வெந்து தணிந்த இதயம்-2

நான் உங்கள் AY_84

வெந்து தணிந்த இதயம்-2

பத்ரவேல் பாண்டியன் வேகவேகமாக தனது ஆட்களிடம் பக்கத்திலிருந்த கிணற்றிலிருந்து நீரெடுத்து ஊற்றச் சொல்லி தீயை கட்டுக்குள் கொண்டு வர முயன்றான். ஊர் மக்களும் அவ்விடைவெளியில் மணப்பந்தலுக்குள் இருந்து வெளியேறியிருந்தனர்.

 

தீயை அணைக்க வேண்டி பத்ரவேல் பாண்டியன் வேஷ்டியை மடித்துக் கட்டிக்கொண்டு தானே செயலில் இறங்கியது போர்வீரனை நினைவூட்டியது. ஒரு ந‌ல்ல தகப்பனாக அவனின் வீர தீர செயல்களை எல்லாம் கண்டு மெய் சிலிர்க்க வேண்டியவரோ இழவு விழுந்தாற் போல் இருண்டு உட்கார்ந்திருந்தார்.

 

அதிர்ஷ்டவசமாக இந்த தீ விபத்தில் உயிர் பலி ஏதும் நிகழவில்லை. ஆனால், ஒரு சிறுமியை காப்பாற்றி கொண்டு வந்த சஷ்டிவேல் பாண்டியன் தான் யாழினியைக் காணாமல் பரிதவித்தான்.

 

அதையறிந்ததும் உடனே தன் ஆட்களிடம் அவளை தேடும்படி கட்டளையிட்ட பத்ரி மீண்டும் தீயை அணைப்பதில் கவனமானான். நிலைமையும் ஒருவாறு கட்டுக்குள் வந்தது.

 

அவ்வேளை ஒரு ஆலமரத்தின் பின்னாலிருந்து வெளிப்பட்ட யாழினியிடம் தெய்வானை, “நீ எங்கப் போன?” என்று அவளின் தோள்களைப் பிடித்து உலுக்கவும்,  திருதிருவென விழித்தாள்.

 

பின், ஞாபகம் வந்தவள் போல் தான் தீயைப் பார்த்து பயந்துவிட்டதாக சொல்லி பெருமூச்சு விட்டாள்.

 

அவள் கையைப் பிடித்து தன் வீட்டார்கள் இருக்குமிடம் இழுத்துச் சென்ற தெய்வானை, சஷ்டியின் கையில் அவளை தள்ளிவிட்டு முறைத்தாள். அவன் அவளின் செய்கையில் செய்வதறியாமல் திகைத்தான்.

 

அச்சமயம் அவ‌ர்க‌ளின் பின்னாலிருந்து எழுந்த அவலக்குரலில், அனைவரின் கவனமும் அப்புறம் திரும்பியது.

 

“ஐயா! தாலிங்களையெல்லாம் காணோங்கய்யா.  தொண்ணூத்தொம்பது தங்கத்தாலிங்களையும் காணோங்கய்யா” என்று அலறினார் பூசாரி.

 

அனைவரும் திடுக்கிட்டுப் பார்க்க, ரத்னவேல் பாண்டியனின் கண்களோ ரத்தப் பிழம்புகளாகி‌ன. நாளை அனைத்துப் பத்திரிக்கைகளிலும் இத்திருமணச் செய்தியை‌ அச்சடிக்க வைத்து‌ பேரும் புகழும் வாங்கலாம் என்று கனவு கண்டவரி‌ன் திட்டத்தில் ஒரு லாரி மண் விழுந்ததால் ரத்தம் சூடேறினார்.

 

“என்ன பத்ரி? இது தான் நீ என் பிறந்தநாளை எடுத்துச் செய்யற லட்சணமா?” என்றவரின் குரலின் வலிமையிலும், எழுந்து நின்ற தோரணையிலும் பத்து வினாடி இமைக்க மறந்தனர் அனைவரும்.

 

எழுபது வயதிலும் ஒரு மனிதனால் இந்தளவு குரலிலேயே அதிகாரம் செலுத்த முடியுமா? முகத்தில் ஒரு துளி அயற்சி இல்லை. இப்பொழுதே இப்படி என்றால் இவர் இளமையில் இன்னும் எப்படி இருந்திருக்க வேண்டும்! எ‌ன்று வியந்து பார்த்தாள் யாழினி.  

 

நிலைமையை தனக்கு சாதகமாக எடுத்துக்கொண்டு முன்னே வந்த‌ சஷ்டி, “இந்த ஏற்பாடுகளையெல்லாம் என்கிட்ட கொடுத்திருக்கலாம். எங்க? உங்க நம்பிக்கைக்கு பாத்திரமா இல்லாட்டியும், ஒரு ஸ்பூனாக்கூட என்னை மதிக்க மாட்டிக்கிறீங்க நீங்களும் உங்க அடியாளுங்களும்.” என்று குத்திக் காட்டினான்.  

 

இடையில் புகுந்த ஜெயந்தியோ, “சஷ்டி பெரியவங்க பேசும்போது நீ என்ன‌ சின்னப்புள்ளதனமா குறுக்கப் பேசுற?” என்று தன் தம்பி பத்ரிக்காக வாதிட்டார்.

 

பார்வதியோ ‘எல்லாம் என் புள்ளை சஷ்டிய யாரோ மாதிரி பாருங்க’ என்று மனதிற்குள் கரைந்தார்.

 

தலை குனிந்து நின்ற பத்ரவேல் பாண்டியன், “இந்த தடவை என்னை மன்னிச்சிடுங்க ப்பா. அடுத்த தடவை இது மாதிரி நடக்காம நான் பார்த்துக்கறேன்.” என்ற கம்மியகுரலில் சொன்னான்.

 

ரத்னவேல் பாண்டியனோ விடாமல் முழங்கினார்.

 

“நடந்து போச்சே பத்ரி. இனி இதை மாத்த முடியாதே. இப்ப நடந்த களவுக்கு முழுக்க முழுக்க நீ மட்டும் தான் பொறுப்பு. பறிபோனதென்னவோ வெறும் தங்கம் தான். ஆனா நான் திரும்ப சம்பாதிக்கவே முடியாதது பறிபோனா? யோசி பத்ரி! யோசி!” என்று அவனை எச்சரித்துவிட்டு,

 

சுற்றி நின்ற ஊர்க்காரர்களை நோக்கி, “எல்லாரும் என்னை மன்னிக்கனும்! இன்னும் சரியா எட்டு நாள் கழிச்சி அதாவது நான் பத்மஸ்ரீ பட்டம் வாங்கின ரெண்டாம் நாள் இப்ப நின்னு போன தொண்ணூத்தொம்பது கல்யாணத்தோட என் மகன் பத்ரவேல் பாண்டியனோட கல்யாணமும் சேர்த்து நூறு கல்யாணமா நடக்கும். அப்படி நடக்கலைனா நான் அதுக்கு மேலயும் பஞ்சாயத்து தலைவனா இந்த ஊர்ல இருக்கறதுல அர்த்தமில்ல.” என்று கர்ஜித்துவிட்டு திரும்பி பத்ரியின் கண்களை அர்த்தத்துடன் சந்தித்தவர் தன் காரை நோக்கிச் சென்றார்.

 

விதிர்த்து நின்ற பத்ரியும் நொடியில் தன்னை சுதாரித்துக்கொண்டு அவரை பின் தொடர்ந்து சென்று காரின் கதவை திறந்து வைத்தான். அப்போது அவன் அறியவில்லை இனி இதுபோல் அவன் பலமுறை தலைகுனிய வேண்டி இருக்குமென்று.

 

கோவிலிலிருந்து அனைவரும் வீட்டிற்கு வந்ததுமே சஷ்டிவேல் பாண்டியன் யாழினிக்கு வீட்டை சுற்றிக் காண்பிக்க ஆரம்பித்துவிட்டான்.

 

கோபமாக நகத்தை கடித்தபடி நடந்து கொண்டிருந்த தெய்வானை‌ அவர்களிருவரும் இறுதியாக தனதறைக்குள் நுழைவது கண்டு, “இவளை ஏன் இங்க கூட்டிட்டு வர்ற?” என்று கோபமாகக் கத்தினாள்.

 

“ஹே கூல்! கூல்! என்ன பொறாமையா இருக்கா? நேத்துவரை நம்ம காலைச் சுத்திட்டு கிடந்தவன் இன்னைக்கு டாப்பு டக்கரா ஒரு பொண்ணை உஷார் பண்ணிட்டானேனு வயித்தெரிச்சலா இருக்கா? யாழினிக்கு நம்ம விசயம் எல்லாம் தெரியும். தெரிஞ்சும் என்னை உசுருக்குசுரா லவ் பண்றா என் தேவதை.” என்று காலரை தூக்கிவிட்டான்.

 

“என்ன லவ்வா? இதை தைரியமா தாத்தாக்கிட்ட சொல்லிரு பார்ப்போம். என்னை லவ் பண்ணதையே உன் அம்மாகிட்ட சொல்லி தான் தாத்தாக்கிட்ட பேச வச்ச. அதுக்கு தாத்தா ‘காதலா? அதுவும் நம்ம வீட்லயா? காமெடி பண்ணாம அந்தப்பக்கம் போ’னு சொல்லிட்டுப் போயிட்டாரு. இப்ப இவளை லவ் பண்றனு மட்டும் சொல்லிப்பாரு, கொலையே பண்ணிருவாரு” என்று தன் தாத்தாவின் குணம் தெரிந்தவளாய்‌ மிரட்டினாள்.

 

“இந்த மிரட்டல் உருட்டல்லாம் வேணாம் கண்ணு. நானும் என் யாழு தேவதையும் எப்ப கல்யாணம் பண்றதா முடிவு பண்றோமோ அப்ப கண்டிப்பா உன் தாத்தாக்கிட்ட பெர்மிசன்லாம் கேட்டுக்கிட்டு இருக்க மாட்டோம். ஓடிப்போய் கல்யாணம் பண்ணிப்போம். என்ன வாயைப் பொளக்கற?”

 

“ச்சீ! நீயும் அவளும் என்னவோ பண்ணிட்டு போங்க. ஆனா இங்க என் ரூமுக்கு எதுக்கு இவளை இப்ப கூட்டிட்டு வந்தன்னு மட்டும் சொல்லு”

 

“ஓ அதுவா? உன் பாட்டி தான் இவளை உன் ரூம்ல தங்க வைக்க சொன்னாங்க. அப்பறம் என் தேவதைக்குனு ஒரு பீரோ ஒதுக்கிக் கொடு. அவளுக்குனு நான் பார்த்து பார்த்து செலக்ட் பண்ணின ட்ரெஸெல்லாம் நாளையில இருந்து போட்டு என்னை மஜா பண்ணுவா” என்று யாழினியின் கன்னம் கிள்ளினான்.

 

தெய்வானைக்கோ கடுகடுவென்று இருந்தது. ஏனெனில் அவளுக்கு கணவனாகப்போகும் பத்ரி இதுவரை அவளுக்கெ‌ன்று பிரத்யேகமாக எதுவும் வாங்கிக் கொடுத்தது கிடையாதே.

 

அந்தக் கடுப்பில், “எனக்கு ட்ரெஸ் சேஞ்ச் பண்ணனும். தயவு செஞ்சு இங்கயிருந்து கிளம்புறியா?” என்றதும்,

 

“கிளம்பாம?” என்று சலித்தபடியே வெளியேறினான் சஷ்டி.

 

தெய்வானை அடுத்த கணம் யாழினியின் மேல் பாய்ந்தாள்.

 

“உண்மைய சொல்லு அவன் உனக்கு எவ்வளவு பணம் கொடுத்து இங்க கூட்டிட்டு வந்தான்?” என்றாள்.

 

அழகுப்பதுமை யாழினியோ பதறினாள்.

 

“பணமா? அய்யோ என்ன நீங்க இப்படியெல்லாம் பேசுறீங்க? பாசம்ங்க. நானும் அவரும் உண்மையாவே லவ் பண்றோம். சாமி சத்தியமா” என்றாள் கண்களை உருட்டி.

 

“நான் உங்களை நம்புறதா இல்ல. ஒருவேளை நீ உண்மையாவே அவனை லவ் பண்ணினா உன்னை விட ஒரு பெரிய முட்டாள் இந்த உலகத்துல இருக்கவே முடியாது. ஏன்னா அவன் ஒரு உதவாக்கரை.” என்றாள்.

 

“ஸ்டாப்பிட் தெய்வானை! உங்க தாத்தா சொல்றதையே கிளிப்பிள்ளை மாதிரி நீங்களும் சொல்லாதீங்க. சஷ்டி சொன்னாரு உங்க தாத்தா அவரை எப்படியெல்லாம் எமோஷனல் டேமேஜ் செய்வாருனு. நீங்க எஜூகேட்டட். நீங்களும் அதே தப்ப செய்யாதீங்க. இந்த உலகத்துல எல்லாரும் எல்லாத்தையும் பெர்பெக்ட்டா செய்யனும் அவசியம் இல்ல. அப்படி செய்யாதவங்களை வெறுக்க வேண்டிய கட்டாயமும் இல்ல. இம்பெர்பெக்ட் கூட சம்டைம்ஸ் அழகு தான். நல்ல வேலைப்பா நீ எதுவும் செய்யலைன்னு பைவ் ஸ்டார் ஆட் பார்த்ததில்ல? டோன்ட் ஜட்ஜ் ஹிம் வித் யுவர் சைன்டிஸ்ட் மூளை” என்று உணர்ச்சிவசப்பட்டு பேசினாள்.

 

“ஓ! நீ இந்தளவுக்கு பேசுவியா? நீ எவ்வளவு வக்காலத்து வாங்கினாலும் அவன் அதுக்கு வொர்த் இல்லம்மா. என் மாமா பத்ரி முன்னாடி அவன் ஒரு தூசு மாதிரி. வீணா அவனை நம்பி ஏமாறாத.” என்றவள் தொடர்ந்து ஒருமையிலேயே பேசவும், யாழினியும் ஒருமைக்குத் தாவினாள்.

 

“உனக்கு உன் மாமா பத்ரி பெரிய வீராதி வீரன், சூராதி சூரானா இருக்கலாம். பட் எனக்கு அந்த ஹீரோ மெட்டிரியல் எல்லாம் சஷ்டி தான். ஹீ இஸ் அ ரியல் ஜென்டில்மேன். சீக்கிரமே நீயும் அதை ஒத்துக்குவ. அவரை ஏன்டா ரிஜெக்ட் பண்ணினோம்னு ஃபீல் பண்ணுவ” என்றதும், அது பகல் கனவு எனும் பாவனையில் சிரித்த தெய்வானை அவளிடம் இனி பேசுவது வீண் என்று தனது பாட்டியிடம் புகார் தெரிவிக்கக் கிளம்பினாள்.

 

அப்படி வெளியே வந்தபோது பத்ரியும் சஷ்டியும் நேருக்கு நேர் மோதிக்கொள்ளும் காட்சி அவள் கண்களில் பட்டது. ஒரு அக்னிநட்சத்திரத்தை ஒதுங்கி நின்று கவனித்தாள்.

 

“நான் மதுரை மெயின் ரோட்டுல மாட்டிக்கிட்டது உனக்கெப்படி தெரியும் பத்ரி? சரியா எப்படி அங்க வண்டி அனுப்பின?” என்று சந்தேகமாய் கேட்டான் சஷ்டி.

 

“அதான் அப்பாவுக்கு உன்னைப் பத்தி நல்..லாத் தெரியுமே. நீ தெய்வானைய கூப்பிட போயிருக்கன்னு தெரிஞ்சதுமே என்னை ஒரு கண்ணு வச்சிக்க சொன்னாரு. கார் ஜிபிஎஸ்ஸ ட்ராக் பண்ணினதுல கார் தேர்ட்டி மினிட்ஸ் ஒரே இடத்துல இருக்கது தெரிஞ்சது. அதான் டிரைவர் கிட்ட என்ன பிரச்சனைனு கேட்டு அங்க பக்கத்துல ஒரு கேப் புக் பண்ணி அனுப்பினேன்.”

 

“ஷிட்! நெனச்சேன். இங்கப்பாரு பத்ரி, திரும்ப திரும்ப‌ என் விசயத்துல தலையிடுற வேலை வச்சிக்காத. வச்சிக்கிட்டா விளைவு ரொம்ப மோசமா இருக்கும்‌.”

 

“அதைவிட நீ இப்ப செஞ்சிருக்கதோட விளைவு எவ்வளவு மோசமா இருக்கும்னு யோசிச்சியா சஷ்டி?”

 

“நீ எதைப் பத்தி சொல்ற?”

 

“அந்தப் பொண்ணை பத்தி தான்”

 

“அவப்பேரு யாழினி. மைன்ட் இட்!”

 

“வாட்டெவர்? அவ நம்ம குடும்பத்துக்கு சரிபட்டு வர மாட்டா. விட்டிரு.”

 

“ஹே! உனக்கும் இந்த வீட்டு பெரிய மனுசனுக்கும் பிரச்சனை தான் என்ன? நான் என்ன பண்ணாலும் தப்பு. யாரு எனக்கு சப்போர்ட் பண்ணாலும் தப்பு. இங்கப் பாரு! யாரு என்ன சொன்னாலும் அவ தான் இந்த வீட்டு மருமக. யாராலயும் அதை தடுக்க முடியாது. ஓ! எனக்கு ஒரு அழகான பொண்டாட்டி கிடைக்கப்போறதை உன்னால தாங்கிக்க முடியல இல்ல? எல்லா நல்லதையும் நீங்களே குத்தகைக்கு எடுத்தா எப்படி சார்? எங்களுக்கும் கொஞ்சம் விட்டு வைங்க” என்று கிண்டலாக கூறிவிட்டு அங்கிருந்து அகன்றான் சஷ்டி.

 

சஷ்டி ஒரு பெரிய தவறை செய்கிறான் என்று பத்ரியின் உள்ளம்‌ கொதித்தது.

 

மறுபுறம் தெய்வானைக்கோ சஷ்டியின் உறுதி கொஞ்சம் வயிற்றை கலக்கத்தான் செய்தது. இவ்வளவு நாள் தன்னையே சுற்றி சுற்றி வந்தவன் வேறொருவளுக்காக ஆதரவாக பேசுவதை அவளால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. அனைவரும் தன்னையே தாங்க வேண்டுமென்ற சுயநலம் அவளிடம் அதிகமாகவே இருந்தது.

 

அந்தக் கோபத்தில் சென்றவள் தனது பாட்டியிடம் யாழினியை வேறொரு அறையில் தங்க வைக்கச் சொல்ல, சாவித்ரி மறுத்துவிட்டார். பின்னே! மகனாயினும் பத்ரியின் உத்தரவை மீற முடியுமா அவரால்?

 

பத்ரியைப் பொறுத்தவரை சஷ்டியும் யாழினியும்‌ அடிக்கடி தனியாக சந்திக்கும் வாய்ப்பை வழங்கக்கூடாது‌. அவ்வளவு தான்!

 

மறுநாள் காலை யாழினி சஷ்டிவேல் பாண்டியன் தனக்காக பார்த்து பார்த்து வாங்கிய ஐயாயிரம் ரூபாய் மதிப்புள்ள பேபி பிங்க் நிற சுடிதார் அணிந்து கீழே வர, அனைவரின் கண்ணும் அவள் மேல் தான் இருந்தது.

 

ரத்னவேல் பாண்டியனின் கடைசி மகள் பொன்னி‌, “யாழினி நீ இந்த சுடிதார்ல ரொம்ப அழகா இருக்கம்மா. எப்படி உன் முகம் மட்டும் ஒரு பரு கூட இல்லாம இவ்வளவு பளபளன்னு இருக்கு? அப்பறம் நீளமா, மிருதுவா, சைனிங்கா இருக்கற உன் முடி ரொம்ப தூள் போ. என் பொண்ணுங்களுக்கும் இதே மாதிரி முடி வளர ஏதாவது டிப்ஸ் சொல்லேன். என் பொண்ணுங்க காது, கவியைப் பாரேன். எப்படி உன் அழகுல மயங்கிப்போய் நிக்கிறாளுங்கன்னு” என்று தன் இரட்டையரை காண்பிக்கவும், யாழினி வெட்கப்புன்னகை சிந்தினாள்.‌ அது அவளை உலக அழகி விருதுக்கு ஏற்றவளாய் மாற்றியது.

 

முறையே காதம்பரி, கவிதாம்பரி எனும் இயற்பெயர் கொண்ட அந்த இரட்டையர் இருவரும் தங்கள் தாய் சொன்னபடியே யாழினியிடம் வந்து வர்ணிப்பில் ஈடுபட்டார்கள்.

 

“எப்படிக்கா அழகா ரெண்டு பக்கமும் ஒரே மாதிரி ஐலைனர் போட்டிருக்கீங்க? எங்களுக்கும் சொல்லித் தாங்களேன். நீங்க போட்டிருக்க லிப்ஸ்டிக் என்ன ஷேடு? இந்தக் கொப்புக்காது குத்தும் போது வலிக்கலையா உங்களுக்கு?” என்று காதம்பரி கேட்டாள் என்றால்,

 

கவிதாம்பரி, “ஹை! உங்க கழுத்து வரை நான் உயரமா இருக்கேன். நீங்க என்ன ப்ராண்ட் பெர்ப்யூம் போட்டிருக்கீங்க? ப்ரீ டைம் கண்டிப்பா எங்க ரூமுக்கு வாங்க. போன்ல நாம லூடோ கேம் விளையாடலாம்” என்று‌ கேட்டு, யாழினியின் கைகளை ஆளுக்கொருவராகப் பற்றிக்கொண்டு குதூகலித்தனர்.

 

அவர்கள் கேட்ட கேள்விகளுக்கெல்லாம் அடக்கமாய் பதிலளித்தாள் யாழினி.

 

சஷ்டியின் அன்னை பார்வதியோ யாழினி தன் மகன் அழைத்து வந்தப் பெண்ணென்பதால், “பொன்னி நீ சொன்னது சரி தாம்மா. யாழினி இந்த சுடிதார்ல ரொம்ப அழகா இருக்கா. என் புள்ள செலக்சன் என்னைக்குமே தப்பாகாது. நான் சுடிதாரை சொன்னேன். இந்த சுடிதார் அவன் எடுத்துக் கொடுத்தது தான். சில பேருக்கு தான் என் புள்ளையோட அருமை புரியறதே இல்ல. இன்னைக்கு வெளியப் போயிட்டு வந்ததும் ரெண்டுபேருக்கும் உப்பு மிளகா வச்சி சுத்திப்போடனும்.” என்று யாழினியின் முகத்தை வழித்து திருஷ்டி கழித்தபோது,

 

தெய்வானையும், அவளின் அன்னை ஜெயந்தியும் காதில் புகைவர அதைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். சஷ்டிவேல் பாண்டியனுக்கும் அது தானே தேவை!

தொடரும்…

அனைவருக்கும் மாட்டுப்பொங்கல் நல்வாழ்த்துகள் தங்கம்ஸ்:)

கதையைப் பற்றி ஓரிரு வார்த்தைகள் சொல்லிவிட்டுச் செல்ல மறந்து விடாதீர்கள் தங்கம்ஸ்.

 

 

❤️ Loading reactions...
முந்தைய பதிவு அடுத்த பதிவு
இந்த எழுத்தாளரின் மற்ற கதைகள்
வெந்து தணிந்த இதயம்
20,828 902 5
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page