என் துணை – 5

முதன் முதலில் அவளை பார்க்கும் பொழுது இப்படித்தான் அவனோடு நேருக்கு நேர் நின்று சண்டை போட்டாள். அந்த பழைய ஞாபகங்கள் அவன் விழிகளை சூழ, அவள் சென்ற வழித்தடத்தை பார்த்துக்கொண்டே நின்றான் இவன். 

“நாங்க வந்துட்டோம்” எனக் கூறியபடி குழந்தைகள் ஓடி வர, அவர்களை வாரி அணைத்துக் கொண்டு தனது அறைக்குச் சென்றான். 

தனக்கு ஒதுக்கப்பட்ட அறைக்குச் சென்ற திரவ்யா இன்று நடந்தவை அனைத்தையும் நினைவு கூர்ந்தவாறே பெருமூச்சிவிட்டு படுக்கையில் அமர்ந்தாள். கட்டிலின் மேற்பகுதி சுவரில் ஒரு மிகப் பெரிய ஓவியம் வரையப்பட்டிருப்பது தெரிந்தது.

நேராக வந்து பார்த்தாள்… அவளும் அவனும் பிள்ளைகளோடு இருக்கும் ஒரு யானையின் ஓவியம்தான் அது. அந்த ஓவியத்தைக் கண்டதும் ஒரு இனம்புரியாத மகிழ்ச்சியும் கவலையும் ஒரு சேர அவளுக்குத் தோன்றின. அந்த ஓவியத்தை வெறித்தபடியே இரவைக் கழித்தாள்.

குழந்தைகளோடு தன்னறைக்கு சென்ற ஆர்யனிடம், குழந்தைகள் ஓவியம் வரைவது பற்றி அளவளாவிக் கொண்டே உறங்கியிருந்தனர். ஆர்யனுக்கு அன்றைய இரவு உறக்கம் வரவில்லை‌. இரு குழந்தைகளின் முகத்தை பார்த்துக் கொண்டே அவர்களோடு படுத்திருந்தான். அவர்களுக்கும் அவனை ரொம்பவே பிடித்திருக்க, அணைத்தபடியே உறங்கியிருந்தனர்.

‘இத்தனை வருஷம் என்னோட இரவுகள் எல்லாமே வெறும் கானல் நீரா போச்சு. உங்க ரெண்டு பேரோட வருகையால, இன்னிக்கு தான் என் வாழ்க்கை முழுமை அடைஞ்சிருக்கு’ என மனதிற்குள் நினைத்துக் கொண்டே உறக்கமின்றி அவனது கடந்த கால நினைவுகளில் உழன்று கொண்டிருந்தான்.

ஆர்யன் வாழ்வில் நிகழ்ந்த நிகழ்வுகள் அவளால் புரிந்து கொள்ள முடியாத அளவுக்கு மர்மமாக இருந்தன. அதைச் சொல்லி அவள் மனதை நோகடிக்க அவனுக்கு விருப்பமில்லை. இந்த இரண்டு நாட்களில் குழந்தைகள் அவனோடு நன்றாக ஒட்டிக் கொண்டார்கள். இப்போதைக்கு இந்த நொடியை அனுபவிப்பதே சிறந்தது என்று முடிவெடுத்தபடி உறங்கி இருந்தான்.

அவளுக்கும் அங்கே ஒத்த பொட்டு உறக்கம் இல்லை. நெடு நேரம் உருண்டு கொண்டே இருந்தவள், ஒரு கட்டத்தில் தன்னை மறந்து உறங்கிப் போனாள். காலை வேளையில் தன் அறைக்குள் நுழைந்த வெளிச்சத்தை பார்த்த பிறகே விழிகளைத் திறந்தாள். அரைகுறை உறக்கத்தில் இருந்தவள், வீட்டு நியாபகத்தில் குழந்தைகளை தேடி தன் கைகளை நீட்ட, பிள்ளைகள் அங்கே இல்லை.  

பதறி எழுந்தவள், பின் நினைவு வந்தவளாய் அமைதியாகி விட்டாள். நேரம் இப்போதே ஏழை தாண்டி இருங்க, அந்த அறை முழுவதும் சுற்றி பார்த்துவிட்டு, அறையின் பால்கனி புறம் சென்றாள். அங்கிருந்து வேடிக்கை பார்த்தவள் கண்களில், நேர் எதிரே ஒரு ரோஜா தோட்டமும் அதன் நடுவில் சிறிய தாஜ்மஹால் போன்ற ஒரு கட்டிடமும் தென்பட்டது. அதைப் பார்த்து வியந்தவளுக்கு அதன் அருகில் சென்று பார்க்க வேண்டும் எனும் ஆவல் எழுந்தது.

அவள் அங்கு சென்ற போது பணியாட்கள் யாருமே இல்லை. ரோஜாக்களை ரசித்துக் கொண்டு நின்றவள் அந்த தாஜ்மஹால் அருகில் செல்ல, அதை கவனித்த பணியாள் ஒருவன் பதறியபடி ஓடி வந்தான்.

“மேடம்… மேடம்… நில்லுங்க. நீங்க இங்கெல்லாம் வரக் கூடாது. ராஜாவுக்கு தெரிஞ்சா பெரிய பிரச்சனை ஆகிரும்” என்ற படி அவளுக்கு வழியை விடாது மறித்து நின்றான்.

“இல்ல, அங்க என்ன இருக்கு? ஒருதடவை பார்த்துட்டு வந்துடுறேன்.”

“இல்லீங்க, யாருக்கும் அங்க போக அனுமதி கிடையாது. எனக்குமே…”

“ஏன்? அங்க அப்படி என்ன இருக்கு?” என்று திரவ்யா ஆர்வமாய் கேட்க,

“தெரியாது மேடம், ராஜா தினம் அங்க போவாரு. அவரோட நம்பிக்கைக்குரிய சர்வென்ட் மட்டும்தான் அந்த இடத்தை கிளீன் பண்ணுவாங்க. வேற ஆளுங்க யாருக்கும் உள்ள போகுறதுக்கு அனுமதி கிடையாது. புரிஞ்சிக்கோங்க மேடம், வாங்க இந்த பக்கம். நீங்க சுத்தி பார்க்க நிறைய இடம் இருக்கு. அதைப் போய் பாருங்க” என்றவன் அவளின் கையை பிடித்து இழுத்துக் கொண்டு வந்தான்.

இவளும் பேசாமல் திரும்பி வர, திடீரென்று அவர்கள் முன் வந்து நின்றான் ஆர்யன். உடனே பணிவாக ஒதுங்கி நின்று வணக்கம் சொன்னான் பணியாள். ஆர்யன் நகராது, அவன் திரவ்யாவின் கையை பற்றி இருப்பதையே உறுத்து விழித்தான். நொடியில் புரிந்து கொண்ட பணியாள், சட்டென திரவ்யாவின் கையை விடுவித்து இரண்டடி தள்ளி நின்றான்.

“என்னாச்சு? என்ன பிரச்சினை?”

“மன்னிச்சிருங்க ராஜா, இவங்க அந்த தாஜ்மஹால் பக்கம் போனாங்க. அதான் இங்கெல்லாம் வர கூடாதுன்னு சொல்லி வெளியே அழைச்சிட்டு போறேன்” என்று பவ்யமாக கூறினார்.

“அந்த இடமே இவங்களுக்காக உருவாக்கப்பட்டது தான். அவங்க தாராளமா உள்ள போகலாம்” என்று பணியாளிடம்‌ கூறுவது போல திரவ்யாவை பார்த்துக் கொண்டே கூறி இருந்தான்.

ஒரே நேரத்தில் அவனின் வார்த்தைகளை கேட்டு அதிர்ந்தனர் திரவ்யாவும் பணியாளும். பணியாளனுக்கு திரவ்யா யார் எனும் உண்மை புரிந்து விட, சட்டென அவள் காலில் விழுந்துவிட்டான்.

“மன்னிச்சிருங்க மேடம்…”

பதறிக்கொண்டு பின்னால் விலகியவள், “பரவாயில்ல, நீங்க போங்க” என்றிட, உடனே அவ்விடத்தை விட்டு சிட்டாய் பறந்து விட்டான்.

ஆர்யனும் அங்கிருந்து சென்றுவிட, அவள் பார்வை அந்த தாஜ்மஹாலில் நிலைத்தது.

‘எனக்காக உருக்கவாக்குன இடமா? அப்படி என்ன இருக்கும் உள்ள?’ என யோசித்தவள் ஆர்வமாக அங்கே சென்று பார்த்தாள்.

திரவ்யா அதனுள்ளே காலடி எடுத்து வைத்ததும் அதிர்ச்சியில் உறைந்து நின்றாள். வெளித்தோற்றம் மட்டுமே தாஜ்மஹாலை போல் இருக்கும் என நினைத்தவளுக்கு உள்ளுக்குள்ளும் அது ஆர்யனின் காதலை தாங்கி நின்ற சிறிய தாஜ்மஹாலாக தான் இருந்தது.

ஒவ்வொரு சுவரிலும் அவர்கள் இருவரின் காதலை நியாபக படுத்தும் விதமாக ஓவியமும், அவர்களின் பிரிவினால் ஆர்யனின் நெஞ்சில் ஏற்பட்டிருந்த தாக்கத்தை விளக்கும் ஓவியமும் இருந்தது. ஆர்யனால் கூட இவ்வளவு தெளிவாக தன் காதல் வலியை கூறியிருக்க முடியாது. அதைப் பார்த்து விட்டு கண்களில் நீர் சொட்ட வெளியேறினாள் திரவ்யா.

இவை அனைத்தையும், ஆரம்பம் முதலே தூரத்தில் நின்று கவனித்துக் கொண்டிருந்த சீனு, “மேடம், நான் ஒன்னு கேட்டா நீங்க எதுவும் தப்பா எடுத்துக்க மாட்டீங்களே?” என கேட்க,

“என்ன விஷயம் சீனு?” என்றாள் முகத்தை துடைத்துக் கொண்டு.

“நான் கெஸ் பண்ண வரைக்கும் ராஜா தான் உங்களோட கணவரா இருக்கணும். சரி தானா மேடம்?”

“இல்ல, அவர் எனக்கு கணவர் ஆகல! அதுக்குள்ள சூழ்நிலை என்னை அவர்ட்ட இருந்து பிரிச்சிடுச்சு” என்றவள் அவமானமாய் தலை குனிந்தாள்.

திருமணம் செய்யாமல் பிள்ளை பெற்றவளை இந்த சமுதாயம் எப்படி பார்க்கும் என்று அவளுக்கு தெரியாதா?

ஆனால் சீனு அப்படி பார்க்கவில்லை… அவள் ராஜாவின் காதலியாக இல்லாவிடினும் அவன் அப்படி பார்த்திருக்க மாட்டான்.

“நீங்க தப்பா எடுத்துக்கலைன்னா நான் ஒண்ணு கேட்கட்டுமா?”

“கேளுங்க…”

“ராஜா சார் உங்க மேலையும் குழந்தைங்க மேலையும் ரொம்ப அக்கறையா தான் இருக்காரு. நீங்க தான் அவர விட்டு விலகி போகணும்ன்னு நினைக்கிறீங்க. அது ஏன்?”

“வெளியில இருந்து பாக்குற எல்லாருக்கும் அவங்களோட ஒரு பக்கம் தான் புரியும். ஆனா இந்த அரண்மனையில வாழுறவங்களுக்கு இன்னொரு பக்கம் இருக்கு” என கூறி கண்கலங்கி நின்றாள்.

“ராஜாவ மீறி உங்கள யார் என்ன சொல்லிட முடியும்?” என்று கேட்டதற்கு அவளிடம் பதில் இல்லை.

“நான் வேலைக்காரன், எங்கிட்ட சொல்லணுமானு நினைக்கிறீங்களா?”

அவளோ விரக்திப் புன்னகையோடு, “நீங்க இவ்ளோ மதிக்கிற ராஜாவுக்கே நான் சொல்லல சீனு” என்றாள்.

“ஏன் எல்லாத்தையும் உங்க மனசுக்குள்ளயே வச்சி கஷ்ட படுறீங்க? அட்லீஸ்ட் உங்க மனசுல உள்ள பாரம் கொஞ்சம் குறையிற அளவுக்காவது சொல்லுங்க…” என்று கூற அதுவே அவளுக்கு மிகப் பெரிய ஆறுதலாய் தோன்றியது.

அவ்வளவு தூரம் தனிமையில் வெந்து நொந்திருந்தாள். உதடுகள் துடிக்க, மெதுவாய் நடுங்கினாள். சீனு அவளை கை பிடித்து கூட்டிச் சென்று ஒரு இருக்கையில் அமர வைத்தான். விழிகள் இரண்டிலும் கண்ணீர் வடிய, தன் கடந்த காலத்தை கூற ஆரம்பித்தாள் திரவ்யா.

இயற்கையின் எழில் மட்டுமே கொஞ்சும் சிறிய கிராமத்தில் பிறந்தவள் தான் திரவ்யா. அவளது தந்தை ஆறுமுகம் சிறிய துணிக்கடை வைத்து நடத்துகிறார். அவர் மனைவி சாந்தி இல்லத்தரசி!

திரவ்யா சிறு வயதிலிருந்தே புகைப்படம் எடுப்பதில் ஆர்வம் கொண்டிருந்தாள். நிறைய புகைப்படங்களை எடுத்து பத்திரப் படுத்தி வைத்திருப்பாள். செய்தித் தாள்கள் வார இதழ்களில் நடக்கும் போட்டிகளுக்கு தான் எடுத்த புகைப்படங்களையும் அனுப்பி நிறைய பரிசுகளும் பெற்றிருக்கிறாள். அதிலிருந்து அவளுக்கு கேமராவே வாழ்க்கையானது.

‘தான் ஒரு புகைப்பட கலைஞராக மட்டுமே ஆக வேண்டும்!’ எனும் லட்சியத்தோடு வாழ்ந்து கொண்டிருந்தாள். அவ்வாறு நகர்ந்து கொண்டிருந்தவளின் வாழ்வில், அவள் அக்கா மாலதியால் திடீரென்று இடி போல் பிரச்சனைகள் இறங்க ஆரம்பித்தன.

மாலதி ஒழுங்காக படித்துக் கொண்டிருந்தவரை அந்த குடும்பம், எவ்வித குழப்பமுமின்றி நன்றாக தான் சென்று கொண்டிருந்தது. ஒரு நாள் கல்லூரிக்கு சென்றவள், தன்னோடு படித்த சக மாணவனையே திருமணம் செய்து கொண்டு வீட்டு வாசலில் வந்து நின்றாள். அவளை அந்நிலையில் கண்ட தந்தை உயிரைத் தொலைத்த சிற்பம் போல் நின்றனர். ஊராரின் பேச்சுக்கு பயந்த சாந்தி, மகள் செய்த தவறை நினைத்து ஆதங்கத்தில் கத்தினார்.

“இப்படியா உன்ன வளர்த்தோம்? நீ நிறைய படிச்சா, உனக்கு ஒரு நல்ல வாழ்க்கை அமையும்னுதானே இத்தனை கஷ்டத்துலயும் காலேஜ் அனுப்பினோம். சண்டாளி, எங்க நினைப்புல மண்ணள்ளி போட்டுட்டியே‌. நீ விளங்குவியா? நீ எங்க பிள்ளையே இல்ல! எக்கேடும் கெட்டு போ, ஆனா இனிமே இந்த வீட்டுக்கு வந்துறாத” எனக் கூறி மாலதியை வீட்டை விட்டு துரத்தினார்.

மாலதி அதே ஊரில் சிறிய குடிசை வீட்டிற்கு குடியேறினாள். இருவரும் படிப்பை முடிக்காததால், அவளை கை பிடித்தவன் சீக்கிரத்திலேயே குடிகாரனாகிவிட்டான். இவள் பத்து பாத்திரம் கழுவி பிழைப்பு நடத்த ஆரம்பித்தாள். இதற்கிடையே வயிற்றில் ஒரு குழந்தை வேறு…

ஆனாலும் திரவ்யாவின் வீட்டில் மாலதியின் பேச்சை யாரும் பேசுவதேயில்லை. திரவ்யா பனிரெண்டாம் வகுப்பு படிக்கும் வரை அமைதியாக இருந்த சாந்தி, அவள் பனிரெண்டாம் வகுப்பை முடித்ததும் கல்யாண பேச்சை எடுக்க ஆரம்பித்தார்.

“இப்போ எனக்கு கல்யாணம் பண்ண என்ன அவசரம். நான் படிச்சு பெரிய போட்டோகிராஃபர் ஆகணும்” என்று அடம் பிடித்தவளை மண்டையிலேயே கொட்டினார் சாந்தி.

“ஏற்கனவே ஒருத்தி படிக்கிறேன் படிக்கிறேன்னு ஊர்க்காரங்க முன்னாடி எங்க மானத்த வாங்கிட்டு போய்ட்டா. நீயும் அப்படி போக மாட்டேன்னு என்ன நிச்சயம்? ஒரு தடவ நாங்க ஏமாந்ததே போதும். ஒழுங்கா நான் சொல்றவன கல்யாணம் பண்ணிட்டு பொறுப்பா குடும்பம் நடத்துற வழியப் பாரு” என கூறி விட்டு சென்றார்.

அடிப்படை ஆசை நீராசையாக, கண்களை கரித்துக் கொண்டு வந்தது. வெளியே வர துடிக்கும் கண்ணீரை துடைத்துக் கொண்டே தேம்பி நின்றாள் இரட்டை ஜடை சிறுமியான திரவ்யா…

 

❤️ Loading reactions...
முந்தைய பதிவு அடுத்த பதிவு
இந்த எழுத்தாளரின் மற்ற கதைகள்
🌙 நிலவின் கனவு! ✨​
246 40 0
இராவணின் வீணையவள்
45 0 0
ஆரெழில் தூரிகை
309 15 1
வேண்டினேன் நானுன்னை
540 6 0
நீ எந்தன் நிஜமா?
378 8 1
என்துணை நீயல்லவா?
462 12 0
கற்றது காதல்
216 1 0
நிழலென தொடர்கிறேன்
210 2 0
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page