ஆரெழில் – 2
நிரன் முகம் பார்த்த அடுத்த நொடியே அவளுள் பெரும் பிரளயம் தோன்றிவிட்டது. தட்டு தடுமாறியபடி கைக்கு கிடைத்த பொருட்களை பற்றி இருந்தவள், எந்த நொடியில் மயங்கி சரிந்தாள் என்றே அவளுக்கு தெரியவில்லை. தண்ணீர் தெளித்த பின்னாலும் விழி திறக்காமல் போக, அனைவரும் அதிர்ச்சியில் உறைந்து நின்றிருந்தனர். அவன் ஒருவனைத் தவிர…
சமயோஜிதமாய் செயல்பட்ட பிராஞ்ச் மேனேஜர் குமார், துரித கதியில் செயல்பட்டு அவளை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். கூடவே போகலாம் என்று நினைத்த நாதனை, தனியே ட்ரைனிங் தரச் சொல்லி செக் மேட் வைத்தனர் வந்திருந்தவர்கள். இந்தியா வந்த நாள் தொட்டு எந்த பொறுப்பையும் எடுக்காமல் விடுமுறையை கொண்டாடிக் கொண்டிருந்தவர், இன்று கைகளை பிசைந்துக் கொண்டு நின்றார்.
விருட்டென இருக்கையில் இருந்து எழுந்து நின்ற நிரன், பிறர் தன்னை வேடிக்கை பார்ப்பது பற்றிய எண்ணம் இல்லாமல் விறுவிறுவென நடந்தான். அவனைப் போலவே மற்றவர்களும் தத்தமது பொருட்களோடு புறப்பட தயாரானார்கள்.
நிரன் பின்னாலேயே ஓடிவந்த குமார், “சார்… சார்… மன்னிச்சுடுங்க சார்” என்று கெஞ்ச,
“இதுதான் நீங்க ட்ரைனிங் தர்ற லட்சணமா? இந்த ஒரு நாளுக்காக எங்க கம்பெனியில முக்கியமான பொசிஷன்ல இருக்கிற எல்லாரையும் வரவச்சேன். அந்த ஆள் பொறுப்பில்லாமல் எதுவும் தெரியாதுனு சொல்றாரு.”
“ஈவ்னிங்க்குள்ள நாங்க…”
“நான்சென்ஸ், நான் எங்க பேசணுமோ அங்க பேசிக்கிறேன்” என்றதும் குமாருக்கு சப்த நாடியும் அடங்கிப் போனது.
ஹெட் ஆஃபீஸில் இருந்து வந்தவர் எனும் காரணத்தால், குமார் வாய் வார்த்தையாக நாதனிடம் கோபத்தை வெளிப்படுத்தவில்லையே தவிர, முகச் சுழிப்பில் ஒவ்வொரு முறையும் வெளிப்படுத்தினான். வயிற்றில் நெருப்பைக் கட்டிக் கொண்டிருந்த நாதனுக்கோ, மொத்த கோபமும் ஹம்சினி பக்கம் திரும்பியது. இது எதுவும் தெரியாமல் இரண்டு மணி நேரத்திற்கு பிறகு கண்களை திறந்தாள் பாவை…
தெளிவின்றி தெரியும் அறையை தன் கோலிக் குண்டு கண்களால் சுழற்றிய படி, “நான் எங்க இருக்கேன்?” என்றாள்.
நாதனோ கடுங்கோபத்தோடு, “உனக்கென்னம்மா? இருக்க வேண்டிய இடத்துல பத்திரமா இருக்க” என்றார்.
படக்கென எழுந்து அமர்ந்தவள், “சாரி, திடீர்னு தலைசுத்திடுச்சு. ட்ரைனிங் என்ன ஆச்சு?” என்று கேட்டு முடிக்கும் முன்,
“நாசமா போச்சு… டிராவல் டிக்கெட் எடுத்து, ரூம் புக் பண்ணி எவ்வளோ செலவு செஞ்சிருக்கோம்னு ஒவ்வொருத்தனும் காதால கேட்க முடியாதபடி திட்டிட்டு போனான். எல்லாத்துக்கும் காரணம் நீ… அதனால இந்த பிரச்சனையை சரி பண்ண வேண்டியதும் நீதான்.”
“பண்ணிடலாம், இன்னொரு மீட்டிங் வைக்க ஏற்பாடு செய்ய சொல்லுங்க.”
“ஏம்மா அவங்க எல்லாரும் என் வீட்டு வேலைக்காரங்களா? வான்னு சொன்னா உடனே வர்றதுக்கும், போனு சொன்னா போறதுக்கும்.”
“அப்புறம்?” புரியாமல் விழித்தாள்.
“நாமதான் அவங்க இருக்கிற இடத்துக்கு போய் ட்ரெயினிங் கொடுக்கணும்.”
“ஒரு வாரத்துல நாலு ஸ்டேட்ஸ கவர் பண்ண முடியுமா? இதே வாரத்துல இன்னொரு நாள் ட்ரைனிங் பிக்ஸ் பண்ணுவோம். குமார்ட்ட நான் பேசுறேன்.”
“ஷ்… இங்க பாரு ஹம்சினி, விஷயம் நம்ம கை மீறி போய் ரொம்ப நேரம் ஆச்சு. ட்ரைனிங் கேன்சல் ஆன அடுத்த செகண்ட், ஹெட் ஆபிஸ்க்கு கம்ப்ளைன்ட் போயிடுச்சு. அடுத்த ஒரு மாசமும் நீ இங்க தங்கி, ஒவ்வொரு கம்பெனிக்கும் ப்ராப்பரா டிரெய்னிங் கொடுக்கணும்.”
“நானா? அப்போ நீங்க?”
“நான் இந்த வார கடைசியிலயே யூஎஸ்க்கு திரும்பி போறேன். உனக்கு வேற ஏதாவது தெரியணும்னா பிராஞ்ச் மேனேஜர் குமார்ட்ட பேசிக்க. குட் பை…” ஈவு இரக்கமின்றி எழுந்து போய்விட்டார்.
“ஒரு மாசமா?” விழி பிதுங்கிக் கிடந்தவளிடம், “மேம், மே ஐ கம் இன்?” என்றார் குமார்.
“எஸ், உள்ள வாங்க.”
“இப்போ ஹெல்த் ஓகேவா?”
“மச் பெட்டர்…”
“கெட் வெல் சூன்” என்றவன் அதுவரை தன் கையில் சுமந்திருந்த பொக்கேவை அவளிடம் நீட்டினான்.
“எதுக்குங்க இதெல்லாம்?”
“நான் நிரன் சார் சார்பா இதை கொண்டு வந்திருக்கேன்” என்றதும், அவள் இதயம் ஒரு நொடி வேலை நிறுத்தம் செய்தது.
அவள் நிலை புரியாத குமார், “அடுத்த ஒரு மாசமும் நீங்க தங்குறதுக்கு நம்ம ஆபீஸ் பக்கத்துல இருக்கிற சர்வீஸ் அபார்ட்மெண்டட் புக் பண்ணியிருக்கேன். எப்போ டிஸ்சார்ஜ் சொல்லியிருக்காங்க?” என்று பேசிக் கொண்டே போனார். சில வினாடிகளுக்கு பிறகு தான் அவள் பார்வை எங்கோ நிலை குத்தி நிற்பது புரிந்தது.
“மேம்…”
“ஹாங்?” தூக்கத்திலிருந்து விழித்தவள் போல முழித்தாள்.
“எப்போ டிஸ்சார்ஜ்னு கேட்டேன்.”
“அதிர்ச்சியால வந்த மயக்கம் தான். எப்ப வேணாலும் டிஸ்சார்ஜ் பண்ணிக்கலாம்.”
அவள் விழியோடு தன் பார்வையை ஊன்றி நிறுத்திய குமார், “அதிர்ச்சியா? சரியா சாப்பிடாததால வந்த பசி மயக்கம்னு நாதன் சார் சொன்னாரு. எதும் ப்ராப்ளமா மேம்?” என்றான் தயக்கத்தோடு.
“இல்ல, அதெல்லாம் இல்ல. நாம கிளம்பலாம்…” என்றவள், கையில் இருந்த பொக்கேவை குப்பை தொட்டியில் போட்டுவிட்டு புறப்பட்டாள்.
அவள் கோபத்தையும் அவன் செய்கையையும், கூட்டி கழித்து கணக்கு பார்த்ததில் குமாருக்கு தேவையான பதில் கிடைத்துவிட்டது. முன்பை விட அதிக அக்கறையோடு ஹம்சினியை சர்வீஸ் அபார்ட்மெண்டில் கொண்டு போய் சேர்த்தான். பக்கத்துக் கடையில் மதிய நேர சாப்பாட்டையும், கொஞ்சம் பழங்களையும் வாங்கித் தந்தான்.
“வீட்டு வேலைக்கு ஆள் சொல்லி இருக்கேன். காஞ்சனானு ஒரு அம்மா தினமும் காலையில ஆறு மணிக்கு வருவாங்க. அவங்க நம்பரை உங்களுக்கு வாட்ஸ் அப்ல அனுப்புறேன். வேற ஏதாவது தேவைனா எனக்கு ஒரு கால் மட்டும் பண்ணுங்க, இப்ப கிளம்புறேன்.”
ஆற்றோடு சிக்கிக்கொண்ட இலையாய் தன்னை இழுத்துச் செல்லும் விதியை நினைத்து மனம் நொந்தவள், விட்டத்தைப் பார்த்தபடி மல்லாந்து படுத்தாள். அவனை எப்படி சமாளிப்பது எனும் பயம் ஒரு புறம். அப்பாவிடம் என்ன சொல்வது எனும் கவலை இன்னொரு புறம். எப்படி உறங்கினாள் என்றே தெரியாமல், உண்ண மறந்து உறங்கிவிட்டிருந்தாள்.
அடுத்த நாளே அவள் ட்ரைனிங்கிற்கு தேவையான அத்தனை ஏற்பாடுகளையும் பட்டியல் போட்டு வைத்துவிட்டான் குமார். கூடுதல் உதவியாய், அலுவலகப் பணியிலிருந்து ஓய்வு பெற இருக்கும் கருணாகரனையும் அவளோடு இணைந்து வேலை செய்யச் சொன்னான். இயல்பிலேயே சாந்தமான முகம் கொண்ட கருணாகரன், ஹம்சினியை தன் மகள் போல பாவித்தார்.
மேம் எனும் வார்த்தைக்கு அதிகமாய் ஒரு வார்த்தை பேசாமல் பழகும் குமாரை, ஏனோ அவளுக்கு ரொம்பவும் பிடித்து போனது. வெற்றிகரமாக ஒரு வாரத்தில் கேரளா, கர்நாடகா இரண்டு மாநிலங்களிலும் ட்ரைனிங் கொடுத்து முடித்து விட்டாள். தெலுங்கானா ஆந்திரா இரண்டிற்கும் சேர்த்து ஹைதராபாத்தில் ஏற்பாடு செய்து தந்திருந்தான் குமார்.
“மூணு நாள் ட்ரைனிங் தந்துட்டு, புதன் ராத்திரி பத்து மணி ப்ளைட்ல சென்னைக்கு திரும்பி வந்துடலாம். இல்லனா வியாழன் மதியம் அடுத்த ப்ளைட். உங்களுக்கு எது ஓகேனு சொல்லுங்க மேம், இப்பவே ரிட்டன் பிளைட் புக் பண்றேன்.”
ஹம்சினி, “எதுவா இருந்தாலும் ஓகேங்க. எனக்கு இன்னொரு உதவி வேணும்.”
“சொல்லுங்க…”
“சென்னை ட்ரைனிங் மட்டும் நேரடியா கம்பெனிக்கு போகாம நம்ம ஆபீஸ்ல வச்சு முடிச்சுக்கலாமா?”
“அது… வந்து…”
“எனக்காக ஒரு தடவை கேட்டுப் பாருங்களேன்.”
“சரிங்க மேம், நானே நேர்ல போய் நிரன் சார்ட்ட பேசி பார்க்கிறேன்.”
“தேங்க்ஸ்ங்க…”
“பரவாயில்ல மேம்…”
அவனிடமிருந்து அடுத்த அழைப்பு திங்கள்கிழமை இரவில் வந்தது. அவள் எதிர்பார்ப்பை பொய்யாக்கும் வகையில், சாரி மேம் என்பதுடன் முடித்துக் கொண்டான் குமார். ஹம்சினிக்கோ இதயம் இரு மடங்கு வேகமாய் துடித்தது. அவளின் மன மாற்றத்தை ஒற்றைப் பார்வையில் புரிந்துக் கொண்டார் கருணாகரன்.
“என்னாச்சுமா?” ஒரு வார பழக்கத்தின் காரணமாய், இருவருக்குள்ளும் இனம் புரியாத பாச பிணைப்பு உருவாகி இருந்தது. ஆதலால் அங்கே மரியாதைக்கு இடமில்லாமல் போய்விட்டது…
“எனக்கு ஹோம்ஈசி எலெக்ட்ரானிக்ஸ் கம்பெனிக்கு போய் ட்ரைனிங் கொடுக்க பிடிக்கல அங்கிள்” சொல்லும் பொழுதே நெற்றி வியர்த்தது. அவள் பயத்தினை புரிந்துக் கொண்ட கருணாகரனால், பயத்திற்கான காரணத்தை புரிந்துக் கொள்ள முடியவில்லை.
“நிரனை எனக்கு ரொம்ப நாளா தெரியும், நல்ல டைப். ஒரு பிராஞ்ச் மட்டுமே இருந்த பிசினஸை, இன்னைக்கு இவ்வளவு உயரத்துக்கு கொண்டு வந்த புத்திசாலி. கோபத்தை தவிர, கெட்ட பழக்கம்னு ஒண்ணு கிடையாது. நீ பயப்படுற அளவுக்கு எதுவும் பண்ண மாட்டாரும்மா, தைரியமா இரு…” அவள் தோள்களை தட்டி தந்தார்.
அவள் மனம் சமாதானம் அடையாமல் போக, சடைவோடு படுக்கையில் விழுந்தாள். அவளுக்காக நேரமும் காலமும் காத்திருக்குமா? நிற்காமல் ஓடியது. புதன் இரவு சென்னை வந்ததும், கருணாகரன் தன் வீட்டிற்கு அழைத்து பார்த்தார். மறுத்துவிட்ட ஹம்சினி மன சோர்வோடு தன் சர்வீஸ் அபார்ட்மெண்டிற்கே சென்றுவிட்டாள். வெள்ளிக்கிழமை ஹோம்ஈசி எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனத்திற்கு டிரைனிங் செல்ல வேண்டும் என நேரம் குறித்து தந்திருந்தான் குமார்….
அவள் மேல் கொண்ட அக்கறையின் காரணமாக, “அம்மாடி, நானும் என் வீட்டுல இருந்து கிளம்பிட்டேன். ஒரு மணி நேரத்துல கம்பெனிக்கு வந்துடுவேன். நீ ட்ரைனிங் கொடுத்து முடிக்கிற வரை நானும் உன்னோடவே இருப்பேன். தைரியமா வா” என்று கூறியிருந்தார் கருணாகரன்.
தன்னைப் போல தத்தளிக்கும் ஜீவன் மேல், இறைவனுக்கு இன்னமும் கருணை இருப்பதை எண்ணி உச்சி குளிர்ந்து போனது அவளுக்கு. குளித்து முடித்துவிட்டு தயாராகியவள், பயண பாதையில் இருந்த ஒரு கோவிலுக்குச் சென்றாள்.
