என் துணை – 3
சரியாக அதே நேரம் அங்கு வந்த சீனு, வந்த ஓசை இல்லாமல் அப்படியே பின்னால் போய்விட்டான். கோபத்தோடு கண்கள் சிவக்க அவளை முறைத்து பார்த்தான் ஆர்யன். அதில் சப்த நாடிகளும் அடங்க நடுங்கிவிட்டாள் திரவ்யா. அவள் மூச்சு விட சிரமப்படுவது கண்டு தன் கோபத்தை கட்டுக்குள் கொண்டு வந்தான்.
“நீ இப்போ ஒத்துக்கலனா, நான் சட்டப்படி போக வேண்டி இருக்கும். டிஎன்ஏ டெஸ்ட் மட்டுமில்ல, சீனு சொன்ன மாதிரி எனக்கும் பசங்களுக்கும் நிறைய விஷயம் ஒத்து போகுது அதையும் ஆதாரமா தருவேன். இதுக்கு மேலையும் இல்லன்னு நீ மறுத்து பேசுனா நான் பசங்கள வலுக்கட்டாயமா தூக்கிட்டு போற மாதிரி இருக்கும்” என்ற ஆர்யனை முறைத்தாள் திரவ்யா.
“என்னால என் பிள்ளைகளை விட்டுத்தர முடியாது! என்ன நினைச்சிட்டு இருக்கீங்க? நீங்க பேசுறதுக்கு எல்லாம் தலையாட்டிட்டு இருக்க நான் ஒன்னும் உங்க பழைய காதலி கிடையாது. என் பிள்ளைங்களை கூட்டிட்டு நான் நாளைக்கே லண்டன் போறேன். எங்களை அனுப்புறீங்களா? இல்ல போலீஸ் ஸ்டேஷனுக்கு போய் வாய்க்கு வந்தபடி கம்பளைண்ட் கொடுக்கட்டுமா?” என்று திமிராக கேட்டவளின் மேல் கோபம் தலைக்கேறியது ஆர்யனுக்கு.
சுவருக்கு பின்னால் இருந்த சீனு, பாதி புரிந்தும் புரியாமலும் இருவர் பேசுவதையும் ஒட்டுக் கேட்டுக் கொண்டிருந்தான்.
“நான் ஒன்னும் விளையாட்டுக்காக உங்கள இங்க இருக்க சொல்லல. இப்போதைக்கு நீயும் பசங்களும் என்னோட பாதுகாப்புல இருக்கிறது தான் நல்லது” என்று கூற அதை சிறிதும் பொருட்படுத்தாதவள்,
“போதும்! உங்க ட்ராமா எல்லாத்தையும் வேற யார் கிட்டையாவது போடுங்க. இதெல்லாம் ஏற்கனவே நிறைய தடவை பார்த்தாச்சு. இப்போ நாங்க போயே ஆகணும். எங்கள விடுங்க, எனக்கு இங்க இருக்கவே பிடிக்கல. கட்டாயப்படுத்துனா கத்தியால கைய கிழிச்சுப்பேன்” என்று புத்தி பிசகியது போல கத்தினாள்.
அவளிடம் உண்மையை புரிய வைக்க வழி தெரியாது நின்றவனுக்கு யோசனை ஒன்று தோன்றியது.
“சரி போ…”
“என்ன?”
“போடி…”
குழந்தைகளை கூட்டிக்கொண்டு சீனுவுடன் காரில் ஏறிவிட்டாள். வாகனம் புறப்பட்டதும், ஆர்யன் தனக்கருகே நின்று கொண்டிருந்த பாடிகார்ட்ஸிடம் கண் ஜாடை செய்தான். அவனின் ஜாடையை புரிந்து கொண்ட பாடிகார்ட்ஸ்ஸும் அவர்களின் காருக்கு பின்னால் யாருக்கும் சந்தேகம் வராதபடி ஃபாலோவ் செய்து கொண்டு கிளம்பினர்.
திரவ்யா சென்ற கார் போக்குவரத்து அதிகமில்லாத சாலையில் பயணித்து கொண்டிருந்தது. சரியாக அவ்வழியை கணித்திருந்தனர் ஆர்யனின் எதிரிகள். திடீரென நான்கு கார்கள் ஒன்றாய் சேர்ந்து இவள் காரை சுற்றி வளைத்து நின்றன.
காரில் இருந்து இறங்கிய முகமூடி நபர்கள் இவர்களை நோக்கி வர, டிரைவர் காரையும் காரிலிருந்தவர்களையும் அப்படியே விட்டு விட்டு இறங்கி ஓட்டம் பிடித்தான்.
“டிரைவர், யோவ்… எங்கயா ஓடுற? இப்படி நடு ரோட்டுல எங்கள விட்டுட்டு போயிட்டியேயா?!” என்று சீனு கத்தினான்.
“மன்னிச்சிருங்க சார், எனக்கு குடும்பம் குட்டி இருக்கு…” போற போக்கில் கத்தினான்.
“போச்சு, இன்னிக்கு நான் செத்தேன். பொழைக்க தெரிஞ்ச புண்ணியவான் ஓடிட்டான். இப்போ நாம தான் இவனுங்க கிட்ட மாட்டிகிட்டு நிக்கிறோம். நடுகாட்டுல துப்பாக்கி குண்டு பட்டு சாவணும்ன்னு எனக்கு விதி இருந்தா யாராலடா மாத்த முடியும்? ஐயோ இவனுங்க என் வீட்டுக்காவது தகவல் சொல்லுவானுங்களான்னு தெரியலயே…” என்று நினைத்த சீனு திரும்பி திரவ்யாவை பார்த்தான்.
அவளோ, கோழி தன் குஞ்சுகளை காக்கைக்கு பயந்து சிறகிற்கு கீழ் மறைப்பதை போன்று, தன் குழந்தைகள் இருவரையும் கட்டிக் கொண்டு பயத்தில் கண்களை மூடி அமர்ந்திருந்தாள்.
‘ச்ச! ஒரு பொண்ணையும் ரெண்டு குழந்தைகளையும் விட்டுட்டு ஓடுற அளவுக்கா உனக்கு மூளை கெட்டு போச்சு சீனு?’ என்று அவனின் மனசாட்சி கேள்வி எழுப்பியதும், “ஒரு பொண்ணே ரெண்டு குழந்தையும் வச்சிட்டு தனியா உக்காந்து இருக்கு. நமக்கென்ன வாழ்வோ சாவோ பாத்துருவோம். எது நடந்தாலும் இந்த கார்ல இருந்து இறங்க கூடாது. உயிரே போனாலும் இங்கயே போகட்டும்” என்ற எண்ணத்தோடு அங்கேயே இருந்துவிட்டான் சீனு.
குழந்தைகள் இருவரும் உண்ட மயக்கத்தில் நன்றாக உறங்கிக் விட்டிருந்தனர். இன்னும் சில வினாடிகளில், தங்கள் மூவரின் உயிர்களும் ஒரே நேரத்தில் வெளியேற போவதை கற்பனை செய்து, கண்கள் கலங்க அமர்ந்திருந்தாள் திரவ்யா.
‘பேசாம ஆர்யன் பேச்ச கேட்டு இந்தம்மா அங்கையே இருந்துருக்கலாம். இப்போ குழந்தைங்களுக்கும் எனக்கும் இவங்களால தான் இந்த நிலைமை’ என்று மனதிற்குள் உருவான எண்ண அலைகள், திரும்ப திரும்ப சீனுவின் முகத்தில் அறைந்தது. ஆனாலும் சொல்லிக் காட்டவில்லை அந்த உத்தமன்…
இதற்குள் எதிரிகள் இவர்களை நெருங்கி வந்துவிட்டனர். யாரும் எதிர்பாரா வண்ணம் சரியான சந்தர்ப்பத்தில் ஆர்யன் அனுப்பிய பாடிகார்ட்ஸ் அவர்களுக்கு எதிர் புறமிருந்து முதல் தாக்குதலை தொடங்கி இருந்தனர். முகமூடிக்காரர்கள் ஒருவர் பின் ஒருவராக தரையில் விழ, எஞ்சி இருந்தவர்கள் சுதாரிக்கும் முன்பே கூட்டம் சரி பாதி அளவாக குறைந்திருந்தது.
செவியை கிழிக்கும் ஓசையால் பதறி எழுந்தன குழந்தைகள். அவர்கள் சினிமாவில் பார்த்தது போல, காருக்கு வெளியே மனிதர்கள், அடிவாங்கி பல அடி தூரம் பறந்து போய் விழுந்து கொண்டிருந்தனர். பயத்தில் திரவ்யாவை கட்டிக் கொண்டு கதறி அழ தொடங்கினர் இருவரும். திரவ்யாவிற்குமே அழுகை கண்களை முட்டிக்கொண்டு வந்தது.
ஓட்டுநர் இருக்கையில் வந்து அமர்ந்த பாடிகார்ட் ஒருவர், “மேம் ஷால் வீ கோ டு த பேலஸ்?” என கேட்க சற்றும் யோசிக்காமல் “ஹான் ஓகே, ப்ளீஸ் கோ ஃபாஸ்ட்” என்றாள்.
இது போல் ஏதாவது அசம்பாவிதம் நடக்கும் என முன் கூட்டியே கணித்ததாலேயே போக விடாமல் தடுத்தான் அவன். காரணத்தை கூட கேட்காமல் பிடிவாதமாக வெளியேற, பின்னாகவே தன் பாடிகார்ட்சையும் அனுப்பி வைத்தான். தாக்குதல் பற்றிய தகவல் வர, கோபத்துடன் அரண்மனை வாசலிலேயே நின்றிருந்தான்.
தன் விலையுயர்ந்த கார், ஆங்காங்கே பொத்தல்களுடன் வாயிலில் நுழைவதை கண்டவன், எரிக்கும் விழிகளுடன் காரை நோக்கி சென்றான். காரில் இருந்து இறங்கிய திரவ்யாவை வெறித்தனமாக முறைத்துக் கொண்டிருந்தவனை குழந்தைகளின் அழுகுரல் நிதானத்திற்கு கொண்டு வந்தது.
தன் கோபத்தை கட்டுப்படுத்தியவன், குழந்தைகளை அள்ளி அணைத்தான். அவர்களை தோள்களில் தூக்கிக் கொண்டு, அரண்மனை தோட்டத்திற்கு சென்றான்.
“அம்மா… உள்ள வாங்கம்மா. பசங்க இப்போ வந்துருவாங்க” என திரவ்யாவை, அறைக்கு அழைத்து சென்றாள் பணிப்பெண். அறைக்குள் நுழைந்தவளுக்கு படபடப்பு குறைவதாய் இல்லை.
‘இவ்வளவு ஆபத்தான இடத்துல என் பசங்க இருக்கவே கூடாது. அவன் கிட்ட எப்படியாவது நம்ம லண்டன் போறத பத்தி பேசியே ஆகணும்” என நினைத்துக் கொண்டு அங்கிருந்த சோஃபாவில் சோர்வாக அமர்ந்தாள்.
தன் மகன்களை தோட்டத்திற்கு அழைத்து சென்ற ஆர்யன், குழந்தைகளுக்கு குதிரைகளை காண்பித்தான். அதை கண்டதுமே அழுகையை நிறுத்திவிட, குதிரையில் ஏற்றி விளையாட்டு காட்டி மகிழ்வித்தான்.
பழைய பிரச்சனையை மறந்துவிட்ட இருவரும், “இது உங்க குதிரையா?” என்றனர்.
“ம்…”
“வீட்ல இதெல்லாம் வளர்க்கலாமா?”
“ஸ்பெஷல் அப்ரூவல் வச்சிருக்கேன்.”
“அப்போ இது வைல்ட் அனிமல் இல்லையா?”
“நீ ஒழுங்கா ஸ்கூல்ல படிக்கலையா?”
“இது நம்மள கடிக்குமா?”
“அதுவும் குழந்தை போலத்தான். கடிக்காது, ஆனா பயப்படும்.”
“இத ஏன் இங்கேயே கட்டி வச்சிருக்கீங்க? இதோட வீடு எங்க இருக்கு?”
“இதுதான் அவன் வீடு…”
“இவங்க அம்மா இத தேடாதா?”
“குட்டியா இருக்கும்போது என்கிட்ட கொடுத்துட்டாங்க.”
“அச்சோ பாவம், இதுக்கு சாப்பாடு குடுத்தாச்சா?” என்று கேள்வி மேல் கேள்வி கேட்க, சலிக்காமல் பதில் சொன்னான்.
“உங்க ரெண்டு பேருக்கும் ஹார்ஸ்னா ரொம்ப பிடிக்குமா?”
“ரொம்ப ரொம்ப…”
“இன்னொரு தடவை ஏற ஆசையா இருக்கா?”
அடுத்த ஒரு மணி நேரமும் இருவரையும் குதிரையில் சவாரி செய்ய வைத்தான். முதலில் பயந்த குழந்தைகள் பின் பழகிக் கொண்டனர். விளையாடியதில் விரைவாகவே களைத்தும் விட்டிருந்தனர்.
“சரி, ரொம்ப லேட்டாகிடுச்சு. நாம போய் தூங்குவோம், ஹார்ஸூம் தூங்கி ரெஸ்ட் எடுக்கட்டும்” என்றவன் இருவரையும் தூக்கிச் சென்று திரவ்யாவின் அறை வாசலில் விட்டான். அவனுக்காகவே காத்திருந்தவள் பேச வாயெடுத்தாள்.
அதற்குள் ஆர்யனின் போன் அலறியது. அதை எடுத்து காதில் வைத்தவனின் முகம் மாறியது. அவன் கோபத்தை பார்த்து, உள்ளுக்குள் பயம் உருவாக கொஞ்சம் பின் வாங்கிவிட்டாள்.
‘இப்போ எதுவும் பேச வேண்டாம்! நாளைக்கு காலைல பேசிக்கலாம்’ என மனதிற்குள் நினைத்துக் கொண்டாள்.
அலைபேசியில் யாரையோ கடித்து குதறுவது போல பேசி விட்டு திரவ்யாவின் பக்கம் திரும்பினான்.
அவள் கண்களை பார்த்தவாறே, “நீ இப்போதைக்கு லண்டனுக்கு திரும்பி போக முடியாது. உனக்கும் குழந்தைகளுக்கும் அது சேஃப் இல்ல. பெட்டர் ஆப்ஷன் என்னன்னா நம்ம உடனே இங்க இருந்து கிளம்பி ஜெய்ப்பூர் போறது தான்” என்றதும்,
தனை மறந்து, “நோ வே…” என்றாள் அவள்.
“சரி, பசங்கள என்கிட்ட குடுத்துட்டு நீ லண்டன் போய்க்க…” என்றதும், விழிகள் இரண்டிலும் கண்ணீரோடு நின்றாள்.
“அவங்க ரெண்டு பேரும் எனக்கு அப்புறம் அரியாசனத்துக்கு வர உரிமை பட்டவங்க. கோர்ட்க்கு போனாலும் என் பக்கம் தான் கேஸ் ஜெயிக்கும்.”
ஏதோ தோன்றியவளாக வரவழைக்க பட்ட தைரியத்துடன், “உங்களோட அண்ணன் ரெண்டு பேர் இருந்தாங்களே. அவங்கள்ல ஒருத்தர் தான அரியாசனதுக்கு வரதா இருந்தாங்க. அப்படி பார்த்தா அவங்க பசங்கதான இப்ப அரியாசனத்துக்கு உரிமை பட்டவங்க. ஏன் இவங்கள கூப்பிடுறீங்க?” என்று தயங்கியவாறே திரவ்யா கேட்க,
அவளின் கேள்விகளுக்கு பதில் சொல்லாமல், “பசங்கள பத்திரமா பார்த்துக்கோ. குட் நைட்” என கூறிவிட்டு சென்றான். இவளோ குழப்பத்தில் நின்றாள்…
‘இனிமே என் நிழலை தாண்டி உன்னால எங்கேயும் போக முடியாது தியா…’ என்று நினைத்துக் கொண்டே விழிகளை மூடினான் ஆர்யன்.
மறுநாள் அதிகாலை திரவ்யா எழுந்திருக்கும் போதே, ஆர்யன் அந்த அரண்மனை பணியாட்களை பரபரப்பாக வேலை ஏவிக் கொண்டிருந்தான். ஜெய்ப்பூர் கிளம்புவதற்கான ஏற்பாடுகள் அவசர அவசரமாக செய்து முடிக்கப்பட்டிருந்தது. அதற்க்கென தனி ஜெட் ஒன்றையும் கொண்டு வந்திருந்தான்.
சீனு ஆர்யனிடம், “என்ன சார்? எங்க இவ்வளவு அவசரமா கிளம்புறீங்க?” என்று குழப்பமாக கேட்டான்.
“சேஃப்டிக்காக ஜெய்ப்பூர் போறதா இருக்கோம். நீ எங்க கூட அங்க வர்றியா? இல்ல உன் கம்பெனிக்கு போறியா?” என்று கேட்டதும், ஒரு நிமிடம் ஸ்தம்பித்து நின்றான் சீனு.
