ஆரெழில் – 1
ஆதவன் தன் அக்னி கரங்களை சுருட்டிக்கொண்டு மேற்கு மலையில் பதுங்கிக் கொண்டிருந்த நேரம். பாதையில்லா கானகத்தின் நடுவே பாவை ஒருத்தி தன்னந்தனியே நடந்துக் கொண்டிருந்தாள். நிலவின் தயவால் நீண்டு கிடந்த நிழல்களும், எலும்பைத் தழுவும் குளிரும் கோதையவள் கால்களின் வேகத்தை கணிசமாக குறைத்து இருந்தது.
அடர்ந்து செழித்து வளர்ந்து கிடந்த புதர்களின் தயவால் கானகத்தின் மையத்தை அடைந்துவிட்டதை அறிந்தாள். அந்த இருளில் ஒரு உருவம் கையில் நெருப்பு பந்தத்தோடு அவளை நோக்கி நடந்து வருவது தெரிந்தது. பயத்தில் இதயம் போர் முரசடிக்க, பக்கத்தில் இருந்த மரத்தின் பின்னே மறைந்து நின்றாள். இனம் தெரியாத ஏதோ ஒன்று அவள் இடது காலில் ஊர்ந்து நகர்ந்தது. வாடைக்காற்று வனப்பைக் கூட்டி, வாசனையோடு விரவியது.
நெருப்பு பந்தத்தோடு அங்கே உலவிக் கொண்டிருந்த இளைஞன், “நீ இங்கதான் இருக்கேன்னு எனக்கு தெரியும்… ஒழுங்கா வெளிய வந்துடு, இல்ல. என்ன பண்ணுவேன்னு எனக்கே தெரியாது” காடே அதிரும்படி கர்ஜித்தான்.
தனிமையும் இருளும் தாரகையின் மனதில் இருந்த பயத்தை இரட்டிப்பாக்கிற்று. இருக்கின்ற இடத்திலேயே இன்னும் கொஞ்சம் ஒடுங்கி நின்றாள். நெருப்பில் அவன் கண்கள் மாணிக்க கற்கள் போல மின்னியது. மூச்சுவிடும் சத்தம் கூட கேட்காதபடி முடிந்த அளவுக்கு ஒளிந்துக் கொண்டாள்.
அவள் இருந்த இடத்திற்கு எதிர் திசையில் திடீரென்று, “அம்மா…” என்று பெண் அலறும் சத்தம் கேட்டது.
அடுத்த நொடி தன் மறைவிடத்தில் இருந்து வெளியே வந்தாள். அந்த குரல் இருக்கும் திசை நோக்கி அவள் பாதங்கள் ஓட்டமெடுத்தது. கல் தடுக்கி தரையில் பொத்! என் விழுந்தாள் ஹம்சினி.
அடுத்த நொடி, “ஆ…” பதறியபடி படுக்கையில் இருந்து எழுந்தாள் ஹம்சினி. அது அவளின் படுக்கையறை. சற்று முன் நடந்த எல்லாமே கனவு.
பக்கத்தில் இருந்த தண்ணீரை எடுத்து குடித்துவிட்டு பால்கனி பக்கம் வந்தாள். பனிக்காலம் துவங்கிவிட்டபடியால் தரையெல்லாம் தண்ணீர் தெளித்தது போல் இருந்தது நியூயார்க் நகரம். அடுத்த மாதம் தரையை கண்ணால் பார்ப்பதே கடினம். அவ்வளவு பனி நிறைந்திருக்கும். துரித கதியில் குளித்து தயாராகி அலுவலகத்திற்கு புறப்பட்டாள்.
ஹாலில் உட்கார்ந்து காய் நறுக்கிக் கொண்டிருந்த ஜெயவர்மன், “என்னம்மா, இன்னைக்கு சீக்கிரம் ரெடியாகி வந்துட்ட? அப்பா இப்பதான் குழம்பு வைக்க போறேன். வெயிட் பண்றியா?” என கேட்டு முடிக்கும் முன்பாக,
“இல்லப்பா இன்னிக்கு ஒரு முக்கியமான மீட்டிங் இருக்கு. ஈவினிங் வர லேட் ஆகும்னு நினைக்கிறேன். நீங்க சமைச்சு சாப்டுட்டு ரெஸ்ட் எடுங்க, நான் அப்பப்போ கால் பண்றேன்” கூறிவிட்டு, அவர் முகம் பார்க்காமல் ஓடிவிட நினைத்தாள்.
வழி மறித்து நின்ற ஜெயவர்மன், “மறுபடியும் அந்த கனவு வந்ததாடா?” என்றார் வாஞ்சையாய் கூந்தல் வருடி.
“ம்… பயப்படல, பழகிட்டேன்.”
“சைக்கியாட்ரிஸ்ட் கொடுத்த டேப்லட் எல்லாம் ரெகுலரா எடுத்துக்குறியா ஹம்சினி?”
“எனக்காக இல்லனாலும் உங்களுக்காக எடுக்குறேன்ப்பா. வொர்ரி பண்ணிக்காதீங்க” கார் சாவியோடு வாசலைக் கடந்துச் செல்லும் மகளை பார்த்து கண்ணீர் வழிந்தது ஜெயவர்மன் கண்களில்.
‘நாலு வருஷத்துக்கு முன்னால எப்படி இருந்த பொண்ணு? இன்னைக்கு இப்படி மருந்து மாத்திரைனு எல்லா சந்தோஷத்தையும் தொலைச்சுட்டு நிக்குதே. நான் கண்ண மூடுறதுக்குள்ள இவ வாழ்க்கைக்கு ஒரு விடிவு காலத்தை கொடு கடவுளே!’ வெளிச்சம் பரப்பும் ஆதவனை பார்த்து கும்பிட்டுவிட்டுப் போனார்.
ஹம்சினி அலுவலகத்திற்குள் நுழைந்ததும் அவள் மனமும் உடலும் தன்னிச்சையாய் செயல்பட, கனவைப் பற்றிய கவலைகளை தூக்கி எறிந்துவிட்டாள். அது ஒரு வீட்டு உபகரணங்கள் உருவாக்கும் நிறுவனம். உலகம் முழுவதும் கிளைகளை பரப்பி இருந்தாலும், முதன்மை அலுவலகம் நியூயார்க்கில் தான் இருக்கிறது.
ஹம்சினியும் அவளது அலுவலக தோழமைகளும் ஆவலோடு எதிர்பார்த்து இருந்த செய்தி அன்று மாலையில் வந்து சேர்ந்தது. பழைய மாடல்களில் இருந்து முற்றிலும் மாறுபட்டு, நவீன வசதிகளோடு கூடிய புத்தம்புது வீட்டு உபயோக பொருட்களை தயாரிக்க இருக்கிறார்கள். நெடுநாட்களாக சோதனையில் இருந்த உபகரணங்கள், இனி சந்தைக்கு வரப்போகின்றது.
எம்டி, “உங்க எல்லாரோட ஒத்துழைப்பும் இல்லாமல் இவ்வளவு பெரிய மைல் கல்லை நாம தொட்டு இருக்க முடியாது. உருவாக்கின பொருட்களை ஒவ்வொரு நாட்டுக்கும் இந்த மாச கடைசிக்குள்ள கொண்டு போய் சேர்த்துடுவோம். ட்ரைனிங் கொடுக்கிறதுக்கு உங்கள்ல சிலர் நேர்ல போக வேண்டி இருக்கும். அதுக்கான ஏற்பாடுகளை இப்பவே ஆரம்பிச்சிடுங்க” என்று கூற, ஒட்டுமொத்த கூட்டமும் உற்சாக மிகுதியில் ஹே என கத்தியது.
அடுத்த சில மணி நேரங்களில் பயணங்கள் தொடர்பான மெயில் வரத் துவங்கிவிட்டது. ஹம்சினியும் அவள் சீனியர் நாதனும் இந்தியாவிற்கு ட்ரைனிங் செல்ல உத்தரவு வந்திருந்தது. சொந்த நாட்டை பார்க்க போகும் சந்தோஷம் அத்தனை பேர் முகத்திலும் தாண்டவம் ஆட, ஹம்சினி மட்டும் கணினி திரையை வெறித்துப் பார்த்திருந்தாள்.
நாதன், “ஹம்சினி, என்னாச்சு?”
“என்னோட பேரை எதுக்காக ட்ரைனிங் லிஸ்ட்ல போட்டு இருக்காங்க? சீனியர் ஆபீஸர்ஸ் மட்டும் செய்யக்கூடிய வேலை இல்லையா இது?”
“இந்தியா அளவுல பெருசு. முக்கியமான மூணு பிரான்ச்க்கும் தனித்தனியா ட்ரைனிங் குடுத்தா பெட்டரா இருக்கும்னு எம்டி ஃபீல் பண்றாரு. எல்லாத்தையும் நான் ஒருத்தனே சமாளிக்க முடியாது இல்லையா? எனக்கு ஒரு அசிஸ்டன்ட் வேணும்னு கேட்டேன். உன்னை ஏற்பாடு பண்ணி இருக்காங்க. இதை நல்லபடியா முடிச்சா உனக்கு அடுத்த வருஷமே ப்ரோமோஷன் கூட கிடைக்கலாம்” என்று எடுத்துரைத்த பிறகும் அவள் புருவங்கள் இலகுவாகவில்லை.
“யோசிக்காத ஹம்சினி. மிஞ்சி போனா ரெண்டு வார வேலை. கம்பெனி செலவுல டூர் போக ஒரு சான்ஸ்னு நினைச்சுக்க. இல்ல முடியாதுனா இன்னைக்கே சொல்லிடு, வேற ஆள் பார்த்துக்குறேன்.”
இதற்காக தன் அப்பாவிடம் குறைந்தது ஒரு மாதத்திற்கு மல்லு கட்ட வேண்டும் என்று தெரிந்தாலும், சம்மதித்துவிட்டாள். அது ஏன் என்றுதான் அவளுக்கே விளங்கவில்லை. தன் வேலையை தலைமேல் சுமக்க சரியானதொரு பலியாடு கிடைத்த சந்தோஷத்தில், உற்சாகமாக வீட்டிற்கு கிளம்பினார் நாதன். நம்மவள் எப்படி எங்கேயும் முட்டிக் கொள்ளாமல் வீடு வந்து சேர்ந்தாள் என்பது கடவுளுக்கே வெளிச்சம்.
டைனிங் டேபிளில் இரவு நேர உணவையும், நெட்பிளிக்ஸ் நாடகங்களையும் ஒருசேர ரசித்துக் கொண்டிருந்தார் ஜெயவர்மன். சோர்ந்து வந்தவளின் முகத்தை பார்த்ததுமே, ‘மகள் சங்கடத்தில் தவிக்கிறாள்!’ என்பதை அறிந்துக் கொண்டது அவரின் அனுபவ அறிவு.
“என்னம்மா? ஆபீஸ்ல ஏதாவது பிரச்சனையா?”
“பிரச்சனைனு சொல்ல முடியாது. உங்களுக்கு பிடிக்காத வேலை, செஞ்சே ஆக வேண்டிய கட்டாயத்துல இருக்கேன் நான்.”
“அப்படி என்ன வேலை? எவனாவது கல்யாணம் பண்ணிக்கிறியானு கேட்டானா?”
“அப்பா…” குழந்தையாய் முகம் சுருக்கினாள்.
“ஹா… ஹா… சும்மாடா, என்னனு சொல்லு.”
“ட்ரெயினிங்க்காக இந்தியா போகணும். வேண்டாம்னு சொல்ல முடியல, ரெண்டு இல்ல மூணு வாரம் தங்க வேண்டியிருக்கும்.”
நொடி பொழுது கூட யோசிக்காமல், “என் ப்ரெண்டு போன மாசம் ஒரு ஜப்பான் கம்பெனியில ஜாயின் பண்ணி இருக்கான். நம்ம ஊர் பிராஞ்ச்ல உனக்கு ஏத்த வேலை ஒன்னு இருக்குதுனு சொன்னான். அவன் தான் இன்டர்வியூ பண்ணுவான்னு நினைக்கிறேன். ட்ரை பண்றியா?” என்று தன் விருப்பமின்மையை சொல்லாமல் சொல்லிவிட்டார்.
மூச்சை இழுத்து பிடித்துக் கொண்டு, “இல்லப்பா, நான் ஆபீஸ்ல ஓகே சொல்லிட்டேன். ஆறு மாசத்துல ப்ரோமோஷன் வந்திடும், மூணு வாரம்தானே? பார்த்துக்குவேன்” என்றாள் தயக்கத்தோடு.
“உன் இஷ்டம்…” கையிலிருந்த ஸ்பூனை டேபிளில் தூக்கி எறிந்துவிட்டு, சாப்பிடாமல் எழுந்து போனார் ஜெயவர்மன். அவளுக்கும் சாப்பாடு இறங்கவில்லை.
நாட்கள் விரைந்தோட அவள் இந்தியாவுக்கு போக வேண்டிய நாள் வந்தது. விருப்பம் இல்லை என்றாலும் மனது கேட்காமல் ஏர்போர்ட் வரை சென்று வழி அனுப்பி வைத்தார் அவள் தந்தை. நாதனும் ஹம்சினியும் முதல் ஒரு வாரத்தில் டெல்லி மற்றும் மும்பையில் ட்ரைனிங் வேலைகளை முடித்துவிட்டனர். மீதம் இருப்பது சென்னை மட்டும்தான்…
வெள்ளிக்கிழமை மாலையே மும்பையில் இருந்து சென்னைக்கு பிளைட் ஏறி விட்டார்கள். விமானம் பாதி தொலைவைக் கடப்பதற்குள், வானெங்கும் இருள் சூழ்ந்து விட்டது. விளக்குகளால் மினுமினுக்கும் சிங்காரச் சென்னையின் அழகை நாதன் ஆசையோடு வீடியோ எடுத்தார். அவர் அருகில் இருந்தவளோ ஒவ்வொரு நொடியையும் நரகமென நகர்த்திக் கொண்டிருந்தாள். விமானம் தரையிறங்கிய பிறகும் ஏதோ ஞாபகத்தில் இருந்தவளை, நாதனின் குரல் நினைவுக்கு கொண்டு வந்தது.
“ஹம்சினி, நான் ஹோட்டல்ல தங்கப் போறதில்ல. என்னோட சொந்த வீட்டுக்கு போறேன். மன்டே ட்ரைனிங் கொடுக்க வேண்டிய நேரத்துக்கு சரியா ஆபீஸ்க்கு வந்துடுவேன். உன்கிட்ட ஆபீஸ் அட்ரெஸ் இருக்குதா? இல்லனா…” என்று இழுக்க,
“இருக்கு, நான் பாத்துக்குறேன்…” என்றவள் டேக்ஸி பிடித்து முன்பதிவு செய்திருந்த பைவ் ஸ்டார் ஹோட்டலை சென்றடைந்தாள்.
சனி, ஞாயிறு என இரண்டு நாட்கள் கையிலிருந்த போதும் வெளியில் சுற்ற வேண்டும் எனும் ஆசையே வரவில்லை. சனிக்கிழமை மாலை பக்கத்தில் இருந்த பெருமாள் கோவிலுக்கு மட்டும் சென்றாள். ஐந்து வருடங்களுக்கு முன்னால் அவள் பார்த்து ரசித்த வீதிகள், அதற்குள்ளாக தன் பழமையை தொலைத்திருந்தது. அதைத்தான் அவள் மனமும் விரும்பியதோ? தரிசனம் முடிந்த கையோடு, அடை கோழியாய் அறைக்குள் அடைந்துவிட்டாள்.
சென்னையின் பிராஞ்ச் அலுவலகம் டெல்லி மும்பை கட்டிடங்களை விட பிரம்மாண்டமாக இருந்தது. இருபதுக்கும் அதிகமான தனியார் நிறுவனங்கள், இவர்களிடம் தான் வீட்டு உபகரணங்களை மொத்த விலையில் கொள்முதல் செய்கிறார்கள். அவர்களுக்கு முறையாய் பயிற்சி வழங்கினால் மட்டுமே, முழு தகவலும் பொதுமக்களின் செவிகளை சென்றடையும். சம்பந்தப்பட்ட தனியார் நிறுவனங்கள் அனைத்தும் தன் சார்பில் ஒரு பணியாளரை அனுப்பி இருந்தது.
ஜான் உயர மேடையில் ஏறி நின்ற ஹம்சினி பிராஞ்ச் மேனேஜர் குமாரிடம், “எல்லாரும் வந்தாச்சுல? பிரசன்டேஷனை ஆரம்பிக்கட்டுமா?” என்றாள்.
“கொஞ்சம் வெயிட் பண்ணுங்க மேம், இன்னும் ஒருத்தர் மட்டும் வரல.”
“பத்து மணிக்கு ட்ரைனிங்னு சொல்லியிருந்தீங்க தானே?”
“எஸ் மேம்… அவங்க பக்கத்துல வந்துட்டாங்க. இன்னும் ரெண்டு நிமிஷம் தான், வந்துடுவாங்க” என்றிட, நெற்றியை நீவினாள் அவள்.
குமார், “சாரி மேம், அவங்கதான் நம்ம சவுத் இந்தியால நிறைய ஷோ ரூம் ரன் பண்றாங்க. மத்தவங்கள விட அவங்களுக்கு நிறைய தெரிஞ்சு இருக்கணும். அதுக்காகத்தான், தப்பா எடுத்துக்காதீங்க…”
சிறு தலையசைப்போடு கணினியில் மூழ்கிப்போனாள். அமைதியாய் இருந்த அந்த அறை, திடீரென உருவாகிய அழுத்தமான காலடி சத்தத்தால் தடம் மாறியது. அனைத்து தலைகளும் பின்னால் திரும்ப, காலத்தால் அழியாத வசீகர நடையோடு வந்தான் அவன். உயரமான தோற்றமும், ஒடுங்கிய தாடியும், ஓசை எழுப்பும் பாதுகைகளுமே அவன் வலிமையை எதிரிகளுக்கு பறைசாற்றிற்று.
பெயரில்லா கலைஞன் செதுக்கி வடித்து உருவாக்கிய சிற்பம் போன்ற உடல். சிறு பிழையும் சொல்ல முடியாதபடி நேர்த்தியான உடை. இவை இல்லை என்றாலும், ஆளைத் துளைக்கும் காந்தப் பார்வை, அலையாய் பாயும் கேசமுமே அவனை ஆணழகனாய் எளிதில் பிறருக்கு பிரகடனப்படுத்திவிடும். நிரன் எனும் பெயருக்கு ஏற்ப முடிவின்றி நிலைத்திருக்கும் மன உறுதிக்கு சொந்தக்காரன். பணியாளர்களை எதிர்பார்த்திருந்த குமார் அவனே நேரடியாக வரவும், பதறியடித்து ஓடி வந்தான்.
“நிரன் சார், உங்களுக்கு முன் வரிசையில சீட் அலாட் பண்ணுறோம். ப்ளீஸ் அங்க வாங்க…”
“ஸ்டார்ட் பண்ணியாச்சா?” கேட்டுக் கொண்டே தனக்கான இருக்கையில் உட்கார்ந்தான். அவனோடு வந்தவர்களும் அடுத்தடுத்த இருக்கையை ஆக்கிரமித்தனர். அதுவரை அவனை வைத்த கண் வாங்காமல் வேடிக்கை பார்த்திருந்த கூட்டம் தத்தமது திசையில் பார்வையை திருப்பியது.
குமார், “உங்க டீம்க்காக வெயிட் பண்ணோம், இதோ இப்ப ஆரம்பிச்சிடலாம் சார். மேம் இவருதான் நிரன், ‘ஹோம்ஈசி எலெக்ட்ரானிக்ஸ்’ கம்பெனியோட ஓனர்…” என்றிட, அங்கே ஹம்சினியோ மெல்ல மயங்கிச் சரிந்தாள்.
