வெந்து தணிந்த இதயம்-9

நான் உங்கள் AY_84

 

வெந்து தணிந்த இதயம்-9

 

பாட்டி தனது ரத்த அழுத்தம் எகிறி, “ஏன்டி என்னை திட்டுற? நான் என்னடி பண்ணேன்?” என்று அழாக்குறையாக கேட்க, யாழினி தௌசண்ட்வாலாவானாள்.

 

“நீ தான் கிழவி எல்லாத்துக்கும் காரணம். உன்னால தான் நான் அந்த தாலிங்களை திருடினேன். சின்ன வயசுல நீதான் எனக்கு இப்படி திருட சொல்லிக் கொடுத்து என்னை கெடுத்து வச்சிட்ட. என் அம்மா அப்பவே சூடு வச்சு படிச்சு படிச்சு சொன்னாங்க இந்த விசயத்துல மட்டும் உன் பேச்சை கேட்கவேக்கூடாதுனு. நான் தான் கேட்கலை. நீ கொடுக்கற எக்ஸ்ட்ரா பாக்கெட் மணிக்கு ஆசைப்பட்டு இப்ப அல்லல் படுறேன்.” என்று கூறியதில் பாட்டி தலையும் புரியாமல் வாலும் புரியாமல் விழித்தார்.

 

பின், அனைத்து விபரத்தையும் மளமளவென கூறினாள் யாழினி.

 

உடனே பாட்டி அசந்துபோய், “தங்கம் நீ சொல்றதெல்லாம் உண்மையா? நீ அந்தத் தாலிங்களையெல்லாம் திருடுனியா? ஆமா எப்படி நீ திருடுன பொருளை அவங்க வீட்டுக்குள்ளயே கொண்டு போன?” என்றதும், அன்றைய நாளில் நடந்ததை விவரித்தாள் யாழினி.

 

தாலிகளை எடுத்துக்கொண்டு அங்கிருந்த ஆலமரத்தின் இடுக்கில் சென்று ஒளிந்தவள் ஒவ்வொரு தாலியாக தனது பேண்டின் பட்டியின் மேல் உள்பக்கமாக வரிசையா செருகினாள்.

 

இதைக் கேட்டதும் அம்மன் படத்தில் வடிவுக்கரசியின் கணவன் கதாபாத்திரம் இடுப்பில் ரூபாய் நோட்டுக்களை கட்டி வைத்திருப்பதை போல் யாழினி தாலிகளை கட்டி வைத்திருப்பதை கற்பனைப் பண்ணி பார்த்த பாட்டி விழுந்து விழுது சிரித்தார்.

 

“சிரிக்காத கிழவி காண்டாகுது. எனக்கு எல்லாம் சொல்லிக் கொடுத்தியே இப்படி ஒருத்தன் மேல கை வைப்பான்னு சொன்னியா?” என்று அழுததும்,

 

“அதான் உனக்கு தற்காப்பு கலையெல்லாம் சொல்லி கொடுத்தேனேடி? ரெண்டு விட வேண்டியது தானே?”

 

“ம்? உன்னைத் தான் ரெண்டு விடனும். அவன் பலசாலியா இருக்கான் கிழவி”

 

“ஓ! அவன் அழகாவும் இருக்கானா?”

 

“ம், கொஞ்சமே கொஞ்சம். ஏன் கேட்கற?” என்ற யாழினியின் 
நெற்றி சுருங்கியது.

 

“அடிசக்கை! அப்படின்னா அவன் உன் கையைப் பிடிச்சி இழுத்துட்டான்னு கத்தி ஊரைக்கூட்டி உன் கழுத்துல தாலி கட்ட வைக்க வேண்டியது தானடி?”

 

“போடி‌ லூசுக் கிழவி! சொல்லுற ஐடியாவைப் பாரு” என்று கோபம் தலைக்கேறியவள் மீண்டும் கெட்ட வார்த்தைகளில் அவரை அர்ச்சித்தாள்.

 

பின், தன் அன்னையை அவர் பார்த்துக்கொள்வது நினைவு வந்ததும் பாவம் பார்த்து விட்டாள்.

 

“அம்மாவோட மருத்துவ செலவுக்காகத்தான் கிழவி நான் இவ்வளவு நடந்தும் ஊமையா இருக்கேன். இல்ல? அந்த பத்ரி என் கையில அரிசி பத்திரி ஆகிருவான். ஆமா அம்மாவுக்கு இப்ப உடம்பு எப்படியிருக்கு? மருந்து மாத்திரையெல்லாம் ஒழுங்கா சாப்பிடுறாங்களா?”

 

“எங்க? ரொம்ப அடம் பிடிக்கிறாடி. என் மக வந்தா தான் சாப்பிடுவேனு சொல்றா. ஒவ்வொரு நாளும் போதும் போதும்னு ஆகுது. அவ தான் செத்துப்போயிருவோம்னு பயப்படுறா போலடி. அதான் தன்னால முடியுற போதெல்லாம் எழுந்து உட்கார்ந்து பக்கம் பக்கமா லெட்டர் எழுதுறா.”

 

“லெட்டரா? அப்படி அதுல என்ன எழுதுறாங்க?”

 

“அய்யோ! அந்த கண்றாவிய அவ தமிழ்ல எழுதுறாடி. எனக்கு தான் தமிழ் வாசிக்கத் தெரியாதே. நான் வேணும்னா உனக்கு அதை போட்டோ எடுத்து அனுப்பவா? உனக்கு தான் தமிழ் வாசிக்க சொல்லிக் கொடுத்திருக்காளே?” என்றதும், சரியென்றவள் நாளை மறுநாள் தான் வரப்போகும் தகவலையும் சொல்லிவிட்டு அழைப்பை துண்டித்தாள்.

 

தன் அன்னையைப் பற்றியே யோசித்ததில் அன்றிரவு அவளுக்கு தூக்கம் வருவேனா என்றது.

 

மனதிற்குள்ளேயே ‘இன்னும் ஒருநாள் தாம்மா. எனக்காக கொஞ்சம் பொறுத்துக்கோங்க. ஐ பேட்லி மிஸ் யூ’ என்று புரண்டு புரண்டு படுத்தாள்.

 

வானில் நைட் டியூட்டி பார்த்துக் கொண்டிருந்த சந்திரன் குளிருக்கு இதமாய் மேகச்சுவரில் மறைந்து நின்று சிகரெட் பிடித்துக் கொண்டிருந்த அந்த யாமப்பொழுதில் ஒரு வழியாக உறங்கிப்போனாள் யாழினி.

 

மறுநாள் காலை அவளும், தெய்வானையும் தங்கள் அறையின் கதவு பலமாக தட்டப்படுவதைக் கண்டு பயந்து வேகமாக வந்து திறந்தனர்.

 

அங்கு நின்றிருந்ததோ ஒரு கொண்டாட்டத்திற்கு தயாரான கூட்டம். “சர்ப்ரைஸ்! ஹாப்பி பெர்த்டே யாழு” என்று அவளின் கையில் ஃபெர்ரரோ ரோச்சர்களும் சிவப்பு ரோஜாக்களும் அடங்கிய பூச்செண்டை திணித்தான் சஷ்டி.

 

காதம்பரியும், கவிதாம்பரியும் தங்கள் கையிலிருந்த வயலின்களில் பிறந்தநாள் மெட்டிசைத்தார்கள்.

 

இரவு உடையுடன் நின்ற யாழினியின் கரம் மற்றும் இடையைப் பற்றி மேல்நாட்டு நடனமாடினான் சஷ்டி.

 

யாழினி அவன் கரம் பிடித்து சுழல சுழல பார்வதியும் பொன்னியும் சிரித்தபடி பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

 

சஷ்டி ஒரு கட்டத்தில் மூச்சு வாங்கி நின்றவளை, தனது பேண்ட் பாக்கெட்டிலிருந்த மோதிரப்பெட்டியைக் காண்பித்து வாயடைக்கச் செய்தான்.

 

அவன் அதிலிருந்த ஒரு வைர மோதிரத்தை எடுத்து யாழினியின் விரலில் அணிவிக்க, தெய்வானையால் அந்தக் காட்சியை மேற்கொண்டு பார்க்க முடியவில்லை. காரணம் கண்களிரண்டும் நீரால் நிறைந்திருந்தன.

 

இவை அனைத்தும் தன் போன பிறந்தநாளுக்கு பத்ரி செய்வான் என்று அவள் எதிர்பார்த்து தன் நாட்குறிப்பில் எழுதி வைத்தது. அதெல்லாம் தற்போது வேறு ஒருத்திக்கு நடப்பதை அவளால் ஜீரணிக்கவே முடியவில்லை. அதுவும் சஷ்டி செய்வதை பொறுக்கவே முடியவில்லை.

 

‘டேய் சஷ்டி உனக்கு எவ்வளவு தைரியம் இருந்தா இதையெல்லாம் நேத்து வந்தவளுக்கு செய்வ? டேமிட்! நான் தான்டா இதுக்கெல்லாம் தகுதியானவ. அவ யாரோ ஒரு வழிப்போக்கி, திருடி, நாடகக்காரி. நீ என்னை தாங்குடா. என்னை கொண்டாடுடா. தாத்தா மட்டும் பத்ரி மாமாவை கல்யாணம் பண்ணிக்க சொல்லலைன்னா நான் உன்னைத் தான்டா கல்யாணம் பண்ணியிருப்பேன் ஃபூல்.’ என்று மனதிற்குள் புலம்பியபடியே ஸ்தம்பித்து நின்றிருந்தாள்.

 

அனைவரும் அவளை உலுக்கி என்னவென்று கேட்க, வேகமாக அறைக்குள் சென்று தாழ்போட்டுக்கொண்டாள்.

 

அப்போது கதவு பலமாகத் தட்டப்படும் சத்தம் கேட்டு வெறுப்பாக அதை திறந்தவள், வெளியே தன் தாத்தா நின்றிருப்பது கண்டு முகம் வெளிறிப்போனாள்.

 

“என்ன தாயி! எதுக்கு இப்படி தேம்பி தேம்பி அழுதுட்டு இருக்க?” என்றதும்,

 

“அதுவந்து தாத்தா…. நேத்து நான் உங்களுக்கு தெரியாம அந்த வெக்காளியம்மன் கோயிலுக்குப் போனேனா? அதான் உங்களுக்கு தெரிஞ்சா என்ன சொல்லுவீங்களோன்னு பயந்து..” என்று அவரின் நெஞ்சிலேயே சாய்ந்தாள்.

 

சஷ்டியும் மற்றவர்களும் விவரமாக தங்களின் அறைகளுக்கு பாய்ந்திருந்தார்கள்.

 

“இங்கப்பாரு தெய்வாக்குட்டி, தாத்தாவுக்கு எல்லாம் தெரியும். நீ எப்ப போன, யார் யார் கூடல்லாம் போன, யாரை வண்டியில ஏத்திட்டு ஹாஸ்பிடல் கொண்டு போனாங்க எல்லாம் தெரியும். ஆனா, அங்க என் ரத்தம் நீ மட்டும் தான்னு நிரூபிச்ச பாரு? அதுக்கு தான் தாத்தா இந்த வைர நெக்லஸை உனக்காக வாங்கிட்டு வந்தேன்.” என்று ஒரு பெட்டியை வழங்கியதும், அவளின் கைகள் விருப்பமேயின்றி பெற்றன.

 

அவளுக்கு அவர் வழங்கிய வைர நெக்லஸைக் காட்டிலும், சஷ்டி யாழினிக்கு அணிவித்துவிட்ட அந்த வைர மோதிரத்தின் மேல் தான் கண்.

 

“கல்யாணத்துக்கு இன்னும் ரெண்டு நாளை வச்சிக்கிட்டு நீ இப்படி கண் கலங்கலாமா? தாத்தா இன்னைக்கு டெல்லிக்கு கிளம்ப இருக்கறேன். நான் பத்மஸ்ரீ பட்டம் வாங்கின உடனேயே இங்க வந்துருவேன். வந்ததும் என் பேத்திக்கு கல்யாணம் தான்.” என்று குதூகலமாகச் சொல்லி அவளின் நெற்றியில் முட்டினார்.

 

அவளும் வேறுவழியின்றி சிரித்தாள்.

 

அவர் அவளுக்கு பிரியாவிடை கொடுத்துவிட்டு கீழே சென்றதும் படக்கென அவ்வறைக்குள் நுழைந்த சஷ்டி, “உன்னை என்ன வகையில சேர்க்கறதுனே எனக்கு தெரியல தெய்வா. உனக்கு போயும் போயும் இந்த வைர நெக்லஸ் தான் முக்கியம் இல்ல? ச்சே!” என்று ஆக்ரோசமாகச் சொல்லிவிட்டுப் போனான்.

 

யாழினியோ தன் விரலில் கிடக்கும் வைர மோதிரத்தை கண்கள் மின்ன பார்த்துக் கொண்டிருந்தாள். தெய்வானைக்காக எதையும் செய்ய தயாராய் இருக்கும் சஷ்டிக்கு மனதிற்குள் ஆரத்தி எடுத்து வழிபட்டாள்.

 

கட்டிலில் உடைந்துபோய் உட்கார்ந்திருந்த தெய்வானையோ இலக்கின்றி வெறித்தாள். அவளுக்கு ஒரு பக்கம் சஷ்டி தன்னைவிட்டு விலகியது சந்தோசம் என்றால், மறுபக்கம் மரணவலி. ‘ஏன் எனக்கு மட்டும் இவ்வளவு வேதனை? நான் என்ன பாவம் செஞ்சேன்?’ என்று மனதிற்குள் அரற்றினாள்.

 

யாழினி அவளை கண்டுகொள்ளாமல் நேரே குளியலறை சென்றவள் அங்கிருந்த வெஸ்டர்ன் டாய்லெட்டின் பின்னால் இருந்த செராமிக் வாட்டர் டேங்கின் மூடியை மெதுவாக திறந்தாள்.

 

அதற்குள் தான் ஒளித்து‌ வைத்திருந்த தொண்ணூற்றியொன்பது தங்கத்‌ தாலிகளையும் எடுத்துப் பார்த்து ஒரு பைக்குள் திணித்தாள்.

 

ஒருபுறம் ‘இதுக்குள்ளப்போய் ஒளிச்சி வச்சிருக்கோமே’ என்று அற்பமாய் தோன்றினாலும், மறுபுறம் ‘தாலிக்கு மதிப்பு இல்ல. அதுக்கு பின்னாடி இருக்கற பொண்ணோட மனசுக்கு தான் மதிப்பு’ எனும் டியூட் பட டயலாக்கை சொல்லிவிட்டு, நேரே அதை பத்ரியிடம் ஒப்படைக்கச் சென்றாள்.

 

வைர மோதிரம் கிடைத்த திருப்தியில் தங்கத்தாலிகளை ஒப்படைக்கும் முடிவுக்கு வந்தாள்‌ அந்த‌ நேர்மையான திருடி.

 

காலை வேளை என்பதால் பத்ரி எப்போதும் போல் டம்பிள்ஸை பிடித்து உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தான். மெல்லிய சூரியஒளி அவனின் அறைக்குள் எட்டிப்பார்த்துக் கொண்டிருந்தது.

 

அப்போது அவனிடம் வந்த யாழினி அவனை வெறிக்கும் செயலில் எல்லாம் ஈடுபடாமல் நல்லபிள்ளையாக தான் வந்த வேலையைப் பார்த்தாள்.

 

அவனிடம் இன்றிரவு தான் அங்கிருந்து கிளம்புவதாகக் கூறிவிட்டு, தன் கையிலிருந்த பையை ஒப்படைத்தாள்.

 

அதனை திறந்துப் பார்த்தவன் உள்ளே அவள் திருடிச்சென்ற அத்தனை தாலிகளும் இருப்பது கண்டு, “வெரி குட்! இதை முன்னாடியே கொடுத்திருந்தா ரொம்ப சேதாரப்பட்டிருக்க மாட்ட. இனி எங்கேயும் போய் இப்படி கை வச்சி மாட்டிக்காத. எல்லாரும் என் அளவுக்கு நல்லவனுங்களா இருக்க மாட்டானுக. சவுக்கு மரத்துல கட்டி வச்சி நல்….லா தோளை உரிச்சிவானுக.” என்று நக்கலாகக் கூறினான்.

 

யாழினிக்கோ பொறுமை எல்லையைக் கடந்தது.

 

“உன்னோட தொடுகைய சகிச்சிக்கறதுக்கு என்னை சவுக்கு மரத்துல கட்டி வச்சி தோளை உரிக்கறதே மேல். ஒரு பொண்ணோட சம்மதம் இல்லாம அவ மேல கைய வைக்கிற எவனையும் நான் ஆம்பளையா கன்சிடர் பண்றதே இல்ல. அதுவும் உன்னை சுத்தமா.. ஹூகும். இனி எந்தப்பொண்ணு மேல கைய வச்சாலும் உனக்கு இந்த அடி ஞாபகத்துக்கு வரனும்.” என்று அவன் இடக்கன்னத்தில் இருமுறை பளார் பளாரென அறைந்தாள்.

 

குரோதம் கொப்பளிக்க நின்றவனோ, “இல்ல! இல்ல! வேண்டாம் பத்ரி. கூல் கூல். நீ ஆசைப்பட்ட உடம்பு. நீயே அடிச்சி புண்ணாக்கக்கூடாது. மெத்தையில ஆசைத்தீர அனுபவிக்க வேண்டியது.” என்று தனக்குத் தானே சொல்லிக்கொண்டு, அவளிடம் எச்சரிக்கை ஒன்றை செய்தான்.

“இங்கப் பாருங்க யாழினி மேடம். இதுவரை என்னை தொட்ட யாரையும் நான் சும்மா விட்டதில்ல. நீ இவ்வளவு செஞ்ச பின்னாடியும் நான் உன்னை எதுவும் செய்யாம விடுறேனா அதுக்கு காரணம் உன்னோட இந்த அழகான முகம், குறிப்பா இந்தக் கண்கள். ஆனா எல்லா தடவையும் அது உனக்கு உதவாது. வேண்டிக்கோ கடவுள் நம்பிக்கையிருந்தா. இப்ப இந்த வீட்டைவிட்டு போகப்போற நீ உன் வாழ்க்கையில இன்னொரு தடவை என்னை சந்திச்சிடவேக்கூடாதுனு. அப்படி நான் உன்னை பார்த்தா என் பாஷைல ஆம்பளைனா என்னன்னு நான் உனக்கு நிரூபிக்க வேண்டியிருக்கும்… உன் வாழ்நாள் முழுமைக்கும்!” என்று உரத்தக்குரலில் கர்ஜித்தான்.

 

அக்குரலில் இருந்த உண்மை அவளின் முதுகுத்தண்டை குளிரச்செய்தது.

 

பயத்தில் வேகமாக அங்கிருந்து சென்றவள் டெல்லிக்கு பத்மஸ்ரீ பட்டம் வாங்க புறப்பட்ட ரத்னவேல் பாண்டியனை இடித்துவிட்டாள்.

 

தொடரும்…

 

கதை பிடிச்சிருந்தா லைக் பண்ணுங்க தங்கோம்ஸ்:)

கமெண்ட் பண்ணி பரிசை வின் பண்ணுங்க;)

கதை பிடிச்சிருந்தா கட்டாயம் ஸ்டோரி லிங்கை ஷேர் பண்ணுங்க தங்கோம்ஸ்:)
 

❤️ Loading reactions...
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page