நிழல் – 2

வேகமாக வேலையை முடிக்க நினைத்த ஷாலினி அரிசியை கிரைண்டரில் போட்டுவிட்டு கடகடவென பாத்திரங்களை கழுவினாள். அதை முடித்த கையோடு, அவள் அடுப்பு மேடையையும் சுத்தம் செய்து விட, அரிசி முக்கால் பாகம் அரைந்து விட்டது. 

பூனைக்குட்டி போல, கிச்சனில் இருந்து தலையை மட்டும் வெளியே நீட்டிப் பார்த்தாள். மாமியார் மாமனாரின் அறை பூட்டப்பட்டு கிடந்தது. சந்தேகத்தோடு ‘அத்தை!’ என ஒரு முறை அழைத்தாள். பதில் ஏதும் வரவில்லை… 

அவர் உறங்கியது உறுதியானதும் நைசாக பருப்பை மிக்ஸியில் போட்டு அரைத்து, சுலபமாக வேலையை முடித்துவிட்டாள். மாவை கிச்சனின் ஓரத்தில் நகர்த்திவிட்டு, கிரைண்டரையும் மிக்ஸியையும் கழுவி கவிழ்த்தினாள். திருமணத்திற்கு முன்பு வரை இட்லிக்கு அரிசியை தான் மாவாக அரைத்து பயன்படுத்துவார்கள் என்று கூட தெரியாமல் இருந்தவள். அவளை இன்று விதி இவ்வளவு தூரம் கொண்டு வந்து விட்டது…

இப்பொழுது ஆரம்பித்தாலும் விடிவதற்குள் வேலையை முடித்து விடலாம் என்று நினைத்த படி கிச்சனிலிருந்து வெளியே வந்தாள். அப்போதுதான் டைனிங் டேபிளில் அவள் பார்வை விழுந்தது. ஷங்கர் அவளுக்காக எடுத்து வைத்து விட்டு போயிருந்த சாப்பாடு அப்படியே இருக்க, அவசியம் சாப்பிட வேண்டுமா எனும் எண்ணம் இவளுக்கு.

கடந்தகால கசப்பான சம்பவங்களால் அவளுக்கு பசி எனும் உணர்வு வருவதே கிடையாது. நேரம் இருந்தால் சாப்பிடுவாள், இல்லையேல் அப்படியே பிரிட்ஜில் எடுத்து வைத்து விடுவாள். இன்று அந்த சப்பாத்தி குருமா பாத்திரங்கள் அனைத்தையும் கழுவ நேரம் இல்லாத ஒரே காரணத்தால், சாப்பாட்டையும் சாப்பிடாமல் ஃப்ரிட்ஜில் எடுத்து வைத்து விட்டாள்.

“அத்தை கோபமா திட்டுவாங்க. ஆனா மேனேஜர் மொத்தமா பழி வாங்கிடுவாரு. அதனால ப்ராஜெக்ட் வேலையை முதல்ல கவனிப்போம்!” என்று நினைத்துக் கொண்டே மாடிப்படி ஏறினாள். 

அந்த மாடி பகுதியில் ஒற்றை படுக்கை அறையும் அதற்கு சமமான இடைவெளி கொண்ட பால்கனியும் மட்டுமே உண்டு. பால்கனி பக்கம் தன் கயிற்று கட்டிலை விரித்து படுத்திருந்தான் பிரபாகரன்.

“அப்பாடா கரும்புலி தூங்கிடுச்சு. இனி எந்த இடைஞ்சலும் இல்லாம நான் வேலையை பார்க்கலாம்!” என தன் மனதிற்குள் மகிழ்ந்த படி கணினியில் அமர்ந்தாள்.

நேரம் அப்பொழுதே பதினோரு மணியை கடந்திருக்க, அடுத்த நாள் காலை ஆறு மணி வரை வேலை செய்தால் மட்டுமே அவளால் ப்ராஜெக்ட்டை முடிக்க முடியும் என்ற நிலைமை. எனவே தான் இன்று ஒரு நாள் தூக்கத்தை துறந்து விட முடிவெடுத்திருந்தாள்.

ஒரு அரை மணி நேரம் ஓடி இருக்கும்… 

கதவை திறந்து கொண்டு உள்ளே நுழைந்தான் பிரபாகரன். கணினிலேயே மொத்த கவனத்தையும் வைத்திருந்த ஷாலினி அவன் வருகையை கவனிக்கவே இல்லை.

நேராக அவள் முன்னால் வந்து நின்றவன், “ஐ நீட் யு” என்றான் அழுத்தமான குரலில். 

இவளுக்கு தூக்கி வாரிப் போட, “பிரபா எனக்கு நிறைய வேலை இருக்கு. ப்ளீஸ் இன்னைக்கு வேண்டாமே” என சொல்லிக் கொண்டிருக்கும் பொழுதே, 

அவள் லேப்டாப்பை மூடியவன், “ஐ நீட் யு நவ்” என்றான் அழுத்தம் திருத்தமாய்.

“புரிஞ்சுக்கோடா… இந்த வேலையை இன்னைக்குள்ள நான் முடிக்கணும். இல்லைன்னா மேனேஜர் என்னை ஃபயர் பண்ணிடுவேன்னு உன் முன்னால தான சொன்னாரு. அப்புறம் ஏன் நீ இப்படி பண்ற?” 

“வழக்கத்தைவிட ரெண்டு மடங்கு பணம் தரேன். வா…” 

“பிரபா… ப்ளீஸ் இப்படி பேசாத.”

“இப்படி பேச நீ தானே எனக்கு சொல்லிக் கொடுத்த? பணம் பத்தலைன்னா சொல்லு. மூணு மடங்கா தரேன்.”

இந்த விளையாட்டுக்கு ஆரம்ப புள்ளி வைத்தது அவள்தான். அவன் இதையே பிடித்துக் கொண்டு தொங்குவான் என கனவிலும் அவள் நினைத்திருக்கவில்லை. தெரிந்திருந்தால் தப்பி தவறி கூட அவ்வாறு சொல்லி இருக்க மாட்டாள்.

“ஓகே, பைனல் ஆஃபர். அஞ்சு மடங்கா தரேன்” என்று கூற அதற்கு மேல் அவளால் அவன் பேச்சை காது கொடுத்து கேட்கவே முடியவில்லை. எழுந்து சென்று விளக்கை அணைத்து விட்டாள்…

அவனோ வீம்பில் அவளுக்கு மேல் இருந்தான். ஃபேண்ட் பாக்கெட்டில் இருந்த பணத்தை அவள் கைக்குள் திணித்த பிறகுதான் கட்டிலில் ஏறினான்.

அவன் உருகி உருகி காதலித்தவள், கட்டிலில் கண்ணீர் வடிப்பதைக் கூட கண்டு கொள்ளாமல் அவளோடு இரவெல்லாம் கூடி களித்தான். இறுதியில் அவன் இவளை விட்டு விலகும் போது, ஷாலினிக்கு பாதி ஜீவனே தேய்ந்திருந்தது. கட்டிலில் இருந்து எழுந்து உட்கார கூட முடியவில்லை!

ஆனாலும் கடமை காத்து கிடக்கிறதே. தன்னை அணைத்திருக்கும் மாமிச மலையினை உருட்டிவிட்டு எழுந்து வந்தாள். 

ஷாலினி எழுந்து வந்த பொழுது நேரம் இரண்டு மணி. எப்படித்தான் போராடினாலும் எட்டு மணிக்குள் வேலையை முடிப்பது அவளால் முடியாத காரியம். அதற்காக எந்த முயற்சியும் செய்யாமல் இருந்து விட்டால் என்ன கிடைக்கப் போகிறது? எனவே முயற்சி செய்து பார்ப்பது என்ற முடிவுக்கு வந்துவிட்டாள் அவள்.

தன் லேப்டாப்பை எடுத்துக்கொண்டு பால்கனி பக்கம் சென்றாள். கார்த்திகை மாத குளிர் காற்று அவள் தேகத்தை காதலோடு வருடியது. 

‘இப்பொழுதுதான் ஒரு அரக்கனுக்கு என்னை நானே படையல் வைத்துவிட்டு வந்திருக்கிறேன். நீயும் என்னை கேட்காதே காற்றே!’ என்று கூறிவிட்டு வேலையில் மூழ்கினாள்.

ஏற்கனவே ஒரு வாரமாக சரியாக உறங்காமல் வேலை செய்வதால் அவள் கண்கள் இரண்டும் தீயாய் எறிந்தது. 

‘இன்றோடு மொத்தமாக இதை முடித்து விட வேண்டும். அதன் பிறகு வேண்டுமளவு ஓய்வு எடுத்துக் கொள்ளலாம்’ எனும் எண்ணத்தில் உடல் உபாதைகளை இவள் பொருட்படுத்தவே இல்லை. 

இன்னும் சொல்வதென்றால் தண்ணீர் குடிக்கக்கூட எழுந்து போகாமல் கணினியிலேயே கண்ணாய் இருந்தாள். அவளது அந்த கடின உழைப்பிற்கு கிடைத்த பலனாய் ஏழு மணிக்கு வேலை முடிந்து விட்டது.

துரித கதியில் கணினியை தன் பையில் எடுத்து வைத்துவிட்டு, கடகடவென காக்கா குளியலை போட்டுக் கொண்டு கீழே ஓடினாள். ராஜம் ஏற்கனவே சமையல் வேலைகளில் பாதியை முடித்து விட்டார்…

“நான் வேணும்னா காய் நறுக்கட்டுமா அத்தை?” என்று கேட்க,

“வேண்டாம், ஏங்க நீங்க வந்து சமையல் வேலையை பாருங்க. நான் போய் வாசலை கூட்டி கோலம் போட்டுட்டு வரேன்.”

அவர் சொல்லி முடிக்கும் முன்பாக விளக்கமாறை கையில் எடுத்துக் கொண்டு வாசல் பக்கம் ஓடினாள். எண்ணி ஐந்து நிமிடத்திற்குள் கூட்டி பெருக்கி கோலம் போட்டு முடித்தாயிற்று. 

ராஜம் காலைக்கு பொங்கலும், மதியத்திற்கு காய்கறி சாதமும் தயார் செய்து கொண்டிருந்தார்.

மிக்ஸி ஜாரை தூக்கிக்கொண்டு ஓடி வந்த ஷாலினி, “நான் சட்னி அரைக்கட்டுமா அத்தை” என்று பாவமாய் கேட்டாள்.

ம்ம்…. என்ற ஒற்றை சொல் தான் அவளுக்கு கிடைத்த பதில். சம்மதம் வந்த உடனே வேலையை ஆரம்பித்து விட்டாள். கூடவே காய்கறிகளை எடுத்து கழுவி நறுக்கியும் தந்தாள்.

நேரம் எட்டு முப்பதை நெருங்கிக் கொண்டிருக்க மெதுவாய் தன் இமைச் சிப்பிகளை திறந்தான் பிரபாகரன். அவன் எழுந்து குளித்துவிட்டு கீழே வருவதற்குள் நேரம் ஒன்பதை நெருங்கி விட்டது.

சங்கர் அவனிடம், “குட் மார்னிங் டா” என்றார் சந்தோஷமாக.

பட்டு வேஷ்டி சட்டையில் பளபளவென நின்றிருந்த தன் தந்தையை ஏற இறங்க பார்த்தவன், “இன்னைக்கு என்னப்பா விசேஷம்?” என்று தன்னை மறந்து கேட்டுவிட்டான்.

அதிர்ந்து போன சங்கர் அடுத்த கனமே தன்னை நிதானப்படுத்திக் கொண்டு, “வெட்டிங் ஆனிவர்சரி டா. உங்க அம்மா கூட நான் குடும்பம் நடத்த ஆரம்பிச்சு வெற்றிகரமா முப்பது வருஷம் ஆச்சு. கிச்சனுக்குள்ள தான் இருக்கிறா, போய் பேசு” என்று கூறிவிட்டு நகர்ந்தார்.

ஒவ்வொரு வருடமும் அவர்களுக்கென பிரத்தியேக பரிசினை வாங்கி தந்தவன் அவன். அதிலும் அவர்கள் தூங்கி எழும் முன்பே வீட்டை பலூன்களால் அலங்கரித்து கேக்கும் கையுமாக அறையின் வாசலில் நிற்கும் பிள்ளை, இந்த வருடம் மொத்தமாக அந்த தேதியையே மறந்து விட்டிருந்தான். 

“அம்மா, ஹேப்பி வெட்டிங்…” என்று அவன் சொல்லிக் கொண்டிருக்கும் பொழுதே, 

“ஏங்க! உங்கள தேங்காய், பழம் வாங்கிட்டு வர சொல்லி எவ்வளவு நேரம் ஆச்சு. கடைக்கு போகாம இங்க என்ன பண்ணிட்டு இருக்கீங்க?? காலாகாலத்துல கோவிலுக்கு போயிட்டு வர வேண்டாமா? நினைக்கிற தூரத்துலயா இருக்கு? திரும்பி வர பஸ் வேணாம்?” என்று கேட்டபடி சங்கர் இருக்கும் பக்கம் சென்று விட்டார்.  

தன்னை தாண்டி செல்லும் அன்னையை தடுக்க தோன்றாமல் நின்றிருந்தான் பிரபாகரன். 

“அதெல்லாம் வழியில வாங்கிக்கலாம். பையன் உன்கிட்ட வாழ்த்து சொல்ல வர்றான் பாரு. ஒரு தடவை பேசு ராஜம்…”

“நான் யாரு அவனுக்கு? என்கிட்ட எதையும் சொல்லனும்னு துரைக்கு அவசியம் கிடையாது. இஷ்டம் போல இருக்கான், இருக்கட்டும்.  நாம நம்ம வேலையை பார்க்கலாம்” எனக் கூறியபடி பூஜை அறைக்குள் சென்று அடைந்து கொண்டார் அவர்.  

மகனுக்காக மனம் வருந்துவதை தவிர எந்த  உதவியும் செய்ய முடியாமல் நின்றார் சங்கர். அங்கு நடந்த பேச்சு வார்த்தை அனைத்தையும் கிச்சனிலிருந்து கேட்டுக் கொண்டிருந்த ஷாலினிக்கும் தற்சமயம் என்ன செய்வது என்று தெரியவில்லை. அவளுக்கு ஞாபகம் இருந்தது தான்! ஆனால் பிரபாகரன் மறந்திருப்பான் என்று அவளே எதிர்பார்க்கவில்லை. 

‘அவன் கோபத்தை பொருப்படுத்தாமல், குறைந்தபட்சம் நானே நேற்று ஒரு வார்த்தை கேட்டிருக்க வேண்டும். இப்போது இந்த கோபமும் நம் தலையில் தான் விடியும்!’ என்று கால தாமதமாக வருத்தப்பட்டாள். 

பிரபாகரன் பேசுவதற்காக இரண்டு மூன்று முறை அன்னையின் பின்னால் சென்றான். ஆனால் அவர் இறுதிவரை இவனோடு முகம் கொடுத்து பேசாமல் போக, இவனுக்கும் கோபம் தலைக்கு ஏறியது.

“அப்பா நான் ஆபீஸ்க்கு கிளம்புறேன்” என்று சாப்பிடாமல் கொள்ளாமல் புறப்பட்டுவிட்டான்.

ராஜம் தன் கணவரிடம், “அவகிட்ட சாவிய கையில எடுத்து வச்சுக்க சொல்லுங்க. நாம திரும்பி வர்றதுக்கு ராத்திரி எவ்வளவு நேரம் ஆகும்னு தெரியாது. ஆம்பளை ரோட்ல கூட படுப்பான். இவ என்ன பண்ணுவா?” என்றார் சப்தமாய்.

அந்த திட்டலைக் கேட்டு ஷாலினிக்கு உண்மையில் மனது சந்தோஷப்பட்டது. 

ராஜம் எவ்வளவுதான் அவளை வேண்டா வெறுப்பாய் திட்டி தீர்த்தாலும், அவரின் அடி மனதில் பழைய பாசம் இன்னமும் ஒட்டிக்கொண்டிருக்கிறது என்று இந்த சம்பவத்தின் மூலம் புரிந்து கொண்டாள். 

உடனே சாவியை எடுத்து தன் ஹேண்ட் பேக்கில் போட்டுக் கொண்டவள், “இன்னைக்கு வேலை சீக்கிரம் முடிஞ்சிரும் மாமா. நான் நேரமா வந்து சாமி ரூம்ல விளக்கேத்தி வச்சிடுவேன். நீங்க பத்திரமா கோவிலுக்கு போயிட்டு வாங்க” என்றாள் அன்பாய்.

அப்படிப்பட்ட வார்த்தைகளை தான் ராஜம் மனதும் எதிர்பார்த்தது என்பதால், முகத்தில் வெளிப்படையாகவே தன் அகமகிழ்வைக் காட்டினார்.

❤️ Loading reactions...
முந்தைய பதிவு அடுத்த பதிவு
இந்த எழுத்தாளரின் மற்ற கதைகள்
🌙 நிலவின் கனவு! ✨​
247 40 0
இராவணின் வீணையவள்
47 0 0
ஆரெழில் தூரிகை
309 15 1
வேண்டினேன் நானுன்னை
541 6 0
நீ எந்தன் நிஜமா?
379 8 1
என்துணை நீயல்லவா?
463 12 0
கற்றது காதல்
216 1 0
நிழலென தொடர்கிறேன்
213 2 0
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page