என் துணை – 4
சீனு தன் கடந்த காலத்தை பற்றி யோசிக்க துவங்கினான். அவனது மனதிற்குள் பழைய சம்பவங்களின் நினைவலைகள் உலா வந்து போனது.
”பாஸ் இன்னிக்கு எனக்கு எதாச்சும் அசைண்மெண்ட் இருக்கா?” என அவனது மேல் அதிகாரியிடம் கேட்க,
”வேலையா? உனக்கா? இங்க சொல்ற வேலைய மட்டும் செய்! அன்ட் சீனு… அடுத்த வாரம் நடக்கப் போற உலகக்கோப்பை கிரிக்கெட்டுக்காக, இன்னிக்கு ஃபாரின்ல இருந்து நிறைய பெரிய செலிப்ரடீஸ் வராங்க. அவங்கள நம்ம கேஷவ் டீல் பண்றான். நீ தேவையில்லாத விஷயத்துக்கு அவனுக்கு கால் போட்டு, அவன் வேலைய டிஸ்டர்ப் பண்ணாத.”
“சார், ஏதாவது ரெண்டு செலிபிரிட்டிக்கு என்னை இன்சார்ஜ்ஜா போடலாம்ல?”
“நீ கை வச்சா எதுவுமே நல்லா நடக்காது. சொதப்பிருவ… சொதப்பல் சீனுனு தான் உன் நம்பரையே நாங்க எல்லாரும் சேவ் பண்ணி வச்சிருக்கோம்” என அவன் முதுகுக்கு பின்னால் இருந்து கேஷவ்வின் குரல் வர, உடனே பல குரல்களின் சிரிப்பொலியும் கேட்டது. இன்றும் பிறப்பால் ஏற்றத்தாழ்வு பார்க்கும் குணம் அவர்களுக்கு!
தகுதி இருந்தும், ”சீனு… தண்ணி கேன் கொண்டு வந்து போட சொல்லு. ரொம்ப தல வலிக்குது, ஒரு காஃபி எடுத்துட்டு வா” இப்படி பலர் அவனை வேலை வாங்கினர்.
அதிலும் அந்த கேஷவ், “டேய் சீனு, இன்னிக்கு பெரிய கிளைண்ட். நல்லா கவனிச்சதால பாஸ் எனக்கு கொடுத்த போனஸ்ல எல்லாருக்கும் டிரீட் வைக்குறேன். நீ வழக்கமா போற பார் பக்கம் வந்துராதடா. எங்களால நிம்மதியா என்ஜாய் கூட பண்ண முடியாது!” என்று ஒரு பார்ட்டிக்கு கூட சீனுவை அழைக்க மாட்டான்.
இப்படி ஒரு நாள் மட்டும் நடந்தால் பரவாயில்லை. ஒவ்வொரு நாளும் நடக்கும் போது இவனும் தான் என்ன செய்வான்?… பிழைப்பு நடத்த வேறு வழியில்லை என்று உள்ளுக்குள்ளே அழுது கொள்வான்.
அந்த கொடுமையான நினைவில் இருந்தவனை, “சீனு” என்று ஒரு குரல் அழைக்க, தன்னிலைக்கு வந்தான்.
“ஜெய்ப்பூருக்கு நீயும் எங்ககூட வர்றியா?” என்று ஆர்யன் கேட்பது சீனுவுக்கு கட்டளையிட்ட மாதிரியே தெரியவில்லை. ஒரு ராஜாவா இருந்தாலும் பாசத்துடன் அவனிடம் கேட்டது போலவே தோன்றியது.
“சரிங்க சார், நானும் உங்க கூட வந்துடறேன்” என்றவனையும் சுமந்து கொண்டு ஜெயிப்பூரில் சென்று இறங்கியது அந்த ப்ரைவேட் ஜெட்.
முதன் முறையாக ஒரு பிரம்மாண்டமான அரண்மனையைக் கண்ட சீனு அப்படியே உறைந்து நின்றான். மும்பையில் அவன் பார்த்த அரண்மனை வெறும் கெஸ்ட் ஹவுஸாம். அதைவிட பத்து மடங்கு பெரிதாக இருந்தது இது…
‘எவ்வளவு பெரிய அதிசயம் இது?’ என்று அவன் விழிகள் இரண்டும் வியப்பில் விரிந்தது. வாய்பிளந்து பார்த்துக் கொண்டிருந்த சீனுவைப் பார்த்து குழந்தைகள் இருவரும் கிச்சு கிச்சு மூட்டி சிரித்தனர்.
”என்ன அங்கிள்? இப்புடி வாய பிளந்து பார்க்குறீங்க?”
”இப்படி பட்ட அரண்மனையெல்லாம் நான் தியேட்டர்ல பார்த்தது. இப்போதான் நேர்ல பார்க்குறேன். அதான் சொல்ல வார்த்தையே இல்லாம திக்கு முக்காடி இருக்கேன்.“
”அங்கிள், இப்படி வாசலையே பார்த்துட்டு இருந்தா எப்போ உள்ள போறது? வாங்க உள்ள போலாம்!” என்று குழந்தைகள் அவனை ஆளுக்கு ஒரு புறமாக பிடித்து இழுத்துக் கொண்டு சென்றனர். அவனும் புன்னகையோடு, அரண்மனையின் அழகையும் எழிலையும் ரசித்தவாரே உள் நுழைந்தான்.
கதிரவனின் ஒளிக்கீற்று கண்களைக் கூச செய்வது போல அமைந்திருந்தது அவ்வரண்மனையின் வாயிற்கதவு. அதை கதவு என்று கூறுவது கூட தவறு. கோட்டையின் மதில் சுவர் உயரத்திற்கு, பிரம்மாண்டமாக அமைக்கப் பெற்றிருந்தது. தங்கத்தில் ஆனது போல தகதகவென மினுமினுத்தது. அதில் நுணுக்கமாக பல வரலாற்றுச் சின்னங்கள் செதுக்கப் பட்டிருந்தன.
குடும்ப பெருமையை பேசிடும் படி, நடு நாயகமாய் கதிரவனின் அடையாளமும் பொறிக்கப்பட்டிருந்தது. தாமரை மலரின் மேலே கதிரவன் அமைந்திருக்க, இரு வேழங்கள் அரசரை வரவேற்கும் நோக்கில் கதவில் கீழ் பகுதில் மாலையோடு தனது தும்பிக்கையினை மேல் நோக்கி காத்திருந்தது. கதவில் முன் பகுதியில் இதற்கு முன் ஆட்சி செய்த மூதாதையர் பெயர்கள் பொறிக்கப் பட்டிருந்தன.
விரலால் ஆசையோடு தொட்டு தடவிய சீனு, “தங்கம் போல ஜொலிக்குது” என்றான்.
பின்னோடு வந்த திரவ்யா, “தங்கமேதான்” என்று கூறிவிட்டு தன் முகத்தில் எந்த உணர்ச்சியையும் காட்டாமல் நடந்து சென்றாள்.
அதுவரை அதை வெண்கலம் என்று நினைத்திருந்தவன், உடனே பயந்து கையை எடுத்து விட்டான். வாயிற் கதவினை கடந்ததும், வலது பக்கம் மிகப் பெரிய தோட்டம் இருந்தது. சுவற்றிலிருந்த துளைகளின் வழியே, அந்த பூந்தோட்டத்தின் எழிலைக் கண்டு வியந்தான். அந்தப் பூந்தோட்டத்தின் நடுவே மிகப் பெரிய ஊஞ்சலும், அதனைக் கடந்தால் செயற்கையாக அமைக்கப்பட்ட அருவியும் இருந்தது. தூரத்தே இருந்தாலும் அந்த அருவியில் சல சலவென ஓடிய நீரோசை காதினை வருடி சென்றது.
அரண்மனையின் உள் வாயிலை அடைந்ததும் அங்கு அரசனை வரவேற்க சில ஆட்களும், பாதுகாப்பிற்கென பல ஆட்களும் நின்றனர். அந்த ராணுவத்தைக் கண்ட சீனுவுக்கு, ஒரு நொடி இருதயம் இருப்பிடத்தை விட்டு வெளியில் வந்து மீண்டும் அதனுடைய இடத்தில் பொருந்தியது போல இருந்தது.
‘என்னதான் பணம் படைத்த ஆளாக இருப்பினும், பாதுகாவலுக்கு ஒன்றிரண்டு பேரை வைத்திருப்பார்கள். இங்கு இத்தனை பேர் துப்பாக்கியுடன் காவல் நிற்கிறார்கள் எனில் இவன் எவ்வளவு பெரிய ஆள்?’ என அந்த நொடி உணர்ந்தான் சீனு.
ஆர்யன் அவனின் தோளைத் தட்டி, “அப்புறம், நம்ம அரண்மனை எப்புடி இருக்கு சீனு?” என்று கேட்டான்.
”ராஜா சார், நான் இன்னும் உங்க அரண்மனைக்கு உள்ளேயே போகல. இங்க இருக்குறத பார்த்தே எனக்கு தலை சுத்துது. உள்ள போய் பார்த்த அப்புறம் என் சோலி முடிஞ்சிடும் போல!” என்றான்.
அதைக் கேட்டு அவன் உட்பட குழந்தைகளும் சிரித்தனர். திரவ்யா மட்டும் வேறொரு சிந்தனையில் ஆழ்ந்திருந்தாள்.
அதைக் கவனித்த ஆர்யன், “வலது கால் வச்சு உள்ள வா” என்றான். மாட்டேன் என்று சொல்லும் முன்பாக, பிள்ளைகள் இருவரும் அவளுடைய கரம் கோர்த்து அவளை அழைத்துச் சென்றனர்.
“மை சேம்ப்ஸ், இனி இதுதான் உங்க வீடு. இனி நம்ம ஒண்ணா இங்க தான் இருக்க போறோம்” என்றான்.
ராம் யோசனையோடு, “ஏன்?” என்றிட, “எனிமி அட்டாக்ல இருந்து தப்பிக்கணும்ல?” என்றான். அதை கேட்ட குழந்தைகளும் உடனே சம்மதித்து விட்டு, அரண்மனையினுள் ஓடியாட போனார்கள்.
திரவ்யாவோ கண்டிப்புடன், “கிட்ஸ், அமைதியா இருங்க. அங்கையும் எங்கேயும் ஓடி எதையாச்சும் உடச்சிறாதிங்க. இது நம்ம வீடு இல்ல” என்றாள் அழுத்தமான குரலில்.
இதை அவள் கூறும் போது ஆர்யனின் விழிகளைப் பார்த்துக் கொண்டே கூறி இருந்தாள்.
ஆர்யனின் இந்திர தனுசு புருவங்கள் இரண்டும், ‘என்ன சொல்ற?’ என்று கேட்பது போல, மேலெம்பி நின்றது.
அதனை அறிந்தவளாய் பதிலேதும் கூறாமல் தனது கவனத்தை அரண்மனையின் மேல் திருப்பினாள். அகன்று நீண்டிருந்த அந்த வரவேற்பறை முழுவதும் அலங்கார பொருட்கள் அடுக்கி வைக்கப் பட்டிருந்தது.
அவற்றை எல்லாம் ஒற்றை பார்வையில் கடந்த திரவ்யா, அடுத்த அறையில் இருந்த பொருட்களை கண்டதும் ஒரு நொடி திகைத்தாள். அவளைச் சுற்றிலும் பல்வகையான அழகு வண்ண ஓவியங்கள் தொங்கவிடப்பட்டிருந்தன. அதனை நோக்கி நடந்தவள் அந்த ஓவியங்களைத் தனது மெல்லிய விரல்களால் வருடினாள். பல வருடங்களுக்கு பிறகு அவள் மனது மீண்டும் அவனின் மாய கட்டுக்குள் சிக்கிக் கொண்ட உணர்வு.
ஒவ்வொரு ஓவியங்களுக்குக் கீழேயும் ஆர்யனின் பெயர் எழுதப்பட்டிருந்தது. அதை திரவ்யாவும் கவனிக்கத் தவறவில்லை. அதை அவளுடைய இதழ்கள் உச்சரிக்கவும் தவறவில்லை. என்னவன்! என தனது மனதுக்குள்ளே கூறிக் கொண்டவள், ஒரு குறுநகையும் பூத்தாள். இவையெல்லாம் அவனே தன் விரலால் வரைந்த ஓவியம் என்று பிறர் சொல்லி அவளுக்கு தெரிய வேண்டியதில்லை.
குழந்தைகளும், ”வாவ், இந்த பெயிண்டிங்ஸ்லாம் சூப்பரா இருக்குல மம்மி. இப்பவே இத ஃபோட்டோ எடுத்து போஸ்ட் போட போறேன். ஃபோன் கொடுங்க” என்றவாறு அவளுடைய கைப்பேசியை பெற்றுக் கொண்டு சென்றனர்.
”கிட்ஸ், இருங்க. நான் உங்களுக்கு ஹெல்ப் பன்றேன்” என்று கூறிக் கொண்டு அவர்கள் பின்னே ஓடினான் சீனு. மூவரும் ஃபோட்டோ எடுத்தபடியே அடுத்து இருந்த இன்னொரு அறைக்குள் நுழைந்துவிட்டனர்.
திரவ்யா இன்னும் இங்கேயே மனம் மயங்கிய நிலையில் நிற்க, இந்த தனிமையைப் பயன்படுத்த எண்ணிய ஆர்யன் உடனே அவளின் அருகே நெருங்கினான். அவன் எடுத்து வைத்த அடிகளால் தன் இருதயம் பட படவென வேகமாக துடிக்கத் தொடங்கியதை உணர்ந்தாள். அவனிடம் பேசுவதை எவ்வாறு தவிர்க்கலாம் என்று யோசித்துக் கொண்டு இருந்தாள். ஏனோ அங்கு, குண்டூசி விழுந்தாலும் கேட்கும் படியான அமைதியே நிலவியது.
விரல் தூரிகையால், வேல் விழியாளின் கன்னம் வருடினான். அந்த தீண்டல் அவளுள் ஆயிரம் ஆயிரம் மாற்றங்களை உண்டு பண்ணியது. மகுடிக்கு மயங்கிடும் பாம்பு போல, அவன் விரும்பும் விதத்தில் அவள் வளைந்தாள். இன்னொரு கையால் இடையினை வளைத்தவன், அவள் எதிர்பாரா தருணம் தனில் இதழோடு இதழ் பொருத்திவிட்டான்.
உலகம் மறந்து நின்றிருந்தவளோ ஒத்துழைத்துவிட, “ராஜா… சாப்பாடு ரெடி” எனும் குரல், அந்த அறைக்கு வெளியே இருந்து கேட்டது.
அந்த நொடியில் சட்டென்று சுதாரித்துக் கொண்டவள், வெடுக்கென அவனைப் பிடித்து தள்ளினாள். அதை எதிர்பார்த்தது போல ஆர்யன் தன் கால்களை தரையில் ஊன்றி நிலையாய் நின்றான். குழந்தைகளை மறந்து அவன் குடும்பம் தனக்கு இழைத்த தீமையை மறந்து, அவன் தொட்டதற்கே உருகிய உடலை நினைத்து வெட்கமாய் இருந்தது திரவ்யாவுக்கு.
“உரிமைப் பட்டதைத்தான் தொட்டேன்” அவள் மனதை அறிந்தது போல் பேசினான் அவன்.
இதற்குள் குழந்தைகள் அங்கிருந்தபடியே, “மம்மி…” என்றழைக்க, அந்த வாய்ப்பினைப் பயன்படுத்திக் கொள்ள எண்ணிய திரவ்யா உடனே பிள்ளைகளை நோக்கி நடந்தாள்.
“இங்க பாருங்களேன், இந்த ஆர்ட்ல இருக்கிற பொண்ணோட முகம் உங்கள மாதிரியே இருக்கு. ஆனா கூட இருக்குறது யாரு?” என்று ஆச்சரியத்தோடு வினவினர். ஆர்யனும் ஆர்வத்தோடு அவளைத் திரும்பி பார்த்தான்.
அவள் பிள்ளைகளிடம், “இட்ஸ் ஜஸ்ட் ஆர்ட், வேறெதும் இல்ல” என்று கூறிவிட்டு தனியே சென்றுவிட்டாள்.
உணவு மேசையில் பல்வகையாக உணவுகள் அடுக்கப் பட்டிருந்தன.
”மம்மி, இட்ஸ் யுர் ஃபேவரைட் டிஷ்” என ராம் கூற, திரவ்யா பதிலேதும் கூறாமல் வெறுமனே புன்னகைத்துவிட்டு உணவு உண்ணத் தொடங்கினாள்.
இப்போதும் அவள் இதழை ரசித்துக் கொண்டிருந்தான் ஆர்யன். அவன் பார்வையின் வீச்சு தாங்காமல் பாதியிலேயே எழுந்துவிட்டாள். பிள்ளைகள் சாப்பிட்டு முடிக்க நெடு நேரமாகியது. இல்லை இவளுக்குத்தான் அப்படி தோன்றியதோ? தெரியவில்லை…
அவர்கள் உணவு உண்ட பிறகு, “அவங்க இன்னைக்கு என் கூட தூங்கட்டும்” என்றான்.
அவள் மறுத்து கூறிடும் முன்பே இரண்டு வாண்டுகளும் ஹே… என்று கத்தி விட்டனர்.
பெருமூச்சு விட்டபடி, “சரி, ஒரு நாள்தான். எனக்கு உங்கள விட்டு ரொம்ப தூரத்துல வேறொரு ரூம் அரேஞ்ச் பண்ணிடுங்க. ரெஸ்ட் எடுக்கனும். ம்ம்ம்ம்… அப்புறம் குழந்தைங்களுக்கு கதை சொன்னாதான் தூக்கம் வரும். நல்ல கதையா சொல்லி தூங்க வைங்க, உண்மை சம்பவத்தை எல்லாம் சொல்லாதீங்க” என்று அவனை முறைத்தபடி கூறிவிட்டு நடந்த திரவ்யாவை இமை மூடாது பார்த்தான் ஆர்யன்.
