வெந்து தணிந்த இதயம்-19

நான் உங்கள் AY_84

 

வெந்து தணிந்த இதயம்-19

 

சஷ்டிவேல் பாண்டியனின் அறைக்குச் சென்ற யாழினியை தவறான கண்ணோட்டத்துடன் பார்த்த ஜெயந்தி, உடனே சென்று அதனை தெய்வானையிடம் கூற, அவளோ விட்டேற்றியாய் இருந்தாள்.

 

அவர் அவளின் தோள்களைப் பற்றி சஷ்டியின் அறைக்குச் செல்லுமாறு வெளியே தள்ளிவிட்டதும், “இந்த அம்மாவோட ஒரே ரோதனையாப் போச்சு” என்று சலித்தபடியே சஷ்டியின் அறைக்குச் சென்றாள்.

 

அவன் அங்கு பால்கனியில் நின்று அலைபேசியில் தன் நண்பனிடம் பேசிக்கொண்டிருக்க, அவனுக்காக கட்டிலில் அமர்ந்திருந்தாள் யாழினி. அவளைக் கண்டதும் தாம் தூமென குதித்தாள் தெய்வானை.

 

எடுத்த எடுப்பிலேயே “ஹேய் நீ எதுக்குடி இப்ப இங்க வந்த? பழக்கதோசமா? இனிமே நீ இங்க வர்ற வேலையெல்லாம் வச்சிக்காத” என்று கண்களை உருட்டியபடி எச்சரித்தாள்.

 

அப்போது பால்கனியிலிருந்து வெளிப்பட்ட சஷ்டி, “ஏய்! என்னடி ரொம்ப ஓவரா மிரட்டிட்டு இருக்க? இப்ப சொல்றேன் கேட்டுக்கோ, என் மேல நம்பிக்கை வச்சு என்னையும் ஒரு ஆளா மதிக்கறவங்களை என்னைக்குமே எனக்கு விட்டுக் கொடுத்தோ, மறந்தோ, இல்ல உதாசீனப்படுத்தியோ பழக்கமில்ல. அதனால நீ இந்த மாதிரி உன் மூக்கை உள்ள நுழைக்கிறதெல்லாம் இதோட நிறுத்திக்கோ” என்றதும், கலங்கிய கண்களுடன் வெளியேறினாள்.

 

யாழினிக்கோ அவன் அவளை இப்படி அவமானப்படுத்தி வெளியே அனுப்பியது ஏதோ போல் இருந்தது. 

 

“என்ன சஷ்டி கல்யாணத்துக்கு முன்னாடி அவளை அப்படி லவ் பண்ணிட்டு இப்ப இப்படி பேசுற? காதல் எல்லாம் கல்யாணத்து வரைக்கும் தானா? அதுக்கப்பறம் அவ நமக்கு சொந்தமாகிட்டா இனி அவ எங்க போகப்போறான்ற அலட்சியம் வந்துடுமா?” என்று பொறுக்காமல் கேட்டதும், 

 

“நீ தப்பா புரிஞ்சிக்கிட்ட யாழு. நான் அவளை இப்பவும் காதலிக்காம எல்லாம் இல்ல. ஆனா அவ என்னை புரிஞ்சிக்காதது, கடைசி நிமிசம் வரை தன் தாத்தாவோட கௌரவத்தை காப்பாத்த நினைச்சது, சந்தர்ப்ப சூழ்நிலையால என்னை ஏத்துக்கிட்டதெல்லாம் உறுத்தலா இருக்கு. அதுக்கும் மேல அவளுக்கு சுய ஜாதித்திமிரு அதிகம். ஒரு கணவனா அவ தப்புகளை என்னால ஏத்துக்க முடியல. அவ நிச்சயம் மாறனும் எனக்காகவும், என் காதலுக்காகவும்.” என்றதும், 

 

தன் மனதில் பட்டதை கூறினாள் யாழினி.

 

“மாத்த நினைக்கிறவங்க விலகி நிக்கக்கூடாது சஷ்டி. கூடயிருந்தே அவங்க தப்புகளை புரிய வைக்கனும். நோய் சரியாக மருந்து தள்ளி இருந்தா எப்படி? உடம்புல கலந்தா தானே சரியாகும்?” என்று கண்ணடிக்கவும், 

 

“ஓ! மேடம் எடுத்திருக்க ரூட் இதானோ?” என்று சிரித்தான் சஷ்டி.

 

அவளோ மிகத்தீவிரமான பாவனையுடன், “விட்டுப்புடிக்கிறேன் விட்டுப்புடிக்கிறேனு ஒரேடியா விட்டுராத சஷ்டி. அவ உனக்கு கழுத்தை நீட்டிட்டா. இனிமே நீ தான் அவளுக்கு எல்லாம்னு புரிய வைக்கனும். முதல்ல நீ உன் குடும்பத்தை அண்டி இருக்காம, சுயமா தொழில் செய்யனும்” என்றதும், ஆர்ப்பரித்தான் சஷ்டி.

 

“கரெக்ட் யாழு. நானும் அதுக்கு தான்‌ என் அம்மா வழி நிலத்தை வச்சு பேங்க்ல லோன் கேட்டிருக்கேன். அது அப்ரூவ் ஆனதும் ஒரு பெரிய அரிசிஆலை  ஆரம்பிக்கலாம்னு இருக்கேன். அதுக்கப்பறம் பாரு அரிசிக்காக எவ்வளவு நெல்மூட்டைங்க என் குடவுன்ல குவியுதுனு” 

 

“ரொம்ப சந்தோசம் சஷ்டி. உன் லட்சியம் வெற்றியடைய என் வாழ்த்துகள். அப்பறம் நான் எதுக்கு இங்க வந்தேன்னா…” என்று அவள் ஆரம்பித்த அடுத்த கணம், மூக்கு வியர்த்தது போல் அங்கு நின்றிருந்தான் பத்ரவேல் பாண்டியன்.

 

அவன் கீழே கலங்கிய கண்களுடன் வந்த தெய்வானையைப் பார்த்து சஷ்டியின் அறைக்கு வந்தான்.

 

அங்கு யாழினியைக் கண்டதும் குத்தலாக, “என்ன பழைய காதலனும் பழைய காதலியும் மீட்டிங் போட்டுட்டு இருக்கீங்களா?” என்றான்.

 

“ஏன் நாங்க ரெண்டு பேரும் பேசிக்கறது உனக்கு பொறாமையா இருக்கா?” என்று எள்ளினான்‌ சஷ்டி.

 

“பேசிக்கறது பிரச்சனையில்ல. ஆனா உ‌ன் ரூமுக்குள்ள கேமரா இருக்குமே அதான் பிரச்சனை. என்னை மணமேடைல நாலு பேரு காரித்துப்பற மாதிரி பண்ணிங்கல்ல? அது ரிவர்ஸாகிடப்போகுது.” என்றதும்,

 

“இத சொல்லத்தான் என் ரூம் வரைக்கும் வந்தியா? சொல்லிட்டனா நீ போகலாம்.” என்றான் சஷ்டி.

 

பத்ரியோ விடாமல், “திட்டம் போட்டு ஒருத்தியை கல்யாணம் பண்ணினா மட்டும் பத்தாது. கண் கலங்காம வச்சு வாழத் தெரியனும்.” என்றான்.

 

“அடடா! நீ தான்பா இப்ப முன்னாள் காதலன் மாதிரி பேசுற” என்று கிண்டலடித்தான் சஷ்டி.

 

யாழினியோ, ‘ஆமா இவர் மத்தவங்களுக்கு உபதேசம் பண்ணுவாரு. ஆனா என்கிட்ட மட்டும்  முரட்டுத்தனமா நடந்துக்கிருவாரு. சாருக்கு யாரு உபதேசம் பண்றதாம்?’ என்று தன் மனதுக்குள் விசனப்பட்டாள்.

 

அவள் அக உலகில் சஞ்சரித்த சமயம், “பேசினது போதும் வா” என்று அவளை தரதரவென இழுத்துச் சென்றான் பத்ரி.

 

தங்களின் அறைக்குள் வந்ததும் அவளை கட்டிலில் தள்ளிவிட்டவன், “உனக்கு ஒருத்தன் பத்தலையாடி?” என்று கேட்க, உடலில் அமிலம்பட்டது போல் துடிதுடித்துப் போனாள் யாழினி.

 

“ஏன் இப்படி நாராசமா பேசுறீங்க?” என்று கண்ணீர் பொங்கக்கேட்டாள்.

 

அவனோ, “என் அக்காப் பொண்ணுங்களுக்கு ஒன்னுன்னா நான் பார்த்துட்டு சும்மா இருக்க மாட்டேன். இனிமே தெய்வானையை அழ வைக்கிற வேலையெல்லாம் வேண்டாம். மீறி பண்ணா… நான் சொல்லமாட்டேன். செய்வேன்!” என்று மிரட்டிவிட்டுப்போனான்.

 

‘நானும் உங்களுக்கு ஒரு அக்காப்பொண்ணு தான் மாமா. என்னை மட்டும் ஏன் நீங்க இப்படி விரோதியா பார்க்கறீங்க? அதுலயும் நான் உங்க பொண்டாட்டி’ என்று மனதிற்குள் விம்மினாள் யாழினி. அவளால் தற்போது அது மட்டுமே செய்ய முடிந்தது.

 

அங்கிருந்து தனது தந்தையின் அறைக்குச் சென்ற பத்ரி இரண்டு நாட்களுக்குப் பின் வரவிருக்கும் கிழக்கூர் ஏல விசயத்தைப் பற்றிப் பேசுவதற்காக காத்திருக்க, அவரோ, “என்ன பத்ரி புது மாப்பிள்ளை தோரணை வந்துருச்சி போலயே?” என்று குத்தலாகக்கேட்டார்.

 

அவன் தலை குனிந்ததும், “அட! அவ உன் சொத்து பத்ரி. எப்படி இந்த ஊர் முன்னிலைல நம்மளை அவமானப்படுத்தி இந்த வீட்டுக்குள்ள‌ நுழைஞ்சாளோ அதே ஊர் முன்னிலைல அவளை நாம இந்த வீட்டை விட்டு அனுப்பனும். அதுவரை அவளை நீ என்ன வேணா செய்யலாம்.” என்று உள்ளர்த்தத்துடன் புன்னகைத்தார்.

 

பின், அவனை தொழிலில் ஈடுபடுத்தும் விதமாய், “இன்னைக்கு நாம கிழக்கூர் குளத்தை ஒரு எட்டு போய் பார்க்கனும்னு சொன்னேனே?” என்று நினைவுபடுத்தினார்.

 

ஏற்கனவே அதற்கான கோப்பை எடுத்து வந்திருந்தவன், “நான் ரெடிப்பா” என்றான். 

 

இருவரும் தங்கள் அடியாட்கள் இருவருடன் கிழக்கூர் குளம் நோக்கிச் சென்றனர்.

 

தன் கணவனின் ஆதரவு கிட்டினாலே அவன் மூலமாகவே தன் தாத்தாவை ஒரு வழிக்கு கொண்டு வந்துவிடலாம் என்று எண்ணிய யாழினிக்கு‌ அது ஒன்றும் சுலபமாக இருக்கவில்லை. அடுத்து எப்படி காயை நகர்த்துவது என்றும் புரியவில்லை. 

 

வீட்டில் யாரும் தன்னிடம் சரிவர பேசாததால் பகற்பொழுதில் வயலுக்குச் சென்று, அங்கு களைபிடுங்கும் பெண்களிடம் வம்பளந்தாள்.

 

அவர்கள் வெற்றிகரமான தாம்பத்திய வாழ்க்கையின் ரகசியமாக முதலில் கணவனை கை ருசியில் கவிழ்க்க வேண்டும் என்று ஆலோசனை கூற, உடனே மறுநாள் பத்ரிக்குப் பிடித்த நாட்டுக்கோழி குழம்பும், காடை வறுவலும் செய்து பணிப்பெண்ணை விலகச்சொல்லி தன் கையால் பரிமாறினாள்.

 

போனை நோண்டிக் கொண்டிருந்தவன் சாதத்துடன் குழம்பை பிசைந்து வாயில் வைத்துவிட்டு அதன் சுவையில் தலை நிமிர, அங்கு யாழினி ஆர்வத்துடன் நின்றிருப்பதைக் கண்டு அவளின் முகத்திலேயே அதனை உமிழ்ந்தான்.

 

அவளோ கால்கள் தரையோடு புதையுண்டது போல் அசையாது நின்றாள். அவளின் முன்னிலையிலேயே அவன் அந்த தட்டை விசிறியடித்துவிட்டுப் போக அவளுக்கு மனம் வலித்தது.

 

தள்ளி நின்று வேடிக்கைப் பார்த்த சாவித்ரி அவளுக்காக அனுதாபப்பட்டு அவளுக்கு துடைத்துக்கொள்ள துண்டை நீட்ட, அதை தட்டிப் பறித்த ஜெயந்தி, “இவளுக்கு இந்த அவமானம்லாம் பத்தாதுமா. இன்னும் ஊர் முன்னாடி பெருசா அவமானப்படனும்” என்று கருவினாள்.

 

ரத்னவேல் பாண்டியனின் தூண்டுதலில் அக்கா தம்பி இருவரும் யாழினியை பழி தீர்க்கும் வெறியில் அலைந்தார்கள். ஆனால், சாவித்ரியால் அப்படி இருக்க முடியவில்லை.

 

பார்வதி தன் மருமகளுக்காக தினமும் மல்லிகைப்பூவை முழம் கணக்கில் சூட்டி அழகு பார்க்க, தான் தன் மருமகளை விட்டு விலகி நிற்கும் சூழலை அறவே வெறுத்தார் அவர்.

 

என்னதான் யாழினி தன் மகனை மணந்த முறை தவறாக இருந்தாலும், இன்று அவன் அவளிடம் நடந்து கொண்டது அதிகப்படியாகப் பட்டது அவருக்கு.

 

அந்த ஆத்திரத்தில் தன்னை மீறி தன் மகளிடம் கத்திவிட்டார்.

 

“இவளும் தெய்வானையும் எனக்கு  ஒன்னு தான் ஜெயந்தி. முதல்ல இவ உனக்கு தம்பி பொண்டாட்டி. நீ அந்த மரியாதையை கொடுக்கலைனாலும் அவளை இப்படி வேலைக்காரங்க முன்னாடி அசிங்கப்பட விடுறது சரி கிடையாது. உன் தம்பி இப்ப செஞ்சது ரொம்ப தப்பு.” என்று யாழினியின் கைப்பிடித்து பத்ரியிடம் அழைத்துச் சென்றார்.

 

அங்கு பத்ரி அலைபேசியை நோண்டியபடியே கட்டிலில் படுத்துக் கிடக்க, யாழினியை முகம் கழுவச் சொல்லியவர் பத்ரியை முறைத்தபடி நின்றிருந்தார்.

 

அவள் முகத்தை கழுவிக்கொண்டு வரவும், “அவக்கிட்ட மன்னிப்பு கேளு பத்ரி” என்றார்.

 

அவனோ, “முடியாதும்மா” என்றார்.

 

“என் மேல சத்தியம், மன்னிப்பு கேளு” என்றார்.

 

அவன் வேறுவழியின்றி தன் அன்னைக்காக, “சாரி” என்று எங்கோ பார்த்தபடி சொல்ல,

 

“உன்கிட்டயிருந்து நான் இது மாதிரி ஒரு கீழ்த்தரமான செயலை எதிர்பார்க்கல பத்ரி. கல்யாணத்துக்கு முன்னாடியே நீ அவக்கிட்ட எல்லை மீறி பழகிட்டு இப்ப என்ன ரோசம்? நானும் வசந்தியும் மத்தவங்ககிட்ட அன்பு செலுத்தத் தானடா உனக்கு சொல்லிக் கொடுத்தோம்? எங்கயிருந்து வந்தது இந்த அரக்கக்குணம்?” என்று அழவும், தன் அன்னை அழுவதற்கும் யாழினி தான் காரணம் என்று அவளை முறைத்தான் அவன்.

 

அவர் அந்த சோகத்துடனே வெளியேற, யாழினியின் முந்தானையைப் பற்றி கட்டிலுள் இழுத்தவன், “என்னடி என் அம்மாவை என்ன மாயம் பண்ணி மயக்கின?” என்றான் வெறுப்பாக.

 

அவன் கைக்குள் கிடந்தவளோ, “அன்பு மாயம் தான். நீங்க எப்ப அந்த மாயத்துல விழப்போறீங்க?” என்று ஏக்கமாகக் கேட்கவும்,

 

“கூத்தியாக்கிட்ட அன்பு காட்டி எனக்கு என்ன கிடைக்கப்போகுது?” என்று வன்மத்தை கக்கினான் அவன்.

 

உறைந்து போனாள் அவள்.

தொடரும்…

 

கதைப் பிடிச்சிருந்தா லைக் பண்ணவும், கமெண்ட் பண்ணவும் மறந்துடாதீங்க தங்கம்ஸ்:) 
 

❤️ Loading reactions...
முந்தைய பதிவு அடுத்த பதிவு
இந்த எழுத்தாளரின் மற்ற கதைகள்
வெந்து தணிந்த இதயம்
20,839 902 5
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page