சிறுவயது முதலே சந்திரனும் மதியழகியும் மகேந்திரனை தங்களுடன் விளையாட்டிற்கு கூட சேர்த்துக கொள்ள மாட்டார்கள். வீட்டில் உள்ளவர்கள் அவனை ஒதுக்கி வைப்பது போலவே அவர்கள் இருவரும் சேர்ந்து அவனை ஒதுக்கி வைத்தனர். தாத்தா மகேந்திரனின் அம்மா லட்சுமியின் மீது காட்டிய வெறுப்பு அத்தனையும், சிறு குழந்தைகளாக இருக்கும் பொழுதே தெரிந்தோ தெரியாமலோ அந்த குழந்தைகளிடத்திலும் பதிந்து விட்டது.
விரோதி போல வளர்ந்ததால் ஒவ்வொரு விஷயத்திலும் மகேந்திரனை கஷ்டப்படுத்தவே விரும்பினார்கள். பள்ளியில் முதலிடம் வந்த மகேந்திரனின் மேல் வன்மம் கொண்டு, அவன் தாய் லட்சுமி புகைப்படத்தின் மீது எச்சில் உமிழ்ந்து விட்டாள் மதியழகி. இறந்த தெய்வமான ஒருவர் மீது இதை செய்ததை, மகேந்திரனால் சற்றும் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. மிகுந்த கோபத்தோடு நேரடியாக சென்று தாத்தாவிடம் புகார் அளித்தான்.
“ஆமாடா! என் பேத்தி அப்படிதான் பண்ணுவா. உங்கம்மா ஓடிப்போய் கல்யாணம் செஞ்சப்ப ஊரே அவளை காரி துப்புச்சு. பெத்து வளர்த்த எனக்கு அப்போ எப்படி அவமானமா இருந்திருக்கும்?…” என்று மெத்தனமான ஒரு பதிலை சொல்லி விட்டு போனார்.
பாட்டி தங்கம்மாள் மட்டுமே அவர்கள் இருவரையும் இவ்வாறு செய்ததற்காக கடிந்து கொண்டார். பிறகு இந்த காரியத்திற்காக வருத்தப்பட்ட மகேந்திரனையும் சமாதானப்படுத்தி அந்த புகைப்படத்தையும் அவர்தான் சுத்தப்படுத்தி எடுத்து வைத்தார். பெற்ற மகள் வீட்டை விட்டு ஓடிப் போனதால் பாட்டிக்கு லட்சுமி மீது வருத்தம் இருந்தாலும், மகள் வழி பேரனான மகேந்திரன் மீது சற்று கரிசனமும் அன்பும் இருந்தது. அதனால் அந்த வீட்டிலேயே மகேந்திரன் மனதார பேசும் ஒரே ஆள் தங்கம்மாள் பாட்டிதான்.
அன்றிலிருந்து சந்திரன், மதியழகியை கண்டாலே மகேந்திரனுக்கு ஆகாது. அதே போல் அவர்கள் இருவருக்கும் மகேந்திரனை கண்டால் ஆகாது. இவ்வாறு சொந்த வீட்டுக்குள்ளேயே ஒரு விதமான குரோத உணர்வுடன் தான் அவன் வாழ்வு நீடித்தது. சிறு வயதில் அவ்வாறெல்லாம் அவமானப்படுத்தி விட்டு தற்பொழுது சில நாட்களாக அவள் வேறு மாதிரி நடக்கிறாள். அவள் மாற்றத்தை பார்த்து, புதிதாய் ஒரு நாடகத்தை அரங்கேற்றுகிறாள் என்று நினைத்தான் மகேந்திரன்.
அந்தப் புகைப்படத்திற்கு போடப்பட்டிருந்த மாலை, பூஜை பொருட்கள் என அனைத்தையும் ஆக்ரோஷமாக அகற்றிவிட்டு, புகைப்படத்தை மட்டும் எடுத்துக் கொண்டு அங்கிருந்து போய்விட்டான். மழை விழும் இரவில், மீண்டும் மரத்தடிக்கு சென்று உட்கார்ந்து கொண்டான். அவன் மீது விழுந்த மழைத்துளிகள், அவனது உள்ளத்து நெருப்பை அணைக்க முயன்று தோற்றுத் தரையை தழுவியது.
பொழுதும் விடிந்ததும் தன் அருகில் மதியழகி இல்லாததால் செண்பகம் மிகவும் துடித்து போய் விட்டார்.
“மதினி மதியழகிய பார்த்தீங்களா? தூங்கி எழுந்து பார்க்கிறேன் ஆளை காணல. ரூம் முழுக்க தேடி பாத்துட்டேன் எங்கேயும் இல்ல. அந்த பய மறுபடியும் எதாவது பண்ணி இருப்பானா? அய்யோ கடவுளே எனக்கு பயமா இருக்கு.”
“இங்கதான் எங்கேயாவது இருப்பா. ஏன் எல்லாத்துக்கும் தேவை இல்லாம பயப்படுற? அவன் ஏதாவது பண்ணியிருந்தான்னா இந்நேரம் இந்த இடத்தை விட்டு காலி பண்ணி இருப்பான். ஆனா அவன் வெளியே தான் குளிச்சிட்டு ஆபீஸ் போறதுக்கு கிளம்பிட்டு இருக்கான். புள்ள இங்கதான் எங்கேயாவது இருக்கும். நீ பயப்படாத” என்றாள் பூங்காவனம்.
“எதுக்கும் அவன் ரூம்ல தேடி பாத்திடுவோமா?”
“அவ எதுக்கு அங்க போகப்போறா? சரி, உன் திருப்திக்காக எதுக்கும் அங்க போய் ஒரு எட்டு பாத்துட்டு வந்துடுவோம்.”
அவர்கள் இருவரும் வந்து பார்க்கையில், மகேந்திரனின் அறையில் மதியழகி நன்றாக உறங்கிக் கொண்டு இருந்தாள்.
“நைட் ஃபுல்லா நம்ம பக்கத்துல தான் மதினி படுத்துட்டு இருந்தா. பாவிப்பய எந்த நேரத்துல வந்து கூட்டிட்டு போனான்னு தெரியல. நடுராத்திரியில வந்து மெரட்டி தான் இழுத்துட்டு போயிருப்பான்னு நினைக்கிறேன். கட்டையில போறவன் என் பிள்ளைய என்ன சொல்லி மிரட்டுறான்னு தெரியல” என்று வாய்க்கு வந்தபடி வசை பாடிக் கொண்டு இருந்தார் செண்பகம்.
நன்றாக அயர்ந்து உறங்கிக் கொண்டு இருந்த மதியழகி செண்பகத்தின் இந்த அதீத கூச்சலால் தூக்கம் கலைந்து எழுந்தாள்.
“என்னம்மா? என்னாச்சு?”
“எதுக்குடி இங்க வந்து படுத்திருக்க?”
“சொன்னா உனக்கு புரியாதும்மா” என்று கூறியபடி எழுந்தவள், ஜன்னல் வழியே மகேந்திரனை பார்த்தாள்.
அவன் அலுவலகத்திற்கு செல்வதற்காக கிளம்பி கொண்டு இப்பதை கவனித்தவள், உடனே வேக வேகமாக சமையல் அறைக்கு சென்றாள். அவனுக்காக காலை உணவை விரைவாக தயார் படுத்தி முடிக்கவும், மகேந்திரனும் தயாராகி வரவும் சரியாக இருந்தது. அன்றைய அலுவல் அட்டவணைகளை எல்லாம் தனது கணினியில் சேமித்து விட்டு, கணினியை மூடச் சென்ற தருணம் தட்டுடன் ஒரு கை அவன் முன்னே வந்து நின்றது. நிமிர்ந்து பார்த்தான், உணவை தட்டில் ஏந்தியபடி நின்று கொண்டு இருந்தாள் மதியழகி.
ஆத்திரம் மேலோங்க, தட்டை வேகமாக தட்டி விடலாம் என்று கோபமாக கை ஓங்கினான். ஒரு நிமிடம் அந்த தட்டை பார்த்தவன், அப்படியே அதிர்ச்சியில் உறைந்து போனான். ஏனென்றால் அவனுக்கு மிகவும் பிடித்தமான இடியாப்பம் அந்த தட்டில் இருந்தது. அவனுக்கு இடியாப்பம் பிடிக்கும் என்பது அவனைத் தவிர இந்த உலகத்தில் உள்ள வேறு எவருக்குமே தெரியாது. இன்று வரை யாரிடத்திலும் அதை அவன் பகிர்ந்து கொண்டதும் இல்லை.
அம்மாவிடம் சிறு வயதில் கேட்டால் செய்து தருவார்தான்! அதை அவர் கை வலிக்க செய்ய வேண்டுமே என்று நினைத்து, தன் தாயிடம் கூட தனக்கு இடியாப்பம் பிடிக்கும் என்பதை மறைத்து வைத்திருந்தான் மகேந்திரன். அதை இவள் எவ்வாறு சரியாக தெரிந்து கொண்டு வந்தாள் என்று விளங்கவே இல்லை.
“எதேச்சையாக ஏதாவது செய்து கொண்டு வந்திருப்பா!” என்று தனக்கு தானே நினைத்துக் கொண்டான்.
“என்ன அப்படி பாக்குற? உனக்கு இடியாப்பம்னா ரொம்ப பிடிக்கும் தான! அதனால தான் என் கையால நானே உனக்கு செஞ்சி எடுத்துட்டு வந்தேன். இந்தா சாப்பிட்டு கிளம்பு. வெறும் வயித்தோட போனா எந்த வேலையும் சரியா செய்ய முடியாது” என்று அவன் மீது மிகவும் அக்கறை இருப்பது போல பேசினாள் மதியழகி.
அதைக் கேட்டவனோ அதிர்ச்சியின் உச்சத்தில் இருந்தான்.
“இப்படி பார்த்துட்டே இருந்தா என்ன அர்த்தம்? சீக்கிரம் சாப்பிடு. சாப்பிட்டுட்டு எப்படி இருக்குன்னு சொல்லு!” என்று மீண்டும் மீண்டும் மதியழகி கொஞ்சுவது போல் பேசினாள்.
அடுத்த கணம் அந்த தட்டு பறந்து போய் சுவரில் முட்டிக்கொண்டது. இடியாப்பம், குழம்பு என அனைத்தும் சுவற்றில் பட்டு தெரித்து, தரையில் புதுக்கோலம் போட்டது. மதியழகி மிரண்டு விழித்தாள். அவளை கண்டிப்பது போல் தன் கண்களாலேயே ஒரு முறை முறைத்து விட்டு, அலுவலக கணினி பையை எடுத்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறினான் மகேந்திரன்.
அன்று அவனுக்கு முன்பே சந்திரனும் சுந்தரலிங்கமும் அலுவலகம் வந்து சேர்ந்திருந்தனர். அவர்கள் இருவருமே மகேந்திரனை எதிர்நோக்கி காத்துக் கொண்டு இருந்தனர். வந்தவன், இருவரையும் ஒரு பொருட்டாக கூட மதிக்கவில்லை. யாரோ தெரியாத ஒருவரை கடந்து செல்வது போல் உள்ளே சென்று கொண்டு இருந்தான்.
“பாத்தீங்களா தாத்தா! கம்பெனிக்கு முதலாளி, நீங்க இங்க நின்னுட்டு இருக்கீங்க. நம்மகிட்ட ஒரு வார்த்தை கூட பேசாம யாரோ மாதிரி கண்டுக்காம உள்ள போறான். அவன ஃபர்ஸ்ட் நீங்க ஆபீஸ்க்குள்ளவே விட்டு இருக்க கூடாது. எல்லா பொறுப்பையும் தூக்கி அவன்கிட்ட குடுத்தீங்க. இப்போ அதுக்கு தான் உங்களுக்கு நல்ல மரியாதை செஞ்சுட்டு போறான். இவன இப்படியே விட்டுட்டு இருந்தீங்கனா உங்களுக்கு இப்ப இருக்க மரியாதையும் இல்லாம போயிடும்” என்று தன் பங்கிற்கு எரிகிற தீயில் மேலும் எண்ணெய் ஊற்றிக் கொண்டு இருந்தான்.
ஏற்கனவே மகேந்திரனின் கோபத்தில் இருந்த சுந்தரலிங்கத்திற்கு இந்த வார்த்தைகள் மேலும் கோபத்தை தூண்டியது.
“நானும் பார்த்துட்டு தான்டா இருக்கேன். இன்னைக்கே இதுக்கு ஒரு முடிவு கட்டறேன். இல்லனா எல்லாம் நம்ம கைய மீறி போய்டும்!” என்று ஆக்ரோஷம் கலந்த கோபத்தோடு பதில் அளித்தார் சுந்தரலிங்கம்.
இவர்கள் எவ்வாறு அவனைப் பற்றி வெளியே நின்று பேசிக் கொண்டு இருந்த வேளையில் மகேந்திரன் உள்ளே மேனேஜரிடம் உரையாடிக் கொண்டு இருந்தான்.
“இன்னும் என்னென்ன ஒர்க்ஸ் எல்லாம் பெண்டிங்ல இருக்கு? கஸ்டமர்ஸ் நம்மகிட்ட கேள்வி கேக்குற மாதிரி வச்சுக்காதீங்க. இதெல்லாம் நேத்தே பேக் பண்ணியாச்சு. இன்னும் ஏன் அனுப்பாம இருக்கீங்க? இன்னைக்கே அனுப்புனா தான கஸ்டமர் கேட்ட நேரத்துக்கு அவங்களுக்கு டெலிவரி கிடைக்கும். அனுப்ப வேண்டிய திங்ஸ் எல்லாம் ஆன் டைம்க்கு கரெக்டா அனுப்பிடுங்க! இனிமே பிளாஸ்டிக் கவர்ஸ்ல ராப் பண்ணி அனுப்ப வேண்டாம் காட்டன் மட்டும் யூஸ் பண்ணுங்க!” என்று பரபரப்பாக அலுவல் சம்பந்தப்பட்ட கேள்விகளை எழுப்பி அதற்கான விடையையும் அவனை கூறிக் கொண்டு இருந்தான்.
“ஓகே சார் இன்னைக்குள்ள எல்லாத்தையும் கரெக்டா அனுப்பிடுறேன்! நேத்து பசங்க ஒரு நாலு பேர் லீவு சார். அதனால தான் கொஞ்சம் டிலே ஆயிடுச்சு” என்று சாக்கு போக்கு சொல்லிக் கொண்டு இருந்தார் மேனேஜர் ஜீவா.
“எப்பவுமே பண்ண தப்புக்கு ரீசன் சொல்றத ஃபர்ஸ்ட் ஸ்டாப் பண்ணுங்க. இனிமே பெண்டிங்ல இருக்க எல்லாத்தையும் நான் வரதுக்கு முன்னாடியே முடிக்க பாருங்க. என்கிட்ட இந்த ரீசன் சொல்ற வேலையெல்லாம் வேண்டாம். சொல்லாம கொள்ளாம லீவ் போட்டுட்டு அடுத்த நாள் வரவங்கள வேலைக்கு வச்சுக்காதீங்க. இதெல்லாம் என்கிட்ட கேக்கணும்னு அவசியமே இல்ல! உங்களுக்கு சரியா ஒபே பண்ணாம வேலைக்கு லீவ் போடறவங்கள வேலைய விட்டு உடனடியா ஸ்டாப் பண்ணிடுங்க. சீக்கிரம் பெண்டிங் ஐட்டம்ஸ் எல்லாம் மூவ் பண்ணுங்க. ஃபேக்டரில என்ன நடக்குதுன்னு நான் போய் ஒரு விசிட் அடிச்சிட்டு வந்துடறேன். டெய்லி ஒன்ஸ் விசிட் அடிச்சா தான் வேலை ஒழுங்கா போகுது” என்று சொல்லி விட்டு தொழிற்சாலை பகுதியை நோக்கி விரைந்தான் மகேந்திரன்.
அதை அறிந்த சந்திரன், “ஏதோ இந்த கம்பெனியே அவன் இல்லாம நடக்காதுங்கிற மாதிரி ஒவ்வொண்ணும் பண்ணிட்டு இருக்கான் தாத்தா. உள்ள வந்தா நம்மள கண்டுக்கறதில்ல! எங்க போறான்.. என்ன பண்றான் அப்படின்னு எதுவுமே நம்மகிட்ட ஷேர் பண்ணிக்கிறது கிடையாது. எங்கெங்க டீலிங் வச்சிருக்கான், எவ்வளவு பேமெண்ட்ஸ் வருதுன்னு எதுவுமே நம்மகிட்ட சொல்றது கிடையாது. நீங்களும் அவன நம்பி இவ்ளோ பெரிய பொறுப்ப ஒப்படைச்சிருக்க கூடாது! அவன் பாட்டுக்கு ஃபேக்டரிக்குள்ள புகுந்து எல்லாரையும் அதிகாரம் பண்ணிக்கிட்டு இருக்கான். இன்னைக்கு நீங்க அந்த மகேந்திரன் வந்ததும் நல்லா கேட்டு விடுங்க. அப்பதான் திருந்துவான்!”
“வரட்டும் வரட்டும்! இங்கதான வரணும். அவன் ஆணவத்த எல்லாம் இன்னைக்கே அடக்குறேன்.”
