10. அவளை மறக்கத்தான்
அம்மாவிற்கு பேங்கில் அட்டெண்டர் வேலை கிடைத்தது.
அந்த வருமானம் மூவருக்கும் போதாமல், அமலாவும் அக்கம் பக்கத்து குழந்தை களுக்கு டியூஷன் எடுத்து வருவாயை ஈட்டினாள்.
அப்போதெல்லாம் ஆச்சியை பார்க்கும் சாக்கில் கதிர் சென்னை வருவான்.
வரும்போது, தன் நண்பனின் பைக்கில் வருவான். இவள் கல்லூரி வாசலிலே காத்திருப்பான்.
ஜெனிக்கு மட்டும் தெரியும்.
அத்தை பையனுடன் காதல். அவன் வந்தால் கல்லூரியை விட்டு வெளியே போவதும் தெரியும்.
ஆரம்பத்தில் அமலா அவனுடன் போக தயங்கி இருக்கிறாள்.
கதிர் ஜெனியிடம்,” உங்கள் பிரண்டை என்னுடன் தைரியமா வரச் சொல்லுங்கள். நான் அந்நியன் கிடையாதே. சிறு வயதிலிருந்தே தெரிந்த அவளது அத்தை பையன் தானே. ரொம்ப பிகு பண்ணுகிறாள்.”
சிரித்துக் கொண்டே ஜெனி போய் விடுவாள்.
பிறகு இருவரும் பைக்கில் போவார்ர்கள்.
அவன் இடுப்பை வளைத்து பிடித்துக் கொண்டு, “ஏன் மாமா நீ வருவது அத்தைக்கு தெரியுமா.?
“ஐய்யோ தெரிந்தால் அவ்வளவு தான். என்னை பொலி போட்டுவிடும்”.
“இதுக்கே இப்படி பயந்தால் எப்படி மாமா.என்னை எப்படி திருமணம் செய்து கொள்ள முடியும். உன்னால் தைரியமாக என்னை திருமணம் செய்து கொள்வேன் என்று சொல்ல முடியுமா..?
“அந்த நேரம் வரும்போது, கண்டிப்பா சொல்வேன்டி..
உன்னை யாருக்கும் விட்டு கொடுக்க மாட்டேன்.”
“அப்ப தைரியம் வந்து விடும்மா”……?
“வரும் டி. நான் சிங்கப்பூர் போறேன். நானும்,அண்ணனும் அங்கு போய் வியாபாரம் பண்ணப் போறோம்.
அப்புறம் பாரு ஐயாவை.
கையில் காசு இருக்கும். அம்மாவிடம் சண்டை போட்டாவது உன்னைய கல்யாணம் பண்ணுவேன். என்ன நம்புடி..”
“உன்னை நம்பாமல் நான் யாரை நம்பப் போறேன்.””
“அத்தையை நினைத்தால் தான் பயமாக இருக்கிறது. சொந்த தம்பி பெண்ணாயிற்றே.. கொஞ்சமாவது பாசம் இருக்க வேண்டாமா “!!!
“அதனால் தான் என் மனைவியாகி விட்டால், தன்னாலே பாசம் வரும். அதுவும் 10 மாதத்திலே பேரனோ, பேத்தியோ கொடுத்து விட்டால் போதும்.. அதைகொண்டாடுவார்கள். உன்னையும் தாங்குவார்கள்.”
“என்ன… இப்பவே முயற்சி செய்யலாமா”…?
“செய்யலாமே. அதோ கோவில் இருக்கு வாசலில் ‘நிறுத்து.
‘தாலி வாங்கிட்டு வா. கழுத்தில் கட்டி விடு. முயற்சி செய்யலாம்.”
“அடிப்பாவி ஒரு பேச்சுக்கு கேட்டால், இப்பவே கல்யாணம் பண்ணி குழந்தையும் பெத்து கொடுத்துவிடுவ போல இருக்கே.”
“ராட்சஸி”….
பார்க்கில் இருந்த புல்லை பிடுங்கி அவள் மேல் போட்டான்.
“மாமா.. எனக்கென்று உறவு, நட்பு என்று இருப்பது ஜெனி மட்டும் தான்.அவள் மட்டும் தான் என் பக்கத்து மனுஷாளாக வருவாள்.அவள் எந்த நாட்டில் இருந்தாலும், நம் திருமணத்திற்கு வருவேன்.என்று சொல்லி இருக்கிறாள்.”
“ஒவ்வொரு தீபாவளிக்கும். அவளுக்கு புது துணி வாங்கும் போது அதே விலையில் எனக்கும் வாங்குவாள்.””
“கல்லூரியில் எதாவது பங்ஷன் நடந்தால் அதற்கும் வாங்கித் தருவாள்”.
“இந்த மாமன் இருக்கும் போது, நீயேம்மா அவளிடம் வாங்குகிறாய். என்னிடம் கேட்டால் நான் வாங்கித் தரப் போறேன்.”
“நான் அவளிடம் கேட்டுக் கொண்டா இருக்கிறேன்”.
“இதை எதுக்கு சொல்றேனா நம் திருமணத்திற்கு ஜெனிக்கு நல்ல பட்டு புடவை வாங்கி தர வேண்டும்.”
“அப்படியே செய்து விடலாம் டி என் செல்லக் கிளியே “ என்று அவள் மூக்கை பிடித்து திருகினான்.
“சரி.. நான் அப்படியே திருநெல்வேலிக்கு போய் விடுகிறேன்.”
“ஏன் மாமா ஆச்சியை பார்க்கவில்லையா…?
“இல்ல. உன்னை பார்க்க வந்தேன். வீட்டுக்கு வந்தா லேட்டாகி விடும்.”
“சிங்கப்பூர் போறேன். உனக்கு அங்கிருந்து என்ன வாங்கிட்டு வர்ற “.
“எதுவும் வேண்டாம் மாமா. எனக்கு போன் போடு. அது போதும். உன் முகத்தை பார்க்க வேண்டும். வீடியோ காலில் வா . எனக்கும் ஒரு வருஷம் தான் டிகிரி வாங்க இருக்கு.
அதற்குள் வேலை கிடைத்துவிடும். நீ போய்ட்டு பிஸினெஸ் கவனமாக பண்ணு. வெற்றியோடு வா. என்று சொல்லி, அவன் பிறந்த நாளுக்காக ஒரு ஷர்ட்டை அன்பு பரிசாக கொடுத்தாள்.
“சிங்கப்பூர் போகும் போது இந்த சிங்கம் பிடரி முடியை கட் பண்ணி விட்டு அழகா, ஸ்டைலா ஹேர் ஸ்டைல் பண்ணிக் கொள். எனக்கு போட்டோ அனுப்பு” என்றாள்.
“அடிப்பாவி… இப்படி ஒரு பெயர் வைத்து இருக்கிறாயா”……?
“ஆமாம். மாமா” என்று சிரித்துக் கொண்டே வழியனுப்பி வைத்தாள்.
அதை பெற்றுக் கொண்டு போனவன் தான். என்ன நடந்ததோ, ஏது நடந்ததோ தெரியவில்லை. மறுபடியும் இவளை தொடர்புகொள்ளவே இல்லை.
இவளாலும் தொடர்பு கொள்ள முடியாமல், தொடர்பு எல்லைக்கு அப்பால் இருந்தான்.
தூக்கத்திலே அமலா இதெல்லாம் நினைத்துக் கொண்டு இருந்தபடி இருந்ததால்,மாமா “என்னை விட்டு போகாத மாமா… என்னை விட்டு போகாத மாமா”…. என்று உளற, உமா அவளை உலுக்கி எழுப்பினாள்.
இவள் எதோ பார்த்து பயந்து இருக்கிறாள் என்று விளக்கை போட, அமலாவின் கண்களில் கண்ணீர் வழிந்து இருந்தது.
அவள் தலையை தன் மீது சாய்த்து, கண்ணீரைதுடைத்து “என்னடா ஆச்சு.”
என்றதும்,
அப்போதுதான் அவளுக்கு புரிந்தது.
கதிரை நினைத்துக் கொண்டே தூங்கியதில் உளறி இருக்கேன்.
இவன் ஏன் இப்படி மாறிபோனான். காரணம் தெரியாமல் தலை வெடித்துவிடும் போல இருந்தது.
“வாம்மா இப்பவே வெளியே போகலாம். ஊரில் யாராவது நமக்கு உதவ மாட்டார்களா.”
“சரி. வா போகலாம். நடுநிசி. யாரும் இருக்க மாட்டார்கள்” என்று வெளியே .
வர, கதவு வெளியே பூட்டி இருந்தது.
சர்வ நாடியும் அடங்கி போனது.
அதிகாலையில் கதவு திறக்கப்பட்டது.
இரு பெண்கள் உள்ளே வந்தனர்.
“ஏய்…யாரு நீங்கள்.”
“உங்களுக்கு திருமணம்: அலங்காரம் பண்ண வந்து இருக்கிறோம்..என்று சொல்ல,மாலையை அங்கிருந்த ஸ்டாண்டில் மாட்ட,அதை இழுத்து பிய்த்து விசிறி அடித்தாள்.
வெளியே போனாள்.
அந்த அடியாட்கள் வழிமறிக்க இழுத்து அவர்கள் கன்னத்தில் அறைந்தாள்.
சத்தம் கேட்டு அனைவரும் ஓடோடி வந்தனர்.
ஆச்சியும் வெளியே வர,
“ஏய் கிழவி . என்ன சொல்லி எங்களை இங்கே அழைத்து வந்த. வெட்கமா இல்லை. உன் வயசுக்கு செய்யற வேலையா இது”. …
உமா அவரிடம், “ஏன் அத்தை உண்ட வீட்டுக்கு இரண்டகம் பண்ணிட்டிங்களே. உங்க வயசுக்கு இது அடுக்குமா . இவளும் உங்க பேத்தி தானே…உங்க புள்ள உயிரோடு இருந்தால் இப்படி செய்து இருப்பீர்களா.”
ஆச்சி தலையை தொங்க கொண்டு இருந்தாள்.
அத்தை விசாலம்… “என்ன இங்க சத்தம்” என்று கேட்டபடி வந்தார்.
விசாலத்தை பார்த்து அமலா சீறினாள்.
“நீங்க யாரு என்க்கு கல்யாணம் பண்ணி வைப்பதற்கு ‘தம்பி பெண் என்று என்னிக்காவது பாசம் காண்பித்து இருக்கிறீர்களா அல்லது என் அம்மாவைத் தான் மனுஷியாக மதித்து இருக்கிறீர்களா. நீங்க சொல்றதை நான் ஏன் கேட்கணும்..
பண விஷயத்திலே உங்களால் நியாயமா நடந்துக்க முடியல. தூ……. நீங்கள் எல்லோரும் மனுஷங்களா.”
அங்கு நின்று கொண்டியிருந்த கதிரிடம், ‘மாமா நீயும் நானும் எப்படியெல்லாம் காதலித்தோம். உன்னை எனக்கு பிடிக்கும் டி என்று எத்தனை முறை சொல்லி இருக்க. .எப்படி மாமா உனக்கு எனக்கு துரோகம் செய்யமுடியுது. ஒரு நிமிடம் யோசி . உன்னை காதலித்து விட்டு கணவனா மனதார வாழ்ந்து விட்டு .எப்படி உன் அண்ணனை திருமணம் செய்ய முடியும்.”
“நீ என்னை திருமணம் செய்யலனாக் கூட பரவாயில்லை. என்னை விட்டு விடுங்கள். நாங்கள் எங்கள் வேலையை பார்த்து போகிறோம்.”
அவனும் ஒன்றும் சொல்லாமல் பேசாது இருந்தான்.
“நீங்கள் இப்படி அராஜகம் செய்தீர்கள் என்றால் ஊரை கூட்டுவேன். போலீஸிடம் போவேன்.” ‘
“போலீஸுக்கு போ… போவதற்கு முன் அங்கே பார் “என்று கை காண்பிக்க,
மாமாவிடம் இன்ஸ்பெக்டர் ஒருவர் கைநீட்டி கத்தையாக காசு வாங்கிக் கொண்டு இருந்தார்.
செய்வதறியாது திகைத்தாள்.
அத்தையிடம் மண்டியிட்டு, உங்க மகன்களில் ஒருவரை எனக்கு திருமணம் செய்ய சம்மதித்து உள்ளீர்களே . அதற்கு நான் காதலித்த கதிர் மாமாவை திருமணம் செயது வைக்கலாமே. ‘ப்ளீஸ் அத்தை உங்க சின்ன மகனை காதலித்து விட்டு பெரிய மகனை திருமணம் செய்ய முடியாது. நீங்களும் பெண் தானே.என் உணர்வை புரிந்துக் கொள்ளுங்கள்”, என்று மன்றாடி னாள்.
“ச்சீய் நிறுத்து- கேடுகெட்ட உனக்கு .என் சின்ன மகன் கதிர் கேட்குதா. ‘ தம்பி மகளாக இருந்தாலும் பிச்சை கார குடும்பம் தானே”.
“சரி அத்தை . நாங்க கேடு கெட்ட பிச்சைகார குடும்பம் தான்.”
“உங்கள் பெரிய மகன் என்ன கேடு கெட்டு இருக்கிறார் அவருக்கு என்னை வலுகட்டாயமா கட்டி வைக்கிறீர்கள்.”
“வாய் ரொம்ப நீளுது. என் தலையெழுத்து உன்னையெல்லாம் என் மருமகளா ஏற்றுக் கொள்ள வேண்டி இருக்கு.’
“என்னை ஏற்றுக் கொள்ள வேண்டாம். விட்டு விடுங்கள்.. என் போன் அம்மா போன் எங்கே. என் தோழிக்கு தகவல் சொல்லணும். அவள் உங்களை விட ஆயிரம் மடங்கு அதிகாரமும், பணமும் படைத்தவள்.அவள் இல்லாமல் என்னால் திருமணம் செய்ய முடியாது.”
“அதெல்லாம் கொடுக்க முடியாது. “
அமலா அங்கிருந்த பூ ஜாடியை போட்டு உடைத்தாள்.
“ஏய் கிழவி. வாய் திறந்து பேசு.என் அம்மா உன்னை எப்படியெல்லாம் கவனித்து இருப்பாள். பெற்ற தாய் போல கவனித்துக் கொண்டாளே.
வா .நாம் வந்தது போல் மூவரும் சேர்ந்தே போவோம்..”
எதற்குமே ஆச்சி அசைந்து கொடுக்க வில்லை.
அப்படியே மண்டியிட்டு தரையில் அமர்ந்து கதறினாள்.
அந்த நேரத்திலும் தன் தோழி ஜெனியை நினைத்தாள்.
ஜெனி. எனக்கு கஷ்டம் என்றால் உடனே ஓடி வந்து உதவி செய்வியே நான் இப்போது இந்த படுபாவிகளிடம் மாட்டிக் கொண்டு கதறிக் கொண்டு இருக்கிறேன். என் போனையும் பிடுங்கி வைத்துக் கொண்டார்கள்.நீ எப்படியாவது வந்து என்னைக் காப்பாற்று. எனக்கு உன்னை விட்டால் யாரும் இல்லையே”. என்று நினைத்து தரையில் குத்திக் கொண்டு அழுதாள்.
அம்மா கதறியபடியே அவளை தூக்க முயற்சித்தார்.
“என் வயிற்றில் பிறந்த பாவம் தான் உன்னை இப்படி துடிதுடிக்க வைக்கிறது. எழுந்திரிமா”
கதிரிடம் தம்பி- நீங்கள் காதலித்தது எனக்குத்தெரியாது. நீங்கள் திருமணம் செய்யலேனா கூட பரவாயில்லை.
முத்து தம்பி எங்கே. அவருக்கு இவளை ஏன் கட்டாய திருமணம் செய்ய வேண்டும். ……?
எனக்கு பயமா இருக்கு.
.இவ்வளவு கதறியும் முத்து ஏன் வெளியே வரவில்லை…?.”
முத்துவை வீல்சேரில் தள்ளிக் கொண்டு வந்தார்கள்.
இடுப்புக்கு கீழ் உணர்வற்ற நிலையில்
அவனைப் பார்த்ததும் ஆ…வென்று அலறினாள்.
தொடரும்.
