என் துணை – 1

லண்டனில் இருந்து மும்பைக்கு செல்லும் விமானத்தில் அனைவரும் ஏதோ ஒரு மகிழ்வுடனும், பரபரப்புடனும் பயணம் செய்து கொண்டிருந்தனர். திரவ்யா மட்டும், ஐந்து வயதான தன் இரட்டை குழந்தைகளை மார்போடு அணைத்துக் கொண்டு பல நூறு சிந்தனைகளோடு வேண்டா வெறுப்பாய் அமர்ந்திருந்தாள். முகத்தில் சிறிதும் மகிழ்ச்சி இல்லாது விமானத்தின் மேற் கூரையை வெறித்தபடி இருந்தது அவள் கண்கள்.

சாதாரண போட்டோகிராபர் பெண்ணாக தன் தொழில் துறையில் கால் பதித்து பயணத்தை தொடங்கியதில் இருந்து, இன்று அதே கேமரா கம்பெனியின் பிராண்ட் அம்பாசிடர்ராக மாறி இருக்கிறாள். அவளது இத்தனை உயர்வுக்கு காரணமான கம்பெனி, அவளை இந்தியாவில் நிகழவிருக்கும் ஒரு சிறப்பு விழாவில் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுக்க, அதை தவிர்க்க முடியாமல் மும்பையை நோக்கி தனது இந்த பயணத்தை மேற்கொண்டிருக்கிறாள்.

கடந்த காலத்தை நினைத்து மனம் கசந்தபடி பயணித்துக் கொண்டிருந்தவளின் செவியில், விமானம் மும்பையில் தரை இறங்கியதற்கான அறிவிப்புகள் கேட்டது. அந்த சத்தத்தில் அன்னையின் இடையினை அணைத்தபடி உறங்கிக் கொண்டிருந்த பிள்ளைகளும் விழிகளை திறந்து விட்டன.

“வந்துட்டோமா மம்மி?”

“யெஸ் ஸ்வீட்டி” இல்லாத புன்னகையை பிள்ளைகளிடம் வெளிப்படுத்தினாள்.

“யே…” அவளுக்கும் சேர்த்து இருவாண்டுகளும் சந்தோஷித்தது.

குழந்தைகளைக் கூட்டிக் கொண்டு விமான நிலையத்தில் இருந்து வெளியே வந்தாள். திரவ்யா எனும் பெயர் பலகையை சுமந்த படி அவளை வரவேற்பதற்க்காக நின்று கொண்டிருந்தான் இளைஞன் ஒருவன். 

தன் பெயர் பதாகையை தாங்கி நின்ற சீனுவின் அருகில் சென்று நின்றவள், “ஹாய் சார், ஐ ஏம் திரவ்யா” என்று தன்னை அறிமுகம் செய்து கொண்டாள். 

“ஹலோ மேடம், நான் சீனிவாசன். உங்களோட ஈஏ, அதாவது எக்ஸிகியூட்டிவ் அசிஸ்டன்ட். வெல்கம் டு மும்பை” என்றவன் அவளுக்கு நேராக கை நீட்டினான். 

நட்பாக கை குலுக்கியவன் குழந்தைகளை பார்த்து, “ஹாய் குட்டிஸ், வாட் இஸ் யுவர் நேம்?” என்று கேட்டான். 

“ஐ ஏம் ஸ்ரீ ராம், ஐ ஏம் ஸ்ரீ கிரிஷ்” என தங்களை அறிமுகம் செய்து கொண்டு, “நைஸ் டூ மீட் யூ சீனு அங்கிள்…” என்றும் கூறினர். அதிலேயே அந்த இளம் இரட்டையர்களை சீனுவிற்கு மிகவும் பிடித்து விட்டது. 

“மேடம் குழந்தைங்க ரொம்ப அழகா இருக்காங்க” என்று கூற, மென் சிரிப்பினை பதிலாக தந்தாள் திரவ்யா.

இதற்குள் அவர்களுக்காக ஏற்பாடு செய்திருந்த டாக்ஸி வந்து விட, முன் பதிவு செய்திருந்த ஐந்து நட்சத்திர விடுதிக்கு அவர்களை அழைத்து சென்றான் சீனு. 

காரில் சென்று கொண்டிருக்கும் பொழுதே, “ரூம்க்கு போனதும் தூங்கிறனும். லாங் டிராவல்னால அம்மாவுக்கு ரொம்ப டையர்டா இருக்கு. நாளைக்கு காலையிலயும் நிறைய ஒர்க் இருக்கு. மை டியர் பேபிஸ், அப்போ தான் நீங்க ரெண்டு பேரும் இன்னும் சமத்தா இருக்கணும். அத முடிச்சிட்டு வந்ததுக்கு அப்புறம் தான் அம்மா பிரீ. நாம ஜாலியா விளையாடலாம், ஓகே வா?” என கொஞ்சிக் கொண்டு கேட்டாள். 

இரு குழந்தைகளும் ஒன்று போல், “ஓகே மாம்!” என மழலை மொழியில் பதிலளித்தனர். 

கார் வண்ணமயமாய் ஜொலித்த மும்பையின் ஐந்து நட்சத்திர விடுதிக்கு வந்து சேர்ந்துவிட, அவர்களை அறைவாசல் வரை கொண்டு வந்து விட்டான் சீனு.

“இது தான் நான் உங்களுக்கு புக் பண்ணுன ரூம். சிட்டி வியூ செமயா இருக்கும். டேக் ரெஸ்ட், நாளைக்கு காலைல வந்து உங்கள மீட் பண்றேன். ஏதாவது ஹெல்ப் வேணும்னா இதுல இருக்குற நம்பர்க்கு கூப்பிடுங்க” என கூறி தன்னுடைய விசிட்டிங் கார்டை அவளிடம் நீட்டினான். 

அதை வாங்கிக் கொண்டவள்,“ரொம்ப தேங்க்ஸ், நான் உங்களுக்கு வாட்ஸ்அப்ல ஒரு ஹாய் மெசேஜ் அனுப்புறேன். எனக்கு இந்த ஊரோட எமர்ஜென்சி நம்பர் எல்லாத்தையும் கொடுத்துடுங்க” என்று கூறி அவனை அனுப்பி வைத்தாள். 

அவன் சென்ற பின் அறைக்கதவை சாத்தி விட்டு கட்டிலில் விழுந்தவள் அப்படியே உறங்கி போனாள். அவளது குழந்தைகளும் அவளை எந்த தொந்தரவும் செய்யாது, சிறிது நேரம் விளையாடிவிட்டு உறங்கியிருந்தனர். 

அதிகாலையில் கண்விழித்த திரவ்யா குளித்து விட்டு, அழகிய பட்டுப்புடவை ஒன்றை அணிந்து கொண்டாள். அழகிய மயிலிறகு போல நிச்சலனமாய் உறங்கிக் கொண்டிருந்த தன் இரு புதல்வர்களுக்கும், அவர்களின் உறக்கம் கலையாதவாறு நெற்றியில் முத்தமிட்டாள். அதே நேரம் அவள் அந்த ஹோட்டலில் ஏற்பாடு செய்திருந்த கேர் டேக்கர் பெண் வந்துவிட்டாள்.

“ஐ வில் பி பேக் வித் இன் த்ரீ ஹவர்ஸ், டேக் கேர் ஆஃப் தெம்” என்று கூற, புரிந்து கொண்டதாய் புன்னகைத்தாள் அந்த பெண்.

அங்கிருந்து புறப்பட்ட திரவ்யா, சீனுவுடன் விழாவில் கலந்து கொள்ள சென்றாள். சிறகில்லால தேவதையின் சாயலில் இருந்தவள், அங்கு கூடியிருந்தவர்களின் கவனத்தை முழுவதுமாய் தன் பக்கம் ஈர்த்துவிட்டாள். 

விழா முடிந்து, அவ்விடத்தை விட்டு வெளியேற கூடுதலாக ஒரு மணி நேரமானது. பேசி பழக முயன்ற அனைவரிடமும் நாசூக்காய் நழுவி விடை பெற்று அங்கிருந்து வெளியேறினாள். மதிய உணவையும் மறந்து நேராக அறைக்கு ஓடி வந்தவளை, அவள் மகன்கள் இருவரும் ஆளுக்கொருபுறம் கட்டிக்கொண்டனர். 

பிள்ளைகள் பத்திரமாக இருக்கிறார்கள் என்று தெரிந்த பிறகு தான் அவளுக்கு உயிரே வந்தது. 

“மம்மி மம்மி, எங்கள இந்தியா கேட் பாக்குறதுக்கு கூட்டிட்டு போறீங்களா?” என்று கொஞ்சி கெஞ்சினர். 

“அதெல்லாம் முடியாது. நான் என்ன சொல்லி கூட்டிட்டு வந்தேன்? எங்கிட்ட அடம் பண்ண கூடாதுன்னு தான. அங்க சரி சரின்னு சொல்லிட்டு இங்க வந்த பிறகு என்ன அடம் பண்ணிட்டு இருக்கீங்க? ரெண்டு நாள்ல திரும்ப பிளைட் ஏறனும், வெளில எங்கையும் போக முடியாது. ஸ்கின் அலர்ஜி, ஃபுட் பாய்சன் வந்துருச்சுன்னா டிராவல்ல ரொம்ப கஷ்டமாகிடும். அமைதியா போயி விளையாடுங்க” என கட்டளையாக கூறினாள். 

அந்நேரம் அவர்களை காண வந்து வெளியில் காத்திருந்த சீனு, “மே ஐ கம் இன் மேம்” என்றான். 

“வாங்க சீனு…” என்றவள் குழந்தைகள் புறம் திரும்பி, “கோ அன்ட் ப்ளே கம்ப்யூட்டர் கேம்ஸ்” என்றிட இருவரின் முகமும் தொங்கிவிட்டது.

சீனு, “பார்க் பீச்னு இல்லனாலும் ரெஸ்டாரன்ட், ஷாப்பிங் மால்னு எங்கேயாவது கூட்டிட்டு போகலாம்ல மேடம்?”

“உங்க வேலை என்னவோ அதை மட்டும் பாருங்க சீனு. தேவையில்லாத விஷயத்துல தலையிடாதீங்க…” முகத்தில் அடித்தார் போல் கூறிவிட, அவனும் மௌனமாகி விட்டான்.

“ஓகே மாம், தூரமா எங்கேயும் போக வேண்டாம். ஆனா இன்னிக்கு நியூஸ் பேப்பர்ல, இங்க இருந்து ரெண்டு தெரு தள்ளி ஒரு இடத்தில ஆர்ட் கேலரி நடக்குதுனு பார்த்தோம். இன்னிக்கு தான் அது லாஸ்ட் டேன்னு போட்ருக்கு. அட்லீஸ்ட் அங்கையாவது கூட்டிட்டு போங்க, ப்ளீஸ்!” என்று ராம் ஒரு புறம் கெஞ்சினான். 

“மாம் நீங்க ஒர்க் முடிச்சிட்டு வர்ற வரைக்கும் உங்கள எந்த டிஸ்டர்ப்பும் பண்ணாம சமத்தா தான இருந்தோம். இப்போ நீங்க ப்ரீ தான? எங்கள அங்க கூட்டிட்டு போகலாம்ல்ல” என்று கிரிஷ் ஒரு புறம் கெஞ்ச, குழந்தைகள் இருவரும் கெஞ்சுவதை பாவமாக பார்த்துக் கொண்டிருந்தான் சீனு.

திட்டு வாங்கிய அனுபவம் இருந்தும் துணிந்து அவளை நெருங்கியவன், “மேடம்! பாவம் பசங்க. அந்த ஆர்ட் கேலரி இங்கதான் மேடம் பக்கத்துல நடக்குது. அடுத்த தெரு தான், மூணு நிமிஷத்துல ரீச் ஆகிடலாம், நானும் உங்க கூடவே வர்றேன். கூட்டிட்டு போலாம் மேடம்…” என்றதும் அவள் புருவங்கள் இரண்டும் முடிச்சிட்டு கொண்டன.

யோசிக்கிறாள் எனப் புரிய, “சொல்றனேன்னு தப்பா எடுத்துக்காதீங்க. சின்ன பசங்க, எந்த என்டர்டைன்மென்ட்டும் இல்லாம ஒரே ரூம்குள்ளயே எவ்வளவு நேரம் தான் இருப்பாங்க? நாளைக்கி ஈவ்னிங்கே ரிட்டர்ன் டிக்கெட் புக் பண்ணிட்டீங்க. இந்தியா வந்து போனதுக்கு ஆதாரமா ஒரு அவுட்டிங் கூட இல்லனா எப்படி? அட்லீஸ்ட் அவங்க ப்ரெஷ் ஏர் பிரீத் பண்றதுக்காகவாவது சம்மதம் சொல்லுங்க.”

“எனக்கும் புரியுது. ஆனா புது இடம், பசங்களுக்கு பாதுகாப்பா இருக்குமான்னு யோசிக்கிறேன்” என்று தயங்கினாள்‌.

“அதான் கூடவே நானும் வர்றேன்னு சொல்றேன்ல மேடம். அப்புறம் என்ன தயக்கம்?” என்றான் சீனு. 

“சரி ஓகே போலாம்!” என கூறியதும், குழந்தைகள் ஹே… என கத்தி கூச்சலிட்டனர்.

உடனே தன் முகத்தை இறுக்கமாக மாற்றிக் கொண்டவள், “ஆனா ஒரு விஷயம் கேட்டுக்கோங்க. நான் எப்போ அங்க இருந்து கிளம்பலாம்ன்னு சொன்னாலும் உடனே அடம் பிடிக்காம கிளம்பிடணும். இந்த கண்டிஷன்க்கு ஓகே வா?” 

அவள் கேட்டு முடித்ததும் இரு பிள்ளைகளும் அவளின் கன்னத்தில் முத்தம் வைத்து, “டபுள் ஓகே மாம். எங்களுக்கு அங்க போய் ஃபைவ் மினிட்ஸ் இருந்தா போதும்” என்றனர்.

“அப்போ சரி, ஈவ்னிங் ஆறு மணிக்கு கிளம்பிடலாம்…”

“லவ் யூ மாம்” என தன் அன்னையிடம் கூறிவிட்டு, “எங்களுக்கு சப்போர்ட் பண்ணுனதுக்கு, ரொம்ப ரொம்ப தேங்க்ஸ் அங்கிள்” என்று சீனுவிடம் கூறினர். 

“மோஸ்ட் வெல்கம்” என்றான் கடைவாய் பல் தெரிய.

அன்று மாலையே சீனுவின் உதவியுடன் ஆர்ட் கேலரிக்கு சென்றனர். உள்ளே நுழைந்ததும் குழந்தைகள் இருவரும் ஒருவரின் கையை ஒருவர் கோர்த்தபடி ஒவ்வொரு படத்தையும் நிதானமாக பார்த்துக் கொண்டும், உன்னிப்பாக அதை கவனித்து டிஸ்கஸ் செய்து கொண்டும் வந்தனர். அவர்கள் இருவரோடும் நடந்து வந்து கொண்டிருந்த சீனு பெயிண்ட்டிங் மீது குழந்தைகளுக்கு இருந்த ஆர்வத்தை கண்டு குழப்பமானான். 

“மேடம் நீங்க போட்டோகிராப்பர், ஆனா பசங்களுக்கு எப்படி மேடம் பெயிண்ட்டிங் மேல இவ்வளவு ஆர்வம் வந்தது?” என்று ஆச்சர்யமாக கேட்டான். 

அவனின் கேள்விக்கு புன்னகையை மட்டும் பதிலளித்து விட்டு அவளும் அங்கிருந்த ஓவியங்களின் மேல் கவனத்தை செலுத்தினாள். 

அதில் ஒரு ஓவியம் தாஜ்மஹாலின் முன், ஒரு சுடிதார் அணிந்த பெண் தன் துப்பட்டாவை இரு கைகளிலும் வண்ணத்து பூச்சியின் சிறகை போல் விரித்துக்காட்டியபடி குதித்துக் கொண்டிருந்தாள். அதைக் கண்ட திரவ்யாவுக்கு காலுக்கு கீழே பூமி நழுவுவது போல இருந்தது. 

கிரிஷ் , “மாம் நம்ம வீட்ல இருக்குற அதே பெயிண்ட்டிங் இங்கயும் இருக்குல” என்று கூறினான்.

‘அவன் தான்! இது நிச்சயமா அவனோடது தான்! கண்டிப்பா அவன தவிர யாரும் இதை இவ்வளவு தத்ரூபமா வரைஞ்சு இருக்க மாட்டாங்க’ என்று மனதிற்குள் நினைத்தவள், “நம்ம உடனே இங்க இருந்து கிளம்பிடலாம். இதுக்கு மேல ஒரு நிமிஷம் கூட இங்க நிக்க கூடாது” என்று பதட்டத்தோடு தன் குழந்தைகளிடம் கூறினாள். 

“ஏன் மேடம் என்னாச்சு?” என்று கேட்ட சீனுவுக்கும் அவள் பதில் சொல்லவில்லை.

பிள்ளைகளை அழைத்துக் கொண்டு, தன் முகத்தில் பூத்திருக்கும் வியர்வை துளிகளை துடைத்தவாறே அங்கிருந்து வெளியேற முயற்சித்தாள். சரியாக வாயிலை அவர்கள் நெருங்கி இருந்த சமயம், வழியை மறிக்கும் வகையில் சில கருப்பு நிற கார்கள் வந்து அந்த இடத்தையே சூழ்ந்து கொண்டன. அதில் ஒரு காரில் இருந்து இறங்கினான் அவளின் அச்சத்திற்கு காரணமானவன். 

மாநிறத்திற்கும் கூடிய நிறத்தில், ஆறடி உயரம் கொண்டவன். தினமும் செய்யும் உடற்பயிற்சியின் உதவியால் உருவாக்கிய அவன் கட்டுடலை பிளாக் ஷர்ட்டும், ப்ளூ ஜீன்ஸும் அலங்கரிக்க, கம்பீரமான தோரணையில் அவளை நெருங்கி வந்தான். 

அவன் தான் ஆர்யன் சக்கரவர்த்தி. அவன் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடிக்கும், இவள் மனது அதிர்ந்து அடங்கியது. அந்த நொடியில் சகலத்தையும் மறந்து போன பேதை இவளை, முழுதாய் ஆக்கிரமித்து விட்டிருந்தான் அவன். 

❤️ Loading reactions...
அடுத்த பதிவு
இந்த எழுத்தாளரின் மற்ற கதைகள்
🌙 நிலவின் கனவு! ✨​
248 40 0
இராவணின் வீணையவள்
47 0 0
ஆரெழில் தூரிகை
310 15 1
வேண்டினேன் நானுன்னை
541 6 0
நீ எந்தன் நிஜமா?
379 8 1
என்துணை நீயல்லவா?
464 12 0
கற்றது காதல்
220 1 0
நிழலென தொடர்கிறேன்
214 2 0
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page