அத்தியாயம் 1
அந்த அழகான பூங்காவில் அமர்ந்து கணவன் மற்றும் குழந்தைகள் விளையாடுவதை ஆறு மாத கருவை சுமந்து பார்த்துக் கொண்டு இருந்த ஜோதிகாவின் அலைப்பேசி அலறியது.
உடன் பிறந்த தங்கை யாஷ்மிகா அழைப்பு அவளின் உடல் அதிர்வை வெளிப்படையாகவே காட்டிக் கொடுத்தது அர்ஜூனுக்கு.
குழந்தைகளுடன் விளையாடிக் கொண்டே மனைவியிடம் என்ன என்பது போல் புருவத்தை உயர்த்தி அவன் கேட்க,
ஜோதிகாவோ தன் கைப்பேசியில் வந்துக் கொண்டு இருந்த அழைப்பை காட்டினாள்.
அதே நேரம் அர்ஜூனின் அலைப்பேசியும் சத்தத்தை கொடுக்க, யாரென்று எடுத்து பார்த்தவன் முகம் யோசனையில் சுருங்கியது.
இம்முறை மனைவியிடம் தன் கைப்பேசியை திருப்பி காட்டினான்.
“என்னங்க இவங்க இரண்டு பேரும் ஒரே நேரத்துல கால் பண்றாங்க? ஏதாவது திரும்ப பிரச்சனையா?” என்று சற்று பதற்றத்துடனே கேட்டாள் ஜோதிகா.
மனைவியின் பதற்றத்தை உணர்ந்த அர்ஜூனோ “ஜோ…” என்றான் அழுத்தமாக.
அவனோ கணவனை நிமிர்ந்து பார்க்க, கண்களாலே அவளின் மேடிட்ட வயிற்றையும் ஒன்றும் புரியாமல் அவளையே பார்த்தபடி நின்று இருந்த இருப்பிள்ளைகளையும் காட்டினான்.
அவர்களை கண்டதும் தான் தன் தவறு புரிந்து தன்னை இயல்பாக காட்டிக் கொள்ள முயன்றாள்.
மனைவியின் உணர்வை படித்தவன் ஆயிற்றே அவன்.
அவளின் பதற்றத்தையும் பயத்தையும் அப்படியே விட்டு விடுவானா என்ன?
மென்மையாக மனைவியின் கரத்தை பற்றி உறுதியாக அழுத்தினான்.
“நான் பார்த்துக்கிறேன்டி. நீ இப்போ ரிலாக்ஸா இரு புரியுதா? அது தான் நம்ம பசங்களுக்கு நல்லது. பாரு உன் முகம் மாறினதுமே பிள்ளைங்க விளையாடுறதை கூட விட்டு உன் கிட்ட வந்துட்டாங்க” என்று சொன்னவன் மூவரையும் அழைத்துக் கொண்டு காரில் ஏறி புறப்பட்டான்.
காரில் அமர்ந்ததும் “எங்கேங்க போறோம்?” என்று கேட்ட மனைவியை நோக்கி,
“சித்தப்பா வீட்டுக்கு தான்” என்றான்.
அதன் பிறகு ஜோதிகாவும் ஒருவார்த்தை கூட எதுவும் பேசவில்லை.
தங்கை எதற்காக அழைத்தாள் என்ற எண்ணமே அவளுள் சுழன்றுக் கொண்டு இருந்தது.
யாஷ்மிகாவின் அழைப்பை ஏற்று பேச மனம் பரபரத்தாலும் நேரில் சென்று பார்த்துக் கொள்ளலாம் என்று தன்னை கட்டுப்படுத்திக் கொண்டு அமர்ந்து இருந்தாள்.
சிறிது நேரத்திற்கு எல்லாம் அர்ஜூன் தன் சித்தப்பா வீட்டின் முன் தன் காரை நிறுத்தியவன் முதலில் காரிலிருந்து இறங்கி வெளியே வந்து, மனைவியின் பக்கம் சென்று கதவை திறந்து அவளை பிடித்து மெதுவாக காரிலிருந்து இறக்கி விட்டான்.
பின் பிள்ளைகள் இருவரையும் இருக்கரத்தால் பிடித்துக் கொண்டு அர்ஜூனும் ஜோதிகாவும் அந்த பெரிய வீட்டின் உள்ளே நுழைய,
ஜீவனோ “சித்தா…” என்று கத்திக் கொண்டே ஓடிச் சென்றான் அவனின் ஆருயிர் சித்தப்பாவும் அர்ஜூனின் தம்பியுமான யாதவ்வை நோக்கி.
ஜீவனின் குரலில் யாதவ்வும் வாசலை காண, ஜீவன் அவனை நெருங்கும் முன் அண்ணன் மகனை நோக்கிச் சென்று அவனை அப்படியே அலேக்காக தூக்கி காற்றில் சுற்றி ஜீவன் கன்னத்தில் அழுத்தமாக முத்தம் வைத்தான்.
நிலவழகியும் தன் உடன் பிறந்தவனுக்கு இணையாக “சித்தி…” என்று கத்தியபடி அங்கே நின்று இருந்த யாஷ்மிகாவை நோக்கி ஓட, யாதவ்வை போல் அவளும் குட்டி நெருங்கும் முன் அவளை நெருங்கி தூக்கி அணைத்து சுற்றியவள் நிலவழகி கன்னத்தில் அழுத்தமாக முத்தம் வைத்தாள்.
இதை பார்த்த அர்ஜூனும் ஜோதிகாவும் ஒருவரை ஒருவர் பார்த்து விட்டு உள்ளே நுழைய, அவர்களை வரவேற்றார் கார்த்திகேயன்.
“வாங்க அர்ஜூன் ஜோதிகா” என்று அழைத்து அவர்களை சோபாவில் அமர வைத்தார்.
அர்ஜூனும் இன்முகத்தோடு உள்ளே வந்தவன் “எப்படி இருக்கீங்க சித்தப்பா?” என்று நலம் விசாரித்தான்.
ஜோதிகாவும் அவரை மரியாதையுடன் நலம் விசாரிக்க,
“நல்லா இருக்கேன். நீங்க எப்படி இருக்கீங்க இரண்டு பேரும்?” என்று கேட்டார்.
“நாங்களும் நல்லா இருக்கோம் மாமா. சின்ன அத்தை எங்கே?” என்றாள் ஜோதிகா அந்த வீட்டில் அவரை தேடியபடி.
“அவ ரூம்ல இருக்காம்மா. இருங்க கூப்பிடுறேன்” என்று அறையை நோக்கி “ரேணுகா” என்று அழைத்தார்.
“வரேன்” என்று குரல் ஒலிக்க… ஒலித்த குரலை தொடர்ந்து ரேவதியின் தங்கை அர்ஜூனின் சித்தி வெளியே வந்தார்.
அவர் வந்ததும் யாதவ் யாஷ்மிகாவை அழுத்தமாக பார்க்க, அவளும் அந்நேரம் அவனை தான் வெறுமையாக பார்த்தாள்.
வெளியே வந்த ரேணுகா நேராக சோபாவில் போய் அமர்ந்தவர் நேரடியாக விஷயத்திற்கே வந்தார்.
“என்னால இதுக்கு மேல முடியாது ஜோதிகா. உன் கொழுந்தன் ஒரே பிடிவாதமா இருக்கான். டிவோர்ஸ் பண்ண போறானாம். ஏன்டானு கேட்டதுக்கு கட்டாயப்படுத்தி கல்யாணத்தை பண்ணி வச்சா எப்படி பிடிக்கும். பிடிக்காத கல்யாணத்துல எப்படி பிடிச்ச மாதிரி ஒன்னா வாழ முடியும்னு கேட்கிறான். இவளும் அவனுக்கேத்த மாதிரி பேசுறா. இதுங்களை இப்போ என்ன தான் பண்றதுனு எனக்கு தெரியலம்மா. நிஜமாவே பிடிக்காத வாழ்க்கையில இவங்களை பிடிச்சி வச்சி இருக்கிற மாதிரி குற்றவுணர்ச்சியா இருக்கு” என்று மனம் வருந்தி பேசியவரை கண்டு வேதனை அடைந்தாள் ஜோதிகா.
மனைவின் வேதனையை கண்டு சும்மா இருந்து விடுவானா என்ன அர்ஜூன்.
தம்பியை தீயாக முறைத்தவன் “என்ன யாதவ் இது?” என்றான்.
யாதவ்வோ ஜீவனை கீழே விட்டபடி “அண்ணா ப்ளீஸ் நீங்களும் புரிஞ்சிக்காம பேசாதீங்க. கட்டாயப்படுத்தி ஒரு பந்தத்துல இருக்க முடியாது அர்ஜூ அண்ணா. ஏதோ சந்தர்ப்ப சூழ்நிலை. எங்களுக்கு கல்யாணம் நடக்க வேண்டியதா போச்சு. கல்யாணம் நடந்துச்சின்றதால ஒருத்தருக்கு ஒருத்தர் பிடிக்காம வாழ முடியுமா?” என்று கேட்டவனின் இதயத்தில் ரத்தம் அழுத்தம் உண்டாவதை போல வெகுவான வலியை உணர்ந்தான் யாதவ்.
யாதவ்வின் வார்த்தையில் உலைகொதியாக கொதித்துக் கொண்டு இருந்த யாஷ்மிகாவின் இதயமோ ‘பிடிக்காம தான் என்னோடு’ என்று அவளால் அவளின் வாழ்க்கையில் நடந்த இனிமையான தருணத்தை நினைத்து வருந்த கூட முடியவில்லை.
விழிகளில் கண்ணீர் தேங்கிக் கொள்ள, அவசரமாக இமையை படபடவென அடித்துக் கொண்டு கண்ணீரை கட்டுப்படுத்தியவள் நிலவழகியை கீழே இறக்கி விட்டு அர்ஜூன் முன் சென்று நின்றவள் குரல் கரகரக்க,
“எங்களுக்கு விவாகரத்து வாங்கிக் கொடுத்திடுங்க மாமா. அவருக்கும் அது தான் இப்போ தேவை. விவாகரத்து கிடைச்சிட்டா அவர் ஆசைப்பட்டபடி ஸ்ரீ கூட வாழட்டும்…” என பேசிக் கொண்டு இருந்தவள் திடீரென மயங்கி விழ போக, சட்டென்று சுதாரித்த யாதவ் ஒரே எட்டில் அவன் மனைவியை தாங்கிப் பிடித்தான்.
அவன் கைகளுக்குள் சுயநினைவே இல்லாமல் இருந்தவளின் கன்னத்தை தட்டி “யாஷ்… யாஷ்… எழுந்திருடி… கண்ணை திற டி… என்னை பயமுறுத்தாத” என்று பரிதவித்து போனான் யாதவ்.
முதலில் யாஷ்மிகா மயங்கியதும் பதறிய குடும்பம் யாதவ் வின் தவிப்பை கண்டு ஒருவரை ஒருவர் அர்த்தத்துடன் பார்த்துக் கொண்டனர்.
வேண்டாம் என்று விலகி போக நினைத்தவன் தன்னவளுக்கு ஒன்று என்றவுடன் தானாக அவன் இதயம் அவளுக்காக துடித்து போவது தான் கணவன் மனைவியின் பிணைப்போ.
வேகமாக மனைவியை தன் கரத்தில் ஏந்திக் கொண்டு காரை நோக்கி ஓட, அதற்குள் அர்ஜூன் வெளியே செல்ல எத்தனித்தவன் ஜோதிகா அவர்களை பின் தொடர்ந்து வருவதை கண்டு அவளை தடுத்து,
“ஜோ நீ குழந்தைகளை பார்த்துட்டு வீட்ல இரு” என சொல்லி விட்டு முன்னே செல்ல,
கார்த்திகேயனோ “ரேணு நீ ஜோதிகாவுக்கு பாதுகாப்பா வீட்லயே இரும்மா” என்று அவரும் சொல்லிவிட்டு மகன் மருமகளோடு சென்றார்.
கணவர்மார்கள் சொன்னதை கேட்ட இரு மனைவியார்களும் தவிப்போடு ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு கார் அங்கே இருந்து பறந்ததும் பிள்ளைகளை அழைத்துக் கொண்டு மீண்டும் உள்ளே சென்றார்கள்.
நிலவழகியும் ஜீவனும் என்ன நடக்கிறது என்று புரியாமல் “அம்மா சித்திக்கு என்னாச்சு?” என்று கேட்டனர்.
ஜோதிகா பிள்ளைகள் இருவரையும் தனதருகில் வர வைத்து “ஒன்னும் இல்லைங்கடா. சித்தி ஒழுங்கா சாப்பிடலையாம். அதான் மயக்கம் வந்துடுச்சு. ஹாஸ்பிடலுக்கு போய் ஊசிப்போட்டதும் திரும்ப வந்திடுவாங்க” என்று பொறுமையாக சொன்னாள்.
அதற்குள் ரேணுகா சமையலறையில் இருந்த பணிப்பெண்ணிடம் “மூனு ஜூஸ் எடுத்துட்டு வாங்க” என்று கட்டளையிட்டார்.
மருத்துவமனையில் யாஷ்மிகாவை அவசர சிகிச்சை பிரிவில் சேர்த்து விட்டு பதற்றத்துடன் வெளியே நின்று இருந்தார்கள் ஆண்கள் மூவரும்.
அதிலும் யாதவ்வுக்கு கைகால்கள் எல்லாம் ஏனோ சிறு நடுக்கம் எடுக்க ஆரம்பித்து இருந்தது.
யாஷ்மிகாவுக்கு எதுவும் ஆகி விட கூடாது என்று மனதிற்குள்ளே வேண்டிக் கொண்டே இருந்தான்.
அவனின் தவிப்பை பார்த்த இருவருக்குமே குழப்பம் தான்.
விவாகரத்து கேட்கிறான் ஆனால் அவளுக்கு ஒன்று என்றதும் துடித்து போய் விடுகிறானே.
சில கணங்கள் கழித்து மருத்துவர் வெளியேற, அவசரமாக அவர் அருகில் சென்ற யாதவ்,
“டாக்டர் என் வைஃப்க்கு எதுவுமில்லைல. அவ நல்லா இருக்கா தானே. நான் போய் அவளை ஒரு தடவை பார்த்துட்டு வந்திடவா?” என்று அவரை பேச விடாமல் பேசிக் கொண்டு இருந்தவன் யாஷ்மிகாவை சேர்த்து இருந்த பிரிவை நோக்கிச் சென்றான்.
அவனை பிடித்து நிறுத்திய அர்ஜூன், “யாதவ் கண்ட்ரோல் யுவர் செல்ஃப். முதல அவங்களை பேச விடு” என்று தம்பியை அடக்கினான்.
தமையன் கூறியதும் தான் டாக்டர் இன்னும் எதுவும் கூறாமல் இருப்பது புத்திக்கு உரைக்க, அவரை பதற்றத்துடன் நெருங்கி,
“டாக்டர் என் மனைவி நல்லா தானே இருக்கா?” என்று வலிகள் நிறைந்த குரலில் கேட்டான்.
அவனை நிதானமாக பார்த்த மருத்துவரோ இல்லை என்று இருப்பக்கமும் தலையை ஆட்டினார்.
அதை பார்த்து அவன் உடல் தளர்ந்து பின்னோக்கி அதிர்ச்சியுடன் செல்ல, உதடோ “அவளுக்கு ஏதாவது பெரிய பிரச்சனையா இருக்குமோ?” என்று முணுமுணுக்க,
மருத்துவரை நோக்கி “டாக்டர் இதை விட பெரிய ஹாஸ்பிட்டலுக்கு அழைச்சி போகணுமா? இல்லனா வெளிநாடு ட்ரீட்மென்ட் கொடுக்கணுமா?” என்று பிதற்றியவனை நிதானமாக நோக்கி,
“நீங்க எங்க கூட்டிட்டு போனாலும் எல்லாரும் சொல்ற ஒரே பதில், ஷீ இஸ் பிரக்னன்ட்” என்று அவர் கூற,
“பரவாயில்லை டாக்டர் எப்படி பட்ட நோயா இருந்தாலும் அவளை நான்” என்று பேசிக் கொண்டு போனவனுக்கு அப்பொழுது தான் உரைத்தது மருத்துவர் சொன்ன செய்தி என்னவென்று.
இதுவரை மனைவிக்கு என்ன ஆனதோ ஏது ஆனதோ என்று தெரியாமல் தவித்து துடித்துக் கொண்டு இருந்தவனுக்கு மனைவி கர்ப்பமாக இருக்கிறாள் என்று செவிகளில் விழுந்ததும் மனதிற்குள் அத்தனை குதுகலிப்பு உண்டாக, முகத்தில் ஆச்சரியத்தின் கோடுகள்.
“வாவ்… தேங்க்யூ டாக்டர்” என்று சந்தோஷத்தில் உளறியவனை நோக்கி சிரித்தபடி “கங்கிராட்ஸ்” என்று தன் கரத்தை நீட்டி வாழ்த்து தெரிவித்தவர் “இப்போ கொஞ்சம் வீக்கா இருக்கிறதுனால மயக்கத்துல இருக்காங்க. சோ கொஞ்ச நேரத்துல கண்ணு முழிச்சிடுவாங்க. அப்போ போய் அவங்களை பார்த்துட்டு என் கேபினுக்கு அழைச்சி வாங்க.” என்று கூறிவிட்டுச் சென்றார்.
அவர் சென்றதும் சந்தோஷத்தில் துள்ளிக் குதித்தவன், அர்ஜூனை கட்டிக் கொண்டு “வாவ் அண்ணா நீ பெரியப்பா ஆகிட்ட. அப்பா நீங்க தாத்தாவாகிட்டீங்க. நம்ம வீட்டுக்கு இன்னொரு குட்டி பாப்பா வர போகுது” ஆர்ப்பரித்தவனின் முன் வந்த அர்ஜூன்,
“பட் நீங்க தான் விவாகரத்து வாங்க போறீங்களே. அப்புறம் எப்படி குட்டி பாப்பா நம்ம வீட்டுக்கு வரும்?” என்ற கேள்வியில் அதுவரை இருந்த உற்சாகம் சட்டென்று யாதவ்விடமிருந்து விலகிச் சென்று விட, முகத்தில் சோக ரேகையை தத்தெடுத்துக் கொண்டான்.
கார்த்திக்கேயனோ “எப்படிடா பிடிக்கலனு சொல்லிட்டு… இப்போ குழந்தை? ஒரு அப்பாவா இதை கேட்க எனக்கே சங்கடமா இருக்குடா” என்று மகனை அதிருப்தியுடன் பார்த்தார்.
அர்ஜூனும் அதே கேள்வியுடன் தம்பியை நோக்க, யாதவ்வோ சங்கடத்துடன் தலையை குனிந்தவன் குரல் மட்டும் ஒலித்தது.
“எனக்கு யாஷ்மிகாவை ரொம்ப பிடிக்கும் அண்ணா… இப்போ இல்ல ரொம்ப வருஷத்துக்கு முன்னாடி இருந்தே” என்றவனை புரியாமல் பார்த்தனர் ஆண்கள் இருவரும்.
யாதவ்வோ இருவரையும் நிமிர்ந்து பார்த்து, “யாஷ்மிகாவை முதல் முதலா ஒரு மலையில தான் பார்த்தேன்” என்று தன் கடந்த காலத்தை சொல்ல ஆரம்பித்தான்.
நீளமான அந்த நெடுஞ்சாலையில் மிதமான வேகத்தில் போய் கொண்டு இருந்தது ஒரு கார்.
அதில் பிரபல திரைப்பட பாடல் ரேடியோவில் மட்டும் பாடவில்லை. அந்த காரில் பயணம் செய்துக் கொண்டு இருந்த இருவரின் உதடுகளும் அசைந்து கொடுத்து கத்திக் கொண்டு இருந்தது அவர்களின் குரலும்.
பாடிக் கொண்டே பின் பக்கம் திரும்பி அங்கே இருந்த குளிர்பானத்தை எடுத்து குடித்தப்படி “என்ன மச்சி கிஃப்ட் எல்லாம் வாங்கி வச்சி இருக்க. எப்போவும் நம்ம வீட்டுக்கு போகும் போது இது போல கிஃப்ட் எல்லாம் வாங்க மாட்ட. இன்னிக்கு என்ன மச்சி ஸ்பெஷல், யாருக்கு கிஃப்ட்?” என்று கேட்ட யாதவ் அங்கே இருந்த குளிர்பானத்தை எடுத்து குடித்தான்.
காரை ஓட்டிக் கொண்டு இருந்த ராம் மெல்ல புன்னகை சிந்தி “ரொம்ப நாள் கழிச்சி ஸ்ரீ வந்து இருக்காடா. அதான் அவள் ரொம்ப நாளா வாங்கணும்னு ஆசைப்பட்ட ஒன்னு அவளுக்காக நான் வாங்கி இருக்கேன். கொஞ்சம் சர்ப்ரைஸா இருக்கட்டும்னு தான் கிஃப்ட் ராப் பண்ணேன்” என்று ராம் சொல்லிக் கொண்டு இருக்கும் போது யாதவ்க்கு புரையேறியது.
தன் தலையை தட்டிக் கொண்டே “டேய் யாரை சொல்ற. உன் ப்ரெண்ட் ஸ்ரீயா?” என்று அதிர்ச்சியுடன் கேட்டான்.
ராம் கவனமாக சாலையை பார்த்து வண்டியை ஓட்டிக் கொண்டே “ஆமாடா அவ தான்” என்று கூறினான்.
யாதவ் மீண்டும் சந்தேகத்துடன் “எப்போ பார்த்தாலும் ஒருத்தியை பத்தி என் கிட்ட புலம்பிட்டே இருப்பியே அந்த ஸ்ரீயா?” என்று மீண்டும் உறுதிப்படுத்திக் கொள்ள முயன்றான்.
அவனின் கேள்வியில் முகம் சுருங்கிய ராம் “ஆமாடா அவளே தான். ஏன் நீ இவ்வளவு சந்தேகமா கேட்கிற?” என்று அழுத்தமாக கேட்டான்.
அதை கேட்ட யாதவ் “அடிங்க கொக்கமக்கா, இதை ஏன்டா என் கிட்ட முன்னாடி சொல்லல. அப்படி சொல்லி இருந்தா நான் உன் கூடவே வந்து இருக்க மாட்டேன். சும்மாவே இரண்டு பேரும் போன் பேசும் போது சீன் போடுவீங்க. இப்போ ரொம்ப நாள் கழிச்சி வேற வந்து இருக்கா. நேர்ல வேற பார்க்க போறீங்க சொல்லவா வேணும். உங்க பாச மழை தொல்லை தாங்காதே. அவளை பார்க்க போறோம்னு சொல்லி இருந்தா நான் வந்தே இருக்க மாட்டேன் ராம்” என்று தலையை முன்பக்கமாக “அய்யோ அய்யோ” என்று இடித்துக் கொண்டான்.
யாதவ்வின் செயலை கண்ட ராம் சலிப்பாக “ஏய் யாதவ் உனக்கு ஏன்டா ஸ்ரீயை பத்தி பேசினாவே பிடிக்க மாட்டிக்கிது. ஒன் டைம் அவளை நேர்ல பார்த்து பேசுடா. அப்புறம் உனக்கே அவளை ரொம்ப பிடிக்கும்” என்று பேசியவனை நடுவில் நிறுத்தி தன் இருக்கரம் தலைக்கு மேல் உயர்த்தி கும்பிடு போட்டு,
“வேணாம்டா வேணாவே வேணாம். போதும் நீயும் அவளும் மட்டும் ப்ரெண்ட்ஸா இருக்கிறதே போதும். என் காதுல ரத்தம் வராத குறை தான்டா. நீ அவளை பத்தி பேசும் போதெல்லாம். ‘யாதவ் உனக்கு ஒன்னு தெரியுமா நம்ம ஸ்ரீனு’ ஆரம்பிச்சி சொல்ல தொடங்கினனு வை. பக்கத்துல இருக்கிற மனுஷன் உயிரோட இருக்கானா இல்லையானு கூட பார்க்காம நீ பாட்டுக்கு பேசிட்டே போவ” என்று வெகுவாக கடுப்பாகினான் யாதவ்.
நண்பனை முறைத்து பார்த்த ராம் “நீ எப்படி எனக்கு பெஸ்ட் ப்ரெண்டோ அது போல தான் ஸ்ரீயும். அவ என்னோட சைல்ட்ஹூட் ப்ரெண்ட். அவளே போட்டோ எடுக்கிறேன்னு சொல்லி ஊரு ஊரா சுத்திட்டு இப்போ தான் செஞ்சி மலைக்கு வந்து இருக்கா. அங்கே ஏதோ போட்டோ” என்று ஆரம்பித்தவனை மீண்டும் தடுத்தான் யாதவ்.
“செஞ்சிக்கா? டேய் நம்ம மதுரை போறோம்டா. செஞ்சி எங்கே இருக்கு மதுரை எங்கே இருக்கு” என்று அதிர்வுகளுடன் கேட்டான்.
ராம் பல்லை காட்டிக் கொண்டு “ஈஈஈ மச்சி போற வழி தானே. அப்படியே அவளை பார்த்துட்டு இந்த கிஃப்ட் மட்டும் கொடுத்துட்டு போயிடலாம்” என்றவனை பார்த்த யாதவ்விற்கு தன் நண்பனை அப்படியே அந்த ஸ்டீரிங் வீல்லில் பிடித்து இடிக்க வேண்டும் போல் தோன்றியது.
ஆனால் அதை பண்ண முடியாதே, காரை அவன் தானே ஓட்டிக் கொண்டு இருக்கிறான். அப்படி செய்தால் விபத்தாகி உயிருக்கு ஆபத்தாகி விடுமே என்று தன்னை தானே கட்டுப்படுத்திக் கொண்டு ராமை நோக்கி திரும்பி,
“ஏன் மச்சி செஞ்சி நம்ம போற வழியா?” என்று பல்லை கடித்துக் கொண்டு கேட்டான் யாதவ்.
ராமோ தன் முப்பது இரண்டு பல்லும் தெரியும் அளவுக்கு சிரித்தபடி வழிந்துக் கொண்டே, “விட்றா விட்றா இதெல்லாம் சகஜம். அதுமட்டுமா ரொம்ப நாள் கழிச்சி அவளை நேர்ல மீட் பண்ண போறேன்” என்று பேசிக் கொண்டு இருந்தவனின் கைப்பேசி சரியாக அந்நேரம் அதிர்வை கொடுத்தது.
அழைப்பது யாரென்று எடுத்து பார்த்தான். அதில் தெரிந்த நம்பரை கண்டதும், காரை ஓரமாக நிறுத்தி விட்டு அலைப்பேசியை எடுத்து காதில் வைத்தான்.
எதிர்முனையில் முக்கியமான அழைப்பாக இருந்து இருக்க வேண்டும் போல், பதற்றத்துடனே பேசிய நண்பனை யோசனையோடு பார்த்தான் யாதவ்.
பின் அழைப்பை வைத்ததும் கடுப்புடன் காரிலிருந்து இறங்கியவன் கதவை அடித்து சாற்றி விட்டு “ச்சை லீவ் தானே சொன்னாங்க. இப்போ என்ன இதுக்கு * அவசரமா வர சொல்றானுங்க” என்று ரோட்டில் இறங்கி கத்தியவனை குழப்பத்துடன் பார்த்த யாதவ்வும் காரிலிருந்து இறங்கி,
“என்ன ஆச்சு ராம்? எனி ப்ராப்ளம்?” என்று வினவினான்.
அவனுக்கு பதில் சொல்லாமல் அந்த நெடுஞ்சாலையில் அங்கும் இங்கும் குறுக்காக நடந்துக் கொண்டு இருந்தவன் எண்ணம் முழுவதும் ‘ஸ்ரீயை சர்ப்ரைஸா பார்த்து, நாளைக்கு வர போற அவளுடைய பர்த்டேக்கு, அவ ஆசைப்பட்ட கிஃப்ட் கொடுக்கணும்னு நினைச்சேன். ஆனா இப்படி எல்லாமே சொதப்புதே. என்ன செய்யலாம். அவளை பார்த்து பல வருஷம் ஆகுது. என்ன தான் தினமும் வீடியோ கால் பண்ணி பேசினாலும் நேர்ல பார்க்கிற மாதிரி வருமா? அதுவும் நாளைக்கு அவ பிறந்த நாள் வேற’ என்று வெகு தீவிர யோசனையில் இருந்தவனை காரிலிருந்து இறங்கி வந்த யாதவ் நண்பன் முன் நின்று என்னவென்று விசாரித்தான்.
யாதவ்வை தன் முன் முழுமையாக பார்த்தவன் கண்களுக்கு அச்சமயத்தில் யாதவ் ஒரு டெலிவரி பாயாக சிறிது சிறிதாக உருமாறிக் கொண்டு இருப்பதை கண்டு ராமின் கண்கள் மின்னியது.
தலையில் தொப்பி அணிந்து அழுக்கான டீசர்ட் மற்றும் லொடலொடவென்ற பேண்ட் தோளில் சுமைகள் நிறைந்த பெரிய பையும் மற்றும் கரத்தில் ராம் ஸ்ரீக்காக வாங்கின கிஃப்டும் வைத்துக் கொண்டு நின்று இருப்பது போல் கற்பனை செய்துக் கொண்டு இருந்தான் ராம்.
நண்பனின் உறைந்த நிலையை கண்ட யாதவ் “ஏதாவது பேய் அடிச்சி இருக்குமா!” என சற்று பதற்றத்துடன் ராமின் முதுகில் ஓங்கி ஒரு அறை விட்டான்.
சுளீரென்று வலியை உணர்ந்த ராம் தன் கரம் கொண்டு முதுகை வலியில் தேய்த்தவன் முகம் சுருங்கி போக “டேய் இப்போ எதுக்கு பேயை போல அடிச்ச?” என்று எரிச்சலுடன் கேட்டான்.
“பின்ன என்னடா நான் எவ்வளவு நேரமாக கூப்பிட்டுட்டு இருக்கேன். பதிலே சொல்லாம நீ பாட்டுக்கு பராக்கு பார்த்துட்டு நிக்கிற” என்றான் யாதவ்.
“பராக்கு பார்க்கிறேனா? அது சரி” என்று சொல்லியவன் மனதிலோ ‘டேய் ராமே நீ மட்டும் யாதவ்வை டெலிவரி பாய் போல் கற்பனை பண்ணது அவனுக்கு தெரிஞ்சிது. உன் முதுகு தோலை உரிச்சி உப்பை தடவி அதை நாய்க்கு போட்டாலும் போடுவான். சோ அவன் கிட்ட பணிந்து பேசுறது தான் நல்லது’ என்று தனக்கு தானே நினைத்துக் கொண்டு ஒரு முடிவு எடுத்தவன்,
மிகவும் பணிவுடன் தன் முப்பத்திரண்டு பல்லையும் மீண்டும் யாதவ்விடம் காட்டி “ஈஈஈஈஈ மச்சி” என்று அவன் நடிப்பை வெளிப்படுத்த இருந்த சமயம்,
யாதவ் முகம் அஷ்டகோணலாக மாறி “அய்ய ச்சீ நிறுத்து, உனக்கு இப்போ நான் என்ன பண்ணனும். அதை மட்டும் சொல்லு. இப்படி பல்லு டாக்டர் கிட்ட காட்டுற மாதிரி பல்லை பல்லை இளிச்சிட்டு நிக்காத” என்று நண்பனை கடுப்புடன் வாரினான்.
ராமோ இப்போது தனக்கு இவனை விட்டால் வேறு வழியே இல்லை என்ற நிலையில் ஒரு காதலியின் கரத்தை பிடிப்பது போல் யாதவ்வின் கரத்தை பிடித்து தன் உள்ளங்கையினுள் அழுத்தி பிடித்துக் கொண்டு தொண்டையை சரி செய்து “மச்சி நான் உன் ஆருயிர் ப்ரெண்ட் ராம் தானே” என்று பரிதாபமாக முகத்தை வைத்துக் கொண்டு கேட்டான்.
தன் கரத்தை பிடித்ததும் யாதவ் உஷாரானான். ‘இவன் கேட்கிற மாடுலேஷனே சரியில்லையே’ என்று யாதவ் ராமை சந்தேகமாக தன் ஒற்றை புருவத்தை தூக்கி “ஆமா அதுக்கு இப்போ என்ன?” என்றான்.
அதை கேட்ட ராம் கண்கள் மின்ன “அப்போ எனக்காக எது வேணாலும் செய்வியா மச்சி?” என்று கேட்டதும் தான் தாமதம், நண்பனின் கரத்திலிருந்து தன் கரத்தை வேகமாக உருவிய யாதவ்,
“நான் ஏன்டா செய்யணும். ப்ரெண்டுனா எல்லாத்தையும் செய்தே ஆகணுமா என்ன?” என்று கேட்டான்.
யாதவ் அவன் கரத்தை ராம் கரத்திலிருந்து உருவிய போது ராம் அவன் உயிர் காதலி தன் காதலனிடமிருந்து கரத்தை விலக்கியது போல் முகத்தில் பாவனைகளை கொண்டு வந்தான்.
