வேண்டினேன் – 1
சென்னை மாநகர்… காலை பொழுது, மெல்ல மெல்ல விடியத் தொடங்கி இருந்தது. தூங்கிக் கொண்டிருந்த நகர மக்கள், இன்னும் விழித்துக் கொள்ளாதிருக்க, சாலைகளில் ஆங்காங்கே சிலர் மட்டும் நடைப்பயிற்சி செய்து கொண்டிருந்தனர். அவர்களின் காலடி சத்தம், அந்த அமைதியான தெருக்களில் ஒரு மெல்லிய இசையைப் போல ஒலித்துக் கொண்டிருந்தது.
இந்த அதிகாலைப் பொழுதின் அழகை மேலும் மெருகூட்ட, எங்கோ ஒரு டீக்கடையில் இருந்து வரும் இஞ்சி டீயின் வாசம் காற்றில் கலந்து அந்த இடத்தையே ரம்மியமாக்கியது. வாகனப் போக்குவரத்து இல்லாததால், பறவைகளின் கீச்சிடும் ஒலிகூட தெள்ளத் தெளிவாகக் கேட்டது. அந்த அமைதியைக் கலைப்பது போல, ஒரு பேருந்து உறுமிக் கொண்டு வந்து நின்றது.
அதில் இருந்து பெட்டியும் கையுமாக இறங்கினாள் மீரா. அவள் பாதம் அழுத்தமாக, சென்னை நகரத்தின் வீதியில் பதிந்தது.
மீரா… பெயருக்கேற்றபடி தெய்வீக அழகுடையவள். அவள் கண்கள் பளிங்குக் கல் போல் பளபளவென மின்னும். நீளமான கூந்தல் அலை அலையாகப் பின்னிடப்பட்டு, அவள் இடுப்பளவு வரை தொங்கிக் கொண்டிருந்தது. அதன் கருமை, அவளின் மாநிற சருமத்திற்கு ஒரு தனி அழகை அளித்தது. முகத்தில் வாட்டம் இருந்தாலும், மென்மையான மலர் இதழ்களைப் போன்ற அவளது உதடுகள், எப்போதுமே ஒரு புன்னகையை ஏந்தியபடி இருந்தன.
பேருந்து நகர்ந்ததும் சாலையின் இருபுறமும் திரும்பி திரும்பி பார்த்தாள். நகரத்தின் இந்த அதிகாலை வாழ்க்கையே, அவளுக்குள் ஒருவித அச்சத்தையும், அதே சமயம் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியது. இன்னும் இரண்டு மணி நேரத்திற்கு பிறகு பார்த்து இருந்தால் என்ன ஆவாளோ!
தெருவின் நீள அகலங்களை விழி விரித்து பார்த்துக் கொண்டிருந்த நேரம், அவள் விழியோரம் ஒரு ஆட்டோ தென்பட்டது.
“அண்ணா, நிறுத்துங்க…” என்று கைநீட்டி தடுத்தாள்.
“என்னமா எங்க போகணும்?”.
“இதோ இங்கதான் அண்ணா…” என்று சிரித்த முகத்தோடு அட்ரஸை கொடுத்தாள்.
“கொஞ்சம் சுத்தி போகணும்மா. இருபது நிமிஷம் ஆகும்…”
“சரிங்கண்ணா, மெதுவாவே கூட்டிட்டு போங்க. ஒண்ணும் பிரச்சனை இல்ல…”
அவளது புன்னகையில் ஒருவித அமைதியும், அன்பும், அப்பாவித்தனமும் கலந்திருந்தது. அது அந்த ஆட்டோ டிரைவருக்கு அவள் பால் அக்கறையை உருவாக்கிற்று.
அவளது எளிய உடை கூட அவளை தேவதை போல எடுத்துக் எடுத்துக்காட்டியது. அவள் சிரிக்கும்போது, அவளது முகம் ஒரு தாமரை மலர் போல் விரிந்தது. அவளது ஒட்டுமொத்த தோற்றமும், கிராமத்து பெண் எனும் உண்மையை அப்பட்டமாய் பிரதிபலித்தது. எனவே ஆட்டோகாரர் தன் முதல் சவாரியை சந்தோஷமாக ஏற்றிக் கொண்டார்.
எப்போதும் பேரம் பேசுபவர், இன்று அவளுக்கு என்ன நிபந்தனையும் வைக்காமல் உடனே அவள் கொடுக்கும் பணத்திற்கு சம்மதித்தார். ஆட்டோ நகர வீதிகளில் சீறி பாய்ந்து பறந்தது.
முதல் முறையாக மீரா சென்னைக்கு வந்திருக்கிறாள். அதுவும் யார் துணையும் இல்லாமல் தனியாக. இங்கு எல்லாம் அவளுக்குப் புதிதாக இருந்தது. கிராமத்தில் மரங்கள், வீடுகள், கோயில்கள், மண் தரை என்று எளிமையாய் பார்த்து பழகியவளுக்கு, இங்கு வானுயர வளர்ந்திருக்கும் அடுக்குமாடி குடியிருப்புகள் ஆச்சரியத்தை ஏற்படுத்தின.
கண்ணாடி ஜன்னல்களும், பிரமாண்டமான உயரம் கொண்ட அடுக்குமாடி கட்டிடங்களும் அவளை மலைக்கச் செய்தன. சாலைகளில் பெருகி ஓடும் வாகனங்கள், விரைந்து நடக்கும் மக்கள் என இந்த நகரத்தின் ஒவ்வொன்றும் அவளுக்குப் புரியாத ஒரு புதிராக இருந்தது.
அவளது கிராமத்தில், மனிதர்கள் முகத்தைப் பார்த்துப் பேசிக்கொள்வார்கள். ஒருவரை ஒருவர் அறிந்தவர்கள் ஆதலால், கடந்து செல்லும்போது வணக்கம் வைத்துகொள்வார்கள். ஆனால், இங்கு அனைவரும் ஒரு இயந்திரத்தைப் போல விரைந்து செல்வதே அவளுக்கு மிகப்பெரிய விசித்திரமாக தோன்றியது.
அரை மணி நேரப் பயணத்திற்குப் பிறகு, மீரா தான் வரவேண்டிய இடத்திற்கு வந்து சேர்ந்தாள். அதுவும் இருபது மாடிகளுக்கு மேல் வளர்ந்திருந்த ஒரு பிரமாண்டமான அடுக்குமாடி குடியிருப்பு. அதன் வாயிலில் நின்று பார்க்கும்போதே, அப்பார்ட்மெண்ட் வாசிகளின் செல்வச் செழிப்பு அவளது கண்களுக்குத் தெரிந்தது.
ஒவ்வொரு தளத்தின் மூலையிலும் விலை உயர்ந்த கலைப் பொருட்கள், நேர்த்தியான வடிவமைப்பிலான செடிகள், ஆடம்பரமான விளக்குகள், மீன் தொட்டிகள் என்று அனைத்தும் அந்த இடத்தின் பெருமையை பறைசாற்றின.
அந்த அடுக்குமாடி வளாகமே ஒரு சொர்க்கத்தைப் போல காட்சியளித்தது. நுழைவாயிலினை கடந்து சென்ற கார்கள் கூட பல லட்சம் விலையுள்ளவை என்பது பார்த்ததுமே தெரிந்தது. இது சாதாரண மிடில் கிளாஸ் மனிதர்கள் வசிக்கும் இடம் இல்லை, பணக்காரர்களின் உலகம் என்று அவளது மனம் சொன்னது.
அட்ரெஸ் பார்த்து பத்தாவது மாடிக்கு வந்த பிறகு, மீரா தயக்கத்துடன் காலிங் பெல்லை அழுத்தினாள். கதவைத் திறந்தான் இளைஞன் ஒருவன்…
“சார், நான் மீரா…” என்றாள் மெல்ல.
“ஹான், எஸ். உள்ள வாங்க மீரா. நான் ரவி…”
ரவி, அவளது தயக்கத்தைப் புரிந்துகொண்டு, புன்னகையுடன் அவளை வரவேற்றான். அவனது குணம், பேச்சு எல்லாமே, அவனது தோற்றத்தைப் போலவே பாந்தமாக இருந்தது.
புன்னகையோடு வீட்டின் உள்ளே நுழைந்த அவளுக்குள், அடுத்த கணமே இனம் புரியாத ஒருவித அச்சம் ஏற்பட்டது. வீட்டு சுவர்கள் அனைத்தும் கருப்பு நிறத்தால் வர்ணம் பூசப்பட்டிருந்தன. சோபா, டேபிள், ஜன்னல் திரைச்சீலைகள், பூ ஜாடிகள் என்று எல்லாமே கருப்பு நிறத்தில் இருந்தன.
பொதுவாக கிராமங்களில் கருப்பு வண்ண உடைகளை கூட பயன்படுத்த மாட்டார்கள். அது ஆடையின் ஓரத்தில் துளி அளவு இருந்தால் கூட அனுமதி கிடையாது. வீட்டு சுவர்களுக்கு கருப்பு வண்ணம் அடிப்பதெல்லாம், உச்சத்திலும் உச்சகட்ட தவறான செயலாய் அவள் உள்ளுணர்வு சொன்னது.
வழக்கமாக வெள்ளை, கிளி பச்சை, ரோஸ் என வண்ணமயமான வீடுகளைப் பார்த்துப் பழகிய அவளுக்கு, இந்த கருப்பு நிறம் ஒருவித அச்சுறுத்தலைத் தந்தது. அந்த வீடு மிகவும் நேர்த்தியாகவும், நவீனமாகவும் இருந்தாலும், அவளது மனது சற்று மிரண்டது என்னவோ உண்மை.
“இங்க உக்காருங்க” என்று கூறி, ரவி அவளை அமர வைத்துவிட்டு சமையலறைக்குச் சென்றான்.
அவன் ஒரு கண்ணாடி குவளையில் கருப்பு நிற பானத்துடன் திரும்பி வந்தான். இந்த இடம், இந்த மனிதர்கள், எல்லாமே அவளுக்குப் புதியதாக இருந்ததால், அந்த கருப்பு பானத்தைக் குடிக்க அவள் அஞ்சினாள்.
“இது என்னது?” என்று மிரண்ட கண்களோடு கேட்டாள்.
“கூல் ட்ரிங்ஸ் தாங்க…”
“இல்ல எனக்கு இது வேண்டாம். எனக்கு ஒரு கிளாஸ் தண்ணி மட்டும் கொடுங்க சார்” என்று பணிவோடு கேட்டாள்.
அவளது தயக்கத்தைப் புரிந்துகொண்ட ரவி, புன்னகையுடன் அவளுக்கு ஒரு குவளை தண்ணீர் கொடுத்தான். தண்ணீர் குடித்ததும், அவள் சற்றே ஆசுவாசமடைந்தாள்.
“அந்த ரூம் உங்களோடது. நீங்க அங்கதான் தங்க போறீங்க. உங்க திங்க்ஸ் எல்லாத்தையும் கபோர்ட்ல வச்சுட்டு கொஞ்ச நேரம் ரிலாக்ஸ் பண்ணிக்கோங்க. உங்க ரூம் மேட் வந்து ஜாயின் பண்ணிக்குவாங்க” என்று கூறி அவளை ஓர் அறைக்குள் அனுப்பினான்.
“சரிங்க சார்…” என்று கூறியபடி எழுந்து நின்றாள்.
“சாரு மோரெல்லாம் வேண்டாம். ரவினே கூப்பிடலாம்…” என்றான் புன்னகையோடு.
அவளும் பதில் புன்னகையை தந்துவிட்டு அவன் சொன்ன அறைக்குள் நுழைந்தாள். அந்த அறையின் சுவர்கள் சாம்பல் நிறத்தில் வர்ணம் பூசப்பட்டிருந்தன. அது கருப்பு வண்ணத்தில் இல்லாமல் போனதே அவளுக்கு போதுமானதாக இருந்தது. ஆழ்ந்த மூச்சு எடுத்தவள், ஜன்னல் வழியே தெரிந்த நகரத்தின் காட்சியைப் பார்த்தபடி, அந்த அறையின் அமைதியை ரசிக்கத் தொடங்கினாள்.
தன் பெட்டியில் இருந்த பொருட்களை எல்லாம் எடுத்து அலமாரியில் அடுக்கி வைத்தாள். அப்போது, அவளது அம்மாவின் புடவை அவள் கையில் பட்டது. அதை தீண்டியவுடன் அவளது மனது கனத்தது. அவளது அம்மா வைதேகி, மருத்துவமனையில் உணர்வின்றி படுத்த படுக்கையாய் கிடக்கிறார். தம்பியும், அப்பாவும் உடன் இருந்து பார்த்துக் கொள்கிறார்கள். அம்மாவின் வைத்திய செலவுக்கு பணம் வேண்டி தான் இவ்வளவு தூரம் மீரா வந்திருக்கிறாள்…
குடும்பத்தின் நினைப்பு அவளுக்குத் துயரத்தை அளித்தது. உடனே அம்மாவின் ஆரோக்கியத்திற்காக, தன் மனதிற்குள் வழக்கம்போல குலதெய்வத்திடம் பிரார்த்தனை செய்தாள். இந்த புதிய வாழ்க்கையின் பயமும், அம்மாவின் நினைவும் அவளது மனதை ஒருசேர கனக்கச் செய்தன. நேரம் வீணாய்ப் போவது தெரிந்ததும், தன்னைத் தானே மீட்டுக் கொள்ள நினைத்தாள் மீரா.
சில நிமிடங்களில் குளித்து முடித்து, அழகான மஞ்சள் நிற தாவணி ஒன்றை அணிந்து கொண்டாள். ரவிக்கையும் பாவடையும், பச்சை வண்ணத்தில் மினுமினுத்தது. கண்ணாடி வளையல்கள் கைகளில் உரச, ஈரமான கூந்தலைத் துண்டால் கட்டியபடி, அவள் ரவி இருந்த ஹாலுக்குச் சென்றாள்.
“சார் இந்த வீட்ல பூஜை ரூம் எங்க இருக்கு?” என்று கேட்டாள்.
அவளது கேள்வியைக் கேட்டு ரவி அடக்கப்பட்ட புன்னகையுடன், “அப்படினா?” என்றான்.
அவன் கேலி செய்கிறான் என்பதைப் புரிந்துகொண்ட மீரா, “ஒரு புது விஷயத்தை ஆரம்பிக்கிறேன். சாமி கும்பிட்டு பண்ணலாம்னு நினைச்சேன்” என்று திக்கித் திணறிச் சொன்னாள்.
“பின்னால தான் இருக்கேன், கும்பிட்டுக்க…” என்றொரு கரகரப்பான குரல் அவள் முதுகுப்பக்கம் ஒலித்தது.
அந்தக் குரல், அவள் இதுவரையில் கேட்ட அத்தனை ஆண்களின் குரலை விடவும் முற்றிலும் மாறுபட்டதாக இருந்தது. கணீரென ஒலித்திருந்த அந்த சப்தத்தால், இனம் புரியாத அச்சமும், நடுக்கமும் மீராவின் மனதில் எழுந்திற்று.
மெது மெதுவாகத் திரும்பிப் பார்த்தாள். அங்கே ஆஜானுபாகுவான தோற்றத்தோடு கண்ணன் நின்றிருந்தான்! அவன் சட்டை கூட அணியாமல், தன் உடலின் அழகை அப்பட்டமாக காட்டிக் கொண்டு நின்றிருந்தான்.
மீராவின் பார்வை அவன் விழிகளைத் தீண்டியது. கத்தி போன்ற கூர்மையான கண்கள். அதன் கூர்மையை அடிக்கோடிட்டு காட்டும் விதமாக, அடர்த்தியான புருவம். புருவம் தீண்டிய கூந்தல் இழைகள். அது கொஞ்சம் கொஞ்சமாக பின்றந்தலை வரை நீண்டு, கார்மேகம் போல அலை அலையாக அவன் தோள்கள் வரை படர்ந்து இருந்தது.
அகன்ற தோள்களும், வலிமையான கைகளும், திண்ணிய மார்பகங்களும் அவனை ஒரு ஆணழகனாய் காட்டியது. இவன் மட்டும் இதே போல வீதியில் நின்று இருந்தால், கன்னிப்பெண்கள் கண்டிப்பாக கடத்திக் கொண்டு போய் இருப்பார்கள். அவ்வளவு அழகாய் இருந்தான் அவன்!
அத்தனைக்கும் சேர்த்து ஒரு திருஷ்டி பொட்டு போல, அவனது கண்களில் கடுமையும் கோபமும் நீக்கமற நிறைந்திருந்தது. அவனது ஒவ்வொரு அசைவும், ஒருவித கம்பீரத்துடன் இருப்பதை மீரா உணர்ந்தாள். அவன் இவளை நோக்கி ஓரடி எடுத்து வைத்தான். இவளுக்கு பயத்தில் உடல் நடுங்கி, வியர்க்க ஆரம்பித்துவிட்டது…
