களது தவப்புதல்வி இவர்களின் வாக்குவாதத்திற்கு காரணமானவள் குளித்து மஞ்சள் நிற சுடிதார் அணிந்து பூஜை அறையில் சாமி கும்பிட்டு கொண்டிருந்தாள்.  அவள் நம் நாயகி பிரியா .

சாமி கும்பிட்டு சூட தட்டை தந்தையிடம் காட்ட, ” தங்கம் அப்பா இன்னும் குளிக்கலடா. நா அப்புறம் எடுத்துக்குறேன். நீ கும்பிடுமா ” என்று கூற, அவள் திரும்பி தன் தாயை பார்க்க அவரோ இவளை பார்வையாலயே எரித்துக் கொண்டிருந்தார்.

அவர் கோவமாக இருப்பதை கண்டவள் சூட தட்டை சாமி அறையில் வைத்து விட்டு தந்தையிடம், ” அப்பா நீங்க பிரெஷ் ஆகிட்டு வாங்க. நா உங்களுக்கு டீ போட்டு தரேன் ” என்றவள் நிற்காமல் அடுப்படிக்குள் ஓடி விட்டாள்.

உள்ளே சென்றவள் டீ போட்டு எடுத்து வந்து தாயிடம் நீட்ட அவரோ அவளை முறைத்துக் கொண்டே டீயை வாங்கி கொண்டு உள்ளே சென்று விட்டார். 
பிறகு தந்தைக்கு டீயை கொடுக்க வாங்கி கொண்டவர், ” என்ன ஆச்சு ” என்று கேட்க, “அது ஒரு பெரிய கதைப்பா. அப்புறம் சொல்றேன். இப்ப வேலை இருக்கு ” என்றவள் மீண்டும் அடுப்படிக்குள் சென்றாள்.

மகள் கொடுத்த டீயை ரசித்து குடித்தவர் மனைவியை பார்க்க, அவரோ, ” உங்கள என்ன செய்ய சொன்னா நீங்க என்ன செஞ்சிட்டு இருக்கீங்க ” என்று முறைக்க, ” டீ சூப்பரா இருக்குமா. அதான் ” என்று இழுத்தவர் மனைவியின் பார்வையில், ” இப்பவே என்னனு கேக்குறேன்” என்று டீயை குடித்து கொண்டே மகளை தேடி சென்றார்.
அதை கண்டு தலையில் அடித்து கொண்டார் நிலா.

     ” அம்மாடி பிரியா, என்னமா ஆச்சு. எதுவா இருந்தாலும் நீ இப்பவே சொல்லிடு. உங்க அம்மா ரொம்ப கோவமா இருக்கா. ” என்று கேட்க நடந்ததை சொல்ல ஆரம்பித்தாள்.

பிரியா எம். பி. எ இரண்டாம் ஆண்டு படிக்கும் மாணவி. அமைதியான பெண் கிடையாது. அடாவடித்தனம் கொண்டவள். யாராவது தவறு செய்தால் உடனே தட்டி கேக்குறேன் பேர்வழி சண்டை இழுத்து விடுவாள். அதே போல் பெண்களிடம் வம்பு இழுப்பவர்களையும் விட்டு வைப்பதில்லை. அடி வெளுத்து விடுவாள். அடி வாங்கியவன் எப்படியும் இரண்டு நாட்களாவது மருத்துவமனையில் இருப்பான். பள்ளியிலும் இப்படி தான். ஆசிரியர்கள் வீட்டில் தெரிவிக்க வீடே ரணகளமாக இருக்கும். கதிரவன் மாதத்தில் பாதி நாள் பள்ளிக்கு செல்வதே வேலையாக இருக்கும். நிலாவிற்கு தெரிய வந்தால் சோலி முடிந்தது. தண்டனை என்ற பெயரில் அவளை வெளியே நிறுத்தி விடுவார். 3 மணி நேரம் நிற்க வேண்டும். கதிரவன் மகளுக்கு சப்போர்ட் செய்தால் அவரும் சேர்ந்து வெளியே மகளுக்கு துணையாக நிற்பார். அதற்கெல்லாம் சேர்த்து மகளை நன்றாக சாப்பிட வைத்து ரெஸ்ட் எடுக்க வைப்பார். ( அதெல்லாம் தனி கதை 😂😂)

    காலேஜ் செல்ல ஆரம்பித்ததில் இருந்து இப்படி ஏதாவது செய்து மாட்டிக்கொண்டால் உடனே வீட்டிற்கு அழைத்து சொல்லி விடுவார்கள். அதனால் தாயிடம் இருந்து தப்பிக்க அலாரம் வைத்து 4 மணிக்கே எழுந்து குளித்து பூஜை செய்து காலை சமையலும் செய்வாள்.

முதலில் இவள் செய்வதை பார்த்த நிலா தன் 8 மணிக்கு அடித்து எழுப்பினால் மட்டுமே எழும் மகள் சீக்கிரம் எழுவதை கண்டு இவளுக்கு பேய் பிடித்து இருக்குமோ என்று கூட நினைத்தார். பிறகு பேய் கூட இவளை கண்டு பயந்து ஓடும் என்று நினைத்து எதற்காக இப்படி செய்கிறாள் என்று கதிரவனை விசாரித்தத்தில் தெரிந்தது இவளின் தில்லாலங்கடி வேலை. ஒரு முறை மட்டுமே கல்லூரியில் இருந்து வீட்டு எண்ணுக்கு அழைத்தனர். பிறகு எல்லாம் கதிரவன் எண் தான். ஆனால் இவளிடம் அடிவாங்கியவர்கள் சிலர் அவளின் அம்மாவை அழைத்து சொல்லி விடுவார்கள்.

இப்போதும் கல்லூரியில் இவள் அடித்தது காலேஜ் சேர்மன் பையன். அதனால் தாய் தந்தை இருவரையும் அழைத்து வரும் படி கூறியிருந்தனர். அதற்கு தான் அம்மணி இவ்வளவு வேலை பார்த்தது.

    தந்தையிடம், “அவன் ஒரு பொண்ணு கிட்ட தப்பா பேசினான்ப்பா. அதுனால தான் அடிச்சேன். அதுக்கு அவனை திட்டாம என்ன திட்றாங்க எல்லாரும். இப்ப உங்க ரெண்டு பேரையும் வர சொல்ராங்க பா. அம்மாவை சமாளிச்சு கூட்டிட்டு வாங்க பா.” என்று கூற பெருமூச்சு விட்டவர்,

” சரி டா, நா பாத்துக்குறேன். நீ கிளம்பு. ” என்றவர் மனைவியை தேடி சென்றார்.

மனைவியிடம் சென்று நடந்ததை  கூற, நிலாவிற்கு கண்கள் கலங்கி விட்டது.

  “ஏங்க இவ இப்படி பண்றா. தினமும் என்ன பிரச்சனை பண்ணிட்டு வருவாளோனு பயமா இருக்கு. நீங்களும் பொண்ணுனா தைரியமா இருக்கணும்னு அவளை கூட கொஞ்சம் ஏத்தி விடறீங்க. இவ கிட்ட அடி வாங்குனவங்க நாளைக்கு பழி வாங்குறேன்னு இவள ஏதாவது பண்ணிட்டா நம்மளால தாங்கிக்க முடியுமா. இல்லை இதை இனிமேல் இப்படியே என்னால விட முடியாது. எனக்கு ஒரு முடிவு தெரியணும்.” என்றவர் விரு விருவென்று மகளிடம் சென்றார்.

சமையலை முடித்து விட்டு கல்லூரிக்கு கிளம்பி வந்தவளிடம் நிலா, ” பிரியா, அப்பா எல்லாத்தையும் என் கிட்ட சொன்னாங்க. இப்ப நா சொல்றதுக்கு சரினு சொன்னா நா காலேஜூக்கு வரேன். நீ தொடர்ந்து படிக்கலாம் ” என்று ஆரம்பிக்க, 
தாய் ஏதோ வில்லங்கமாக கேக்க போகிறார் என்று புரிந்து, 
” சொல்லுங்கமா, நா என்ன பண்ணனும்” என்று கேட்டாள்.

” நாங்க பாக்குற மாப்பிள்ளைய கல்யாணம் பண்ணிக்கணும். “

” அம்மா, நா இன்னும் படிப்ப முடிக்கல மா. ஒரு ரெண்டு வருஷம் வேலைக்கு போய்ட்டு அப்புறம் கல்யாணம் பண்ணிக்கிறேன்மா, ப்ளீஸ்மா. “

” முடியாது. கல்யாணம் ஆன பிறகு நீ படி. இல்லனா வீட்ல கிட. காலேஜுக்கு போக வேண்டாம்”

” அம்மா நீ சொல்றத பாத்தா மாப்பிள்ளை பாத்துட்டு வந்து பேசுற மாதிரி இருக்கு”

” ஆமாடி. உங்க அப்பாவோட தங்கச்சி பையன் மித்ரனுக்கு தான் உன்ன கட்டி கொடுக்கலாம்னு நினச்சு இருக்கேன். அவங்களும் சரினு சொல்லிட்டாங்க. நான் தான் நீ படிப்பை முடிக்கட்டும்னு நினச்சேன். நீ பண்ற காரியத்துக்கு அவனால தான் உன்ன சமாளிக்க முடியும். நீ தான் இப்ப உன் முடிவ சொல்லணும் “

மித்ரனின் பெயரை கேட்டவுடன் அதிர்ந்தவள் தன் தந்தையை திரும்பி பார்க்க அவரோ எனக்கு எதுவும் தெரியாது என்பது போல் சைகை செய்தார்.

சிறிது யோசித்தவள் நிலாவிடம், ” அம்மா, நான் கல்யாணத்துக்கு ஒத்துக்குறேன். ஆனால் மித்ரன என்னால கட்டிக்க முடியாது. நீங்க வேற மாப்பிளை பாருங்க” என்க,
  
   அவள் திருமணத்திற்கு சம்மதித்ததில் மகிழ்ந்தவர் மித்ரன் வேண்டாம் என்று கூறவும் கடுப்பாகி விட்டார். 

” மித்ரன் தான் மாப்பிள்ளை. நாளைக்கு அவங்கள பொண்ணு பாக்க வர சொல்றேன். நீ ஒத்துக்கிட்டு தான் ஆகணும். வெயிட் பண்ணு கிளம்பி வரேன் ” என்றவாறு உள்ளே சென்று விட்டார்.

பிரியாவிற்கு அழுகையே வந்து விட்டது. கதிரவனிடம் சென்றவள், ” அப்பா, என்னப்பா இதெல்லாம். மித்ரன சின்ன வயசுல இருந்தே எனக்கு பிடிக்காது. நீங்களாவது அம்மா கிட்ட சொலுங்கப்பா. “

” அம்மாடி, மித்ரன் ரொம்ப நல்லவன்மா. அம்மா என்கிட்ட ஏற்கனவே இதை பத்தி பேசுனா. சரி இந்த வருசத்தோட உன் படிப்பு முடியுதுல. அப்புறம் பேசலாம்னு நினைச்சோம். இப்பவே பேச வேண்டிய சூழ்நிலை. அப்பாக்காக ஒத்துக்கோமா “

கலங்கிய கண்களை துடைத்து கொண்டவள் சிறு புன்னகையுடன், ” உங்களுக்காக மட்டும் நா இந்த கல்யாணத்துக்கு சம்மதிக்கிறேன்ப்பா. ” என்றவள் அவரின் தோளில் சாய்ந்து கொண்டாள்.

” ஆமா. அம்மா மித்ரன் தான் மாப்பிள்ளைனு சொல்லும் போது உங்கள பாத்தேனே. நீங்க எதுவும் தெரியாதுன்னு சிக்னல் குடுத்தீங்க. இப்ப நல்லவன்னு செர்டிபிகேட் குடுக்குறீங்க ” என்று இடுப்பில் கை வைத்து கொண்டு ஒற்றை புருவத்தை உயர்த்தி கேட்க அவரோ அசடு வழிய புன்னகைத்தார்.

” தெரியும்னு சொன்ன நீ கோவப்படுவ. அதான் ஆனா இப்ப பாரு நானே உளறிட்டேன் ” என்க சிறிது விட்டாள்.

தன் மகளின் சிரிப்பை ரசித்தவர்   ” சரி வா. காலேஜுக்கு வேற போகணும்ல ” என்க,
“ஆமப்பா, லேட் ஆச்சு வாங்க போலாம் ” என்று அனைவரும் கிளம்பி சென்றனர்.

எப்படியோ காலேஜில் பேசி சமாளித்து அன்றைய பொழுது ஓடியது. வீட்டிற்கு வந்த நிலா உடனடியாக மித்ரனின் தாய் நிலாவிற்கு அழைத்து பிரியா திருமணத்திற்கு சம்மதம் சொல்லியதை கூறி நாளை பெண் பார்க்க வரும் படி பேசி விட்டு வைத்தார். 
 

மித்ரன் மேல் ஏன் இவ்வளவு கோவம் பிரியாவுக்கு? மித்ரனை மணந்து கொள்வாளா?
  
 

 

❤️ Loading reactions...
1 Comment
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page