வெந்து தணிந்த இதயம்-4

 நான் உங்கள் AY-84

வெந்து தணிந்த இதயம் 4

 

அழைப்பு ஏற்கப்பட்டதும் எதிர்புறக்குரல் எப்போதும் போல் யாழினியைக் கடுப்பாக்கியது.

 

“ஏய் யாழினி! எவன் கூடடி ஓடிப்போன? இங்க உன் அம்மா ஹார்ட் அட்டாக்ல எப்ப போவான்னு தெரியாம‌ நான் பயந்துட்டு இருக்கேன். நீ ஜாலியா ஊர் சுத்துறியோ? கொஞ்சமாவது உன் அம்மாவைப் பத்தி கவலை இருக்காடி உனக்கு? இங்க நீ கொடுத்துட்டுப் போன காசெல்லாம் பழைய கடனை அடைக்கவும், மருந்து மாத்திரை வாங்கவுமே சரியா இருக்குடி. இதுல இந்த டாக்டர் ராஸ்கோல் வேற தினம் தினம் புதுசு புதுசா டெஸ்ட் எடுக்கச் சொல்லி கழுத்தறுக்கறான். நான் ஒருத்தி எத்தனையைத் தான்டி சமாளிக்கறது? பத்தாததுக்கு உன் அம்மா வேற அடிக்கடி என் பொண்ணைப் பார்க்கனும்னு புலம்பித் தள்ளுறா. நீ நம்ம டிராமா கம்பெனிக்காரங்களோட கொல்கத்தா பக்கம் போயிருக்கன்னு சொன்னாலும், அவளை இப்பவே வரச் சொல்லுங்க; அவ உயிருக்கு ஆபத்துன்னு ஒப்பாரி வைக்கிறா. அது என்னடி ஆபத்துன்னா சொல்ல மாட்டிக்கிறா. எனக்கென்னவோ அவ கிடக்கற நிலைமையப் பார்த்தா பொட்டுனு போயிருவானு தோணுதுடி. நீ எதுக்கும் கடைசியா அவளை ஒரு தடவை வந்து..” என்று பேசிக்கொண்டே சென்றதும்,

 

“ஏய் கிழவி! உன்னை கொன்னேப் போட்டிருவேன். நான் வர்றவரைக்கும் எப்படியாவது என் அம்மாவை உயிரை கையிலப் பிடிச்சி வைக்கச் சொல்லு.” என பட்டாசாய் வெடித்தாள் யாழினி.

 

எதிர்புறக்குரல் அலட்டியது.

 

“ஏன்டியம்மா? ஏன் பேச மாட்ட? நான் மட்டும் அன்னைக்கு உன் அம்மா விசம் சாப்பிடப் போனதை தடுக்கலைனா நீ இப்படி என்னை வக்கனையா எதிர்த்துப் பேசுவியா? உன் அம்மாவைக் காப்பாத்தி அவ வயித்துல இருந்த உன்னை காப்பாத்தி ஹிந்தி மொழி தெரியலைனாலும் எங்க டிராமா க்ரூப்ல ரெக்கமண்ட் பண்ணி சேர்த்துக்க வச்சி, உன்னையும் அவளையும் ஊர் ஊரா என் கூடவே இழுத்துக்கிட்டு அலைஞ்சேன் பாரு. எனக்கு இதுவும் வேணும்; இதுக்கு மேலயும் வேணும்.”

 

“ஷப்பா! ஆயிரம் தடவை இந்தக் கதையைக் கேட்டு எனக்கு காது புளிச்சிப்போச்சி. பேசாம என் அம்மா அன்னைக்கு விசம் சாப்பிட்டே செத்துருக்கலாம். உன் புலம்பலை கேட்டு சாகறதுக்கு. இங்கப்பாரு கிழவி! அடிக்கடி சொல்லிட்டு இருக்க மாட்டேன். இந்த ஒரு தடவை தான். ஒருத்தன் லம்ப்பா பத்து நாளைக்கு என்னோட கால்ஷீட் கேட்டிருக்கான். அதுவும் நான் தமிழ்நாட்டுல ஒரு ஹிந்தி சபா சார்புல போட்ட நாடகத்தைப் பார்த்து. அதுக்கு அவன் கொடுத்துருக்க பேமண்ட் ரொம்பப் பெருசு. நானும் ஒரு உண்மையான லவ்வுக்கு ஹெல்ப் பண்றது ஒன்னும் அவ்வளவு பெரிய பாவமில்லைனு ஒத்துக்கிட்டேன். இன்னும் ஒரே ஒரு வாரத்துக்கு மட்டும் அம்மாவைப் பார்த்துக்கோ. அதுக்கப்பறம் நான் ஒரு பெரிய தொகையோட வந்து உங்களை டேக் கேர் பண்ணிக்கறேன். சரியா?” என்றதும்,

 

இறங்கிய குரலில் சரியென்றவர், “ஆனா உன் அம்மா உனக்கு ஏதோ ஆபத்துன்னு சொல்றாளே?” என்று தயங்கினார்.

 

ஆனால், யாழினி தெளிவாக இருந்தாள்.

 

“அய்யோ! இதுக்கூடவா உனக்கு புரியல கிழவி? அம்மாவுக்கு என்னை நேர்ல பார்க்கனும் போல இருந்திருக்கும். அதான் எனக்கு ஆபத்து அது இதுனு உன்கிட்ட கதை விட்டிருக்காங்க. நம்ம டிராமால எழுதுற ஸ்க்ரிப்ட்ட ரியல் லைஃபுக்கும் அப்பிளை பண்ணிட்டாங்க. நீ இதெல்லாம் சீரியஸா எடுத்துக்காத” என்று பேசிக்கொண்டிருந்தவள் திடீரென்று பின்னால் ஏதோ விழுந்த சத்தம் கேட்டு திரும்பிப் பார்த்தாள்.

 

பூச்சாடி ஒன்று உருண்டோடியது. தெய்வானையோ நல்ல தூக்கத்தில் இருந்தாள். கதவைப் பார்த்தால் லேசாக திறந்திருந்தது. யாரோ வந்து சென்றது உறுதி. ஆனால், அது யாரென்று தான் அவளுக்குத் தெரியவில்லை.

 

அலைபேசியில் மீண்டும், “சொன்னது புரிஞ்சதுல? இப்போதைக்கு ரெண்டு லட்ச ரூபா அனுப்பி வைக்கிறேன். பார்த்து செலவளி.” என்று கறாராய் கூறிவிட்டு அணைத்தாள்.

 

தற்போது அவள் மனம் முழுவதும் 
அவளின் அன்னையை சுற்றியே வந்தது.

 

ஒருவழியாய் அவள் கண் அசர, மறுநாள் பொழுது புலர்ந்தது.

 

நேற்று மாலை சாணத்தால் மெழுகிய தன் வான முற்றத்தை இன்று காலையில் லேசாக பனியைப் பிடித்து வாசல் தெளித்து, மேகத்தை இழுத்து கோலமிட்டு, தன் கணவனை நடுவில் பூசணிப்பூவாய் நிறுத்தி அழகு பார்த்தாள் பரிதியின் பாதி. அவள் கணவன் என்ன ஓரிடத்தில் நிற்பவனா?

 

யாழினி தான் எழுந்ததும் முதல் வேலையாய் வீட்டிலுள்ளவர்களை தன் வலையில் வீழ்த்தத் தயாரானாள். அவர்களை வளைத்துப்போட்டு சஷ்டியின் காதலுக்கு அவர்களை உதவ வைப்பதே அவளின் திட்டம். மொத்தத்தில் அவள் வேலை சீக்கிரம் முடிந்தால் சீக்கிரம் தன் அன்னையைக் காண போகலாம். அவ்வளவு தான்!

 

முதல் கட்டமாய் வீட்டிலிருப்பவர்களுக்கு தானே தன் கையால் தேநீர் வழங்க முடிவு செய்தாள்.

 

முதலில் ரத்னவேல் பாண்டியனின் அறை முன் சென்று நின்றவள், அறைக்கதவை தட்டும் முன் உள்ளிருந்து கேட்ட சத்தத்தில் சற்று நிதானித்தாள்.

 

யாருடனோ அலைபேசியில் காரசாரமாக விவாதித்துக் கொண்டிருந்தார் ரத்னவேல் பாண்டியன்.

 

“கிழக்குத்தெருக்காரங்களுக்கும் மேற்குத்தெருக்காரங்களுக்கும் ஒரே இடத்துல இடுகாடா? அதையெல்லாம் எங்களால ஒத்துக்க முடியாதுங்க. காலங்காலமா நடக்கற‌ சம்பிரதாயங்களை எல்லாம் எங்களால மாத்த முடியாது. ஏற்கனவே சரியா மழை தண்ணி பெய்யாம கிடக்குது. இதுல நாங்க வேற இப்படி பண்ணி பிள்ளைக்குட்டிகளை பசி பட்டினியில போடச் சொல்றீங்களா? ஆத்தா கோபத்தை பத்தி உங்களுக்கு தெரியாதுங்க கலெக்டரே” என்றார்.

 

எதிர்புறமிருந்த மாவட்ட ஆட்சியரோ, “ஐயா, சாமி பூதம்னு பயமுறுத்தாதிங்க. அரசாங்கமே இடுகாட்டுக்கு இடம் ஒதுக்கி கொடுக்குது. எல்லாம் உங்க ஊர் நன்மைக்கு தான்யா. இதுல உங்களுக்கென்னய்யா பிரச்சனை? நாங்க இடுகாட்டுக்கான வேலைகளை ஆரம்பிச்சா மக்களை கூட்டி மறியல் பண்ணுவோம்னு மிரட்டுறீங்க. இது சுத்தமா சரியில்லைங்கய்யா. நீங்க தான் சாதிக்கலவரத்தை இந்த ஊருக்குள்ள உண்டாக்குறவரா?” என்றதும்,

 

“அப்படித்தான் வச்சிக்கோங்களேன். என் ஒரு தலைமயிரைக்கூட உங்களால பிடுங்க முடியாது” என்று திமிராக சவால்விட்டார் ரத்னவேல் பாண்டியன்.

 

அலைபேசி கோபமாக அணைக்கப்பட்டதும், “இப்ப தான் தேர்தலுக்காக நூறு ஜோடிகளுக்கு நான் கல்யாணம் பண்ணி வைக்கிறதா வாக்கு கொடுத்திருக்கேன். என்னைப்போய் சாதிக்கலவரத்தை தூண்டுறவன்னு சொன்னா எவன் நம்புவான்? சமத்துவத்தை பேணிக்காக்குற சமூகசேவகன்னு கவர்மெண்ட்டே எனக்கு பத்மஸ்ரீ பட்டம் கொடுக்கப்போகுது. இந்த லட்சணத்துல இவன் வந்து என்னை திருத்தப் பார்க்கறானாம் முட்டாள். பத்ரி எம்.எல்.ஏ-வாகட்டும் இவனுக்கு இருக்கு ஆப்பு” என்று கண்ணாடியின் முன் நின்று தனக்குத்தானே பேசிக்கொண்டார்.

 

அப்போது அவர் பேசியதனைத்தையும் தனது அலைபேசியில் பதிவு செய்து வைத்துள்ளார் மாவட்ட ஆட்சியர் என்பதை பாவம்! ரத்னவேல் பாண்டியன் எதிர் பார்த்திருக்க மாட்டார்.

 

யாழினி உள்ளிருந்து அடுத்து சத்தம் எதுவும் வராமல் போகவும், கதவை தட்டப்போனாள்.

 

அவளை தடுத்து நிறுத்தியது ஒரு பெண் குரல்.

 

“என் வீட்டுக்காரருக்கு காலையில டீ குடிக்கற பழக்கமில்ல.” என்று அழுத்தமான முகத்துடன் சொன்னார் சாவித்ரி.

 

“ஓ! அப்ப நீங்க டீ எடுத்துக்கோங்க ஆன்ட்டி” என்றவள் டிரேயை நீட்ட,

 

“எனக்கு நான் போடுற டீ தான் பிடிக்கும்.” என்று மிடுக்காகச் சென்றார் அவர்.

 

‘அப்படியே மகனை மாதிரியே.’ என்று உள்ளுக்குள் நொடித்தாள் யாழினி.

 

பின், சஷ்டிக்கும் அவனின் தாய்க்கும் சென்று தேநீர் வழங்கியவள், தெய்வானையின் தாய் ஜெயந்திக்கு சென்று வழங்க, அவர் எடுத்துக் கொள்ளவில்லை. வெளிநாட்டில் வேலைப் பார்க்கும் தன் கணவரிடம் அலைபேசியில் ஏதோ தீவிரமாக பேசுவது போல் சைகைக்காட்டி விரட்டிவிட்டார்.

 

ஆனால், பத்ரியின் இன்னொரு அக்கா பொன்னியும், அவளின் இரு மகள்களுமே மனமுவந்து எடுத்துக் கொண்டனர். பொன்னி இளம் வயதிலேயே தன் கணவரை ஒரு கலவரத்தில்‌ பறி கொடுத்திருந்தாலும், ஐ.வி.எப் முறையில் பிறந்த தன் இரட்டையருக்காகத் தான் தன் உயிரை கையில் பிடித்து வைத்திருக்கிறார்.

 

அந்த இரட்டையர் இந்த வருடம் தான் கலைக் கல்லூரியில் காலடி எடுத்து வைத்திருக்கிறார்கள் என்று பொன்னி அவர்களைப் பற்றி பெருமையாகக் கூறியபோது யாழினி ஆர்வமாகக் கேட்டுக்கொண்டிருந்தாள்.

 

காதம்பரியும், கவிதாம்பரியும் யாழினியை அபிராமியைப் பார்க்கும் குணா போல் பார்த்துக் கொண்டிருந்தனர்.

 

இதுநாள் வரை அந்த வீட்டில் நான் தான் அழகு, அனைவரும் எனக்கு தான் அடிபணிய வேண்டும் என்று திமிர் காட்டிய தெய்வானையை வெறுப்புடன் பார்த்த இளசுகளுக்கு யாழினியின் வருகை உற்சாகத்தை கொடுத்தது. அவளின் 
சௌந்தர்யத்தில் சொக்கிப்போனார்கள் அவர்கள்.

 

அவர்களின் ஆதரவு கிடைத்த சந்தோசத்தோடு யாழினி அந்த வீட்டில் வேலைப் பார்ப்பவர்கள், அடியாட்கள் என்று அனைவருக்கும் தேநீர் வழங்க, தயக்கத்தோடு எடுத்துக் கொண்டார்கள். அக்கணம் அனைவருக்கும் அவள் மேல் ஒரு நல்லெண்ணம் உருவானது.

 

அது பிடிக்காத ஜெயந்தி வேலைக்காரர்களிடம் சென்று, “விருந்தாளிங்கக்கிட்ட என்ன பேச்சு?” என்று அதிகாரம் செய்து கொண்டிருந்தார்.

 

அவர்கள் மட்டுமல்லாமல் யாழினி அந்த பெரியவீட்டின் சுற்றுச் சுவரை ஒட்டியிருந்த ஒரு மரத்தின் மேல் சிறிய பூனை ஒன்று கீழே வர முடியாமல் சிக்கியிருப்பது கண்டு அதற்கும் தானே ஓடிப்போய் உதவினாள்.

 

அதனை சாளரம் வழியாகப் பார்த்த பத்ரவேல் பாண்டியன் அவள் எப்போது உள்ளே வருவாள் என்று காத்திருந்தான்.

 

தெய்வானையும் பால்கனியில் இருந்தபடியே அதே காட்சியைக் கண்டு, “பெரிய அன்னை தெரசா” என்று நொடித்தாள்.

 

யாழினி இறுதியாக ஒரு கோப்பை தேநீரை தனக்கு எடுத்துக்கொண்டு மாடிப் படியேற, அவளை விசிலடித்து அழைத்தான் பத்ரி.

 

ஒருவேளை தேநீருக்காகத் தான் அழைக்கிறானோ என்று, “ஒரு நிமிசம்” என சொல்லியவள் சமையலறை சென்று புதிதாக தேநீர் தயாரித்துக்கொண்டு வந்தாள்.

 

உடற்பயிற்சி முடித்து பச்சை முட்டைகளை வாயில் ஊற்றிக் கொண்டிருந்த பத்ரி புலிப்பற்களை தன் செயின் டாலரில் கோர்த்து தொங்கவிட்டிருந்தது ஒரு காட்டிமிராண்டியாய் அவளுக்கு காண்பித்தது.

 

தைரியமாக சென்று, “டீ எடுத்துக்கோங்க” என்றாள்.  

 

ஆனால், தேறல் நிரம்பிய பேரலாய் அவனை சுண்டியிழுத்தன அவளின் இதழ்கள்.

 

தேநீரை வேண்டாமென்று கைக்கொண்டு தள்ளியவன் அவள் கண்கள் டிரே செல்லும் திசை நோக்கி செல்லவும் அவளின் இதழில் தன் இதழை வைத்து மென்மையாக அழுத்தி எடுத்தான்.

 

அவள் அது பிடிக்காமல் முகத்தைச் சுளிக்க, “உனக்கு ஏன் பரிசு கொடுத்தா பிடிக்க மாட்டேங்குது?” என்று சந்தேகமாய் கேட்டான்.

 

“பரிசா?” என்று முழித்தாள் அவள்.

 

“ஆமா, நேத்து ஒரு குழந்தைய சமாதானப்படுத்தினதுக்கு கிஸ் பண்ணேன். இன்னைக்கு ஒரு பூனைய காப்பாத்தினதுக்கு கிஸ் பண்ணேன். ஆனா நீ தாங்க்ஸ் சொல்லாம முறைக்கிற” என்று விசனப்பட்டுக்கொண்டான்.

 

‘அடப்பாவி! இதுக்குப்பேரு உங்க ஊர்ல பரிசா?’ என்றவள் முறைத்துப் பார்க்க,

 

அவனோ தன் பங்காக மனதுக்குள், ‘பரிசுனு பிட்டு போடுறேனே சண்டாளி இம்ப்ரெஸ் ஆகறாளான்னு பாரேன்.’ என்று புலம்பினான்.

 

பின், தன் இயல்பை கைக்கொண்டவனாக, “என்ன வந்தவுடனே எல்லாரையும் காக்காப் பிடிக்க ஆரம்பிச்சிட்டியா? அது ஒன்னும் சுலபமில்ல.” என்று சவால் விட்டான்.

 

‘அதையும் பார்க்கலாம்’ என்ற தோரணையில் புன்னகைத்தவள், “நீங்க டீ எடுத்தா தாங்க்ஸ் கிடைக்கும்” என்றாள் அறிவிப்பாக.

 

அவளின் மெல்லிடைப் பற்றி அருகில் இழுத்தவன், அவள் முகத்தை பின்னே இழுக்கவும், அவள் இதழ்களை பார்த்தபடியே தேநீர் கோப்பையை எடுத்து ஒரு மிடறு அருந்தினான்.

 

ஆனால், அவள் “தேங்க்ஸ்” என்ற அடுத்தநொடியே அதை கீழே உமிழ்ந்து முகத்தை அஷ்டகோணலாக்கினான்.

 

பின்னே தன் போக்கில் மிளகாய்பொடியையும் உப்பையும் அல்லவா கலந்து கொண்டு வந்திருந்தாள் யாழினி. அதை நேற்று அவன் கிணற்றுக்குள் செய்த செயலுக்கான தண்டனையாக நினைத்தாள் அவள். ஆம், இது தான் அவள்‌ பழி வாங்கும் லட்சணம்.  

 

அவன் முறைத்துப் பார்க்கவும் வெட்கமே இல்லாமல், “பழிக்குப் பழி” என்று நிமிர்வாய் சொன்னாள்.

 

அவன் பார்வையோ நேற்று அவனால் உண்டான காயம் வெளியில் தெரியாமல் இருக்க அவள் அதிகமாக பூசியிருந்த உதட்டுச்சாயத்திற்கு சென்றது.

 

அதே சாயம் தன் உதடு வழியாக தேநீர் கோப்பைக்குச் சென்றிருப்பதை அவன் கவனித்து புன்முறுவல் செய்ய, ‘இன்னும் பெரிய தண்டனையா கொடுத்திருக்கனுமோ?’ என்று வெள்ளந்தியாய் யோசித்தாள் யாழினி.

 

பத்ரிக்கோ அவளின் இந்தப் பழிவாங்கல் அவளை வித்தியாசமான பெண்ணாகக் காட்டியது.

 

அவள் தன்னை பார்த்த தோரணையில் அவன், “நேத்தும் இப்படி தான் சைட் அடிச்சி என்னை எல்லை மீற வச்ச. இன்னைக்கும் அதே தப்பை பண்றியே?” என்று தனது பனியனை கழற்ற,

 

‘என்ன சைட் அடிச்சேனா? உண்மை தான். நேத்து இவ்வளவு அழகா, டாப்பு டக்கரா இருக்கானே நம்ம டிராமாவுல ராமனா நடிச்சா எப்படியிருக்கும்னு கற்பனை பண்ணேன். இன்னைக்கு இந்த ஜிம்பாடி இராவணனா நடிச்சா எப்படியிருக்கும்னு தானே கற்பனை பண்ணேன்?’ என்று மனதிற்குள் முனகியவள், “நான் சைட்டெல்லாம் அடிக்கல” என்று முணுமுணுத்தாள்.

 

“எனக்கு பொய் சொன்னா பிடிக்காது.” என்றவன்‌ அவளை வேகமாய் நெருங்க,

 

“ஆமா இவ எதுக்கு இங்க நிக்கிறா?” என்று அவர்களருகில் வந்தாள் தெய்வானை.

 

நல்ல பிரியாணி விருந்தில் பற்களில் கடிபட்ட கிராம்பாய் அவளின் வருகையை வெறுத்தான் பத்ரி.

 

அவள் அவர்களிருவரையும் சந்தேகமாய் பார்த்ததும், முந்திக்கொண்டு பதிலளித்தான்.

 

“டீ கொடுத்தா. அதான் திருப்பி கப்ப வாங்கிட்டுப் போக வெயிட் பண்றா” என்றான்.

 

தெய்வானை, “டீயா? நீங்க தான் தாத்தாவை மாதிரி காலைல டீ எதுவும் குடிக்க மாட்டீங்களே மாமா?” என்று அவனைப் பற்றி சகலமும் அறிந்தவளாய் கேட்க,

 

“இன்னைக்கு குடிக்கனும் தோணுச்சி போதுமா? எல்லாத்துக்கும் காரணம் கேட்டுக்கிட்டு. நீ எதுக்கு இங்க வந்தனு முதல்ல விசயத்தை சொல்லு?” என்று கடுகடுத்தான்.

 

ஒரு முத்த யுத்தத்தை கெடுத்த கோபமோ என்னவோ?

 

“நான் உங்கக்கிட்ட கொஞ்சம் தனியா பேசனும்” என்றவள் யாழினியைப் பார்க்க, அவன் கையிலிருந்த தேநீர்க்கோப்பையை வாங்கிக்கொண்டு வெளியேறினாள்.

 

அப்போது அந்தக் கோப்பையின் விளிம்பிலிருந்த யாழினியின் உதட்டுச் சாயத்தை கவனிக்கத் தவறவில்லை தெய்வானை.

 

அவன் திரும்பி நின்று ஒரு துண்டால் முகத்தையும் தன் உதட்டையும் துடைக்க, அவன் கழுத்திலிருந்த நகக் கீறல்களையும் கவனித்துவிட்டாள். நேற்று கிணற்றுக்குள் யாழினி தந்த பதில் பரிசுகள் தான்‌ அவை.

 

அதைப்பற்றி கேட்டால் இன்னும் கோபிப்பானோ என்று தான் கேட்க வந்ததை கேட்டாள். “எனக்கு தாலியும் கல்யாணப் புடவையும் எப்ப எடுக்கப் போகலாம்னு அம்மா கேட்க சொன்னாங்க மாமா” என்றாள்.

 

“ரெண்டையும் போட்டுக்கப் போறது நீ. சோ நீயே போய் செலக்ட் பண்ணு” என்று விட்டேற்றியாய் பதிலளித்தான் அவன்.

 

சஷ்டி யாழினிக்கு பார்த்து பார்த்து சுடிதார் எடுத்துக் கொடுத்திருக்க, தங்களின்‌ திருமண ஆடைகளைக்கூட பத்ரி தேர்ந்தெடுக்க வராதது நினைத்து மனதிற்குள் மருகினாள் தெய்வானை.

 

அவள் தனது இழிநிலையை நினைத்தபடியே சோகமாக தனது அறைக்கு வர, புதிதாக திரைச்சீலையை மாற்றிக்கொண்டிருந்தாள் யாழினி. அது தான் காரணம் என்று அவள் மேல் பாய்ந்தாள் தெய்வானை.

 

“உன்னை யாரு இதெல்லாம் மாத்த சொன்னது? இது ஒன்னும் உன் ரூம் இல்ல. என் ரூம். ஒரு வேளை அடுத்தவங்க உடைமை எல்லாம் உனக்கு சொந்தமாக்கிக்கற பழக்கம் இருக்குனா அது என்கிட்ட செல்லுபடி ஆகாது. என்னோடதை நான் யாருக்கும் எதுக்கும் விட்டுக்கொடுக்க மாட்டேன்.” என்று இரு பொருள்பட பேசினாள்.

 

யாழினிக்கு அவள் பேச்சின் பொருள் புரிந்தது. அவளும் அவளின் போக்கிலேயே சென்றாள்.

 

“இது உன் வீடு இல்ல. உன் தாத்தா வீடு. ஓ! நீ தான் உன் தாத்தாவோட கிளிப்பிள்ளையாச்சே. அவர் விருப்பம் தான் உன் விருப்பமும் இல்ல? அவர் ஒரு ஜிம்பான்ஸி கையில தாலி கொடுத்து கட்டிக்கச் சொன்னாலும் நீ கட்டிப்ப. அவர் பேருக்கொரு கலங்கம்னா அதை பார்த்துட்டு சும்மா இருக்க மாட்ட. அதனால உனக்கு பிடிக்காத கல்யாணத்தைக்கூட நீ செஞ்சிக்குவ. ரைட்?” என்று அவளின் குழம்பிய மனதில் மீன் பிடிக்க முயன்றாள்.

 

தெய்வானையோ சுதாரித்து, “அது என் இஷ்டம். இதுல யாரும் இரக்கப்பட ஒன்னும் இல்ல” என்று முடியை சிலுப்பிக்கொண்டு சென்றாள்.

 

“போடி பைத்தியக்காரி! இன்னும் எத்தனை நாளைக்கு இந்த வீம்புன்னு பார்க்கறேன்” என்று சவால்விட்டாள் யாழினி.

 

தொடரும்…

 

கதையை வாசித்து கமெண்ட் பண்ணுங்க தங்கோம்ஸ்.

 

❤️ Loading reactions...
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page