வெந்து தணிந்த இதயம்-29

நான் உங்கள் AY_84

 

வெந்து தணிந்த இதயம்-29

 

*

அன்று தன் காதல் மனைவிக்கு வளைகாப்பு செய்ய தன் அன்னை தந்தையிடம் என்னென்ன வாங்க வேண்டும் என்று கேட்டு நெடும்பட்டியல் ஒன்றை தயார் செய்து கொண்டிருந்தான் குணசீலன்.

 

வசந்தியின் மாமனாரும் மாமியாரும் அவ்வூரில் உள்ள அனைவரும் தங்களிடம் அன்பாக பழகி வந்ததால், அவர்கள் அனைவரையும் வளைகாப்பிற்கு அழைக்க வேண்டும் என்று சொல்லிக் கொண்டிருந்தனர்.

 

வயிற்றை தள்ளிக்கொண்டு நின்ற வசந்தி தனது கணவனுடன் தனித்திருக்கும்போது, “அதெல்லாம் வேணாங்க. நாமளே ஒவ்வொரு விசயத்துக்கும் பார்த்து பார்த்து செலவளிச்சிட்டிருக்கோம். உங்களுக்கும் நிலையான வருமானம் கிடையாது. இப்போதைக்கு இங்க இருக்கற ஸ்கூல்ல வாத்தியாரம்மா மெடர்னிடி லீவ்ல போயிருக்காங்கனு தான் டெம்ப்வரியா உங்களை போட்டிருக்காங்க. வர்ற வருமானத்தை நாளைக்கு தேவைக்கு எடுத்து வைப்பீங்களா? அதை விட்டுட்டு வளைகாப்பு அது இதுன்னு” என்று முகத்தை தாங்கலாய் வைத்திருந்தாள்.

 

“அடியே! என் செல்லப் பொண்டாட்டி, இந்த வளைகாப்பு உனக்கு மட்டும் இல்ல. என் லட்டு குழந்தைக்கும் தான். நாளைக்கு அது வெளிய வந்து அப்பா எனக்கு என்ன செஞ்சாருனு கேட்டுறக்கூடாதில்ல? நீ இதெல்லாம் அதுக்கிட்ட பெருமையா சொல்லனும். அதனால எதுவும் பேசாம வேடிக்கை மட்டும் பாரு” என்று உத்தரவு போட்டான் குணசீலன்.

 

என்னதான் அவன் குழந்தைக்கு என்று சமாதானம் சொன்னாலும் அவன் மனம் இது அவளுக்காகத் தான் என்று அடித்துக் கூறியது. 

 

சமீபகாலமாகவே தனது அன்னையின் அருகாமைக்காக மிகவும் ஏங்கினாள் வசந்தி. குணசீலன் தன்னால் அவளின் அந்த விருப்பத்தை நிறைவேற்ற இயலாது என்றாலும் ஊரையே அழைத்து அவளுக்கு வளைகாப்பு செய்து அதன்மூலம் அவளை ஆசிர்வதிக்கப்பட்டவாய் உணர வைக்க நினைத்தான்.

 

அதற்காக ஜோராக அவன் வளைகாப்பிற்கு தேவையான பொருட்களையெல்லாம் வாங்கிக்கொண்டு வந்தபோது, அந்த ஊரின் பஞ்சாயத்து கூடும் ஆலமரத்தடியில் கூட்டம் கூடியிருப்பதைக் கண்டு, தனது சைக்கிளை ஓரமாக நிறுத்திவிட்டு கூட்டத்திற்குள் சென்று பார்த்தான்.

 

அங்கு ஒரு இளம்பெண்ணையும் ஆணையும் ஒரு கும்பல் கைக்கால்களை கட்டிப்போட்டு அடித்து உதைத்துக் கொண்டிருந்தனர். 

 

அதைப் பார்த்ததும் அக்கம் பக்கத்தில் நின்றிருந்தவர்களிடம் குணசீலன் தனக்கு தெரிந்த அரைகுறை ஹிந்தியில் விசயம் என்னவென்று விசாரிக்க, அவர்கள் அந்தப்பெண்ணும் ஆணும் வேறு வேறு ஜாதியை சேர்ந்தவர்கள் என்றும், அவர்கள் ஊர்க்கட்டுப்பாட்டை மீறி திருமணம் புரிந்ததற்கு அந்தப் பெண்ணின் பெற்றோர் அவர்களை தேடி இழுத்து வந்து தண்டனை கொடுப்பதாகவும் தெரிவித்தனர்.

 

இதென்ன கொடுமையென்று குணசீலன் அந்த அநியாயத்தைக் தட்டிக் கேட்க முன் வந்தபோது அவனையும், “நீ யாரடா கேள்வி கேட்க பஞ்சம் பிழைக்க வந்த பரதேசி!” என்று அவனையும் உள்ளே இழுத்துப்போட்டு அடித்தனர்.

 

அந்த ஜோடிகளோடு குணசீலன் குற்றுயிரும் கொலையுயிருமாய் கிடக்க, அந்தப் பெண்ணின் அண்ணன்காரன்கள் இரண்டு பேர் விஷத்தை கொண்டு வந்து அவளை குடிக்கச் சொல்லி வற்புறுத்தினர். 

 

அவள் முடியாதென்று வாயை மூடிக்கொண்ட போது அவள் திமிற திமிற மூக்கிலும், காதிலும் விஷத்தை ஊற்றி அவளை மூர்ச்சையடைய வைத்தனர்.

 

மறுபக்கம் அவளின் காதலனையோ அடி உதையிலேயே மறித்துப்போகச் செய்திருந்தனர். 

 

இவை அனைத்தையும் அங்கிருந்த கூட்டம் வேடிக்கைப் பார்த்ததே ஒழிய, ஒருவருக்கு கூட மனிதாபிமானமோ குற்றவுணர்வோ இருக்கவில்லை. அந்தளவிற்கு அவர்களுக்குள் ஜாதிவெறியும், காதலுக்கு எதிரான வெறுப்பும் இழையோடிப் போயிருந்தது.

 

அந்த கோரசம்பவங்களின் உச்சமாக அவர்கள் அந்தப்பெண்ணின் சடலத்தையும், அவள் காதலனின் சடலத்தையும் ஒன்றாக தூக்கிப்போட்டு பெட்ரோல் ஊற்றி எரிக்கப் பார்க்க, அதை தடுக்க அவர்களின் கால்களை பற்றியது குணசீலனின் கரங்கள் மட்டும் தான்.

 

ஆனால், அந்தக் கொடியவர்கள் அவனையும் அரிவாளால் வெட்டி, மூன்றுபேரையும் ஒன்றாகப்போட்டு தீ மூட்டினர்.

 

கொழுந்துவிட்டு எரிந்த அந்த சிதையைக் கண்டபடியே கூட்டம் கொஞ்சம் கொஞ்சமாக கரைந்து போனது.

 

அந்தக் கொடும்பாவத்தை செய்த பாவிகளுக்கு தங்களின் ஊர்க்காரர்கள் மேல் நூறு சதவீதம் நம்பிக்கை இருந்தது. அவர்கள் யாரும் இச்சம்பவத்தை பற்றி வெளியில் மூச்சுக்கூட விடமாட்டார்கள் என்று. 

 

ஆனால், குணசீலனின் குடும்பமும், அந்த ஊரிற்கு நாடகம் போட வந்த அந்த கோஷ்டியும்…?

 

இந்த சந்தேகம் எழுந்தவுடனேயே நாடகக்குழுவினரை அழைத்து மிரட்டினர். அவர்களோ உயிரிற்கு பயந்து வெளியில் சொல்லமாட்டோம் என்று தங்கள் தொழிலின் மீது சத்தியம் செய்தனர்.

 

அவர்களை அங்கிருந்து இரவோடு இரவாக கிளம்ப உத்தரவிட்டவர்கள் கொலைவெறியோடு குணசீலனின் வீட்டிற்கு சென்றனர். 

 

உள்ளே, “இன்னும் குணசீலனை காணோமேங்க?” என்று குணசீலனின் தாய் பேசிக்கொண்டிருப்பதை கண்டு, சத்தம் செய்யாமல் அந்த வீட்டின் கதவை தாழ்போட்டு பெட்ரோல் ஊற்றி கொழுத்தி விட்டனர்.

 

அதில் விளைந்த தீஞ்சுவாலைகள் தனது நாக்குகளை வானத்திற்கு நீட்டிக்கொண்டிருந்தன. 

 

அவ்வழியே வந்த மூன்று குதிரை வண்டிகளிலும் நிரம்பியிருந்த நாடகக்குழுவினர் அந்த கொலைகாரப் பாவிகளை பயத்துடன் பார்த்தபடியே கடக்க, “இந்த விசயம் வெளிய கசிஞ்சா உங்களுக்கும் இதே நிலைமை தான்” என்று அரக்கர்களாய் கர்ஜித்தனர்.

 

குதிரை வண்டிக்குள் இருந்தவர்கள் தங்களுக்குள் கிலியில் கிசுகிசுத்தபடியே வந்தபோது வழியில் ஒரு கர்ப்பிணி பெண் மயங்கிக் கிடப்பதைப் பார்த்து வண்டிகளை நிறுத்தினர்.

 

வண்டியிலிருந்து முதலில் குதித்திறங்கிய சுலேக்கா, மயங்கிக் கிடந்த வசந்தியை நெருங்கி அவள் முகத்தில் தண்ணீரை தெளிக்க, அவள் தனது வீடு இருக்கும் திசையைக்‌ காட்டி பேச முடியாமல் விம்மினாள்.

 

பின், ஒருவாறு எச்சிலைக் கூட்டி விழுங்கி ஒரு கும்பல் தனது அத்தை மாமாவை வீட்டுக்குள் பூட்டி வைத்து உயிருடன் எரிப்பதை கண்ணால் கண்டதாகக் கூறினாள். 

 

அவர்கள் கையில் சிக்கினால் தன்னையும் ஏதாவது செய்து விடுவார்களோ என்று பயத்தில் தான் ஓடி வந்ததாகவும், வழியில் படபடப்பில் மயக்கம் போட்டு விழுந்து விட்டதாகவும் கூறினாள்.

 

அவளின் நிலையைப் புரிந்தவர்களோ பஞ்சாயத்துக்கூடத்தில் நடந்த ரகளைகளையும் அவளின் கணவனுக்கு ஆன கதியையும் ‌கூற, அழுதுக் கதறினாள் வசந்தி. 

 

அவளின் நிலையைப் பார்க்கும் போது அனைவருக்குமே மனம் கனத்தது. 

 

முதல் ஆளாக சுலேக்கா, வசந்தியை நம்முடனே அழைத்துச் செல்லலாம் என்று சொல்ல, யாரும் அதற்கு மறுப்பு தெரிவிக்கவில்லை. வண்டியில் ஏறியதும் சுலேக்காவின் மடியில் படுத்து அழுதுக்கொண்டே வந்தாள் வசந்தி. 

 

ஒரே நாளில் அவள் வாழ்க்கையில் தான் எத்துனை இழப்புகள்!

 

*

 

அன்றைய கொடிய நாளை நினைவு கூர்ந்த சுலேக்காவிற்கு அச்சம்பவங்கள் எல்லாம் ஒன்று விடாமல் இன்னும் தனக்கு‌ நினைவில் இருப்பது கண்டு அதிர்ச்சியாக இருந்தது. 

 

இறந்துபோன பையனின் குடும்பத்தினரால் என்னதான் அந்தக் கொடியவர்களுக்கு தண்டனை கிடைத்து விட்டாலும் அவற்றை ஒவ்வொன்றாய் சொல்லும்போது அவர் உடல் நடுங்கிய நடுக்கம், அவர் செத்தாலும் அவரால் அவற்றையெல்லாம் மறக்க முடியாது என்பதை சொல்லாமல் சொன்னது.

 

அவர் கூறியதை கேட்டு யாழினி விக்கித்து நின்றிருக்க, சுலேக்கா அவள் தோள்களைப் பற்றினார்.

 

“சின்ன வயசுல நீ அடிக்கடி எனக்கு கதை சொல்லு கதை சொல்லுனு அடம்பிடிப்ப யாழினி. நான் இந்தக் கதையை தான் உனக்கு சொல்லுவேன். ஒரு கட்டத்துல நீ எங்க நெருப்புப் பத்தினாலும் இந்தக் கதையோட தாக்கத்துல அலறி துடிச்ச. ஓடிப்போய் ஒளிஞ்ச. அதுலயிருந்து தான் நான்‌ உனக்கு கதை சொல்றதையே நிறுத்திட்டேன். ஆனா… ஆனா.. நீ அந்த‌ கதைகளத்துலயே விரும்பி வாழ்ந்துட்டு இருக்க யாழி‌னி. வேண்டாம், வேண்டாம், இனியும் நாம இங்கயிருக்க வேண்டாம். வா யாழினி. இப்பவே நாம இங்கயிருந்து போகலாம். இந்த ஊர்க்காரங்களும் உன்‌ அப்பாவை கொன்னவங்களுக்கு சளைச்சவங்க கிடையாது” என்றதும், யாழினி இல்லையென்று தலையசைத்தாள்.

 

அவருக்கு அது எரிச்சலைத் தந்தது.

 

“அதான்‌ உன் அப்பா சாவுக்கு உன் தாத்தா காரணமில்லைனு‌ தெரிஞ்சிருச்சே. இன்னமும் ஏன்‌ வரமாட்டேனு அடம்பிடிக்கற?” என்று கத்தியதும்,

 

“இல்ல கிழவி. என் மாமாவை நான் உயிருக்குயிரா விரும்பறேன். அவரை விட்டு என்னால எங்கேயும் வரமுடியாது” என்று பிடிவாதம் செய்தாள்.

 

“உன் காதல் உன்னை காப்பாத்தும்னு நம்புறியா யாழினி? உனக்கு பைத்தியம் தான் பிடிச்சிருக்கு. தயவுசெஞ்சு என் கூட வாம்மா” என்று அழைக்க, திடமாக மறுத்தாள்.

 

கெஞ்சி கெஞ்சி‌ களைத்துப் போனவர், “நான் இதுக்கு மேலயும் இங்க இருக்க விரும்பல யாழினி. அந்த ரத்னவேல் பாண்டியனும் விரும்ப மாட்டாரு. அதனால நான் இன்னைக்கே ஊருக்கு கிளம்பறேன். டெல்லிக்குப்போய் உன் அம்மாவை பக்கத்துல இருந்து பார்த்துக்கறேன். ஆனா உன்னை மனசே இல்லாமத் தான்டி இங்க விட்டுட்டுப்போறேன்.” என்றவர் கிளம்ப, கனத்த மனதுடன் அவரை வழியனுப்பி வைத்தாள் யாழினி. 

 

மறுபுறம் தோட்டத்துவீட்டில் அப்படியொன்று அங்கு இருந்ததற்கான‌ அடையாளமே தெரியாமல் சாம்பல் மட்டுமே இருப்பதைக் கண்டு பத்ரி‌ மௌனமாக வீட்டிற்கு திரும்பினான். 

 

அவனுக்கு அந்தப் பெண்ணும் பையனும் அவனிடம், “ப்ளீஸ்ணே! எங்களை விட்டுருங்கண்ணே. நாங்க எங்கேயாவது போய் பொழைச்சிக்கறோம்” என்று கெஞ்சியது நினைவுக்கு வந்தது.

 

அவன் நடந்ததை நினைத்தபடியே தன்னறைக்குள் வந்ததும் யாழினி அவனை பிடித்துக்கொண்டாள்.

 

“போதுமா? இப்ப உங்களுக்கு திருப்தியா? உங்க ஊர்க்காரங்க லட்சணத்தைப்‌ பத்தி தெரிஞ்சிக்கிட்டீங்களா? இதுக்கெல்லாம் விதை போட்டு வளர்த்து விட்டது யாரு? உங்க அப்பா. அவர் விதைச்ச கன்னி வெடிங்க தான் நேரம் காலம் பார்க்காம வெடிக்குது. இப்ப அநியாயமா ஒரு உயிர் போனதுக்கு நீங்க என்ன பதிலுங்க சொல்லப்போறீங்க? அந்தப் பொண்ணோட ஆத்மா உங்களை மன்னிக்கவே மன்னிக்காது. காதல் என்னங்க அவ்வளவு பெரிய குத்தமா? இப்படி உயிரையே எடுக்கற அளவுக்கு? அந்தப்பொண்ணு தீயில கருகும் போது என்ன துடி துடிச்சிச்சோ? இப்படி செத்தா தான் உங்களுக்கெல்லாம் பரிதாபம் வரும் இல்ல? உயிரைக் கொடுத்து தான் காதலை நிரூபிக்கனும் இல்ல? போதும்ங்க. இதுக்கு மேல எந்த உயிரும் இந்த மண்ணுல‌ போகக்கூடாது. ஜாதி வெறிக்காக போகவேக்கூடாது.” என்று கதறினாள் யாழினி. 

 

பத்ரியோ அவளுக்காகவும், அவனின் மகவுக்காகவும் துடித்தான். 

 

“யாழினி நீ இப்படியெல்லாம் அழாத ப்ளீஸ். உடம்புக்கு நல்லதில்ல.” என்றான் பரிதாபமாக.

 

அவனின் அதைத்த முகம் அவனுக்குமே இப்படியொரு சம்பவம் நடந்ததில் உவப்பில்லை என்பதை சுட்டிக்காட்டினாலும், அவள் விடவில்லை.

 

“எப்படிங்க? உங்கக் கையெல்லாம் இப்ப ரத்தக்கரையாகி இருக்கே? அதை எப்படி கழுவுறது? இந்தப் பாவம் என் வயித்துல வளர்ற நம்ம பிள்ளை மேல படியாம எப்படி காப்பாத்தறது?” என்று கேட்டுக்கொண்டிருந்தபோது, அசந்தர்ப்பவசமாக அவ்வறையின் கதவை தட்டினார் ஜெயந்தி.

 

அது திறக்கப்பட்டதும், “பத்ரி இந்த பால் வந்து அம்மா என்கிட்ட கொடுத்து விட்டாங்க, உன் பொண்டாட்டிக்கிட்ட‌ கொடுக்கச்சொல்லி.” என்று முகம் முழுவதும் பதட்டத்தைத் தாங்கி கொடுத்தார்.

 

பத்ரிக்கு இப்போது யாழினி பால் குடித்தால் தேவலாம் போல் இருந்தது. 

 

ஒரு காலத்தில் அவள் சாப்பிட்டாளா இல்லையா என்று கூட கவலை படாதவன் தற்போது அவளுக்காக பரிதவித்தான். ஏனெனில், அவள் அழுது அழுது களைத்துப்போயிருந்தாள்.

 

அதனால் கட்டாயப்படுத்தி அவளை குடிக்க வைக்கப் பார்த்தான்.

 

“ஹே! ஜெயந்தி அக்கா பத்தி தெரியும் இல்ல? அதுவே நீ மாசமா இருக்கன்னு தன் கோபதாபத்தையெல்லாம் விட்டு உனக்கு பால் கொண்டு வந்திருக்கு. இந்தாக்குடி” என்று அவளின் கையில் திணித்தான்.

 

யாழினி ஜெயந்தி அங்கிருந்து அசையாதது கண்டு வெறுப்பாக பாலை குடிக்கப்போனாள்.

 

ஆனால், வியர்த்து வழிந்திருந்த ஜெயந்தி பால் டம்ளரை யாழினி வாயருகில் கொண்டு சென்றபோது பதறி அதனை கீழே கொட்டிவிட்டார்.

 

தம்பதியர் இருவரும் விதிர்த்து நின்றபோது, “இது.. இது அவ வயித்துல வளர்ற குழந்தையைக் கொல்ல நான் கொண்டு வந்த விசம்” என்று வாய் தந்தியடிக்க கூறினார்.

 

பத்ரியால் இதனை ஜீரணிக்கவே முடியவில்லை.

 

யாழினியோ தனது வயிற்றைப் பற்றிக்கொண்டு பொத்தென மெத்தையில் உட்கார்ந்தாள்.

 

“ஏன் க்கா ஏன்? அப்படி உனக்கு இவ என்ன கெடுதல் செஞ்சா? அப்படியே இருந்தாலும் அவ வயித்துல வளர்ற என் குழந்தை என்ன பாவம் பண்ணுச்சி? அது நம்ம வீட்டு வாரிசுக்கா.” என்றதும், கால்கள் தரையோடு புதைந்து போனது போல் குற்றவுணர்வில் தலைகுனிந்து நின்றிருந்தார் ஜெயந்தி.

 

“நீ இப்படி ஒரு காரியத்தை பண்ணுவனு என்னால கற்பனைக்கூட செஞ்சி பார்க்க முடியலைக்கா. எப்படி இப்படி ஒரு காரியத்தை செஞ்சிட்டு என் முன்னாடி தைரியமா நிற்கமுடியுது உன்னால?” என்றதும், முகத்தை மூடிக்கொண்டு அழுதார் ஜெயந்தி.

 

“என்னை மன்னிச்சிரு பத்ரி. நான் இவ்வளவு பெரிய அரக்கினு இந்த ரூமுக்குள்ள நுழையுற வரையுமே உணரலைடா. ஆனா வாயும் வயிறுமா இருக்க இவளைப் பார்த்ததும், எனக்கு என் வயித்தைப் பிடிச்சி பிசைய ஆரம்பிச்சிருச்சி. என் தப்பு எனக்கு புரிய ஆரம்பிச்சிருச்சி. ஒரு தாயா எதுக்காக கோபப்பட்டு அவ வயித்துல வளர்ற குழந்தைய கொல்ல நினைச்சேனோ அப்பவே என் தாய்மை உணர்வு என்னைவிட்டுப் போயிருச்சிடா. என்னை மன்னிச்சிருடா” என்று தனது தம்பியின் கால்களைப் பற்றிக்கொண்டு கதறினார். 

 

ஆனால், அவரின் செயலின் வீரியத்தை ஒருகணம் நினைத்துப் பார்த்தவனுக்கு உடல் வெலவெலத்துப் போனது. 

 

“இல்லக்கா உன்னை இனி எந்தக் காலத்துலயும் என்னால மன்னிக்க முடியாது. தயவு செஞ்சு இங்கயிருந்து போயிடு.” என்று சொல்ல, யாழினியின் கால்களைப் பற்றி மன்னிப்பு கேட்டார் அவர்.

 

அவள் மரப்பாச்சி பொம்மைபோல் அசையாமல் நின்றாள். 

 

அவளிடமும் தனக்கு மன்னிப்பு கிடைக்காது என்பதை அறிந்து நடைபிணமாக அங்கிருந்து வெளியேறினார் ஜெயந்தி.

 

தொடரும்…

 

கதையை வாசிச்சதும் மறக்காம ஹார்ட்டீன் கிளிக் பண்ணிடுங்க தங்கோம்ஸ். அப்படியே கமெண்டும் பண்ணிடுங்க:)
 

❤️ Loading reactions...
முந்தைய பதிவு அடுத்த பதிவு
இந்த எழுத்தாளரின் மற்ற கதைகள்
வெந்து தணிந்த இதயம்
20,823 902 5
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page