நிஜம் – 2
அடுத்தகணம் அவள் முகம் மாறியது. மிகுந்த கோபத்தோடு அவனின் கைகளை பற்றியவள், ஆவேசமாக தன் கழுத்திலிருந்து கையை நகர்த்தினாள். அவன் பிடி விலகியது ஒரு நிமிடம் என்றாலும், அதை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டாள் அவள்.
”உன்ன நான் சும்மாவே விட மாட்டேன் டா. உன்ன…” என்று கூறியபடி அவனை அடிப்பதற்காக கை ஓங்கினாள்.
ஆவேசமாக கரம் உயர்த்தியவள், அவளை அறியாமல் மயங்கி கீழே சரிந்தாள். நொடி நேரத்தில் ஒரு விதமான மனக் கலக்கத்திற்கு ஆளானான் மகேந்திரன். தான் அவளின் குரல்வளையை மிகவும் வேகமாக அழுத்தியதால் தான் மூச்சு விட முடியாமல் அவள் மயங்கி விழுந்து விட்டாள் என்று நினைத்தவன், அவளை காப்பாற்றும் நோக்கத்தில் வேகமாக கதவை திறந்தான்.
அவன் கதவை திறந்ததும் வெளியே நின்று கொண்டு இருந்த அனைவரும் வேக வேகமாக உள்ளே நுழைந்தனர். மதியழகி மயங்கி கிடந்ததை பார்த்ததும் தாத்தாவிற்கு தலைக்கு மேல் வெள்ளம் போன உணர்வு. கோபத்தில் மகேந்திரனை பளாரென ஒரு அறைந்தார்.
“என்னடா செஞ்ச அவள? என் பேத்தி ஏன் மயங்கி கிடக்கிறா? என் தங்கத்த என்னடா பண்ண? உன்னை இப்படியே விட்டா சரி வராது. உன்ன இப்போ என்ன பண்றேன் பாரு” என்று அவனின் சட்டையை பற்றி உலுக்கியவாறு மிகவும் ஆவேசமாக பேசிக் கொண்டு இருந்தார்.
பெரியவர் சுந்தரலிங்கத்திற்கு மதியழகி மிகவும் செல்லமான பேத்தி என்பதால் அவள் அவ்வாறு மயங்கி கிடப்பதை அவரால் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை. கோபத்தில் தன்னையும் மீறி ஏதேதோ பிதற்றிக் கொண்டு இருந்தார்.
செண்பகமும் தங்கமாளும் வேகமாக அவளிடத்தில் சென்று தண்ணீர் தெளித்து அவளை மயக்கத்தில் இருந்து தெளிய வைக்க முயற்சி செய்து கொண்டு இருந்தனர்.
“ஏன்டா நாங்க இவ்ளோ பேர் வீட்ல இருக்கும்போதே, எங்க பிள்ளைய அடிச்சு மயங்குற அளவுக்கு கொடுமை பண்ணி இருக்கியே? ஆள் இல்லைனா என்னென்ன செய்வ நீ?” என்றாள் பூங்காவனம்.
“தேவையில்லாம என் குடும்ப விஷயத்துல நீங்க தலையிடாதீங்க.”
“எது உன் குடும்பமா? அப்படி ஒண்ணு இந்த ஜென்மத்துல உனக்கு அமையாது. என்னைக்கா இருந்தாலும் மதியழகி என் வீட்டு மருமக. உன்னோட ஒரு நாள்கூட அவ இருக்க மாட்டா. அவளுக்காக எந்த எல்லைக்கு வேணும்னாலும் நாங்க போவோம்” என்று தாத்தாவை ஏற்றி விடும்படியாக பேசினார் ஆறுமுகம்.
உடனே தாத்தாவும் வேகவேகமாக அருகில் இருந்த போலீஸ் ஸ்டேஷனுக்கு தன் செல் போன் வழியாக அழைப்பு விடுத்தார்.
“சீக்கிரம் ஃபோன் பண்ணுங்கப்பா. இவன எல்லாம் போலீஸ் புடிச்சிட்டு போயி உள்ள தள்ளி முட்டிக்கு முட்டி தட்டினா தான் புத்தி வரும். பண்றதெல்லாம் பண்ணிட்டு எப்படி மரம் மாதிரி நிக்கிறான் பாரு” என்றாள் பூங்காவனம்.
“எங்க ரெண்டு பேர் மேலயும் இவனுக்கு பொறாமை. அதான் வேணுமே இந்த நாள்ல எங்களை பழிவாங்கிட்டான் படு பாவி! இன்னைக்கு நீ செத்தடா!” என்று மிகுந்த ஆக்ரோஷத்தோடு கத்திக் கொண்டு இருந்தான் சந்திரன்.
“அதானே கேக்குறதுக்கு யாரும் இல்லைன்னு நினைச்சிட்டு இதெல்லாம் பண்ணிட்டு இருக்கானா என்ன? அவன் தாலி கட்டும் போதே நீங்க போலீஸ்க்கு ஃபோன் பண்ணி இருக்கணும். என் மருமகள என்ன பண்ணான்னு தெரியலையே. என் தங்கம் பேச்சு மூச்சில்லாம கிடக்குறாளே!” என்று கத்தி அழுதபடி மதியழகியை நோக்கி ஓடினாள் அவளது அத்தை பூங்காவனம்.
“என் புள்ளைய என்ன பண்ணானே தெரியல மதினி! கண்ணே முழிக்க மாட்டேங்குறா” என்று நெஞ்சு நெஞ்சாக அடித்துக் கொண்டு அழுதார் செண்பகம்.
“இவனோட ரூம், ரூம் மாதிரியா இருக்கு? கக்கூஸ் மாதிரி இருக்கு. ஒரு பொட்டு காத்து கூட வர மாட்டேங்குது. இங்கயே கிடந்தா பிள்ளைக்கு எப்படி காத்து வரும். சீக்கிரம் அவள தூக்குங்க, ஹாலுக்கு கொண்டு போகலாம்” என்று ஆறுமுகம் சொல்ல, ஆளுக்கொருவராக கை கொடுத்து மதியழகியை தூக்கி கொண்டு ஹாலுக்கு வந்தனர்.
சிறிது நேரத்தில் மதியழகியும் மயக்கம் தெளிந்து எழுந்து அமர்ந்தாள். அதே சமயத்தில் அவர்கள் அழைப்பு விடுத்திருந்த காவலாளிகளும் வீட்டிற்குள் நுழைந்தனர்.
“ஐயா, என்ன இங்க பிரச்சனை? யார் எங்களுக்கு கால் பண்ணினது?” என்று நடுக்கூடத்தில் நின்று கொண்டு கேட்க,
“நான்தான் சார் கால் பண்ணினேன். இதோ இங்க மரம் மாதிரி ஒருத்தன் நிக்கிறானே, இவனால தான் சார் எல்லா பிரச்சனையும். எங்க வீட்டு பொண்ணு கழுத்துல கட்டாய தாலி கட்டி, அவள அடிச்சு மயக்கம் போட வச்சுட்டான். இவன முதல்ல புடிச்சு உள்ள தள்ளுங்க.”
“ஆமா சார் இவன புடிச்சு உள்ள போடுங்க. என் பிள்ளைக்கு கட்டாய தாலி கட்டி, அடிச்சு மயக்கம் போட வச்சிட்டான்னு நான் இவன் மேல கம்ப்ளைன்ட் கொடுக்கிறேன். இவனால எங்க குடும்ப நிம்மதியே போயிடுச்சு. பொத்தி பொத்தி வளர்த்த பிள்ளைய, படுபாவி எப்படி அடிச்சு வச்சிருக்கான் பாருங்க” என்று ஆவேசமாக கத்தினார் செண்பகம்.
ஆளாளுக்கு மகேந்திரன் மீது வரிசையாக குற்றங்களை அடுக்கி கொண்டு இருந்தனர். பேரனை காப்பாற்ற என்ன செய்வது என்று தெரியாமல் அழுதவாறு நின்றிருந்தார் தங்கம்மாள்.
“என்ன மிஸ்டர் உங்க மேல இவ்ளோ கம்ப்ளைன்ட்ஸ் வைக்கிறாங்க. அந்த பொண்ணுக்கு மட்டும் ஏதாவது பிரச்சனை ஆகியிருந்தா ஆயுசுக்கும் உங்களால வெளியே வர முடியாது. காலம் முழுக்க ஜெயில்ல உட்கார்ந்து களி திங்க வேண்டியதுதான்.”
இவனும், “பண்ணிக்கோங்க…” என்றான் விட்டேற்றியாய்.
“அவ்வளோ திமிரா? ஐயா, நீங்க போலீஸ் ஸ்டேஷன் வந்து ஒரு கம்ப்ளைன்ட் கொடுங்க. நான் எஃப்ஐஆர் ரிஜிஸ்டர் பண்ணிட்டு இவன புடிச்சு ஒரு இருபது நாள் உள்ள தள்ளுறேன். சொல்ல வேண்டிய விதத்தில சொன்னா சார் புரிஞ்சுக்குவார்ன்னு நினைக்கிறேன்” என்று வில்லத்தனமான பார்வையோடு கூறினார் போலீஸ்.
“அத முதல்ல பண்ணுங்க சார்! இருபது நாள் கூட வேண்டாம் முடிஞ்சா ஒரு ரெண்டு வருஷத்துக்கு உள்ள தள்ளிடுங்க.” என்று வன்மத்தை கக்கிக் கொண்டு இருந்தாள் பூங்காவனம்.
மகேந்திரன் மீது போலீஸ் கை வைக்க முனைந்த பொழுது, மதியழகி வேக வேகமாக அவனுக்கு முன்னால் வந்து நின்றாள்.
“ஒரு நிமிஷம் நில்லுங்க. அவர் மேல எந்த தப்பும் இல்ல. இருட்டு ரூம்ல பல்லி மேல விழ, பயந்து போய் நான் தான் தெரியாம மயங்கிட்டேன். இதுக்கும் அவருக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. அவரு ஒன்னும் என்னை அடிக்கல! அவர விட்டுருங்க, இது ஒரு மிஸ் கம்யூனிக்கேஷன்” என்று சொன்னதும் சுற்றி இருந்த எல்லோரும் அவளை அதிர்ச்சியாக பார்த்துக் கொண்டு நின்று இருந்தனர். அனைவரையும் விட அதிக அதிர்ச்சியில் இருந்தது மகேந்திரன் தான்…
நிலைமையை புரிந்துக் கொண்ட காவலாளிகளும் ஒரு நிமிடம் கூட தாமதிக்காமல் அங்கிருந்து கிளம்பி விட்டனர். அடுத்த கணமே மீண்டும் மயங்கி சரிந்து விட்டாள் அவள். அவன் பிரச்சனையை அப்போதைக்கு ஓரங்கட்டி விட்டு, அவளை கவனிக்க ஆரம்பித்தது குடும்பம். தாத்தா மருத்துவர் அழைப்பு விடுத்தார்.
டாக்டர், “வெறும் மயக்கம். ரெஸ்ட் எடுத்தா சரியா போயிடும்” என்று சொன்ன பிறகுதான் அவர்களுக்கு உயிரே வந்தது.
தரைத் தளத்தில் இருக்கும் மிகப்பெரிய அறையான, பாட்டி தாத்தாவின் அறைக்குள் படுக்க வைக்கப்பட்டாள் மதியழகி. அம்மா, அத்தை இருவரையும் தவிர அந்த அறையில் வேறு யாரும் இல்லை. செண்பகம் மயங்கி கிடக்கும் மகளின் அருகே அமர்ந்து புலம்பிக் கொண்டு இருந்தார்.
“சின்ன வயசுல இருந்து அவனை கண்டாலே இவளுக்கு பிடிக்காது. இப்ப என்னமோ அவனை புடிக்க வந்த போலீஸ்காரனை இவளே திருப்பி அனுப்பிட்டா. ஏன் இப்படி எல்லாம் நடந்துக்கிறானு தெரியலையே மதினி?”
“இப்ப நீ எதுக்கு அழுவுற? நம்ம பிள்ள விவரமா தான் ஒவ்வொண்ணும் பண்ணும். இல்லைனா சின்ன வயசுல இருந்தே பிடிக்காத ஒருத்தன், இவளுக்கு கட்டாய தாலி கட்டுனதுக்கு அப்புறம் அவனுக்காக பரிஞ்சு பேசுவாளா? அவ ஏதோ திட்டத்தோட தான் மாத்தி பேசி இருப்பா!” என்று தூபம் போட ஆரம்பித்தார் பூங்காவனம்.
ஏற்கனவே குழப்பத்தில் இருந்த செண்பகத்திற்கு பூங்காவனத்தின் பேச்சு மேலும் குழப்பத்தை ஏற்படுத்தியது.
“என்ன மதினி சொல்றீங்க? ஒண்ணுமே புரியல! கொஞ்சம் தெளிவா புரியிற மாதிரி சொல்லுங்க.”
“நீ ஒரு கூறு கெட்டவ. உன்ன விட என் மருமகள பத்தி எனக்கு தான் நல்லா தெரியும்! அவ மனசுல எதையோ வச்சுக்கிட்டு தான் போலீஸ்ல கூட அவன புடிச்சு கொடுக்கல. அவன பழிவாங்குறதுக்கு வேற என்னமோ பெருசா பிளான் பண்ணிட்டா. அவ மனசுக்குள்ள ஏதோ ஒரு ஆத்திரம் இருக்கு. இல்லனா இப்படி மெல்லமா காய் நகத்த மாட்டா. அவன் தாலி கட்ட போனப்பவே ரணகளம் பண்ணிருப்பா. பொறுத்திருந்து பார்ப்போம் என்ன நடக்குதுன்னு!” என்று பூங்காவனம் சொல்லவும் அதை அப்படியே நம்பி விட்டார் செண்பகமும்.
போலீஸ் வீட்டிற்கு வந்து சென்றதிலிருந்து மகேந்திரன் வீட்டிற்குள் வரவே இல்லை. பின்னால் இருந்த தோட்டத்தில் தான் நேரத்தை செலவிட்டுக் கொண்டு இருந்தான். எதையோ நினைத்து வருந்தியவன் வானத்தை வெறித்து பார்த்தபடி மிகவும் சோர்வாக அமர்ந்து இருந்தான்.
நேரம் நள்ளிரவை கடந்திருக்க, மழை தூரல் விழ ஆரம்பித்தது. வேண்டா வெறுப்போடு உறங்கலாம் என்று நினைத்து தன் அறைக்குள் நுழைய எத்தனித்தான். ஆனால் அவனுக்கு முன்பே மதியழகி அங்கு வந்து அயர்ந்து உறங்கிக் கொண்டு இருந்தாள்.
அந்த அறையின் மூலையில் அவனது அம்மாவின் படத்திற்கு விளக்கு ஏற்றப்பட்டு மாலை போடப் பட்டிருந்தது. அதையும் மதியழகி தான் செய்திருந்தாள். இதையெல்லாம் பார்த்து மகிழ்ச்சி அடைவதற்கு மாறாக மகேந்திரன் கோபம் கொண்டான்.
