என் துணை – 7

“அம்மா… அப்படி எல்லாம் எதுவும் இல்லம்மா! நான் எங்கமா போக போறேன். அங்க காலேஜ்லையே தங்கி படிக்கிற வசதியும் இருக்கும்மா. நான் ஹாஸ்டல்ல இருந்து காலேஜ்க்கு போக போறேன். காலேஜ் முடிச்சிட்டு ஹாஸ்டல்க்கு வர போறேன். நீங்க நினைக்கிற மாதிரி வெளில எங்கையும் போக மாட்டேன்மா.” 

 

“என்னமா சொல்ற நீ? இங்க பக்கத்துல டவுன்ல படிப்பன்னு தான் நான் நீ படிக்கிறதுக்கே சம்மதிச்சேன். இப்போ வெளியூர்க்கு போகணும்ன்னு சொல்ற. நம்ம ஊர்ல இருந்து எந்த பிள்ளையாவது வெளி ஊர்ல போய் தங்கி படிச்சிருக்கா?”

 

“அப்பா அவங்கல்லாம் எதையாவது படிக்கணும்ன்னு நினைச்சி படிக்கிறாங்கப்பா. ஆனா நான் சின்ன வயசுல இருந்தே இத தான் படிக்கணும்ன்னு ஆசைப்பட்டு படிக்க போறேன்ப்பா. ப்ளீஸ்ப்பா ப்ளீஸ்ப்பா. நான் போய் படிக்கிறேன்ப்பா! வேண்டாம்ன்னு மட்டும் சொல்லாதீங்கப்பா” என அவள் இடைவிடாமல் கெஞ்ச, அவரும் ஒரு கட்டத்தில் மனமிறங்கினார்.

 

“சரி, உன் விருப்பம்மா. ஆனா எங்க நம்பிக்கையை நீ காப்பாத்தணும், அவ்வளவு தான்” என கூறினார் ஆறுமுகம்.

 

கண்கள் இரண்டிலும் கனவுகள் மின்ன சந்தோஷமாய் சிரித்தாள் அவள். 

 

ஒருவழியாக தந்தையின் ஒப்புதலை பெற்றுவிட்ட மகிழ்ச்சியில் திரவ்யா இருந்தாள்.

 

“ரொம்ப ஆடாதடி, எனக்கென்னவோ உன்ன அவ்ளோ தூரம் அனுப்பி படிக்க வைக்க மனசே இல்ல. ஏதோ, அந்த மனுஷன் முடிவெடுத்துட்டாறேன்னு தான் அமைதியா இருக்கேன். நீ மட்டும் ஏதாவது ஏடா கூடமா பண்ண, அப்புறம் என்னையும் அப்பாவையும் உயிரோடவே பாக்க முடியாது” என்றார் சாந்தி.

 

“அம்மா உங்களுக்கு எத்தன தடவை சொல்றது? நான் அக்கா மாதிரி எந்த தப்பும் பண்ண மாட்டேன், என்னை நம்புங்கம்மா. அப்பாவை எனக்கு எவ்வளவு பிடிக்கும்னு உங்களுக்கே தெரியும்ல? அவர் மேல சத்தியம் பண்ணிட்டு அதை மீறுவேனா?” என கூறியவள் தன் அன்னையையும் சமாதானம் செய்து சம்மதம் பெற்றாள்.

 

திரவ்யா எதிர்பார்த்த கல்லூரியில் சீட் கிடைத்துவிட்டது. சென்னை செல்வது உறுதியானதும், மேல் படிப்பு படிக்க போவதை நினைத்து மகிழ்ச்சியில் திளைத்திருந்தாள். சாந்தியும் சமாதானம் ஆகிவிட்டதால், அவளுக்கு தேவையான அனைத்தையும் பார்த்து பார்த்து வாங்கி அடுக்கிக் கொண்டிருந்தார். ஒருவழியாக சென்னை செல்லும் நாளும் வந்தது. பெற்றோரிடம் ஆசீர்வாதம் வாங்கிக் கொண்டு கிளம்பியவளை சாந்தி தனியே அழைத்தார்.

 

“இங்க பாருடி எந்த பையன் கிட்டயும் பேச கூடாது, யாரையும் நம்ப கூடாது. யார நம்பியும் வெளில போக கூடாது. ஏதாவது பாடத்துல சந்தேகம்ன்னா கூட பொம்பள புள்ள கிட்ட தான் கேக்கணும். எந்த பையனையும் நம்பி பழகாத, எந்த பையன் முகத்தையும் ஏறெடுத்து பாக்காத. நீ உண்டு உன் வேலை உண்டுன்னு இருக்கணும். ஆம்பள வாத்தியார்ங்ககிட்ட கூட தேவை இல்லாம பேசக்கூடாது. இதுல ஏதாவது மாறுச்சு, அதோட உன் படிப்புக்கு முழுக்கு போட்டுருவேன் பார்த்துக்க.”

 

“எனக்கு படிப்பு மட்டும் தான் முக்கியம். அதுக்கு முன்னாடி வேற எதுவும் தேவையில்ல‌. நீங்க தைரியமா இருங்க, என்னை நினைச்சு கவலை படாதீங்க. கோல்டு மெடல் வாங்கிட்டு கால் பண்ணுவேன், ரெண்டு பேரும் மேடைல ஏறி என்னை பாராட்டி பேச வந்திருங்க.”

 

“ஆமாமா, நீ ஒருத்தனை தெருவெல்லாம் விரட்டி அடிச்சதை அங்க வந்து சொல்றேன்.”

 

“ம்ச்ச்… தைரியமான ஆளு நீங்களே இப்படி பொலம்பிட்டு இருந்தா அப்பா என்னம்மா பண்ணுவாரு, தைரியமா இருங்க. அப்பாவ நல்லா பார்த்துக்கோங்க” என்றவள் சாந்தியின் கன்னத்தில் முத்தம் வைத்து பிரியா விடை பெற்றாள்.

 

முதல் நாள் கல்லூரிக்கு வந்தவள் தன் அன்னை கூறியதை எல்லாம் நினைவு கூர்ந்து பெண் பிள்ளைகள் பக்கம் மட்டுமே அமர்ந்தாள். அவள் அழகில் மயங்கி சில மாணவர்கள் பேச வந்தாலும், வேண்டாம் என்று தடுத்துவிட்டு பெண்களிடம் மட்டுமே பேசினாள். 

 

ஆர்வக்கோளாறு சீனு, “மேடம்… மேடம்… அப்போ நீங்களும் ராஜாவும் ஒரே காலேஜா? அங்க தான் ராஜாவ நீங்க ஃபர்ஸ்ட் மீட் பண்ணுனீங்களா? லவ் அட் ஃபர்ஸ்ட் சைட்டா மேடம்?” எனக் கேட்டான்.

 

இதழ் வளைத்து சிரித்தவள், “இல்ல சீனு…” எனக் கூறி விட்டாள்.

 

“ஓஹ், அப்புறம் ஏன் இந்த கதையெல்லாம் சொன்னீங்க? எனக்கு ராஜா கதைதான் வேணும்” என்றான் குழந்தை போல.

 

திரவ்யா கோபப்படாமல், “போய் அவருட்டயே கேட்குறது?” என்றிட, சூழ்நிலையை புரிந்து கொண்டவன், “சாரி… உங்களை ஹர்ட் பண்ணிட்டேனா? நீங்க சொல்லுங்க. நான் கேக்குறேன்” என மீண்டும் ஆர்வமாய் கன்னத்தில் கை வைத்தபடி கதை கேட்க ஆரம்பித்தான்.

 

திரவ்யா கல்லூரியில் சேர்ந்து நாட்கள் நகர்ந்தது. அவள் நினைத்தது போல ஆண்கள் காதலுக்கு மட்டுமே பெண்களை சுற்றிவரவில்லை. நிறைய பேர் நட்பாகவும் பழகினார்கள். பொதுவாக பெண்களை விட ஆண்களுக்கு உலக ஞானம் அதிகம் இருப்பதால் அவளை சரியான திசையில் வழி நடத்தினார்கள். அவள் லட்சியம் அறிந்து ஆசிரியர்களும் அவ்வப்போது அறிவுரை தருவதுண்டு. ‌

 

அப்படிப்பட்ட நல்லுள்ளம் கொண்ட ஆசிரியர்களிடம் கேட்டு, புகைப்படங்களுக்கு புகழ்பெற்ற சில பத்திரிகை நிறுவனங்களின் ஆன்லைன் முகவரியை வாங்கிக் கொண்டாள். அதுவரை அவள் எடுத்த புகைப்படங்கள், வாங்கிய பரிசுகள் என அனைத்து தகவல்களையும் கோப்புகளாய் சில பத்திரிக்கை நிறுவனங்களுக்கு அனுப்பினாள்.

 

அவளின் திறமையை கண்டு கொண்ட நிறுவனம் ஒன்று, பகுதி நேர வேலையாக மாதம் இருபது புகைப்படங்கள் அனுப்பச் சொல்லி கேட்டது. அதில் இரண்டு தான் தேர்வாகும் என்ற நிபந்தனையோடு பணியில் சேர்ந்து கொண்டாள். கணிசமான பண வரவு என்றாலும் அப்போதைக்கு அவள் படிப்பு செலவை சமாளிக்க போதுமானதாக இருந்தது. 

 

இப்படியே வருடங்கள் ஓடிவிட, திரவ்யா இறுதியாண்டு மாணவியாக வளர்ந்து நின்றாள்.

 

அன்றைய நாள் நினைவில் லயித்தபடி, “அந்த நேரத்துலதான், இந்தியா முழுக்க ஒரு காம்படிஷன் நடக்க போகுதுனு அனௌன்ஸ்மென்ட் வந்தது. ஒரு பர்ஃபெக்ட் ஃபோட்டோவ யார் எடுக்குறாங்களோ, அவங்களுக்கு சிறந்த போட்டோகிராபர் விருதும், அஞ்சு லட்சம் பரிசு தொகையும் கிடைக்கும்ன்னு சொன்னாங்க. அது கெடச்சா என் படிப்பு செலவும், வேலைக்கு போற வரைக்கும் எனக்கு வேணுங்கற பணமும் கிடைச்சுடும். நானும் என் ஃப்ரெண்ட்ஸ் கிட்ட போய் பேசினேன். ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு ஊர்ல உள்ள இடத்த சொல்ல, நான் மட்டும் தாஜ்மஹால ஃபோட்டோ எடுக்க விரும்புறதா சொன்னேன். இப்போ தாஜ்மஹாலுக்கு வேல்யூவே கிடையாதுனு எல்லாரும் சிரிச்சாங்க…” என்றாள் மெல்லிய சிரிப்புடன். 

 

“நானும் அதான் மேடம் நினைக்கிறேன். தாஜ்மஹால எல்லா விதமான போஸ்லையும் சினிமா டைரக்டர்கள் வளைச்சு வளைச்சு ஷூட் எடுத்துட்டாங்களே. நீங்க ஏன் அங்க போகணும்ன்னு நினைச்சீங்க?”

 

“என்னன்னு தெரியல சீனு! அங்க ஏதோ ஒரு சொல்லப்படாத காதல் இன்னும் வாழ்ந்துட்டு இருக்குற மாதிரியே தான் எனக்கு எப்போவும் தோணும். அன்னைக்கும் இதையே தான் நான் என் நண்பர்கள் கிட்ட சொன்னேன். எல்லாரும் முன்ன விட ரொம்ப சிரிச்சாங்க, நான் எதையும் கண்டுக்கல. தனியா டெல்லிக்கு கிளம்பி போனேன்.” 

 

இளைஞர்களின் காதல் சின்னமான தாஜ்மஹாலின் முன் நிறைய பேர் நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தனர். கூட்ட நெரிசலால் அந்த இடமே சந்தை கடை போல தெரிந்தது. அவள் நினைக்கும் படி புகைப்படம் எடுக்க வசதிப்படவில்லை. கூட்டம் குறைய வேண்டும்! அதுவரை என்ன செய்யலாம் என்று யோசித்துக் கொண்டிருக்கும் பொழுது அவன் இவள் விழியில் விழுந்தான்…

 

யாரோ ஒரு இளைஞன், தாஜ்மஹாலின் அழகினை ரசனையோடு வரைந்து கொண்டிருந்தான். சுற்றுப்புறத்தின் எந்த சலசலப்பும் அவனை பாதிக்கவில்லை. அலைபுரள் கேசம், இடுங்கிய புருவங்கள், நரம்போடும் கரங்கள், என வெற்று வெள்ளை உடையிலும் ஆண் கர்வம் காட்டினான். திரவ்யா அந்த இளைஞனை பார்த்தபடியே நடந்தாள். கீழே இருந்த கல்லை கவனிக்காமல் கால் இடறி அவன் மடியிலேயே விழுந்து விட்டாள்.

 

“ஏய் அறிவு இருக்கா? உனக்கு ஓடி விளையாட வேற இடமே கிடைக்கலையா? கண்ணு முகத்துல தான இருக்கு? இல்ல வேற எங்கையும் வச்சிருக்கியா? ஓரமா ஒதுங்கி வந்து தான உக்காந்து இருக்கேன். ச்ச்சே… இரிட்டேட்டிங் ஃபெல்லோ” என கரித்து கொட்டினான் அந்த இளைஞன்.

 

“ஹலோ மிஸ்டர், தெரியாம தான விழுந்துட்டேன். அதுக்கு என்னவோ உங்க அழகுல மயங்கி உங்க மேல வந்து விழுந்த மாதிரி ரொம்ப ஓவரா பேசுறீங்க…” என்றவளைஅவள் மனசாட்சி காரி துப்பியது தனி கதை.

 

“முதல்ல என்ன நடந்ததுன்னு தெரிஞ்சிக்கோங்க சார். அப்புறம் உங்க இஷ்டத்துக்கு கத்துங்க. யாரோ என்ன பின்னால இருந்து புஷ் பண்ணிட்டாங்க. பேலன்ஸ் பண்ண முன்ன இதோ இந்த கல்லுல கால் தட்டிடுச்சு, விழுந்துட்டேன். இப்போ என்ன? நான் விழுந்ததுல உங்க குடியா மூழ்கி போச்சு. ரொம்ப தான் தைய தக்கான்னு கத்திட்டு இருக்கீங்க?” என திரவ்யாவும் சரிக்கு சமமாக கத்தினாள்.

 

“ஆமா என் குடி தான் மூழ்கி போச்சு, எனக்கு சரி பண்ணி குடு” என்றவன் திரவ்யாவிடம் ஒரு காகிதத்தை நீட்ட அதை வாங்கி பார்த்தாள்.

 

அதில் அவன் ஏற்கனவே வரைந்திருந்த தாஜ்மகால் ஓவியம், கிழிந்து அலங்கோலமாக காட்சியளித்தது. அது தன்னால் தான் நிகழ்ந்தது என்பதை திரவ்யாவும் புரிந்து கொண்டாள்.

 

“ரியலி சாரி! நெஜமாவே தெரியாம தான் விழுந்துட்டேன். பர்ப்பஸோட பண்ணலைங்க” என மனமுவந்து மன்னிப்பு கோரினாள். 

 

இம்முறை அவள் முன்போல் பொய் சொல்லவில்லை. உண்மையாக மனம் வருந்தி மன்னிப்பு கேட்கிறாள் என தெரிந்து கொண்ட அவனும் உடனே மலை இறங்கிவிட்டான்.

 

“இட்ஸ் ஓகே, நானும் என் ஓவியம் இப்படி ஆகிடுச்சேன்னு தான் கத்திட்டேன். பை த வே, ஐ ஏம் ஆர்யன். கண்ணில் பட்டதை கையில் வரைபவன், ஐ மீன் ட்ராயிங் ஆர்ட்டிஸ்ட். நீங்க?” 

 

“ஐயம் திரவ்யா ஃபோட்டோகிராபர். இப்போ ஒரு ஃபோட்டோகிராஃபிக் கம்படிஷன் நடக்குது. அதுக்காக தான் இங்க வந்துருக்கேன்.”

 

“ஓஹ் சூப்பர்ங்க, எல்லாரும் இதுவரைக்கும் யாரும் பார்க்காத இடத்தை தேடித்தான் போவாங்க. நீங்க தாஜ்மகாலுக்கு வந்ததுல எனக்கு ரொம்ப சந்தோஷம்.”

 

“என் உள் மனசு இங்க தான் வரணும்ன்னு அடம் பண்ணுச்சு. சோ வந்துட்டேன்” இலகுவாக தோள்களை குலுக்கினாள்.

 

“சேம் ஹியர்! ஒரு சின்ன ட்ராயிங் காம்பெடிஷன் நடக்குது. அதுக்கு பேர் குடுத்துட்டு தான் இங்க வந்து தவமா தவமிருந்து வரைஞ்சிட்டு இருந்தேன். ட்ராயிங்க் காம்பெடிஷன்னா சின்ன சின்ன நுணுக்கங்களையும் பார்ப்பாங்க இல்லையா. அதை சரியா கொடுக்கணும்னா தாஜ்மஹால் சரியா இருக்கும்னு தோணுச்சு.”

 

“இந்த காம்படிஷன்ல நீங்க வின் பண்ண வாழ்த்துக்கள் ஆர்யன்!” என்று கூறி கை நீட்டினாள். இருவரும் கைகுலுக்கி கொண்டனர். 

 

“நீங்க ஏன் அப்செட்டா இருக்கீங்க?”

 

“இந்த ஆங்கிள்ல எடுத்தா நல்லா இருக்கும்னு நினைச்சேன். இந்த இடமே இப்போ ரஷ்ஷா இருக்கே, எப்படி ஃபோட்டோ எடுக்குறது?”

 

“அவங்க ரொம்ப நேரமா இங்கதான் இருக்காங்க. குரூப் டூர் வந்தவங்க போல தெரியுது. பெட்டர், நாளைக்கு காலையில சீக்கிரமா வந்து ட்ரை பண்ணுங்க” என்று சொல்லிக்கொண்டே தன் பொருட்களை மூட்டை கட்டினான். 

 

“நீங்க முடிச்சுட்டீங்களா?”

 

“முடிச்சு விட்டீங்களே” என்றதும் குற்ற உணர்ச்சியோடு நாக்கினை கடித்தாள்.

 

❤️ Loading reactions...
முந்தைய பதிவு அடுத்த பதிவு
இந்த எழுத்தாளரின் மற்ற கதைகள்
🌙 நிலவின் கனவு! ✨​
245 40 0
இராவணின் வீணையவள்
45 0 0
ஆரெழில் தூரிகை
308 15 1
வேண்டினேன் நானுன்னை
538 6 0
நீ எந்தன் நிஜமா?
377 8 1
என்துணை நீயல்லவா?
458 12 0
கற்றது காதல்
216 1 0
நிழலென தொடர்கிறேன்
210 2 0
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page