வெந்து தணிந்த இதயம்-25
நான் உங்கள் AY_84
வெந்து தணிந்த இதயம்-25
எப்போதும் வீட்டினுள்ளேயே அடைந்து கிடப்பது மூச்சு முட்டுவது போல் இருக்க, அன்று தனியாக வயலுக்குச் சென்றாள் யாழினி.
வயலில் களை எடுத்துக் கொண்டிருந்த பெண்களிடம் வரப்பில் உட்கார்ந்தபடியே பேசிக்கொண்டிருந்தாள்.
அப்போது அவர்கள் ஊர்க்கதையை சொல்லிக் கொண்டிருக்க, யாழினி சலித்தவளாக, “உங்களுக்கு பாரிஜாதம் தெரியுமா?” என்று அசிரத்தையாகக் கேட்டாள்.
அவளுக்கு எதிரில் இருந்தவரோ ஆச்சரியமாகி, “ம், தெரியுமே. இங்கேயே பிறந்து வளர்ந்த பொண்ணை தெரியாம இருக்குமா? உனக்கு எப்படிம்மா அவளை தெரியும்?” என்றதும்,
சுதாரித்துக்கொண்டவள், “நான் பாரிஜாதப்பூ பத்தி இல்ல கேட்டேன்? ஆமா அது யாரு இங்க பிறந்து வளர்ந்த பாரிஜாதம்?” என்று ஒன்றும் தெரியாதவள் போல் அவரை மேலும் சொல்லத் தூண்டினாள்.
அவளின் வார்த்தை ஜாலம் வேலை செய்தது.
“அதுவா அது ஒரு சாதுவான பொண்ணும்மா. பாவம் அவ அம்மா, அப்பா, அண்ணன்னு எல்லாரும் அவளைக் கட்டிக்கொடுத்தக் கையோட பாம்பே போயிட்டாங்க. அவளும் கொஞ்ச நாள்ல புருசன் கூட வெளிநா…டு போயிட்டா. அதுக்கப்பறம் பாம்பே போனவங்களைப் பத்தி எந்த தகவலும் இல்லைனு வருசா வருசம் வெக்காளியம்மனுக்கு பொங்கல் வச்சி முறையிட்டுட்டு வர்றா. என்னைக்கு அவளுக்கு அந்த அம்மன் கண்ணை திறப்பாளோ தெரியல” என்று பெருமூச்சு விடவும், மனதில் பாரமேறியது யாழினிக்கு.
நைச்சியமாக பாரிஜாதம் எப்போது வெக்காளியம்மன் கோவிலுக்கு வருவார் என்று கேட்டுப்பார்த்தாள்.
அதற்கு அவர் சொன்ன விடை அவளை துள்ளி எழ வைத்தது.
ஆம், தற்போது வெக்காளியம்மன் கோவிலில் பாரிஜாதம் பொங்கல் வைத்துக் கொண்டிருப்பதாகத் தான் அவர் கூறினார்.
மேலும், பாரிஜாதம் வெளிநாட்டிலிருந்து தனது பேரன் பெயர்த்திகளோடு வந்திருப்பதாகச் சொல்ல, அவர்களைப் பார்க்கும் ஆர்வம் தொற்றியது யாழினிக்கு.
அதற்கு மேல் அவள் சற்றும் தாமதியாமல் அங்கிருந்து நேரே வெக்காளியம்மன் கோவில் நோக்கிச் சென்றாள்.
ஆனால், அடியாள் ஒருவன் உடனே அதனை ரத்னவேல் பாண்டியனுக்குச் சொல்ல, அவர் பத்ரிக்குச் சொல்லி இருவரும் காரில் அவளை பின் தொடர்ந்தனர்.
அது தெரியாத யாழினியோ கோவிலை சென்றடைந்ததும் பாரிஜாதம் யாரென கண்களை சுழலவிட்டு தேடினாள்.
அப்போது ஊர்க்கார பெண்மணி ஒருவர், “பாரிஜாதம் நல்லாயிருக்கியா? பாத்து எம்புட்டு நாளாகுது? உன் அப்பன், ஆத்தா, அண்ணே எல்லாரும் வடநாட்டுப்பக்கம் போனாங்களே அவங்களை பத்தி ஏதாவது தகவல் தெரிஞ்சதா?” என்றதும்,
“எங்க? எதுவும் தெரியலைக்கா. கடைசியா என் அண்ணிக்கு வளைகாப்பு பண்ண இருக்கறதா மட்டும் என் அண்ணன்கிட்டயிருந்து கடிதாசி வந்தது. அதுக்கப்பறம் ஒரு தகவலும் இல்ல. கடிதாசி வந்த ஊரும் ஒரு பெரிய டவுனுனால யாருக்கிட்ட என்ன விசாரிக்கறது தெரியல. போலீஸ்ல கம்ப்ளைன்ட் கொடுத்ததும் அப்படியே இருக்கு” என்றதும்,
“கலங்காத ஆத்தா. நம்ம வெக்காளியம்மன் சீக்கிரமே உனக்கு ஒரு வழியைச் சொல்லுவா” என்று ஆறுதலாக சொல்லிவிட்டுச் சென்றார் அப்பெண்.
பாரிஜாதம் யாரென கண்டுகொண்ட யாழினியின் உதடுகள், “அத்தை” என்று முனுமுனுத்தன.
அவள் ஓடிப்போய் அவரின் கையை தொட முயல, அவளுக்கு பின்னால் நின்று, “யாழினி” என்று அவளை உரக்க அழைத்தான் பத்ரி.
அவன் உக்கிரமாக நின்றிருப்பதைக் கண்டதும் அவள் பிடிபட்டவள் போல் விழிக்க, அவனுக்கு பின்னால் நின்ற ரத்னவேல் பாண்டியன், “இவ நமக்கு அவப்பெயரை உண்டாக்கனும்னே கங்கணம் கட்டிட்டு இருக்கா போல பத்ரி. இப்ப நம்மளையும் இவளால உள்ள வர வச்சிட்டா. இன்னும் என்ன என்ன பிரச்சனையெல்லாம் உண்டாகப்போகுதோ?” என்று கோபத்தில் வெடித்தார்.
அவர் ஏற்றிவிட்டதும் பத்ரி இன்னும் ருத்ரமூர்த்தியானான்.
“சொல்லு எதுக்காக நீ இங்க வந்த? யாரைப் பார்க்க உனக்கு அவ்வளவு அவசரம்?” என்று சுற்றி நிற்பவர்களை எல்லாம் அவனின் கண்கள் ஆராய, அனைவரும் ஒருவருக்கொருவர் காது கடித்துக் கொண்டனர்.
யாழினி பெரிய வீட்டு மருமகள் என்று தெரிந்ததும் பாரிஜாதம் அவளை பயத்துடன் பார்த்தார்.
அம்மனுக்கு சாற்ற பைக்கில் பெரிய செவ்வந்திப்பூ மாலைகளை வாங்கிக்கொண்டு வந்த இருவர் பத்ரியும், ரத்னவேல் பாண்டியனும் தங்களது கோவிலுக்குள் நிற்பது கண்டு, “என்னங்கய்யா உங்க சாமி நல்லது செய்றதை நிறுத்திருச்சா? இங்க வந்திருக்கீங்க? நீங்க உள்ள நிற்கறதனால எங்க அம்மனுக்கு தீட்டானாலும் ஆகலாம். வெளியப்போங்க எல்லாரும்” என்று நெஞ்சை உயர்த்தி மிரட்டினர்.
அவர்களுடன் இன்னும் நான்கு ஆண்கள் சேர்ந்துகொண்டு, “உங்க கோவிலுக்கு நாங்க வரக்கூடாதுனு சொல்லி மொத எங்களை கழுத்தைப் பிடிச்சி வெளிய தள்ளினது நீங்க தான். இப்ப நீங்களே உங்க கட்டுப்பாடுகளை மீறி எங்க கோவிலுக்குள்ள வந்தா என்னங்கய்யா அர்த்தம்? நாங்களும் உங்க கோவிலுக்குள்ள வரலாம்னா?” என்றதும்,
ரத்னவேல் பாண்டியன் முறுக்கிக்கொண்டு, “பத்ரி உன் பொண்டாட்டியை வண்டியில போய் ஏறச்சொல்லு!” என்று கணீர்குரலில் ஆணையிட்டார்.
அவன் மறுகணமே அவளின் கையைப் பிடித்து இழுத்துச் செல்ல முயல, அதை வேகமாக உதறியவள் தலையை உலுக்கினாள்.
கண்களை கோபமாக உருட்டியவள் நாக்கைக் கடித்துக்கொண்டு, இரண்டு கைகளையும் மேலே தூக்கி இணைத்துக் கட்டிக்கொண்டு, “ஊஊஊஊ” என்று ஒலியெழுப்பியபடியே கால்களை தூக்கி தூக்கி சாமியாடினாள்.
அவளுள் வெக்காளியம்மன் இறங்கிவிட்டாள் என்று அங்கு நின்றிருந்த பெண்கள் ஓடிவந்து அவளை கட்டுப்படுத்த முயல, யாழினி திமிறினாள்.
“என் கோவிலுக்கு என்னை வரக்கூடாதுனு சொல்றவன் எவன்டா? நான் வரக்கூடாதா? நான் வரக்கூடாதா? சொல்லுடா? சொல்லுடா?” என்று ரத்னவேல் பாண்டியன் முதற்கொண்டு அங்கிருந்த அனைத்து ஆண்மகன்களையும் ‘டா’ விகுதிப் போட்டு அழைத்தாள்.
அனைவரும் திகைத்து நின்றபோது வயதான பெண்மணி ஒருவர் அவள் நெற்றியில் குங்குமத்தைப் பூச, கொஞ்சம் கொஞ்சமாக அவளின் ஆட்டம் அடங்கியது.
ஆனாலும் கால்கள் ஓயவில்லை. சுற்றி சுற்றி வந்தபடியே இருந்தாள். அப்போது பயபக்தியுடன் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்த பாரிஜாதத்தை அருகில் அழைத்தவள், அவர் கும்பிட்டபடி தன்னை பார்க்கவும், அவரின் கைகளைப் பற்றிக்கொண்டாள்.
அவருக்கோ வினோதமான ஒரு உணர்வு. யாழினியின் கண்களிலோ லேசாக கண்ணீர் தேங்கி நின்றது.
சுற்றி நிற்பவர்களை கருத்தில் கொண்டு தலையை உதறியவள், “உன் அண்ணன் இந்த உலகத்துல இல்ல ஊஊஊஉ… அவரை ஊஊஊஊ… அவனை நினைச்சு வருத்தப்படுறதை நிப்பாட்டு.” என்றதும்,
“அம்மா தாயே நீ என்ன சொல்ற? என் அண்ணனுக்கு ஏன் இந்த நிலைமை? அவர் யாருக்கும் எந்தக் கெடுதலும் நினைக்காதவர் ஆச்சே?” என்று பரிஜாதம் கதறித் துடிக்க, தனது கண்ணீரை அடக்க இன்னும் சிரமப்பட்டாள் யாழினி.
“உன் அண்ணியும், அண்ணன் பொண்ணும் இருக்க வேண்டிய இடத்துல பத்திரமா இருக்காங்க. நீ உன் வாழ்க்கையைப் பாரு. உன் குடும்பத்துக்கு உன் நலம் ரொம்ப முக்கியம். நீ வேற எதை நினைச்சும் சஞ்சலப்படாத” என்றதும், கைகளைக் கூப்பி நின்றவர் குனிந்து கண்ணீர் விட்டபடியே தலையை சம்மதமாய் ஆட்டினார்.
பத்ரியும் ரத்னவேல் பாண்டியனும் அவளின் அம்மன் அவதாரத்தில் திக் பிரம்மை பிடித்து நின்றிருந்தனர்.
அவர்களருகில் சென்றவள், “என்னடா என்னை நீங்க கும்பிட மாட்டீங்களா?” என்று குரலை உயர்த்த,
ரத்னவேல் பாண்டியனின் அடியாட்களோ, “அய்யா இது சக்தி வாய்ந்த அம்மன். அது கால்ல விழுந்துருங்க” என்று அரண்டவாக்கில் சொன்னனர்.
அவரோ மிகக்கர்வமாக முடியாதென்று மறுத்தார்.
“கும்பிட மாட்டியா? உன் புள்ளைய தேர்தல்ல ஜெயிக்க வச்சா கும்பிடுவியா?” என்று உறுமியதும், ரத்னவேல் பாண்டியனுக்கு கண்கள் விரிந்தன.
“எனக்கு பொங்கல் வச்சு படையல் போடு. உன் புள்ளைய தேர்தல்ல ஜெயிக்க வைக்கிறேன்” என்று உடலை முறுக்கி ஓரிடத்திலும் நிற்காமல் சுற்றி வந்துகொண்டே அவள் சொல்ல, ரத்னவேல் பாண்டியன் நெடுஞ்சாண்கிடையாக தரையில் விழுந்தார்.
பத்ரி யாழினியை ஆராய்ச்சிப் பார்வை பார்த்து கொண்டிருப்பதை தடுத்து, “பத்ரி நீயும் விழு. நீயும் விழு” என்றார்.
அவனும் வேறு வழியின்றி தரையில் விழ, தனது சிரிப்பை அடக்க வழி தெரியாமல் தவித்தாள் யாழினி.
விழுந்து கும்பிட்டு எழுந்தவர்கள் அவள் குங்குமம் பூசுவதற்காக கையைக்கூப்பி குனிந்து நிற்க, குங்குமம் பூசிவிட்ட யாழினிக்கோ அவர்கள் இருவர் முகத்திலும் கரியைப் பூசுவது போன்ற உணர்வு.
அவர்கள் தன் காலில் விழுந்ததை நினைத்து சிரிப்பை அடக்கமாட்டாமல் சுற்றி சுற்றி வந்தவள் ஒரு கட்டத்தில் பத்ரியின் மேல் மயங்கி சரிந்தாள்.
மனைவியை மடி தாங்கியவன் சுற்றியுள்ளவர்கள் தந்த தண்ணீரை அவள் முகத்திலடித்து எழுப்ப, விழித்துப் பார்த்தவளோ திருதிருத்தாள்.
“நான் எங்கயிருக்கேன்? ஆமா நான் எப்படி இங்க வந்தேன்? எனக்கு என்ன ஆச்சி காலெல்லாம் வலிக்குது?” என்றதும் அவளை தனது இருகைகளிலும் தூக்கிக்கொண்டு வண்டிக்கு கொண்டு சென்றான் பத்ரி.
அவன் கழுத்தில் கைகளைக் கோர்த்துக்கொண்டு மார்பில் முகம் புதைத்தவளுக்கோ அப்படியொரு நிறைவு.
பத்ரியை வம்பிழுக்கும் விதமாய், “உங்க மீசையிலயும் உங்க அப்பா மீசையிலயும் என்னங்க மண்ணு?” என்று அப்பாவியாய் கேட்டாள்.
“ம்? வாயை மூடிட்டு வாடி” என்றவன் எரிந்து விழுந்தது இன்னும் அவளுக்கு குதூகலமாக இருந்தது.
கார் அக்கோவிலைவிட்டு நகரும்போதோ, ‘போயிட்டு வர்றேன் அத்தை’ என்று மனதிற்குள் சொன்னதோடு பயபக்தியுடன் அந்த உஷ்ணகாளியான வெக்காளியம்மனை வணங்கினாள்.
காரில் செல்லும் போது ரத்னவேல் பாண்டியன் பத்ரியிடம், “நாளான்னைக்கு அந்த வெக்காளியம்மன் கோவிலுக்கு குடும்பத்தோட போய் நாம பொங்கல் போட்றலாம் பத்ரி. எல்லாரும் அந்த அம்மனுக்கு குறை வைக்கக்கூடாதுனு சொல்றானுக. நாளைப்பின்ன ஏதாவது கெடுதலா நடந்த பின்னாடி இதுனால தானோனு நாம வருத்தப்படக் கூடாதுல்ல? அந்தக் கோவில் நிர்வாகிக்கிட்ட பேசி ஒருநாள் மட்டும் அனுமதி வாங்குவோம்.” என்றதும்,
தந்தை சொல் தட்டாத மைந்தனாக, “சரிங்கப்பா” என்றான் பத்ரி.
மறுநாள் விடியல் காதம்பரியையும் கவிதாம்பரியையும் கதாநாயகிகளாக்கியது. அன்று அவர்களின் பிறந்தநாள் என்று வீட்டில் விருந்தெல்லாம் அமர்க்களப்பட்டது.
காலையில் புத்தாடை அணிந்து தனது தாத்தா காலில் விழுந்து வணங்கியவர்கள் தனது அன்னையோடு கோவிலுக்கும் சென்று வந்தார்கள்.
காதம்பரி அன்று ஒரு நூறு பேருக்காவது அன்னதானம் செய்ய வேண்டும் என்று சொல்ல, “அதெல்லாம் வேணாம். முன்னாடியே ஏற்பாடு செஞ்சிருக்கனும்” என்று மறுத்தார் பொன்னி.
அவளின் விருப்பத்தை கேள்விப்பட்டு யாழினி அன்று தானே சமையலறையில் ஒரு ஐம்பது பேருக்கு தனியாக சமையல் செய்தாள்.
சிக்கன் பிரியாணி, முட்டை, தயிர் வெங்காயம், இனிப்பிற்காக கொஞ்சம் கேசரி என்று வைத்து அழகாக பொட்டலம் கட்டினாள்.
கூடவே காதுவையும், கவியையும் தன்னுடன் காரில் அழைத்துக்கொண்டு வயலில் உள்ளவர்களுக்கு கொடுக்க, அவர்கள் கைக்கூப்பி வாங்கிக் கொண்டனர்.
மனம் நிறைவாக உணர்ந்த காதும், கவியும் யாழினியை கட்டிப்பிடித்து முத்தம் கொடுக்க, அதனை அவ்வழியே காரில் வந்த பத்ரி பொறாமையுடன் பார்த்தான்.
தேர்தல் சமயத்தில் யாழினி இவ்வாறெல்லாம் செய்வது தனக்கு சாதகமாகத்தான் அமையுமென்பதால் வாளாவிருந்தான்.
காதும் கவியும் மகிழ்ச்சியுடனே வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்த போது யாழினி மெதுவாக தூண்டில் ஒன்றை வீசினாள்.
“உங்க ரெண்டுபேருக்கும் இன்னும் பிறந்தநாள் பரிசா ஏதாவது செய்யனும்னு என் கை பரபரங்குது. ஆனா கொடுக்கத்தான் எதுவும் இல்ல. அந்த பரம்பரை நகைங்க இருந்திருந்தாலாவது ஏதாவது பார்த்து கொடுத்திருப்பேன். நீங்களும் இந்தக் குடும்ப வாரிசு தானே?” என்றதும், வியர்த்து விறுவிறுத்தாள் காதம்பரி.
கவிதாம்பரி, “அதெல்லாம் எதுக்கு யாழினிக்கா? எங்களுக்கு உங்க அன்பு ஒன்னே போதும்” என்று பெரிய மனதுடன் மறுக்க, காது குற்றவுணர்வில் இருப்பவள் போல் மௌனித்தாள்.
யாழினி அதையும் மனதில் குறித்துக்கொண்டு தான் வந்தாள்.
வீட்டிற்கு வந்ததும் பத்ரி அவர்களுக்காக பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட ஃப்ரோசன் கார்ட்டூனில் வரும் அன்னா மற்றும் எலிசாவின் உருவம் வரையப்பட்ட கேக்கை கொண்டு வந்து காட்டினான்.
இரவு சந்திரன் சாப்பிட்ட புரோட்டாக்களின் எண்ணிக்கையை வானில் நட்சத்திரப்புள்ளிகளை கொண்டு மேகக்கடைக்காரர் கணக்கிட்டு கொண்டிருந்தபோது அந்த கேக்கை ஒரே கணத்தில் துண்டுபோட்டனர் இரட்டையர்.
இருவரும் வேறு வேறு நிறத்தில் ஒரே மாதிரியானா டிசைனில் ஷராரா அணிந்திருந்தனர். கவி அவளின் அப்பாவை போல் என்றால், காது அப்படியே அவளின் அம்மாவைப் போல். இருவருக்கும் நீள முடியை அழகாக பின்னி ஃப்ரென்ச் ப்ளைட் போட்டு விட்டது யாழினி. அவர்களுக்கு ஒப்பனை எல்லாம் தெய்வானை.
கொண்டாட்டத்தின் போது இருவரும் தனக்கு கேக் துண்டத்தை ஊட்ட யாழினி குமட்டிக்கொண்டு வாஷ்பேசனிற்கு ஓடினாள்.
உடன் ஓடிச்சென்று அவளின் தலையை தாங்கிய தெய்வானை அவளிடம் விசயத்தை கேட்க, அவளின் காதில் அந்த சந்தோசமான செய்தியைச் சொன்னாள் யாழினி. அவள் ஓடிவந்து புன்னகையோடு அதை அனைவரிடமும் தெரிவித்தாள்.
சாவித்ரி யாழினி மேல் தனக்கிருந்த பிணக்கெல்லாம் சுத்தமாக மறந்து அவளை உப்பு மிளகாய் கொண்டு வந்து திருஷ்டி கழிக்க, ரத்னவேல் பாண்டியன் மேம்போக்காக அவளின் தலையில் கை வைத்து ஆசீர்வதித்தார்.
“இந்த குடும்பத்துக்கு ஒரு ஆண்வாரிசை ரெடி பண்ணிட்டியா பத்ரி?” என்று பெருமைப்பட்டார்.
பத்ரி ஒரு கலவையான உணர்வில் இருந்தான். ஆனாலும், அவள் மூலம் தன் ஆண்மையை நிரூபித்த கர்வத்தில் மீசையை முறுக்கிக் கொண்டான். அது யாழினியின் கண்ணில் படத்தான் செய்தது.
மறுபக்கம் ஜெயந்திக்கும் பார்வதிக்கும் பொசுபொசுவென்று இருந்தது.
சாவித்ரியோ பொன்னியுடன் இணைந்து வீட்டுப் பணியாட்கள் அனைவருக்கும் கேக் கொடுத்து அந்த சுபசெய்தியை கொண்டாடினார்.
யாழினி ஒரு பக்கம் தன் அன்னை இந்த சுப செய்தியை அறிந்தால் எவ்வளவு சந்தோசப்படுவார் என்று எண்ணிய மறுகணமே அவர் அதை உணரும் நிலையில் இல்லாததை நினைத்து வருந்தினாள்.
சஷ்டியும் தெய்வானையும் தங்களுக்கும் இது போன்றதொரு தருணம் அமையுமா? என்று ஏக்கத்துடன் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
தொடரும்…
டாப் 5 வாசகர்களுக்கு தலா ரூ.500 பரிசு.
குறைந்த பட்சம் 300 வார்த்தைகளில் கருத்துப்பதிவு அவசியம்.
அப்பறம் எப்பவும் சொல்றது தான் தங்கோம்ஸ்;)
