வெந்து தணிந்த இதயம்-5

நான் உங்கள் AY-84

 

வெந்து தணிந்த இதயம் 5

 

யாழினி நேரே சஷ்டியிடம் சென்றவள் தெய்வானையின் குழம்பிய மனநிலை பற்றி தெரிவித்தாள்.

 

“இவ என்ன லூசா சஷ்டி? இந்த காலத்துலப்போய் இப்படி இருக்கா? தாத்தா கொத்தவரங்கான்னுக்கிட்டு.  இவ இப்படியே இருந்தா உன் பாடு திண்டாட்டம் தான் போ.”

 

“இதே தொல்லை தான் எனக்கும். அவ நான் காதலை சொன்னப்ப உன்னை எனக்கு பிடிக்கலைடானு முகத்துக்கு நேரா சொல்லியிருந்தா கூட அவ இருக்கற திசை பக்கம் நான் தலை வச்சுப் படுத்திருக்க மாட்டேன். ஆனா இப்படி தாத்தா தாத்தானு நழுவுறது தான் எரிச்சலா இருக்கு.”

 

“கவலைபடாத சஷ்டி. இந்த சண்டிராணி தாத்தா வேலியில இருந்து தாவியோடி வரத்தானே இந்த காதல் நாடகத்தையே நாம நடத்திட்டிருக்கோம்?”

 

“சத்தமா பேசாத யாழு! வேற யாருக்காவது கேட்டுறப்போகுது. அதுலயும் எங்கப்பாவுக்கு கேட்டது தொலைஞ்சோம்.”

 

“அடப்பாவி! இவ்வளவு நேரம் அவளை சொல்லிட்டு இப்ப நீயே பயப்படுறியேடா? இங்கப்பாரு, தெய்வா மேல நீ வச்சிருக்க காதல் நிஜம். அதை நம்பு. அதுவே உங்களை சேர்த்து வச்சிடும்.”

 

“நானும் அதைத்தான் நம்பிட்டிருக்கேன்.” என்றவன் தீர்க்கமாகச் சொல்ல, பத்ரியுடனான தனது வம்புகளைப் பற்றி சொல்லாமலே அவ்வறையை விட்டு வெளியேறினாள் யாழினி.

 

அவள் பொழுதுபோகாமல் தனது முகத்தில் கடலைமாவு தப்பளம் போட்டுக்கொண்டு அவ்வீட்டின் தோட்டத்தில் நடக்க, ஒரு கொடுமைக்காட்சி அவள் கண்முன் அரங்கேறியது.

 

அவ்வீட்டிற்கு பால், தயிர், நெய் என்று பெரிய பெரிய கொள்கலன்களில் கொண்டு வந்து கொடுத்த பெண்ணொருத்தி, “வீட்டுல பெரியம்மா இருக்காங்களா?” என்று வெளியே நின்ற அடியாள் ஒருவனிடம் தயக்கத்துடன் விசாரித்த போது ஜெயந்தி குறுக்கிட்டார்.

 

“ஏன் பெரியம்மாவுக்கு என்ன வச்சிருக்க?” என்று எகத்தாளமாய் கேட்டார்.

அந்தப்பெண்ணோ தயங்கியபடியே, “என் பையனும் பொண்ணும் பிரைவேட் ஸ்கூல்ல படிக்கிறாங்கமா. பையனுக்கு என் கம்மலை அடகு வச்சி பீஸ் கட்டிட்டேன். ஆனா பொண்ணுக்கு தான் கட்ட கொஞ்சம் கஷ்டம். அதான் பெரியம்மாவைப் பார்த்து ஏதாவது உதவி கேட்கலாம்னு..”

 

“ஓ! ஆமா உனக்கு எத்தனை குழந்தைங்க?”

 

“நாலும்மா.”

 

“உன் புருசன் என்ன செய்யுறான்?”

 

“நம்ம வயல்ல வேலை பார்த்தப்போ மின்னல் அடிச்சி இறந்துட்டாரும்மா.”

 

“ஓ! இதை காரணமா வச்சி தான் என் அம்மாவை சுரண்டிப் பிழைக்க வந்துருக்கியா? இங்கப் பாரு, இப்படி அடிக்கடி வந்து காசு கேட்கற வேலையெல்லாம் வச்சிக்காத. என் அம்மா ஒரு விவரமில்லாதவங்க. யாரை எப்படி பேசி அனுப்பனும்னு தெரியாம எங்கப்பா காசை வாரி இறைச்சிட்டு இருக்காஙக். இனி ஒரு தரம் ஏதாவது கொண்டு வந்து கொடுக்கற சாக்குல இப்படி வந்தன்னு வை?” என்று கொடூரமாக எச்சரித்தவர்,

 

தன் அடியாளிடம் திரும்பி, “ஹே! உனக்கு யாரை உள்ள விடனும், விடக்கூடாது தெரியாதா? இனி ஒரு தரம் இவளை உள்ள விட்ட? ஒரு மாச சம்பளத்தை கட் பண்ணிருவேன். கிழக்குத்தெருக்காரக் கழுதை எவ்வளவு தைரியமா வந்து காசுக் கேட்கிறா?” என்று அனல்மூச்சுகளை விட்டபோது,

 

“அக்கா!” என்று உச்சஸ்தாயில் கத்தினான் பத்ரி.

 

அந்த சத்தத்தில் தானே அரண்டுபோனாள் யாழினி.

 

ஜெயந்தியோ முந்திக்கொண்டு, “என்ன பத்ரி நீ எப்ப வந்த? இதுக பேச்சையெல்லாம் நீ நம்பாதடா. அப்படியே அப்பாவியா நடிச்சி நம்ம ரத்தத்தை உறிஞ்சி குடிச்சிருங்க சைத்தானுங்க.” என்றதும்,

 

“அக்கா போதும் நிறுத்துறியா? வயசுக்கு தகுந்த மாதிரி பேசு” என்று அவரை அடக்கியவன்,

 

“உங்கப் பொண்ணுக்கு பீஸ் கட்ட எவ்வளவுமா பணம் வேணும்?” என்று கேட்டு, அதற்கு மேலாகவே தன் வாலட்டிலிருந்து எடுத்து அவரின் கையில் கொடுத்தான்.

 

அவர் கைக்கூப்பி நன்றி தெரிவித்ததோடு சென்றுவிட்டார்.

 

ஜெயந்தி அடியாளின் முன் தனக்கு அவமானமாகவும், “பத்ரி இதுங்களுக்கெல்லாம் நீ ஏன்டா  பாவம் பார்க்கற? நம்ம அப்பா இதுகளைப் பத்தி சொன்னதெல்லாம் மறந்து போச்சா உனக்கு? நீ சரியில்லடா. அந்த ஊர்சுத்தி வசந்தி தன் புத்தியை உனக்கு கொடுத்துட்டு போயிட்டாடா. அதான் நீ இப்படி அடிக்கடி கர்ணனா மாறி வாரி வழங்குற.” என்று வாய்க்கு வந்ததைப் பேசவும்,

 

“அக்கா போதும். இறந்து போனவங்களைப் பத்தி தப்பா பேசாத. தயவு செஞ்சு வேற வேலை ஏதாவது இருந்தா போய் பாரு” என்று சொன்னவன் தனது அடியாளிடம் காரை எடுத்து வரச் சொன்னான்.

 

ஏனெனில், அவனுக்கு கட்சி அலுவலகத்தில் கூட்டம் ஒன்று இருந்தது.

 

பின்புறமிருந்து எடுத்து வரப்படும் காருக்காக அவன் காத்திருக்க, அவன் அருகில் வந்த யாழினி, “நீங்க அப்படி ஒன்னும் மோசம் இல்ல. கொஞ்சமே கொஞ்சம் நல்லவர் தான்” என்று சொல்லிவிட்டு ஓடிப்போனாள்.

 

அவனோ ‘பட்சி வலையில விழுந்துருச்சி’ என்று தனக்குத்தானே சிரித்துக்கொண்டான்.

 

யாழினி தன் முகத்திலிருந்த கடலைமாவை கழுவிவிட்டு காதம்பரி, கவிதாம்பரியோடு சிறிதுநேரம் அலைபேசியில் பகடைக்காய் விளையாட்டு விளையாடியவள் தனக்கு அது அலுத்துப்போகவும் கீழே வந்தாள்.

 

காலையில் ஜெயந்தியின் பேச்சில் சாவித்ரியும் நல்லவர்‌ தான் என்று தெரிந்ததால் அவரைப் பார்க்கச் சென்றாள்.

 

சாவித்ரியோ யாழினி போன்ற ஒரு இளம்வயது பெண் இப்படி திருமணத்திற்கு முன்பு வெறொரு ஆடவனின் வீட்டில் வந்து தங்குவதை சுத்தமாக விரும்பவில்லை என்பதால் முதலில் அவளிடம் முகம் கொடுக்கவில்லை.

 

ஆனால்,‌ அவள் இன்று காலையில் ஒரு பூனைக்குட்டியை‌ காப்பாற்றி அடியாட்களிடம் அதற்கு தட்டில் பால் ஊற்றச் சொல்லியதை கண்டதும் அவளின் மேல் நன்மதிப்பு கொண்டார்.

 

மதிய உணவை முடித்த பின் அவர் தூங்கக்கூடாது என்பதற்காக தனதறையில் ஒரு சட்டைக்கு எம்பிராய்டரி டிசைன் போட்டுக்கொண்டிருக்க, அவரைத் தேடி வந்த யாழினி அதனைப் பார்த்துவிட்டு, “உள்ள வரலாமா?” என்று அனுமதி கேட்டாள்.

 

யோசனையாகவே, “வா” என்றார் அவர்.

 

உள்ளே வந்தவள் அவர் இருந்த சோபாவின் அருகில் முட்டிப்போட்டு அமர்ந்து அவரின் எம்பிராய்டரியைக் கண்டு, “அம்மாடியோவ்! ரொம்ப அழகா இருக்கு நீங்கப் போட்டிருக்க இந்த‌ டிசைன். நானும் இப்படித்தான் போரடிக்கும் போதெல்லாம் எம்பிராய்டரி போடுவேன்” என்று ஆர்வமாக சொல்ல, சட்டென்று தனது கையிலிருந்த ப்ரேமை அவளிடம் தந்தார் சாவித்ரி.

 

அவர் அவள் தன்னிடம் நற்பெயர் பெறவே அவ்வாறு பொய் கூறுகிறாள் என நினைத்தார். ஆனால், அவரின் கணிப்பை தவிடுபிடியாக்கினாள் யாழினி. அவரே எதிர்பார்க்காத அளவுக்கு மிக நேர்த்தியாக ஒரு பூ டிசைனை உருவாக்கினாள்.

 

அவர் அதில் அவளின் விசிறியாக, கை வேலைப் பார்க்கும்போதே யாழினி, “ஆமா யாருக்காக இந்த டிசைன் எல்லாம் போடுறீங்க?” என்றாள்.

 

“நீ போடுற டிசைன் என் மகனுக்காக. நான் போடுறது என் மகளுக்காக” என்றார் சாவித்ரி.

 

“மகன்னா மிஸ்டர் பத்ரவேல் பாண்டியன். மகள்னா ஜெயந்தி அவங்களுக்கா? இல்ல பொன்னி அவங்களுக்கா?”

 

“ரெண்டு பேருக்கும் இல்ல. என் வசந்திக்காக. இந்த வீட்டோட கன்னி சாமி அவ. நாளான்னைக்கு அவளுக்கு தெவசம். அதான் நான்‌ அவளுக்கு வச்சி கும்பிட இந்த ட்ரெஸை ரெடி பண்றேன்.” என்றதும் வியப்படைந்தாள் யாழினி.

 

“ஆமா அங்கிள் இந்த ரூம்ல இல்லையா? பார்வதி ஆன்ட்டி ரூம்லயும் தங்குறது இல்ல போலயே? அவங்களுக்குனு தனி ரூம் எதுவும் வச்சிருக்காங்களோ? உங்களுக்கு அது கஷ்டமா இல்லையா? நான் வேணா உங்கக்கூட இன்னைக்கு நைட் தூங்கட்டுமா?” என்று வலிய‌ வந்து கேட்கவும்,

 

“இல்ல இல்ல எனக்கு தனியா தூங்கறதொன்னும் புதுசில்லம்மா” என்று வலியுடன் சிரித்தார்‌ சாவித்ரி.

 

பின், பேச்சை மாற்ற அவளைப் பற்றி விசாரித்தார்.

 

“ஆமா நீ உன் அம்மா அப்பா பத்தியெல்லாம் சொல்லவே‌ இல்லையே?”

 

“இல்லையே சொன்னேனே பார்வதி ஆன்ட்டிக்கிட்ட. நீங்க என்கிட்ட இப்ப தானே கேட்கறீங்க? எனக்கு அப்பா கிடையாது. அம்மா மட்டும் தான். அவங்களும் பிசினஸ் பிசினஸ்னு வருசத்துல பதினோரு மாசம் வேர்ல்டு டூர் போயிருவாங்க. அவங்களுக்கு சாப்பிட தூங்கன்னு எதுக்கும் நேரம் கிடையாது. நான் அவங்களோட ஒரே வாரிசு.”

 

“அப்போ நீயும் நல்ல வசதியான வீட்டுப் பொண்ணு தானு சொல்லு? உன்னை மட்டும் அவருக்கு பிடிச்சதுனா நிச்சயம் சஷ்டிக்கு கட்டி வச்சிருவாரு.”

 

“சஷ்டிக்கும் எனக்கும் கல்யாணமா? ஜோக் தான். ஆமா நீங்க சஷ்டி பத்தி என்ன நினைக்கிறீங்க ஆன்ட்டி?”

 

“பத்ரி மாதிரியே அவனும் எனக்கொரு புள்ள தாம்மா. என்ன இந்த பார்வதியால தான் அவனை நான் நெருங்க முடியாத மாதிரி ஆகிடுச்சி. ஆனா அவனுக்கு உன்னை மாதிரி ஒரு குணமான பொண்ணு பொண்டாட்டியா வந்தா‌ எனக்கு சந்தோசம் தான்‌” என்று அவளின் நெற்றியில் முட்டினார்.

 

இக்கண்கொள்ளாக் காட்சியை பார்த்தபடியே அவ்வறைக்குள் நுழைந்தான் பத்ரி.

 

“உங்களையும் கைவசப்படுத்திட்டாளா இவ?”  

 

“இவ‌ இவப்பக்கம் யாரையும் சாய்க்கலைனா தான் பத்ரி அதிசயம்.”

 

“அது என்னவோ உண்மை தான்” என்றவன் அவளைப் பார்த்து கண்ணடிக்க, முறைத்தாள் யாழினி.

 

சாவித்ரி மெதுவாக எழுந்து லாக்கரின் பக்கம் சென்றவர் அதிலிருந்து ஐந்து இரண்டாயிரம் ரூபாய் நோட்டுக்கட்டுக்களை எடுத்துக் கொடுத்து, “போன்ல நீ கேட்டப் பணம்” என்று சொல்லிக் கொடுத்தார்.

 

அதை வாங்கிக் கொண்டவன், “நகைங்கல்லாம் பத்திரம் ம்மா. இந்த காலத்துல யாரையும் நம்ப முடியாது.” என்று யாழினியைப் பார்த்தபடியே குத்தலாகக் கூறினான்.

 

சாவித்ரியோ வெகுளியாக, “பத்ரி நகைங்கனு சொன்னதும் தான் ஞாபகம் வருது. நம்ம பரம்பரை நகைங்களை எல்லாம் பாலீஷ் போட கொடுக்கனும்‌பா. இனி அதெல்லாம் தெய்வானைக்கு தான் சொந்தமில்லையா? நம்ம தங்க நகைக்கடைக்காரர் மாணிக்கத்தை நாளைக்கு வீட்டுக்கு வரச்சொல்லு” என்றதும்,

 

“சரிம்மா.” என்றுவிட்டுப் போனான் மைந்தன்.

 

அந்த லாக்கரையே கண்கொட்டாமல் பார்த்தாள் யாழினி.

 

மறுநாள் காலை நகைக்கடைக்காரர் வந்தபோது தன் அறையில் இருந்த லாக்கரில் நகைகளை தேடினார் சாவித்ரி. ஆனால், நகைகள் கிடைக்கவில்லை. வெறும் பெட்டியே இருந்தது.

 

“என்னங்க! பரம்பரை நகைங்க எதையுமே காணோங்க” என்று ரத்னவேல் பாண்டியனிடம் சென்று தன் கைகளைப் பிசைய, அக்குடும்பத்தில் சிலரின் பார்வை மட்டும் சந்தேகமாய் யாழினியின் மேல் விழுந்தது.

 

ஏனெனில் நேற்று முழுவதும் அவரின் அறையில் இருந்தது அவள் தானே.

 

ஆனால், சாவித்ரி அப்படி நினைக்கவில்லை. அதனால் விசாரணை வளையத்துக்குள்ளிருந்து தப்பித்தாள் யாழினி.

 

பத்ரியோ ஆட்களைக் கொண்டு வீட்டிற்குள்ளேயும் வெளியேயும் சல்லடைப் போட்டு தேடினான். ஆனால், எதுவும் சிக்கவில்லை.

 

இறுதியில் அவன் ரத்னவேல் பாண்டியனின் முன்பு தலை குனிந்து நிற்க, “போலீஸுக்கு போனா என் கௌரவம் போயிரும் பத்ரி. இப்ப என்ன பண்ணலாம்?” என்று அவனிடமே கேட்டார்.

 

அவன், “அது வந்துப்பா நகை கண்டிப்பா வெளிய போயிருக்க வாய்ப்பில்ல. இங்க தான் எங்கேயாவது இருக்கனும். ரெண்டுநாள் டைம் கொடுத்தீங்கன்னா..” என்று தடுமாறினான்.

 

“நான் நீ என்னை மாதிரினு நினைச்சேன் பத்ரி. ஆனா அது உண்மை இல்ல. உன்கிட்ட என் சுறுசுறுப்பும், புத்திசாலித்தனமும் பத்தல. வீரம் மட்டும் என்னைக்கும் நம்மளுக்கு கைக்கொடுக்காது பத்ரி. கல்யாணம் ஆனப்பின்னாடியாவது நீ முழு ஆம்பளையா மாறுறியானு பார்க்கலாம்” என்று அவனை அவமானப்படுத்திவிட்டுப் போனார்.

 

அதில் முகம் கன்றிய பத்ரி தனதறையில் ஆத்திரத்துடன் உட்கார்ந்திருக்க, அவனின் முன் வந்து நின்றாள் தெய்வானை.

 

அவன், “நீ என் ரூமுக்கு எதுக்கு வந்த? இப்படி தனியா என் ரூமுக்கு வரக்கூடாதுனு உன்னை சொல்லியிருக்கேனா இல்லையா? உன் அம்மா எங்க? அக்கா! அக்கா!” என்று கூச்சலிட,

 

“மாமா ப்ளீஸ் சத்தம் போடாதீங்க. நேத்து யாழினி டீ கொடுக்க வந்தப்ப மட்டும் நீங்க திட்டல? இன்னைக்கு என்கிட்ட மட்டும் பாரபட்சம் காட்டறீங்க? ஏன் மாமா? உங்களுக்கு என்னை பிடிக்கலையா? நான் வேணும்னா தாத்தாக்கிட்டப்போய் உங்களுக்கு என்னை பிடிக்கலைனு சொல்லி கல்யாணத்தை நிறுத்த சொல்லவா?” என்றதும், பதறி மறுத்தான் பத்ரி.

 

“ஏய்! ச்சீ! ச்சீ! பத்ரிக்கை அடிக்க கொடுத்திருக்க இந்த நேரத்துல போய் இப்படி பேசுற? அப்பாவுக்கு தெரிஞ்சது சாமியாடிருவாரு. லூசுத்தனமா எதையும் செஞ்சு வைக்காத”

 

“அப்படினா நான் ஒன்னு கேட்பேன். நீங்க  உண்மைய சொல்லனும். உங்களுக்கு நிஜமாவே என்னை பிடிச்சிருக்கா மாமா? இல்ல தாத்தா சொன்னாருனு கல்யாணம் பண்ணிக்கிறீங்களா? எனக்கு நீங்க முழுசா வேணும் மாமா. எனக்கு மட்டுமே வேணும். உங்களை நான் யார் கூடவும் பங்குப்போட்டுக்க தயாரா இல்ல” என்றவள் அழுதே விட,

 

“ஏய் தெய்வா! இதென்ன சின்னப்புள்ள மாதிரி. மாமாவுக்கு உன்னை ரொம்பப் பிடிக்கும். போதுமா?” என்று சமாளிக்கத் திணறினான் பத்ரி.

 

“அப்ப ப்ரூவ் பண்ணுங்க” என்றவள் அடம்பிடிக்க,

 

“எப்படி?” என்றான்.

 

“என்னை கிஸ் பண்ணுங்க” என்று கன்னத்தை காண்பித்தாள்.

 

அவன் திணறிவிட்டான்.

 

“அதெல்லாம் கல்யாணத்துக்கு அப்பறம் தான். சாரி தெய்வா” என்று மறுத்தான்.

 

அவளுக்கு மீண்டும் கண்களில் நீர் அணை கட்டியது.

 

“ஹே! ப்ளீஸ் ப்ளீஸ் அழாத. வேற எதாவது சொல்லு” என்கவும்,

 

கண்களைத் துடைத்தவள், “அப்ப இன்னைக்கு என்னை வெக்காளியம்மன் கோவிலுக்கு கூட்டிட்டுப்போங்க” என்றாள்.

 

அவன் முடியவே முடியாதென்று மறுத்தான்.

 

“அது கிழக்குத்தெருக்காரங்க மட்டுமே போற கோவில் தெய்வா. நம்ம அங்கப்போனா அப்பாவுக்கு பிடிக்காது. இவ்வளவு நாள் இல்லாம இன்னைக்கென்ன புதுசா அந்த கோவிலுக்குப் போகனும் சொல்ற?” என்று அவளை சந்தேகமாய் பார்த்தான்.

 

“தாத்தாவுக்கு பிடிக்காதுனு எனக்கும் தெரியும். ஆனா அந்த அம்மன் சக்தி வாய்ந்தவளாம். என்ன வேண்டினாலும் பலிக்குமாம். எனக்கு அங்கப் போயே ஆகனும் மாமா” என்றாள்.

 

அவளின் கண்ணீர் அவனை சற்று அசைத்துப் பார்த்தது. வேறுவழியின்றி சரியென்று சம்மதித்தான்.

 

அக்கோவிலுக்கு ஜீப்பில் அவனுடன் செல்லும் போது அவளுக்கு அளவளாவ நிறைய நேரம் கிடைக்குமென்று நினைத்தாள் தெய்வானை.

 

ஆனால், கோவிலுக்கு கிளம்புபவளை எதேச்சையாய் சாளரம் வழியாகப் பார்த்த யாழினி அவளின் மகிழ்ச்சிக்கு காரணம் புரியாமல் விழித்தாள்.

 

பின், அவள் எங்கோ கிளம்புவதை புரிந்துகொண்டு கண்காணிக்க வேண்டுமென்கிற நோக்கில் சஷ்டிக்கு தகவல் கொடுத்துவிட்டு தானும் ஷராரா ஒன்றை அணிந்துகொண்டு கிளம்பினாள்.

 

தெய்வானை பட் ரோஸ் வண்ண கல்யாணி காட்டன் சுடிதாருக்குள் தன்னை நுழைத்துக்கொண்டு கண்ணாடியில் முன்னால் பின்னால் அளந்தாள். அவளின் இடையை தொடும் அளவு இருந்த பிரெஞ்ச் பிளைட் பின்னலை சரியாக உள்ளதா என ஆராய்ந்தாள்.

 

பின், சிறிய‌ அடர்கோவி பொட்டிட்டு மேலே சந்தனத்தால் அதற்கு‌ அலங்காரமும் சேர்த்து திருப்தியாக கீழே வந்தாள்.

 

பத்ரி முடியை தூக்கிவாரி சீவி வெள்ளை நிற சட்டையும் வெளிர் நீல‌ நிற ஜீன்ஸும்‌ அணிந்திருந்தவன் ஜீப்பை தயாராக காரிடரில் கொண்டு வந்து நிறுத்தியிருந்தான்.

 

அவள் ஜீப்பில் ஏறியதும் முரட்டுத்தனமாக அதில் ஏற முற்பட்ட தன் ஆட்கள் இருவரை வேண்டாம் என்று தடுத்தவன் காரை எடுக்கப்போகும் சமயத்தில் இரு கைகளையும் சோளக்காட்டு பொம்மைபோல் விரித்து வைத்து முன்னே வந்து நின்றனர் யாழினியும், சஷ்டியும்.

 

அவர்களிடம் என்னவென்று கேட்பது போல் பத்ரி ஹாரன் அடிக்க, அருகில் வந்த சஷ்டி, “எங்களுக்கும் உங்கக்கூட வரனும். யாழுக்கும் ஊரை சுத்திப் பார்த்த மாதிரி இருக்கும்” என்றான் எங்கோ பார்த்தபடி.

 

பத்ரி பதிலளிப்பதற்குள் யாழினி ஓடிவந்து காரில் ஏறிக்கொண்டாள்.

 

தெய்வானையோ அவர்களின் இச்செயலில் தலையிலடித்துக் கொள்ளாத குறையாக அமர்ந்திருந்தாள். ஆனால், பத்ரியின் அருகில் முன் சீட்டில் அமர்ந்திருந்தது மட்டும் சற்று ஆறுதல்.

 

தொடரும்…

 

உங்க கமெண்ட்ஸ்கா‌க வெயிட்டிங் தங்கம்ஸ்;)

 

❤️ Loading reactions...
1 Comment
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page