வெந்து தணிந்த இதயம்-3
எழுதுவது AY-84
வெந்து தணிந்த இதயம் 3
அன்று ரத்னவேல் பாண்டியனின் மொத்த வயலிலும் நாற்று நடும் பணி துவங்கவிருந்ததால் மங்களகரமாக இருக்கும் விதமாக அவரின் வீட்டுப்பெண்கள் அனைவரும் நாற்று நட அழைக்கப் பட்டிருந்தார்கள்.
அவர்களை அங்கு அழைத்துச் செல்லும் பணியை சஷ்டிவேல் பாண்டியன் ஏற்றிருந்ததால் வரவேற்பறையில் யாழினியின் அழகைப் பற்றி மெச்சிக் கொண்டிருந்தவர்களை பாதுகாப்பாக வயலுக்கு அழைத்துச் சென்றான்.
யாழினி பேபி பிங்க் நிறத்தில் சுடிதார் அணிந்திருப்பதைக் கண்டு வயலில் நின்றிருந்த பெண்கள், “இங்கப் பாருங்கடி சஷ்டி ஐயா கூட வந்தப் பொண்ணு போட்டிருக்க ட்ரெஸ! இது எப்படி கரை படாம உள்ளயிறங்கி நாத்து நடப்போகுது?” என்று முகவாயில் கை வைத்தார்கள்.
உண்மை தான். யாழினி ஒரு பக்கம் தனது சுடிதாரில் சேறுபடாமல் இருக்கவும், வரப்பில் குதிங்கால் உயர செருப்பால் நடக்கவுமே மிகவும் சிரமப்பட்டாள்.
அதைக் கவனித்த சஷ்டி தன் வேஷ்டியை மடித்துக் கட்டிக்கொண்டு தன் இரு கைகளிலும் அவளை ஏந்தியபடி நடக்க, வயலில் நின்ற பெண்கள் அனைவரும் வாய்க்குள் ஈ போகும் அளவிற்கு பார்த்தார்கள்.
அனைத்தையும் கவனித்து வந்த தெய்வானைக்கோ இதயம் வெடித்துவிடும் போல் இருந்தது. சஷ்டியின் இந்த காதலன் அவதாரம் அவளின் அடிமனதை வேரோடு அசைத்துப் பார்த்தது. பொறாமைத்தீ நெய் ஊற்றப்பட்ட யாகத்தீயாய் அவளுள் கொழுந்துவிட்டு எரிந்தது.
இட்லி சட்டியாய் அவள் விடும் அனல் மூச்சுகளை ஓரக்கண்ணால் கவனித்த யாழினிக்கும் சஷ்டிக்கும் அப்படியொரு திருப்தி.
ஆனால், அடுத்த நிமிடமே தெய்வானை யாழினிக்கு சவால் விடும் விதமாய் சேற்றில் இறங்கும் முன்பு தன் தாவணியை இடுப்பில் செருகிக்கொண்டு உள்ளே இறங்கினாள். எதிர்பார்த்தபடி யாழினியால் உள்ளே இறங்க முடியவில்லை.
தெய்வானையின் தாய் ஜெயந்தி யாழினியின் அழகை வீட்டில் அனைவரும் புகழ்ந்ததற்கு வஞ்சம் தீர்க்கும் விதமாய், “நம்ம வீட்டுப் பொம்பளைங்க எல்லாரும் சேத்துல இறங்கியாச்சு சஷ்டி. நல்ல நேரமும் இன்னும் கொஞ்சம் நேரத்துல ஆரம்பிக்கப்போகுது. அதோ அப்பாவும் பத்ரியும் கூட உன்னை நம்பாம எல்லாத்தையும் மேற்பார்வை பண்ண வந்துட்டாங்க. இந்த மேனாமினுக்கியை அதோ தூரமா தெரியுதே நம்ம கிணத்துவீடு? அங்கப்போய் இருக்கச் சொல்லு.” என்றதும், அவரின் பேச்சை தட்ட முடியவில்லை சஷ்டியால்.
தயக்கமாய் யாழினியைப் பார்த்தான். பரவாயில்லை என்று தன் காஜல் கண்களை மூடித்திறந்தவள் அந்த கிணற்று வீடு நோக்கிச் சென்றாள். அங்கு தானொரு அதிர்ச்சிக்குள்ளாகப் போகிறோம் என்பதை அறியாமல்.
அவள் சென்ற வழியில் தொட்டிலில் குழந்தை ஒன்று வீறிட்டு அழ, வேகமாய் அதனைத் தூக்கி சமாதானப்படுத்தினாள். சாக்லேட் கலரில் இருந்த அந்தக் குழந்தையின் நீர் திரண்டிருந்த திராட்சை விழிகளிரண்டும் அவளைக் கட்டிப்போட்டன.
அவள் தேவதைக் கை பிரசாதமாய் தன் முகத்துக்கு நேரே தூக்கி அந்தக் குழந்தையைக் கொஞ்ச, அது அவ்வழியே வந்த ரத்னவேல் பாண்டியனின் கண்களில் பட்டது.
உடனே முகத்தை சுளித்தவர் பத்ரியிடம் திரும்பி, “சஷ்டிப்பய என்னவோ நேத்து இவளும் நம்ம ஜாதி தான்னு சொன்னான். இவ என்னன்னா கிழக்குத் தெருக்காரதுகளை தூக்கி கொஞ்சிட்டிருக்கா? ஒன்னும் சரியாப்படலையே பத்ரி. அந்தப்பொண்ணு அவனுக்கு வெறும் ப்ரெண்டு தானா? இல்ல வேற எதுவுமானு கண்டுபிடிக்கனும். ஏன் சொல்றேன்னா இவன் பாட்டுக்க எசகு பிசகா ஏதாவது செஞ்சிட்டான்னா, நான் ஊருக்குள்ள பெரிய மனுசனா நடமாட முடியாது. அவன் இவளை வப்பாட்டியா வச்சிக்கிட்டாக்கூட எனக்கு பிரச்சனையில்ல. ஆனா நடுவீட்டுக்குள்ள பொண்டாட்டினு சொல்லி மட்டும் உட்கார வச்சிடக்கூடாது. நான் சொல்றது புரியுதில்ல? இவனை உன் சித்தியை வச்சி கண்டிக்கலாம்னா என் புள்ள தான் உங்களுக்கு என்னைக்கும் ஆகாதவனு புரியாம கண்ணை கசக்குவா அந்தக் கழுத!” என்று வன்மத்தை கொட்டியபடியே தன் வீட்டுப்பெண்களை நோக்கி நடந்தார்.
ஆனால், பத்ரவேல் பாண்டியனால் தான் யாழினியிடமிருந்து கண்களைத் திருப்ப முடியவில்லை. அவனை காந்தமாய் இழுத்தாள் அவள்.
தன்னை ஒருவன் இப்படி வைத்தக்கண் வாங்காமல் பார்க்கிறான் என்பதை அறியாத யாழினியோ குழந்தையை மீண்டும் தொட்டிலிலிட்டு ஆட்டிக் கொண்டிருந்தாள்.
அக்குழந்தையின் தாய் ஓடி வந்து, “அம்மா நீங்கப்போய் என் குழந்தையை தொட்டுக்கிட்டு. அங்க கிணறு இருக்குமா போய் கைக்கழுவிக்கங்க” என்றதும், யாழினிக்கு கோபம் வந்துவிட்டது.
“நீயும் இப்படி தான் உன் குழந்தையை தொட்டுட்டு கைக்கழுவிப்பியா?” என்று வெடுக்கென்று கேட்டாள்.
தவறு செய்தது போல் தலை குனிந்த அத்தாய், “அம்மா அது வந்து நாங்க கிழக்குத்தெருக்காரங்க.” என்று தயக்கமாய் கூறினாள்.
“ஓஹோ! இங்கயிருந்து கிழக்குல தான் ராமேஸ்வரம் இருக்கு. ராமர் கோவில் கூட அங்க தான் இருக்கு. அப்போ ராமரைத் தொட்டாலும் தீட்டா?” என்றாள்.
“அட! என்னம்மா நீங்க புரியாமப் பேசிக்கிட்டு. நான் எனக்கு வேலையிருக்கு போறேன்.” என்று மீண்டும் சேற்றில் இறங்கினாள் அப்பெண்.
யாழினிக்கு வரும்போது சஷ்டி அவளை தூக்கிக்கொண்டதால் பிரச்சனையில்லை. ஆனால், தற்போது அவள் குதிங்கால் உயர செருப்புடன் தத்தக்கா பித்தக்கா என்று நடந்து சென்றதில் அவள் சுடிதாரின் அடிபாகம் முழுவதும் சேறாகியது. அங்கிருந்த கிணற்றிற்குள் படிக்கட்டு இருந்ததால் கீழ்ப்படி வரை சென்று சேற்றைக் கழுவியவள் அங்கேயே அமர்ந்துவிட்டாள்.
சிறிது நேரம் கழித்து அங்கிருந்து எழுந்தவள் தனக்குப் பின்னால் நின்றிருந்தவனை கவனியாததால் தவறி தண்ணீருக்குள் விழுந்தாள். அவளைப் பிடிக்க நினைத்தவனும் தோற்றான். அவளின் மேலேயே தானும் தண்ணீருக்குள் விழுந்தான்.
குடும்பத்தினரின் கட்டாயத்தால் தானும் ஒரு நாற்றுக்கட்டை வாங்கி நட்ட பத்ரி தனது வெள்ளை சட்டையின் கைப்பகுதியிலும், ஜீன்ஸ் பேண்ட்டின் கால்ப்பகுதியிலும் சேறாகியதும் அதனைக் கழுவ கிணற்றிற்கு வந்தான்.
உள்ளே யாழினி உட்கார்ந்திருந்தாலும் அவளை நகரச் சொல்லுவதற்கு தான் அவன் எத்தனித்தான். அதற்குள் அவள் எழுந்து நின்று தடுமாறி தண்ணீருக்குள் விழுந்து விட்டாள்.
அவன் அவளுக்கு நீச்சல் தெரியாது என்று நினைத்து அவளின் முடியை பிடித்து மேலே கொண்டு வர முயல, அவளோ அவனின் கையை கடித்து தள்ளிவிட்டு தானே நீந்தி மேலே வந்தாள்.
கிணற்றின் கீழ்ப்படிக்கட்டை பிடித்து மேலே ஏறியவள் முகத்தில் வழிந்த நீரையும் முடியையும் ஒதுக்கிப் பார்த்தபோது பத்ரி பேயறைந்தது போல் அவளைப் பார்த்துக் கொண்டிருந்தான். அவனுக்கு சந்தேகமே இல்லை அவளொரு கோவில் சிற்பம் தான்.
அவளின் உடலோடு ஒட்டிய டாப்ஸ் மார்புகளின் அளவையும் இடையின் வளைவையும் துல்லியமாகக் காண்பிக்க, யாழினி அது தெரியாமல் படிகளை நோக்கி வந்தவனையே கண்ணிமைக்காமல் பார்த்தாள்.
அவன் படியைப் பிடித்து மேலே ஏறி வந்தபோது அந்த வெள்ளை சட்டை அவனின் உடலை எண்ணெய் தடவிய பட்டர்ஷீட்டாய் கடைபரப்பிய விதம் அவளின் மூச்சைப் பிடித்து நிறுத்தியது.
அந்தப் படிக்கட்டு தேகக்காரனை, “வாட் அ மேன்!” என்று தன்னை மறந்து முனுமுனுத்தாள்.
இருவரும் ஒருவருடன் ஒருவர் இதுவரை பேசியது கிடையாது. ஆனால், அவனுக்கோ அவளின் கண்கள் பரீட்சயமான ஒன்றாகத் தோன்றியது. காப்பாற்ற வந்த தன்னை அவள் வில்லன் போல் நினைத்து கையை கடித்து வைத்தது வேறு அவனுக்கு ஆத்திரமூட்டியது.
ஆனால், அவ்வேளை ஊர் ஒலிப்பெருக்கியிலிருந்து ஒலித்த பாட்டு ஒன்று அவனை மொத்தமாக அவளுள் வீழ்த்திவிட்டது.
“ஆரிய உதடுகள் என்னது!
திராவிட உதடுகள் உன்னது! ஆரியம் திராவிடம் ரெண்டும் கலக்கட்டுமே!
ஆனந்தப் போர்க்களம் இங்கே தொடங்கட்டுமே!”
அப்பாடலின் வரிகளில் அவன் விழிகள் அவள் இதழ்களை ஆராய, அது குளிரில் தந்தியடித்துக் கொண்டிருந்தது. சற்றும் தாமதியாமல் அவற்றை கபளீகரம் செய்தான் பத்ரவேல் பாண்டியன்.
அதில் கொஞ்சம் கூட மென்மை இல்லை. திராட்சையை ருசி பார்க்கும் நரியின் ஆவேசம் தான் இருந்தது. அவனின் நெஞ்சில் கைவைத்து தள்ளிவிட அவள் முயற்சிக்க, அது கைகூடவில்லை.
அவனின் முகத்தை தன்னிலிருந்து பிரித்தெடுக்க முடியாமல் அவன் கழுத்தில் தன் கைவிரல் நகங்களால் கோடுகள் கிழித்தாள் யாழினி.
அவளின் உதடுகளை பல் பதியும் அளவிற்கு முரட்டுத்தனமாய் சுவைத்து விலகியவன், “நேத்து திருடின தாலிங்களையெல்லாம் திரும்ப கொடுக்கலைனா இன்னும் நீ பல வலிகளை சந்திப்ப!” என்று மிரட்டியதும், அரண்டுபோய் நின்றாள்.
அவனோ அவள் வெலவெலத்து நிற்பதைக் கண்டு வன்மமாக சிரித்தபடியே, “இந்த ஊர்ல எங்களை மீறி எதுவும் நடக்க வாய்ப்பில்ல மிஸ் யாழி…னி. எங்களை தெரிஞ்சவங்க யாரும் திருடுறது பத்தி கனவுக்கூட காண மாட்டாங்க. ஸோ, புதுசா வந்த நீ எங்களைப் பத்தி வெளியக் கேட்டு விசாரிச்சிக்கறது நல்லது. சரி சொல்லு! தாலிங்கல்லாம் எங்க?” என்று அவளின் கையை முதுகின் பின்னால் மடித்து வைத்து முறுக்க, நெஞ்சும் நெஞ்சும் மோதியது.
அதுவரை நாக்கு மேலண்ணத்தில் ஒட்டிக்கொண்டவள் போல் நின்றவள் தற்போது வலியில், “அம்மா!” என்று அலறினாள்.
ஏற்கனவே அவளைத் தேடி வந்த சஷ்டி அவளின் குரல் கிணற்றிற்குள்ளிருந்து கேட்கவும் ஓடி வந்து பார்த்தான்.
பத்ரியின் பிடியில் யாழினி துடிப்பது கண்டு, “யாழு என்னாச்சி? ஏய்! நீ ஏன்டா அவக்கையை முறுக்கிட்டு இருக்க?” என்று கிணற்றுக்குள் வந்தான்.
அவளின் கையை விடுவித்து சஷ்டியின் மேல் தள்ளிவிட்ட பத்ரி, “இவளுக்கு எங்க எப்படி நடந்துக்கனும்னு சொல்லிக்கொடு. கிழக்குத்தெருக்காரங்களை எல்லாம் தொட்டுப் பேசிட்டு இருக்கா” என்று கோபமாக சொல்லிவிட்டுப் போனான்.
அவன் சென்றதும், “என்னாச்சி யாழு? உன் உதட்டுல என்ன காயம்? அவன் உன்னை என்ன செஞ்சான்?” என்று பதட்டமாக வினவினான் சஷ்டி.
கிணற்றின் படிக்கட்டிலேயே பொத்தென்று உட்கார்ந்தவள், பத்ரி செய்தது அனைத்தையும் ஒன்று விடாமல் கூறினாள். ஆனால் தாலிகள் விசயத்தை மட்டும் கத்தரித்தாள்.
“அவனுக்கு எவ்வளவு தைரியம்? நான் இப்பவே அவனை என்ன செய்யுறேன் பாரு” என்று ஆவேசமாகப் புறப்பட்டவனை கையைப் பிடித்து தடுத்தவள், வேண்டாம் என்று தலையசைத்தாள்.
அவன் கேள்வியாகப் பார்த்தான்.
“நீ உசுரையே வச்சிருக்க தெய்வானை உனக்கு கிடைக்கனும்னா நீ என்னை லவ் பண்ற மாதிரி நடிச்சி அவளுக்கு பொறாமைய உண்டு பண்ணினா மட்டும் பத்தாது சஷ்டி. இந்த பத்ரியோட கோர முகத்தையும் அவளுக்கு தோலுறிச்சிக் காட்டனும்.” என்றவளின் தைரியக்கூற்றை முழு மனதாக ஏற்க முடியவில்லை சஷ்டியால்.
“இல்ல யாழினி. நீ பணத்துக்காகத் தான் இங்க நடிக்க வந்தன்னாலும், உனக்கு இப்ப நடந்தது மன்னிக்க முடியாதது. இந்த பத்ரி பொம்பளைங்க விசயத்துல இதுநாள் வரை இப்படியெல்லாம் நடந்தது கிடையாது. எந்தப் பொண்ணையும் ஏறெடுத்துக்கூட பார்க்க மாட்டான். இப்ப உன் உதட்டுல மட்டும் காயம் இல்லைனா நான் கூட நீ சொன்னதை நம்பியிருக்க மாட்டேன். ஆனா அவன் உன்கிட்ட மட்டும் ஏன் இப்படி ஆவேசமா நடந்துக்கிட்டான் தான் எனக்குப் புரியல.”
“சஷ்டி ஒருவேளை உன் அண்ணன் என்னை லவ் பண்றானோ என்னவோ?” என்றவள் கண்ணடிக்க, பேவென்று பார்த்தான் சஷ்டி.
“அதான் குறுந்தொகையில ஒருப்பாட்டு வருமேப்பா? ‘யாயும் ஞாயும் யாராகியரோ, எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர், யானும் நீயும் எவ்வழி யறிதும், செம்புலப் பெயனீர் போல, அன்புடை நெஞ்சம் தாங்கலந்தனவே’னு. உன் அண்ணன் அப்படி ஒரு ஃபீலிங்ஸ்ல தான் இப்படி செஞ்சிட்டானோ என்னவோ?” என்றதும், அவளின் அருகிலேயே குழம்பியபடி உட்கார்ந்தான் சஷ்டி.
நிதானமாய் யோசித்தவன் பின், அவளுக்கு புரியும் விதமாய் எடுத்துக்கூறினான்.
“யாழு நீ சொல்றதுக்கெல்லாம் வாய்ப்பே இல்ல. அவன் ஒரு இரும்பு மனுசன். இல்லைனா தயவுசெஞ்சு தெய்வானைய எனக்கு விட்டுக் கொடுத்துருடான்னு நான் காலைப் பிடிச்சி கெஞ்சிக் கேட்டப் பின்னாடியும் கல்லுனி மங்கன் மாதிரி நிப்பானா? அரக்கன்! ஆனா ஒரு வகையில நீ சொல்ற மாதிரி அவனுக்கு உன் மேல காதலே வந்திருந்தாலும் அதை வெளிப்படுத்துற முறை இதுயில்ல. உனக்கொன்னு தெரியுமா? நான் தெய்வானைய விரும்ப ஆரம்பிச்ச இத்தனை நாள்ல அவ சுண்டுவிரலைக்கூட தொட்டது கிடையாது. எனக்கு அவ மனசு தான் வேணும். வெறும் சதை இல்ல. அதான் அவ சம்மதத்துக்காக வெயிட் பண்றேன். கிடைச்சதும் தூக்கிட்டு…தூக்கிட்டுப் போயிருவேன்.” என்று சொடுக்குகளிட்டு கூறினான்.
தான் ஒரு நல்லவனுக்காகத் தான் உதவ வந்திருக்கிறோம் என்று அவனை பெருமை பொங்கப் பார்த்தாள் யாழினி.
அவனோ அவளிடம் மன்னிப்பு கேட்டான்.
“ஆனா என் வருத்தமெல்லாம் நான் உதவி கேட்டு வந்தப்போ என் மேல முழு நம்பிக்கை வச்சி வந்த உன்னை பாதுகாக்க முடியாமப் போயிடுச்சேனு தான். ஐ அம் ரியல்லி வெரி சாரி யாழினி” என்றதும்,
யாழினியோ, “மன்னிப்பு கேட்க வேண்டியது உன் அண்ணன் அந்த பத்ரி தான். நீ இல்ல சஷ்டி. இப்ப அவன் என்கிட்ட நடந்துக்கிட்ட முறைக்கு நிச்சயம் பதில் சொல்லியே தீருவான்.” என்று சூளுரைத்தாள்.
மறுபுறம் பத்ரியுமே அவளிடம் தான் நடந்துக்கொண்டதை நினைத்து தான் கார் கண்ணாடியைப் பார்த்து புலம்பிக் கொண்டிருந்தான்.
“நீயாடா பத்ரி இப்படி செஞ்ச? சரியில்லடா. நீ சுத்தமா சரியில்ல. அந்த டவுன்காரி உன்னை மொத்தமா முடிஞ்சு முந்தானைல சொருகிட்டா. அவ என்ன ஜாதியோ என்னவோ? ஆனாலும் அப்பா சொன்ன மாதிரி நாம அவளை வப்பாட்டியா வச்சிக்கிட்டா தான் என்ன? ஆனா அந்த சஷ்டி தான் கொஞ்சம் மக்கர் பண்ணுவான். அவனை சமாளிக்க முடியாதா என்ன?” என்று தன் அடர்ந்த மீசையை முறுக்கிவிட்டுக் கொண்டிருந்தான்.
ஆனால், அப்போது அவன் ஒன்றை அறியவில்லை. யாழினியைப் பற்றி தான் தவறாக நினைக்கும் ஒவ்வொன்றிற்கும் அவளிடம் தான் மண்டியிட்டு மன்னிப்பு கேட்க வேண்டியிருக்கும் என்று.
அப்போது தனக்கு பின்புறம் மூச்சு வாங்கும் சத்தம் கேட்டு திரும்பிப் பார்த்தவன் தனது ஆஸ்தான அடியாள் ஒருவன் நிற்பதைக்கண்டு, “என்னடா வெள்ளச்சாமி, ஏன் இப்படி மூச்சு வாங்க ஓடி வர்ற? நான் உன்கிட்ட சொன்ன வேலையை முடிச்சிட்டியா?” என்றதும்,
நிமிர்ந்து நின்றவன், “முடிச்சிட்டேண்ணே. நீங்க நினைச்ச மாதிரியே அந்த தர்மதுரை தாண்ணே வெளியூர்ல இருந்து ஆள் செட் பண்ணி இதை பண்ணியிருக்கான். நூறு கல்யாணத்தை நடத்தி வச்சி உங்கக் குடும்பம் பேரும் புகழும் வாங்கிடக்கூடாதுனு தாண்ணே அவன் மணப்பந்தலை கொளுத்தியிருக்கான்” என்றதும், ஆத்திரம் தலைக்கேறியது பத்ரிக்கு.
“நினைச்சேன்டா. நான் இதுக்கு காரணம் அவனா தான் இருப்பான்னு சொன்னப்ப அப்பா ஒத்துக்கவே இல்ல. இப்பப் போய் சொன்னாலும் அவன் எல்லாம் நமக்கு ஈடான்னு சொல்லிருவாரு. நீ இந்த விசயத்தை வெளியில விடாத. அவனை தேர்தலுக்கப்பறம் வச்சிக்குவோம்.” என்றதும், நல்ல விசுவாசியாய் சரியென்றான் அவன்.
பத்ரியோ மனதிற்குள், ‘வர்ற தேர்தல்ல உன்னை தோற்கடிச்சி உன் மூஞ்சில கரியைப் பூசல? நான் பத்ரவேல் பாண்டியன் இல்லடா!’ என்று அந்த தர்மதுரை தன் எதிரில் உள்ளது போல் உஷ்ணமாய் சீறினான்.
ஜிகினா தூவப்பட்ட கருப்பு போர்வையை தலை முதல் கால் வரை மூடி ஆதவன் தன் மனைவியுடன் சயனித்துக் கொண்டிருந்த அன்றைய பொழுதில் யாழினியிடம் மெதுவாக பேச்சுக் கொடுக்க ஆரம்பித்தாள் தெய்வானை.
“ஆமா காலையில நீயும் சஷ்டியும் நல்லாத்தானே இருந்தீங்க. திடீருனு என்னாச்சு? ரெண்டு பேர் முகமுமே சரியில்லையே. ஏதாவது பிரச்சனையா?” என்று பச்சாதாபத்துடன் கேட்க,
“லவ்வர்ஸ்குள்ள ஆயிரம் இருக்கும். அதை தெரிஞ்சிட்டு நீ என்ன செய்யப்போற?” என்று நறுக்குத் தெறித்தாள் யாழினி.
“லவ்வர்ஸா? ஆமா ஆமா நேத்து என்னை லவ் பண்ணான். இன்னைக்கு உன்னை லவ் பண்றான். நாளைக்கு யாரையோ? சரியான அலைஞ்சான் கேஸு இந்த சஷ்டி”
“ஏய்! வார்த்தைய அளந்து பேசு. சஷ்டி ஒன்னும் அலைஞ்சான் கேஸு இல்ல. உன் மாமா பத்ரவேல் பாண்டியன் தான் அலைஞ்சான் கேஸு. ஊருக்குள்ள ராமன் வேசம் போட்டுக்கிட்டு கிணத்துக்குள்ள மட்டும் ராவணனா மாறுறான்.”
“இதோ உன் குட்டு வெளிய வந்திருச்சில்ல? என் மாமாவையும் என்னையும் பிரிக்கனும். அதுக்காக அந்த சஷ்டி உன்னை காசுக் கொடுத்து கூட்டிட்டு வந்திருக்கான். நீயும் கொடுத்தக் காசுக்கு நல்லா பொய் பிரச்சாரம் பண்ற. உன் பப்பு என்கிட்ட வேகாதும்மா, சாரி.”
“இருந்தாலும் உனக்கு உன் மாமா மேல இவ்வளவு நம்பிக்கை ஆகாது தெய்வானை. உண்மை என்னன்னு நீயே தெரிஞ்சுக்கும் போது ரொம்ப வருத்தப்படுவ.”
“ஓ! அப்ப உன்கிட்ட வந்து கர்ச்சீப் கேட்கறேன் யாழினி. இப்ப உன் அட்வைஸ் ஒன்னும் எனக்கு தேவையில்ல சரியா?” என்று ஒழுங்கு காட்டியவள் கட்டிலில் திரும்பிப் படுத்துக்கொண்டாள்.
யாழினி அவள் தூங்கியதும் தனது அலைபேசியை எடுத்துக்கொண்டு பால்கனிக்கு வந்தாள். மெதுவாக புது சிம்மை கழற்றிவிட்டு தனது பழைய சிம்மை மாட்டியவள் தனது பாட்டியின் எண்ணுக்கு அழைப்பு விடுத்தாள்.
தொடரும்…
கதையை வாசிப்பவர்கள் மறக்காமல் கமெண்ட் செய்யுங்கள் தங்கம்ஸ்:)
