வேண்டினேன் – 5

மீராவை ஒருமுறை முறைத்துப் பார்த்து விட்டு, பிரியாவுக்கு வேலை கொடுக்க ஆரம்பித்தான் கண்ணன்.

“சமையலுக்குத் தேவையான ஷோ பீஸ், பீங்கான் பாத்திரம் எல்லாம் ரெடியா? கேமரா முன்னால வைக்கிறதுக்கு அது எல்லாமே கரெக்டா இருக்கணும்.”

ப்ரியா லேசாகக் கொட்டாவி விட்டபடி, “ரெடி பாஸ். காலையிலேயே ஓடிப் போய் வாங்கிட்டு வந்து வச்சுட்டேன். ரவியும் ரெசிபி வாரியா அலமாரில அடுக்கிட்டான்” என்று கட்டைவிரல் உயர்த்தி காண்பித்தாள். அவளது முகத்தில் இன்னமும் லேசான தூக்கக் கலக்கம் இருந்தது.

“குட். அப்போ ஒவ்வொரு ரெசிபிக்கும் ஏத்தபடி அந்தப் பொருட்களை எடுத்துக் கொடுக்க வேண்டியது மட்டும் தான் பாக்கி… நீ எல்லாத்தையும் தயாரா எடுத்து வை” என்றான் கண்ணன்.

“ஓகே…” என்றவள் எழுந்து நிற்க முயன்று தடுமாறி சோபாவில் விழுந்தாள். கண்ணன் அவளை முறைத்தான். 

“தூங்கு மூஞ்சி. ஷூட் பண்ணிட்டு இருக்கும்போது நடுவுல விழுந்து தொலைக்காத” என்று திட்டினான்.

“அதெல்லாம் பண்ண மாட்டேன், போடா…” என்று குழந்தையைப் போல சிணுங்கிவிட்டு எழுந்து சென்றாள். அவள் எதையும் பெரிதாக எடுத்துக் கொள்ளும் சுபாவம் இல்லாததால், கண்ணனின் கோபம் அவளை அவ்வளவாகப் பாதிப்பதில்லை.

மீதம் இருந்தது மீரா மட்டும்தான். ப்ரியாவின் மறைவுக்குப் பிறகு, அவள் தனித்துவிடப்பட்டாள். கண்ணன் அவள் பக்கம் திரும்பினான். அவனது பார்வை நேரடியாக அவளது பயந்த முகத்தில் விழுந்தது.

மீரா பதற்றத்துடன், “நான் போய் ப்ரியாவுக்கு உதவி பண்றேன்” என்று கூறிவிட்டு, குடுகுடுவென எழுந்து ‌ஓடினாள்.

கண்ணன் அவளது முதுகைப் பார்த்தபடி, “சுண்டெலி மாதிரி ஓடுறியா?… இருடி, உன்னை புல்டோசர் மாதிரி விரட்டிட்டு வந்து ஒரே அடியில நசுக்குறேன்…” என சத்தமாகக் கத்தினான்.

அந்த வார்த்தைகளைக் கேட்டு மீரா மேலும் மிரண்டுபோனாள். அவளது மனது கனவையும் நினைவையும் சம்பந்தப்படுத்தி காட்ட, “திக்… திக்” என்று இதயம் அடித்துக் கொண்டது. அவனது குரலில் இருந்த கடுமை வேறு, உடனே செய்து விடுவான் போல, அவளை நடுங்கச் செய்தது.

ஆனால், கண்ணனின் அந்த மிரட்டலைக் கேட்டு, ரவியும் ப்ரியாவும் சத்தமாகச் சிரித்தனர். அவர்களுக்கு கண்ணனின் இந்த வார்த்தைகள் எல்லாம் பழகிவிட்டது போலும்…

“புல்டோசர் மாதிரி வருவாராம்ல! எங்க வா…” என்று ப்ரியா சிரித்துக்கொண்டே கேட்டாள்.

“நான் சுண்டெலியை விரட்டிட்டு இருக்கேன். பெருச்சாளி நீ ஏன் நடுவுல பாயுற? போய் உன் வேலையை பாரு” என்றான் கண்ணன்.

“ஓகே பாஸ்!” என்று பாட்டு போல பாடியபடி, ப்ரியா கிச்சனுக்குள் சென்றாள்.

அடுத்த ஐந்து நிமிடத்தில், பால்கனியில் சமையல் வேலைகள் ஆரம்பமானது. கண்ணன் தன் வேலையில் மூழ்கினான். ரவி கேமரா செட்டிங்கில் பிஸியானான். ப்ரியா உற்சாகத்துடன் ஒவ்வொரு ரெசிபிக்கும் தேவையான அலங்காரப் பொருட்களை எடுத்து வந்து தந்தாள்.

மீராவோ, தனக்குக் கொடுக்கப்பட்ட சிறிய வேலையில், கண்ணனின் கோபம் தன்மீது விழுந்துவிடக்கூடாது என்ற பயத்திலேயே கவனமாக செயல்பட்டாள்.

கண்ணன் சமையல் செய்ய ஆரம்பித்தபோது, அவனது கோபமும் எரிச்சலும் இருந்த இடம் தெரியாமல் மறைந்துபோனது. அவன் தன் சமையல் கலையில் முழுமையாக மூழ்கியிருந்தான். சட்டை அணியாத அவனது உறுதியான உடல், தன் அசைவுகளில் ஒருவித தாள லயத்தை வெளிப்படுத்திக் கொண்டிருந்தது. இப்போதுதான் மீராவுக்கு அவன் சமையல் வீடியோக்கள் ஏன் இத்தனை பேரால் ரசிக்கப்படுகிறது என்பதன் அர்த்தம் புரிந்தது!

கண்ணனின் கைகளில் இருந்த கத்திகள் ஒரு கலைஞனின் தூரிகையைப் போல லாவகமாய் இயங்கின. காய்கறிகளை நறுக்குவதிலும், மசாலாக்களை அளந்து சேர்ப்பதிலும் அப்படி ஒரு நேர்த்தி இருந்தது. அவனது ஒவ்வொரு அசைவும் துல்லியமாகவும், வேகமாகவும் இருந்தது.

வாணலியில் எண்ணெய் ஊற்றி, தாளிக்கும்போது எழும் புகைக்கும் சத்தத்திற்கும் நடுவே, அவனது முகம் தேவர்களுக்கு மத்தியில் வாழும் இந்திரன் போல அழகாய் தென்பட்டது. ஒரு வேலையில் ஆழ்ந்திருக்கும் போது, அவனது நிதானம் நிறைந்த முகம், அவனது மற்ற அழகுகளை விட மேலும் கவர்ச்சியாகத் தோன்றியது.

சமையலின் வெப்பத்தால், லேசாக வியரத்த அவனது உடல் பளிங்கு போல மின்னியது. அவனது அகலமான தோள்களும், உறுதியான மார்பின் அழகும் எந்த பெண்ணையும் வசீகரிக்கும் வல்லமை கொண்டவை. அவன் தலையை அசைத்து பேசுகையில், அவனது கார்மேக கூந்தல் நெற்றியில் விழுந்து புரண்டது. அதை நுனிவிரல் கொண்டு அவ்வப்போது ஒதுக்கிவிட்டான். அந்த பாங்கு, மீராவின் இதயத்தில் ஒருவிதப் படபடப்பை ஏற்படுத்தியது.

“அடுத்த ஷூட்க்கு லொகேஷன் மாத்தணும்” என்று கரகரப்பான குரலில் ரவிக்கு கட்டளைகள் பிறப்பித்தான்.

மீரா ஒருகணம் அச்சுறுத்தும் அவனது முரட்டுத்தனத்தையும், மறு கணம் காந்தம் போன்று கட்டி இழுக்கும் கண்களையும் ஆச்சரியமாக பார்த்தாள். அந்தக் கோபக்காரன், சமையல் என்ற கலையின் முன் இவ்வளவு மென்மையாகவும், நேர்த்தியாகவும் மாறுவதைக் கண்டு அவளது மனம் அவன்பால் மெல்ல மெல்ல மயங்கத் தொடங்கியது.

இரண்டாம் கட்ட சமையல் சுறுசுறுப்பாக நடந்து கொண்டிருந்த நேரம். கண்ணன் என்ன நினைத்தானோ, சடாரென்று திரும்பி அவள் முகம் பார்த்தான். தூண்டில் சிக்கிய மீன் போல மீரா அவனது விழிச் சுழலில் சிக்கிக் கொண்டாள்.

“இங்க வா…” என்று அதட்டலாக அழைத்தான்.

ப்ரியாவை ஒரு பார்வை பார்த்துக் கொண்டே அவனிடம் சென்றாள்.

“எதுக்கு சும்மா அவளையே பார்த்துட்டு இருக்க? அவளுக்கு டெக்கரேஷன் வேலை இருக்கு. நீ இதை மிக்ஸில அரைச்சு எடுத்துட்டு வா” என்றான் கட்டளையாய்.

உடனே அதை வாங்கிக்கொண்டு குடுகுடுவென கிச்சனுக்கு ஓடினாள். அவள் இதுவரை பார்த்திராத மிக்சி அது! ஜாரை எப்படி மிக்ஸியோடு பொருத்துவது என்று கூட அவளுக்கு தெரியவில்லை. அந்த அளவுக்கு நவீனத்துவமாய் இருந்தது.

“வேகமாக செய் மீரா! டைம் ஆகுது!” என்று ஒரு மூலையில் இருந்து ரவி அவசரப்படுத்தினான்.

அதைக்கேட்டு ப்ரியாதான் குடுகுடுவென கிச்சனுக்கு ஓடினாள். அவள் மிக்ஸியில் ஜாரை மாட்டும் போது, மீரா நன்றாக கவனித்துக் கொண்டாள். வழக்கமாக பொருத்துவது போல இல்லாமல், கொஞ்சம் லாவகமாக மாட்ட வேண்டி இருந்தது!

அவள் பார்த்துக் கொண்டிருக்கும் பொழுதே, அரைத்த மசாலாவை வழித்து கிண்ணத்தில் நிறைத்து மீராவின் கையில் திணித்தாள். அவசரமும், கண்ணன் மிரட்டல் பார்வையும் அவளது பயத்தை மேலும் அதிகப்படுத்தியது. எனவே கண்ணன் முன்னால் இருந்த டேபிளில் கை நீட்டி கிண்ணத்தை வைத்து விட்டு, வேகமாய் பிரியாவின் பின்னால் போய் நின்றாள்.

அவளுக்கு வீடியோ ஷூட்டிங் பற்றிய ஞானம் துளியும் கிடையாது. கேமராவுக்கு குறுக்கே போகக்கூடாது என்ற அளவில் தான் அவள் ஞானம். கை போவதால் தவறென்ன? என்று நினைத்து கிண்ணத்தை வைத்து விட்டாள். அதுவரை கேமராவை பார்த்து சுவாரசியமாக பேசிக் கொண்டிருந்த கண்ணன், அந்த நொடி தன் பேச்சை நிறுத்தினான்.

‘ஏன் அமைதியாகிட்டான்?’ எனும் ரீதியில் மீரா புரியாமல் முழித்திருந்தாள்.

அடுத்த நொடி “டமால்!” என்ற சத்தத்துடன், கிண்ணம் சுவற்றில் மோதியது. கருஞ்சிவப்பு நிற மசாலாத் தூள் சுவரெங்கும் ஒட்டிக் கொள்ள, தலையில் அடிவாங்கி நெளிந்திருந்த கிண்ணம் தரையில் குப்புற விழுந்தது.

அந்த அளவுக்கு உக்கிரமாக அதை தூக்கி அடித்திருந்த கண்ணனின் கோபம் பார்த்து மீரா அப்படியே உறைந்து போனாள். அவளது கண்கள் பயத்தில் அகல விரிந்தன. சற்று முன்பு அவன் மீது உருவான உணர்வுகள், அவள் மனதில் இருந்து துளி மிச்சம் இல்லாமல் அழிந்துவிட்டிருந்தது. உடலின் இரத்தம் மொத்தமும் உறைந்து போனது போல சிலையாய் நின்றாள்.

‘எப்படியாவது இந்த ஷூட் முடியும்வரை எந்தப் பிரச்சனையும் இல்லாமல் இருக்க வேண்டும் என்றுதான் அவளும் மனதிற்குள் வேண்டிய படியே வேலையை செய்திருந்தாள். ஆனாலும் இப்படி ஆகிவிட்டதே!’ என்று வருந்திய ப்ரியா, அவளை தன் பின்னால் இழுத்து நிறுத்தினாள்.

கண்ணன் இறுக்கமான முகத்தோடு அவள் பக்கம் நடந்து வந்தான். அவனது கண்களில் ஒருவித காட்டுத்தீயின் கோரம் அப்பட்டமாகத் தெரிந்தது. மீராவை நெருங்கியவனது முகம் மேலும் இறுகியது. அஞ்சி நடுங்கிய மீரா, தன் இமைகளை இறுக மூடிக்கொண்டு ப்ரியாவின் தோளில் முகம் புதைத்தாள்.

‘கண்ணன் தன்னை ஓங்கி அறையப் போகிறான்!’ என்ற எண்ணம் அவள் மனதில் பேயாட்டம் போட்டது. அதே நேரம் அடுப்பில் இருந்த வாணலியில் காய்கறிகள் வதங்கி, கருகும் வாசனை எழத் தொடங்கியது.

‘அரைத்த மசாலா இருந்திருந்தால், இந்நேரம் அதை சட்டியில் ஊற்றி சமையலை முடித்திருக்கலாம். இப்போது, அந்த மசாலா தரையில் கொட்டிக் கிடக்கிறது. இவளும் ஜன்னி வந்தது போல் நடுங்குகிறாள். போதாக்குறைக்கு நீயும் கோபப்பட்டால் வேலை என்னாவது?’ என்று ப்ரியா கெஞ்சுதலான பாவனையோடு அவனிடம் சைகையால் கேட்டாள்.

கண்ணன் தன் கண்களை இறுக மூடி திறந்தான். அவன் கோபம் இன்னும் இன்னும் கூடுகிறது என்று ப்ரியாவுக்கு விளங்கிற்று.

ப்ரியா, “கண்ணா ப்ளீஸ், அவ பாவம். தெரியாம…” எனும் முன்,

“கேமராவ ஆஃப் பண்ணு ரவி!” என்று கர்ஜித்தான் கண்ணன். உடனே ரவி கேமராவை அணைத்து விட்டான்.

ப்ரியா, “ஒரு ரெசிபி வீடியோ வேஸ்ட் ஆயிடுச்சுன்னு எனக்கு புரியுது. அட்லீஸ்ட் நீ அந்த காய்கறியவாச்சும் தனியா எடுத்து வை. வேற ஏதாவது செய்வோம். இல்லைன்னா மொத்தமும் வேஸ்ட் ஆகிடும்.”

“அது வேஸ்ட்தான். இனி பாதுகாக்க என்ன இருக்கு?” என்றவன்,

மீராவிடம் திரும்பி, “எப்படி, ஒரு சாதாரண வேலைய கூட உன்னால தப்பு தப்பா பண்ண முடியுது? நீ இங்க எதுக்காக வந்திருக்கன்னு உனக்கு தெரியுமா இல்லையா?” என்று கத்தினான். மீராவால் பதில் பேச முடியவில்லை.

கண்ணன் தன் குரலை இன்னும் உயர்த்தி, “உன்னால இன்னிக்கி எங்களோட மொத்த வேலையும் வீணா போயிருச்சு. இதுக்குத்தான் கண்டவங்களை வீட்டுக்குள்ள விட வேண்டாம்னு தலைதலையா அடிச்சுக்கிட்டேன். கேட்டீங்களா ரெண்டு பேரும்?…” என்று ஆவேசத்துடன் சொன்னான்.

மீரா அழுவதற்குத் தயாரான கண்களுடன், தன் அறை நோக்கி ஓட முயன்றாள்.

“நில்லு…” 

 

❤️ Loading reactions...
முந்தைய பதிவு அடுத்த பதிவு
இந்த எழுத்தாளரின் மற்ற கதைகள்
🌙 நிலவின் கனவு! ✨​
246 40 0
இராவணின் வீணையவள்
45 0 0
ஆரெழில் தூரிகை
309 15 1
வேண்டினேன் நானுன்னை
541 6 0
நீ எந்தன் நிஜமா?
379 8 1
என்துணை நீயல்லவா?
463 12 0
கற்றது காதல்
216 1 0
நிழலென தொடர்கிறேன்
210 2 0
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page