ஆர்யனைக் கண்டதும் தன்னைச் சுற்றி நிகழும் சூழலையே மறந்து, தன் நிகழ்கால நொடிகளையும் துறந்து, உயிர்ச்சிற்பம் போல் அசையாது, அவனை மட்டுமே வைத்த கண் வாங்காது பார்த்துக் கொண்டிருந்தாள் திரவ்யா.
மொத்த உலகமும் ஓர் நொடி இருளாக மாறிப்போக, அந்த இருளில் தோன்றிய வெளிச்சமாக ஆர்யன் திரவ்யாவின் கற்பனையில் தெரிந்தான். அவர்கள் அருகில் நெருங்கி வந்த ஆர்யன் யாரிடமும் எதுவும் பேசாமல் அவளோடு நின்ற இரு குழந்தைகளையும் பார்த்தான். இரு வாண்டுகளும் அன்னையின் ஆடையைப் பற்றியபடி அவனைப் பார்த்தனர்.
“அந்த கார்ல ஏறுங்க” பார்வையிலேயே சீனுவையும் தன் காரில் ஏறக் கூறினான்.
திரவ்யா பதிலுக்கு எதுவும் பேசாமல் மந்திரத்திற்கு கட்டுப்பட்ட ஆட்டுக்குட்டி போல அசையாமல் நிற்க, குழந்தைகளோடு சேர்ந்து சீனுவும் குழம்பி போய் இருவரையும் வெறித்துப் பார்த்தான்.
ஆர்யனுக்கு பொறுமை இல்லை போலும்! அவளின் கையை பற்றி இழுத்தான். அவன் இழுவிசைக்கு கட்டுப்பட்ட காற்றாடி போல், உடன் நடந்தாள். முன்பின் தெரியாத ஒருவனின் இழுத்த இழுப்பிற்கு அவள் போக, மற்றும் மூவருக்கும் உடனே பின்தொடர வேண்டிய கட்டாயம்.
தன் வாகனத்தின் டிரைவரை ஒரு பார்வை பார்த்தான். உடனே விலகி வழி விட்டான் அவன். ஓட்டுநர் இருக்கையை ஆக்கிரமித்தவன், திரவ்யாவை தனக்கு பக்கத்து இருக்கையில் அமர்த்திக் கொண்டான்.
பின் இருக்கையில் குழந்தைகளை அணைத்த படி அமர்ந்த சீனு, “டேய் தம்பிங்களா, இவரு யாருடா?” என்று ரகசிய குரலில் கேட்டான்.
உதட்டை பிதுக்கிய பிள்ளைகள்,“எங்களுக்கும் தெரியாது அங்கிள். நாங்க இதுவரை பார்த்ததே இல்ல” என்று கூற, ‘அப்போ ஏன் மேடம் எதுவும் பேசாம அமைதியா கிளம்பினாங்க?’ என மனதிற்குள் கேள்வி எழுப்பிக் கொண்டான் சீனு.
கார் புயல் வேகத்தில் வீதியில் பறந்து கொண்டிருக்க, “நீங்க யாரு?” என்று, பேச்சுவார்த்தையை ஆரம்பித்து வைத்தான் ஸ்ரீ ராம்.
“நான் உங்க அம்மாவோட ப்ரெண்ட்” என்றான் ஆர்யன்.
“ஆனா நாங்க உங்கள பார்த்ததே இல்லையே” என்று க்ரிஷ் கேட்டான்.
“நான் லண்டன்க்கு வரவே இல்ல. அதுனால உங்கள நான் பாக்க முடியல” என்று ஆர்யன் கூறிவிட்டு, தனக்கருகே இருந்த திரவ்யாவின் விழியினை நோக்கினான். ஒருகணம் அதிர்ந்து அடங்கியவள் அவன் முகத்தை நேருக்கு நேர் பார்க்க அஞ்சி, சட்டென்று திரும்பிக் கொண்டாள்.
“அப்போ ஏன் மம்மி உங்கள பத்தி எங்க கிட்ட இது வரை சொல்லல?”
“உங்க மம்மி என் மேல கோபமா இருந்தாங்க. அதுனால சொல்லிருக்க மாட்டாங்க.”
“கோவமா இருந்தாங்கன்னா நாங்க இங்க வந்தது உங்களுக்கு எப்படி தெரியும்?”
“அவங்கதானே என் மேல கோபமா இருக்காங்க? நான் இன்னும் அவங்களை ஃப்ரெண்டா தான நினைக்கிறேன். அதனால அடிக்கடி விசாரிப்பேன்” என்றவன் மீண்டும் திரவ்யாவின் முகத்தை பார்க்க, அவளோ ஜன்னல் கண்ணாடியோடு புதைந்து விட்டாள்.
“இப்போ எங்கள எங்க கூட்டிட்டு போயிட்டு இருக்கீங்க?” என்றான் ஸ்ரீராம்.
“டின்னெர் சாப்பிட என் இடத்துக்கு போறோம்” என்று ஆர்யன் சலிக்காமல் குழந்தைகளின் ஒவ்வொரு கேள்விக்கும் பதில் அளித்தான்.
“உங்க வீட்டுக்கா கூட்டிட்டு போறீங்க?”
“ஆமா, ஏன் கேக்குற?”
“மம்மி உங்களோட கோவமா இருக்காங்கன்னு சொன்னீங்கள்ல. அதான் கேட்டேன்.”
“உங்க மம்மி இப்போ எதுவும் சொல்லையே. அதான் என்னோட வீட்டுக்கு கூட்டிட்டு போறேன். உங்களுக்கு இன்னொரு சர்ப்ரைஸும் இருக்கு?”
“என்ன?”
“இப்போ நீங்க பார்த்துட்டு இருந்த ஆர்ட் கேலரி என்னோடது தான். வீட்ல நிறைய ஆர்ட் வொர்க் இருக்கு. உங்களுக்கு காட்டுறேன்” என்று கூறி முடிக்க குழந்தைகள் இருவரும் மகிழ்ச்சியில் ஹே… என கத்தி ஆர்ப்பரிக்க ஆரம்பித்தனர்.
சீனு, “சார், அதெல்லாம் உங்களோட ஆர்ட்ஸ் தானா? எல்லாமே ரொம்ப ரொம்ப சூப்பரா இருக்கு. எப்படி இவ்ளோ அழகா ட்ராயிங் பண்றீங்க? உங்களுக்கு தெரியுமா, இந்த பசங்களுக்கு கூட ட்ராயிங் தான் பிடிக்கும்” என்றதும்,
ஆர்யன், “தெரியும்” என்றான் அழுத்தமான குரலில்.
க்ரிஷ், “பட் மாம் ஆல்வேய்ஸ் லைக்ஸ் போட்டோகிராஃபி.”
“அதுவும் தெரியும்…”
“நாளைக்கு லண்டனுக்கு நாங்க திரும்பி போகணும். அதுக்குள்ள நாம மூணு பேரும் சேர்ந்து ஒரு ஆர்ட் கிரியேட் பண்ணுவோமா?”
“கண்டிப்பா…” இப்போதும் திரவ்யாவின் முகத்தை பார்த்தபடி கூறினான். இம்முறை அதை கவனித்து விட்ட, சீனுவுக்கு சுலபமாக விடுகதைகளின் விடை தெரிந்துவிட்டது.
பிஞ்சு குழந்தைகள் இருவரும், மகிழ்ச்சியோடு ஆர்யனிடம் தங்கள் ஓவிய கதைகளை பற்றி அளவளாவினர். குழந்தைகளிடம் பேசிக் கொண்டே திரவ்யாவையும் அடிக்கடி ஓரப்பார்வை பார்த்தபடி காரை செலுத்தினான் ஆர்யன்.
இவர்களின் உரையாடலுக்கும் தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பது போல், அதில் கவனம் செலுத்தாது காருக்கு வெளியில் தெரியும் காட்சிகளை வேடிக்கை பார்த்துக் கொண்டு வந்தாள் அவள். அரை மணி நேர பயணத்திற்கு பிறகு ஒரு பிரம்மாண்ட மாளிகையின் முன்பாக தன் காரை நிறுத்தினான்.
அனைவரையும் இறங்க கூறியவன், “வெல்கம் டூ மை ஹோம்…” என தன் மாளிகைக்கு வரவேற்றான்.
மாளிகையின் உயரத்தை அண்ணாந்து பார்த்த சீனு, “இதான் உங்க வீடுங்களா? இவ்வளவு சின்னதா இருக்கும்ன்னு நான் எதிர்பார்க்கல” என்றான் வாய் பிளந்தபடி.
அவனைக் கண்டுகொள்ளாமல் விருந்தாளிகளுக்கு இரவுணவை ஏற்பாடு செய்ய பணியாட்களுக்கு கட்டளையிட்டான்.
அரண்மனையின் முகப்பு பகுதியில் இருந்த சுவர் ஓவியங்களுக்கே மயங்கிவிட்டனர் பிள்ளைகள் இருவரும். ஆர்யன் அவர்களை உள்ளே அழைத்துச் செல்ல, அந்த வீட்டுச் சுவர் முழுவதும் நிறைந்திருந்த ஓவியங்களை ஒவ்வொன்றாக சிலாகித்து பேசிக்கொண்டே உள்ளே சென்றுவிட்டனர்.
சீனுவும், திரவ்யாவும் ஆர்யனோடு ஹாலிலேயே அமர்ந்திருந்தனர். சீனு ஆர்யனிடம் ஏதோ ஒரு விதத்தில் பேச்சுக் கொடுத்துக் கொண்டிருந்தான். ஆனால் பதில் தான் அவ்வளவு சுலபத்தில் வரவில்லை.
“நான் வேணும்னா பசங்க வர்ற வரைக்கும் கார்டன் பக்கம் சுத்தி பார்க்கட்டுமா?”
‘இருந்திருந்து, இறுதியாய் எங்களுக்கு தனிமை தர வேண்டும் என புரிந்து கொண்டான்!’ என்று நினைத்த ஆர்யன், சரி என்பது போல பதில் பார்வை பார்த்தான்.
சீனு போனதும், அதுவரை அணிந்திருந்த கோட்டினை கழற்ற, யதேட்சையாய் திரவ்யாவின் பார்வை ஆர்யனை தழுவியது. அவனது கழுத்தில் ஊஞ்சல் ஆடிக் கொண்டிருந்த சூர்யமுத்திரையிலான செயினை கண்டு அணு அணுவாய் அதிர்ந்து விட்டாள்.
‘இது எப்படி சாத்தியம்? இத இவனோட குடும்பத்துல ராஜாவா இருக்குறவங்க தான போடுவாங்க. இந்த செயின் இவன் கழுத்துக்கு எப்படி வந்தது? இவனுக்கு தான் ரெண்டு அண்ணனுங்க இருக்காங்களே. அவங்களுக்கு கொடுக்காம இவனுக்கு எப்படி அந்த உரிமையை கொடுத்தாங்க? இவனோட அண்ணனுங்க ரெண்டு பேரும் எங்க போனாங்க?’ என்று அவள் மனதிற்குள் பல நூறு குழப்பங்களும் கேள்விகளும் எழுந்த வண்ணம் இருந்தது.
ஆனால் அவனிடம் கேட்க, துளி அளவு கூட துணிவு இல்லை.
“உம்முனு இருந்தா என்ன அர்த்தம்?” என்று மிரட்ட, அவன் குரலுக்கு அஞ்சி நடுங்கினாலும் இப்போதும் பேசா மடந்தையாகவே நின்றாள்.
“உன்ன அத்தனை சுலபத்துல விட்ருவேன்னு நினைக்கிறியா?” ஒற்றை புருவம் உயர்த்தி கேட்க, இவளுக்கு படபடப்பில் தலை சுற்றியது. சுவற்றை பற்றியபடி தடுமாறினாள். அதைக் கண்டு விலகிச் சென்றாலும், தூரத்தில் இருந்தபடியே மார்புக்கு குறுக்காக கைகளை கட்டிக் கொண்டு அவளைக் கொல்லும் பார்வை பார்த்தான்.
“ஐயா டின்னெர் ரெடி பண்ணிட்டோம்…” என்று ஒரு பணியாள் வந்து கூற, “வர்றேன்…” என்று கூறிக் கொண்டே குழந்தைகளை தேடிச்சென்றான்.
“இது ஆயில் பெயிண்டிங்தான? என்ன மாதிரி பிரஷ் யூஸ் பண்ணாங்கனே தெரியலியே. கர்வ்ஸ்லாம் ரொம்ப அழகா வந்திருக்கு…” விஞ்ஞானிகள் போல பெயிண்ட்டிங் ஒன்றை ரசனையோடு ஆராய்ச்சி செய்து கொண்டிருந்தனர் இருவரும்.
அவர்களுக்கு அருகில் சென்ற ஆர்யன், “அது விரலால வரைஞ்சது. டீடெயிலா அப்புறம் பேசுவோம், இப்ப சாப்பிட வாரீங்களா” என்றான் இதழ் விரிந்த புன்னகையோடு. மறு பேச்சு பேசாமல், உடனே ஓடி வந்து அவன் கால்களைக் கட்டிக் கொண்டனர்.
“உங்கம்மா உங்களை ரொம்ப நல்லா வளர்த்திருக்கிறாங்க.”
“தேங்க்யூ…”
“உங்க பேர் என்னடா?” என்று குழந்தைகளை பார்த்து கேட்டான்.
“நான் ஸ்ரீ ராம்” என்று ஒருவனும் “நான் ஸ்ரீ கிரிஷ்” என்று மற்றொருவனும் கூறினான்.
“அம்மாவுக்கு கிருஷ்ணன்தான் பிடிக்கும். நாங்க ரெண்டு பேரா பொறந்ததால ராமர் பேரையும் வச்சுட்டாங்களாம்” என்று கூடுதல் தகவல் தந்தான் ராம்.
மென் புன்னகையோடு, “நைஸ் நேம்” எனக் கூறி குழந்தைகளை அணைத்தபடி நடந்தான்.
“நாங்க உங்களை எப்படி கூப்பிடறது அங்கிள்?” என்று ராம் கேட்டான்.
அதில் அதிர்ந்த ஆர்யன், ஒரு நொடி உள்ளம் கலங்கிப் போனான்.
குழந்தைகள் அறியாமல் அதை மறைத்துக் கொண்டு, “இங்க எல்லாரும் என்னை மகாராஜான்னு தான் கூப்பிடுவாங்க. நீங்களும் என்ன அப்டியே கூப்பிடுங்க” என்றான்.
“ஓஹ்.. அதுதான் உங்க பேரா? ஆனா பெரியவங்கள பேர் சொல்லி கூப்பிட கூடாதுன்னு மாம் சொல்லிருக்காங்களே.”
“நேம் சொல்லி தானே கூப்பிட கூடாது? இது என்னோட பெட் நேம் தான், இத சொல்லி கூப்பிடலாம். உங்க மம்மி ஒன்னும் சொல்ல மாட்டாங்க. சரி ஓகே, டின்னர் ரெடியாகிருச்சு. உங்களுக்கு பிடிச்ச மாதிரி சமைக்க சொல்லி இருந்தேன். சாப்பிட போலாமா?”
“ஓஹ் போலாமே” இருவரும் கோரசாக கூறிவிட்டு திரவ்யாவிடம் ஓடிச் சென்றனர்.
அதே நேரம் சீனுவும் வந்துவிட, அவனையும் டைனிங் டேபிளுக்கு அழைத்து சென்றான் பணியாள். அனைவரும் சாப்பிட்டுக் கொண்டிருக்க ஆர்யன் மட்டும் குழந்தைகள் உணவை ரசித்து உண்பதை வேடிக்கை பார்த்திருந்தான்.
சீனு, “சார், சும்மா சொல்லக்கூடாது. நீங்க ரொம்ப லக்கி சார்” என்று ஆர்யனை பார்த்து கூறினான்.
“ஏன் அப்படி சொல்ற?” என்று புரியாமல் கேள்வி எழுப்பினான். திரவ்யாவும் சீனுவின் பதிலையே எதிர் பார்த்துக் கொண்டிருந்தாள்.
“இல்ல சார், ஆர்ட் கேலரில பசங்க உங்க பெயிண்ட்டிங்ஸை ஒண்ணு ஒண்ணா ரொம்ப நுணுக்கமா ரசிச்சி பார்த்துட்டு இருந்தாங்க. இப்போ உங்க வீட்டு சாப்பாட்டையும் ரொம்ப ரசிச்சு சாப்பிடுறாங்க. பசங்களுக்கும் உங்களுக்கும் பழக்க வழக்கம் மட்டுமில்ல, உண்ர்வுகள் கூட ஒத்துப் போகுது. அதுக்காக சொன்னேன்.”
‘பிறந்தது முதல் ஒருமுறை கூட அவர்கள் தம் தந்தையை பார்க்காவிட்டாலும், உங்கள் பிள்ளைகள் உங்களைப் போலத்தான் இருக்கின்றார்கள்’ என்று மறைமுகமாக அவன் சொல்ல வருவது புரிய, மனதிற்குள் மகிழ்ந்து கொண்டான் ஆர்யன்.
திரவ்யாவோ, “குழந்தைங்க சாப்பிடறப்போ கண்ணு வைக்காதீங்க” என்றாள் கோபமாய்.
“சாரி மேடம்…” கமுக்கமாக தலையை குனிந்து கொண்டான்.
குழந்தைகள் பலதரப்பட்ட உணவுகளையும் கொறித்து தின்றதில், சீக்கிரமே வயிறு நிரம்பி விட்டது. திரவ்யாவும் அவர்களோடே தன் இரவுணவை முடித்திருந்தாள். மூவரும் எழுந்து கைகளை கழுவிக் கொண்டு ஹாலுக்கு நகர்ந்தனர்.
பின்னோடு வந்த ஆர்யனிடம், “சரி நாங்க கிளம்புறோம் ஆர்யன்” என்று திரவ்யா முதலில் பேச்செடுத்தாள்.
“கிட்ஸ்க்கு கிஃப்ட் வச்சிருந்தேன். அந்த ரூம்ல இருக்கு, போய் எடுத்துக்குறீங்களா?” என்றிட, இருவரும் கேள்வியாய் திரவ்யாவைப் பார்த்தனர். அவள் இமை சம்மதமாக அசைய, ஹே… என கூச்சலிட்டபடி ஓடி விட்டனர்.
அவர்கள் தூரம் போனது உறுதியானதும், “அவங்க என்னோட பசங்க. போகணும்னா நீ போ, என் பசங்க எனக்கு வேணும்” என்று நிறுத்தி நிதானமாக கூறினான்.
“உங்க பசங்களா? யார் சொன்னா? அவங்கள லண்டன்ல இருக்குற ஒருத்தனுக்கு பெத்தேன்” என்ற திரவ்யாவின் கழுத்தை பிடித்துவிட்டான் அவன்.
