வேண்டினேன் – 6
“நில்லு…”
அவன் கோபமாய் உறுமிட, அவள் கால்கள் பசை போட்டது போல தரையில் ஒட்டிக்கொண்டு நின்றது.
“தப்பு பண்ணிட்டு ஒரு மன்னிப்பு கூட கேட்காம உள்ள போய் ஒளிஞ்சுக்குவியா? ஒழுங்கா இதெல்லாம் கிளீன் பண்ணு…”
‘நீதானடா தூக்கி அடிச்ச? நான் எதுக்காக கிளீன் பண்ணனும்?’ என்று கேட்க வந்த வார்த்தைகளை அப்படியே முழுங்கி விட்டாள்.
“இவ வேலைய முடிச்சதும் சொல்லு” என்று ரவியிடம் கூறிவிட்டு தன் அறைக்குள் சென்று கதவைப் பூட்டிக்கொண்டான். குழந்தை போல விசும்பி அழுதாள் மீரா.
ப்ரியா, “சரி விடு, அவன் இப்படித்தான். போகப்போக உனக்கும் பழகிடும்.”
“இல்ல ப்ரியா, நீயே பார்த்தல? நான் தெரியாம பண்ண தப்புக்கு இவ்வளோ ஓவரா பேசணுமா? மசாலாவை கொட்டினதோட இல்லாம, என்னையும் திட்டி வச்சுட்டு, அவரு பாட்டுக்கு உள்ள போய் உட்கார்ந்துகிட்டாரு. நான் எங்க ஊர்ல இருந்து இவ்வளவு தூரம் இதை அள்ளுறதுக்கா வந்தேன்?…” என்று அழுகையோடு புலம்பினாள்.
“நியாயப்படி உன்னையெல்லாம் சாணி அள்ள விட்ருக்கணும். மசாலாவை அள்ளச் சொன்னேன்னு சந்தோஷப்பட்டுக்க!” எனும் அதிகார குரல் அவள் முதுகுக்கு பின்னால் இருந்து கேட்டது.
அவன் இப்போதைக்கு திரும்பி வரமாட்டான் என்ற நினைப்பில் தான் அவள் போக்கில் புலம்பினாள். அவன் வந்துவிட்டான் என்று தெரிந்ததும், அவள் தைரியம் எல்லாம் கானல் நீர் போல காணாமல் போனது. தன் சிவந்த விழிகளை, மெதுவாய் குரல் வந்த திசைக்கு திருப்பினாள். வேறு உடை மாற்றி விட்டு வந்திருந்த கண்ணன், கால் மேல் கால் போட்டுக் கொண்டு நாற்காலியில் அமர்ந்திருந்தான். அவன் கண்கள் சளைக்காமல் அவளை இன்னமும் அதே மாதிரி முறைத்துக் கொண்டிருந்தது.
அவளது பளிங்குக் கண்களில் மீண்டும் கண்ணீர் கோர்த்தது. ஏற்கனவே அழுததால் சிவந்திருந்த அவளது விழிகள், அச்சத்தின் சாயலை அப்பட்டமாக வெளிப்படுத்தின. தலை குனிந்து, காலடிகளை மெல்ல ஊன்றி எழுந்து நின்றாள். கையில் இருந்த கிண்ணத்தை சிங்க் உள்ளே போட்டுவிட்டு, கொலுசின் ஓசை கேட்காத அளவு நடந்து வந்தாள்.
கையில் இருந்த ஈரத்துணியால் தரையை துடைத்து எடுத்தாள். அவளது கண்ணாடி வளையல் மோதும் சப்தம் தவிர அங்கு வேறெந்த ஓசையும் இல்லை. லாவகமாய் சுவரையும் தரையையும் துடைத்து எடுத்தாள். ஒரு கட்டத்திற்கு பிறகு அவளது ஒவ்வொரு அசைவும், ஏனோ இவன் கண்களுக்கு அபிநயமாக தெரிய ஆரம்பித்தது.
அந்த அபிநய அசைவுகள், கண்ணனின் கவனத்தை ஈர்த்தது. அவனது முகம் கோபத்தால் இறுகியிருந்தாலும், இமைக்காமல் அவள் முகத்தினை பார்த்துக் கொண்டே இருந்தான். அவனது ஆழ்மனதில், மீராவின் பயந்த தோரணை நிரந்தரமாகப் பதிந்துவிட்டன. அக்னி ரூபமான தன் மனதின் ஓரத்தில், லேசாக ஒரு குளிர்ச்சி பரவுவதைப் போல உணர்ந்தான். இது அவனுக்குப் புதிய உணர்வு.
மீரா தரையை துடைத்துவிட்டு, ப்ரியாவின் அருகில் சென்று நின்றாள். அவன் தன் முகத்தை வேண்டுமென்றே இன்னும் கடுமையாகவும், கோபமாகவும் வைத்திருந்தான். அது அவளது பயத்தை மேலும் அதிகப்படுத்த வேண்டும் என்பதற்காக அல்ல. மாறாக, அவள் அங்க அசைவுகளைத் தான் ரசிப்பதை வேறு யாரும் கண்டுபிடித்து விடக்கூடாது என்பதற்காகத்தான்.
ரவி, “டைம் போகுதுடா…” என்று அறிவுறுத்த, கண்ணன் மீண்டும் வேலையை ஆரம்பித்தான்.
இம்முறை அவன் ஒரு புதிய ரெசிபியை ஆரம்பிக்க ஆயத்தமானான். அவன் வெங்காயத்தை நறுக்கத் தொடங்க, அவனது கை மின்னல் போல வேகமாய் செயல்பட்டது. ஒவ்வொரு துண்டையும் சம அளவில், மிக நேர்த்தியாக நறுக்கினான்.
அவன் தீவிரமாய் சமையல் செய்வதைக் கண்ட மீரா, தன் கண்ணீரைத் துடைத்துவிட்டு சற்றுத் தூரம் தள்ளி நின்று வேடிக்கை பார்க்க ஆரம்பித்தாள். அவனது உறுதியான கைகளும், லாவகமான அசைவுகளும் அவளது மனதை மீண்டும் வசீகரித்தன. நடுவே ஒருமுறை, ஸ்டைலாக கத்தியை தூக்கிப் போட்டு கேட்ச் பிடித்தான்.
மீரா, “மெதுவாங்க…” என்று அவசரப்பட்டு சொல்லிவிட, அவன் பார்வை இவள் பக்கம் திரும்பிற்று. அடுத்த நொடியே, கை இரண்டால் வாயை இறுக்கி மூடிக் கொண்டாள் அவள்.
“ரவி, கேமராவ ஆஃப் பண்ணுடா” என்று கூறிவிட்டு விறுவிறுவென அவளிடம் சென்றான் கண்ணன்.
ப்ரியா, “போச்சு, இன்னிக்கி வீடியோ எடுத்த மாதிரிதான்!” என்று தலையில் கை வைத்துக் கொண்டு தரையில் உட்கார்ந்து விட்டாள்.
மீரா, அப்பார்ட்மென்ட் வளாகத்திற்குள் இருந்த சிறிய பெருமாள் கோவிலில் அமைதியாக உட்கார்ந்திருந்தாள். அவள் மனதில் ஒரு பெரும் போராட்டமே நடந்துகொண்டிருந்தது.
காரணம், கடந்த ஒரு வாரமாக சமையல் நேரங்களில் அவளை வீட்டிற்குள் இருக்க விடுவதில்லை கண்ணன். அவன் தான் இப்படி செய்கிறான் என்றால், கடவுள் அதற்கு மேலாக அவளை படுத்தி எடுக்க முடிவு செய்துவிட்டார்.
சற்றுமுன் அவள் எண்ணுக்கு அழைத்த அவளின் அப்பா சேகர், “அம்மாடி, அம்மாவுக்கு திடீர்னு ஏதோ ஸ்கேன் பார்க்கணும்னு சொல்றாங்க. சனிக்கிழமை செய்யணுமாம். உனக்கு அங்க ஏதாவது பணம் கிடைக்கிற மாதிரி இருக்குதாமா?” என்று தயக்கத்தோடு கேட்டார்.
“நான் கேட்டு பாக்குறேன்பா. நீங்க கவலைப்படாதீங்க. எப்படியாவது ரெண்டு மூணு நாளுக்குள்ள ஏற்பாடு பண்றேன்” என்று அப்பாவை சமாதானம் செய்து விட்டாள். ஆனால் பணத்திற்கு என்ன செய்வது என தெரியவில்லை!
முதல்நாள் வீடியோ ஷூட்டின்போது மசாலாவைக் கீழே கொட்டியதிலிருந்து, கண்ணன் அவளைச் சமையலறைப் பக்கமே அண்டவிடவில்லை. தனக்கு தெரிந்த ரெசிபியை சொல்கிறேன் என்று கூறினாலும் காதில் வாங்கவில்லை. அவள் இங்கு வந்ததே பிடிக்காதது போல, வீடியோ எடுக்கும்போதெல்லாம், விரட்டி அடிக்காத குறையாய் வெளியே அனுப்பிவிடுகிறான்.
இன்றுகூட வேலை ஆரம்பித்த சில நிமிடங்களிலேயே, “நீ இங்க இருந்தா மறுபடியும் ஏதாவது குழப்பம் செய்வ! போய் வெளிய நில்லு!” என்று கத்தி வெளியே துரத்திவிட்டான்.
பத்து நாள் வீணானதோடு, பணத்தை பற்றிய கவலையும் சேர்ந்து கொண்டது. அழக்கூட திராணியின்றி, மீரா சிலை போலப் பெருமாள் சன்னதிக்கு முன் அமர்ந்திருந்தாள். அவளது மனம் முழுக்கச் சந்தேகங்களும், பயமுமே நிரம்பியிருந்தன.
‘இவன் பண்றதெல்லாம் பார்த்தா நமக்கு பணம் வருமா வராதானு டவுட்டா இருக்கே. இந்த கோபக்காரனை நம்பி இவ்வளவு தூரம் வந்தது தப்போ?! இதே ஊர்ல வேற ஏதாவது செஞ்சு பணம் சம்பாதிக்கலாமா? இல்லீகல் வேலையா இருந்தா கூட பரவாயில்ல. யாருட்ட விசாரிக்கலாம்?’ என்று மனம் ஒருவாக்கில் போனது. அந்த அளவுக்கு அவளது அம்மாவின் நினைவுகள் அவளுடைய மனதை கனமாக்கி விட்டிருந்தன.
‘அம்மாவோட ஸ்கேன் செலவுக்கு என்ன செய்ய போறேன்? எனக்கு ஒரு வழிகாட்டு தெய்வமே…’ என்று கண்களை மூடி, கண்ணீருடன் கடவுளிடம் வேண்டிக் கொண்டிருந்தாள்.
அந்த அமைதியைக் கலைக்கும் விதமாக, “வேர்க்கடலை சாப்பிடுறீங்களா ஃப்ரெண்ட்?” என்று கேட்டபடி, அவளருகே வந்து அமர்ந்தான் நகுல்.
மீரா படாரென்று கண் திறந்தாள். கண்ணனின் தம்பி, அதிலும் அவன் விரோதி! என்ற நினைப்பே அவளுக்குள் ஒரு பதற்றத்தை தோற்றுவித்தது.
“நீங்களா?” என்று பதறியவாக்கில் கேட்டாள்.
நகுல் முத்து பல் வரிசை தெரிய சிரித்தான். அவனது தோற்றமும் பேச்சும் கண்ணனைப் போலக் கடுமையாக இல்லை. வெகு சகஜமாய், நெடுநாட்கள் பழகிய நண்பனின் தோரணையில் இருந்தது.
“ஏன் பயப்படுறீங்க? உங்களை அண்ணன் விரட்டிவிட்டுட்டான்னு கேள்விப்பட்டேன். உங்க வேலையே ஊசலாடுதாமே?” என்று கரிசனையாகக் கேட்டான்.
மீரா தலைகுனிந்து, “ஆமாம்” என்றாள்.
“அதனால் தான் ஒரு விஷயம் பேசலாம்னு வந்தேன். உங்களுக்கு பணம் தேவைப்படுதுன்னு எனக்கு தெரியும். கண்டிப்பா இந்த டீலிங் உங்களுக்குப் பிடிக்கும். ட்ரை பண்ணிப் பாருங்களேன்…” என்று பெரிதாக ஒரு பீடிகை போட்டான்.
மீரா, தயக்கத்துடனும், கொஞ்சம் ஆவலுடனும் அவனைப் பார்த்தாள். கண்ணனின் மீது நம்பிக்கை குறைந்து போனாலும், தன் அம்மாவிற்கு எப்படி உதவுவது என்ற கவலை அவளை வாட்டியதாலும், நகுலின் பேச்சுக்கு அவள் செவி சாய்த்தாள்.
“என்ன டீலிங்னு முதல்ல சொல்லுங்க” என்று மிகவும் பயந்த வாக்கில் கேட்டாள்.
நகுல் மெல்ல சிரித்தான். தான் கொண்டு வந்த வேர்க்கடலை பாக்கெட்டைத் திறந்து ஒரு பிடி அவள் கையில் கொடுத்தான்.
“நீங்க இங்க சும்மா உட்கார்ந்து சாமிகிட்ட புலம்புறத விட, எனக்கு ஒரு சின்ன உதவி செய்யலாம். அது ரெண்டு பேருக்கும் லாபம் தரக்கூடிய விஷயம்…” எனக்கூற, மீராவுக்கு அவன் என்ன சொல்ல வருகிறான் என்று புரியவில்லை.
“உங்களுக்கு நான் என்ன உதவி செய்ய முடியும்?” என்று கேட்டாள்.
நகுல், அக்கம் பக்கத்தில் யாரும் இல்லை என்பதை ஒருமுறை உறுதிப்படுத்திக்கொண்டான். பிறகு, மீராவை நெருங்கி, ஹஸ்கி வாய்ஸில் பேச ஆரம்பித்தான்.
“அண்ணனை நான் என்னோட கேர்ள்ஃ ப்ரெண்டோட பிறந்தநாள் பார்ட்டிக்கு வரணும்னு கெஞ்சினது உங்களுக்குத் தெரியும். அவன் வர மாட்டான். அவனை ஏமாத்தி வர வைக்க என்கிட்ட ஒரு யோசனை இருக்கு. நீங்க ஹெல்ப் பண்ணீங்கனா, நான் உங்களுக்கு பத்தாயிரம் தருவேன்.”
மீரா குழப்பத்துடன் அவனைப் பார்த்தாள்.
“நான் என்ன சொல்றேன்னா… அவனை நீங்க ஏதாவது ஒரு காரணம் சொல்லி நான் சொல்ற நேரத்துக்கு பெர்த்டே பார்ட்டி நடக்கிற ஹோட்டலுக்கு கூட்டிட்டு வந்துருங்க. அதுக்கப்புறம் நடக்க வேண்டியதை நான் பார்த்துக்கிறேன்.”
மீராவுக்கு நகுலின் இந்த யோசனை பெரும் அதிர்ச்சியைக் கொடுத்தது. இது தவறு என்று அவளுக்குப் புரிந்தது. ஆனால் அவசர செலவு குறித்த கவலை அவளது மனதைப் போட்டு உழப்பியது.
‘இல்லீகல் வேலையை விட இது ஒன்றும் அவ்வளவு பெரிய தவறு இல்லை!’ என்று அவளது மனசாட்சி வேறு தூபம் போட்டது.
இருந்தும் மனதின் ஓரம் பயம் இருக்க, “ஆனா, கண்ணனுக்கு தெரிஞ்சுட்டா, என்னை என்ன பண்ணுவாருனு தெரியும்ல?” என்றாள், கண்கள் இரண்டிலும் கவலை ததும்ப.
“அவன்கிட்ட மாட்டிக்காத மாதிரி பொய் சொல்ல நான் கத்துக் கொடுக்குறேன். ஏதோ ஒரு காரணத்துக்காக ட்ரீட் தர்றதா சொல்லுங்க. அவன் சரினு சொல்றானோ இல்லையோ, மத்த ரெண்டும் ஓசி சாப்பாட்டுக்கு ரெடியா நிக்கும். அதனால வேற வழி இல்லாம அவனும் வருவான். ஹோட்டலுக்கு வந்ததும், இங்கதான் பெர்த்டே பார்ட்டி நடக்குதுன்ற விஷயம் எனக்கு தெரியாதுன்னு பல்டி அடிச்சிருங்க. அவ்வளவுதான் சிம்பிள்!”
இந்த யோசனை மீராவுக்கு சரி என்று தான் தோன்றியது.
