வேண்டினேன் – 2
மீரா பின்னால் சென்று சுவற்றில் முட்டிக்கொள்ள, அவளை இன்னும் நெருங்கினான். இருவரது முகங்களும் சில இன்ச் இடைவெளியில் இருந்தது. அவன் கண்களை அத்தனை அருகில் பார்ப்பது, கழுத்தை கவ்வ காத்திருக்கும் சிங்கத்தை பார்ப்பது போல பயமாக இருந்தது மீராவுக்கு.
“மீரா…” அவன் சொன்ன விதமே, அவளது இதயத் துடிப்பை நிறுத்துவது போல் இருந்தது.
“உன் பயம் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு…” என்று அவன் சொல்ல, இவளோ எச்சில் விழுங்கினாள்.
“பாவம், என்ன பத்தி தெரியாம வந்து மாட்டிக்கிட்ட. இனிமே உன்ன கடவுளால கூட காப்பாத்த முடியாது” என்று கூறி அவன் சிரித்தான்.
அந்தக் கோரமான சிரிப்பு அவளது உடலின் ஒவ்வொரு அணுவிலும் பயத்தை ஊசியாக ஏற்றியது. மீரா அப்படியே நடுங்கி, ஒடுங்கிப் போனாள். கண்களில் கண்ணீர் கோர்த்தது. அவளால் ஒரு வார்த்தை கூடப் பேச முடியவில்லை. அவனது கண்களில் இருந்த அழுத்தம் அவளை அந்த அளவுக்கு பயமுறுத்தியது. அவன் அவளை அங்கேயே விட்டுவிட்டு, தன் அறைக்குச் சென்று விட்டான்.
கண்ணன் சென்றதும், மயங்கி சரிய போனவளை ரவி ஓடி வந்து தாங்கிப் பிடித்தான்.
“அவன் எப்பவுமே இப்படித்தான். நீ இதெல்லாம் பெருசா எடுத்துக்காத…” என்று கூறி, ஒரு கிளாஸ் தண்ணீர் கொடுத்தான்.
ஆனால், மீரா சமாதானமாகவில்லை. கண்ணனின் வார்த்தைகளும், அவனது கோபப் பார்வையும் அவளது மனதில் அச்சத்தை ஏற்படுத்தியிருந்தன. விட்டால் இன்றே மூட்டை கட்டிக்கொண்டு ஊருக்கு திரும்பி போய்விடுவாள் போல.
ரவி அவளது பயத்தைப் புரிந்துகொண்டு, “இந்த அப்பார்ட்மெண்ட்ல ஒரு சின்ன பெருமாள் கோவில் இருக்கு. நீ சாமி கும்பிடணும்னு கேட்டியே, போயிட்டு வரியா?” என்று கேட்டான்.
அவள் மனதில் கோவிலைப் பற்றிய எண்ணம் தோன்றியதும், அவள் முகம் சற்று பிரகாசமானது.
“ஓகே சார்…” என்றாள் மெல்லிய குரலில்.
“சார்னு சொல்லாதன்னு இப்பதான சொன்னேன். ரவினு சொல்லு…”
தலையாட்டி சம்மதித்தவள், தன் அறைக்குச் சென்று கண்ணீரின் தடயங்கள் அனைத்தையும் துடைத்து எடுத்தாள். ஓரளவு தன்னைத் தேற்றிக்கொண்டு, கோவிலுக்குப் புறப்பட்டாள்.
அது ஒரு பெருமாள் கோவில். கோவிலுக்குள் நுழைந்ததும், மீராவின் மனது சற்று அமைதியடைந்தது. அவளது கிராமத்தின் அமைதியான மலைக்கோவில் போல, இந்த சிறிய கோவிலும் அமைதியே உருவாய் இருந்தது. அவ்வளவு நேரம் அலைபாய்ந்து கொண்டிருந்த அவள் மனதிற்கு அந்த இடம் கொஞ்சம் நிம்மதியைக் கொடுத்தது.
‘என்னை இந்த புதிய வாழ்க்கையில் நிலைநிறுத்திக்கொள்ள பலம் கொடு. என் அம்மாவை காப்பாற்று. கெட்டவர்களை எல்லாம் என்னை விட்டு தூர நிறுத்து…’ என வேண்டிக் கொண்டு, கண்களை மூடி கும்பிட்டாள்.
அவள் மனது இப்போது சகஜ நிலைக்கு திரும்பியிருந்தது. பிரகாரத்தை சுற்றி வரும்போது, நிறைய துளசி செடிகள் இருப்பதை பார்த்தாள்.
‘அடுத்த முறை பெருமாளுக்கு துளசி எடுத்துக்கொண்டு வரவேண்டும்… ஆனால் இவர்கள் வீட்டில் துளசி செடி வளர்க்க அனுமதி தருவார்களா?’ என்ற யோசனையோடு திரும்பி நடந்து வந்தாள்.
மீண்டும் லிஃப்ட்டில் ஏறியபோது, அவளுடன் ஒரு பெண் உள்ளே வந்தாள். அவளது தோற்றம் முழுக்க முழுக்க நவீனத்துவமாய் இருந்தது. நேர்த்தியாக வெட்டப்பட்ட கூந்தல், சிறு கிளிப் கூட இல்லாமல் விரித்து விடப்பட்டிருந்தது. அவள் அணிந்திருந்த டைட்டான ஜீன்ஸும் டி-ஷர்ட்டும் அவள் உடலோடு பாந்தமாக பொருந்தி இருந்தது. கண்களுக்கு அழகிய சிகப்பு வண்ண கூலிங் கிளாஸ் அணிந்திருந்தாள்.
அவளது கைகளில் நிறைய பைகள் இருந்தன. ஏகப்பட்ட பொருட்களை அள்ள முடியாமல் அள்ளிக் கொண்டு வந்திருந்தாள். லிஃப்ட் பட்டனை அழுத்துகிறேன் என்று, சில பொருட்களை கீழே போட்டுவிட்டாள்.
“இருங்க நான் எடுத்துக் கொடுக்கிறேன்…” என்று மீரா அவளுக்கு உதவ முன்வந்தாள்.
“தேங்க்ஸ்ங்க…” என்றாள் அந்தப் பெண்.
“பரவாயில்லைங்க…” என்று புன்னகைத்தாள் இவளும்.
“உங்க தாவணி கலர் டாப் டக்கரா இருக்குது. கூட்டத்துல தொலைச்சாலும் ஈஸியா கண்டுபிடிச்சிடலாம்…” என்றாள் அந்தப் பெண் சிரிப்புடன்.
அவளது வார்த்தைகள் மீராவை கொஞ்சமும் கோபப்படுத்தவில்லை.
அவள் புன்னகையுடன், “எங்க ஊர்ல இது சாதாரணம். இந்த ஊருக்கு செட் ஆகாதுன்னு இப்பதான் புரியுது…” என்று கூறியபடி தலை குனிந்து கொண்டாள்.
மீராவின் இந்த அமைதியான அழகு, அந்த நவீன யுவதிக்கு மிகவும் பிடித்தது.
“ஐ ஆம் ப்ரியா…” என்றாள் அவள்.
“நான் மீரா…”
இருவரும் ஒரே தளத்தில் இறங்கியதும், மீராவுக்கு இன்னும் கொஞ்சம் நிம்மதியாக இருந்தது.
“நீங்களும் இந்த ஃப்ளோர் தானா? எந்த வீடு?” என்று கேட்டாள் மீரா.
“ஏன்ங்க கேக்குறீங்க? ஆளில்லாத நேரத்துல வந்து கொள்ளை அடிச்சுட்டுப் போகவா…” என்றாள் சிரித்தபடி. அவள் கேட்டதும், மீராவின் முகம் சட்டென்று நிறம் மாறியது.
“சும்மா சொன்னேன் மீரா. இதுக்கு போய் ஏன் இவ்வளவு பயப்படுற?” என்று கேட்டபடி அவளைப் பின் தொடர்ந்தாள். திடீரென்ற ஒருமையான அழைப்பால் மீரா இன்னும் திணறினாள்.
“சரிங்க, இன்னொரு நாள் பார்ப்போம்…” என்று அவளை விட்டு வேகமாய் நடந்த மீரா, ஒரு கதவின் அருகே வந்து நின்று, காலிங் பெல்லை அழுத்தினாள்.
“அட! அவனுங்களுக்கு எப்பவும் லாக் போட்டு வைக்கிற பழக்கமே கிடையாது. உள்ள வா…” என்று கூறிய ப்ரியா கதவைத் திறந்து கொண்டு உள்ளே நுழைந்தாள்.
அப்போதுதான் மீராவுக்கு ப்ரியா யார் என்பது ஓரளவுக்குப் புரிந்தது. அவள் தன்னை யார் என்று தெரிந்து கொண்ட பிறகுதான் ஒருமையில் அழைத்து பேசியிருக்கிறாள் என்றும் புரிந்தது.
“ரவி, நீ கேட்ட திங்க்ஸ் எல்லாம் கரெக்டா இருக்குதான்னு பாரு. அப்புறம் அது நொட்ட இது நொள்ளனு சொல்லிட்டு வந்த கொன்றுவேன்…” என்று சொல்லிக்கொண்டே நேராக கண்ணனின் அறைக்குச் சென்றாள்.
சமையலறையிலிருந்து வந்த ரவி, சோபாவில் வைக்கப்பட்டிருந்த மூட்டைகளைப் பிரித்துச் சரி பார்த்தான். பொம்மைகள், செயற்கை பூச்செடிகள், சின்ன சின்ன அலங்காரப் பொருட்கள், வித்தியாசமான பாத்திரங்கள் என ஏகப்பட்ட பொருட்களை அவள் அள்ளிக் கொண்டு வந்திருந்தாள்.
“இதுக்குத்தான், ப்ரியாவை இந்த வேலைக்கு அனுப்புறது! தட்டி தூக்கிருக்கா…” என்று ரவி ப்ரியாவைப் பாராட்டினான்.
பிறகு அந்தப் பொருட்களை எல்லாம் எடுத்து ஒரு அலமாரியில் அடுக்கி வைத்தான்.
மீராவின் கண்கள் முழுவதும் கண்ணன் அறையையே உற்று நோக்கிக் கொண்டிருந்தன. கண்ணனின் அறைக்குள் ப்ரியா சென்றுவிட்டாள், ஆனால் அவள் இன்னும் வெளியே வரவே இல்லை. மீரா வளர்ந்த கிராமத்து உலகில், ஒரு பருவ வயதுப் பெண், இளவயது ஆண்களுக்கு நேர் எதிரே நடந்து செல்வதைக் கூட பெரிய விஷயமாகப் பேசுவார்கள்.
அப்படிப்பட்ட சூழ்நிலையில் வளர்ந்த அவளுக்கு, அவன் அறைக்குள் ப்ரியா சென்றதும் கூட மிகவும் தவறான செயல்களாகத் தோன்றின. இந்தச் சூழல் தனக்கு ஒத்துவருமா என்று அவள் நூற்றியெட்டாவது முறையாக யோசித்துக் கொண்டிருந்தாள். ஆனால் அம்மாவைப் பற்றிய நினைப்பு அவள் வாயையும் காலையும் கட்டி போட்டது. பயம், குழப்பம், எனப் பல உணர்ச்சிகளால் அவளது மனம் அலைக்கழிக்கப்பட்டது.
மீரா சோபாவில் அமர்ந்து நகத்தைக் கடித்துக் கொண்டிருந்தாள். அப்போது, கண்ணன் தன் அறையில் இருந்து வெளியே வந்தான். அவன் இன்னும் சட்டை அணியவில்லை. அவனுக்குப் பின்னால், ப்ரியா நோட்டும் பேனாவும் எடுத்துக்கொண்டு விரைந்து வந்தாள். ரவியும் இதற்குள் பொருள்களை எல்லாம் அலமாரியில் கடை பிரித்து வைத்து விட்டான்.
கண்ணன் தன் கரகரப்பான குரலில், “காய்ஸ், மீட்டிங் டைம்!” என்று அழைத்தான்.
உடனே, மூவரும் சோஃபாவை நோக்கி வந்தனர். மீரா தயக்கத்துடன் ஓரமாய் நின்றாள். ரவி அவளுக்கு தன் அருகிலேயே இடம் கொடுத்தான். மீரா, பயத்துடன் சோஃபாவின் நுனியில் அமர்ந்து கொண்டாள்.
“வி வெல்கம் யூ மீரா…” என்று கண்ணன் கரகரப்பான குரலில் கூறி, அவளை மீண்டும் ஒருமுறை அச்சுறுத்தினான்.
“த்… தேங்க்ஸ்…” என்றாள் திக்கித் திணறி.
“அவ்ளோதானா?” அவளை ஒரு மார்க்கமாக பார்த்துக் கொண்டே கேட்டான் அவன்.
எழுந்துவிடலாம் என்று அவள் மனம் முழுவதும் எண்ணங்கள் வேர்விட, ரவி உள்ளே புகுந்தான்.
“டேய் போதும்டா, விட்டா அழ வச்சிடுவ போல? பாவம்டா…”
ப்ரியா, “என்னை மட்டும் அழ வச்சீங்க? அப்ப நான் பாவம் இல்லையா?” என்று ஆரம்பித்தவள்,
மீராவின் பக்கம் திரும்பி, “நான் உள்ள வந்த உடனே பேய் வேஷம் போட்டு, பிசாசு மாதிரி கத்தி ஓட ஓட விரட்டுனாங்க தெரியுமா? இதோ இந்த ரவி பய, ரத்தம் கக்குற மாதிரி எல்லாம் ஆக்சன் பண்ணான். எனக்கு அந்த நிமிஷம் உயிரே போயிடுச்சு. நான் கத்தின கத்துல, மொத்த அப்பார்ட்மெண்ட்டும் அலறிட்டு போலீஸ்க்கு போன் பண்ணிட்டாங்க” என்று அந்த நாள் ஞாபகங்களை கண்களை உருட்டி கதையாக காட்சிப்படுத்தினாள்.
“அச்சச்சோ, அப்புறம் என்ன ஆச்சு?”
“வேறென்ன? போலீஸ் ஸ்டேஷன்ல அரை நாள் உட்கார்ந்து இருந்துட்டு வந்தோம்” என்று பெருமையாக கூறிக் கொண்டான் ரவி.
“பயமா இல்லையா?”
“பயமா எங்களுக்கா? ஹா… ஹா…” என்று நம்பியார் போல சிரித்தான்.
ப்ரியா, “அதெல்லாம் இவனுங்களுக்கு வெக்கேஷன் ஸ்பாட் மாதிரி. ஆறு மாசத்துக்கு ஒரு தடவை ஏதாவது ஒரு ஏழரைய இழுத்து வச்சுருவாங்க. இப்போல்லாம் போலீஸ் எங்களை பார்த்தா, ஃப்ரீயா இருந்தா ஸ்டேஷனுக்கு வந்துட்டு போங்கப்பா என்று சொல்லுவாங்க. அவ்ளோ ஃப்ரெண்ட்ஸ் ஆகிட்டோம்…”
இப்போதும் ரவி வெட்கமின்றி, “எங்கள ரொம்ப புகழாத பிரியா, வீர வாழ்க்கையில இதெல்லாம் சகஜம்!” என்றான்.
மீரா இதுவரை அவர்கள் மீது கொண்டிருந்த பயம் சற்று குறைந்து, உதட்டில் ஒரு புன்முறுவல் மலரத் தொடங்கியது.
அவள் சகஜமான மனநிலைக்கு வந்திருந்த நேரத்தில், “டம்! டம்! டம்!” என்று கதவைத் தட்டும் ஓசை கேட்டது.
“யார்ரா அது திறந்து கிடக்குற கதவைத் தட்டுறது?” என்று நக்கலாகக் கேட்டாள் ப்ரியா.
“என்ன, திறந்து தான் இருக்கா?” என்று வெளியில் இருந்து கேட்ட குரல், உடனே கதவைத் திறந்தது.
ஆனால், கதவு கால்வாசி திறப்பதற்கு முன்பே தடுக்கப் பட்டுவிட்டது. கண்ணன் மின்னல் வேகத்தில் ஓடிப் போய் கதவை இறுக்கமாகப் பிடித்துக் கொண்டான். அவனது முகம் கோபத்தால் சிவந்து போயிருந்தது.
“உன்னை யாருடா இங்க வரச் சொன்னது? வெளிய போ…” என்று கத்தினான்.
“டேய் அண்ணா, ஒரு சின்ன உதவிடா…” என்று கெஞ்சினான் வெளியே இருந்தவன். கண்ணனின் முகம் மேலும் கோபத்தால் இறுக்கமானது.
“அரை உதவி கூட கிடைக்காது. மரியாதையா கையை எடுத்துரு. இல்லன்னா ஒரே நசுக்கு நசுக்கிடுவேன்” என்று எச்சரித்தான்.
“அப்படி சொல்லாதடா, உன்னை நம்பி வந்திருக்கேன். ப்ளீஸ்டா…” என்று கெஞ்சிக் கொண்டிருக்கும்போதே, கண்ணன் மெல்ல மெல்ல கதவை மூட ஆரம்பித்தான்.
வந்திருப்பவன் நகுல். கண்ணனின் தம்பி! சென்ற வருடம் படிப்பை முடித்துவிட்டு, வேலைக்கு போக ஆரம்பித்தான். அவ்வப்போது கண்ணனை பார்க்க வருவதும், அடி வாங்கிக் கொண்டு செல்வதும் அவனுக்கு சகஜம்.
நகுலின் குரல் கேட்டு, மீராவுக்கு என்ன ஏதென்று புரியவில்லை. அவனது கெஞ்சும் குரல் அவளுக்குள் பரிதாபத்தை ஏற்படுத்தியது. சட்டென்று எழுந்த மீரா, அவர்களுக்கு இடையில் என்ன பிரச்சினை ஓடிக் கொண்டு இருக்கிறது என்று தெரியாமல், கண்ணனைப் பிடித்துப் பின்னால் இழுத்தாள்.
அந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்ட நகுல், “படார்” என்று கதவைத் திறந்து கொண்டு உள்ளே நுழைந்துவிட்டான்.
நடந்ததைக் கண்டு கண்ணன் கோபத்தால் வெறி பிடித்தவன் போல் ஆனான்.
கடும் கோபத்தோடு மீராவின் பக்கம் திரும்பி, “உன்னை…” என்று கத்தியபடி, அவளை அடிக்கக் கையை ஓங்கினான்.
மீரா பயத்தில் உறைந்து போனாள். ஓடவும் மறந்துவிட்டு சிலையாக நின்றாள். ஆனால் அவளது இதயம் தனியே நூறு கிலோமீட்டர் வேகத்தில் ஓடிக்கொண்டிருந்தது. கண்கள் இமைக்கவும் மறந்து, கண்ணனின் கை தன்னைத் தாக்க வரும் அந்த நிமிடத்திற்காகக் காத்திருந்தது.
ஆனால், அவளது கன்னத்தில் அடி விழவில்லை. மாறாக ரவியின் கன்னத்தில் விழுந்தது. ஆம்! அவன்தான் இருவருக்கும் நடுவில் தன் கன்னத்தை நீட்டி இருந்தான்.
“அம்மா…” என்று அலறியபடி, ரவி தரையில் “பொத்” என விழுந்தான்.
ஒரு ஆளே தரையில் விழுவது என்றால் சாதாரண அடியா அது?
