வெந்து தணிந்த இதயம்-11

நான் உங்கள் AY_84

 

வெந்து தணிந்த இதயம்-11

 

அன்பு மகள் யாழினிக்கு,

 

இதுவரை வசந்தி எனும் எனது நிஜப்பெயரை மறைத்து மயூரி எனும் புனைப்பெயரோடு வலம் வந்த உன் அம்மா எழுதுவது.

 

என்னை மன்னித்துவிடு யாழினி. நான் இதுவரை உன்னிடம் என்னைப் பற்றி சொல்லிய கதைகள் யாவும் பொய். ஆமாம், என் வாழ்க்கையே பொய்யாகிப்போன இந்த உலகத்தில் என் நிஜத்தை நான் மறைத்துவிட்டேன்.

 

இதுநாள் வரை இவற்றையெல்லாம் சொல்லாமல் இப்போது இதை உன்னிடம் சொல்வதற்கும் காரணம் இருக்கிறது. இதுவரை பாவத்தின் நிழலே படாத இடத்தில் பத்திரமாக உன்னை வளர்த்து வருவதாக நம்பிய நான் எனது முட்டாள்தனங்களிலிருந்து சமீபமாகத் தான் வெளியேறினேன். 

 

உனக்கு ஞாபகம் இருக்கிறதா? எனது முதலாவது ஹார்ட் அட்டாக் இந்த வருட குடியரசுத் தினத்தன்று தான் வந்ததென்று? அன்று தான் பத்மஸ்ரீ விருது பெறுபவர்களின் பெயர் பட்டியலும் வந்தது. அதிலிருந்த ரத்னவேல் பாண்டியன் எனும் பெயரைப் பார்த்ததும் நான் ஸ்தம்பித்துபோனேன்.

 

இந்த நாடும் சட்ட ஒழுங்கும் மறித்துப்போனதா என்ற கேள்வி எழுந்தது எனக்குள். சமூகநீதி என்றாலே என்னவென்று கேட்கும் ஒரு மனிதருக்கு சமூகசேவைக்காக பத்மஸ்ரீ பட்டம் என்றால் எனக்கு பற்றிக்கொண்டு வருகிறது. 

 

இன்னொன்றும் உனக்கு ஞாபகம் இருக்குமென்று நினைக்கிறேன். நாம்‌ நம் நாடகக்குழுவோடு‌ மைசூருக்கு தசராவிழா காணச் செல்லும் போதெல்லாம் நீ அங்கு இராவணனின் பத்து தலைகளும் மத்தாப்பாய் வெடித்துச் சிதறுவது கண்டு பயந்து அலறுவாய். அப்படிப்பட்ட ஒரு இராட்சசன் தான்‌ எனக்கு அப்பா, உனக்கு தாத்தா. 

 

அவரை அழிக்கும் ராமன் இன்னும் பிறக்கவில்லை போலும், உயிருடன் இருக்கிறார்.

 

ஒரு குழந்தைக்கு நல்ல பழக்க வழக்கங்களை போதிக்கும் இடத்தில் முதலில் இருப்பதாக நான் நம்புவது குடும்பம் தான். உனக்கு என்னையும் நமது சுலேக்கா பாட்டியைத் தவிரவும் குடும்பம் என்ற ஒன்றே இல்லாமல் போனதற்கு காரணம் நான் சரியான குடும்பத்தில் பிறக்காது போனது தான் யாழினி.

 

உண்மை. நான் பிறந்த ஊர் ஆதாமாலும் ஏவாலாலும்‌ சபிக்கப்பட்ட ஒரு காட்டினை போன்றது. அங்கு காதல்‌ செடிகள் முளைக்காது. முளைத்தாலும் வேரோடு அதனை பிடிங்கி எறிந்துவிடும் சாத்தன்கள் தான் அதிகம். அதன் பெயர் குறிஞ்சிகுளம். 

 

உண்மையில் அது மிகவும் பாவப்பட்ட ஊர் யாழினி. அங்கு அடித்தட்டு மக்களை அடக்கி ஆளும் ஆதிக்க சாதியாக தன்னை வரித்துக்கொண்டு என் தாத்தா மார் தட்டிய நோய், என் அப்பாவையும் தொற்றிக்கொண்டது கொடுமையிலும் கொடுமை. 

 

இப்படிப்பட்ட குடும்பத்தில் நான் இரண்டாவது‌ பெண்ணாக பிறந்து தொலைத்தேன். நான், என் அக்கா ஜெயந்தி, என் தங்கை பொன்னி என மூவரும் பெண்பிள்ளைகளாய் பிறந்துவிட்டதில் எங்கள் அப்பாவுக்கு மிகுந்த வருத்தம். அதைப்போக்க அவர் எடுத்த முடிவு இரண்டாம் திருமணம். 

 

ஆனால், திடீர் திருப்பமாக என் அம்மா தம்பி பத்ரியை பெற்றெடுத்த பிறகு தான் பார்வதி சித்தி தம்பி சஷ்டியை பெற்றெடுத்தார்.

 

இந்நிகழ்வுகள் நான் பெரிய பெண்ணான சமயத்தில் தான் நடந்தன. என் தம்பி பத்ரிக்கும், தங்கை‌ பொன்னிக்கும் பனிரெண்டு வயது வித்தியாசம். இந்த இடைப்பட்ட நாட்களில் என் அம்மா ஒன்றும் கருவுறாமல் இல்லை. 

 

ஆனால், விதியோ சதியோ பிறந்த‌‌ அத்தனை‌‌ பெண்பிள்ளைகளும் சொல்லி‌வைத்தாற் போல் பிறந்த ஒரு மாதத்திற்குள் இறந்து போனார்கள். என் அம்மாவின் உடல்நிலையை கருத்தில் கொள்ளாது அவரை வெறும் பிள்ளைப் பெற்றுப் போடும் இயந்திரமாக மட்டுமே எனது அப்பா கருதியது அவலத்திலும் அவலம்.

 

ஏன் என் அம்மாவின் மனநிலையைக் கூட அவர் பொருட்படுத்தியிருப்பாரா தெரியாது. படுத்தியிருந்தால் பார்வதி சித்தி வந்திருக்க மாட்டார். 

 

தம்பி பத்ரி பிறந்த பிறகோ நிலைமை இன்னும் மோசமானது. அப்பா தனது பாசம் முழுவதையும் அவன் ஒருவன் மேல் மட்டுமே கொட்டித்தீர்த்தார்.‌ இதனால் என் தம்பியை எனக்குப் பிடிக்காமல் எல்லாம் இல்லை. ஆனால், அப்பா அவன் மீது காட்டும் அதிகப்படியான பாசம் மட்டும் ஓரவஞ்சனையாக இருக்கும். கேட்டால் ஆண்பிள்ளை அவன் தான் கொள்ளி வைப்பானாம். 

 

நாங்கள் வைத்தால் கூட எங்கள் அப்பாவின் உடல் நெருப்பில் வேகத்தானே செய்யும்? இப்படி சிறுவயதிலிருந்தே‌ என்னுள் பல கேள்விகள் எழுந்திருக்கின்றன‌.‌

 

ஆனால், இப்படியெல்லாம் பெண்பிள்ளைகள் எங்கள் கிராமத்தில் யோசிக்கக்கூடாது யாழினி. ஏனென்றால் அவையெல்லாம் அதிக பிரசங்கித்தனம். ஆனால், என்னால் அவ்வாறு இருக்க முடிந்ததில்லை. நிறைய கேள்விகள் கேட்பேன். அதற்கு தகுந்தாற்போல் அப்பாவிடம் அடியும் வாங்குவேன். 

 

ஆனால், அம்மா அப்படியல்ல. அவர் எங்கள் மீது கைநீட்டியதுமில்லை. பாசம் காட்டுவதில் பாகுபாடு பார்த்ததுமில்லை. 

 

ஆனால், அவரையும் அப்பா அடிமை போல் தான் வைத்திருந்தார். நான் அம்மாவும் அப்பாவும் சிரித்துப்பேசி கேட்டதில்லை. அப்பா அம்மாவுக்கு பூ வாங்கிக் கொடுத்துப் பார்த்ததில்லை. மொத்தத்தில் அவர்களிருவருக்குள்ளும் உயிர்களின் அடிநாதமான காதலை நான் உணர்ந்ததேயில்லை.

 

இவற்றை உணரும் பக்குவம் வந்ததிலிருந்தே ஒரு விசயம் மட்டும் என் மனதில் ஆழப் பதிந்துபோனது யாழினி. நிச்சயம் நான் ஒருவரை காதலித்து தான் மணக்க வேண்டும். எங்களிருவருக்குள்ளும் காதல் கரை புரண்டோட வேண்டும். அவர் வலியில் நான் துடிக்க வேண்டும். என் சிரிப்பில் அவர் பூரிக்க வேண்டும் என்று என்னுள் ஆயிரமாயிரம் கனவுகள். 

 

அதை நிறைவேற்றவிடாமல் நிறைய தடைகளும் வந்தன. அதன் பிள்ளையார் சுழி என் அப்பா. 

 

அவரைப் பற்றி நீ  முழுதாக தெரிந்துகொள்ள வேண்டும் யாழினி. அவருக்கு புதிதாகப் பார்க்கும் யாரிடமும் ஜாதியைக் கேட்காமல் பேசவேத் தெரியாது. கேட்க முடியாத இடங்களில் மனிதர்களின் பெயர்களை வைத்தோ, வாழும் ஊரை வைத்தோ மோப்பம் பிடிப்பார்.

 

இப்படி தான் நான் ஐந்தாம் வகுப்பு படிக்கும்போது ஒரு முறை என்னுடன் படிக்கும் பிள்ளைகளை வீட்டிற்கு அழைத்து வந்தேன். அவர்களை மேலிருந்து கீழாக அளந்தவர் இனி இவர்களை இங்கே அழைத்து வராதே என்று கொடூரமாக அவர்களின் முன்பே சொல்லிவிட்டார். அன்று இரவு முழுவதும் சுயவிரக்கத்தில் அழுது தீர்த்தேன்‌‌. ஆனால், நான் என் அப்பாவை முழுமையாக வெறுத்தது எப்போது தெரியுமா? 

 

எங்களுக்கு பள்ளியில் விடுமுறை நாள் வரும் போதெல்லாம் பெருமையாக அப்பாவுடன் குடைபிடித்தபடி வயலுக்குச் செல்வோம். அப்பா அங்கு வேலைப் பார்க்கும் பெண்களையோ ஆண்களையோ தொடக்கூடாது என்பார். தொட்டால் தீட்டாம். அது சத்தியமாக சுத்தத்தில் சேராது யாழினி.  

 

ஆனால், அப்பா எங்களிடம் அப்படி சொல்லிவிட்டு அவர் மட்டும் தோட்டத்து வீட்டிற்குள் ஒரு பெண்ணுடன் குடும்பம் நடத்தியதை இன்றளவும் என்னால் மன்னிக்க முடியவில்லை.

 

எனது அம்மாவிற்கு உண்மையாக இல்லாதவரை என்னால் அதன்பின் ஏற்றுக்கொள்ளவும் முடிந்ததில்லை. 

 

ஒரு ஆணோ பெண்ணோ காதலில்லாமல் எப்படி வெறும் காமத்தோடு இணைய முடிகிறது என்று எனக்கு அதை நினைத்து அருவருப்பாக இருந்தது. 

 

காதலின் முக்கிய அம்சங்களில் நான் முதன்மையாக நினைப்பது எது தெரியுமா யாழினி? விட்டுக்கொடுத்தல் தான். ஆனால், என் அப்பாவிற்கோ எதையும் பணிவாக, அன்பாக கேட்கவே வராது என்பதைத் தாண்டி கேட்கவேப் பிடிக்காது. 

 

ஒருமுறை என்னுடன் படித்த பாரிஜாதத்தின் வீட்டு நெய் மணமாக இருந்தது என்று அப்பாவிடம் வாய் தவறி சொல்லிவிட்டேன். ஆயிற்றா? உடனே அவர்களின் பசுக்களை விலை பேசச் சென்றுவிட்டார். 

 

அது என் மீதுள்ள பாசத்தில் என்றால் சந்தோசப்பட்டிருப்பேன். ஆனால், அது நல்ல பொருள் எதுவும் அவரின் உடைமையாகத் தான் இருக்க வேண்டும் என்ற ஆணவத்தில். 

 

பசுக்களை தரவில்லை என்றால் ஊரில் பாரிஜாதத்தின் குடும்பம் வாழவே முடியாது என்று மிரட்டியிருக்கிறார்கள் எங்களின் அடியாட்கள். அதற்கு பாரிஜாதத்தின் அண்ணன் அடிபணியாது எதிர்த்து நின்றதற்கு அவரை கொடூரமாகத் தாக்கியிருக்கிறார்கள். இவ்விசயம் பஞ்சாயத்து வரை சென்று அவளின் அண்ணனுக்கு எனது அப்பா நஷ்டஈடு கொடுக்கும்படி ஆனது.

 

ஆனால், என் அப்பா தான் என்றும் தோல்வியை ஏற்காதவர் ஆயிற்றே. அடுத்த சில நாட்களிலேயே எங்கள் அடியாட்களின் மூலம் அந்தப் பசுக்களுக்கு விசம் வைத்து கொன்றுவிட்டார். இதே கதி தான் நாளைக்கு தங்களுக்கும் என்று உணராத அடிமுட்டாள்கள் எங்களின் அடியாட்கள்.

 

பசுக்கள் இறந்துபோன மறுநாள் அழுதுகொண்டே எங்களின் பள்ளிக்கு வந்த பாரிஜாதத்தின் முகம் இன்றும் எனக்கு நினைவிருக்கிறது. அன்று தான் அப்பா எம்ஜிஆர் படங்களில் வருவது போல் கொடூரமான வில்லன் என்று எனக்கு தெரிந்தது.

 

ஆனால், எனது காதலுக்கு நான்‌ வில்லனாக நினைத்தது அவரின் கௌரவத்தை தான். ஆமாம், அவர் அடிக்கடி நமக்கென்று ஒரு கௌரவம் உள்ளது என்பார். 

 

பள்ளியில் எனது ஆசிரியர் பிறப்பால் அனைவரும் சமம் என்று திருக்குறளை மேற்கோள் காட்டி கூறும் போது, அப்பாவிற்கு நான் உயர்ந்தவன்; நீ தாழ்ந்தவன் என்னும் எண்ணம் எங்கிருந்து வந்திருக்கும் என்று யோசித்திருக்கிறேன் யாழினி.

 

பள்ளி மாணவியான எனக்கு உடனே அவரின் தலையில் ஓங்கி குட்டிவைக்க வேண்டும் போலவும் இருந்திருக்கிறது. ஆனால், அப்பாவாயிற்றே!

 

காதலைப் பொறுத்தவரை பெறுதலைவிட கொடுத்தல் தான் இன்பமானது. ஆனால், என் அப்பாவின் ஈகைகுணம் எப்படி தெரியுமா? எங்களுக்கென்று பரம்பரை பரம்பரையாக ஏக்கர் கணக்கில்‌‌ சொத்துக்கள் இருந்தாலும், அதை ஒரு போதும் இல்லாதவர்களுக்கு கொடுத்து உதவ வேண்டும் என்று அவர் நினைத்ததே கிடையாது. 

 

ஏன் எங்கள் வயலுக்கு பக்கத்து வயல்காரர்கள் தொழிலாளர்களுக்கு கூலியை உயர்த்திக் கொடுக்க வேண்டும் என்று முடிவு செய்தபோதுக்கூட முதல் ஆளாக அதை எதிர்த்தவர் அப்பா.‌ அந்த நாய்களுக்கு சம்பளத்தை உயர்த்திக் கொடுத்தால் நம்மையே எதிர்க்கும் அளவிற்கு வாய் வந்துவிடும் என்று முதலாளிகளுக்குள்‌‌ நஞ்சைப் பாய்ச்சினார்.  

 

எனக்கு அடிக்கடி கனவு ஒன்று வரும் யாழினி. இவ்வாறு ஆணவ வெறி பிடித்திருக்கும் என் அப்பாவிற்கு ஒருநாள் உண்மையாகவே பைத்தியவெறி பிடித்து தெருவில் ஓடிவிடுவது போல.

 

நாளாக நாளாக அப்பா அவரின் விசத்தை எங்களுக்குள்ளும், இந்த சமூகத்துக்குள்ளும் அசுர வேகத்தில் பாய்ச்சிக் கொண்டிருந்ததின் பலன், காதலர்களே எங்கள் ஊரில் உருவாகவில்லை.

 

ஏன் பள்ளிப்பருவத்தில் கூட முளைக்கவிடாமல் செய்தார்கள் சில இரண்டாம்கட்ட துரோகிகளாகிய எங்களின் ஆசிரியர்கள். அவர்கள் எங்களை ஒரு போலவும், கிழக்குத் தெருவிலிருந்து படிக்க வரும் பிள்ளைகளை ஒரு போலவும் நடத்தியதில் அந்தப் பிள்ளைகள் எல்லாம் சேர்ந்து எங்களை ஒதுக்கி வைக்க ஆரம்பித்தார்கள். 

 

குறிப்பாக கிழக்குத் தெருக்காரப் பையன்கள் எங்களிடம் பேசவே பயந்தார்கள். இதில் நான் எங்கிருந்து எனக்கு பிடித்த பையனைத் தேடி காதல் செய்ய? 

 

அப்படியும் அத்திப்பூத்தாற்போல ஒருமுறை என்னிடம் ஒரு பையன் வீட்டுப்பாடம் குறித்துப் பேச, ஜெயந்தி அக்கா அதை வீட்டில் வந்து சொல்லி அந்தப் பையனை பள்ளியிலிருந்து நீக்கும்படி செய்துவிட்டாள்.

 

அவளுடன் என் தம்பியும் கூட அப்பாவின் பாதிப்பால் வேலையாட்களை மரியாதையின்றி பேசும் அளவிற்கு வந்துவிட்டான். எனக்கு கோபம் வந்து அடிக்கடி அவனை கை நீட்டியிருக்கிறேன். சிலநேரம் அடிகள் வேலை செய்யும். 

 

ஆனால், அதையும் அப்பா வந்து கெடுத்து விடுவார். என்னால் திருத்த முடிந்த ஒரே ஜீவன் பார்வதி சித்தியின் மகன் சஷ்டிவேல் பாண்டியன் தான். அவனின் ஜாதக அமைப்பால் அப்பாவிற்கு அவனைப் பிடிக்காது. 

 

நடக்கும் அக்கிரமங்களையெல்லாம் பார்த்து பார்த்து கொதித்துப்போன நான் விரைவிலேயே அந்த நரகத்திலிருந்து வெளியேற வேண்டுமென்று முடிவு செய்தேன். அதற்கு எனக்கு கைக்கொடுத்தவர் உன் அப்பா குணசீலன். என் தோழி பாரிஜாதத்தின் அண்ணன் அவர்.

 

இப்படியெல்லாம் என் அப்பாவின் கொள்கைகளின் மேல் தீவிர வெறுப்பு கொண்டிருக்கும் நான் உன் அப்பாவின் மேல் காதலில் விழுந்தது எப்போது தெரியுமா?

 

என் அப்பாவின் கொள்கைகள் என்னுள்ளும் எனையறியாமல் முளைவிட்டிருக்கின்றன என்பதை உன் அப்பா வெளிச்சம் போட்டுக் காட்டிய தருணத்தில் தான்.

 

தொடரும்…

 

இப்ப நான் என்ன சொல்லப்போறேனா? அதே தான் தங்கோம்ஸ்:) 

 

கீழே உள்ள ஹார்ட்டையாவது எனக்கு தந்துவிட்டு போகலாமே:(

 

❤️ Loading reactions...
முந்தைய பதிவு அடுத்த பதிவு
இந்த எழுத்தாளரின் மற்ற கதைகள்
வெந்து தணிந்த இதயம்
20,842 902 5
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page