வெந்து தணிந்த இதயம்-12

நான் உங்கள் AY_84

 

வெந்து தணிந்த இதயம் -12

 

யாழினி விமானத்தில் ஏறுவதற்கான அறிவிப்பு வரவும், தனது கைப்பேசியை அணைத்தாள்.

 

கைப்பையோடு வரிசையில் நின்றவள் தனது‌ முறை வரவும் பயணச்சீட்டையும், கடவுச்சீட்டையும் கொடுத்தாள்.

 

அவளின் பயணத்தை தங்களின் கணினியில் மறுமுறை சரிபார்த்து கொண்டவர்கள், ‘இந்தப்பயணம் உங்களுக்கு இனிய‌ பயணமாக‌ அமையட்டும்’ என்று வாழ்த்தி விடைகொடுத்தார்கள்.

 

விமானத்தினுள் தனது இருக்கை எண்ணை தேடி அமர்ந்தவள் இருக்கைப்பட்டையை மாட்டிக்கொண்டு அதற்கு மேல் பொறுமை‌ இல்லை என்பது போல் மீண்டும் தனது கைப்பேசியை‌ எடுத்து தனது அன்னையின் கடிதத்தை வாசிக்கலானாள். 

 

*

 

நான் சொல்வது‌ உண்மை தான் யாழினி. என்னுள்ளும் ஜாதிவெறி இழையோடியிருந்தது.

 

அன்றைய நாள் நானும் என் தோழி பாரிஜாதமும் முந்திரிக்காட்டில் சந்திப்பதென்று முடிவு செய்தோம். எப்போதும் போல் அப்பாவுக்கு தெரியாமல் தான்.‌ 

 

அவ்வாறு நாங்கள் சந்திக்கும் போதெல்லாம் எனக்கு அவளும் அவளுக்கு நானும் திண்பண்டங்களை பரிமாற்றிக்கொள்வது வழக்கம்.

 

அன்றும் நான் அவளுக்காக என் வீட்டில் செய்த கருப்பட்டி கடலை உருண்டைகளை எடுத்து வந்திருந்தேன். ஆனால், அவள் அவளது தூக்குச்சட்டியை வீட்டில் மறந்துவிட்டு வந்திருந்தாள். அது எனக்கு ஏமாற்றமாக இருந்தாலும் அவளிடம் ஊர் கதைகளைப் பேசிக்கொண்டிருந்தேன். 

 

பொதுவாக என்னிடம் அன்பு பாராட்டும் அனைவரின் கையையுமே எனக்கு தொட்டுப்பேசித்‌ தான்‌ பழக்கம். ஆனால், என் அப்பாவுக்கு அது‌ சுத்தமாகப் பிடிக்காது. அவருக்கு நான் சமையல் செய்யும் மங்கம்மாவின் கையைத் தொடக்கூடாது. மீன் விற்கும் சுபாவிடம் சிரித்துப் பேசக்கூடாது. அதுவும் கிழக்குத் தெருக்கார ஆட்களைக் கண்டால் ஒதுங்கி செல்ல வேண்டும். ஆனால், அவரின் அந்த வற்புறுத்தலே எனக்கு அனைவரின் கையையும் தொட்டுப் பேசும் பழக்கமாகிவிட்டது. 

 

அப்படி நான் இயல்பாக பாரிஜாதத்தின் கையை என் கைக்குள் வைத்து பேசிக்கொண்டிருந்த போது தான் அவளின் அண்ணன் அவள் வீட்டில் மறந்துவிட்டு வந்திருந்த தூக்குச்சட்டியை சைக்கிளில் கொண்டு வந்து கொடுத்தார். ஏனோ என்னை முறைத்தபடியே நின்றிருந்தார்.

 

பாரிஜாதம் நான் கொண்டு வந்த கடலை உருண்டைகளை கொடுத்தபோதுக்கூட அவர் வாங்கிக் கொள்ளவில்லை. என் முகம் வாடியதைக் கண்டு இறுதியில் ஒன்றை மட்டும் எடுத்து வாயில் போட்டார். 

 

ஆனால், நான் தான் தூக்குச்சட்டிக்குள் இருந்த இறால் தொக்கைப் பார்த்ததும் முகத்தை சுளித்தேன். கூடுதலாக, இவையெல்லாம் குறவன் குறத்திகள் சாப்பிடுவது என்று‌ முட்டாள்தனமாகச் சொல்லி அவரின் வெறுப்பை சம்பாரித்தேன்.

 

கேட்க வேடிக்கையாக இருக்கிறதில்லையா யாழினி? எங்கள் வீட்டில் அப்படி சொல்லித்தான் அப்பா எங்களை நாங்கள் பிறந்தது முதலே இறால், நண்டு போன்றவற்றை சாப்பிட விடாமல் வளர்த்தார். 

 

எனது விவஸ்தையற்ற பேச்சில் குணசீலன் கோபமாக பாரிஜாதத்திடம் மல்லுக்கு நின்றார். இப்படி பட்டவளுக்காகத் தான் காலையிலேயே என்னை சந்தைக்கு அனுப்பி இறால் வாங்கி வரச்சொன்னாயா? என்று அவள் மேல் எரிந்து விழுந்தார். 

 

மேலும், இதை இன்னார் தான் சாப்பிட வேண்டும், இதை இன்னார் சாப்பிடக்கூடாது என்று முடிவு செய்வதற்கு இவளும் இவளின்‌ அப்பாவும் யார்? என்று ஆவேசமாகக்கேட்டார்.

 

எனது குணமறிந்த பாரிஜாதமோ அவரை எவ்வளவு சமாதானம் செய்தும் தன் பிடியிலிருந்து அவர் இறங்கி வர மறுத்துவிட்டார். அந்த நேர்மை‌ தான் உனது அப்பாவிடம் நான் பெரிதும் நேசித்தது யாழினி. 

 

அவர் உண்மையைச் சொல்ல, யாருக்கும் எதற்கும் அஞ்சமாட்டார். இறுதியில் எனது தவறுணர்ந்து நான் இறாலை எடுத்து சாப்பிடத் துவங்கியதும் தான், நான் எனது குடும்பத்தினரிடமிருந்து வேறுபட்டவள் என்பதை அவர் ஏற்கத் தொடங்கினார். 

 

ஆனால், அக்கணம் எனக்கு முகமும் கண்களும் வீங்கத் துவங்கிவிட்டன. இறால் எனக்கு அலர்ஜியாகிவிட்டது. நிலைமையை புரிந்துகொண்ட குணசீலன் உடனே என்னை அவரின் சைக்கிளிலேயே முன்பக்கம் ஏற்றிக்கொண்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். 

 

அவர் துரிதமாய் அழைத்து வந்ததின் பலன் சில மணி நேரங்களிலேயே நான் திடமானேன். அப்போது நான் முடிவு செய்தேன். இனி யாராவது இறாலை கொண்டு வந்து நீட்டினால் என் உடலுக்கு அது ஒவ்வாது என்று தான் சொல்லவேண்டுமே தவிர எனது அப்பா ஊட்டிய விசத்தை கக்கக்கூடாதென்று. 

 

நான் மருத்துவமனையில் இருந்த நேரம் வரை குணசீலன் என்னை சிரிக்க வைக்க பட்ட‌ப்பாடெல்லாம் இன்றும் நினைத்தால் என் இதழில் புன்னகை மலர்கிறது.

 

ஆனால்,‌ வெகு நேரத்திற்கு அந்த சந்தோசத்தை நீடிக்கவிடாது எங்கள் இருவரையும் ஒன்றாகப் பார்த்த கண்கள் சில, எனது அப்பாவின் காதுகளுக்கு அதை கொண்டு சென்றன. அவர் நான் வீட்டிற்குள் நுழைந்த அடுத்த கணமே எனது கன்னத்திலொரு அறைவிட்டார். 

 

பெண்ணை உடலளவில் வலிமை குன்றியவளாகக் கருதி அப்பா செய்யும் இந்த வன்முறைகள் எனக்கு பழகிப் போயிருந்தாலும், அவர் சொல்லிய வார்த்தைகள் தான் என் நெஞ்சில் நெருப்பாய் இறங்கின.

 

மகளாகிய உன்னிடமே நான் சொல்ல முடியாத அளவிற்கு அவரது அன்றைய பேச்சுகள் நாராசமாய் இருந்தன. திட்டுக்களின் இறுதியில் எனக்கு திருமணத்திற்கு மாப்பிள்ளை பார்க்கப் போவதாய் சொன்னார். 

 

மாப்பிள்ளை என்றால் அவரின் மொழியில் ஒரு அடிமை. ஆமாம், அப்பாவுக்கு மாப்பிள்ளைகள் என்ற பெயரில் அடிமைகள் தான் தேவைப்பட்டார்கள். அப்படி ஒருவரை அவர் ஜெயந்தி அக்காவுக்கு மணமுடித்து வைத்தக் கையோடு தான் எனக்கொரு மாப்பிள்ளையைத் தேடினார். 

 

நான் வந்த மாப்பிள்ளைகளை எல்லாம் எனது புத்தி சாதுர்யத்தால் விரட்டியடித்துக் கொண்டிருந்தேன். அதே சமயம் குணசீலன் அவரின் தங்கைக்கும் நல்ல மாப்பிள்ளையாகத் தேடி திருமணத்தை நடத்தி முடித்திருந்தார். 

 

அந்தத் திருமணத்தில் கலந்து கொண்டதற்கும், விருந்து உண்டதற்கும் கிட்டத்தட்ட ஒரு மாதகாலம் என்னிடம் பேசாமலே இருந்தார் அப்பா. அதை அவர் எனக்கு கொடுக்கும் உளவியல் ரீதியான தண்டனையாக நினைத்தார். நானோ நிம்மதியாக உணர்ந்தேன். பின்னே‌, அவர் என்னை கொன்றுபோடுவார் என்றல்லவா நான் பயந்தேன். எனது திருமண விசயம் அவரை கட்டிப்போட்டது, பாவம்.

 

நான் அந்தக் கண்டத்திலிருந்து தப்பித்ததாக நிம்மதியாக உணர்ந்தாலும், பாரிஜாதத்திற்கு திருமணமாகிப் போனதும் அப்படியொரு வெறுமையான உணர்வு. முன்பு அவளை தனித்து சந்தித்ததுப்போய் இப்போது அவளைப் பற்றி விசாரிக்கும் சாக்கில் அவளின் அண்ணனுடன் பொழுதுபோக்குவது வழக்கமாயிற்று. 

 

அந்த சுகானுபவமும் வெகுநாட்களுக்கு நீடிக்கவில்லை.  குணசீலனுக்கு மும்பையில் ஒரு ஆங்கிலப் பத்திரிக்கையில் நிருபர் பணி கிடைத்ததால் உடன் தனது பெற்றோரையும் அழைத்துச் சென்றுவிட்டார். சொல்லப்போனால் இனி‌ அவர் குறிஞ்சிகுளம் வருவதற்கு வாய்ப்பேயில்லை என்றாகிவிட்டது. 

 

உண்மையில் பாரிஜாதத்துக்கு திருமணமானபோது கூட என் மனம் இவ்வளவு வலிக்கவில்லை யாழினி. ஆனால், குணசீலன் ஊரைவிட்டு கிளம்பியபோது என் உலகமே இருண்டுவிட்டது. காதல் ஒரு விநோதமான உணர்வு. என் அருகில் இருந்தபோது எனக்கு அவர் மீது இப்படியானதொரு உணர்வு ஏற்பட்டதை நானே உணரவில்லை. அதை உணர்ந்தபோதோ அவர் என் அருகில் இல்லை.

 

ஆனால், அதை தாமதமாக உணர்ந்து என்ன பயன்? என்‌ விருப்பமில்லாமலே ஒரு வரனைப் பார்த்து பேசி முடித்துவிட்டார் அப்பா. இன்னும் திருமணத்திற்கு ஒரு வார காலமே‌ என்றிருந்தபோது, எனது சித்தி பார்வதிக்கு ஜுரம் கண்டிருக்கிறதென அனைவரும் பக்கத்து ஊரான கரையான்பட்டிக்கு அவரை பார்க்கச் சென்றோம். 

 

நல்லவேளையாக அந்த ஊரில் ஆறு இருந்தது. அதில் நான் அடித்து‌ செல்லப்பட்டு விட்டதாக அனைவரையும் நம்ப வைத்தேன். முன்கூட்டியே அங்கிருந்து தப்பிப்பதற்கு நான் திட்டம் தீட்டியிருந்ததால் கையில் கொஞ்சம் பணமும் எடுத்து வந்திருந்தேன். அதைக்கொண்டு ரயிலேறி மும்பையில் குணசீலன் வேலைப் பார்க்கும் பத்திரிக்கை அலுவலகத்தை அடைந்தேன்.

 

அவரை நேரில் பார்க்கும் அக்கணம் வரை என் இதயம் துடித்த துடிப்பிருக்கிறதே! நானே அதன் பிறகு எத்தனையோ நாட்கள் எனது அந்த வீரதீர செயலை நினைத்து ஆச்சரியப்பட்டிருக்கிறேன்.

 

ஒரு கோழையை வீரப்பெண்மணியாக மாற்றியது நிச்சயமாக உன் அப்பா மேல் நான் வைத்திருந்த உண்மையான காதல் மட்டும் தான் யாழினி.

 

ஆனால், குணசீலனுக்கோ என்னை மும்பையில் பார்த்ததும் அப்படியொரு குழப்பம். அவர் தனது குடும்பத்தினர் நலனையே முதலில் கருதினார். என் அப்பாவின் செல்வாக்கும், அடாவடிப்போக்கும் அவருக்கு மிகப் பரீட்சயம் என்பதால் என்னை ஏற்கத் தயங்கினார். 

 

ஆனால், அவரின் அலைபாயும் கண்களில் என் மீதான காதலை கண்டு கொண்ட நான் என் தயக்கத்தைவிட்டு உறுதியாக சொல்லிவிட்டேன். உங்களுக்கு என்னை பிடித்திருந்தால் மட்டுமே எனக்கு உங்களை‌ மணக்க சம்மதம். இல்லையென்றால் வெளிப்படையாக சொல்லிவிடுங்கள். வேறெங்காவது சென்று வேலைத்தேடி பிழைத்துக் கொள்கிறேன் என்றேன். 

 

உடனே ஆச்சரியமும் கோபமுமாய் என்னை நோக்கியவர், வசந்தி நான் கருப்பு நிறம். நீ பாலாடையில் செய்த சிற்பம் மாதிரி இருக்கிறாய். உங்க அப்பா மாதிரியெல்லாம் என்னால் உன்னை வசதியாக வாழ வைக்க முடியாது. உன்னை திருமணம் செய்துகொண்டால் நிச்சயம் நான் இங்கு நல்ல உத்தியோகத்திலும் இருக்க முடியாது. ஏனெனில், ஏதாவதொரு துப்புக் கிடைத்து என்னைத் தேடி பத்திரிக்கை அலுவலகத்திற்கு ஊரிலிருந்து ஆட்கள் வந்தால் நாம் மாட்டிக்கொள்வோம். அதனால்  யாரும் ஊகிக்கவே முடியாத ஒரு இடத்திற்கு தலைமறைவாகச் சென்று தான் நாம் வாழ முடியும். இவை அனைத்திற்கும் உனக்கு சம்மதமா? என்று கேட்டார்.

 

நான் சொர்க்கத்தை அடைந்துவிட்ட நிம்மதியில் சம்மதம் என்றேன். 

 

மறுநாளே அருகில் ஒரு கோவிலில் அவரின் பெற்றோர் முன்னிலையில் எங்களது திருமணம் எளிமையாக நடைபெற்றது. நாங்கள் குணசீலன் சொன்னபடியே மேற்குவங்கம் அருகே கமல்முகி எனும் ஒரு கிராமத்தில் குடியேறினோம்.

 

அங்கு நாங்கள் எவ்வளவு மகிழ்ச்சியாக குடும்பம் நடத்தினோம் என்பதை சொல்வதற்கு வார்த்தைகளே இல்லை யாழினி. உன் அப்பாவின் கையணைப்புக்கு நிகரானதொரு கம்பளி இவ்வுலகில் படைக்கப்படவில்லை என்று நான் தரையில் மிதந்த காலங்கள் அவை. 

 

குறிப்பாக காதலிப்பதை விடவும் காதலிக்கப்படுவது எவ்வளவு சுகம் தெரியுமா? தினம் ஒரு சிறு செயலிலாவது என்னை தனக்கு பிடிக்கும் என்பதை வெளிக்காட்டி விடுவார் குணசீலன். நான் புதிதாக ஈனப்பட்ட நாய்க்குட்டி போல் அவரையே சுற்றி சுற்றி வந்தேன். 

 

நாங்கள் காதலில் மூச்சித்திணற மூழ்கி திளைத்தபோது நான் குறிஞ்சிகுளத்தை மறந்தேன், என் அப்பாவை மறந்தேன், ஜாதிய ஒடுக்குமுறைகளை மறந்தேன், ஏன் உலகத்தையே மறந்தேன் யாழினி.

 

இப்போது நான் அடிக்கடி உனக்காக கடவுளிடம் வேண்டுவது ஒன்று தான். என் மகளுக்கும் அவளை தேவதையாக உணரவைக்கும் ஒரு சுயநலமற்றதொரு தூய காதலனைக் கொடு என்பது தான்.

 

ஆமாம் யாழினி. கட்டாயம் நீயும் காதலில் விழ வேண்டும். அப்போது தான் நான் சொல்வதில் உள்ள அர்த்தம் உனக்கு விளங்கும்.

 

ஆனால், என் நிம்மதியும் சந்தோசமும் சிறிது காலத்திற்கு தான் நிலைத்திருந்தது. ஏனெனில், எவ்வளவு தூரம் ஓடினாலும், ஜாதிவெறி எங்களை துரத்தி கண்டுபிடித்தது. அது இறுதியில் குணசீலனை கொன்றேவிட்டது.

தொடரும்…

 

லாகின் பண்ணாமலே ஹார்ட்டின் கொடுக்கலாம் தங்கோம்ஸ்.

ஆனா கமெண்ட் பண்ண லாகின் பண்ணனும். நீங்க கமெண்ட் பண்ணினா குமுதா ஹாப்பி அண்ணாச்சி;)

 

❤️ Loading reactions...
முந்தைய பதிவு அடுத்த பதிவு
இந்த எழுத்தாளரின் மற்ற கதைகள்
வெந்து தணிந்த இதயம்
20,843 902 5
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page