வெந்து தணிந்த இதயம்-15

நான் உங்கள் AY_84

 

வெந்து தணிந்த இதயம்-15

 

மறுபுறம் தெய்வானை தன் முகத்தில் கலையே இல்லாமல் அமர்ந்திருந்தாள். பத்ரவேல் பாண்டியன் அதை கண்டும் காணாமல் வந்தான்.

 

என்னதான் தலை முதல் கால் வரை மிகநேர்த்தியாக அவள் மணக்கோலம் பூண்டிருந்தாலும் மனதில் மட்டும் தீராத ஒரு வலி. அது அவள் கண்களிலும் பிரதிபலித்தது.

 

வீட்டிலிருந்து கோவிலுக்குச் செல்லும் அந்நேரம் முழுவதிலும் அவள் வெக்காளியம்மானை துதித்து சஷ்டியுடன் தன் திருமணத்தை நடத்தித்தர வேண்டும், என் காதலை கைக்கூட வைக்க வேண்டும் என்றே உருப்போட்டாள்.

 

அந்த அம்மன் அதை யாழினியின் காதில் போட்டு வைத்தாளோ என்னவோ யாழினியும் அதே நேரத்தில் காரில் மூத்தூர் முருகன் கோவிலுக்கு வந்து கொண்டிருந்தாள். அதுவும் அன்று பத்ரி அவளுக்கு எடுத்துக் கொடுத்த அதே காஞ்சிபுரம் வைர ஊசி புடவையை கட்டிக்கொண்டு. 

 

வெள்ளை ஸிர்கான் கற்கள் பதிக்கப்பட்ட ஜிமிக்கிகள் அவள் காதுகளின் அழகை பொன் சேர் ஒளியாக எடுத்துக்காட்டின என்றால் அவளின் நேர்வகிட்டோடு விரித்து‌ விடப்பட்டிருந்த கூந்தல் ஒரு ஓவியப்பதுமையைப் போல் அவளை உருமாற்றியது. 

 

வண்டியை ஓட்டிக்கொண்டு‌ வந்தவரே கண்ணாடியை திருப்பி அவளை பதினேழு முறை பார்த்து  விட்டார் என்றால் கேட்கவா வேண்டும். 

 

அவர் கலாரசிகன் என்பதால் ஸ்ட்ராபெர்ரியால் செய்யப்பட்ட டாங்குலு போல் அவளின் உதடுகள் பளபளவென்று இருந்ததை ரசித்துக்கொண்டே வந்தார். 

 

யாழினி அந்தக் கோவிலை வந்தடைந்தபோது மக்கள் முண்டியடித்துக்கொண்டு திருமணத்தைப் பார்க்க காத்திருந்தார்கள். கிட்டத்தட்ட பத்தாயிரம் தலைக்கட்டு உள்ள அந்த பிராந்தியம் முழுவதுமே அவ்விடத்தை நிறைத்தது போல ஆராவாரமாக இருந்தது.

 

சஷ்டி எங்கே யாழினி வராமல் இருந்து தன்னை ஏமாற்றிவிடுவாளோ என்று பயந்து கொண்டிருந்தவன், அவள் வண்டியிலிருந்து இறங்குவதைக் கண்டதும் நிம்மதிப் பெருமூச்சு விட்டான்.

 

தெய்வானையின் கருவிழிகளோ கண்ணீர் குளத்தில் படகுகளாய் மிதந்து கொண்டிருந்தன. 

 

கோவிலுக்குள் நுழைந்த யாழினியை முதலிலேயே அடியாட்கள் சஷ்டியுடன் பார்த்திருக்கிறார்கள் என்பதால் அவளை சகல பாதுகாப்புகளுடனும் மணமேடையின் அருகே கொண்டுபோய் விட்டார்கள். 

 

சரியாக அவ்வேளை‌ ரத்னவேல் பாண்டியன் தன் மகன் பத்ரவேல் பாண்டியனின் கையில் தாலியெடுத்துக் கொடுக்க, “நிறுத்துங்க இந்த கல்யாணத்தை” என்று கத்தினாள் யாழினி.

 

அங்கிருந்த பெரிய தலைகள் எல்லாம் பெரிய குடும்பத்திற்கு ஆதரவாக, “யாருமா நீ தாலி கட்டப்போற நேரத்துல வந்து பிரச்சனை பண்ற?” என்று கூச்சலிட,

 

“என்னை கல்யாணம் பண்ணிக்கிறதா வாக்கு கொடுத்து என்னை கன்னி கழிச்சிருக்காரு இவரு பெரிய புள்ள. ஊருக்கெல்லாம் நியாயம் சொல்றவரு எனக்கு என்னங்க சொல்லப்போறாரு?” என்று அனைவரின் தலையிலும் இடியை இறக்கினாள்.

 

பெரிய தலைகளில் ஒருவரோ, “இங்கப்பாரும்மா தலையும் புரியாம காலும் புரியாம பேசாத. நீ‌ அந்த சஷ்டி தம்பி கூடத்தானே திரிஞ்ச? இப்ப என்னமோ பத்ரி தம்பி மேல பழி போடுற? பத்ரி தம்பி பத்தி எங்க எல்லாருக்கும் நல்லாவே தெரியும். கெட்டுப்போக‌ அவ்ளோ வசதியும் வாய்ப்பும் இருந்தும் பொடம் போட்ட சொக்கத் தங்கம்மா அந்தத் தம்பி. தன் அப்பா பேச்சுக்கு மரியாதை கொடுத்து உத்தமனா வாழ்ந்துட்டு வர்றாரு. அவரு மேலப்போய் இப்படி அபாண்டமா பழி போடுறியே?” என்றதும்,

 

“தெரியும். நீங்க இப்படி தான் இந்த பெரியவர் வீட்டுக்கு ஜால்ரா அடிப்பீங்கனு. நீங்கல்லாம் நம்ப மாட்டீங்கனு தான் நான் ஆதாரத்தோட இங்க வந்திருக்கேன். இதையும் நீங்க ஏத்துக்கலைனா நான் போலீஸ்கிட்ட போறதை தவிர எனக்கு வேற வழியில்ல. போலீஸ்காரங்களை இந்த ஊருக்குள்ள அனுமதிப்பாரா இந்த ரத்னவேல் ஐயா?” என்று கேலியாகக் கேட்டவள், 

 

அவர் முகம் சிவப்பதைக் கண்டதும், “ஐயா பெரியவங்களே, இப்படியே யோசிச்சிட்டு நின்னா எப்படி? வாங்க என்கூட.” என்று அங்கிருக்கும் கோயில் தர்மகர்த்தா அறைக்கு‌ அவர்களை அழைத்துச் சென்றாள்.

 

ஊரின் பத்து தலைக்கட்டுகளும் ரத்னவேல் பாண்டியனின் குடும்பத்தினரும் ஒன்றாகக் கூடியிருந்தபோது கணினியில் ஒரு காணொளியை ஓடவிட்டு காண்பித்தவள், அது நீண்ட நேரங்களுக்கு ஓடினால் தனக்கு ஆபத்தென்பதால் பாதியிலேயே நிறுத்தச் சொன்னாள்.

 

“இதுக்கு மேல ஓடினா இந்த கோவிலோட புனிதத்தன்மை கெட்டுரும்.” என்றும் நைச்சியமாக மடைமாற்றினாள்.

 

அனைத்தையும் கண்டு கொலைவெறியான பத்ரி, “ஹேய் என்னடி மிரட்டுறியா? எல்லாரும் கேளுங்க. இது நானே இல்ல. ஏதோ மார்பிங் பண்ணி இவ இப்படி ஏமாத்துறா.” என்று சொல்ல, 

 

“பாருங்க பெரிய மனுசனுங்களே, இது எல்லாம் உண்மையா இல்லையான்னு சோதிக்க தான் போலீஸ் ஸ்டேசன், கோர்ட் இருக்கு. சோ இப்ப இந்த கல்யாணத்தை நிறுத்துங்க” என்றாள் முடிவாக.

 

பத்ரி, “முடியாது உன்னால முடிஞ்சதைப் பார்த்துக்கோ” என்று சண்டைக்கோழியாய் விடைத்து நிற்க,

 

அவமானத்தில் விதிர்த்துப்போய் நின்ற ரத்னவேல் பாண்டியனோ, “மேடைக்குப்போய் அவ கழுத்துல தாலி கட்டு பத்ரி” என்றார்.

 

அவன், “அப்பா இவ பொய் சொல்றா” என்று உண்மையை விவரிக்க முயல,  

 

அவனை சற்று தள்ளி அழைத்துச்சென்ற ரத்னவேல் பாண்டியன், “என் மானம் இவ்வளவு பேர் முன்னாடி போனதும் பத்தாம ஊர் முன்னாடி வேற போகனுமா பத்ரி? என்னை பஞ்சாயத்து தலைவர் பதவியில இருந்து இறக்கினா தான் உனக்கு திருப்தியா? வர்ற தேர்தல்ல வேற உன்னை நிக்க வைக்கலாம்னு இருக்கேன். தயவுசெஞ்சு உன் அவசரப்புத்தியால அதை கெடுத்துராத. இவளை நம்ம அப்பறம் பார்த்துக்கலாம். நீ இப்போதைக்கு அந்தத் தாலியை இவ கழுத்துல கட்டு” என்று காதோரமாய் ரகசியம் பேசவும், சூழ்நிலையை புரிந்து மறுபேச்சின்றி மணமேடையேறி யாழினியின் கழுத்தில் தாலியைக் கட்டினான் பத்ரி. 

 

அப்போது அவன் கண்களிலிருந்த குரோதம் அவளை கொஞ்சம் அல்ல ரொம்பவே மிரட்டியது.

 

அவளுக்குமே காதலோடல்லாமல் இப்படி பழிக்காய் தாலியை ஏற்பது மனதை அறுத்தது. இருப்பினும், தன் தாய் தந்தையை நினைத்து மனதை தேற்றினாள். 

 

நடந்து முடிந்த கோல்மாலில் தெய்வானையின் கண்களிலிருந்து ஆனந்தக் கண்ணீர் பெருக்கெடுத்து ஓட, அதைக்கண்ட ஜெயந்தி, “என் பொண்ணோட வாழ்க்கை இப்படி கேள்விக்குறி ஆகிடுச்சேப்பா. மணவறை வரை வந்து கல்யாணம் நின்னு போனவளை இனி எவன் கட்டிப்பான்?” என்றவர் மகளுக்காக கலங்கி நிற்க, ஒரு தீர்வை கண்டுபிடித்தார் ரத்னவேல் பாண்டியன்.

 

“ஏய் சஷ்டி இங்க வா. எப்படியோ காரியம் சாதிச்சிட்ட. போ! போய் தெய்வானை கழுத்துல தாலியைக்கட்டு” என்றார்.

 

அவனோ எப்போது‌ இந்த வார்த்தைகள் அவரின் வாயிலிருந்து வரும் என்று எதிர்பார்த்தவன் போல் உடனே ஓடிச்சென்று தெய்வானையின் அருகில் நின்றான்.

 

ஜெயந்திக்கோ இந்த அவசர திருமணத்தில் மனம் ஒட்டவில்லை. 

 

“அப்பா இவனா என் பொண்ணுக்கு மாப்பிள்ளை? வேண்டாம்ப்பா” என்றார்.

 

மகளை முறைத்துப் பார்த்தவர், “இவனும் என் ரத்தம் தான். உன் தாத்தா சொத்துல இவ‌னுக்கும் பங்கு இருக்கறதை மறந்துட்டியா ஜெயந்தி? ஆனா என்னை எதிர்த்து பேசற அளவுக்கு உனக்கு துணிச்சல் எங்கேயிருந்து வந்தது?” என்று கேட்டதும், கப்சிப்பென்று ஓரமாக சென்று நின்று கொண்டார்.

 

வெளிநாட்டிலிருந்து வந்திருந்த அவரின் கணவரோ அவரை முறைத்தபடி நின்றிருந்தார். ஆனாலும் தன் மகளின் முக மாற்றங்களையெல்லாம் கவனித்தவருக்கு அதை எதிர்க்க தோன்றவில்லை.

 

மறுபக்கம் பார்வதிக்குமே தெய்வானை தன் மருமகளாக வருவது சுத்தமாகப் பிடிக்கவில்லை. பின்னே தன் அழகின்‌ மீது‌ கர்வம் கொண்டவளை யாருக்கு தான் பிடிக்கும்‌ சஷ்டியைத் தவிர. 

 

என்னதான் தன் எண்ணம் ஈடேறினாலும் விருப்பமில்லாத திருமணத்தை செய்வது போலத்தான் தன் முகத்தை வைத்திருந்தான் சஷ்டி. காரணம், இப்படியொரு கலவரம் மட்டும் நடந்திருக்காவிட்டால் தெய்வானை அவனுக்கு கிடைத்திருக்க மாட்டாள் அல்லவா? 

 

ஆக, அவள் கடைசி நிமிடம் வரை அந்தத் திருமணத்திற்கு தயாராகத்தான் இருந்திருக்கிறாள் என்ற கோபம் அவனுக்கு.

 

அர்ச்சகர் ஒரு மஞ்சள் கயிற்றில் விரலி மஞ்சளை கட்டிக்கொடுக்க, அதை தெய்வானையின் கழுத்தில் கட்டினான் சஷ்டி. அனைவரின் அர்ச்சதையும் அவர்களின் தலையில் வந்து விழுந்தது. 

 

அதைத்தொடர்ந்து அங்கிருந்த தொண்ணூற்றியொன்பது ஜோடிகளுக்கும் தாலியெடுத்துக் கொடுத்த ரத்னவேல் பாண்டியன், தன்‌ கடமை முடிந்ததும் கோபமாக வீட்டிற்குச் சென்றார்.

 

வீட்டில் என்ன பூகம்பம் வெடிக்கப்போகிறதோ என்று பயந்தபடியே அவரின் குடும்பத்தினரும் அவரைப் பின் தொடர்ந்து சென்றனர். ஆனால், கோவிலில் மட்டும் திருமண விருந்து‌ தடபுடலாய்‌‌ நடந்து கொண்டிருந்தது. 

 

காரில் வரும் போது பத்ரி, “நான் அவ்வளவு எச்சரிக்கை செஞ்சும் நீ திரும்ப வந்திருக்கல்ல? இனி ஒவ்வொரு நாளும் உனக்கு நரகம் தான்டி.” என்று பல்லைக் கடித்துக்கொண்டு கூற, யாழினி பயத்தில் எச்சில் விழுங்கினாள்.

 

அவன்புறம் திரும்ப பயந்து வெளியே வேடிக்கை பார்த்தபடி வந்தாள்‌.

 

வீட்டில் வந்து இறங்கியதும் தனக்கு விருப்பமில்லையென்றாலும் சாவித்ரி‌ ஆரத்தி தட்டோடு நிற்க, அவருக்குப் போட்டியாக பார்வதியும் தன் மகன் மருமகளுக்காக ஆரத்தி தட்டோடு நின்றார்.

 

பத்ரியோ தன் அன்னையின் ஆரத்தி தட்டை கையால் ஒரு தட்டு தட்ட, அது பார்வதி‌ வைத்திருந்த ஆரத்தி தட்டின் மேல்‌ விழுந்து அவரை கை தவற வைத்தது.

 

“இவனுக்கு வேணாம்னா போகட்டும். ஏன் என் புள்ளையோடதையும் சேர்த்து தட்டி விட்டுட்டுப் போறான்?” என்று புலம்பினார் பார்வதி.

 

யாழினியோ யார் முகத்திலும் முழிக்க முடியாமல் தலைகுனிந்தபடி உள்ளே நுழைந்தாள்.

 

ஆனாலும் அவளை விடவில்லை ஜெயந்தி.

 

“அம்மாவுக்கு உடம்பு முடியலைனு போனவ ஏன்டி திரும்பி வந்த? உன் அம்மா என்ன பரலோகம் போயிட்டாளா? நீ இங்க தொத்திக்கலாம்னு வந்துட்டியா? உன்னை மாதிரி பொண்ணையெல்லாம் பெத்தா அவ இன்னும் உயிரோட இருந்தா தான்டி அதிசயம். என் பொண்ணு வாழ்க்கையை அநியாயமா இப்படி கெடுத்திட்டியேடி‌” என்று கரித்துக்கொட்ட,

 

“என்ன உன் பொண்ணு வாழ்க்கை கெட்டுப்போச்சா? ஏன் என் புள்ளைக்கு என்ன கொறைச்சல்?” என்று குறுக்கிட்டார் பார்வதி.

 

“அது வந்து ஒரு பேச்சுக்கு சொன்னேன் சித்தி” என்று பம்மியவர், “இவளை இப்படியே சும்மா விட முடியாது இல்ல சித்தி? அதான் அவ குடும்பம் பத்தி விசாரிச்சிட்டு இருக்கேன்” என்று சொன்னதும், பொன்னியும் சாவித்ரியுமே அவருடன் இணைந்து கொண்டார்கள்.

 

தொடரும்..

 

ஒரு வழியா பாதிக் கிணறை தாண்டிட்டோம் தங்கோம்ஸ். சீக்கிரமே மீதிக் கிணறையும் தாண்டிடலாம்:)
 

❤️ Loading reactions...
முந்தைய பதிவு அடுத்த பதிவு
இந்த எழுத்தாளரின் மற்ற கதைகள்
வெந்து தணிந்த இதயம்
20,847 902 5
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page